பெண்கள்,படைப்பாளிகள்,நாஞ்சில் நாடன்,ஜெயமோகன்

சமீபத்தில் நடைபெற்று வரும் இளம் படைப்பாளிகள் தொடர்பான கருத்து மோதல்களை அறிந்திருப்பீர்கள். இருப்பினும் அது தொடர்பான முழு சித்திரத்தையும் அறிந்து கொள்ள தொகுத்துள்ளேன்.

ஆனந்த விகடன் வார இதழின்  விகடன் மேடை பகுதியில் ஒரு வாசகரின் கேள்வியும் அதற்கு நாஞ்சில் நாடன் அவர்களின் பதிலும் என இந்நிகழ்வு தொடங்கியது.

”இன்றைய எழுத்தாளர்களில் நம்பிக்கை தரக்கூடியவர்கள் யார் யார்?”
பார்வதி, திருநெல்வேலி

நாஞ்சில் நாடன்:
”இளையவர்களை மட்டுமே கருத்தில்கொண்டு என் கருத்தைச் சொல்கிறேன். ஈழத்து இளைஞர்களில் சயந்தன், தமிழ்நதி, இளங்கோ. தமிழகத்தில் குமாரசெல்வா, வா.மு.கோமு, மு.ஹரிகிருஷ்ணன், ஜே.பி.சாணக்யா, கே.என்.செந்தில், எஸ்.செந்தில்குமார், பா.திருச்செந்தாழை, என்.ஸ்ரீராம், தூரன் குணா, சந்திரா, இளஞ்சேரல், அ.வெண்ணிலா, லக்ஷ்மி சரவணக்குமார் ஆகியோர் சாதிக்கிறவர்களும் நம்பிக்கை தரக்கூடியவர்களும். மீனா, தி.பரமேசுவரி, ச.விசயலட்சுமி ஆகியோர் திறனுடன் கட்டுரைகள் எழுதுகிறார்கள். கவிஞர்களில் உமா மகேஸ்வரி, குட்டி ரேவதி, லீனா மணிமேகலை, சுகிர்தராணி, சக்தி ஜோதி, சாம்ராஜ், லிபி ஆரண்யா, இசை, இளங்கோ கிருஷ்ணன் என்போர் என்னைக் கவர்ந்தோரில் சிலர். வகை மாதிரிக்காக சில பெயர்களைச் சொன்னேன்!”
writes_new
அதற்கு ஜெயமோகன் அவர்கள் அந்தப் பட்டியல் மீதான தன்னுடைய நிலைப்பாட்டினை தன் வலைத்தளத்தில் இவ்வாறாக பதிவு செய்திருந்தார்.

ஆனந்த விகடனில் நாஞ்சில்நாடன் போட்ட இளம் படைப்பாளிகளின் பட்டியலைப் பார்த்தேன். இணையத்தில் தேடி அதை எடுத்துக் கொடுத்திருக்கிறேன். அதில் யாரைச் சேர்க்கலாம் சேர்க்கக் கூடாதென்றெல்லாம் வழக்கம்போல விவாதங்கள். நான் இப்படத்தை இங்கே அளிப்பது தமிழில் எழுதவந்துள்ள புதிய தலைமுறை படைப்பாளிகளை இவ்வகையில் அறிமுகம் செய்வது உற்சாகமளிக்கிறது என்பதனாலேயே. அதன்மூலம் அவர்கள் மேலும் பரவலாக வாசகர்களைச் சென்றடைய வாழ்த்துக்கள்.

இதில் அடிமுதல் முடிவரை அசட்டுத்தனம் என்று சொல்லத்தக்க வினாக்கள் இரண்டு. எந்த இலக்கிய விவாதத்திலும் நாலைந்து கோயிந்துக்கள் கிளம்பி வந்து படு சீரியஸாக அவற்றைக் கேட்டு ‘கேட்டுப்புட்டம்ல?’ என்று முகத்தை வைத்துக்கொள்வார்கள். க.நா.சு காலம் முதல் அந்த மொக்கைக் கேள்விகளுக்குப் பதில் சொல்லப்பட்டு வருகிறது. அதெல்லாம் அவர்களுக்கு தெரிய நியாயமில்லை. வாசிக்கும் பழக்கம் இருந்தால் அவர்கள் ஏன் அப்படிக் கேட்கப்போகிறார்கள் பாவம்.

முதல்கேள்வி இப்படி பட்டியல்போடுவது சரியா என்பது. உலகமெங்கும் எங்கு இலக்கியம் உள்ளதோ அங்கெல்லாம் இப்படி பட்டியல் போடப்பட்டுக்கொண்டே இருக்கிறதென்பதையும், இலக்கியம் தோன்றியநாள் முதல் இப்படிப்பட்ட பட்டியல்கள் வழியாகவே அது தரம் காணப்பட்டு தொகுக்கப்பட்டு முன்வைக்கப்படுகிறது என்பதையும் கோயிந்துக்களுக்கு கொட்டை எழுத்தில்தான் சொல்லவேண்டியிருக்கிறது. சங்ககால நூல்களெல்லாம் அப்படிப்பட்ட பட்டியல்களே. ஐம்பெருங்காப்பியங்கள் ஐஞ்சிறு காப்ப்பியங்கள் பன்னிரு திருமுறைகள் என்பவை எல்லாம் பட்டியல்களே

பட்டியல் என்பது ஒரு ரசிகன் அல்லது திறனாய்வாளன் தன் ரசனையின் அல்லது ஆய்வின் அடிப்படையில் முன்வைக்கும் ஒரு தேர்வு.அதற்கான காரணங்களை அவன் சொல்லலாம். சொல்லாமல் விட்டாலும் அந்தப்பட்டியலே அந்த அடிப்படைகளைக் காட்டும். அந்த பட்டியல்காரரின் தனிப்பட்ட ரசனையும் நேர்மையும்தான் பட்டியலை முக்கியமானதாக்குகின்றன. எல்லாரும் பட்டியல்போடலாம். ஆனால் பட்டியல் போட்டவன் யார் என்பதே முதல்வினாவாக இருக்கும்.இப்பட்டியல் முக்கியமானதாக ஆவது நாஞ்சில்நாடன் என்ற ஆளுமையால்தான்.

நவீனத் தமிழிலக்கியத்தில் க.நா.சு போட்ட பட்டியல் வழியாகவே இலக்கிய விழுமியங்கள் உறுதியாக்கப்பட்டன. முக்கியமான படைப்புகள் முன்வைக்கப்பட்டன. இன்று நாம் நவீனத் தமிழிலக்கியம் என எதைச் சொல்கிறோமோ அது க.நா.சு போட்ட பட்டியல் வழியாக திரட்டப்பட்ட ஒன்றுதான்.அவருக்கு முன்னரே ரா.ஸ்ரீ.தேசிகன், ஏ.வி.சுப்ரமணிய அய்யர் போன்றவர்களின் இலக்கியநூல்பட்டியல் வந்துள்ளது.

இன்றுபோலவே அன்றும் அப்பட்டியல் விரிவான விவாதத்துக்கு உள்ளாயிற்று. பட்டியலில் பெயரில்லாதவர்களெல்லாம் பிலாக்காணம் வைத்தார்கள். அகிலன் லபோ திபோ என்று ஆர்ப்பாட்டம் பண்ணி அழுத கட்டுரை ஒன்றை வாசித்திருக்கிறேன். அந்த விவாதங்கள் வழியாகவே பட்டியல் மேலும் முக்கியமாக ஆனது. அதிலுள்ள இலக்கியவாதிகள் கவனிக்கப்பட்டனர். இலக்கிய அடிப்படைகள் விவாதிக்கப்பட்டன.

எந்தப்பட்டியலும் முழுமையானது அல்ல. மிகச்சிறப்பானது என்று சொல்லத்தக்க க.நா.சுவின் பட்டியலிலேயே சண்முக சுப்பையா போன்றவர்கள் காலத்தை தாண்டவில்லை. காலத்தைத் தாண்டிய ப.சிங்காரம் இல்லை.

இரண்டாவது கோயிந்துக் கேள்வி இலக்கியத்தை தரம்பிரிக்கலாமா என்பது. இட்லியை தரம்பிரிக்காமல் இவர்கள் சாப்பிடுவார்களா என்ன? மனிதன் அறிபவை அனைத்தையும் தரம்பிரித்தபடித்தான் இருக்கிறான். அதன் பெயர்தான் ரசனை. மேல்கீழென்றும் நல்லது கெட்டதென்றும் பிரிக்காமல் ரசிப்பவர்கள் எவரும் இல்லை.

இருக்கலாம்.அருண்மொழியின் பாட்டி 98 வயதான சரஸ்வதி அம்மாள் எந்த புத்தகத்தையும் அப்படியே படித்துவிடுவார். ஒரு சொல்கூட அரைமணிநேரத்துக்குமேல் நினைவில் நிற்காது. மறுநாளும் அதே நூலை அப்படியே வாசிக்கமுடியும் அவரால்.அதெல்லாம் ஒருவகை கைவல்யநிலை.

நாஞ்சில்நாடனின் இப்பட்டியலில எல்லாவகை படைப்பாளிகளும் இடம்பெற்றுள்ளனர். ஒரு குறிப்பிட்ட நோக்கு மேலோங்கிவிடக்கூடாது என அவர் கவனம் எடுத்திருப்பது தெரிகிறது. ஆனால் எனக்கு இலக்கியத்தில் பந்திப்பாய் விரிப்பதில் நம்பிக்கை இல்லை. அது ஒருவகையில் தரமான படைப்பாளிகளை அவமதிப்பது என நினைக்கிறேன். நான் மிகச் சிறிய பட்டியலையே எப்போதும் போடுவேன்.

நாஞ்சில்நாடன் அவரது பட்டியலில் அதிகமாக அறியப்படாதவர்கள் என்ற விதியையும் அளவுகோலாகக் கொண்டரோ என்றும் படுகிறது. ஏனென்றால் ஜோ.டி.குரூஸ், சு.வேணுகோபால்,கண்மணி குணசேகரன் போன்ற அறியப்பட்ட இளம் சாதனையாளர்கள் அவரது பட்டியலில் இல்லை. சற்று வயது மூத்தவரான குமாரசெல்வா இருக்கிறார்.

இப்பட்டியலில் கவிஞர்களில் இசை, இளங்கோ கிருஷ்ணன், லிபி ஆரண்யா ஆகியோரை மிகமுக்கியமான கவிஞர்கள் என்றும் நாளைத்தமிழின் நட்சத்திரங்கள் என்றும் எண்ணுகிறேன். முகுந்த் நாகராஜன் ஸ்ரீநேசன் போன்றோர் முக்கியமான விடுபடல்கள்.

இளம் புனைகதையாளர்களில் எஸ்.செந்தில்குமார், வா.மு.கோமு லட்சுமி சரவணக்குமார், கே.என்.செந்தில் ஆகியோரை முதன்மையானவர்கள் என்று சொல்வேன. கீரனூர் ஜாகீர் ராஜா முக்கியமான விடுபடல்.

மேலும் இத்தகையபட்டியல்களை தமிழ்பேசும் உலகை முற்றிலும் கருத்தில்கொண்டே போடவேண்டும். அந்நிலையில் மலேசிய எழுத்தாளர்களான நவீன், பாலமுருகன், சு.யுவராஜன் ஆகியோரை நான் சேர்ப்பேன்.ஈழப்படைப்பாளிகளில் யோ.கர்ணன், புலம்பெயர்ந்த படைப்பாளிகளில் டி.செ.தமிழன் [இளங்கோ]

பெண்களில் உமா மகேஸ்வரி என் நோக்கில் முதன்மையான படைப்பாளி. அதன்பின் சந்திரா. விடுபட்ட பெண்படைப்பாளிகள் என்றால் நான் ஏழெட்டுபேரைச் சொல்லமுடியும். ஆழியாள், பகீமா ஜகான், அனார் போல.

பட்டியலில் உள்ள ஆண்படைப்பாளிகளில் அனைவரும சிறப்ப்பாக எழுதக்கூடியவர்கள்தான். இன்னும் அதிகமாக அவர்களிடம் எதிர்பார்க்கிறேன். ஆனால் பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பலவகை உத்திகள் மூலம் ஊடகப்பிம்பங்களாக ஆனவர்கள்.பலரை ஏன் எழுத்தாளர்கள் அல்லது கவிஞர்கள் என்று சொல்கிறார் நாஞ்சில் என்றே புரியவில்லை.

இது ஒரு முக்கியமான அம்சம். இன்று ஆண்கள் எழுதித்தான் நிற்கவேண்டியிருக்கிறது. பெண்களுக்கு பெண்களாக தங்களை முன்வைத்தாலே இடம் கிடைத்துவிடுகிறது. கொஞ்சம் பெண்ணியமும் பீரிட்டால் பெரும்பாலானவர்கள் ‘எதுக்கு வம்பு, காலம்கெட்ட காலத்திலே?’ என்று ஜகாவாங்கிவிடுவார்கள்.

இவர்களைச் சேர்த்த அடிப்படையில் பாவம் தமிழச்சி தங்கபாண்டியனையும் கனிமொழியையும் சேர்த்திருக்கலாம். இப்போது தேர்தலில் தோற்றிருந்தாலும் அடுத்த ஐந்தாண்டில் தமிழ்ச்சிற்றிதழ்களில் அவர்கள் முக்கியமான கவிஞர்களாக இருப்பார்கள்தானே?

அதில் அவர் பெண் எழுத்தாளர்களை த‌ரக்குறைவாக குறிப்பிடுவதாக பலர் தங்களுடைய கருத்துக்களை வெவ்வேறு வகைகளில் வெளிப்படுத்தத் தொடங்கினர்.  குறிப்பாக இந்தப் பகுதி அதிக விமரிசனத்துக்கு ஆளாகியது.

