shame

லஜ்ஜா – அவமானம்

1993 ஆம் ஆண்டு வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் அவர்களால் எழுதப்பட்ட நாவல். 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு வங்கதேசத்தில் நடைபெற்ற கலவரங்களின் போது ஒரு இந்து குடும்பத்தின் நிலையே நாவல். அந்தக்குடும்ப நபர்கள் கற்பனை எனக் கூறப்பட்டிருந்தாலும் விவரிக்கப்படும் சம்பவ‌ங்கள் அனைத்தும் உண்மை சம்பவங்களே. இதற்காக  சம்பவங்களை ஆதாரத்தோடு விளக்கியுள்ளார்.

கதை இதுதான்.

பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் சுதந்திரம் பெறுவதற்கான போராட்டங்களில் பங்கு பெற்ற பல இந்துக்களில் சுதாமயும் ஒருவர். பாகிஸ்தானிலிருந்து சுதந்திரம் பெற்ற 1972 க்குப் பின்னர் ஆறு ஆண்டுகள் கழித்து வங்கதேசத்தின் அரசியல் சாசன‌ம் மாற்றி இஸ்லாமிய தேசமாக அறிவிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இந்துக்கள் மீது பல்வேறு விதமான அடக்குமுறைகள் ஏவப்படுகின்றன. பல லட்சம் இந்துக்கள் தன் தாய் நாட்டை விட்டு இந்தியாவுக்கு அகதிகளாக செல்கின்றனர். ஆனால் சுதாமய் எக்காரணம் கொண்டும் தன் தாய் நாட்டை விட்டு போக மறுத்து அங்கேயே வாழ்கிறார்.

சுதாமய் ஒரு டாக்டராக இருந்தவர். வயதாகி விட்டதால் வீட்டிலிருந்த படியே சிலருக்கு வைத்தியம் பார்த்து சம்பாதிக்கிறார். அவர் இந்து என்பதால் அதிகம் பேர் வருவதில்லை. அவருடைய மனைவி கிரண்மயிக்கு வீடே உலகம். எந்நேரமும் தன் மகள், மகனுக்கு ஏதும் நேர்ந்துவிடக்கூடாது என்ற பதைபதைப்போடு வாழ்பவர். மகன் சுரஞ்சன் முப்பது வயது இளைஞன், வேலையில்லாமல் ஊரில் நடைபெறும் கலவரங்களைக் கண்டு ஒன்றும் செய்யமுடியவில்லை என விரக்தியில் வாழ்பவன். அவன் தங்கை மாயா அமைதியாக, கலவரமின்றி வாழ விரும்புபவள், அதற்காக அவள் ஒரு முஸ்லிம் இளைஞனைக் காதலித்தாள். தன்னை ஒரு முஸ்லிம் போலக் காட்டிக்கொள்ளக் கூடியவள்.

இந்நிலையில் 1992 டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் வங்க தேசத்தில் இருக்கும் இந்துக்கள் மீது வெறித்தனமான தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்துக்களின் கடைகள், இந்துப் பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் தாக்கப்படுகின்றனன‌ர். இந்துக்கள் மீதான தாக்குதல் தீவிரமாகிறது. உறவினர்கள் எல்லோரும் வற்புறுத்தியும், மனைவி, மகள் கெஞ்சியும் சுதாமய் இந்தியாவுக்கு செல்ல மறுத்து தன் தேசம் என உரிமை கொண்டாடுகிறார். இந்நிலையில் அனைவரும் பிரச்சினை சீராகும் வரை முஸ்லிம் நண்பர்கள் வீட்டில் ஒளிந்து கொள்ளும்படி கூறும் யோசனையையும் நிராகரிக்கிறார்.

இந்நிலையில் அவருக்கு பக்கவாதம் வந்து விடுகிறது. சுரஞ்சன் எந்த பொறுப்புமில்லாமல் வீதிகளில் விரக்தியோடு சுற்றித் திரிகிறான். எங்கும் தாக்குதல்கள். இந்நிலையில் ஒரு கும்பல் சுதாமய் வீட்டுக்குள் புகுந்து வீட்டை அடித்து நொறுக்கி விட்டு மாயாவைத் தூக்கிச் சென்றுவிடுகிறது. யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. விஷயம் அறிந்து சுரஞ்சன் முழு நகரமும் நண்பர்கள் உத‌வியோடு தேடுகிறான். கடைசி வரை மாயா கிடைக்காத நிலையில் வீடே அலங்கோலமாகிறது. சுரஞ்சனும் அளவின்றி குடிக்க ஆரம்பித்து விடுகிறான். இந்நிலையில் சுதாமய் வங்கதேசத்தை விட்டு புறப்படுவதாக நாவல் முடிகிறது.

இந்த நாவல் பங்களா தேசத்தில் தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்திற்காகத்தான் தஸ்லிமா நஸ்ரின் நாட்டை விட்டு வெளியேறினார்.