பேரும் புகழும் – எசு.எசு.அருணகிரிநாதர்

perum_puhalumஎசு.எசு.அருணகிரி நாதர் என்பவரால் 2007 ல் எழுதப்பெற்ற அறிவுரை நூல். பெரும்பாலும் வெளிப்படையான அறிவுரைகளின் தொகுப்பு. ஆசிரியரைப்பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால் தன்னுடைய வயதான காலகட்டத்தில் எழுதியிருப்பதாகவே நூல் அமைப்பு உள்ளது. பொறாமை, அன்பு,காமம் போன்ற பல்வேறு தலைப்புகளில் மனிதர்களுக்கு அறிவுறை கூறுகின்றார். பெரும்பாலான அறிவுரைகளில் ஓ மனிதனே! என ஒட்டுமொத்த மனிதகுலம் நோக்கி தன்னுடைய அனுபவத்தை அறிவுரையாகத் தருகிறார். இதனை நாம் வயது முதிர்ந்த பல்வேறு பெரியவர்களிடம் கேட்கலாம். அப்பெரியவர்களின் சொற்கள் நூலாகியிருக்கிறது. ஒட்டுமொத்தமும் வெளிப்படையான ஒற்றைப்படை அறிவுரை நூல் என்பதனால் சிறுவர்களுக்கு ஆரம்பகால ஒழுக்கத்தினை வளர்க்கும் பொருட்டு வாசிக்கத் தரலாம்.

மாங்கொட்ட சாமி – புகழ்

mangotta-saamiஎழுத்தாளர் புகழால் எழுதப்பெற்ற சிறுகதைகளின் தொகுப்பு. மொத்தம் 13 சிறுகதைகள். செட்டிக்குளம் என்னும் கிராமத்திலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் நடைபெறும் சம்பவங்களே ஒவ்வொரு சிறுகதையும்.

இந்தக் கதைகளின் சிறப்பம்சம் என நான் கருதும் ஒன்று இதில் கையாளப்பட்டிருக்கக்கூடிய மொழி வழக்கு. புகழ் இயல்பிலேயே கிராமத்து வாழ்விலிருந்தமையால் அவருக்கு மிக எளிதாக இந்நடை கூடி வந்திருக்கிறது. அத்தகைய கிராம சூழ்நிலைகளிலிருந்து வளர்ந்து வந்த எவர் ஒருவரும் தன்னை மிக நெருக்கமாக இந்தக் கதைக்களத்திற்குள் இணைத்துக்கொள்ள முடியும். அத்தனை இயல்பான கிராமத்து சொலவடைகள். நானே நேரடியாகக் கேட்ட பல சொலவடைகள் எங்கோ என் மனதின் ஆழத்தில் கிடந்தவற்றை இச்சிறுகதைகள் உயிரெழுப்பின.

மிகச்சில இடங்கள் தவிர்த்து ஏனைய இடங்களில் கிராமத்து சொலவடை அப்படியே பதிவு செய்திருக்கிறார். அது இச்சிறுகதைகளுக்கு ஒரு இயல்பான ஒரு தோற்றத்தை அளிக்கிறது.

எல்லா கதைகளுமே ஒன்றுக்கொன்று ஏதோ தொடர்போடு இருப்பதாகவே தோன்றுகிறது. அது இச்சிறுகதைகளை ஒற்றைப்படையாக மாற்றுவதாகத் தோன்றுகிறது. உதாரணமாக ஒலச்சான் சின்னாளு, அருணாச்சலம் பெரும்பாலும் எல்லாக் கதைகளிலும் வருகிறார்கள்.

குறிப்பிடத்தக்க ஒரு கதை தொங்கட்டான் கிளவி. இந்தக் கதை ஒரு கிழவியின் மரணப்படுக்கையில் தொடங்குகிறது. நூலாசிரியரே கதை சொல்லியாக மாறி நமக்கு கதையினை சொல்கிறார். பெரும்பாலான அனைத்துக்கதைகளுமே அப்படித்தான். அக்கிழவியின் வாழ்க்கை, பட்ட கஷ்டங்கள், அவள் மகனை வளர்த்த விதம் என எல்லாவற்றையும் சொல்லி முடிக்கிறார். எல்லோரும் அவள் இறப்பை எதிர்நோக்கி இருக்க, அவள் தன் மகனை எதிர்நோக்கி இருக்கிறாள். அதனால் பால் ஊற்றியும் மரணிக்காமல் இருக்கிறாள். இறுதியில் தன் மகனைப் பார்த்ததும் உயிர் பிரிகிறது. இது ஒரு குறிப்பிடத்தக்க கதையாக எனக்குத் தோன்றுகிறது.

