Rise of the Planet of the Apes

2011 ஆம் ஆண்டு Rupert Wyatt இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம். நடிப்பு James Franco. இவர்தான் சமீபத்தில் வெளிவந்த Interview மற்றும் 127 Hours திரைப்படங்களில் நடித்தவர். நாயகி Freida Pinto. இவர் இந்தியப் பெண் . Slumdog Millionaire படத்தில் நடித்த அதே பெண்.

கதைப்படி வில் ரோட்மென் ஒரு ஆய்வாளர். அல்சமீர் ( Alzheimer) போன்ற மறதி நோய்களுக்கான‌ மருந்தினைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு ALZ-112 என்னும் மருந்தைக் கண்டறிகிறார். பின்னர் அதனை சோதனைக்காக ஒரு சிம்பன்சியின் மீது செலுத்தி அதன் விளைவுகளைப் பரிசோதிக்கிறார். அப்படி செலுத்தப்பட்ட சிம்பன்சி மிகவும் புத்திசாலித்தனமாக மாறுகிறது, அத்தோடு அதன் கண்களும் பச்சை நிறமாக மாறுகிறது. அதனைத் தொடர்ந்து அந்த திட்டத்தின் முதலீட்டாளர்களிடம் இதனை விளக்குகிறார் வில்லின் முதலாளி Steven Jacobs. அப்போது திடீரென்று வெறி கொள்ளும் அந்த சிம்பன்சி அங்கிருக்கும் அனைவரையும் தாக்கிவிட்டு முதலீட்டாளர்கள் கூட்டம் நடைபெறும் இடத்திற்கும் வந்து அனைவரையும் தாக்க ஆரம்பித்து விடுகிறது. அதனால் பாதுகாவலர்கள் அதனை கொன்று விடுகின்றனர். இதனால் முதலீட்டாளர்கள் விரக்தியடைய இத்திட்டத்தை கைவிடுவதாகவும், அனைத்து சிம்பன்சிகளையும் வலிக்காமல் கொன்று விடும்படி சிம்பன்சிகளைப் பாதுகாக்கும் Robert Franklin னிடம் கூறுகிறார் முதலாளி Steven Jacobs. வில் எவ்வளவோ கேட்டும் ஆய்வைத்தொடர மறுத்துவிடுகிறார் Jacobs. அதனைத் தொடர்ந்து சிம்பன்சிகளைக் கொல்லச் செல்லும்பொழுது தற்பொழுது இறந்த சிம்பன்சி சற்று முன்னர் ஒரு குட்டியை பிரசவிப்பதை கண்டுகொள்ளும் Robert Franklin அதுவே அச்சிம்பன்சியின் வெறிச்செயலுக்கு காரணம் என கூறுகிறார். மேலும் அந்தக் குட்டியை மட்டும் கொல்லாமல் வில்லிடம் கொடுத்து பாதுகாக்கும்படிக் கூறுகிறார் . தன்னுடன் எடுத்துச் செல்கிறான் வில்.

மறதி நோயால் அவதிப்பட்டு வரும் தன் தந்தையிடம் இதனைத் தெரிவிக்க அவர் அந்த சிம்பன்சிக்கு சீசர் எனப் பெயரிடுகிறார். தன் தாய்க்கு செலுத்தப்பட்ட மருந்தின் விளைவாக மிகவும் புத்திசாலியாக வளர்கிறான் சீசர். இந்நிலையில் தன் தந்தையின் மறதி நோய் அதிகமாகிவிட தான் கண்டுபிடித்த மருந்தை தன் தந்தைக்கு செலுத்துகிறான் வில். அதன் விளைவாக அவர் மிகவும் ஆரோக்கியமடைகிறார். இதற்கிடையில் தன் பிறப்பின் ரகசியத்தை அறிந்துகொள்கிறான் சீசர். சில ஆண்டுகள் கழித்து அந்த நோய் மீண்டும் தந்தையை மிக மோசமாகத் தாக்குகிறது. அது அந்த மருந்தின் எதிர்விளைவென கண்டுகொள்கிறான் வில். இந்நிலையில் மறதியினால் வேறொருவருடைய காரை எடுக்கும் தந்தையை அந்தக் காரின் ஓனர் தாக்க அதனைக் காணும் சீசர் மூர்க்கத்தனமாக அவரைத் தாக்குகிறான். அதனால் சீசர் கைது செய்யப்பட்டு சிம்பன்சிகளைப் பராமரிக்கும் மையத்திற்கு அனுப்பப்படுகிறான். அங்கு கொடுமைக்கு ஆளாகும் சீசர் அங்கு உள்ள மற்ற சிம்பன்சிகளும் அத்தகைய கொடுமைகளுக்கு ஆளாவதைக் காண்கிறான்.