பட்டியலில் உள்ள ஆண்படைப்பாளிகளில் அனைவரும சிறப்ப்பாக எழுதக்கூடியவர்கள்தான். இன்னும் அதிகமாக அவர்களிடம் எதிர்பார்க்கிறேன். ஆனால் பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பலவகை உத்திகள் மூலம் ஊடகப்பிம்பங்களாக ஆனவர்கள்.பலரை ஏன் எழுத்தாளர்கள் அல்லது கவிஞர்கள் என்று சொல்கிறார் நாஞ்சில் என்றே புரியவில்லை.

இது ஒரு முக்கியமான அம்சம். இன்று ஆண்கள் எழுதித்தான் நிற்கவேண்டியிருக்கிறது. பெண்களுக்கு பெண்களாக தங்களை முன்வைத்தாலே இடம் கிடைத்துவிடுகிறது. கொஞ்சம் பெண்ணியமும் பீரிட்டால் பெரும்பாலானவர்கள் ‘எதுக்கு வம்பு, காலம்கெட்ட காலத்திலே?’ என்று ஜகாவாங்கிவிடுவார்கள்.

http://www.jeyamohan.in/?p=56339

இதுவரை சற்றே மறைவாக விவாதிக்கப்பட்ட இந்த நிகழ்வு  தினமலரில் இந்த செய்தி வெளிவந்த பின்னர் இன்னும் தீவிரமாகியது. தினமலரில் வெளிவந்த அந்த செய்தி இங்கே.

பெண் படைப்பாளிகளை, எழுத்தாளர் ஜெயமோகன் கொச்சைப்படுத்தி விட்டார்’ என, குற்றம்சாட்டி, அவருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட போவதாக, பெண் படைப்பாளிகள் அறிவித்துள்ளனர். இதனால், தமிழ் எழுத்துலகில், பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டு உள்ளது.

மூத்த எழுத்தாளர் நாஞ்சில் நாடன், வாரப்பத்திரிகை ஒன்றில், பிரபல எழுத்தாளர்கள் என, 27 பேரை வரிசைப்படுத்தினார். அவர்களில், 11 பேர் பெண் எழுத்தாளர்கள். நாஞ்சில் நாடனின் பட்டியல் குறித்து, எழுத்தாளர் ஜெயமோகன் தனது வலைப்பூவில், எழுதியிருப்பதாவது: இதுபோன்ற பட்டியல்கள், தமிழ் எழுத்துலகில் ஒவ்வொரு கால கட்டத்திலும் வெளியிடப்பட்டு உள்ளன. அதை, பலர் ஏற்றுள்ளனர்; ஏற்று கொள்ளாமலும் உள்ளனர். பட்டியலில் உள்ள ஆண் படைப்பாளர்கள், சிறப்பாக எழுதக் கூடியவர்கள் தான். இன்னும் அதிகமாக அவர்களிடம் எதிர்பார்க்கிறேன். ஆனால், பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல், பலவகை உத்திகள் மூலம், ஊடக பிம்பங்களாக ஆனவர்கள். பலரை ஏன், எழுத்தாளர்கள் அல்லது கவிஞர்கள் என, நாஞ்சில் சொல்கிறார் என்றே புரியவில்லை. இது ஒரு முக்கியமான அம்சம். ஆண்கள் எழுதித் தான் நிற்க வேண்டியிருக்கிறது. பெண்களுக்கு, பெண்களாக தங்களை முன்வைத்தாலே இடம் கிடைத்துவிடுகிறது.

‘ஜகா’ வாங்கி விடுவர்:

கொஞ்சம் பெண்ணியம் பீறிட்டால், பெரும்பாலானவர்கள், ‘எதுக்கு வம்பு, காலம் கெட்ட காலத்திலே?’ என்று ‘ஜகா’ வாங்கி விடுவர். இவர்களை சேர்த்த அடிப்படையில், பாவம், தமிழச்சி தங்கபாண்டியனையும், கனிமொழியையும் சேர்த்து இருக்கலாம். இப்போது தேர்தலில் தோற்றிருந்தாலும், அடுத்த ஐந்தாண்டில், தமிழ்ச் சிற்றிதழ்களில் அவர்கள் முக்கியமான கவிஞர்களாக இருப்பார்கள் தானே? இவ்வாறு, ஜெயமோகன் கூறிஉள்ளார்.

அவரது இந்த கருத்துக்கு, பெண் படைப்பாளிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜெயமோகனை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்த போவதாகவும் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து, எழுத்தாளர் குட்டி ரேவதி கூறியதாவது: பெண்களை ஒழுக்கமில்லாதவர்கள் என, சித்தரிப்பதே ஜெயமோகனின் வேலை. தொடர்ந்து இதை செய்து வருகிறார். தற்போது, பெண் எழுத்தாளர்கள் குறித்து அவர் கூறிய கருத்துகளுக்கு, ஆண் எழுத்தாளர்கள் எவரும் கண்டனம் தெரிவிக்காமல் உள்ளது, வருந்தத்தக்கது. ஆண் எழுத்தாளர்கள் அனைவரும், பெண்களை இழிவுபடுத்துகின்றனர் என, நாங்கள் எண்ணவில்லை. ஆனால், ஜெயமோகன் போன்றோருக்கு, ஆதரவாக இருக்கின்றனரே என்ற, கோபம் உள்ளது. எழுதுவதற்கு தேவையான கரு, ஒரு எழுத்தாளருக்கு இல்லாதபோது, அவர் தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தி, தன்னை எழுத்துலகில் தக்க வைத்து கொள்ள முயற்சிப்பார். அதுபோன்ற நிலையை தான், ஜெயமோகன் எடுத்து உள்ளார். குடிபோதையில் உள்ளவர்கள், பெண்களை கேவலமாக பேசுவதைப் போல, ஜெயமோகனின் எழுத்துக்கள், பெண்களை கொச்சைப்படுத்துகின்றன. கடந்த, 25 ஆண்டுகளாக அவர் இதைத் தான் செய்து வருகிறார்.

ஆர்ப்பாட்டம்:

ஜெயமோகனின் இந்த கருத்தை கண்டித்து, பெண் படைப்பாளர்களை இணைத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம். அதற்கான, அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எழுத்தாளர் மாலதி மைத்ரி கூறியதாவது:

ஆணாதிக்க சிந்தனை உள்ளவர் ஜெயமோகன். பெண் எழுத்தாளர்கள், கமலா பாஸ்கர், அருந்ததி ராய் போன்றோரை, ஏற்கனவே கொச்சைப்படுத்தியவர். இப்போது, ஒட்டுமொத்த பெண் எழுத்தாளர்களை அசிங்கமாக சித்தரிக்கிறார். ஜெயமோகனின் எழுத்தை காதலித்து, அவரை திருமணம் செய்து கொண்டவர் அவர் மனைவி. அவரும் ஒரு சிந்தனையாளர். பல விமர்சன கட்டுரைகளை எழுதி வந்தார். அவரது பெயரில், ஜெயமோகன் எழுதிய விமர்சன கட்டுரையால், கடும் விமர்சனங்களுக்கு, ஆளானார். இதன்பின் அவர் எழுதுவதில்லை.

கொச்சைப்படுத்துகிறார் :

தன் மனைவி, பிரபல எழுத்தாளராக இருப்பதையே ஏற்றுக்கொள்ளாத, ஜெயமோகன், பிற பெண் எழுத்தாளர்களை எப்படி ஏற்றுக் கொள்வார்? அதனால், அவர் எங்களைப் போன்ற எழுத்தாளர்களை கொச்சைப்படுத்துகிறார். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து, ஜெயமோகன் கூறியதாவது: பிரபல பெண் எழுத்தாளர்கள் என்ன சாதித்துள்ளனர், பிரபலமாக அவர்கள் இருப்பதற்கு, அப்படி என்ன எழுதி சாதித்துவிட்டனர் என, கேள்வி எழுப்புவதற்கு, வாசகனாக எனக்கு உரிமை உள்ளது. ஆண் எழுத்தாளர்கள் பலர், பல சாதனைகளை செய்துள்ளனர். அதுபோன்ற சாதனைகளை, பிரபலமாக உள்ள பெண் எழுத்தாளர்கள் செய்யவில்லை என்பதே என் குற்றச்சாட்டு. அதேநேரத்தில், சாதனை படைத்த பல பெண் எழுத்தாளர்களை வானளாவ புகழ்ந்தும் எழுதியுள்ளேன். எனவே, என் கருத்துக்கு கண்டனம் தெரிவிப்பது, தர்ணா நடத்துவது போன்றவற்றை ஆபாசமாகவே கருதுகிறேன். இவ்வாறு, ஜெயமோகன் கூறினார். இவ்வாறாக, தமிழ் இலக்கிய உலகில், புதிய சர்ச்சை தோன்றி பரபரப்பிற்கு வித்திட்டுள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=996380

தினமலரில் இந்த செய்தி வெளியான பின்னர் ஜெயமோகன் தன் வலைப்பதிவில் அது தொடர்பாக விளக்கம் அளித்து தன் தரப்பை எடுத்துரைத்தார்.

இன்று தினமலரில் இச்செய்தி வெளிவந்துள்ளது. பலரும் இதைப்பற்றி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த குறிப்பிட்ட விஷயத்தை வாசகர்கள் கவனிக்கவேண்டுமென நினைக்கிறேன்.

ஓர் எழுத்தாளனாக பொதுவெளியில் பெண்கள் மதிப்புக்குறைவாக நடத்தப்படுவதற்கு எதிராக மிகக்கடுமையாக எதிர்வினை ஆற்றிவருபவன் நான். அது அவர்களின் குரல் எழாமலாக்கிவிடும் என பல முறை வலுவாக எழுதியிருக்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்னர் சு.சமுத்திரம் இன்னொரு பெண் எழுத்தாளரைப்பற்றிய விமர்சனத்தில் ‘இன்றைய பெண் எழுத்தாளர்கள் தலைப்பிலேயே முந்தானை விரிப்பவர்கள்’ என எழுதியபோது இண்டியா டுடே இதழில் மிகக்கடுமையான கண்டனக்கட்டுரையை நான் எழுதியிருந்தேன்.

அது முதல் சமீபத்தில் டிவிட்டர் தளத்தில் பாடகி சின்மயி தாக்கப்பட்ட நிகழ்ச்சி வரை என்னுடைய நிலைப்பாடு ஒன்றே. ஒரு தருணத்திலும் பெண்களுடைய கௌரவம், தன்னை பொதுவெளியில் முன்வைக்கும் ஆர்வம் ஆகியவற்றுக்கு எதிராக ஒரு செயலையும் அனுமதிக்கக்கூடாது என்பதுதான் அது. இலக்கியநிகழ்வுகளில் குடி எக்காரணம்கொண்டும் அனுமதிக்கப்படலாகாது என்னும் என்னுடைய நிலைப்பாடு அது பெண்களை அன்னியப்படுத்திவிடும் என்பதனாலேயே.

பெண்கள் பாலியல் விஷயங்களை எழுதுவது குறித்த விவாதங்கள் எழுந்தபோதும் மிகத்தெளிவாகவே என் தரப்பை எழுதியிருதேன், ஒழுக்கநெறிகள் எழுத்துக்களை கட்டுப்படுத்தலாகாது என. அதைவைத்து பெண்களை மதிப்பிடுவது கீழ்த்தரமானது என.

ஆனால் இலக்கிய விமர்சனம் என்பது வேறு. அது எப்போதும் கறாரான மதிப்பீடுகளின் அடிப்படையில் பாரபட்சமில்லாததாகவே இருக்கவேண்டும். அதுவே இலக்கியத்திற்கு நலம் பயப்பது. அதில் நட்பு, இரக்கம், ஜனநாயகம் போன்றவற்றுக்கு இடமில்லை. ஒருவர் தான் கொண்டிருக்கும் இலக்கியமதிப்பீடுகளுக்கே விசுவாசமாக இருக்கவேண்டும். அவ்வடிப்படையிலேயே என் இலக்கியமதிப்பீடுகளை முன்வைத்து வருகிறேன்.

இருவகையில் என் இலக்கியக்கருத்துக்கள் அமைந்துள்ளன. ஒன்று, கருத்துக்களை முன்வைத்து எழுப்பப்படும் விவாதத்துக்கான அழைப்புகள். ‘இவ்வாறு சிந்தித்துப்பாருங்கள்’ என்ற கோணத்தில் முன்வைக்கப்படுபவை. அவற்றுக்கு எதிராக எத்தனை கடுமையான மறுப்புகளும் மாற்றுக்கருத்துக்களும் ஏன் வசைகளும் வந்தாலும்கூட பேசப்படுவது இலக்கியமும் இலக்கியவாதிகளும்தான். ஆகவே அவை எவ்வகை விவாதத்தை உருவாக்கினாலும் இலக்கியத்துக்கு நன்மை பயப்பவையே.

உண்மையில் உலகமெங்கும் இலக்கியம் விவாதங்கள் மூலமே பரவலாக மக்களுக்கு அறிமுகமாகிறது. உங்களுக்கு இலக்கியம் எப்படி அறிமுகமாயிற்று என சிந்தித்துப்பாருங்கள். இலக்கியம் ஒன்றும் ‘அவசியப்பொருள்’ அல்ல. அதை எந்த ஊடகமும் வாசலைத்தட்டி விற்பதில்லை. அது எப்போதோ நிகழும் ஒரு விவாதம் மூலம் மட்டுமே உங்களிடம் வந்து சேர்ந்திருக்கும். உங்களை வாசிக்கச்செய்திருக்கும்.