இதைத் தவிர ஏனைய கதைகள் அனைத்துமே ஒரு வாசகனுக்கு எந்தவித சவாலையும் அளிக்காத கதைகள். உதாரணமாக ஏதாவது ஒரு சொற்றொடரையோ சொலவடையையோ கூறும்பொழுது ஆசிரியரே கதை சொல்லியாக அதற்கான விளக்கத்தையும் அளித்து விடுகிறார். இதனால் அதனை வாசகன் தான் அறியும் பொருட்டு அடையும் பரவசத்தினை அடைய முடிவதில்லை. எழுத்தாளர் ஜெயமோகன் ஒருமுறை கூறினார், சிறுகதை என்பது குறைவாகக் கூறி அதிகமாக கற்பனை செய்ய வைப்பது. அந்த இடத்தில் இந்த சிறுகதைத் தொகுப்பு சறுக்கியிருக்கிறது. இச்சிறுகதைத் தொகுப்பை அதன் வெளியீட்டிற்கு முன்னால் ஜெயமோகனிடம் கொடுத்திருந்து அவர் திருச்சி சுற்றுவட்டாரப்பகுதிகளில் வாழ்ந்து வரக்கூடிய ஒருவரையாய் இருந்திருந்தால் இத்தொகுப்பு தமிழின் தலைசிறந்த சிறுகதைகளாக மாறியிருக்கும் என்றே நான் நினைக்கிறேன்.

சிங்கப்பூர் இலக்கிய முகாம் ‍ 2016

participants

ஜெயமோகன் சிங்கப்பூரில் உடனுறை எழுத்தாளர் திட்டத்தின் கீழ் இருமாதங்கள் பணியாற்றினார். பள்ளி மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தினை மேம்படுத்தவும், எழுதப் பயிற்சி அளிக்கவுமான ஓர் திட்டம்.

அவர் சிங்கப்பூரில் இருப்பதனால் இந்த வருட இலக்கிய முகாமை சிங்கப்பூரில் நடத்த திட்டமிட்டனர். இரண்டு நாள் நிகழ்வு. செப்டம்பர் 17 மற்றும் 18. 19ம் தேதி கண்டிப்பாக முடித்தாக வேண்டிய பணி எனக்கிருந்தது. வெள்ளிக்கிழமை இரவு பன்னிரண்டு மணி வரை வேலை செய்தேன். முடிக்க முடியவில்லை. செல்வதா இல்லை பணியைத் தொடர்வதா என பெரிய குழப்பம். இருப்பினும் செல்வது என முடிவெடுத்துவிட்டேன். மாலை ஐந்து மணிக்கு நிகழ்வு முடிந்ததும் மீண்டும் வேலையைத் தொடர்ந்து செய்தேன். இரவு பதினோரு மணி வரை. மறுநாள் காலையில் சீக்கிரம் எழுந்து மீண்டும் வேலை செய்தேன். எட்டரைக்கு முடித்துவிட்டு அடித்துப் பிடித்துக்கொண்டு ஓடினேன். இதில் ஆறுதலான விஷயம் என்னவென்றால் நிகழ்ச்சி நடைபெற்ற இடம் எனது வீட்டின் அருகில். சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவு. அப்படி என்னதான் இருந்தது அந்நிகழ்வில்?

மிகச்சிறந்த நிகழ்வு. மிக சிறப்பாக ஒருங்கமைத்திருந்தார்க‌ள். ஆரம்பத்தில் எனக்கு இரண்டு நாள் நிகழ்வென்பதனால் சற்றேனும் சலிப்படைந்து விடுமோ என்ற எண்ணமிருந்தது. ஆனால் முதல்நாள் கம்பராமயணப் பாடல்கள் முடிவடைந்த உடனேயே அந்த எண்ணம் முற்றாக அகன்றது. குறிப்பாக ஜெயமோகன் அவர்கள், அவ்வப்பொழுது இயல்பாக எழும் சோம்பலை இல்லாமலாக்குவதற்காக நகைச்சுவைத்துணுக்குகளை கூறிக்கொண்டே இருந்தார். அவர் மட்டுமல்லாமல் அரங்கசாமி மற்றும் குறிப்பாக ஈரோடு செந்தில் ஆகியோரது நகைச்சுவைத்துணுக்குகளும் நாள் முழுவதையும் மிகவும் மகிழ்ச்சிகரமானதாக ஆக்கிக்கொண்டே இருந்தன‌. அத்தோடு இரண்டு நாள் உணவும் மிகச்சிறப்பு. அதில் பாயாசம் உச்சம். அன்னமிட்ட நண்பருக்கு ஆயிரம் நன்றிகள்.

