கல்வி

தேர்வு முடிவுகள்

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் வெளிவந்திருக்கின்றன. இந்த வருடம் வழக்கத்தைவிட அதிகமாக தேர்ச்சி விகிதம், மதிப்பெண்கள் பெற்றுள்ளதை தேர்வு முடிவுகள் காட்டுகின்றன. அனைவரையும் வாழ்த்தும் அதே வேளையில் இந்த தேர்வு முடிவுகளின் உண்மை நிலையை நாம் விவாதிக்க வேண்டியுள்ளது.

முதலாவது தமிழகத்தைப் பொறுத்த வரையில் தேர்ச்சி விழுக்காடு என்பதனை பெரும்பாலும் கடந்த ஆண்டின் தேர்ச்சி விழுக்காட்டிலிருந்து அதிகபட்சம் ஐந்து விழுக்காட்டிற்குள் அதிகமாகவோ குறைவாகவோ இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள். கடந்த ஆண்டுகளின் தேர்ச்சி விகிதத்தை ஒப்பிட்டுப் பார்த்தோமேயானால் இந்த‌ உண்மை நமக்குத் தெரியும்.

தேர்வு விழுக்காட்டினைக் குறைத்தால் அது அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதனால் தேர்வுத்தாள்கள் திருத்தப்பட்டபின்னர் தேர்ச்சி விகிதம் மதிப்பிடப்படும். கடந்த ஆண்டை விட அதிகமாகக் குறையும் பட்சத்தில் எந்த பாடத்தில் அதிகம் பேர் தோல்வி அடைந்திருக்கிறார்களோ அதில் 5 மதிப்பெண் வழங்கினால் தேர்வு விழுக்காடு எவ்வளவு அதிகரிக்குமென கணக்கிடப்படும். இல்லையென்றால் 10 மதிப்பெண்கள் வழங்கி விழுக்காடு கணக்கிடப்படும். எதிர்பார்க்கும் விழுக்காட்டிற்கு அருகில் எத்தனை மதிப்பெண்கள் வழங்கினால் தேர்ச்சி விகிதம் வருகிறதோ அத்தனை மதிப்பெண்ணை வழங்கிவிடுவார்கள். ஆக‌ என்ன செய்கிறோம்? மாணவர்களின் திறனை மதிப்பிடுவதற்குப் பதில் தேர்ச்சி விழுக்காட்டிற்காக மதிப்பிடுகிறோம்.

மற்றொன்று பாடத்திட்டம். இந்த முறை மாணவர்கள் சமச்சீர் கல்வித்திட்டத்தின் கீழ் தேர்வெழுதியதால் அதிக மதிப்பெண் பெற்றதாக ஒரு சாரர் விளக்கமளிக்கின்றனர். அது முழவதும் சரியல்ல என்பதே உண்மை. அனைவருக்கும் பொதுவான ஒரு கல்வித்திட்டமென்பதில் பெரும்பாலானவர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்காது. ஆனால் அது தரமானதா என்பதுதான் கேள்வி.

சம‌ச்சீர் கல்வி முந்தைய பாடத்திட்டத்தை விட சிறப்பானதுதான். ஆனால் அந்த சமச்சீர் கல்வியும் இன்றைய குழந்தைகளுக்கு ஏற்ப இல்லை. எப்படி சொல்வதென்றால் 100க்கு 5 மதிப்பெண்கள் எடுத்து கொண்டிருந்த‌ நாம் இப்போது 10 மதிப்பெண்கள் எடுத்துக்கொண்டிருக்கிறோம். இரண்டுமே தோல்விதான்.

நாம்தான் தேர்ச்சி விழுக்காடு 90, 80 என வைத்துள்ளோமே எனக்கூறுபவர்கள் 450 க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களிடம் இந்த தேர்வுக்கு வந்த அனைத்து அறிவியல் கேள்விகளுக்குமான நடைமுறை உபயோகங்களைக் கேட்டுப்பார்த்தால் தெரியும். ஐந்து விழுக்காடு மாணவர்கள் சரியான பதில் கூறினால் ஆச்சரியம். இந்நிலையில் 70000 பத்தாம் வகுப்பு மாணவர்கள் 100க்கு 100.  இதுதான் நம் நிலை.

அதோடு இன்றைய பாடத்திட்டத்தில் புத்தகத்திற்கு வெளியே பாடம் தொடர்பான‌ கேள்வியே கேட்கப்படுவதில்லை. வார்த்தை மாறாமல் புத்தகத்திலிருந்து கேட்கிறார்கள். அத்தோடு இன்றைய ஆசிரியர்கள் மற்றும் நிறுவனங்க‌ள் புத்தகத்தைப் போதுமான அளவிற்கு பகுத்து 100க்கு 100 பெறுவதற்கான சூத்திரத்தை உருவாக்கி விட்டார்கள். உதாரணமாக முதல் இரண்டு பாடத்திலிருந்து 30 மதிப்பெண்கள் வருமென்றால் அதற்கு தகுந்தாற்போல பயிற்சியைக் கொடுத்துவிடுகிறார்கள. முழுவதுமாக புரிந்து எல்லா பாடத்தையும் படிக்க வேண்டிய அவசியமில்லை.