ஒரு சமூகத்தில் அரசியல், பொருளியல், கேளிக்கைகள் சார்ந்த விவாதங்களே இயல்பாக எப்போதும் நிகழ்ந்துகொண்டிருக்கும். இலக்கியம், தத்துவம் சார்ந்த விவாதங்கள் மிகமிக அபூர்வமானவை. எந்நிலையில் நடந்தாலும் அவை சார்ந்த விவாதங்கள் நிகழ்வதே ஒரு சமூகத்தின் சிந்தனைக்கு நலம் பயப்பது என்பதே என் எண்ணம். இது உலகளாவிய ஒரு உண்மையும்கூட. எஸ்ரா பவுண்ட் ஒருமுறை சொன்னார் இலக்கியப்பூசல்கள் [polemics] இல்லாமல் இலக்கியம் ஒரு சமூக இயக்கமாக நீடிக்கமுடியாது என. இலக்கியவிவாதங்கள் பாரதி, புதுமைப்பித்தன் காலம் முதல் எப்போதும் இருப்பவை. தனிமனிதத் தாக்குதல்கள்கூட அதற்கு உதவியானவையே என்று சொல்லக்கூடிய விமர்சகர்கள் இருக்கிறார்கள்.

நான் எந்நிலையிலும் இலக்கியப் படைப்பாளிகளை தனிமனிதநோக்கில் அணுகுவதில்லை. ஆனால் இலக்கியத்தின் அடிப்படைகள் தொடர்ந்து பேச்சில் இருக்கவேண்டும் என நினைப்பவன். அன்றாட அரட்டையாக, விவாதமாக, உயர்தளத்தில் கருத்துப்பரிமாற்றமாக அது ஒரேசமயம் நிகழலாம். சரிதான், கொஞ்சம் வசையும் கொந்தளிப்பும் இருந்தாலும் பரவாயில்லை. சினிமாவையும் கட்சிஅரசியலையும் சாப்பாட்டையும் பற்றிப்பேசி ‘கலாய்த்து’க் கொண்டிருப்பதற்கு அது பலமடங்குமேல். எந்த ஒரு இலக்கிய-கருத்தியல் விவாதமும், அது எந்த கீழ்த்தளத்தில் நடத்தாலும்கூட, உங்களுக்கு சில தகவல்களையோ கருத்துக்களையோ அறிமுகம் செய்யாமல் வீணாக ஆவதில்லை.

நான் இன்னொரு தளத்தில் இவ்விலக்கியக் கருத்துக்களை மிகமிக விரிவான கட்டுரைகளாகவும் எழுதுகிறேன். சில ஆயிரம் பக்கங்களாக அவை வாசகனுக்குக் கிடைக்கின்றன. தொடர்ந்து வாசிக்கவும் விவாதிக்கவும் விரும்பும் வாசகனுக்கு அவை விரிவானதோர் உலகை அறிமுகம் செய்யும். தமிழில் ஒருவேளை அனைத்து முதன்மையான எழுத்தாளர்களைப்பற்றியும் எழுதப்பட்டிருக்கும் விரிவான கட்டுரைகளை என் எழுத்துலகுக்குள்தான் வாசகன் காணமுடியும். அவற்றுடன் அவன் முரண்படமுடியும், ஆனால் அவை அவனுக்குக் கற்பிக்கும், கண்டிப்பாக மேலெடுத்துச்செல்லவும் செய்யும்.

இந்த விவாதங்களை விளம்பரம் என சிலர் சொல்வதை நான் அறிவேன். தயவுசெய்து இத்தகைய விளமபரங்களை நீங்களும் செய்துகொள்ளுங்கள், தமிழிலக்கியம் வளரட்டும் என்பதுதான் என் பதில். இத்தனை ஆயிரம் பக்கங்களில் பிற எழுத்தாளர்களைப்பற்றி சலிக்காமல் பல்லாண்டுகளாக எழுதிக் கொண்டிருப்பதில் இலக்கியம் என்னும் அமைப்பு மீதான பெரும் ஈடுபாடும் அர்ப்பணமும் உள்ளது என்பதை பத்துவரி தொடர்ந்து எழுதமுடியாதவர்களால் புரிந்துகொள்ளமுடியாது. நல்ல வாசகர்கள் அந்தரங்கமாக உணர்வார்கள். மற்றபடி அதை காலம் மதிப்பிடட்டும்.

பெண்எழுத்தாளர்களைப்பற்றிய என் கருத்தும் இத்தகையதே. அது புதியதும் அல்ல. அவர்கள் அடைந்துள்ள ஊடக முக்கியத்துவம் மிகச்செயற்கையானது. வெறும் ஊடக உத்திகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. இன்று ஊடகங்கள் அதிகமாக பெண்களை முன்னிறுத்த விழைகிறார்கள். காரணம் ஊடகங்களை அதிகம் பார்க்கும் பெண்கள் அவர்களை காணவிழைகிறார்கள். ஆகவே பெண்கள் அதிக விளம்பரத்தை அடைகிறார்கள்.

அதை அறிந்த பெண்களில் சிலர் மிதமிஞ்சிய கூச்சல்கள், அரசியல் கோஷங்கள் போன்றவற்றின் மூலம் ஊடகங்களில் தங்களை பெண்களாக முன்வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் எழுத்தாளர்கள் கவிஞர்கள் என புகழப்படுகிறார்கள், அனைத்துவகையான நிறுவன அங்கீகாரங்களையும் பெறுகிறார்கள். ஆனால் எதுவுமே எழுதுவதில்லை. இவர்கள் எழுதவந்தபோது ‘எழுதட்டும் பார்ப்போம்’ என்ற எண்ணம் இருந்தது சூழலில். நானும் அதைத்தான் சொன்னேன். இன்று இவர்களெல்லாம் சமூக ஆளுமைகளாக ஆகி சிம்மாசனங்களை அடைந்துவிட்டார்கள். ‘சரிம்மா என்னதான் எழுதினே?’ என்று கேட்கும் காலம் வந்துவிட்டது.

பொதுவாக எழுதச்சோம்பல்படுபவர்களின் ஊடகமாக உள்ளது இன்றைய புதுக்கவிதை. இந்தப் பெண்கள் கவிதை என்றபேரில் பத்துப்பதினைந்து வரிகளை மேலோட்டமாக எழுதி மடித்து மடித்து பிரசுரிக்கிறார்கள். அவை வெறும் சக்கையாக உள்ளன. வெற்றுப்புலம்பல்கள், அதிர்ச்சிமதிப்புக்கான தடாலடி வரிகள், சில்லறைப் பெண்ணியகோஷங்கள் . ஓர் அந்தரங்க உலகை உருவாக்க, ஒரு புறவுலகச் சித்தரிப்பையாவது அளிக்க அவற்றால் முடிவதில்லை. நான் சுட்டிக்காட்டிய யதார்த்தம் இதுவே.

இது எந்த வாசகனும் அறிந்த உண்மை. இத்தனை பெண்கள் எழுதுகிறீர்களே தமிழில் உங்களால் ஏன் ஒரு நல்ல படைப்பை உருவாக்க முடியவில்லை என்ற வினாவை ஓரு விமர்சகனாக நான் எழுப்புகிறேன். சென்ற பத்தாண்டுகளில் பெண்படைப்பாளிகள் மீளமீளப் பேசப்படுகிறார்கள், ஒரு பெண்படைப்புகூட பேசப்படவில்லையே என்கிறேன். மற்றமொழிகளில் அப்படி இல்லையே என்கிறேன். சென்றதலைமுறைப் பெண்படைப்பாளிகள் எழுதிய முக்கியமான படைப்புகளைக்கூட நீங்கள் எழுதவில்லையே என்கிறேன்.

இந்தப்பெண் படைப்பாளிகள் எதையாவது வாசிக்கிறார்களா? எதையாவது தெரிந்துகொள்கிறார்களா? எந்த இலக்கியப்படைப்பைப் பற்றியாவது எழுதியிருக்கிறார்களா? அதைத்தான் கேட்கிறேன். ஒரு விமர்சகனாக. மிகமரியாதையான சொற்களில், எந்தத் தனிப்பட்ட எழுத்தாளர் பெயரையும் சுட்டாமல் அதை முன்வைக்கிறேன். அப்படி கறாரான பார்வையை முன்வைக்கும்போதே குறிப்பிடும்படி எழுதியிருக்கும் அத்தனை படைப்பாளிகளையும் சுட்டிக்காட்டி அக்கட்டுரையிலேயே எழுதியிருக்கிறேன். சென்ற இருபதாண்டுகாலத்தில் குறிப்பிடத்தக்க படைப்புகளை எழுதிய அத்தனை பெண்களையும் சுட்டிக்காட்டியிருக்கிறேன். பாராட்டியிருக்கிறேன்.

அதற்கான எதிர்வினைகளைப் பாருங்கள். கூட்டம்சேர்ந்து மிரட்டுவது. பொதுவெளியில் ஆணாதிக்கவாதி என்றெல்லாம் சொல்லி அவமதிப்பது. மனைவி குழந்தைகளை சந்திக்கு இழுக்க முனைவது. பெண்கள் முக்கியமான படைப்புக்களை எழுதவில்லை என்று சொன்னால் அது பெண்களின் ஒழுக்கத்தை குறைகூறுவதாம். எங்கே பெண்களின் ஒழுக்கத்தைக் குறைகூறியிருக்கிறேன்? நான் ‘பெண்களை அவமதித்துக் கொண்டே இருக்கிறேன்’ என்கிறார் ஓர் அம்மையார். எப்போது? எத்தகைய அவதூறு இது. சுயகௌரவம் என்பது பெண்களுக்கு மட்டும் உரியதா என்ன?

ஒரு தருணத்திலும் பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சுட்டி ஒருபோதும் எழுதியதில்லை. படைப்பாளிகள் பலருடைய தனிப்பட்ட வாழ்க்கை ஊடகச்செய்தியாக ஆனபோதுகூட நான் எதிர்வினை ஆற்றியதில்லை. இந்த அவதூறு, வசை, திரிபுகள் எதைக்காட்டுகின்றன? ஏன் எழுதாமலேயே எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்கிறீர்கள் என்ற எளிய கேள்விக்கான விடை இல்லை என்பதை மட்டும்தான். அந்த வினாவை இனி எவருமே பொதுவெளியில் கேட்காமல் மிரட்டி வாயை அடக்கிவிடவேண்டும் என்ற பதற்றத்தைத்தான். அந்த மிரட்டலைத்தான் நான் சுட்டிக்காட்டியிருந்தேன்.

இதைச்செய்பவர்கள் எல்லா ஊடகங்களையும் மறைமுகமாகக் கைப்பற்றி வைத்திருக்கும் உள்ளீடற்ற ஊடகபிம்பங்கள். இவர்கள்தான் பெண்களின் உண்மையான எழுத்துக்களை மறைக்கும் திரைகள். இவர்களைக் கிழித்து விலக்காமல் பெண்களின் எழுத்துக்கள் வாசகர்களை சென்றடையவும் முடியாது. எழுதும் துடிப்புள்ள பெண்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒருவேண்டுகோள், இந்த கூச்சலெழுத்தாளர்களை முன்னுதாரணமாகக் கொள்ளாதீர். முச்சந்திக்கூச்சல் வழியாக எவரும் எழுத்தாளர்கள் ஆகிவிடமுடியாது. எழுத்து அதற்கான அர்ப்பணிப்பைக் கோருகிறது. எழுதுங்கள். தயவுசெய்து எழுதுங்கள்.

http://www.jeyamohan.in/?p=56554

அத்தோடு பெண் எழுத்தாளர்கள் தொடர்பான நிலைப்ப்பாட்டை தனது வாசகர் ஒருவரின் கேள்விக்கான பதிலின் போதும் விளக்கியிருந்தார்.

அன்புள்ள ஜெ,

பெண்களின் சாதனைகளை நீங்கள் ஏற்க மறுக்கிறீர்கள் என்று இங்கே பலபேர் சொல்கிறார்கள். பெண்கள் வெற்றிபெறுவதெல்லாம் பாலியல் அடையாளம் மூலம் பெறும் வெற்றி மட்டும் என்று சொல்கிறீர்கள் என்று சொல்கிறார்கள். நீங்கள் உங்கள் கட்டுரையில் எழுதியிருந்தவற்றை எந்த அளவுக்கு புரிந்துகொண்டார்கள் என்று தெரியவில்லை. தங்களை பெண்ணிய ஆதரவாளர்கள் என்று காட்டிக்கொள்ள இது ஒரு சந்தர்ப்பம். அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். பெண்கள் எழுதவே வரக்கூடாது என்று சொல்கிறீர்கள் என்றுகூட சிலர் எழுதியதை வாசித்தேன். நீங்கள் சொன்னதென்ன என்பதை வழக்கம்போல நீங்கள்தான் விளக்கவேண்டும்.

சிவா

அன்புள்ள சிவா,

வழக்கம்போல. எந்த ஒருவிஷயத்திலும் ஒரு பொதுவான ‘முற்போக்கு, மனிதாபிமான’ நிலைபாட்டை எடுத்துவிட்டு அதீத எம்பிக்குதித்தல்களை நிகழ்த்துவதுதான் நம்முடைய மரபாக மாறிவிட்டிருக்கிறது. புரிந்துகொள்ளும் முயற்சியோ அதற்கான கூரோ பெரும்பாலும் காணக்கிடைப்பதில்லை.

அந்தக்கட்டுரையிலேயே சாரமான படைப்புக்களை எழுதிய பெண்களைக் குறிப்பிட்டு பாராட்டியிருக்கிறேன். முக்கியமான படைப்புக்களை எழுதிய அனைத்துப்பெண்களின் ஆக்கங்களையும் அவை வெளிவந்த காலத்திலேயே சுட்டிக்காட்டி பிறருக்கு அறிமுகம் செய்திருக்கிறேன். சொல்லப்போனால் பலரது படைப்புக்களைப் பற்றி நான் மட்டுமே எழுதியிருக்கிறேன்.

