நாம் நாமல்ல

நாம் நம் இடத்தை விடுத்து நீண்ட தூரம் செல்லச் செல்ல நம்முடைய செயல்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. ஏனெனில் எந்த ஒரு நிலையிலும் நம்முடைய செயல்பாடு நாம் சார்ந்திருக்கக்கூடிய சமூகத்தின் செயல்பாடாகவே பார்க்கப்படுகிறது. இங்கே குறிப்பிடப்படும் சமூகம் என்பது நம் இடத்தையும் பதவியையும் பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும்.

எனது பள்ளி நாட்களில் நான் முதல் பரிசு பெற்றபொழுது எனது சுற்றுவட்ட கிராமங்களில் எனது செயல்பாடு எனது கிராமத்தின் ஒருவனது செயல்பாடாகவே பார்க்கப்பட்டது. ” School First நாட்டாம்பட்டி பையனாம்” என்றே பலர் கூறினர். ஏன் என்னிடமே பலர் அவ்வாறு கூறியதுண்டு. இது அவர்கள் மத்தியில் என் ஊரின் மீதான மதிப்பினை சற்று உயர்த்தியிருக்கும். என்னை மறந்து அந்த நிகழ்வையும் என் ஊரையுமே மக்கள் நீண்ட நாள் நினைவில் வைத்திருந்தனர்.

அதேபோல் நான் சென்னை வந்த பொழுது என்னை, என் மாவட்டத்தை சேர்ந்த ஒருவனாகவே பார்த்தனர். அதேபோல் வேறு மாநிலத்திலிருந்து வந்து என்னுடன் பணியாற்றியவர்கள் செயல்பாடெல்லாம் அவரவர் சார்ந்திருந்த் மாநிலத்தின் பொதுவான செயல்பாடகவே பார்ககப்பட்டது. உண்மை.

நாம் ஒரு சில மாநிலத்தினர் மீது மரியாதை கொள்வதற்கும், சில மாநிலத்தாரின் மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பதற்கும் காரணம் நமக்குத் தெரிந்த அந்த மாநிலத்தினைச் சேர்ந்த ஒரு சிலரது செயல்பாடுகளே. நாம் ஒன்றும் அந்த மாநிலத்தைச் சேர்ந்த அனைவருடனும் பழகி அந்த முடிவுக்கு வருவதில்லை. 

இது இங்கல்ல. உலகம் முழுவதும் அப்படியே.

அத‌னால் நாம் தூரம் செல்லச் செல்ல நம்முடைய பொறுப்பு அதிகமாகிறது. உதாரணமாக சென்னையில் உள்ள ஒரு கேரளத்து நபரின் செயல்பாடினைக் கொண்டு நாம் கேரளத்தவ‌ரை மதிப்பிடுகிறோம். ஆனால் சென்னையில் நாம் ஒரு கேரளத்தவரை மட்டுமல்ல, பலரை சந்திப்போம். அவர்கள் அனைவரது செயல்பாடுகளில் இருந்தே கேரளத்தை மதிப்பிடுவோம். 

ஆனால் இதுவே நாம் வேறொரு நாட்டிற்குச் செல்லும்பொழுது அங்கு நாம் இந்தியாவைப் பிரதிபலிப்போம். அங்குள்ள‌ பல வெளிநாட்டவருக்கு மிகச் சில இந்தியர்களே பழக்கமாய் இருப்பர். அவர்கள்தான் மற்ற நாட்டினரிடத்து இந்தியர்கள் குறித்த மதிப்பீடுகளை நிர்ணயம் செய்பவர்கள்.

உதாரணமாக சிங்கப்பூரில் என்னுடைய செயல்பாடுகள், பழக்க வழக்கங்கள், திறமை, அறிவு, மடத்தனம் எல்லாமே இந்தியர்களின் செயல்பாடாகவே பார்ககப்படுகிறது. அதனாலே மிகவும் கவனமுடன் என்னுடைய செயல்பாடுகளையும், சொற்களையும் நிர்வகிக்க விரும்புகிறேன். 

குறைந்தது நாம் சந்திக்கும், நம்மை சந்திக்கும் நபர்களிடமாவது  இந்தியர்களைப் பற்றி உயர்வாய் நினைக்கச் செய்வோமே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.