அடுத்து இரண்டு நாட்களின் அறிதல்கள். ஜெயமோகன் கூறுவதுபோல குறைவாகக் கூறி பின்னதை ஊகிக்கவிடுவதாகவே அமைந்தது. இந்த இரண்டு நாட்களிலும் நிகழ்வுகளின் அமர்வுகளிலும், தனிப்பட்ட உரையாடல்களிலும் நமக்கு அறிவு அளிக்கப்பட்டதைவிட அதற்கான வாயில்கள் காட்டப்பட்டன என்றே நான் எண்ணுகிறேன். உதாரணமாக கம்பராமாயணம். அதன் இனிமையின் ஒரு துளி நமக்கு புகட்டப்பட்டது. நாம் மயங்கினோம். அடுத்தது தற்போது கிடைக்கும் பதிப்புகளில் கோவைப்பதிப்பு விளக்கவுரையுடன் மிகச்சிறப்பான ஒன்று என்ற தகவல். அவ்வளவுதான். மற்றவை நம் கையில்.

அது மட்டுமின்றி சிறுகதைகள், கவிதை, வரலாறு, இலக்கியம் எனப் பல தளங்களிலும் விவாதம் நீண்டது. ஆனால் எந்த தருணத்திலும் சலிப்பே தோன்றவில்லை. அத்துனை ஆர்வமாகவும், ஈர்ப்பாகவும் இருந்தது.

மறைக்கப்பட்ட இந்தியா – எஸ்.ராமகிருஷ்ணன்

maraikkappatta_india

எழுத்தாளர் ராமகிருஷ்ணனால் எழுதப்பெற்றது. ஆனந்த விகடனில் தொடர்ச்சியாக‌ வெளிவந்த க‌ட்டுரைகளின் தொகுப்பு. இந்திய வரலாற்றில் நிகழ்ந்த சம்பவங்களின் அடிப்படையிலான கட்டுரைகள். இதுவே சாராம்சம். தனித்தனியாக வெளிவந்ததால் ஒட்டுமொத்த புத்தகத்திற்கு என்று ஒரு கச்சித வடிவம் கிடையாது. ஓர் ஆரம்பகால அல்லது இதுவரை வாசிப்பு பழக்கம் இல்லாத ஒருவருக்கான புத்தகம். ஏனெனில் வெறுமனே தட்டையான எழுத்து நடை. ஏற்கனவே வாசிக்கும் பழக்கம் உள்ளவருக்கு சலிப்பையே தரும். அதிலுள்ள தகவல்களும் அப்படியே. எந்த தகவலும் தினசரி செய்தித்தாள்களில் வரக்கூடிய அளவிற்கானவையே. ஆழமற்ற செறிவற்ற தகவல்கள். அதனால் வரலாற்றினை விரும்பி படிக்கும் ஒருவருக்கும் சலிப்பே தோன்றுகிறது. இருப்பினும் ஒரு விதத்தில் இதன் பயன் என்னவெனில், நமக்குத் தெரியாத ஒரு தகவலினை ஏதாவது ஒரு கட்டுரையில் படிக்கும்பொழுது அவற்றை பற்றித் தெரிந்துகொள்ள முயல ஓர் வாய்ப்பு உண்டு. அதாவது அந்த தகவலினை இப்புத்தகத்தில் தேடாமல் வேறு எங்காவது படிக்கலாம். மற்றொன்று கட்டுரைகளோடு தொடர்புடைய பல்வேறு புத்தகங்களினை கட்டுரைகளின் நடு நடுவே பிரசுரித்திருப்பதனால் அப்புத்தகங்களைப் படிக்கலாம். இது மற்றோர் பயன். மற்றபடி இப்புத்தகத்தில் பிரமாண்டம் என்பது தலைப்பு மட்டுமே.