என்னுடைய கேள்வி இச்சூழலில் இருந்துகொண்டிருப்பது. நேற்று ஒருவர் கூப்பிட்டார். ‘பொம்புளைங்க ஒண்ணுமே எழுதலைன்னு எப்டி சார் சொல்லலாம்?’ என்றார். ‘பொம்புளைங்க எழுதலைன்னு எப்ப சொன்னேன்?’ என்றேன். ‘அப்டீங்களா?’ என்றார். ‘அந்தப்பட்டியலிலேயே நல்லா எழுதின பெண்களை தனியா எடுத்துச் சொல்லியிருக்கேன்ல?’ என்றேன். ‘ஓகோ’ என்றார்.

‘சரி, அந்தப்பட்டியலிலே இருக்கிற எத்தனை ஆண் எழுத்தாளர்களை உங்களுக்குத் தெரியும்?’ என்றேன் ஆழ்ந்த மௌனம். ‘சொல்லுங்க’ என்றேன். ‘யாரையுமே கேள்விப்பட்டதில்ல. சிலரோட பேர மட்டும் எங்கியோ படிச்சமாதிரி ஞாபகம்’ என்றார்.

‘பொம்புளைங்கள?’ என்றேன். ‘ஒண்ணுரெண்டுபேரத்தவிர மிச்சபேரெல்லாம் தெரிஞ்சவுங்க’ என்றார். ‘எப்படி?’ என்றேன். அவரால் பதில்சொல்லமுடியவில்லை. நான் சொன்னேன் ‘நம்ம வார இதழ்களிலே அவங்களோட பேட்டிகளும் படங்களும் பலதடவ வந்திருக்கு. திரும்பத்திரும்ப வந்திருக்கு. அவங்களப்பத்தின செய்திகள் வந்திட்டே இருக்கு. செய்திகள அவங்களேகூட திறமையா உருவாக்கிக்கிறாங்க. அதான்’ அவர் ‘ஆமாசார்’ என்றார்.

‘சரி, இந்த ஆண் எழுத்தாளர்களில ஒருத்தர்கூடவா முக்கியமில்ல? ஒருத்தரோட பேட்டியோ படமோ எங்கியாவது வந்திருக்கா? பலரோட முகமே இந்த ஸ்டாம்பு சைஸ் போஸ்டரிலதானே வந்திருக்கு. ஏன்?’ அவரால் பதில் சொல்லமுடியவில்லை.

நான் விளக்கவிரும்புவது அதைத்தான் என்றேன். திரும்பத்திரும்ப ஊடகங்களில் பெண்படைப்பாளிகளாக இடம்பெற்று வரும் சிலர் உண்மையில் சொல்லும்படி எதையாவது எழுதியிருக்கிறார்களா என்பதே என் கேள்வி. அவர்கள் இன்று அனைத்து ஊடகங்களிலும் இருக்கிறார்கள். கருத்தரங்குகளுக்காக தேசமெங்கும் செல்கிறார்கள். நாடுநாடாகப் பறக்கிறார்கள். உலகமெங்கும் சென்று தமிழை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். எல்லா அங்கீகாரங்களையும் அடைகிறார்கள்.

ஆனால் அவர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று கேட்டால் தர்மசங்கடமான மௌனம். பெரும்பாலும் வெறும் புலம்பல்கவிதைகள். கடன்வாங்கிய படிமங்களை உருட்டி வைத்த போலிக்கவிதைகளாக ஓரிரண்டு. சில பக்கங்களுக்கு பிழையில்லாமல் தமிழ் எழுதக்கூட தெரியாதவர்கள் பலர். உட்கார்ந்து பத்துபக்கம் தொடர்ந்து எழுதக்கூட பொறுமையற்றவர்கள்.

இவர்களுக்குக் கிடைக்கும் முக்கியத்துவம் காத்திரமான படைப்புகளுடன் வரும் ஆண்களுக்கு இன்றில்லை என்பதில், அவர்களுக்கு ஊடக அறிமுகமோ அமைப்புகளின் ஆதரவோ, வாசக கவனிப்போ இல்லை என்பதில் ஒரு பெரிய அநீதி உள்ளது. அதைமட்டும்தான் சுட்டிக்காட்டுகிறேன்.

எழுதாத எழுத்தாளர் என்ற ஒரு புதியவகையையே இந்தப் பெண்கள் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்களோ என்று ஐயப்படுகிறேன். எழுத்தாளர்கள் என்கிறீர்களே என்னதான் எழுதினீர்கள் என்று ஒரு வாசகன் கேட்டால் அது என்ன பெண்கள் மீதான தாக்குதலா? என்ன கொடுமை!

இந்தப் பெண்களில் பலர் எழுதும் அசட்டுப் பெண்ணியப்படைப்புக்களை பெண்ணியமென்பதற்காக அங்கீகரிக்கவேண்டுமென்றால் இதேபோல மார்க்ஸியம் சூழியல் என எதையாவது வைத்து எழுதப்படும் எல்லா பிரச்சாரக்குப்பைகளையும் அங்கீகரிக்க வேண்டியதுதானே? என்ன இலக்கிய அழகியல் வேண்டிக்கிடக்கிறது?

இத்தனை பெண்படைப்பாளிகள் ஊடகங்களில் நின்றருள்கிறார்கள். ஆனால் பாரததேவி போன்ற அறியப்படாத முதிய கிராமத்துப்பெண்மணிதான் ‘நிலாக்கள் தூரதூரமாய்’ போன்ற ஒரு அழுத்தமான ஆக்கத்தை அளிக்கமுடிகிறது. [அதைப்பற்றி ஒரு குறிப்பையாவது இந்த பெண் எழுத்தாளர்கள் எங்காவது எழுதியிருக்கிறார்களா? குறைந்தபட்சம் வாசித்தாவது பார்த்திருக்கிறார்களா?] இந்த முரண்பாட்டைத்தான் நாம் கவனிக்கவேண்டும். உண்மையான படைப்பாளிக்கும் ஊடகபிம்பங்களுக்கும் உள்ள வேறுபாடு அது.

படைப்பு என்பது அர்ப்பணிப்பின் விளைவு. அதற்குக் கொடுக்கவேண்டிய கண்ணீரையும் தவத்தையும் கொடுத்துத்தான் ஆகவேண்டும். அதை அளிக்காத ஊடகபிம்பங்கள் உண்மையில் சிறந்த படைப்பாளிகளை மறைக்கும் திரைகள்.

பெண்களோ ஆண்களோ நான் எதிர்பார்ப்பது படைப்புகளை. என்னுடைய கற்பனையை விரிவாக்கி என்னை நிகர்வாழ்க்கை வாழச்செய்பவற்றை. என் நீதியுணர்ச்சியுடன் உரையாடி என் அழகுணர்வைத் தீட்டி என் வாழ்க்கைநோக்கை முன்னெடுக்கும் எழுத்துக்களை. அவற்றை எழுதிய அனைவரையும் எப்போதும் அங்கீகரித்துக்கொள்ள, மகிழ்வுடன் என் படைப்பாளியாக எடுத்துக்கொள்ள எப்போதும் தயங்கியதில்லை.

இதில் ஆணியப்பெருந்தன்மையுடன் நூறுபூக்கள் மலரட்டுமே என பெண்களின் எழுத்துக்களைப்பற்றிச் சொல்லும் ஏட்டு கருத்தையாக்கள் எவரும் எந்தப்பெண்ணும் எழுதியதை வாசித்திருக்கமாட்டார்கள். ஆகவே ஓடும் செம்பொன்னும் ஒப்பவே நோக்கும் பெரும்போக்காளர்களாக திகழ்கிறார்கள்.

என்னைப்போன்ற சிலர்தான் ஒருவர் எழுத்தாளர் என்றதுமே பாய்ந்து அவர்கள் எழுதியதை வாங்கிப்படிக்கிறோம். அதனால்தான் இலக்கிய எழுத்தாளர் அலட்டிய எழுத்தாளர் என்ற வேறுபாடு தெரிகிறது. அதைச் சொன்னதுமே ‘அய்யய்யோ பெண்களுக்கிடையே பேதமா?’ என கொதிப்படைகிறார்கள் கருத்தையாக்கள்.

எந்த ஒரு படைப்பையும் நான் அழகியல் நோக்கிலேயே அணுகுகிறேன். அது என் இயல்பு, என் பணி. உடன்பாடான கருத்துக்களோ அல்லது சமகாலக் கருத்துக்களோ எனக்கு ஒரு பொருட்டே அல்ல. நல்ல படைப்பு அதன் கருத்தியல் எல்லைகளை தேச, இன, மொழி, பால் எல்லைகளை தாண்டிச்சென்று வாசகனை பாதிக்கும். அந்த விதியின் அடிப்படையிலேயே உலகமெங்கும் இலக்கியமென்னும் இயக்கம் செயல்படுகிறது. அப்படி என்னை வந்தடையும் படைப்புகளையே நான் எதிர்நோக்குகிறேன்.

ஆகவே நான் பெண்களில் எதிர்பார்க்கும் படைப்பாளி என் ஆதர்ச நாயகியான குர்அதுலைன் ஹைதர் போன்ற ஒருவர். நான் வழிபடும் ஆஷாபூர்ணா தேவியைப்போன்ற ஒருவர். அடுத்தகட்டத்தில் கமலாதாஸ் போல் பிரேமா காரந்த் போல அமிர்தா பிரீதம் போல கிருத்திகா போல ஒரு படைப்பாளி. குறைந்தது இன்று மலையாளத்தில் எழுதிவரும் கெ.ஆர்.மீரா போல ஒருவர்.

உண்மையிலேயே இவ்விஷயத்தில் விவாதிக்க நினைப்பவர்கள் தமிழில் கிருத்திகாவுக்குப்பின் பெண்கள் எழுதிய எந்த இலக்கியப்படைப்பில் அவர்கள் முக்கியமான வாசக அனுபவத்தை அடைந்தனர் என்று எண்ணிப்பார்க்கட்டும். பெண்கள் எழுதிய எந்தப்படைப்பு சென்ற முப்பதாண்டுகாலத்தில் தமிழில் பேசப்பட்டது என்பதை கணக்கிடட்டும்.

நான் சொல்வது அந்த வெறுமையைத்தான். ‘ஐயோ பாவம் பெண்கள், அவுங்களால அம்புட்டுத்தானே முடியும்’ என்ற ஆணிய நோக்கல்ல என்னுடையது. பெரிதினும் பெரிது கோரும் வாசக நோக்கு. இந்த விமர்சனத்தால் அப்படி ஓர் வெறுமை இருப்பதை வாசகன் உணர்வானென்றால், அவனுடைய எதிர்பார்ப்பு சிலரை எழுதவைக்குமென்றால் அதுவே இக்குறிப்பின் இலக்கு.

மற்றபடி தன் கலைத்திறனின்மையை பாதுகாக்க பெண்ணியத்தால் அல்லது வேறு ஏதாவது இயத்தால் வேலிபோட முயலும் விடைப்புகள் முறைப்புகளை எல்லாம் கேலிக்குரியவை என்றே எண்ணுவேன். மார்க்ஸியர்களும் அதைத்தான் செய்தார்கள். உன் படைப்பு தட்டையானது என்றால் இது உழைக்கும் வர்க்க இலக்கியம் நீ பூர்ஷுவா என்பார்கள்.

ஆக, பெண்களை எழுதவேண்டாமென்று சொல்லவில்லை. நேர்மாறாக ‘எழுதுங்கள், தயவுசெய்து எழுதுங்கள்!’ என்றுதான் சொல்கிறேன். ‘மகத்தான ஆக்கங்களுடன் எழுந்து வாருங்கள்!’ என்கிறேன்.

ஜெ

http://www.jeyamohan.in/?p=56437

பின்னர் இந்த சர்ச்சை நக்கீரன் இதழிலும் சிறப்புக்கட்டுரையாக வெளிவந்தது. அது இங்கே.

பெண்கள் சதைப்பிண்டங்களா? ‍இலக்கிய உலக சர்ச்சை!

எழுத்தாளர் ஜெயமோகனுக்குக் கண்டனம் தெரிவித்துப் போராட்டத்தில் குதிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்கள் பெண் கவிஞர்கள். காரணம் இதுதான்….

வார இதழ் ஒன்றில் தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான நாஞ்சில் நாடன் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லி வருகிறார். அவரிடம் திருநெல்வேலியைச் சேர்ந்த வாசகி பார்வதி என்பவர் “இன்றைய எழுத்தாளர்களில் நம்பிக்கை தரக்கூடியவர்கள் யார் யார்?” என்று கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த நாஞ்சில் நாடன்  இளையவர்களை மட்டுமே கருத்தில்கொண்டு என் கருத்தைச் சொல்கிறேன் என ஆரம்பித்து ஈழத்து இளைஞர்களில் சயந்தன், தமிழ்நதி, இளங்கோ. தமிழகத்தில் குமாரசெல்வா, வா.மு.கோமு, மு.ஹரிகிருஷ்ணன், ஜே.பி.சாணக்யா, கே.என்.செந்தில், எஸ்.செந்தில்குமார், பா.திருச்செந்தாழை, என்.ஸ்ரீராம், தூரன் குணா, சந்திரா, இளஞ்சேரல், அ.வெண்ணிலா, லக்ஷ்மி சரவணக்குமார் ஆகியோர் சாதிக்கிறவர்களும் நம்பிக்கை தரக்கூடியவர்களும். மீனா, தி.பரமேசுவரி, ச.விசயலட்சுமி ஆகியோர் திறனுடன் கட்டுரைகள் எழுதுகிறார்கள். கவிஞர்களில் உமா மகேஸ்வரி, குட்டி ரேவதி, லீனா மணிமேகலை, சுகிர்தராணி, சக்தி ஜோதி, சாம்ராஜ், லிபி ஆரண்யா, இசை, இளங்கோ கிருஷ்ணன் என்போர் என்னைக் கவர்ந்தோரில் சிலர் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு ஜெயமோகன் தன் வலைப்பக்கத்தில் விமர்சன்ம் எழுதியிருந்தார். அதில் ‘பட்டியலில் உள்ள ஆண் படைப்பாளிகளில் அனைவரும் சிறப்பாக எழுதக்கூடியவர்கள் தான். இன்னும் அதிகமாக அவர்களிடம் எதிர்பார்க்கிறேன். ஆனால் பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பலவகை உத்திகள் மூலம் ஊடகப் பிம்பங்களாக ஆனவர்கள். ப‌லரை ஏன் எழுத்தாளர்கள் அல்லது கவிஞர்கள் என்று சொல்கிறார் நாஞ்சில் என்றே புரியவில்லை. இது ஒரு முக்கியமான அம்சம். இன்று ஆண்கள் எழுதித்தான் நிற்கவேண்டியிருக்கிறது. பெண்களுக்கு பெண்களாக தங்களை முன்வைத்தாலே இடம் கிடைத்துவிடுகிறது” என்று கடுமையாக பெண் படைப்பாளிகளைச் சாடியிருந்தார். இதுதான் தமிழ் பெண் படைப்பாளிகளைக் கொந்தளிக்க வைத்திருக்கிறது.

