தேவயானி கோப்ரெட்களும் சங்கீதாக்களும்

ind-usஒருவர் எந்த ஒரு நாட்டில் வாழ்கிறாரோ அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே இருக்க‌ வேண்டும் என்பதே உலக நாடுகளின் பொது விதி. இதுதான் ஒரு நாட்டில் இருந்து மற்ற நாடுகளுக்கு செல்பவர்களுக்கும்.நாம் நம் நாட்டைத் தவிர்த்து வேறு நாட்டிற்குச் செல்லும்போது நமக்கு வ‌ழங்கும் விசாவில் குறிப்பிடப்பட்டிருக்கும் முக்கியமான விசயமே “நான் இந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே இங்கு வசிப்பேன்” என்பதே. இதற்கு உடன்பட்ட பின்னரே நாம் வேறொரு நாட்டில் பிரவேசிக்க அனுமதிக்கப்படுகிறது.

நம்முடைய பதவியைப் பொறுத்தும், மதிப்பினைப் பொறுத்தும் நமக்கான சலுகைகளில் மாற்ற‌முண்டு, நம் நாட்டிலும் அந்நிய நாட்டிலும்; ஆனால் குற்ற தண்டனைகளில் மாற்றமில்லை. அதே நேரம் குற்ற விசாரணைகளிலும், நடைமுறைகளிலும் மாற்றமிருக்கலாம். அதாவது நமக்கு வெளிநாட்டில் கிடைக்கும் மரியாதையும், நம் பிரதமருக்கு வெளிநாட்டில் கிடைக்கும் மரியாதையும் ஒன்றல்ல‌.

ஆனால் அது எந்த நிலையில் பிரதமருக்கு சாத்தியம்? அவர் பிரதமருக்கு உரிய தகுதியோடும், ஒழுங்கோடும் நடந்து கொள்ளும் போது மட்டுமே. ஒருவேளை நம் பிரதமருக்கு பாதுகாப்பு பரிசோதனைகள் இல்லை என்கிற காரணத்தில் வெடிகுண்டை ஒரு நாட்டிற்கு எடுத்துச் சென்று அந்நாட்டில் பல பேர் இறப்பிற்கு காரணமாக இருந்துவிட்டு “நான் ஒரு நாட்டின் பிரதமர், எனக்கு அதற்கான சலுகையைத்தர வேண்டும்” எனக் கூறமுடியுமா?

இந்த பொதுக் கருத்துவின் அடிப்படையிலேயே தேவயானி கோப்ரகெட் விவகாரத்தைப் நாம் பார்க்கலாம்.

இந்த நிகழ்வை அமெரிக்க இனவெறிப் போக்கின் வெளிப்பாடு, அமெரிக்கக் காவல் துறையின் காட்டுமிராண்டித்தனம், என பொது வகைப்படுத்தி அமெரிக்காவைக் குற்றவாளியாக்குவதோ,இல்லை தேவயானி சட்டத்திற்குப் புறம்பாக ஆதர்ஷ் குடியிருப்பில் ப்ளாட் வாங்கியுள்ளார், அதிகமான‌ சொத்து சேர்த்துள்ளார், இது மத்திய தர வர்க்கத்தின் வேலைப்பெண்களை சுரண்டும் போக்கு, முன்னாள் குடியரசுத் தலைவரை சோதனையிட்டபோது இந்த அளவுக்கு கண்டனம் தெரிவிக்காத அரசு இப்போது பொங்கி எழுவது ஏன் போன்ற‌ கடந்த கால நிகழ்வுகளோடு ஒப்பிடுவது போன்ற பொது வகைப்படுத்தி அதிக ஆதரவைத் தேடி தேவயானியை அதன் மூலம் குற்றவாளியாக்குவதோ தேவையில்லாத ஒன்றே என நான் நினைக்கின்றேன்.

எனெனில் இந்த விசயத்தில் தெளிவான முடிவுக்கு வரத் தேவையான தகவல்கள் இந்த நிகழ்விலேயே இருக்கின்றன.தன் வீட்டின் பணிப்பெண் வேலைக்காக சங்கீதா என்ற பெண்ணிற்காக விசா விண்ணப்பத்தில் சம்பளத்தை அதிகமாகக் காட்டியும், வேலை நேரத்தை குறைவாகக் காட்டியும் விசா பெற்றுள்ளார் அல்லது விசாவில் குறிப்பிடப்பட்டுள்ள‌ சலுகைகளைப் பணிப்பெண்ணிற்குத் தரவில்லை என்பது தேவையானியின் மீதான குற்றச்சாட்டு.