இந்நிலையில் மீண்டும் தன் ஆய்வைத் தொடங்க அனுமதிக்க வேண்டும் எனவும் தான் ஏற்கனவே கண்டுபிடித்த மருந்தினை மேலும் மேம்படுத்த வேண்டும் எனவும் கேட்கிறான் வில். தன் தந்தைக்கு செலுத்தி அவர் குணமாகி மீண்டும் நோய்வாய்ப்பட்டதையும் கூறுகிறான். அதனைத் தொடர்ந்து Jacobs ஆய்வைத் தொடர‌ அனுமதிக்கிறார். ஆய்வின் முடிவில் ALZ-112 ஐ விட‌ வீரியம் மிக்க ALZ-113 எனும் மருந்தினைக் கண்டுபிடிக்கிறான் வில். அதனை சோதிப்பதற்காக ஒரு சிம்பனிசியின் மீது செலுத்தும்போது எதிர்பாரதவிதமாக சிம்பன்சிக்காப்பாளரான Robert Franklin அம்மருந்தை சுவாசித்து விடுகிறார். பின்னர் அந்த சிம்பன்சிக்கும் அந்த மருந்து செலுத்தப்படுகிறது. எந்தப் புதிய‌ மாற்றத்தையும் சிம்பன்சியிடம் காண முடியவில்லை. ஆனால் அவன் முதலாளி Jacobs சிம்பன்சியிடம் மாற்றம் இருப்பதையும், புத்திசாலித்தனமாக நடந்து கொள்வதையும் காண்கிறான். அதனால் அம்மருந்தை அதிக அளவில் உற்பத்தி செய்ய ஆணையிடுகிறான். தான் இன்னும் சில சோதனைகள் செய்ய வேண்டியிருப்பதாகவும் அதுவரை பொறுத்திருக்குமாறும் கேட்கிறான் வில். ஆனால் Jacobs மறுத்துவிடுகிறார். அதனால் விரக்தியடையும் வில் தன் தந்தையைக் குணப்படுத்துவற்காக அம்மருந்தை செலுத்த செல்கிறான். ஆனால் அவர் மறுத்து இறக்கிறார்.

அதன் பின்னர் லஞ்சம் கொடுத்து சீசரை மீட்க முயல்கிறான். ஆனால் சீசர் வீடு திரும்ப‌ மறுத்து விடுகிறான். பின்னர் சீசர் தன் புத்திசாலித்தனத்தால் அங்கிருந்து தப்பித்து வில் வீட்டிற்கு வருகிறான். அங்கு வில் வைத்திருக்கும் ALZ-113 மருந்தினை எடுத்துக்கொண்டு தப்பித்து அதனை அனைத்து சிம்பன்சிகளும் செலுத்தி அனைத்து சிம்பன்சிகளையும் புத்திசாலியாக்குகிறான். அதனைத் தொடர்ந்து சிம்பன்சிகளைத் துன்புறுத்தியவனைக் கொன்றுவிட்டு அனைத்து சிம்பன்சிகளோடு தப்பித்து சிம்பன்சி ஆய்வகத்திற்குச் சென்று அங்கு இருக்கும் சிம்பன்சிகளையும் தப்பிக்க வைத்து அத்தோடு சான் பிரான்சிஸ்கோ மிருகக்காட்சி சாலையில் உள்ள சிம்பன்சிகளையும் விடுவித்து அருகில் உள்ள காட்டுக்கு செல்கின்றான். இதற்கிடையில் ராணுவமும் தாக்குதலுக்கு வந்துவிட அவர்களை வென்று செல்கிறது புத்திசாலியான சிம்பன்சிக் கூட்டம். சண்டை முடிவடையும் தருணத்தில் சீசரைக் காண்கிறான் வில். தன்னோடு தம் வீட்டிற்கு வந்து விடும்படி அழைக்கிறான். அதற்கு சீசர் ‘இதுதான் என் வீடு’ எனக்கூறி மறுத்து விடுகிறான். மறுபக்கம் சிம்பன்சிக்காப்பாளருக்கு மருந்தை சுவாசித்ததன் வாயிலாக ஒரு நோய் பரவுகிறது. அதனைத் தெரிவிக்க அவர் வில் வீட்டிற்கு வரும்பொழுது அது வேறொருவருக்குப் பரவுகிறது. பின்னர் Robert Franklin இறந்துவிடுகிறார். பின்னர் அந்த வேறோருவர் மூலமாக உலகம் முழுவதும் அந்நோய் பரவுவதாக படம் நிறைவு பெறுகிறது.
ஆகச்சிறந்த படம் என்றெல்லாம் கிடையாது என்றாலும் சிறந்த திரைக்கதை. எந்த ஒரு கதைப்பகுதியும் மிகச்சரியாக திரைப்படத்தோடு பொருந்தியிருக்கிறது. முக்கியமான விஷயம் சீசர். அத்தனை இயல்பான நடிப்பு. இது மோசன் கேப்சரிங் பற்றி அறியாத ஒருவருக்கு முற்றிலும் ஒரு சிம்பன்சியையே நடிக்க வைத்திருப்பது போலவே தோன்றும். மோசன் கேப்சரிங் மூலம் அசைவுகள் வரையப்பட்டு பின்னர் வீடியோவாக ஆக்கப்பட்டிருக்கிறது. சீசராக நடித்திருப்பவர் Andy Serkis. இது தொடர்பாக அவருடைய சில பேட்டிகளைப் பார்த்த பொழுது ஒரு சிறிய அசைவுக்காக எத்தனை மெனக்கெடுகிறார்கள் எனப் புரிந்தது. அதற்காகவே சிம்பன்சி போலவே நடைபழகி, கையில் நீளமான தடி ஒன்றினைப் பொறுத்தி சிம்பன்சி போலவே பக்கவாட்டிலேயே நடந்து பழகி மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். இவர்தான் The Hobbit: An Unexpected Journey, The Adventures of Tintin படங்களிலும் அனிமேசன் கதாபத்திரங்களில் நடித்தவர்.
இவர் சொந்தமாக The Imaginarium Studios என்ற ஒரு அனிமேசன் நிறுவனத்தை நடத்தி வருகிறார். மற்றோர் புறம் மனித லாப நோக்கங்களுக்காக மிருகங்களும் மற்ற உயிரினங்களும் எவ்வாறெல்லாம் துன்புறுத்தப்படுகின்றன என்ற கோணத்திலும் கச்சிதமான ஒர் ஆக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.