நேரு பற்றி ராமச்சந்திர குஹா

நேரு அவர்களைப் பற்றி எழுத்தாளர் ராமச்சந்திர குஹா அவர்களின் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம் காந்திடுடே தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மிகச்சிறந்த கட்டுரை.


1976ஆம் ஆண்டு, இந்தியாவில் அவசரநிலைச்சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தபோது, ஏ எம் ரோசன்தால் என்ற அமெரிக்க பத்திரிகையாளர் புது தில்லிக்கு வந்திருந்தார். முன்னொரு காலத்தில், ந்யூ யார்க் டைம்ஸின் இந்திய நிருபராக இங்கு இருந்திருந்தவர் அவர். அவர் ஜவகர்லால் நேருவின்மீது மிக அதிக மரியாதை வைத்திருந்தார். எங்கும் நிறைந்திருந்த சமூக ஏற்றத்தாழ்வுகளாலும் சமய அடிப்படையில் எதிரெதிர் துருவ பிளவுகளாலும் காயப்பட்டிருந்த தேசத்தில் ஜனநாயக விழுமியங்களை நிலைநாட்ட இந்தியாவின் முதல் பிரதமர் எவ்வளவு தீரமாகப் போராடியிருந்தார் என்பதை நேரடியாகப் பார்த்தவர் அவர்.

இப்போது, இந்த சமீபத்திய பயணத்தில், இந்திரா காந்தியின் நிர்வாக அமைப்பு தோற்றுவித்திருந்த அச்சமும் ஐயமும் நிறைந்த சூழல் அவருக்கு அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. தன் தந்தை விட்டுச் சென்ற அரசியல் கொடையை இன்னும் ஸ்திரப்படுத்திக் கொள்வதற்கு மாறாக அவர் அதைச் சேதப்படுத்திவிட்டார் என்று நினைத்தார்  ரோசன்தால். அவரது இந்திய நண்பர் ஒருவர் சுருக்கமாகச் சொன்னார், நேரு உயிரோடு இருந்திருந்தால் அவரும் சிறைப்படுத்தப்பட்டிருப்பார், ஜனநாயகத்தின் முக்கியத்துவம் குறித்தும் ஜனநாயக அமைப்புகளின் முக்கியத்துவம் குறித்தும் அங்கிருந்து அவர் பிரதமருக்குக் கடிதங்கள் எழுதிக் கொண்டிருப்பார், என்று.

இவ்வாரம் தன் வாழ்நாளில் மிகவும் போற்றப்பட்ட, மரணத்துக்குப்பின் அதிக அளவில் வசைபாடப்படும் அந்த மனிதர் இறந்தபின்னான ஐம்பதாவது ஆண்டைத் தொடுகிறோம். நேருவின் புகழ் குன்ற இரு முக்கிய காரணங்கள் இருக்கின்றன (i) காங்கிரஸ் கட்சிக்கு முரணான கோட்பாடுகளைக் கொண்ட கட்சிகளின் வளர்ச்சி (ii) நேருவின் மகள் இந்திரா காந்தி மற்றும் அவரது பேரன் ராஜீவ் காந்தியின் சர்ச்சைக்குரிய ஆட்சிக்காலங்கள். தன் தந்தைக்கு மாறாக இந்திரா காந்தி விவாதம் மற்றும் உரையாடல்களில் நம்பிக்கை இல்லாதவராக இருந்தார் என்றால், ராஜீவ் காந்தி நேருவிய மதசார்பின்மையைக் கைவிட்டார் – முதலில் ஷா பானோ வழக்கில் உச்ச நீதி மன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தத் தவறி முஸ்லிம் தீவிரவாதிகளிடம் அடிபணிந்தார், பின்னர் அயோத்யாவில் உள்ள புனித தலத்தின் பூட்டுகளைத் திறந்து இந்து தீவிரவாதிகளிடம் அடிபணிந்தார்.

ராஜிவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே மாதம் கொலை செய்யப்பட்டார். அதே ஆண்டின் பிற்பகுதியில், அண்மைக்காலமாக மகாத்மா காந்தியின் மதிப்பு அறிவுப்புலத்தில் மிக வேகமாக உயர்ந்து வரும் நிலையில் நேருவின் மதிப்பு அதே வேகத்தில் வீழ்ச்சியடைந்திருக்கிறது என்ற உண்மையை கவனப்படுத்தி ஒரு கட்டுரை எழுதினேன் (அந்தக் கட்டுரைக்கு நாளிதழ் அளித்திருந்த தலைப்பு, ‘வெளியேறினார் நேரு, உள்ளிருக்கிறார் காந்தி’ என்பது). நேரு தன் வாழ்நாளில் மகோன்னதமான மரியாதைக்கு உரித்தானவராக இருந்தார், என்று நான் எழுதினேன், ‘இன்று அடிப்பொடியாக இருப்பதைத் தொழிலாகக் கொண்டவர்கள் அல்லாமல் வேறு எவருக்கும் நேருவுக்கு ஆதரவாகப் பேசும் விருப்பம் இல்லை… மிகச் சிலரே அவரைப் புரிந்து கொண்டிருக்கின்றனர்,”. ஆனாலும்கூட, ‘1950களின் உச்சத்தை இனி தொட முடியாது என்றாலும்கூட காலப்போக்கில் நேருவின் புகழ் மெல்ல மெல்ல அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை” என்று என் நம்பிக்கையை வெளிப்படுத்தினேன்.

இதை 1991ல் நான் எழுதியபோது, நேருவின் பரம்பரை முடிவுக்கு வந்துவிட்டது போன்றிருந்தது. ராஜீவ் காந்தியின் மரணம் இந்தியாவின் முதல் பிரதமர் குறித்த முழுமையான மதிப்பீட்டுக்கு வழி வகுக்கும் என்று நம்பினேன். நேருவின் சிந்தனைகளில் சிலவற்றின் காலம் கடந்து சென்றுவிட்டது; உதாரணத்துக்கு முன்னர் மைய திட்ட அமைப்புக்கு இருந்த முக்கியத்துவத்துக்கு மாறாக இப்போது அரசியல் அதிகர பரவலாக்கமும் சந்தைக்கு இணக்கமான பொருளாதார அமைப்பும் இந்தியாவின் தேவைகளை நிறைவு செய்யப் பொருத்தமாக இருக்கும் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.

ஆனால்கூட 1991ல், நேரு விட்டுச் சென்ற வேறு பல விஷயங்கள் சமகாலப் பொருத்தம் கொண்டவையாக இருப்பதாகவும் அவை மீண்டும் வலியுறுத்தப்பட வேண்டும் என்பதாகவும் எனக்குத் தோன்றியது; பாராளுமன்றத்துக்கும் பாராளுமன்ற நடைமுறைகளுக்கும் அவர் அளித்த முன்னுரிமை, அரசியல் குறுக்கீடுகளிலிருந்து பொது அமைப்புகளைப் பாதுகாக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள், சமயப் பன்மை, இருபாலினச் சமவுரிமை முதலியனவற்றை அவர் தீவிரமாக வலியுறுத்தியது, இந்தியாவில் மென்பொருள் வளர்ச்சிக்கு வழிகோலிய அறிவியல் ஆய்வு மற்றும் பயிற்சி மையங்களைப் பேணியது என்பனவற்றை இவ்வகையில் சொல்லலாம். விடுதலை பெற்ற முதல் சில முக்கியமான ஆண்டுகளில் நேருவும் அவரது சகாக்களும் எதிர்கொண்ட சவால்களை இளம் இந்தியர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நினைத்தேன்.

ஆனால் நேரு அவரது சந்ததியினரது சுமையிலிருந்து முடிவாக மீண்டார் என்று நினைத்ததில் நான் பிழை செய்து விட்டேன். 1988ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி பொறுப்பேற்றுக் கொள்ளும்படி சோனியா காந்தி கேட்டுக் கொள்ளப்பட்டார்.  இதை இப்போது எழுதும்போது, தொடர்ந்து 16 முறை அவர் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பது திகைப்பாக இருக்கிறது. இந்த காலகட்டத்தில் அவரது மகன் ராகுல் காந்தி வெளிப்படையாகவே அவரது வாரிசாக முடி சூட்டப்பட்டு விட்டார். நேரு-காந்திகள் பரம்பரை அரசியலை வேறு வகைகளிலும் நடைமுறைப்படுத்தியிருக்கின்றனர். உதாரணத்துக்கு, நூற்றுக்கணக்கான அரசு திட்டங்கள் அவர்களது குடும்பத்தினர் பெயரில் செயல்படுத்தப்படுகின்றன.