அதன் பொருள் மாணவர்கள் புத்திசாலிகள் அல்ல என்பதல்ல. பாடத்திட்டம் புத்திசாலித்தனமாக இல்லை என்பதுதான். கூரான கத்தியை சொற சொறப்பான தரையில் கூர் தீட்டுகிறோம். நமக்குள் பாராட்டியும் கொள்கிறோம். இன்றைய சமச்சீர் கல்வி மிகச் சிறப்பாக உள்ளதாகக் கூறுவோரும் உண்டு. அவர்களுடைய அறிவைக்கொண்டு மாணவர்களின் அறிவை மதிப்பிட்டு அதற்கு ஏற்ப சமச்சீர் கல்வி தரமானது என்கிறார்கள். அது தவறுதானே?

இன்றைய குழந்தைகளின் அறிவுத்திறன் மிக மிக அதிகம். உதாரணமாக நாம் 20 வயதில் எந்த அறிவைப்பெற்றிருக்கிறோமோ அதனை இன்றைய குழந்தை 10 வயதிலேயே பெற்று விடுகிறது. நாம் அந்த குழந்தைக்கான பாடத்தை வடிவமைக்கவேண்டுமே தவிர நாம் குழந்தையாக இருந்தால் எது பாடமாக இருக்கவேண்டுமோ அதை வைக்கக் கூடாது. இல்லை, நாம் வழக்கம்போல பழைய மாவையே அரைத்துக்கொண்டிருந்தோமேயானல் நமக்குள் நாமே பாராட்டிக்கொள்வதோடு நம் கல்வியும் அறிவும் முடிந்து விடும். இந்திய அளவிலான தேர்வுகளிலோ, உலக அரங்கிலோ நாம் மிகவும் பின் தங்கி விடுவோம். இன்று அதுதான் நடைபெறுகிறது.

இல்லை, நமது பாடத்திட்டமும் சரி, மதிப்பெண்களும் சரி என்று வாதிடுவோர்களிடமெல்லாம் நாம் இப்படிக் கேட்போம். நீங்கள் கூறுவது போல் மிகச்சிறந்த மாணவர்களெல்லாம் இங்குதான் உருவாகிறார்களென்றால் கடந்த பத்தாண்டுகளின் ஒரு பெரிய கண்டுபிடிப்பு கூட இந்தியாவில் இல்லாததன் காரணம் என்ன? அவர்களிடம் பதில் இருக்காது.

அதற்கான பதிலையும் நாமே கூறிவிடுவோம். உலகம் மிக நெருக்கமாக சுருங்கி வரும் இன்றைய காலக்கட்டத்தில் ஒரு துறையில் புதியதாக ஒன்றை நாம் கண்டுபிடிக்க வேண்டுமாயின் முதலில் இன்றைய நிலையில் அத்துறையில் இருப்பவை எவை, புதிதாக கண்டுபிடிக்கப்பட்டவை எவை என்பதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு மிகச்சிறந்த காரை வடிவமைக்கும் முன்னர் தற்போதிருக்கும் சிறந்த காரைப்பற்றிய முழு அறிவும் பெற்றிருந்தால் தானே நாம் அதைவிட சிறப்பாக உருவாக்க முடியும்? நாமோ இன்னும் சைக்கிளிலேயே காலத்தைத் தள்ளிக்கொண்டிருக்கிறோம். அப்புறம் எங்கே மிகச்சிறந்த காரை வடிவமைப்பது?

மாணவர்கள் கல்வியைக்காட்டிலும் மிக அதிகமாக வெளியில் கற்றுக்கொள்கிறார்கள். நாம் பாடத்திட்டத்தை பல ஆண்டுகளுக்கு ஒரு முறை பெயரளவிற்கு மாற்றுகிறோம். ஆனால் இன்றைய நவீன உலகம் வாழக்கூடிய‌ சூழல் மிக மிக விரைவாக தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. அதிலிருந்தே இன்றைய குழந்தைகள் அதிகமாகக் கற்றுக்கொள்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளில் மொபைல் தொழில் நுட்பம் என்பது மிகப்பெரும் அளப்பறிய மாற்றங்களை கண்டுள்ளது. இரண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் Wi-Fi வழியாக ஒரு போனிலிருந்து மற்றொன்றிற்கு வேண்டியவற்றை Copy செய்கிறான். ஆனால் 12ஆம் வகுப்பு வரை Wi-Fi பற்றிய ஒன்றே பாடத்தில் இல்லை.  இது உதாரணம்தான்.

அத்தனை விரைவாக பாடத்திட்டத்தை மாற்ற வேண்டியதில்லை என்றாலும் ஆண்டு தோறும் மதிப்பீட்டுகளின் அடிப்படையில் ஒரு மிகச்சிறந்த நிபுணர் குழுவை அமைத்து பாடத்திட்டங்களை தொடர்ச்சியாக மேம்படுத்துவதே சரியாக இருக்கும். ஏனெனில் உலகம் வல்லமையால் ஆளப்பட்ட காலம் கடந்து விட்டது. இன்று உலகை ஆள்வதும் இனி உலகை ஆளப்போவதும் அறிவு மட்டுமே. அதுவே நமக்கும் தேவை.

நன்றி.