அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன்

amma_vanthal_t_janakiraman

தி ஜானகிராமன் அவர்களால் எழுதப்பெற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் 1966ல் வெளிவந்த ஒர் நாவல். அப்பு வேதம் படிப்பதற்காக திருச்சிக்கு அனுப்பபடுகிறான். அங்கே பதினாறு வருடங்கள் வேதம் படித்தபின்னர் தன்னுடைய சொந்த ஊருக்குப் புறப்படத்தயாராகிறான். இன்னும் சில நாட்களில் கிளம்ப வேண்டும் என்ற நிலையில், அம்மடத்தினை நிர்வகிக்கும் பவானியம்மாளின் தம்பி மகள் இந்து தான் அப்புவை விரும்புவதாகக் கூறுகிறாள். இந்து ஏற்கனவே திருமணமாகி கணவனை இழந்தவள். தன் அத்தை பவானியம்மாளோடு வசிக்கிறாள். அவள் சிறுவயதிலிருந்தே அப்புவுடன் வளர்ந்தவள். அதனால் அவளுக்கு அப்புவின் மீது தீராக்காதல்.தான் மணமாகி இருந்தாலும் அனைத்து நாட்களிலும் அப்புவையே நினைத்துக்கொண்டிருந்ததாக கூறுகிறாள். அப்பு அது பவானியம்மாவுக்கும், தன்னை நம்பி அனுப்பிய தன்னுடைய அம்மா அலங்காரத்திற்கும் செய்யும் துரோகம் எனக் கூறி மறுத்துவிடுகிறான். அதனால் கோபமடையும் இந்து, அப்புவிடம் அவனுடைய அம்மாவின் நடத்தை சரியில்லை எனவும், அவள் வேறொருவரோடு உறவு வைத்துள்ளதாகவும் கூறுகிறாள். அதனால் கோபமடையும் அப்பு பின்னர் சென்னைக்கு சென்றுவிடுகிறான். அங்கு அவனுடன் பிறந்தவர்கள் ஏழு பேர். பதினாறு வருடம் கழித்து வரும் அப்பு சில நாட்களிலேயே உண்மை அறிந்து கொள்கிறான். ஆம் இந்து கூறியது உண்மைதான். வீட்டிற்கு வரும் சிவசு பற்றி அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்திருக்கிறது. ஆனாலும் எல்லோரும் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள். அப்பா, அக்கா, அண்ணன், என எல்லோருக்கும் தெரிந்த உண்மை தனக்குத் தெரியாமல் போனதை உணர்கிறான். அதனால் மனமுடையும் அவன் மீண்டும் வேத சாலைக்கே திரும்புகிறான். இந்துவோடு சேர்கிறான். இதற்கிடையில் அப்புவின் மீது அளவிலா பாசம் வைத்திருக்கும் அவன் அம்மா அலங்காரம் அப்புவினைப் பிரியமுடியாமல் வேத சாலைக்கு வந்து அப்புவைப் பார்த்துவிட்டு காசிக்கு செல்கிறாள்.

மிகவும் தத்ரூபமான நாவல். நீதான் நான் பெற்ற கடைசியாய்ப் பெற்றபிள்ளை என அப்புவிடம் அவன் அம்மா கூறும் இடம் உச்சம். அந்த ஒற்றை வரியே நாவலின் மொத்த சித்திரத்துக்கும் போதுமானது.

அதோடு தன்னுடைய வேதசாலை பவானியம்மாளைப் பார்க்கச்செல்லும் போது, பதினாறு வருடம் கழித்து வந்த பிள்ளை தன்னை விட்டு நிரந்தரமாகப் போய்விடுவானோ என்ற எண்ணத்தில் ‘அம்மா மேல உள்ள கோவத்தில வராம இருந்துரமாட்டியே’ எனும் போது மனிதர்கள் உணர்வுகளாலேயே ஆட்டுவிக்கப்படுகிறார்களே ஒழிய வேறொன்றால் அல்ல என்ற எங்கோ வாசித்த வரிதான் நினைவுக்கு வந்தது.

தமிழின் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நாவல்களில் ஒன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.