இந்தியக் கண்டுபிடிப்புகள்

கடந்த நூறாண்டுகளில் உலகில் கண்டுபிடிக்கப்பட்ட எத்தனை தொழில்நுட்பங்கள் இந்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது? இந்தக் கேள்விக்கான விடை பெரும்பாலும் பூஜ்யமே. ஒரு சில விதி விலக்குகள் இருக்கலாம். ஆனால் அதன் விகிதாச்சாரம் ஒட்டுமொத்தமாக பார்க்கையில் புறந்தள்ளக்கூடியதே. சரி 700 கோடி மக்கள் தொகை கொண்ட உலகில் நாம் மட்டுமே 120 கோடி. சராசரியாக 6 விழுக்காடு உலக மக்கள் இந்தியர்கள். ஆனால் கண்டுபிடிப்புகள்? ஏன் இந்த நிலை?

உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்தியர்கள் இருக்கிறார்கள். ஆனால் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியர்களிடம் இல்லை. அப்படியென்றால் நம்மிடம் திறமையானவர்கள் இருக்கிறார்கள். ஆனால் கண்டுபிடிப்புகள் இல்லை என்றுதானே பொருள். ஒட்டுமொத்த ஐரோப்பாவின் (கிட்டத்தட்ட 50 நாடுகள்) மக்கள் தொகை (ஏறத்தாழ 75 கோடி) நம்மைவிடக் குறைவு. ஆனால் அவர்களின் கண்டுபிடிப்புகளில் நூறில் ஒரு பங்கு கூட நம்மால் கண்டறியப்படவில்லை. ஏன்? எங்கே பிந்துகிறோம் நாம்?

சற்றே கூர்ந்து நோக்கினால் இதன் பின்னுள்ள வரலாற்று மனநிலையை நாம் புரிந்துகொள்ளலாம். சமீபத்திய 20 ஆண்டுகளைத் தவிர்த்துப் பார்த்தால், தினசரி உணவுக்காகவே கடினமாக உழைக்கவேண்டியிருந்த பெரும்பான்மை மக்களைக் கொண்ட சமூகம் நம்முடையது. குடும்பத்தின் அத்தியாவசியத் தேவைகளுக்காகவே ஒட்டுமொத்த குடும்பமும் உழைத்த தலைமுறை நம்முடையது. அப்போதைய சூழ்நிலையில் கல்வி என்பது தங்களுடைய வயிற்றுப்பசியை நிரந்தரமாக போக்க உதவும் ஒரு கருவியே. அது அன்றைய மனநிலையில் இருந்து பார்த்தால் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. வீட்டில் உள்ள ஒருவரின் படிப்புக்காக ஒட்டுமொத்த குடும்பமும் உழைத்த தலைமுறை நம் அப்பாக்களுடையது. இன்றும் கூட அரசாங்க உத்தியோகத்தில் இருக்கக் கூடிய 50 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் கேட்போமேயானால் அவர் ஒருவருடைய படிப்புக்கு பின் இருந்த ஒர் குடும்ப உழைப்பை அறியலாம்.

அந்த தலைமுறையின் தொடர்ச்சியே நாம். கல்வியின் உச்சம் என்பதனை நல்ல சம்பளத்தில் வேலைக்கு சேர்வது, நமது குழந்தைகளை பற்றாக்குறையில்லாத பொருளாதார நிலைக்கு இட்டுச் செல்வது என்றே கொண்டிருக்கிறோம். அதனால் தான் `நல்லா படிச்சா நல்ல வேலைக்கு போகலாம், நல்லா சம்பாதிக்கலாம்` என்ற சொல‌வடையை எங்கும் எவரும் கேட்டிருப்போம்.

ஆம் நாம் கடந்த நூறாண்டுகளின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிக்கவில்லை. இதனை முற்றிலும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். ஆனால் இதற்காக பெரிய அள‌வில் வருந்தி, நம்மிடம் திறமையில்லை என்றோ, நம்மால் நிர்வகிக்க முடியாது என்றோ எண்ண வேண்டியதில்லை. ஏனெனில் நாம் திறமையானவர்களாக இருப்பதைவிட பாதுகாப்பானவர்களாக இருக்கவே விரும்புபவர்கள். எழுத்தாளர் ஜெயமோகனுடைய‌ வணங்கான் சிறுகதையில் இப்படி ஒரு வசனம் வரும், ‘இந்தப்பிடி எனக்க பிடியில்லவே, எனக்கும் எனக்கு பின்னால வாற ஏழு தலைமுறைகளுக்கும் சேத்து உண்டான பிடியாக்கும். இப்பம் நான் இத விட்டா எட்டு தலைமுறைகளாக்கும் கீழ விழுகது, கேட்டேரா?’ ஆம் அதுதான் நம் அப்பாக்களின் மனநிலை. அவர்கள் தங்களுடைய பிள்ளைகளைப் பரிதாப நிலையில் விட்டுச்செல்லத் தயாரில்லை. தான் எந்த கடினத்தையும் அனுபவிக்கத் தயார், ஆனால் தன்னுடைய குழந்தைகள் நலமாக இருக்க வேண்டும் என எண்ணிய தலைமுறை அது.
அதற்காக நாம் வருத்தப்படத் தேவையில்லை. ஏனெனில் அடுத்த தலைமுறையில் உலகில் கண்டுபிடிக்கப்படும் புதிய கண்டுபிடிப்புகளில் 50 விழுக்காடு நம்முடையதாகவே இருக்கும். இந்த முடிவிற்கு நாம் வருவதற்கான அடிப்படைக்காரணங்கள் இவைதான்,

