குப்பை தேசம்

blog_post_6இந்தியாவேதான்.

1990 வரை கிராம நகர வாழ்க்கை முறைகளுக்கான இடைவெளி மிக அதிகம். அதனால் நகர மக்களை அடையக்கூடிய ஒரு வசதியோ, தொழில்நுட்பமோ கிராம மக்களை அடைய ஆண்டுகள் பிடிக்கும். ஆனால் பின் வந்த ஆண்டுகளில் நிலைமை அவ்வாறாக இல்லை. ஒரு வசதி, ஒரு தொழில்நுட்பம் நகர மக்களை வந்தடையும் அதே வேகத்தில் கிராம மக்களையும் வந்தடைகின்றது.

இதற்கு முதற்காரணம் பெரிய வணிக நிறுவனங்கள் பெரிய நகரங்களீல் மட்டுமல்லாது நடுத்தர மற்றும் சிறு நகரங்களிலும் தங்களுடைய வியாபாரக் களத்தை அமைத்ததுதான். இதனால் நகரங்கள் மட்டும் குப்பை மேடுகளாய் இருந்த காலம் போய் கிராமங்களும் குப்பைக்கூளங்களாய் மாறுகின்றன. மாறிவிட்டன.அதனால் அவர்கள் குப்பை மேடாக்கினார்கள் என்று கூறவில்லை. அதற்கான வழியை அமைத்துக் கொடுத்தார்கள் என்று கூறுகிறோம்.

முன்பு கிராமங்களில் நிலைமை அப்படி இருந்ததில்லை. தாங்கள் வாங்க வேண்டிய பொருளுக்கான் பைகளை தாங்களே எடுத்துச்சென்று விடுவர். எண்ணெய் வாங்குவதற்கு கூட வீட்டிலிருந்து பாட்டில் எடுத்துச் செல்வதுதான் வழக்கமாய் இருந்தது. கடைகளிலும் பெரும்பாலான பொருள்களை காகிதத்திலேயே மடித்துத் தருவார்கள், எவ்வளவு எடையாய் இருந்தாலும். வீட்டிலும் அதைப் பிரித்து அதற்கான டப்பாக்களில் கொட்டிவிட்டு அந்த காகிதத்தையோ, சுற்றியிருந்த சணலையோ தூக்கி எறிய மாட்டார்கள். வீட்டு தாழ்வாரத்தில் செருகி வைப்பார்கள். காகிதத்திற்கான தேவையோ, சணலுக்கான தேவையோ வரும்பொழுது அங்கிருந்து எடுத்துக் கொள்வார்கள். ஆக குப்பைக்கு செல்ல வேண்டிய கழிவுகள் மிக மிகக் குறைவு. அப்படியே இருந்தாலும் அவையெல்லாம் சில நாட்களில் மட்கிப்போகக்கூடிய பொருட்களாகவே இருக்கும். (பழத்தோல், அழுகிய காய்கறிகள் போன்றவை)

ஆனால் இன்றைய நிலையோடு ஒப்பிட்டால் நிலைமை அப்படியே தலைகீழ். எந்த பொருள் வாங்கினாலும் பிளாஸ்டிக் பைகளில் வாங்குகிறோம். காகிதப்பொட்டலத்தில் எந்த மளிகைப்பொருளையும் வாங்குவதில்லை. ஒருவேளை இன்றும் நீங்கள் காகிதப்பொட்டலத்தில் வாங்குவதாக இருந்தால் அந்த கடைக்காரர் கண்டிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டவராகத்தான் இருப்பார். சரி, காகிதப்பொட்டலத்தில் நாம் வாங்காமல் இருப்பதற்கு கூறும் காரணம் உதிரியில் வாங்கினால் தரம் குறைவு என்பதுதான்.