ஜெயமோகனின் இந்த விமர்சனத்தை இணைய எழுத்தாளர்கள் முதல் பலரும் கடுமையாகக் கண்டித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஜெயமோகனின் இந்த விமர்சனம் சரியா? என பிரபல எழுத்தாலர் சாரு நிவேதிதாவிடம் கேட்டோம்.

“நான் எதைச் சொன்னாலும் ஜெயமோகனைப் பிடிக்காததால் சொல்கிறேன் என்று சொல்வார்கள். அதற்காக நான் என் கருத்தைச் சொல்லாமல் பின்வாங்க முடியாது. எனக்கு ஜெயமோகன் உள்ளிட்ட யார் மீதும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு கிடையாது. அவர் ‘நான் கடவுள்’ படத்திற்கு எழுதியிருந்த வசனத்தை மனம் திறந்து பாராட்டியவன் நான். ஆனால் இப்போது பெண் எழுத்தாளர்கள் மீது வைத்திருக்கும் விமர்சனத்தை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது” என்று அழுத்தம் கொடுத்த சாரு நிவேதிதா.. மேலும் தொடர்ந்தார்.

“ஜெயமோகனுக்கு ஒரு வழக்கம் உண்டு. தனக்கு நெருக்கமானவர்களை மட்டும்தான் சிறந்த எழுத்தாளர்கள் என்பார். அவருக்கு ஜால்ரா போடுபவர்களை மட்டும்தான் பாராட்டுவார். ஜெயமோகனை இடுவரை எந்தப் பெண் படைப்பாளரும் பாராட்டியது இல்லை. அப்படியிருக்க அவருக்கு எப்படி பெண் படைப்பாளிகளைப் பிடிக்கும்? தாக்கத்தானே செய்வார். அவருக்கு  தான் ஒரு மகரிஷி என்ற நினைப்பு. அதனால்தான் ‘நான் எந்த டைரக்டரைப் பார்க்கப் போனாலும் அவர்கள், குடித்துக்கொண்டிருக்கும் மதுப்புட்டில்களை ஒளித்து வைத்துவிடுவார்கள்’ என்று ஒரு கட்டுரையில் எழுதினார். இவர் ஏதோ புனிதரைப் போலவும் முனிவரைப் போலவும் நினைத்துக்கொண்டு பிதற்றுவதையே வைத்திருக்கிறார்.

நீ புனிதன் என்றால் எதற்கு உன் பார்வையில் குடி மலிந்த கோடம்பாக்கத்தையே சுற்றிக்கொண்டிருக்கிறாய்? குடிகார இயக்குநர்களைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறாய்? குடிக்கிறவர்கள் எல்லாம் கெட்டவர்களா? குடிக்காதவர்கள் எல்லாம் நல்லவர்களா? குடிக்காதவன் ரேப் செய்கிறான், லஞ்சம் வாங்குகிறான், கொலை பண்ணுகிறான். அவன் நல்லவனா? ஜெயமோகனின் பார்வையே கோளாறான பார்வை. தடுத்து வைக்கப்பட்டதை பெண்கள் உடைத்தெறிகிறார்கள். தங்கள் கைவிலங்குகளை, ஆணாதிக்கத்தின் தலையிலேயே அடித்து நொறுக்குகிறார்கள். இதை புராணிகரான ஜெயமோகனால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. ஜெயமோகன் கண்களுக்கு பெண்கள் சதைப் பிண்டங்களாகத் தான் தெரிகிறார்கள். அதனால்தான் உடலை பிரதானமாக வைத்து முன்னேறுவதாக தொடர்ந்து உளறிக்கொண்டிருக்கிறார்.

நேற்று நடந்த ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். என் வீட்டுப் பணிப்பெண், வெளியே போனபோது எதிவீட்டில் கட்டிட வேலை செய்யும் மேஸ்த்திரி ரேப் செய்வதைப்போல் அப்படிப் பார்க்கிறான். இதை அவள் என் மனிவியிடம் சொல்லி அழுதாள். இப்படி ஆனால் அசிங்கப்படும்போது பெண்களுக்கு அவமானமும் அதைத்தொடர்ந்து ஆத்திரமும்தான் பீறிடும். ஆணாதிக்கவாதிகளால் ஏற்படும் அந்தக் கோபத்தைத்தான் இன்றைய பெண் படைப்பாளிகள் வெளிப்படுத்துகிறார்கள். இதை ஜெயமோகனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஜெயமோகன் எப்படிப்பட்டவர் என்பதற்கு இன்னொன்றையும் சொல்கிறேன். ஒரு கட்டுரையில் அவர் ‘மனுஷ்யபுத்திரனின் எழுத்தில் ரத்தமும் வன்முறையும் அதிகமாக இருக்கிறது. அதற்கு காரணம் அவருக்கு கால்கள் இல்லை” என்று எழுதினார்.

அந்தக் கட்டுரையில் 7 இடத்தில் அவரை நொண்டி என்று குறிப்பிட்டிருந்தார். இதை மனுஷ்யபுத்திரன் பெருந்தனமை காரணமாக மன்னித்துவிட்டார். என்னால் மன்னிக்கவே முடியவில்லை. அதனால் அந்தப் புத்தகத்தை வெளியீட்டுவிழா மேடையிலேயே கிழித்தெறிந்தேன். ஜெயமோகனின் பார்வையே மோசமானது, கீழ்த்தரமானது. அவர் ஒருவகையில் மனநோயாளி. அதனால்தான் ஆண்கள் எழுத்துக்களால் நிற்கமுடிகிறது என்றும் பெண்களுக்குத் த‌ங்களை பெண்களாக முன்வைத்தாலே இடம் கிடைத்துவிடுகிறது என்றும் வார்த்தைகளால் குப்பையைக் கொட்டுகிறார். இப்படிப்பட்டவரை ஒரு எழுத்தாளராகவே என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என்றார் காட்டமான காட்டமாய்.

கவிஞர் முருகேஷோ “எதிர்மறை விமர்சனங்களால் தன்னை முன்னிறுத்திக்கொள்ள முனைகிறவர் ஜெயமோகன். கலைஞர் படைப்பாளியே இல்லை என்று உளறுவார். திராவிட இயக்கத்தில் இலக்கியவாதிகளே கிடையாது என்று பிதற்றுவார். முற்போக்கு இலக்கியங்கள் எல்லாம் வெறும் பிரச்சார கோஷங்கள் என்று எள்ளி நகையாடுவார். இப்படி தடாலடியாகச் சொன்னால் மீடியாக்களில் அடிபடலாம் என்கிற மன அரிப்பு இவருக்கு எப்போதுமே உண்டு. ஆண் எழுத்தாளர்கள் எழுத்துக்களை வைத்து முன்னேறுவதாகவும் பெண் படைப்பாளர்கள் பாலியல் ரீதியாக தங்களை முன்நிறுத்திக் கொள்கிறார்கள் என்றும் ஒட்டுமொத்த பெண்ணுலகத்தையே கொச்சைப்படுத்துகிறார். இவர் மனைவியும் கட்டுரைகள் எழுதிய ஒரு பெண் படைப்பாளிதானே.

இனியும் இவர் இப்படி பெண் படைப்பாளர்களைக் கொச்சைப்படுத்தினால், அதை இலக்கிய உலகம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது” என்றார் எரிச்சலாக.

இது குறித்து நம்மிடம் பேசிய பெண் கவிஞரான சக்தி ஜோதி “எழுத வந்தவர்களை தட்டிக்கொடுக்கிற தார்மீக நம்பிக்கை நாஞ்சில் நாடனிடம் இருக்கிறது. பட்டியலை மறுத்த ஜெயமோகன் எழுத்தில் பொதுவாக எல்லா ஆண்களுக்கும் இருக்கிற ஆண் மேலாதிக்க மனோபாவமே மேலோங்கி நிற்கிறது. எழுத வந்திருக்கிற பெண்கள் மீது தொற்றுகிற ஒரு ஆண் வியாதி இது” என்றார் எரிச்சலாய்.

எழுத்தாளர் நாஞ்சில்ல் நாடனிடம் “அய்யா, நீங்கள் போட்ட பட்டியலில் இருக்கும் பெண் படைப்பாளர்கள் கொச்சைப் படுத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்திருக்கிறதே?” என்றோம். நாஞ்சில் நாடனோ “நான், எனக்குத் தெரிந்த என் கவனத்துக்கு வந்த எனக்கு நம்பிக்கை தருகிற இளம் எழுத்தாளர்களைப் பட்டியல் போட்டதில் என்ன தவறு? நான் அவர் என்ன சாதி? என்ன மதம்? என்ன நிறம்? என்ன உயரம் என்றெல்லாம் யாரையும் பார்ப்பதில்லை, படைப்பின் மூலமே படைப்பாளியைப் பார்க்கிறேன். தற்காலத் தமிழ்ச் சூழலில், எல்லாமே அரசியலாகப் பார்க்கப்படுகிறது. ஒரு குவளை தண்ணீரை ஒருவரிடம் வாங்கிக் குடித்தால் கூட அந்தத் தண்ணீர்க் குவளையில் அரசியலைத் தேடுவார்கள். இதையெல்லாம் பார்த்து 40 வருடங்களாகப் புகைந்து கொண்டிருக்கிறேன். இங்கே யார் எழுத்தையும் யாரும் தடுத்துவிட முடியாது. நேர்மையாக உழைத்து உயர்வாக எழுதுகிறவர்களின் எழுத்துக்கள்தான் காலத்தால் நிற்கும். அப்படியிருக்க்க இதை ஜெயமோகன் வன்மத்துடன் எதிர் கொண்டிருக்கத் தேவையில்லை” என்றார் அழுத்தமாக.

நாவலரசர் நாஞ்சில் நாடனின் பட்டியல் பற்றியும் அதற்கான கருத்து என்று ஜெயமோகன் தனது வலையில் கொட்டியிருக்கும் இலைமறை விஷயயத்தைப் பற்றியும் சாகித்ய அகாதமி விருதாளர், கவிஞர், எழுத்தாளர் திலகவதியிடம் கேட்டோம்.

நாஞ்சில் நாடன், தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலாக இது முழுமையானதல்ல என்ற குறிப்போடு கொடுத்த பட்டியல் அது. அதற்குப் பிறகும் அதை ஜெயமோகன் விவாதமாயிருக்கிறார். இது ஒரு பண்புள்ள எழுத்தாளனுக்கு அழகல்ல. படிப்பு என்பது உள்ளார்ந்த வளர்ச்சியைத் தரவேண்டும். படைப்பு நிலையை அடையும்போது மனம் அன்பு கனிந்ததாய் அமைய வேண்டும். தான் பெரிய படைப்பாளி என்பதை ஒரு காட்சிப் பொருளாக்கத் துடிப்பது ஒரு முதிர்ந்த படைப்பாளிக்கு அழகல்ல. இலக்கியப் பட்டியல்களை, இலக்கிய சண்டியர்களை, இலக்கியச் சட்டாம்பிள்ளைகளை, சங்கப்பலகைகளை கடந்துதான் தமிழ் வளர்ந்திருக்கிறது. எழுத்தில் பால பேதம் பார்ப்பது பிற்போக்குத்தனமான போக்கு.

ஜெயமோகன் நிறைய எழுதுகிறவர். ஜெயமோகன் மட்டுமின்றி, தமிழ்ப் படைப்பாளர்கள் எல்லாரும் உணரவும், கொண்டாடவும் வேண்டிய ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். பக்கம் பக்கமாய் ப‌ல்லாயிரம் பக்கங்கள் எழுதியவர்களையும் காலம் புறந்தள்ளியிருக்கிறது… இரண்டடி, மூன்றடி எழுதியவர்களையும் காலம் இன்றளவும் ஆராதனை செய்து கொண்டிருக்கிறது. படைப்பாயினும், விமர்சனமாயினும் அது உலகை மேம்படுத்த வேண்டும்” நாம் கேட்டவுடனே திலகவதி சரளமாகச் சொன்ன பதில் இது.

ஜெயமோகனின் விமர்சனம் பெண்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

அதனைத் தொடர்ந்து பெண் படைப்பாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஜெயமோகனுக்கு எதிராக கண்டன அறிக்கை ஒன்றை பதிவு செய்தார்கள். அது இங்கே.

ஜெயமோகனின் பாலியல் நிந்தனைக்கெதிராக பெண்ணியச் செயல்பாட்டாளர்களின் கண்டனக்கூட்டறிக்கை!

