Month: June 2014

பெண்கள்,படைப்பாளிகள்,நாஞ்சில் நாடன்,ஜெயமோகன்

சமீபத்தில் நடைபெற்று வரும் இளம் படைப்பாளிகள் தொடர்பான கருத்து மோதல்களை அறிந்திருப்பீர்கள். இருப்பினும் அது தொடர்பான முழு சித்திரத்தையும் அறிந்து கொள்ள தொகுத்துள்ளேன்.

ஆனந்த விகடன் வார இதழின்  விகடன் மேடை பகுதியில் ஒரு வாசகரின் கேள்வியும் அதற்கு நாஞ்சில் நாடன் அவர்களின் பதிலும் என இந்நிகழ்வு தொடங்கியது.

”இன்றைய எழுத்தாளர்களில் நம்பிக்கை தரக்கூடியவர்கள் யார் யார்?”
பார்வதி, திருநெல்வேலி

நாஞ்சில் நாடன்:
”இளையவர்களை மட்டுமே கருத்தில்கொண்டு என் கருத்தைச் சொல்கிறேன். ஈழத்து இளைஞர்களில் சயந்தன், தமிழ்நதி, இளங்கோ. தமிழகத்தில் குமாரசெல்வா, வா.மு.கோமு, மு.ஹரிகிருஷ்ணன், ஜே.பி.சாணக்யா, கே.என்.செந்தில், எஸ்.செந்தில்குமார், பா.திருச்செந்தாழை, என்.ஸ்ரீராம், தூரன் குணா, சந்திரா, இளஞ்சேரல், அ.வெண்ணிலா, லக்ஷ்மி சரவணக்குமார் ஆகியோர் சாதிக்கிறவர்களும் நம்பிக்கை தரக்கூடியவர்களும். மீனா, தி.பரமேசுவரி, ச.விசயலட்சுமி ஆகியோர் திறனுடன் கட்டுரைகள் எழுதுகிறார்கள். கவிஞர்களில் உமா மகேஸ்வரி, குட்டி ரேவதி, லீனா மணிமேகலை, சுகிர்தராணி, சக்தி ஜோதி, சாம்ராஜ், லிபி ஆரண்யா, இசை, இளங்கோ கிருஷ்ணன் என்போர் என்னைக் கவர்ந்தோரில் சிலர். வகை மாதிரிக்காக சில பெயர்களைச் சொன்னேன்!”
writes_new
அதற்கு ஜெயமோகன் அவர்கள் அந்தப் பட்டியல் மீதான தன்னுடைய நிலைப்பாட்டினை தன் வலைத்தளத்தில் இவ்வாறாக பதிவு செய்திருந்தார்.

ஆனந்த விகடனில் நாஞ்சில்நாடன் போட்ட இளம் படைப்பாளிகளின் பட்டியலைப் பார்த்தேன். இணையத்தில் தேடி அதை எடுத்துக் கொடுத்திருக்கிறேன். அதில் யாரைச் சேர்க்கலாம் சேர்க்கக் கூடாதென்றெல்லாம் வழக்கம்போல விவாதங்கள். நான் இப்படத்தை இங்கே அளிப்பது தமிழில் எழுதவந்துள்ள புதிய தலைமுறை படைப்பாளிகளை இவ்வகையில் அறிமுகம் செய்வது உற்சாகமளிக்கிறது என்பதனாலேயே. அதன்மூலம் அவர்கள் மேலும் பரவலாக வாசகர்களைச் சென்றடைய வாழ்த்துக்கள். Continue reading

தொடர்பெனும் சிக்கல்

மனித குலத்தின் கடந்த கால வரலாற்றினை ஓரளவிற்கு வாசித்தால் நாம் ஒரு மிகப்பெரிய‌ மாற்றத்தினை உணரலாம். முன் காலங்களில் மிகப்பெரும் விஷயமாக இருந்த ஒன்று இன்று முற்றிலும் மாறிவிட்டிருக்கிறது. அது தொடர்பு.

பழைய காலங்களில் ஒரு நாட்டிலிருந்து புதியதோர் நாட்டிற்குச் செல்வதென்பது மிகப்பெரிய‌ செயல்பாடாக இருந்திருக்கிறது, ஆறு மாத காலப்பயணம், 1 வருடப்பயணம் ஏன் திரும்பி வருவதென்பதே சாத்தியமில்லாத பயணம் என . ஆனால் இன்று ஒட்டுமொத்த உலகத்தினையும் சில மணி நேரங்களில் கடந்துவிட முடியும். காரணம் தொடர்பு.