சுதந்திர தின‌ வாழ்த்துக்கள்

www.hdnicewallpapers.com

70 ஆவது சுதந்திரதினத்தைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின‌ வாழ்த்துக்கள்.

முதலில் நம் அனைவரிடமும் ஓர் கேள்வி. நாம் உண்மையாகவே சுதந்திரதினத்தைக் கொண்டாடுகிறோமா, இல்லை அதனை ஓர் விடுமுறை நாளாக மட்டும் எடுத்துக்கொள்கிறோமா? உண்மையான பதில் நம்மில் பெரும்பாலானோர்க்கு உண்மையில் அது விடுமுறை தினம் மட்டுமே. நாம் மற்ற பண்டிகைகளான தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போலவா சுதந்திர தினத்தினைக் கொண்டாடுகிறோம்? இல்லவே இல்லை.

நண்பர்களே! நாம் பெற்ற அந்த சுதந்திரத்தால்தான் இன்று நாம் நாம் விரும்பும் பண்டிகைகளைக் கொண்டாடமுடிகிறது. நண்பர்களே உங்களுக்கு ஒன்று தெரியுமா? வட கொரியாவில் நீங்கள் பைபிளை வைத்திருந்தால் உங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். ஆப்ரிக்க நாடான அங்கோலாவில் நாம் இஸ்லாம் மதத்தை தழுவமுடியாது. அங்கே இஸ்லாம் தடை செய்யப்பட்ட ஓர் மதம். சிங்கப்பூரில் அதன் பிரதமரை நம்மால் கேளிச்சித்திரமாக வரைய முடியாது. அங்கே அது சட்டப்படி தடைசெய்யப்பட்ட‌ செயல். ஆனால் நம் இந்தியாவில் நம் ஒவ்வொருவருக்கும் இந்தியாவின் முதல் குடிமகன் முதல் கடைசிநபர் வரையிலும் விமர்சிப்பதற்கான உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. இது நாம் பெற்ற சுதந்திரத்தாலேயே சாத்தியமான ஒன்று.

நண்பர்களே நாம் சுதந்திரதினத்தைக் கொண்டாடாமல் இருப்பதே அந்த சுதந்திரம் நமக்களித்துள்ள சுதந்திரத்தால் தான் இல்லையா? இத்தேசத்தின் ஒவ்வோர் நபருக்கும் சுதந்திரதினமே தலையாய கொண்டாட்டமாக‌ இருக்கவேண்டும் என்பதே என் எண்ணம். என் எண்ணம் கண்டிப்பாக சாத்தியமான ஒன்றே என நான் எண்ணுகிறேன், நாம் அனைவரும் மனது வைத்தால்.

காவி கார்ப்பரேட் மோடி

kavi-corporate-modi

மோடி அவர்களைப் பற்றி பல்வேறு காலகட்டங்களில் வினவு இணையதளம் மற்றும் புதிய ஜனநாயகம் இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு நூல். நூலகத்தின் காட்சிப்பலகையில் வைக்கப்பட்டிருந்ததால் இப்புத்தகத்தை வாசித்தேன். முற்றிலும் ஒற்றைச்சார்பு கொண்ட கட்டுரைகள். ஒற்றை வரி இதுதான். மோடி வெறுப்பு. அதற்கான சம்பவங்களையெல்லாம் எடுத்து கட்டுரையாக்கியிருக்கிறார்கள். அதிலும் கீழ்த்தரமான வார்த்தைகள். இரண்டாவது நோக்கம் புத்தகம் வெளிவந்த காலம் 2013 ஆம் ஆண்டு. அப்போதைக்குத்தான் மோடி அவர்களை பிரதமராக அறிவிப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகிக்கொண்டிருந்த நேரம். அதனால் மோடியின் மதிப்பினைக்த குறைக்கும் நோக்கில் வெளியிடப்பட்ட புத்தகம். பெரும்பாலான கட்டுரைகளில் தகவல்களை விட வசவுகளே உள்ளன. நம் நாட்டில் அனைவரையும் விமர்சிப்பதற்கான உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. அதற்காக இத்த‌னை கீழ்த்தரமான வார்த்தைகள் உபயோகப்படுத்த வேண்டியதில்லை. நாட்டிலுள்ள பெரும்பாலானோர் குஜராத்தில் நடைபெற்ற சம்பவங்களின் எதிர்ப்பாளர்களே. ஆனால் அவர்களையும் இந்துக்கள் என்று பொதுப்படுத்துவதன் மூலம் இந்து மத அடிப்படைவாதிகளோடு அனைத்து இந்துக்களையும் இணைக்கும் வேலையையே இந்த கட்டுரைகள் செய்கின்றன. தவிர்க்க வேண்டிய புத்தகம்.

அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன்

amma_vanthal_t_janakiraman

தி ஜானகிராமன் அவர்களால் எழுதப்பெற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் 1966ல் வெளிவந்த ஒர் நாவல். அப்பு வேதம் படிப்பதற்காக திருச்சிக்கு அனுப்பபடுகிறான். அங்கே பதினாறு வருடங்கள் வேதம் படித்தபின்னர் தன்னுடைய சொந்த ஊருக்குப் புறப்படத்தயாராகிறான். இன்னும் சில நாட்களில் கிளம்ப வேண்டும் என்ற நிலையில், அம்மடத்தினை நிர்வகிக்கும் பவானியம்மாளின் தம்பி மகள் இந்து தான் அப்புவை விரும்புவதாகக் கூறுகிறாள். இந்து ஏற்கனவே திருமணமாகி கணவனை இழந்தவள். தன் அத்தை பவானியம்மாளோடு வசிக்கிறாள். அவள் சிறுவயதிலிருந்தே அப்புவுடன் வளர்ந்தவள். அதனால் அவளுக்கு அப்புவின் மீது தீராக்காதல்.தான் மணமாகி இருந்தாலும் அனைத்து நாட்களிலும் அப்புவையே நினைத்துக்கொண்டிருந்ததாக கூறுகிறாள். அப்பு அது பவானியம்மாவுக்கும், தன்னை நம்பி அனுப்பிய தன்னுடைய அம்மா அலங்காரத்திற்கும் செய்யும் துரோகம் எனக் கூறி மறுத்துவிடுகிறான். அதனால் கோபமடையும் இந்து, அப்புவிடம் அவனுடைய அம்மாவின் நடத்தை சரியில்லை எனவும், அவள் வேறொருவரோடு உறவு வைத்துள்ளதாகவும் கூறுகிறாள். அதனால் கோபமடையும் அப்பு பின்னர் சென்னைக்கு சென்றுவிடுகிறான். அங்கு அவனுடன் பிறந்தவர்கள் ஏழு பேர். பதினாறு வருடம் கழித்து வரும் அப்பு சில நாட்களிலேயே உண்மை அறிந்து கொள்கிறான். ஆம் இந்து கூறியது உண்மைதான். வீட்டிற்கு வரும் சிவசு பற்றி அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்திருக்கிறது. ஆனாலும் எல்லோரும் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள். அப்பா, அக்கா, அண்ணன், என எல்லோருக்கும் தெரிந்த உண்மை தனக்குத் தெரியாமல் போனதை உணர்கிறான். அதனால் மனமுடையும் அவன் மீண்டும் வேத சாலைக்கே திரும்புகிறான். இந்துவோடு சேர்கிறான். இதற்கிடையில் அப்புவின் மீது அளவிலா பாசம் வைத்திருக்கும் அவன் அம்மா அலங்காரம் அப்புவினைப் பிரியமுடியாமல் வேத சாலைக்கு வந்து அப்புவைப் பார்த்துவிட்டு காசிக்கு செல்கிறாள்.

மிகவும் தத்ரூபமான நாவல். நீதான் நான் பெற்ற கடைசியாய்ப் பெற்றபிள்ளை என அப்புவிடம் அவன் அம்மா கூறும் இடம் உச்சம். அந்த ஒற்றை வரியே நாவலின் மொத்த சித்திரத்துக்கும் போதுமானது.

அதோடு தன்னுடைய வேதசாலை பவானியம்மாளைப் பார்க்கச்செல்லும் போது, பதினாறு வருடம் கழித்து வந்த பிள்ளை தன்னை விட்டு நிரந்தரமாகப் போய்விடுவானோ என்ற எண்ணத்தில் ‘அம்மா மேல உள்ள கோவத்தில வராம இருந்துரமாட்டியே’ எனும் போது மனிதர்கள் உணர்வுகளாலேயே ஆட்டுவிக்கப்படுகிறார்களே ஒழிய வேறொன்றால் அல்ல என்ற எங்கோ வாசித்த வரிதான் நினைவுக்கு வந்தது.

தமிழின் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நாவல்களில் ஒன்று.