இந்தத் தலைமுறையில் அதீத தொடர்பின் காரணமாக உலகின் ஒரு மூலையில் கண்டறியப்படும் ஒரு கண்டுபிடிப்பு உலகின் மறுமுனையை வெகு விரைவில் அடைந்து விடுகிறது. போன தலைமுறைகளில் ஒரு கண்டுபிடிப்பு உலகம் முழுவதும் சென்றடைவதற்கு நூறாண்டுகளைக் கூட எடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இன்று அப்படியில்லை. இன்றைய உல‌கம் ஒட்டுமொத்தமாக இணைக்கப்பட்டு விட்டது. அதனால் கண்டுபிடிக்கப்படும் ஒவ்வொன்றையும் அரசாங்கமும், பெரு நிறுவனங்களும் வணிக நோக்கத்திற்க்காகவும், இன்னும் பல காரணங்களுக்காகவும் உலகம் முழுவதும் கொண்டு சேர்த்து விடுகின்றனர். இதன் மறைமுகத் தாக்கங்களை ஒட்டுமொத்தமாக எவரும் கணித்துவிட இயலாது. ஆனால் அதிலுள்ள ஓர் சாதகமான‌ அம்சம் என்னவென்றால் அந்தத் கண்டுபிடிப்பையே அறியாத ஒரு சமூகம் அதனை அறிந்து கொள்கிறது. உதாரணமாக நாம் ஒரு துறையில் புதிய கண்டிபிடிப்பை நிகழ்த்த வேண்டுமெனில் அத்துறையில் இன்றைய நிலையின் ஆகச்சிறந்த படைப்பை நாம் அறிந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் நாம் அதனின் மேலான ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்த முடியும். உதாரண‌மாக இன்றைய ஆன்ட்ராய்டு இயங்குதளத்தை அறிந்தால் மட்டுமே நாம் அதனை விட மேலான இயங்குதளத்தை கண்டுபிடிக்க முடியும். இன்னும் நாம் சிம்பியான் இயங்குதளத்தையே அறிந்திருந்தோமேயானால் நாம் ஆன்ட்ராய்டை விட உயர்வான ஒன்றை எவ்வாறு கண்டுபிடிக்க இயலும்? இந்த சாத்தியத்தையே இன்றைய இணைக்கப்பட்ட உலகம் நமக்கு வழங்கியிருக்கிறது. அதனால் நாம் இன்றைய கண்டுபிடிப்புகளை அறிந்து அதிலிருந்து மேலான ஒன்றைக் கண்டறிவதற்கான வாய்ப்புகள் மிக அதிக‌ம்.

நாம் ஒட்டுமொத்தமாகப் பட்டினி தேசம் அல்ல. முற்றிலுமாக பட்டினியை ஒழிக்காவிடினும் உணவுக்காகவே ஒட்டு மொத்த குடும்பமும் வாழ்நாள் முழுவதும் உழைக்க வேண்டிய நிலையிலிருந்து மீண்டு விட்டோம். அதனால் தான் நாம் இன்று நம்மால் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற விவாதத்திற்கு வந்திருக்கிறோம். நம்முடைய அடுத்த தலைமுறை இதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். ஒரு கண்டுபிடிப்பு எத்தனை காலம் தாழ்த்தி வருகிறதோ அத்தனை வீரியம் கொண்டிருக்கும் என்பது அறிவியல் விதி. அதனால் நாம் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு பெரும்பாலும் வந்து விட்டோம்.
நாம் உலகில் ஒரே இடத்தில் மட்டும் கூட்டமாக வாழ்பவர்கள் அல்ல. உலகம் முழுவதும் பொருள்தேடிப் பறந்த சமூகம்.இந்தியர்களை எந்த நிலையில் எவராலும் ஒதுக்கிவிட இயலாது என்பதனை உலக நாடுகளுக்கு பயணிக்கும் ஒருவர் மிகச்சாதரணமாக உணரலாம். இந்திய விதை உலகம் முழுவதும் விதைக்கப்பட்டு விட்டது. அந்தந்த இடத்தின் அறிவுகளையும், வாய்ப்புகளையும் பெற்று அந்த விதைகள் அங்கங்கே முளைத்துக்கொண்டிருக்கின்றன. சரியாக இன்னும் சில காலத்தில் அச்செடிகள் பூத்துக் காய்க்கத் தொடங்கும். அந்நாளின் உலகை மாற்றும் கண்டுபிடிப்புகள் நம்மிடமிருந்தே வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.