இசையும் பாடலும்

நம் மனநிலையை மாற்றும் சக்தி இசைக்கும் பாடலுக்கும் எப்போதுமே உண்டு. இசையும் பாடலும் ஆரம்ப காலம் தொட்டே நம்மோடு இணைந்து வருகிறது. முற்றிலும் படிப்பறிவில்லாத காலகட்டத்திலும் கூட நாட்டுப்புற பாடல்களை பாடியபடியே கிராம மக்கள் வேலை செய்ததை இலக்கியங்களில் காணலாம். இன்றும் சில கிராமங்களில் வேலை நேரங்களின் போது வேலையாட்கள் பாடுவதைக் கேட்கலாம். நன்கு உற்று கவனித்தால் அவர்கள் முதியவர்களாக இருப்பார்கள். ஆனால் இசை என்பது உயர்குடி மக்களுக்கு மட்டுமே என்ற நிலையை பிற்கால உயர்குடி மக்கள் தோற்றுவித்தனர். 

 ஆனால் இன்றைய நிலையில் இசை, பாடல் என்பதெல்லாம் சினிமா இசையையும் பாடலையுமே குறிக்கும் சொற்களாய் மாறிப்போய் விட்டன. இருந்தாலும் இன்றைய இசை கூட ஏதோ ஒரு வகையில் நம்மை அறியாமல் நம்மோடு கலந்து விட்டிருக்கிறது. நாம் கேட்கும் ஒவ்வொரு பாடலும் ஏதோ ஒன்றை நமக்கு நினைவு படுத்துகிறது. 

நம் பள்ளிக் காலத்தில் ஏற்பட்ட முதல் காதலின் போது கேட்ட பாடல்களை மீண்டுக் கேட்கும் பொழுது நமது பள்ளி பருவத்து காதல் நினைவுக்கு வருகிறது. இதே போல் சில பாடல்கள் கல்லூரி நாட்களையும், சில பாடல்கள் சில ஊர்களையும், சில பாடல்கள் திருவிழாக்களையும் நினைவு படுத்துகின்றன. இப்படிப் பல. ஆக நாம் விரும்பிக் கேட்கும் ஒவ்வொரு பாடலும் அந்த காலகட்ட நிகழ்வுகளை தன்னுள்ளே புதைத்துக்கொள்கிறது. அது நாம் அறியாமலேயே நிகழ்கிறது. 

பின்னாளில் எந்த பாடலில் என் பள்ளி நினைவு ஒழிந்திருக்கிறது என்று தேடினால் நம்மால் கண்டுபிடிக்கவே முடிவதில்லை. இயல்பாய் மீண்டும் ஒரு நாள் ஏதோ ஒரு பாடலைக் கேட்கும்பொழுது பழைய நினைவுகள் வெளிவருகின்றன. ஆனால் அதிலும் ஒரு முரண்பாடு உண்டு. பள்ளி நாட்களையோ, காதல் நாட்களையோ மீண்டும் நினைக்க அந்த பாடல்களை நாம் மீண்டும் மீண்டும் கேட்கும்பொழுது அந்த பாடல் தன் பழைய நிகழ்வுகளின் மீது தற்போதைய நிகழ்வுகளை பதிவு செய்து விடுகிறது. பின்னொரு நாள் கேட்கும் பொழுது இந்த நினைவே வருகிறது, பள்ளித் தருணங்கள் நினைவுக்கே வருவதில்லை. அதனால் நாம் மிகவும் விரும்பிய தருணங்களை நினைவூட்டும் பாடல்களை குறைவான முறையே கேட்பதே உத்தமம் என்பதே என் எண்ணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *