Who is a Common Man?

cmanநம‌து சமூகத்தின் இன்றைய அடுக்கில் இந்தச் சொற்றொடர் பலரிடமிருந்து வெளிப்படக்காணலாம்.

“நான் மற்றவரைப்போலல்ல”

இதன் சாரம்சம் என்பது. “நான் எண்ணத்திலும் சிந்தனையிலும் அறிவிலும்  ஒரு சாதாரண வெகுஜன பிரதிநிதி சிந்திப்பதைக்காட்டிலும் உயர்வாக சிந்திப்பவன்”. இதை புறவயமாக மறுத்தாலும் அதுதான் ஆழ்மன உண்மை.

சரி. அந்தச் சராசரி மனிதன் யார்? அவனுடைய செயல்பாடுகள் எத்தகையவை? எல்லோரும் தன்னை சராசரியிலிருந்து விடுபட்ட ஒன்றாகக் கருதினால் உண்மையில் அந்த சராசரி மனிதன் என்பவன் யார்? எங்கிருக்கிறான்?

உண்மையாதெனின் “நான் மற்றவரைப் போலில்லை” எனக் கூறும் ஒவ்வொருவருமே இன்றைய சராசரி மனிதன்தான். இந்த வசனம் நாற்பதாண்டுகளுக்கு முன்னால் அன்றைய மாற்றுச் சிந்தனையாளர்களால் மொழியப்பட்ட ஒன்று. இன்று அதனை நகல் எடுக்கும் ஒருவன் எப்படி மாற்றுச் சிந்தனையாளனாக இருக்க முடியும்?

ஆம், அன்றைய சராசரி மனிதனுக்கான வரையறை இன்று இல்லை. மாற்றங்கள் பல வந்துவிட்டன. அன்றைய காலக்கட்டத்தில் கருத்து தெரிவிக்கும் ஒருவரே பொது நீரோட்டத்திலிருந்து விலகியவராக இருப்பார். பொது சராசரி மனிதன் என்பவன் இந்தக் கருத்துக்களை கவனிப்பவனாகவும், அல்லது அதைப்பற்றியே அறியாதவனாகவும் இருப்பான்.

ஆனால் இன்று அவ்வாறு இல்லை. ஒருவன் கருத்து தெரிவிப்பதற்கான குறைந்தபட்ச தகவல்களை ஊடகங்கள் அளித்துவிடுகின்றன. சிரத்தை எடுத்து தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. ஒருவேளை எந்த செய்தியையும் படிக்காமல் இருந்தால் கூட முக்கிய நிகழ்வுகள் எப்படியாவது நண்பர்கள் வழியாகவோ ஃபேஸ்புக் போன்ற ஊடகங்கள் வழியாகவோ நம்மை வந்தடைந்துவிடும்.

நாம் செய்வதெல்லாம் அறிந்த தகவ‌ல்களைக் கொண்டு வாந்தி எடுப்பது மட்டுமே. கருத்து தெரிவிக்கும் முன்னோ, விவாதிக்கும் முன்னோ அது  தொடர்பாக எந்த ஆய்வும் செய்திருக்க மாட்டோம், அல்லது அதைப் பற்றி முழுமையாகப் படித்திருக்க மாட்டோம். ஆனால் பங்கேற்போம். 

ஏன் மூன்று பத்திக்குமேல் எந்த ஒரு கட்டுரையும் வாசிக்கும் திராணி கூட‌ இருக்காது. அங்கங்கே நுனிப்புல் மேய்ந்து விட்டு கருத்து தெரிவிக்கும் நாம் அனைவருமே சாதாரண மனிதன் தான். தலைப்புச் செய்தியை மட்டுமே விவாதிப்பவரெல்லாரும் சாதாரண மனிதன் தான். ஏனென்றால் அத‌னைப் பற்றி மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாக நமக்குத் தகவல் கிடைக்கிறது. 

நாம் எதை விவாதிக்க வேண்டுமென்பதை ஊடகங்கள் தீர்மானிக்குமென்றால் நாம் சாதாரன மனிதன் தான். மாறுபட்ட சிந்தனையாளராக நம்மை நினைக்க வேண்டியதில்லை. இன்று நம்மை வந்தடையும் தகவல்களை வைத்து கருத்து தெரிவிக்கும் இந்த செயலை போன தலைமுறையிலேயே தேடிப்போய் அறிந்து தெரிவித்துவிட்டார்கள். அவர்கள்தான் சிந்தனையாளர்கள்.

அப்படியானால் இன்றைய மாற்றுச் சிந்தனையாளர்கள் யார்? அவர்களின் செயல்பாடு எப்படிப்பட்டது?

இதுதான் என வறையறுக்க முடியாதென்றாலும், அவர்களின் நிலை கண்டிப்பாக இதற்கு கீழ் இல்லை என சில செயல்பாடுகளைக் கூறலாம்.

1. மேற்கூறியது போல தன்னை வந்தடையும் தகவல்களைக் கொண்டு விவாதமோ, கருத்து வெளியிடுதலோ செய்ய மாட்டார்கள்.

2. வேண்டுமானால் அவர்கள் மேலும் அறிந்து கொள்ள அல்லது ஆய்வு செய்ய அவர்களை வந்தடைந்த தக‌வல்கள் பயனுறும்.

3. நுனிப்புல் மேய்ந்து கருத்து சொல்ல மாட்டார்கள். அடுத்த தகவல் வந்தவுடன் முதல் தகவலை கூண்டோடு மறந்து போக மாட்டார்கள்.

4. நான் மற்றவரைப்போல் அல்ல எனக் கூற மாட்டார்கள். அவர்கள் செயல்பாடு வழி அது வெளிப்படும்.

5. முழுமையான தரவுத்திரட்டுகள், ஆய்வுகள் இல்லாமல் கருத்தோ விவாதமோ செய்ய மாட்டார்கள்.

6. நடப்பு நிகழ்வுகளின் தலைப்புச் செய்திகளை பெரும்பாலும் விவாதிக்க மாட்டார்கள்.

ஒருவேளை நாம் இந்த வெகுஜன நீரோட்டத்தினின்று விலகி மாற்றுச் சிந்தனையாளராக வேண்டுமாயின் முதலில் இன்றைய நிலையில் சாதாரண மனிதனின் செயல்பாடுகள் என்ன என்பதனை வரையறை செய்து அதிலிருந்து விலகி பின்னர் மாற்றுச் சிந்தனை நீரோட்டத்தினில் கலக்க முயலலாம்.

நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.