முதலில் தேவயானி செய்தது தவறு. இதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஏனெனில் அக்குற்றம் உண்மையில்லை எனில் அவர் வீட்டுப் பணிப்பெண் சங்கீதா, அமெரிக்காவில் அதுவும் ஒரு பெரிய தூதரக அதிகாரி மீது இத்தகைய புகாரைக் கொடுத்திருக்க மாட்டார். அதோடு இது பொய்யான புகாரெனில் அவர் அமெரிக்காவிலும், இந்தியாவிலும் பின்னால் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்பது அவருக்கும் தெரிந்திருக்கும்.

அதோடு அங்கிருந்து இந்தியா வந்து பின்னர் இங்கிருந்து  அமெரிக்காவில் இருக்கும் தேவையானி மீது வழக்குப் போட்டு நீதி பெருவதென்பது சாத்தியமில்லை என்பதாலும், அமெரிக்க நீதித்துறையின் மீதான நம்பிக்கையின் காரணமாகவும் அவர் புகார் தெரிவித்திருக்கலாம்.

இரண்டாவது தேவயானி தூதருக்கு உரிய மரியாதையுடன் நடத்தப்படவில்லை என்பது. இதற்கு அமெரிக்க காவல்துறையே தெளிவான விளக்கத்தை அளித்து விட்டது. பள்ளியிலிருந்து வரும் வழியில் கைது செய்யப்பட்டதென்பது உண்மை. ஆனால் குழந்தைகளுக்கு முன்பாக கைது செய்யப்படவில்லை. அத்தோடு குற்றவாளி மன உளைச்சலால் தனக்கோ தன் உடன் இருக்கும் குற்றவாளிக்கோ எந்த தீங்கும் செய்துவிடக்கூடாதென்பதற்காகவே சோதனையிடப்பட்டார். இது எந்த கைதிக்குமான ஒரு பொதுவான சோதனை முறையே. மேலும் அவர் இருந்த இரண்டு மணி நேரமும் செல்போன் பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டார் எனவும் தெளிவு படுத்தியுள்ளது.

காவல்துறை எந்த வித சலுகைகளையும் தேவயானைக்கு வழங்கவில்லை எனக் கூப்பாடு போடுவதில் அர்த்தமே இல்லை. எப்பொழுது அவர் தனக்குரிய தகுதிக்கு கீழான காரியத்தில் ஈடுபட்டாரோ அப்பொழுதே அவர் அத்தகுதிக்கான சலுகைகளைப் பெற தகுதியற்றவராக ஆகிவிடுகிறார். அதுவும் ஒருவரை அடிமையாக நடத்துவது, நேர கால அளவின்றி வேலை வாங்குவது, விசா விண்ணப்பத்தில் இல்லாத‌ விதிமுறைகளை தனியாக ஒப்பந்தமாக்கிக் கொண்டது போன்ற செயல்கள் மிகவும் கீழ்த்தரமான செய்ல்பாடுகள்.

அதுவும் ஒரு இந்திய ஆட்சிப்பணி அதிகாரி செய்தார் எனும் போது வெட்கப்பட வேண்டிய விசயம். ஏனெனில் இன்றைய இந்தியாவின் இத்தகைய ஊழல்களினூடே நம் அடிப்படைக் கட்டுமானம் அசையாதிருப்பதன் காரணிகள் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள்தான்; இத்தகைய தேவயானிக்கள் அல்ல.

இந்த விசயத்தில் நம் வெளியுறவுத் துறை அமைச்சர்,பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், மோடி, ராகுல் என எல்லாரும் கண்டனத்தை கடுமையாகப் பதிவு செய்திருப்பதோடு, அரசும் தனது அனைத்து எதிர்ப்பு வேலைகளையும் விரைவாக செய்து விட்டது.

அவை

1. இந்தியாவில் சங்கீதாவின் கணவர் பிலிப்பும் குழந்தையும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

2. அதே நாளில் இந்திய அரசு சங்கீதாவின் இந்திய பாஸ்போர்ட்டை ரத்து செய்தது. அமெரிக்காவில் சட்ட விரோத குடியேறி ஆகி விட்ட அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் படி அமெரிக்க அரசிடம் இந்திய தூதரகம் கோரிக்கை விடுத்தது.

3. தேவயானிக்கு எதிராக இந்தியாவிற்கு வெளியில் எந்த வழக்கும் தொடரக் கூடாது என்று சங்கீதாவுக்கு தடை விதிக்கும் உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது.

