2021 – ஒரு புதிய தொடக்கம்

2021 ஆம் ஆண்டு இனிதே தொடங்கி விட்டது. ஒவ்வொரு வருடத்தின் தொடக்கத்திலும் அந்த வருடத்தில் செய்வதற்கான சில பெரிய முயற்சிகளைத் தொடங்குவதை பழக்கமாகக் கொண்டிருக்கிறேன். அதனை இத்தளத்தில் வெளியிடுவதன் நோக்கம், எனக்கு நானே இட்டுக்கொள்ளும் ஒரு வித அழுத்தமே. ஏனெனில் பொதுவெளியில் அறைகூவிவிட்டாயிற்று என்பதே எனக்கான உத்வேகத்தை அதிகப்படுத்தும். இத்திட்டமிடல்களை என்னளவில் மனதில் மட்டுமே வைத்துக்கொண்டிருப்பேயானால், காலப்போக்கில் நோக்கத்தின் வடிவம் நான் இன்று நினைப்பதைப் போலல்லாமல் வேறொன்றாக மாறிவிடலாம். அதனை வைத்து நான் அடைந்தவற்றை மதிப்பிடுவேன். அதற்காகவே இங்கே பதிவு செய்கிறேன். நான் நினைப்பதைவிட அதிகமாகவோ அல்லது அதனைவிட மேம்பட்ட ஒன்றை செய்தாலோ எனக்கு மகிழ்ச்சியே. எதுவாயிருப்பினும், என்னுடைய இன்றைய திட்டமிடலுடன் அதனை வருட இறுதியில் ஒப்பிடவேண்டும் என்பதே எண்ணம்.

இவ்வருடத்திற்கான திட்டமிடல்கள் இவையே.

  1. 52 புத்தகங்களை வாசிப்பது.
    இந்த 52 புத்தகங்களை வாசிக்கும் திட்டத்தில் சற்றே இன்னும் ஆழமாகத்திட்டமிடலாம் என நினைக்கிறேன். கடந்த வருடம் புத்தகங்களை எந்த வித ஒழுங்கும் இன்றித் தேர்வு செய்தே வாசித்தேன். அதுவும் ஒரு விதத்தில் வாசிப்பிற்கு உகந்ததுதான் எனினும் ஆகச்சிறந்த படைப்புகள் கொட்டிக்கிடக்கும் இத்தரணியில் குறைந்தது 26 புத்தகங்களை முன்கூட்டியே திட்டமிட்டு வாசிக்கலாம் என நினைக்கிறேன். மற்ற 26 புத்தகங்களை அந்தந்த சூழ்நிலைகளே தீர்மானிக்கட்டும்.
  2. இந்தி மொழியினை எழுத, வாசிக்க, பேச கற்றுக்கொள்வது
  3. நான் உருவாக்கிக்கொண்டிருக்கும் மென்பொருளை ios மற்றும் android இயங்குதளங்களில் வெளியிடுவது.
  4. தினமும் காலையில் 5 மணிக்கு முன்னதாக எழுவது.
    பெரும்பாலும் இயல்பாகவே நான் அதிகாலையில் எழுந்து விடுவது உண்டு. அதனை முறைப்படுத்த முயல்கிறேன். எல்லா நாட்களிலும் 5 மணிக்கு முன்னதாக எழ வேண்டும். அது எந்த நாளாக இருந்தாலும்.

பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.