வணக்கம்,

எழுத்திற்கென்றொரு தார்மீகப் பொறுப்பு இருக்கிறது. பேராசான் கார்ல் மார்க்ஸ் போன்றோர் தங்களது எழுத்தின்மூலமாக மனிதகுலத்தின் சிந்தனைப்போக்கையும் வரலாற்றையும் மாற்றியமைத்தார்கள். அத்தகைய சக்திவாய்ந்த எழுத்தானது அடிப்படைவாதிகளது இருப்பிற்கான களமாக அமைந்துவிடும்போது, அந்தச் சமூகமே சீரழிந்துபோகும் கெடுவாய்ப்பு இருக்கிறது. அந்த இழிநிலையை நோக்கி தமிழிலக்கியம் நகர்ந்து  கொண்டிருக்கிறதோ என்ற அச்சங்கலந்த ஐயம், அண்மைக்காலமாகசில இலக்கியவாதிகளது பொறுப்பற்ற பேச்சினால் ஏற்பட்டிருக்கிறது. அவர்களுள், ஜெயமோகன் செய்துவரும் இலக்கிய மேட்டிமைத்தனங்கள் சொல்லுந்தரமற்றவை.

அதிகாரத்தரப்பை உயர்த்திப்பிடித்தல், சிறுபான்மையினரைத் தரந்தாழ்த்துதல், பிறமதங்கள்பால் சகிப்புத்தன்மையற்று இந்துத்துவத்தை முன்னிலைப்படுத்தல், இடதுசாரி சிந்தனையாளர்கள்பால் காழ்ப்புணர்வைக் கொட்டுதல், வரலாற்றைத் தன் நிலைப்பாடுகளுக்கியைந்தபடி திரிபுபடுத்துதல் இவற்றோடு ஆணாதிக்கத்தின் தடித்தனமும் அவரது எழுத்துக்களில் புரையோடிக்கிடக்கிறது. காலாகாலமாக ஆண்களே இந்தச் சமூகத்தை வழிநடத்திச் செல்லும் மேய்ப்பர்கள் என்ற ஆண்மையவாதத்திலிருந்தபடி தொடர்ந்து பெண்களுக்கெதிரான நச்சு வார்த்தைகளை இறைத்துவருகிறார். எழுத்துரு மாற்றம் இன்னபிற விடயங்களில் தனது “மேலான” கருத்துக்களைச் சொல்லி சர்ச்சைகளின்மூலம் “மஞ்சள் ஒளி வட்ட“த்தில் இருந்துகொண்டே இருக்கப் பிரியப்படுகிற அவரது மனச்சிக்கலைப் புரிந்துகொள்கிறோம். ஆனால், எழுதும் பெண்கள்மீது அவரால் பிரயோகிக்கப்படும் கருத்து வன்முறையை இனியும் புறந்தள்ளிக் கடந்துசெல்வதற்கில்லை.

‘பெரிதினும் பெரிதினை’த் தேடுவதாகத் தன்னைக் குறித்துச் சொல்லிக்கொள்ளும் ஜெயமோகன், தமிழிலக்கிய வாசகர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட ஆர்.சூடாமணி இறந்தபோது எழுதிய அஞ்சலிக் கட்டுரையில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.

“சூடாமணியின் கதைகளில் இலக்கியமதிப்பு மிகக்குறைவு என்றே நான் எண்ணுகிறேன். சூடாமணியை இன்றைய நிலையில் வாழும் இலக்கியகர்த்தாவாக அணுகமுடியாது. தமிழ்ச்சிறுகதை, நாவல் ஆகியவற்றின் பரிமாணத்தில் அவருக்குப் பங்கேதும் இல்லை”எனக் கூறியதன் மூலம், தமிழின் முன்னோடிகளுள் ஒருவரான சூடாமணியின் இலக்கியப் பங்களிப்பையே தடாலடியாக நிராகரித்திருக்கிறார்.

மேலும், அவருக்கு ‘கலைமகள் பாணி எழுத்தாளர்’என்று பெயர் சூட்டிக் குறுக்குகிறார். (பார்க்க: ஆர்.சூடாமணி, நவம்பர் 02, 2010) இங்ஙனம் எழுதுவதன்மூலமாக தமிழிலக்கியத்தின் அறிவித்துக்கொள்ளப்படாத தரநிர்ணயக் கட்டுப்பாளராக தன்னைத் தான் நியமித்துக்கொண்டிருக்கிறார். ஒரு வாசகனாக, படைப்பாளியாக அவ்விதம் சொல்வதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது என்ற ஜனநாயகத்தின் அடிப்படையில் அதைப் பொறுத்துக்கொண்டோம்.

கேரள இலக்கிய ஆளுமைகளுள் ஒருவரான மாதவிக்குட்டி என்கிற கமலா தாஸ் மறைந்தபோது, அவரைக் குறித்து எழுதப்பட்ட அஞ்சலிக் கட்டுரையில், (பார்க்க: அஞ்சலி: கமலா சுரையா, ஜூன் 01,2009) “இளவயதுத் தோழனின் விந்துவின் வாசனை பற்றிய வர்ணனைகள் அவரைப் புகழ்பெறச் செய்தன”என்று சற்றும் கூச்சமின்றி எழுதுகிறார். மேலும், மாதவிக்குட்டியின் மகன் மாத்ருபூமி ஆசிரியராக இருந்த காரணத்தினாலேயே அவர் மிகையாகப் புகழப்பட்டார் என்றும் எழுதுகிறார். அவர்பாலான தன்னுடைய அசூசை வெளித்தெரிந்துவிடக்கூடாதென்பதற்காக சற்றே புகழ்ந்துவிட்டு, “கமலாவின் பிரச்சனைகளின் ஊற்றுமுகம் ஒன்றுதான். அவர் அழகி அல்ல. கறுப்பான, குண்டான கிட்டத்தட்ட அவலட்சணமான பெண். தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் முனைப்பும் தணியாத விளம்பரவெறியும் கொண்டவர் கமலா.”என்கிறார். ‘மாதவிக்குட்டி தனது தோற்றம் குறித்துக் கொண்டிருந்த தாழ்வுணர்ச்சியினால், தாளாத காம இச்சை கொண்டிருந்தார் என்பதை அவரது சுயசரிதை வழி அறியமுடிகிறது’ என்றும் கீழ்மைப்படுத்துகிறார். ஆக, படைப்பு முதற்கொண்டு பெண்களின் அனைத்துச் செயற்பாடுகளும் அவர்களது தோற்றம் மற்றும் உடலையே அடிப்படையாகக் கொண்டவை என்பதை ஜெயமோகன் நிறுவமுற்படுகிறார். மேலதிகமாக, தமிழ்கூறும் நல்லுலகில் அறியப்பட்ட படைப்பாளியாக இருக்கக்கூடிய ஜெயமோகனின், அழகு பற்றிய வரைவிலக்கண இலட்சணமும் நமக்குத் தெரிந்துபோகிறது. இந்தப் பாரதத் திருநாட்டில் விசித்திரமான நடத்தைகளோடும் பேச்சுக்களோடும் உலவும் சில ஆண் இலக்கியவாதிகளை எவ்வுணர்ச்சி செலுத்தியது என்பதைக் குறித்து ஜெயமோகன் ஏன் எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை என்பதை, அவரது உள்ளொளிதான் அவருக்கும் நமக்கும் விளக்கிச்சொல்லவேண்டும். இத்தகைய நவீன மனுக்களின் ஆசாடபூதித்தனங்கள், பக்கச்சாய்வுகள் பொதுவெளியில் அம்பலப்படுத்தப்படவேண்டியவை.

பெண் படைப்பாளிகள்மீது இவருக்கு ஆழமான வெறுப்பு இருப்பதை அவர்
எழுத்துப்பூச்சினால் என்னதான் மறைக்கமுயன்றாலும் அவரையும் மீறிக்கொண்டு அந்த வெறுப்புணர்வு வெளிப்பட்டுவிடுகிறது. “பெண்-1, பெண்களின் காதல்” (அக்டோபர் 22, 2012) என்ற கட்டுரையில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.

“இன்று இளம்வாசகிகளில் கணிசமானவர்கள் நம்முடைய அசட்டுப்பெண்ணியர்களால் ஆரம்பத்திலேயே பார்வை திரிக்கப்பட்டு இலக்கியத்திற்குள் நுழையவே முடியாதவர்களாக ஆகிவிட்டிருக்கிறார்கள். உண்மையான இலக்கிய அனுபவம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.”

“இங்கே பெண்ணியம் பேசும் பெண் எழுத்தாளர்கள் பலரை நான் கவனித்து வருகிறேன். பொருட்படுத்தும் அளவுக்கு அடிப்படை வாசிப்புள்ள எவரையுமே நான் பார்த்ததில்லை. அவர்களிடம் ஒரு எளிய விவாதத்தை முன்னெடுக்கக்கூடத் தோன்றியதில்லை. அவர்களால் ஒரு சிறு சலசலப்புக்கு அப்பால் பொருட்படுத்தும் இலக்கிய ஆக்கங்கள் எதையுமே உருவாக்க முடியாமல் போனமைக்குக் காரணம் இதுவே. இவர்கள் பேசும் பெண்ணியம் என்பது இலக்கியவாசகனின் எதிர்பார்ப்பு என்ற சவாலைச் சந்திக்கமுடியாமல், தங்கள் சொத்தைப் படைப்புக்களைப் பொத்திக்கொள்ள உருவாக்கிக்கொள்ளும் ஒரு எளிய தற்காப்புமுறை மட்டுமே” . “இந்தச் சல்லிக்குரல்களை முழுக்கத் தூக்கிவீசிவிட்டு வரும் உண்மையான படைப்பூக்கமும் அதற்கான படைப்புத்திமிரும் கொண்ட
பெண்ணெழுத்தாளர்களுக்காகத் தமிழ் காத்திருக்கிறது.”

எத்தனை வன்மம், காழ்ப்புணர்வு, ஒவ்வாமை இருந்தால் இப்படி எழுதமுடியும்! ஒருவருக்குள் இத்தனை மன இருட்டும் வெறுப்புணர்வும் மறைந்திருப்பது அதிர்ச்சியூட்டுவதாயிருக்கிறது. பெண்ணியம் என்ற சொல்லின் பொருள், ‘ஆண்கள்மீதான வெறுப்பு’ என்ற தவறான புரிதலையே ஜெயமோகனும் கொண்டிருக்கிறார். அதனால்தான் அந்தச் சொல்மீது இத்தனை செருப்படி விழுகிறது. மேலும்,‘தமிழ் காத்திருக்கிறது’என்று மொழிவதன் மூலம் அவர் சொல்ல எண்ணுவது ஒன்றுதான்: இங்கு எழுதிக்கொண்டிருக்கும் பெண்களுள் யாருமே குறிப்பிடத்தக்க அளவில் எழுதவில்லை, அவர்கள் அடையாளமற்றவர்கள், ஆகவே,
தமிழிலக்கியத்தில் பங்குதாரர்களாக உரிமை கொண்டாடும் பாத்தியதை அற்றவர்கள் என்பதையே அவர் தன் ஆணித்தரமான வாதங்கள் மூலம் மீண்டும் மீண்டும் நிறுவ முயற்சிக்கிறார். மேலும், ஒன்றைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் அதை உண்மையென நம்பவைக்கும் உத்தியை, ‘பெண்களுக்கு ஆழமான வாசிப்பு கிடையாது’என்று சொல்வதன் மூலம் இன்றுவரை அவர் செய்துவருகிறார். எழுதுகிற பெண்களது வாசிப்பின் ஆழத்தை ஜெயமோகன் போன்ற இலக்கியப் பிதாமகர்களிடத்தில் அடிக்கடி சென்று நிரூபித்துச் சான்றிதழ் பெற்றுவருவதன் சாத்தியங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம்.

திருவாளர் ஜெயமோகன் சில முடிந்த முடிபுகளைக் கொண்டிருக்கிறார். அவர் இரவும் பகலும் எழுதிக்கொண்டிருக்கிற காரணத்தால், தலையைத் தூக்கி அவற்றை மீள்பரிசீலனை செய்ய அவருக்கு நேரம் இருப்பதில்லை. ‘ஐஸ்வர்யா ராயும் அருந்ததி ராயும்’ (டிசம்பர் 08, 2010) என்ற கட்டுரையில் பெண்வெறுப்புத்தாரை கீழ்க்கண்டவாறு பொழிகிறது.

“ஐஸ்வர்யா ராயை நான் ஒருமுறை சந்தித்திருக்கிறேன். அரைமணி நேரம்
பேசிக்கொண்டிருந்தேன். அழகான பெண். அழகான பெண்கள் வழக்கமாக இருப்பதுபோல அல்லாமல், புத்திசாலியும்கூட”என்கிறார்.

ஆக, அழகான பெண்கள் எல்லோரும் முட்டாள்கள் என்ற முடிந்த முடிவினை அவர் கொண்டிருக்கிறார்.  இவரைத்தாம் தமிழ் வாசகப்பரப்பு இலக்கியகர்த்தா என்று கொண்டாடிக்கொண்டிருக்கிறது என்ற நிலை அவமானகரமானது. அதே கட்டுரையில், “அருந்ததி போராளி அல்ல, வெறும் ஊடகப்பிரமை மட்டுமே!”என்று சொல்கிறார். புக்கர் பரிசுபெற்ற அருந்ததிராயின் நாவல் ஆழமற்றதும் இந்திய வாசகர்களுக்கு ஏமாற்றமளித்ததும் என்கிறார். அது ஒரு படைப்பினை விமர்சனம் செய்யும் உரிமையின்பாற்பட்டது.

ஆனால், அருந்ததி ராய் என்ற பெண்மீது, அந்த ‘ஊடகப் பிரமை’மீது ஜெயமோகன் கொண்டிருந்த காழ்ப்புணர்வானது ‘எனது இந்தியா’ (ஜூலை 02, 2012) என்ற கட்டுரையில் மிகக் கேவலமாக வெளிப்பட்டிருக்கிறது.

“அடிப்படையான வரலாற்றுணர்வோ சமநிலையோ இல்லாத அருந்ததி போன்ற குருவிமண்டைகள் ஊடகங்களில் இன்று பெறும் அதீத முக்கியத்துவம் மிக மிக ஆச்சரியமானது” என்கிறார் ஜெயமோகன்.

அருந்ததிராயின் நாவல்மீது, அவர் மேலைத்தேய ஊடகங்களால் அளவுக்குமீறித் தூக்கிப்பிடிக்கப்படுகிறார் என்ற விமர்சனத்தின்மீது எங்களிற் சிலருக்கும் உடன்பாடு உண்டு. ஆனால், ஒருவரை, அவரது தோற்றத்தினை முன்வைத்து இகழும் அற்பத்தனத்தை எக்காரணங்கொண்டும் மன்னிக்கமுடியாது. நொண்டி என்றும், குரூபி என்றும், குருவிமண்டை என்றும், சல்லிக்குரல்கள் என்றும் சகமனிதரை வசைபாடுவது அருவருப்பின் உச்சம். அதையொரு அறியப்பட்ட படைப்பாளி
செய்வதென்பதும் அதைச் சகித்துக்கொண்டு, ‘என்றாலும் அவர் நன்றாக
எழுதுகிறார்’என்று சிலர் குழைந்து பின்செல்வதும் மனச்சாட்சிக்கு விரோதமான செயலாகும். படுகொலைகளுக்கும் மனக்கொலைகளுக்கும் அப்படியொன்றும் பெரிய வித்தியாசங்கள் இல்லை.

ஆக, இவரது பெண்வெறுப்பு தமிழகத்தையும் தாண்டி அகில இந்தியாவெங்ஙணும் விரிந்துபரந்துசெல்கிறது. அண்மையில், எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களால், ஆனந்த விகடனில், ‘நம்பிக்கை நட்சத்திரங்கள்’என்று சுட்டப்பட்ட படைப்பாளிகளது பட்டியலைக் குறித்து ஜெயமோகன் கீழ்க்கண்டவாறு தன் “மேலான“ கருத்தினை வெளிப்படுத்தியிருக்கிறார். “பட்டியலில் உள்ள ஆண்படைப்பாளிகளில் அனைவரும் சிறப்பாக எழுதக்கூடியவர்கள்தான். இன்னும் அதிகமாக அவர்களிடம் எதிர்பார்க்கிறேன். ஆனால், பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பலவகை உத்திகள் மூலம் ஊடகப்பிம்பங்களாக ஆனவர்கள். பலரை ஏன் எழுத்தாளர்கள் அல்லது கவிஞர்கள் என்று சொல்கிறார் நாஞ்சில் என்றே புரியவில்லை.

இது ஒரு முக்கியமான அம்சம். இன்று ஆண்கள் எழுதித்தான் நிற்கவேண்டியிருக்கிறது. பெண்களுக்கு பெண்களாக தங்களை முன்வைத்தாலே இடம் கிடைத்துவிடுகிறது. கொஞ்சம் பெண்ணியமும் பீரிட்டால் பெரும்பாலானவர்கள் ‘எதுக்கு வம்பு, காலங்கெட்ட காலத்திலே?’என்று ஜகாவாங்கிவிடுவார்கள்.” –‘நாஞ்சில் நாடன் பட்டியல்’(ஜூன் 09,2014)

எழுதுகிற பெண்களை இதைவிடக் கேவலப்படுத்திக் கீழிறக்க முடியாது. பெண்ணியம் பீறிடுகிறதோ இல்லையோ, ஜெயமோகனுள் படிந்து கிடந்த பெண்வெறுப்பு மேற்கண்ட வாசகங்களில் பீறிட்டுப் பாய்ந்திருக்கிறது. இது சகித்துக்கொள்ள இயலாத இழிவுபடுத்தல், அவமானம், எழுந்தமானத்தில் கருத்துரைக்கிற  அறிவீனம், பெண்களது தன்மானம்மீது விழுந்திருக்கும் ஆணாதிக்கத்தின் மிலேச்சத்தனமான அடி. பெண்களால் எழுதப்பட்ட அனைத்துப் படைப்புக்களையும் ஜெயமோகன் வாசித்துவிட்டாரா? என்ற கேள்விகளெல்லாம் ஒருபுறமிருக்கட்டும். ‘உத்திகள் மூலம் ஊடகப்பிம்பங்கள் ஆனவர்கள்’என்பதன் பொருள்தான் என்ன? உத்தி என்பது உடலைக் குறிக்கிறதா? வளைந்து நெளிந்து செய்யும் சாகசங்களையும் சமரசங்களையும் குறித்ததா? இத்தகைய
இழிவுபடுத்தலுக்கு, பாலியல் நிந்தனைக்கு பதிலடி கொடுக்கும்முகமாக
ஜெயமோகன்மீது பொதுநல அவதூறு வழக்குக்கூடத் தொடுக்க இயலும்.

சர்ச்சைகள்மூலம் என்றென்றைக்குமாகத் தனது இருப்பினை  ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும் ஜெயமோகன், வழக்கம்போல  கேள்வியும் பதிலுமாக அடுத்த பதிவில்-‘பெண்களின் எழுத்து’ (ஜூன் 11,2014)- வந்து சப்பைக்கட்டு விளக்கமொன்றை அளித்திருக்கிறார்.

“இந்த ஆண் எழுத்தாளர்களில ஒருத்தர்கூடவா முக்கியமில்லை? ஒருத்தரோட பேட்டியோ படமோ எங்கியாவது வந்திருக்கா? பலரோட முகமே இந்த ஸ்டாம்பு சைஸ் போஸ்டரிலதான வந்திருக்கு. ஏன்?”என்று தனது பாலினம் சார்ந்து ‘தர்க்க’ரீதியாகக் கேள்வியெழுப்புகிறார். ஜெயமோகன் தன்னால் வாங்கப்படும் சஞ்சிகைகளை வாசிக்கிறாரா அன்றேல் எழுதியநேரம் போக அவற்றின்மீது படுத்து உறங்கிவிடுகிறாரா என்பதை அவர்தான் தெளிவுபடுத்தவேண்டும்.

“செய்திகளை அவங்களேகூட திறமையா உருவாக்கிக்கிறாங்க” என்கிறார்.
பெண்கள்தான் எத்தகைய சூழ்ச்சிக்காரிகளாகவும் விளம்பரமோகிகளாகவும்
இருக்கிறார்கள்! நெடுந்தொடர்களில் வரும் (அபத்தமான) வில்லிகளைக்
காட்டிலும் படுபயங்கரமானவர்களாயிருக்கிறார்கள் இந்தப் பெண் படைப்பாளிகள்!

“சில பக்கங்களுக்கு பிழையில்லாமல் தமிழ் எழுதக்கூட தெரியாதவர்கள் பலர். உட்கார்ந்து பத்துப் பக்கம் தொடர்ந்து எழுதக்கூட பொறுமையற்றவர்கள்”என்கிறார். பெண் படைப்பாளிகள்மீது காழ்ப்புணர்வுகொண்டு எழுதிய குற்றச்சாட்டுக் கட்டுரையிலேயே எழுத்துப்பிழை விட்ட புத்திசாலி, பெண்படைப்பாளிகளுக்கு இலக்கண வகுப்பெடுப்பதை காலக்கொடுமையன்றி வேறென்னவெனச் சொல்வது? எழுதுகிற பக்க எண்ணிக்கையில் இல்லை இலக்கியம்; அது அதன் செறிவிலும் சாரத்திலும் அழகியலிலும் வடிவத்திலும் இருக்கிறது என்பதை காலந்தான் அவருக்குக் கற்பிக்கவேண்டும். ஆயிரம் பக்கக் குப்பைகளை எழுதி காடழித்து மழைவீழ்ச்சியைக் குறைப்பதைப் பார்க்கிலும், காலத்தால் அழியாத ஒரேயொரு கவிதையை எழுதி வரலாற்றில் நிற்பவர் மேல்.

பெண்ணியவாதிகள்மீது இவருக்கு இருக்கும் எரிச்சலை, அண்மையில் வலையேற்றிய தன்னிலை விளக்கக் கட்டுரையிலும் வெளிப்படுத்துகிறார்.

“இந்தப் பெண்களில் பலர் எழுதும் அசட்டுப் பெண்ணியப்படைப்புகளை
பெண்ணியமென்பதற்காக அங்கீகரிக்க வேண்டுமென்றால், இதேபோல மாக்ஸியம், சூழியல் என எதையாவது வைத்து எழுதப்படும் எல்லாப் பிரச்சாரக் குப்பைகளையும் அங்கீகரிக்கவேண்டியதுதானே?”என்கிறார்.

பெண்ணெழுத்தையும் சேர்த்து ஆணே எழுதிக்கொண்டிருக்க அனுமதியாது அலையலையாக எழுதக் கிளம்பியிருக்கும் பெண்களைக் குறித்த ஆற்றாமையாகவும் பதட்டமுமாகவே ஜெயமோகனின் கோபத்தைக் கொள்ளவேண்டியிருக்கிறது.

“உண்மையிலேயே இவ்விசயத்தில் விவாதிக்க நினைப்பவர்கள் தமிழில்
கிருத்திகாவுக்குப் பின் பெண்கள் எழுதிய எந்த இலக்கியப்படைப்பில் அவர்கள் முக்கியமான வாசக அனுபவத்தை அடைந்தனர் என்று எண்ணிப்பார்க்கட்டும். பெண்கள் எழுதிய எந்தப் படைப்பு சென்ற முப்பதாண்டுகாலத்தில் தமிழில் பேசப்பட்டது என்பதைக் கணக்கிடட்டும்”என்று அறைகூவல் விடுத்திருக்கிறார்.

ஆக, கடந்த முப்பதாண்டு காலத் தமிழிலக்கியம் ஆண்களால் மட்டுமே
நிறைக்கப்பட்டிருக்கிறது என்ற அடிமுட்டாள்த்தனமான வாதத்தினைச்
செய்திருக்கிறார். அம்பை, சிவகாமி, பாமா போன்று தமிழில் பெண்ணியச் சிந்தனைகளுக்குத் தமது படைப்பின்வழி வித்திட்டவர்களுக்கும், விளிம்புநிலை மக்களின் வாழ்வைக் குறித்து எழுதியவர்களுக்கும் அந்த முப்பதாண்டு காலப்பகுதியில் எழுதிக்கொண்டிருந்த, எழுதிக்கொண்டிருக்கும் இதர பெண் படைப்பாளிகளுக்கும் தமிழிலக்கியச் சரித்திரத்தில் இடமில்லை என்று சொல்கிறார்

அவர்களெல்லோரும் ஆணாதிக்கத்தின் துர்க்கந்தத்தில் கற்பூரம்போல கரைந்து போயிருக்கிறார்கள். இவ்வாறு தொடர்ந்து சொல்லிவருவதன் மூலமாக, இலக்கியத்தில் பெண்களுக்குப் பங்கில்லை, அவர்கள் தொடர்ந்தும் அடையாளமற்றவர்களாகவே நீடித்திருக்கிறார்கள் என்ற வாசக மனப்பிம்பத்தைக் கட்டியெழுப்ப  ஜெயமோகன் பெரிதும் முயன்றிருக்கிறார். தமிழிலக்கிய வரலாற்றின் பாதையில், கண்களில் பட்டை கட்டப்பட்ட குதிரையின்மீதேறி ஆண் சார்புச் சாட்டையோடு விரைந்து வந்துகொண்டிருப்பது ஜெயமோகனாகவன்றி வேறு எவராக இருக்கவியலும்?

நாஞ்சில் நாடனது சர்ச்சையைக் கிளப்பிய பட்டியலில் இடம்பெற்றிருந்த ‘வகை மாதிரி’களில் ஒருவராகவே இந்தக் கண்டனக் கூட்டறிக்கையில் ஜெயமோகன் மையமாக வைக்கப்பட்டிருக்கிறார். ஆனால், தமிழிலக்கியச் சூழலிலும் இணையவெளியிலும் ஆணாதிக்கவாதிகளும் கலாச்சாரச் சாட்டையேந்திய காவலர்களும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள் என்பதற்குப் பல உதாரணங்களைக் காட்டமுடியும்.மாற்று அரசியற் கருத்துக்களை முன்வைக்கும் பெண்களது ஒழுக்கங் குறித்து கேள்வியெழுப்புவதன் மூலமும், அவர்களைக் குறித்து அவதூறுகளைப் பரப்புவதன்மூலமும், பாலியல்ரீதியான வக்கிரச் சொல்லாடல்கள் மூலமும் பெண்களைப் பின்னடிக்கச்செய்வதே அவர்களது அரசியல் விவாதமாக இருந்துவருகிறது. தனிமனிதத் தாக்குதல்களில் பதிப்பாளர்களோ (சிலர்) அன்றேல் இலக்கியவாதிகளோ (சிலர்) சளைத்தவர்களல்ல என்பதைக் கண்கூடாகக் கண்டுவருகிறோம். அவர்களிற் சிலர் குழுவாகச் சேர்ந்துகொண்டு
பெண்களுக்கெதிரான தங்களது எள்ளல்களை, இழிவுபடுத்தல்களை, அவதுாறுகளை ‘நிறுவனமய’ப்படுத்தி வருகிறார்கள். இக்கூட்டறிக்கையின் கனதி மற்றும் விரிவஞ்சி அவர்களது பெயர்களை விலக்கியிருக்கிறோம்.
இனிவருங்காலத்தில் அத்தகையோரின் நிலைப்பாடுகள் குறித்து தொடர் உரையாடல்களை நிகழ்த்தவுள்ளோம். ஆக மொத்தத்தில், ஜெயமோகனால் ‘கண்டுபிடிக்கப்பட்ட’ வார்த்தையொன்றில் சொல்வதானால், இணையம் ஒரு விரிந்த ‘வசைவெளி’யாக மாறிவருகிறது. துரதிர்ஷ்டவசமாக அந்த வார்த்தையைக் கண்டுபிடித்தவரே அதனைப்  பிரயோகிப்பவருமாயிருக்கிறார். இலக்கியத்தில் அறம் என்றும், அழகியல் என்றும், உள்ளொளி என்றும் சொற்களை வைத்து சிலம்பாட்டம் ஆடினால் மட்டும் போதாது; சகவுயிரை மதித்தலே மனித விழுமியங்களில் முதன்மையானதாகும் என்பதை முதலில் ஜெயமோகன் உணர்ந்துகொள்ளவேண்டும்.