4.சங்கீதாவின் கணவர் பிலிப்புக்கும் சம்மன் அனுப்பியது நீதிமன்றம். சங்கீதா மீது இந்தியக் குற்றப் பிரிவு 387, 420 மற்றும் 120 B-ன் கீழ் தெற்கு டெல்லி மாவட்டத்தின் மாநகர போலீஸ் வழக்கு பதிவு செய்து கைது வாரண்ட் பிறப்பித்தது.

5. அமெரிக்க தூதரகங்களில் பணி புரியும் இந்திய ஊழியர்கள், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் இவற்றின் விபரங்களை கேட்டிருக்கிறது மத்திய அரசு.

6. இந்தியாவில் உள்ள அமெரிக்க பள்ளிகளில் பணி புரியும் ஊழியர்களின் பட்டியலையும் கேட்டிருக்கிறது. 

7. இந்தியாவில் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கான சிறப்பு சலுகைகளை ரத்து செய்திருக்கிறது. 

8. அமெரிக்க தூதரக அதிகாரிகளும், அவர்களது குடும்பத்தினரும் சிறப்பு தூதரக அடையாள அட்டைகளை திரும்பக் கொடுத்து விடுமாறு உத்தரவிட்டுள்ளது. 

9. அமெரிக்க தூதரகங்கள் இறக்குமதி செய்யும் வெளிநாட்டு மதுவகைகள் இனிமேல் அனுமதிக்கப்படாது என்றும் அறிவித்திருக்கிறது. 

10. அமெரிக்க  தூதரக அதிகாரிகளுக்கான சிறப்பு விமான நிலைய அனுமதிச் சீட்டும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

11. தேவயானியை இந்தியாவிற்கான ஐ.நா பிரதிநிதியாக பதவி உயர்த்தி கௌவரவித்திருக்கிறது.

மற்ற எந்த செயல்பாட்டிலும் காட்டாத தீவிரத்தை நமது அரசு இந்த விசயத்தில் காட்டியிருக்கிறது. தேவயானியும் தன் பங்கிற்கு இந்திய அரசுக்கும், அமைச்சர்களுக்கும் தன் பங்கிற்கான பெரிய ஒரு விளக்கத்தை மின்னஞ்சல் அனுப்பி இரு நாட்டு உறவுகளுக்குள் நல்லதொரு நெருக்கத்தை(!) ஏற்படுத்திவிட்டார்!

அதிலும் வெட்கக்கேடான விசயம் அமெரிக்கா வழக்கிலிருந்து தேவயானியை விடுவிக்க வேண்டும் என நமது வெளியுறவுத் துறை அமைச்சர் பேசியிருப்பது. இந்த நிகழ்வினால் இந்திய அரசின் நடுநிலைத்தன்மை உலக அரங்கிலும், அமெரிக்காவிலும் கீழிறங்கியதுதான் மிச்சம். இதற்கு பதில் வெளியுறவு அமைச்சர் அவர் மீது குற்றமில்லையென‌ நிருபித்து இந்தியா மீட்டு வருவோம் என‌க் கூறியிருந்தால் அது ஏற்புடையதாக இருந்திருக்கும்.

அரசும் உடனடியாக எதையும் அவசரகதியில் தெரிவித்திருக்காமல் அமெரிக்க அரசோடு பேசி வருகிறோம். முறையான சட்ட உதவிகள் வழங்கப்படும் எனத் தெரிவித்து விட்டுப் பின் முழுமையான தகவலுக்குப் பின் தன் செயல்பாட்டைத் தொடங்கியிருக்கலாம். அவ்வாறு செய்யாத‌தினால் அங்கே அமெரிக்கப் பத்திரிக்கைகளோ இந்திய அரசையும் அதன் ஒருதலை பட்ச செயலையும் கிழித்து தொங்க விடுகிறார்கள். தேவையானின் இந்தியக் குரல்களுக்கு இது தெரியுமா என்று தெரியவில்லை.

இதில் உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த மாயாவதி தேவயானி ஒரு தலித் என்பதால் தான் இப்படி நடத்தப்பட்டுள்ளார் என ஒரு புதுக்கதையைக் கிளப்பி எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என அரசியல் லாவகம் பாடுகிறார்.

அமெரிக்க மக்களுக்கு மத்தியில் வாழும் இந்தியர்களை அமெரிக்கர்கள் இன்னும் கீழ்த்தரமாக எண்ணும் படியான மற்றொரு செயலையும் மத்திய அரசு செய்திருக்கிறது.

இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது தேவயானிகளுக்காகவே நமது அரசும் அமைச்சர்களும் செயல்படுகின்றனர். சங்கீதாக்களுக்கு இங்கு குரலும் இல்லை. வழியும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.