அதாவது நம் கண் முன்னே சில்லறையில் விற்பவனை சந்தேகத்தோடு பார்க்கும் நாம் எங்கோ எவரோ பளபளக்கும் பைகளில் அடைத்து விற்கும் பொருளை நம்புகிறோம். [இது போன்ற செயல்பாடுகளால் கிராமங்களில் வாழ்ந்த சிறிய சுய வணிகர்களை அழிந்தே போனது தனிக்கதை]

ஒன்று உறுதி. இன்று நாம் வாங்கக்கூடிய ஒவ்வொரு கிலோ பொருளிலும், உபயோகிக்கும் முன் நாம் வெளியேற்றும் மட்காத குப்பையின் அளவு 10 கிராம். இது குறைந்த பட்சம்தான்.

முன்பு கிராமம் முழுவதையும் சுற்றினாலும் கூட ஒரு சில பிளாஸ்டிக் பொருள்களையோ, பிளாஸ்டிக் பைகளையோ பார்ப்பது அரிது. இன்று சுற்றினால் குறைந்த பட்சம் 1000 ஷாம்பூ கவர்களாவது தென்படும். அதாவது நகரத்துக்கு இணையாக மட்காத குப்பைகளை உருவாக்குவதில் கிராமங்கள் முன்னேறி விட்டன.

எனக்குத்தெரிந்த அளவில் எங்கள் வீட்டில் சேரும் குப்பைகளை வருடம் முழுவதும் ஒரு பெரிய குப்பைக் குழியில் கொட்டி வைத்து, விவசாயத்திற்கு முன்பு வயலில்  உரமாக இடுவோம். இந்த செயல் தொடர்ந்து கொண்டே இருக்கும். மட்காத குப்பை என்ற ஒன்றே இருந்ததில்லை. இதில் முதன் முதலில் உள்நுழைந்தது ஷாம்பூ கவர்கள்தான். வருடக்கடைசியில் குப்பைகளை அள்ளும்போது வருட ஆரம்பத்தில் போடப்பட்ட ஷாம்பூ கவர்கள் அதே பளபளப்புடனும், சிறிதும் மக்காமலும் இருக்கும். ஆனால் அப்போதெல்லாம் அதன் விளைவுகள் தெரியாததால் அதை விளையாட்டாய் பார்ப்பதுண்டு.

அதோடு முன்பு வீடுகளில் சேரும் சிறு பிளாஸ்டிக் பொருட்களையெல்லாம் சேர்த்து வைத்திருந்து, பழைய பொருட்கள் வாங்குவோரிடம் கொடுத்துவிட்டுஅதற்குப் பதில் வேறோர் பொருளை வாங்குவார்கள். அதனால் சேரும் சிறு பிளாஸ்டிக் கூட சூழலில் சேராது. இப்போது அந்த பழக்கம் முற்றிலும் ஒழிந்துவிட்டது. சூழலும் கெட்டுவிட்டது.

மேற்கூறியவை அனைத்துமே பிளாஸ்டிக் கழிவுகளைப் பற்றியதே. ஆனால் சமீப காலமாக மிக விரைவாக அதிகரித்துவிட்ட மற்றோர் கழிவு. எலக்ட்ரானிக் கழிவு. வீட்டின் பழைய டீவி,ரேடியோ,மிக்ஸி, பழைய ஒயர்கள், செல்போன் இப்படி வீட்டிற்கு வீடு பல நூறு கிலோ கழிவுகள் அவ்வப்போது வெளியேற்றப்படுகின்றன். பல நூறு கிலோக்கள் வெளியேறக் காத்திருக்கின்றன. ஒவ்வொரு வீட்டில் சேரும் எலக்ட்ரானிக் கழிவுகளைக் கணக்கிட்டால் போதும், நம் நாட்டின் மக்காத குப்பையின் அளவை அனுமானிக்கலாம். 2005 ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் வெளியேற்றப்பட்ட எலக்ட்ரானிக் கழிவுகளின் எடை 1.47 லட்சம் டன்கள். அதுமட்டுமின்றி இந்தியாவின் எலக்ட்ரானிக் கழிவுகளை வெளியேற்றும் முதல் பத்து மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.

இவையெல்லாம் கிராமங்களின் குப்பைகளைப் பற்றிய சில கருத்துக்களே. நகரங்களைப் பற்றி பேசினால் 10 கட்டுரைகளை எழுத வேண்டியிருக்கும்.

சரி இதற்கெல்லாம் என்ன காரணம்?

‍ மக்களின் வாங்கும் சக்தி கடந்த 30 ஆண்டுகளில் இந்தியர்களின் வாங்கும் சக்தி(Buying Power) பல மடங்கு உயர்ந்துள்ளது. அதனால் தான் விரும்பும் வாங்கக்கூடிய நிலையில் இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது.

விளம்பரம் : ஒரு பொருளின் விற்பனைக்காக காட்டப்படும் அதிக பட்ச விளம்பரம் அந்த பொருளை வாங்குபவர்களின் எண்ணிக்கையை உயரச் செய்கின்றது. தான் விரும்பும் ஒரு நடிகரோ, நடிகையோ, பிரபலமோ தோன்றுவதாலேயே அந்த பொருளை வாங்கும் மக்கள் அதிகரிக்கின்றனர்.

வணிக நிறுவனங்களின் வியாபார தந்திரங்கள்: உதாரணமாக ஒரு நிறுவனம் ஒரு புதிய பொருளை சந்தைப்படுத்துவதாக வைத்துக்கொள்வோம்.அதில் அவர்கள் கண்டறிந்த அனைத்து வசதிகளையும் வைத்து விட மாட்டார்கள். சிலவற்றை மட்டும் வைத்து, கவ‌ர்ச்சியாய் விளம்பரம் செய்து விற்பனை செய்வார்கள். சில காலம் கழித்து மேலும் சில வசதிகளை இணைத்து பெயரை மாற்றியோ, மாற்றாமலோ விற்பனை செய்வார்கள். ஏற்கனவே அந்த பொருளை வாங்கியவர்களும் இவர்கள் தரும் அளவு கடந்த விளம்பரத்தினால் அதனையும் வாங்குவார்கள். இதனால் ஒரே பொருளுக்கு இரட்டிப்பு வியாபாரம். இது போல் பல வியாபார தந்திரங்களை நிறுவனங்கள் கையாண்டு அளவுக்கு அதிகமான் எலக்ட்ரானிக் பொருள்களை சந்தையில் விடுகின்றன.

சரி இதற்கெல்லாம் என்ன செய்யலாம்? நம்மளவில் இவற்றைக் கடைபிடித்தால் போதும்.

1. கண்டிப்பாக தேவையென்றால் மட்டும் எந்த பொருளையும் வாங்குங்கள். பணம் இருப்பதாலோ, எதிர்காலத்தேவை கருதியோ வாங்காதீர்கள்.

2. தேவைக்குத்தான் பொருள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பொருளுக்காக தேவையை உருவாக்காதீர்கள். உதாரணமாக எந்த பொருள் எடுத்தாலும் 50 ரூபாய், 3 பொருள் 10 ரூபாய் என விற்பதற்காக எதையும் வாங்காதீர்கள். கண்டிப்பாக தேவையென்றால் மட்டும் வாங்குங்கள்.

3. நடிகரோ, நடிகையோ, அல்லது எந்த ஒரு பிரபலமோ நடிப்பதால் மட்டும் ஒரு பொருள் சிறந்தது என்ற முடிவுக்கு வராதீர்கள். உங்கள் தேவைக்கு அடுத்தவரை முடிவெடுக்க அனுமதிக்காதீர்கள், நீங்களே சிந்தியுங்கள்.

4. முடிந்தவரை பழைய பொருள்கள் கெட்டுப்போனால் ரிப்பேர் செய்து உபயோகியுங்கள்.

5. நீங்கள் வாங்க வேண்டிய பொருளுக்கான பைகளை நீங்களே எடுத்துச் செல்லுங்கள்.

இல்லையென்றால் இது எதையுமே செய்யாமல் இப்பொழுது செய்வதையே தொடர்ந்து செய்யலாம். இயற்கை பொறுத்துக் கொள்ளும். ஆனால் ஒருநாள் திருப்பி அடிக்கும். அன்று நாம் ஏதும் செய்ய திராணியற்றவர்களாய் இருப்போம்.

{fcomment}

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.