ஃபாரன்ஹீட் 451

கதை எதிர்காலத்தில் நடைபெறுவது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் போர் ஏற்படுவது போன்ற சூழல். ஆதலால் அரசாங்கம் யாரும் புத்தகங்களை வைத்திருப்பதையும், வாசிப்பதையும் தடை செய்கிறது.

மோண்டாக் ஒரு தீயணைப்புத் தொழிலாளி. அவனுடைய மேலாளர் பியாட்டி. அவர்களது பணி யார் வீட்டிலெல்லாம் புத்தகங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதோ அவற்றைக்கண்டுபிடித்து எரிக்க வேண்டும். அதுவே அவர்களுக்கு இடப்பட்ட ஆணை. மக்கள் பெரும்பாலானவர்கள் வாசிக்கும் பழக்கத்தையே விட்டுவிட்டவர்களாக இருக்கிறார்கள். அன்றைய தொலைக்காட்சிகள் பார்ப்பவர்களோடு உரையாடும் தொழில்நுட்பம் கொண்டவைகளாக இருக்கின்றன. எனவே எல்லோரும் முற்றிலும் தொலைக்காட்சியிலே நேரத்தைக் கழிக்கிறார்கள்.

தனக்கு இட்ட பணியை செய்துகொண்டிருக்கும் மோண்டாக் சிலர் புத்தகங்களுக்காக தங்களுடைய உயிரையும் மாய்த்துக்கொள்வதைக் காண்கிறான். அதனால் அவனுக்கு அப்படி புத்தகங்களில் என்னதான் இருக்கிறது என ஆர்வமேற்பட்டு ஒவ்வொரு முறை தான் புத்தகங்களை எரிக்கும் போதும் ஒரு புத்தகத்தை மறைவாக யாருக்கும் தெரியாமல் எடுத்துக்கொண்டு வந்து வீட்டில் ஒளித்து வைத்து சேமிக்கிறான்.

அத்தோடு தான் வேலை முடிந்து வரும் வழியில் தினமும் ஒரு பெண்ணை சந்திக்கிறான். அவள் மிகவும் வித்தியாசமனவளாகவும், எல்லாவற்றையும் வியந்து நோக்கும் பார்வை கொண்டவளாகவும் இருக்கிறாள் என்பதனை அறிந்து மோண்டாக் வியக்கிறான். அவள் வாசிப்பவள் என்பதனையும் பின்னர் அறிந்து கொள்கிறான் மோன்டக்.

அதன் தொடர்ச்சியாக திடீரென்று ஒருநாள் அவள் இறந்து விட்டதாக அறிகிறான். இதனால் கடின மன உளைச்சலுக்கு ஆளாகும் மோண்டாக் தன் மனைவி மில்ட்ரெட்டிடம் அதனைப் பற்றி பேசுகிறான். அதன் தொடர்ச்சியாக தான் மறைத்து வைத்திருக்கும் புத்தகங்களை அவளுக்கு காண்பிக்கிறான். பின்னர் அந்த புத்தகங்களை வாசிக்கத் தொடங்குகிறான். இந்நிலையில் அவனுக்கு ஃபேபர் என்னும் முதியவரின் பழக்கம் கிடைக்கிறது. அவர் ஒர் இலக்கிய பேராசிரியராக இருந்தவர். அவர் மூலமாக அவன் மேலும் வாசிக்கிறான். இருவரும் சேர்ந்து மீதமிருக்கும் புத்தகங்களை ரகசியமாக பதிப்பிக்கலாம் எனத் திட்டமிடுகின்றனர். இதற்கிடையில் பியாட்டிக்கு மோன்டாக் நடவடிக்கைகள் மீது சந்தேகம் ஏற்படுகிறது.

பேபர் எந்நேரமும் மோன்டாக்குடன் தொடர்பில் இருப்பதற்காக காதில் பொருத்தக்கூடிய ஒரு சிறிய கருவியை அளிக்கிறார். அதன் மூலம் இருவரும் தாங்கள் படித்த புத்தகங்களை
விவாதிக்கின்றனர். இந்நிலையில் ஒருநாள் தன் மனைவி மில்ட்ரெட்டோடு அவளுடைய தோழிகள் இருவர் பேசிக்கொண்டிருப்பதைக் காண்கிறான் மோன்டாக். அவர்கள் வாசிக்கும் பழக்கம் முற்றிலும் அற்றவர்களாக இருப்பதை உணர்ந்து கொள்கிறான் மோன்டாக். அவர்களுடைய பேச்சு அவனை மேலும் எரிச்சலூட்டவே ஒரு புத்தகத்தை எடுத்து வந்து அவர்களுக்கு வாசித்துக் காட்டுகிறான். அதனால் குற்றவுணர்ச்சியடையும் அவர்கள் அவன் வீட்டை விட்டு சென்று விடுகின்றனர். தொடர்ந்து அவர்கள் பியாட்டிக்கும் தகவல் தந்து விடுகின்றனர். அதனால் தீயணைப்பு வாகனம் வருகிறது. மோன்டாகின் அனைத்து புத்தகங்களையும் கண்டுபிடித்து எரித்து விடுகிறார் பியாட்டி. அதனால் விரக்தியடைகிறான் மோன்டாக். அத்தோடு மோன்டாக்கின் காதில் இருக்கும் கருவியையும் பியாட்டி பார்த்து விடுகிறார். அதனால் ஒட்டுமொத்த வாசிப்பாளர்களும் மாட்டிக்கொள்வார்கள் என நினைக்கும் மோன்டாக் பியாட்டி மீது தீயணைப்பு வாகனத்தின் மண்ணெண்ணெயை பீய்ச்சி தீ மூட்டி விடுகிறான். பியாட்டி இறந்து விடுகிறார்.

அங்கிருந்து தப்பிக்கும் மோன்டாக் பேபர் வீட்டிற்கு செல்கிறான். அவர் அவனை ஊருக்கு வெளியே இருக்கும் காட்டிற்குள் இருக்கும் வாசிப்பாளர்களிடம் செல்லும்படி அறிவுறுத்துகிறார். ஆனால் அவன் செல்வதற்குள் போலிஸிடம் பிடிபடாமல் இருக்கவேண்டுமெனவும் கூறுகிறார். மிகவும் கடினப்பட்டு காட்டிற்குள் சென்றுவிடுகிறான் மோன்டாக். போலிஸ் தேடிவிட்டு வேறு ஒருவனை மோன்டாக் எனக்கூறி கொன்று விட்டு வழக்கை முடித்து விடுகின்றனர்.
காட்டிற்குள் சென்ற மோன்டாக் அங்கிருக்கும் பலரும் பல புத்தகங்களை நினைவில் வைத்திருப்பதை அறிகிறான், அதனை மற்றவர்களுக்கு கூறுவதே தங்கள் வேலை என்கின்றனர் அவர்கள். அவர்களோடு தானும் சேர்ந்து எதிர்காலத் தலைமுறைக்காக புத்தகங்களை நினைவில் வைத்து விவாதிக்கத் துவங்குகிறான் மோன்டாக்.

1953 ஆம் ஆன்டில் ரே பிரட்பெர்ரியால் எழுதப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.