பூமி தன்னை ஒரு முறை சுற்றிக்கொள்ளும் காலத்தில் பூமியை பல முறை சுற்றக் கூடிய செயற்கைக்கோள்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன.அதோடு இணையம் வழியாக உலகின் அனைத்து மூலைகளில் நடப்பவற்றையும் அதே கணத்தில் அல்லது அடுத்த கணத்தில் அறியும் வாய்ப்பு சாத்தியமாகியிருக்கிறது. காரணம் தொடர்பு.

முன்ன‌ர் ஒரு நாட்டிலோ ஒரு பகுதியிலோ வறட்சி ஏற்படும் பொழுது மற்றோர் பகுதியில் இருந்து உற்பத்திப் பொருட்களும், உணவுப்பொருட்களும் கொண்டுவரப்பட்டதில்லை. காரணம் தொடர்பின்மை அல்லது எங்கு அதிகம் விளைந்திருக்கிறது என்பதைக் அறிய முடியாத நிலைமை. ஆகவே பல்லாயிரம் மக்கள் பஞ்சத்தால் இறந்தனர். ஒரு பக்கம் தேவையைவிட அதிகமான விளைச்சல், மற்றோர் பக்கம் உணவுக்கே வழியில்லை. ஆனால் இன்று அதீத தொடர்பின் விளைவாக பற்றாக்குறை, வறட்சி போன்றவை மிகப்பெரிய அளவில் ஒழிக்கப்பட்டிருக்கிறது. நம் நாட்டில் வெங்காயம் விளையாமல் போனால் எங்கு வெங்காயம் விலை குறைவாக இருக்கிறதோ அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்துகொள்கிறோம். காரணம் தொடர்பு.
Continue reading

அவியளித்தல் : கேள்வியும் பதிலும்

சமூகத்தேவை இல்லாத எந்த ஒரு பழக்க வழக்கங்களும் நிலைத்திடாது, அதற்கான தேவை முடிந்த பின்னரும் தொடரும் பழக்க வழக்கங்களே விமர்சனத்துக்கு ஆளாகின்றன என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இன்றைய காலத்தினை விட அந்தக் காலகட்டங்களில் போக்குவரத்து வசதிகளும் தொடர்புகளும் குறைவு. அக்காலகட்டங்களில் உணவு என்பது மிகப்பெரும் பிரச்சினை. அந்நிலையில் எவ்வாறு அவியளித்தல் என்பது சடங்காக நிலைபெற்றது? அதற்கான சமூகத்தேவைகள் என்ன? அதன் தொடர்ச்சியாகவே இன்றும் நாம் நெருப்பில் உணவுப்பொருட்களை இடுகிறோமா?  – மகிழ்நன்

இருபதாண்டுகளுக்குமுன் இ.எம்.எஸ் ஒரு கட்டுரையில் இதைச் சொல்லியிருந்தார், வேதகாலத்தில் வேள்விகளில் உணவு வீணாக்கப்பட்டது என்று.அதை நான் நித்ய சைதன்ய யதியிடம் கேட்டேன். ‘இ.எம்.எஸ்ஸால் குறியீட்டுச்சடங்குகளைப் புரிந்துகொள்ளமுடியாது. அதற்கு கிராம்ஷி படித்த அடுத்த தலைமுறை மார்க்ஸியர்கள் வரவேண்டும்’ என்றார்.

அவர் சொன்ன விளக்கம் இது. வேதவேள்விகள் மிகமிக அபூர்வமாக நிகழக்கூடியவை. பல்லாயிரம் மக்களில் மிகச்சிலரே அதைச் செய்கிறார்கள். அதுவும் எப்போதாவது. அங்கே நேரடியாக வீணாகும் உணவு மிகக்குறைவு. ஆனால் அதன் மூலம் கட்டமைக்கப்படும் ‘உணவு நெரடியாகவே இறைவனுக்குச் செல்லக்கூடியது, மிகமிகப் புனிதமானது’  என்னும் உணர்வு உணவு வீணடிக்கப்படுவதை தடுக்கிறது. அதன்மூலம் சேமிக்கப்படும் உணவு பலநூறு மடங்கு அதிகம்

உங்கள் வினாவுக்கான பதில் இதுதான். அன்று உணவு குறைவானதாக இருந்தமையால்தான் அதை மிகப்புனிதமானதாக ஆக்கி வீணாகாமல் காக்கவேண்டியிருந்தது.வேதவேள்விகள் அதற்காகவே. இன்று ஆலயங்களில் உணவு அபிஷேகம்பண்ணப்படுவதையும் அப்படி புரிந்துகொள்ளலாம். ஆனால் உணவின் மீதான அப்புனிதஉணர்வை இழந்துவிட்ட நாம் இன்று உண்ணும் அளவுக்கே உணவை வீணடிக்கிறோம் என்கிறார்கள் சமூகவியலாளர்கள்.

ஜெ.

நேரு பற்றி ராமச்சந்திர குஹா

நேரு அவர்களைப் பற்றி எழுத்தாளர் ராமச்சந்திர குஹா அவர்களின் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம் காந்திடுடே தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மிகச்சிறந்த கட்டுரை.


1976ஆம் ஆண்டு, இந்தியாவில் அவசரநிலைச்சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தபோது, ஏ எம் ரோசன்தால் என்ற அமெரிக்க பத்திரிகையாளர் புது தில்லிக்கு வந்திருந்தார். முன்னொரு காலத்தில், ந்யூ யார்க் டைம்ஸின் இந்திய நிருபராக இங்கு இருந்திருந்தவர் அவர். அவர் ஜவகர்லால் நேருவின்மீது மிக அதிக மரியாதை வைத்திருந்தார். எங்கும் நிறைந்திருந்த சமூக ஏற்றத்தாழ்வுகளாலும் சமய அடிப்படையில் எதிரெதிர் துருவ பிளவுகளாலும் காயப்பட்டிருந்த தேசத்தில் ஜனநாயக விழுமியங்களை நிலைநாட்ட இந்தியாவின் முதல் பிரதமர் எவ்வளவு தீரமாகப் போராடியிருந்தார் என்பதை நேரடியாகப் பார்த்தவர் அவர்.

Continue reading

Words at Work

இந்த புத்தகத்தினை தலைப்பினைக்கொண்டு வேலை செய்யும் இடத்தில் சொற்களைக் கையாள்வது எப்படி என்ற எண்ணத்தில் வாசிக்கத்தொடங்கினேன். ஆனால் இந்த புத்தகம் அதைப்பற்றி அல்லாமல் ஒவ்வொரு துறை சார்ந்த இடத்திலும் பயன்பாட்டில் உள்ள வார்த்தைகள், அதற்கு அவர்கள் மொழியிலான பொருள் ஆகியவற்றைப் பற்றி விவரிக்கிறது. மிக எளிய நூலாக இருப்பினும் மிகுந்த சிரத்தையின் ப‌லனாகவே இந்த எளிமை சாத்தியமாயிருக்கிறது.

எந்த ஒரு புத்தகத்திலும் கற்றுக்கொள்வதற்கு தக‌வல்கள் உண்டு என்ற என் எண்ணம் மீண்டும் இந்த புத்தகத்தை வாசிக்கும் பொழுது ஏற்பட்டது. உதாரணமாக Cereal Box என்ற வார்த்தை நறுமணத்திரவியங்கள் தொடர்பாக பயன்படுத்தப்படுகிறது. அதன் பொருள் நறுமணத்திரவியத்தைப் போலவே ஒரு அட்டைப் பெட்டியில் பெரியதாக செய்து கடைகளில் காட்சிக்கு வைப்பது. இதனை நாம் பல முறை கண்டிருந்தாலும், அதற்குப் பின்னாலும் ஒரு திட்டமிடல் இருக்கிறது எனும்போது புதிய அனுபவமாய் அது அமைகிற‌து. இனி அதனைப் பார்க்கும் பொழுது நம் பார்வை மாறுபடலாம்.

இதனைப் போலவே வாசனைத்திரவியத்தின் மேல் மூடியில் இருக்கும் அழுத்து விசையை Actuator என்று குறிப்பிடுகின்றனர். இதனைப் போலவே Tulip Mania, Hockey Stick எனப் பல வார்த்தைகள் உண்டு. அது தொடர்பான விளக்கங்களும் உண்டு. புதிய வார்த்தைகளையும் பொருள்களையும் விரும்புபவர்களும், ஆர்வமுடையவர்களும் வாசிக்கலாம்.

நன்றி.