இந்த ஆணாதிக்க சமூகத்தில் குடும்பம் என்ற பாரபட்சங்கள் நிறைந்த
அமைப்பினுள் இருந்தபடி எழுதுவதென்பது எத்தனை சிரமத்திற்குரியது என்பதை, அறிவின்பாற்பட்டுச் சிந்திக்கும் அனைவரும் அறிவர். எனினும், அதற்காக பெண்கள் தங்கள் எழுத்தின்மீது மென்சாய்வு காட்டுங்கள் என்று கோரவில்லை; விமர்சனங்களில் கருணைகூர்ந்திடுங்கள் என்று கையேந்தி நிற்கவில்லை. இத்தகைய அவதூறுகளை, இழிவுபடுத்தல்களை சகவுயிரிகளாகிய எங்கள்மீது செய்யாதீர்கள் என்பதே எங்களது வேண்டுகோள். எத்தனையோ நூற்றாண்டுகளாக பெண்ணடிமைத்தனம் என்ற ஈயக்குண்டை எங்கள் கால்களில் இழுத்தபடி நகரமுடியாமல் நகர்ந்துகொண்டிருக்கிறோம். இந்நிலையில், படைப்பாளிகள் என்ற முகமூடியை அணிந்தபடி உங்கள் பிற்போக்குவாத எச்சிலை இங்கு வந்து கொட்டாதீர்கள் என்றே நாங்கள் சொல்கிறோம். உங்களைக் குறித்த மிகைபிம்பங்களைக் கட்டியெழுப்ப ஆயிரக்கணக்கிலான வழிகளுண்டு. அவற்றையெல்லாம் விடுத்து, உங்கள் ஆணாதிக்க ‘அறிவாயுதங்களை’ எங்கள்மீது கூர்தீட்டிப் பார்க்க முற்படாதீர்கள்.

ஜெயமோகனது மேட்டிமைத்தனத்திலிருந்து முகிழ்த்தெழும் அபவாதங்களைத் தட்டிக்கேட்கும் பொறுப்பு, பெண்களைப்போலவே சக ஆண் எழுத்தாளர்களுக்கும் உண்டு. எனினும், அவர்களிற் பலர் அதைக் கண்டுகொள்ளாததுபோலவே கடந்துசெல்கிறார்கள். அல்லது, அவரது நிலைப்பாட்டினையே அவர்களும் கொண்டிருந்து அவரது வார்த்தைகளில் உள்ளுக்குள் மகிழ்கிறார்கள். ஒவ்வொரு படைப்பாளியும் தத்தம் மனச்சாட்சியைக் கேள்வி கேட்கவேண்டிய நேரமிது. சக எழுத்தாளர், நண்பர், முன்னுரை எழுதித் தருகிறவர், விருதுகளுக்குப் பரிந்துரைத்தவர், பரிந்துரைக்கவிருக்கிறவர் என்ற சமரசங்களையெல்லாம் பின்தள்ளி மனச்சாட்சியின் குரலுக்கு செவிமடுத்து எழுபவரே மனிதர்! அவரே
உண்மையான படைப்பாளி!

தன் இருப்பின் மூலவேர் ஆட்டங்கண்டுவிடுமோ என அஞ்சி எல்லோரையும்
சந்தேகிக்கும், தன் வீரத்தை அடிக்கடி பறையறைவித்துக்கொள்ளும், பாதுகாப்பு வளைத்தை இறுக்கமாக்கும் சர்வாதிகாரியின் சஞ்சல மனநிலையையே ஜெயமோகன் தற்போது கொண்டிருக்கிறாரோ என ஐயுறுகிறோம். நூற்றாண்டுகளாக ஆணாதிக்கம் என்ற சகதியினுள்ளிருந்து வெளிவரப் போராடிக்கொண்டிருக்கும் பெண்களுக்கு எதிரான ஜெயமோகனின் காழ்ப்புணர்வுச் சாடல்களுக்கு எதிராக, இந்த அறிக்கையினூடாக எமது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்ஙனம்
அம்பை, குட்டிரேவதி, சுகிர்தராணி, தமயந்தி, கவிதா முரளிதரன், சே.பிருந்தா, அ.வெண்ணிலா, சல்மா, பெருந்தேவி, தமிழச்சி தங்கபாண்டியன், மோனிகா, ஜீவசுந்தரி பாலன், உமா சக்தி, தர்மினி,  கவிதா சொர்ணவல்லி, வினோதினி சச்சிதானந்தம், கவின்மலர், மயு மனோ, சக்தி ஜோதி, தமிழ்நதி, லிவிங் ஸ்மைல் வித்யா, ஸ்வாதி ச.முகில், ஆர்த்தி வேந்தன், நறுமுகைதேவி, முபீன் சாதிகா, பாரதி செல்வா, ரமா இன்பா சுப்ரமணியம், ஷஹிதா, கொற்றவை, பரமேஸ்வரி, சபிதா இப்ராஹிம், ச.விஜயலட்சுமி, உமா மோகன், ஹேமாவதி, பிரசாந்தி சேகரம், நாச்சிமகள் சுகந்தி, ஜீவசுந்தரி பாலன், பத்மஜா நாராயணன், கீதா இளங்கோவன், பாலபாரதி, சி.புஷ்பராணி, பானுபாரதி, பவானி தர்மா, இளமதி, கிர்த்திகா தரன், நிலவுமொழி செந்தாமரை, சு.தமிழ்ச்செல்வி, நந்தமிழ்நங்கை, கல்பனா கருணாகரன், சி.மீனா, ஜென்னி டாலி, ப்ரியம்வதா, இந்திராகாந்தி அலங்காரம்,தமிழ்ப்பெண் விலாசினி, கு.உமாதேவி, தேனம்மை லஷ்மணன், அப்துல் ஹக். லறீனா, கீதா நாராயணன், ஃபாயிஸா அலி, பெண்ணியம் இணையத்தளக் குழு (தில்லை, கேஷாயணி, சுகந்தி,வெரோனிக்கா, சரவணன்), லதா சரவணன், ஜீவலக்ஷ்மி, ஷில்பா சார்லஸ், அகல்யா பிரான்ஸிஸ், ராஜ் சுகா, சசிகலா பாபு, சுபாஷினி திருமலை, நிவேதா உதயன், கோதை, சாந்தி, பிறேமா, நிலா லோகநாதன், மீசா. காதம்பரி, பரிமளா பஞ்சு, தமிழரசி, சக்தி செல்வி , சந்திரா ரவீந்திரன், கிரிஜா ராகவன், சுபா தேசிகன், தமிழ் அரசி, ரேவா, ஹன்சா, சுஜாதா செல்வராஜ், அமுதா தமிழ்

ஆண் எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள்:

இளவேனில், கீழ்.கா. அன்புச்செல்வன், கி. நடராசன், முரளிகிருஷ்ணன் சின்னதுரை, வசுமித்ர, இராதெ. முத்து, நிழலி, பவுத்த அய்யனார், யோ. திருவள்ளுவர், ஆழி செந்தில்நாதன், ஆர். விஜயசங்கர், அண்ணாமலை சுந்தரமூர்த்தி, சுரேஷ் காதான், ஷாஜஹான், நந்தன் ஸ்ரீதரன், வாசு முருகவேல், ரிஷி அன்பு, சு. அகரமுதல்வன், விஜய் கே.சக்கரவர்த்தி

தேவேந்திர பூபதி, அய்யப்பன், ஜீவ கரிகாலன், புதிய பரிதி, மைக்கேல் அமல்ராஜ், ஜோஸ் அண்டன், மனோன்மணி புது எழுத்து, பெரியசாமி நடராஜன், எம்ஜிபிடிசிஏ ஜானி, அகநாழிகை பொன். வாசுதேவன், ரத்தன் ரகு, சயந்தன் கதிர் (எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், செயற்பாட்டாளர்கள்)

http://saavinudhadugal.blogspot.in/2014/06/blog-post.html

இதன் தொடர்ச்சியாக ஜெயமோகன் அவர்கள் மற்றுமொரு பதிவை தனது வலையில் பதிவிட்டிருக்கிறார்.

பெண்களின் எழுத்து பற்றிய என்னுடைய விரிவான கருத்துக்களுக்குப் பதிலாக பெண் எழுத்தாளர்கள் என சிலர் எழுதிய கூட்டறிக்கை ஒன்றை வாசித்தேன்.அவர்களில் நாலைந்துபேரை மட்டுமே நான் கேள்விப்பட்டிருக்கிறேன், அவர்கள் பெரிதாக ஏதும் எழுதவில்லை என்பது என் எண்ணம். கேள்விப்படாதவர்கள் இவர்களை விட சிறப்பாக எழுதியிருப்பார்கள் என நம்பலாமா என யோசிக்கிறேன்.

வருத்தம் அளித்த அறிக்கை இது. இதில் உள்ள வசைகள், அவதூறுகள், திரிபுகளுக்காக அல்ல. அவற்றை நான் புதியதாகச் சந்திக்கவில்லை. என் படைப்புகளை, கட்டுரைகளை வாசித்தவர்களிடமே நான் பேசவிரும்புகிறேன். அவர்களுக்கு என் கருத்துக்களின் வரலாற்று நோக்கும், என் படைப்புகளில் உள்ள உணர்வுநிலையும் தெரிந்திருக்கும். பிறருக்கும் எனக்கும் தொடர்பே இல்லை.

என் வருத்தம் இதை ஒரு பதிலாக உட்கார்ந்து எழுதிய எவரும் நான் எழுதிய எவற்றையும் வாசித்திருக்கவில்லை என்பதற்கான எழுத்துவடிவ ஆதாரம் இவ்வறிக்கை என்பதனால். இவர்களின் இலக்கியரசனைக்கும், விவாதங்களை எதிர்கொள்ளும் தரத்துக்கும் இதைவிடப்பெரிய சான்று ஏதுமில்லை என்பதனால்.இத்தனைபேர் கூடியும்கூட இந்த தரத்துக்குமேல் ஓர் அறிக்கையை இவர்களால் எழுதமுடியவில்லையே என்பதனால்.

சமகால இலக்கியத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு படைப்பாளியைப்பற்றி ஓர் அடிப்படைப்புரிதல்கூட இல்லாமல் காழ்ப்பரசியல்சார்ந்த அபத்தமானஅக்கப்போர்களில் இருந்து திரட்டிக்கொண்ட வெறும் வசையை மட்டுமே முன்வைக்கக்கூடிய இத்தகைய ஓர் எதிர்வினையை உண்மையில் நான் எதிர்பார்க்கவில்லை.

இவர்களைப்பற்றி நான் சொன்னவற்றுக்கு இந்த ஒரே அறிக்கை மட்டுமே சான்று. ஆகவே இது வரலாற்றில் நிற்கவேண்டும் என்று எண்ணுகிறேன். ஆகவே இதை இங்கே பதிவுசெய்கிறேன். இன்று என் வாழ்க்கையின் மிகப்பெரிய உலகியல் கனவு என்பது என் மகள் ஓர் எழுத்தாளராக ஆகவேண்டும் என்பதே. ஆனால் இத்தகைய ஓர் அறிக்கையில் கையெழுத்திடும் ஓர் எழுத்தாளராக அவள் ஆனால் அதைவிட பெரிய வீழ்ச்சியாக எதையும் எண்ணமாட்டேன். எழுத்தாளர் என்பவர் எந்த ஒரு எதிர்வினையையும் அறிவுத்தளத்தில்தான் நிகழ்த்தவேண்டும். இத்தகைய எதிர்வினையை நான் குழாயடிகளில் தான் கண்டிருக்கிறேன்.

மீண்டும் என் வருத்தத்தை தெரிவிக்கிறேன். இந்தப்பெண்களை எழுத்தாளர்கள் .அறிவுஜீவிகள் என நம்பி இலக்கிய விமர்சனத்தை முன்வைத்தமைக்காக. மிக எளிய இந்த மனங்களைப் புண்படுத்தும் எண்ணம் என்னிடம் இல்லை. ஒரு தருணத்திலும் நான் எழுத்தாளர்கள் அல்லாத எவரையும் கடுமையாக விமர்சனம் செய்ததில்லை. இதில் கையெழுத்திட்ட அனைவரிடமும் அவர்களைப்புண்படுத்தியமைக்காக மன்னிப்பு கோருகிறேன். அமைதிகொள்ளுங்கள் நண்பர்களே, நீங்கள் வாழும் அந்தச் சில்லறைஉலகில் நான் இல்லை

இதை ஏதேனும் பெண் எழுத்தாளர்கள் வாசிப்பார்கள் என்றால் ஒன்றுமட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இலக்கியம் என்பது இத்தகைய நாலாந்தர அரசியல் வசைநடவடிக்கை மூலம். கும்பல்கூடி கூச்சலிடுவதன்மூலம் செய்யப்படுவதல்ல. அது அர்ப்பணிப்பின், தவத்தின் விளைவாக நிகழ்வது. அதை அளிக்கும் ஒருவர் இத்தகைய ஓர் அவதூறு- வசை அறிக்கையில் கையெழுத்திடும் கீழ்மை நோக்கிச் செல்லமாட்டார். தனித்து நிற்கும் குரலையே நாம் இலக்கியவாதியின் குரல் என்கிறோம்.

http://www.jeyamohan.in/?p=56732

நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.