ஆண்ட்ரி பெத்தேய்ல் என்ற சமூகவியலாளர் கூறியவாறு, மறைந்தபின் நேருவின் புகழுக்கு ஏற்பட்ட கதி விவிலியப் பிரகடனம் ஒன்றைத் தலைகீழாய் நடைமுறைப்படுத்துவதாக இருக்கிறது. விவிலியத்தில் தகப்பனின் பாபங்கள் அவருக்குப் பின்வரும் ஏழு தலைமுறையினரை பாதிக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நேருவின் விஷயத்தில், அவரது மகள், பேரர்கள், மருமகள்கள், கொள்ளுப் பேரன் என்று அனைவரின் பாபங்களும் பின்தேதியிடப்பட்டு நேருவின் புகழை பாதித்திருக்கின்றன.

(நேருவுக்கு ஒரு அரசியல் பரம்பரையை உருவாக்குவதில் விருப்பம் இருக்கவில்லை என்பது ஒரு முரண்நகை. அவர் 1964ஆம் ஆண்டு மே மாதம் இறந்தபோது, இந்திரா காந்தி பொது வாழ்வில் இல்லை. அவர் பிரதமரானது ஒரு விபத்து. அவரது தந்தைக்குப் பின் பிரதமரான லால் பகதூர் சாஸ்திரி, 1966ஆம் ஆண்டு ஜனவரி மாதம் துர்மரணம் அடைந்ததால் மட்டுமே அவர் பிரதமாக நியமிக்கப்பட்டார்).

1948- 1960 வரை புகழின் உச்சத்தில் இருந்த காலத்தில் நேரு இந்தியாவின் உள்ளும் வெளியேயும் வழிபாட்டு மனநிலையில் போற்றப்பட்டார். அத்தகைய ஒரு சான்றாக 1957 ஆம் ஆண்டு லண்டனில் இந்திய பிரதமருடனான ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்புக்குபின் கார்டியன் நாளிதழ் இவ்வாறு குறிப்புகள் எழுதிற்று என்பதைச் சுட்டலாம்.

“மேற்குலகின் ஒரு நூறு ஆண்களும் பெண்களும் ஆசியாவின் பலநூறு மில்லியன் மக்களின் அன்புக்கும் விசுவாசத்துக்கும் உரித்தான ஒருவரின் ஆற்றலின் சுவாலையை ஒரு கணம் காணும் வாய்ப்பு பெற்றனர். இதில் மர்மம் ஒன்றுமில்லை. நேருவின் ஆற்றல் முழுக்க முழுக்க அவரது ஆளுமை சார்ந்த ஒன்று மட்டுமே… எளிமையாகச் சொன்னால், தந்தையாகவும் ஆசானாகவும் மூத்த தமையனாகவும் உள்ள ஒருவனின் ஆற்றல் இது. நகைச்சுவை உணர்வு, சகிப்புத்தன்மை, ஞானம், பூரண நேர்மை திகழும் ஒரு மனிதனைக் கண்ட ஒருமித்த உணர்வே ஏற்பட்டது”.

வாழும் காலத்தில் மிகையாகத் துதிக்கப்பட்ட நேருவின் சாதனைகள் அவரது மரணத்துக்குபின் காலப்போக்கில் குறைத்து மதிப்பிடப்பட்டு வருகிறது. பொதுவெளியிலும் அரசியல் வெளியிலும் இவர் எங்கும் வசைபாடப்படுகிறார், அதிலும் குறிப்பாக இணையத்தில். சோனியாவும் ராகுல் காந்தியும் பொது வாழ்வில் இயங்கும் காலம் இந்நிலையே நீடிக்கும். இந்திய அரசியல் மேடையை விட்டு நேரு குடும்பத்தின் கடைசி உறுப்பினர் வெளியேறிய பின்னரே நேருவின் வாழ்வு மற்றும் சாதனைகள் குறித்த நியாயமான, ஏற்றுக்கொள்ளத்தக்க மதிப்பீடு சாத்தியப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *