Month: May 2015

வாசிப்பு

ஒட்டு மொத்த மனித குலத்திலேயே அதனை முன்னெடுத்து செல்பவர்கள் இரண்டு விழுக்காடு மட்டுமே, மற்றவர்களெல்லாம் அவர்கள் கண்டறிவதை தலைமுறை தலைமுறையாகக் கடத்துபவர்கள் மட்டுமே என்று ஒருமுறை ஜெயமோகன் கூறியிருந்தார். அதனை நான் பல நாட்கள் நினைத்துக் கொண்டே இருந்திருக்கிறேன். அது சரிதான். தன்னள‌வில் செய்யும் ஒழுங்கீனங்களுக்கு விளக்கம் கொடுத்தே பழக்கப்படும் ஒருவர் எந்த ஒரு தருணத்திலும் அந்த இரண்டு விழுக்காட்டிற்குள் வரமாட்டார் என்று பல முறை நிதர்சனத்திலேயே உணர்ந்திருக்கிறேன்.

நாம் ஒவ்வொருவரும் நம் சமூகம், சுற்றம், பெற்றோர் போன்ற பல்வேறு பட்ட நபர்களின் கருத்துக்களாகவே இருக்கிறோம். நாம் கேட்டது, அறிந்தது, நமக்கு கற்பிக்கப்பட்டது என அறிந்தவற்றின் அடிப்படையில் நாம் ஓர் அடிப்படைக் கட்டுமானத்தை நம‌க்குள் உருவாக்கி நிலை நிறுத்திக்கொள்கிறோம். அக்கட்டுமானம் உடைபட நாம் என்றுமே விரும்புவதில்லை. அதனைக் காக்கவே ஆதாரங்களைத் திரட்டுகிறோம். ஆனால் ஒரு நல்ல வாசிப்பு என்பது ஒரு தருணத்தில் அதுவரை நாம் தேக்கி உருவாக்கிய‌ அந்த அடிப்படையை அசைக்கிறது. தூள்தூளாக்குகிறது. ஆனால் மீண்டும் நாம் அந்த கட்டுமானத்தைக் கட்டுகிறோம் தர்க்க பூர்வமாக, இன்னும் வலுவாக. ஆனால் இந்தக் கட்டுமானம் எப்பொழுதும் தன்னை மாற்றிக்கொள்ளத் தயாராகவே இருக்கும்.

ஆனால் உண்மையில் நாம் எளிதாக அவ்வடிப்படைக்கட்டுமானத்தை விட தயாராக இருக்கிறோமா? இல்லை. நான் பலமுறை பல நபர்களிடம் வாசியுங்கள், ஏதாவது வாசியுங்கள் அது உங்களை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் என்று வலியுறுத்தியிருக்கிறேன். செய்தித்தாள் மட்டுமே வாசித்து அதிலுள்ள தகவலை மட்டுமே விவாதிப்பவர்களிடம் ஏதாவது புத்தகங்களை வாசிக்கலாமே என்று சொல்வேன். ஏதாவது பதில் சொல்வார்கள், அல்லது கடந்த காலங்களில் நாங்கள் அப்படிப் படிப்போம், இப்படிப் படிப்போம் என்பார்கள். அல்லது நமக்குத் தெரிந்திருக்காத ஏதாவது புத்தகத்தைப் பற்றியோ, எழுத்தாளரைப்பற்றியோ அரைகுறையாகப் பேசுவார்கள். நாம் தெரியாது என ஒப்புக்கொண்டுவிடுவதே அவ்விவாதத்தைக் குறைக்கும் வழி, நாம் ஏதாவது சொன்னால் அவர்கள் அதற்கு வேறு ஒரு உதாரணம் சொல்லுவார்கள். அது முற்றிலும் வெட்டியான பேச்சாக இருக்கும், சொல்ல வேண்டும் என்பதற்காக ஏதேதோ சொல்கிறார்கள் என்பதனை அந்தப் பேச்சின் ஆரம்பத்திலேயே உணர்ந்து கொள்ளலாம்.

அது போல் பேசுபவர்கள் குறிப்பிடும் நூலையோ, படத்தையோ,எழுத்தாளரையோ நான் உடனே படித்துவிடுவதை வழக்கமாக்கி வைத்திருக்கிறேன். இதுவும் வாசிப்பின் வழியாக எனக்குக் கிடைத்ததே. நண்பர்களே எந்த ஒரு சமூகம் அதிகமாக வாசிக்கிறதோ அந்த சமூகமே முன்னகர்கிறது. மற்ற சமூகங்கள் அதனைப் பின்தொடர மட்டுமே செய்கின்றன. இதுவே கடந்த 2000 ஆண்டுகால வரலாறு. அந்த வாசிப்பின் நீட்சியில் பிழைகளும் இருக்கலாம். அதனைக் களைந்துவிட்டு மீண்டும் மீண்டும் வாசிக்கும் போது அது ஆகச்சிறந்த சிந்தனைகளை அச்சமூகத்தில் விதைக்கிறது. சமூகம் முன்னகர்கிறது. வாசியுங்கள் நண்பர்களே! வாசியுங்கள்!

சமையல்கட்டும் கிச்சனும்

கிச்சன் என்ற சொல் சமைய‌ல்கட்டு என்ற சொல்லிருந்து எவ்வளவு தூரம் வேறுபடுகிறது? என்னால் என்றுமே கிச்சனை அத்தனை அந்நியோன்யமாக உணர முடிந்ததே இல்லை. அது முற்றிலும் நிற்பதற்கான இடம் மட்டுமே. சமைப்பதற்கான இடம் மட்டுமே. அங்கு வேறு எதுவும் செய்ய முடியாது. அங்கே தரையில் உட்கார்வதற்கு வழியே இல்லை. மிகக்குறுகலான இட வசதி கொண்டதாக இருக்கும். நகரங்களின் இடவசதிப்பற்றாக்குறையில் அதற்கு ஆகக்குறைந்த அள‌விற்கே இடம் ஒதுக்கும் இன்றைய சூழ்நிலையில் வேறு வழியும் இல்லை.

ஆனால் நான் உணர்ந்த சமைய‌ல்கட்டு என்பது மிகவும் அந்நியோன்யமானது. என் அம்மாவோடும், அக்காக்களோடும் அமர்ந்து சமையல்கட்டில் பேசும் போது ஏற்படும் மகிழ்ச்சி என்பது வீட்டின் ஹாலில் அமர்ந்து பேசுவதைவிட மிக பல நூறு மடங்கு நெருக்கமானது. அம்மா சமைத்துக்கொண்டே பேசிக்கொண்டிருப்பார்கள், அக்காவும் சமையலறையிலேயே உட்கார்ந்து இருப்பார்கள். முற்றிலும் வெட்டிப்பேச்சே அங்கு மையம். அங்கு பேசப்படும் விஷயம் பலநூறு முறை முன்னர் பேசப்பட்டதாகவே இருக்கும். இருந்தாலும் ஒவ்வொரு முறையும் அது புதியதாக இருக்கும். எங்களுடைய புதிய வீட்டில் சமையல்கட்டு அமைக்கும் பொழுது அத்தனை திட்டமிட்டெல்லாம் சமையல்கட்டு அமைக்கவில்லை. ஆனாலும் இயல்பிலேயே நான் என் ஆழ்மனதில் விரும்பிய ஒரு சமையல்கட்டாகவே அது அமைந்து விட்டது. நல்ல இடவசதி. சமையல்கட்டில் இருந்து பின்புறம் செல்ல‌ கொல்லைப்புறமாக ஒரு வழி, உள்ளே டைனிங்க் ஹால் செல்ல ஒரு வழி. ஆக எப்பொழுதும் நல்ல வெளிச்சமாகவே இருக்கும்.

அத்தோடு வெளியே செல்லும் ப‌டிக்கட்டில் அமர்ந்துகொண்டு பேசுவது என்பது அத்தனை மகிழ்ச்சியானது. ஒவ்வொரு முறையும் அம்மா வெளியே செல்லும்போதும் ஏண்டா படிக்கட்டுல உட்கார்ர‌? அங்கிட்டு உட்கார்ந்தா என்ன என்று சொல்லிக்கொண்டே செல்வதும் வருவதுமாக இருப்பார்கள். பாட்டி வெளியே உள்ள திண்ணையில் அமர்ந்துகொண்டு ஏதாவது அரைத்துக் கொண்டோ, பாத்திரம் கழுவிக்கொண்டோ இருப்பார்கள். அதனால் உள்ளிருந்து வெளியிலேயும், வெளியிலிருந்து உள்ளேயும் ஏதாவது போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருக்கும். இதற்கிடையில் அம்மா சமைக்க எடுக்கும் ஒவ்வொரு பொருளிலும் ஏதாவது தின்னும் பொருளிருந்தால் எடுத்து நீட்டுவார்கள். அதனையும் தின்று கொண்டே பேச்சைத் தொடர்வோம். விரும்பிய சமையலறை அமைவதென்பதே ஒரு வரம்தான் என்ன!

அழகானவர்கள்

சிவப்பாய் இருப்பவர்களே அழகானவர்கள், கருப்பு நிறத்தவர்கள் சற்று கீழே என கடந்த 30 ஆண்டுகளாகவே ஒருவகை மனநிலை நமக்குள் திணிக்கப்படுகிறது. இருபத்தைந்து விழுக்காடு சிவப்பு நிறத்தவர்கள்  இருந்தால் சற்றே ஆச்சரியம் அளிக்கக்கூடிய இந்த தமிழகத்தில் இந்த மனநிலை எப்படி நம‌க்குள் வந்திருக்கலாம்? ஒரு சில நண்பர்கள் இல்லை என மறுத்துப் பேசினாலும் உள்ளுக்குள் அவர்களுக்கும் அந்த எண்ணம் இருப்பதை பலமுறை அவர்களுடைய பேச்சுக்களில் உணர்ந்திருக்கிறேன். கிட்டத்தட்ட கருப்பென்றாலே அழகு குறைவு என்ற மனநிலை நம் அனைவருக்குமே. ‘கருப்பா இருந்தா என்ன?’ என்னும்பொழுதே கருப்பு கீழே சென்று விடுகிறது.

அதிலும் ப‌ல்வேறு குறுங்குழுக்கள் கொண்ட தேசம் இது. தமிழகமும் விதி விலக்கு கிடையாது. பல்வேறு பட்ட நிலப்பரப்பினைக்கொண்ட இந்த தேசத்தில் எல்லோரும் ஒரே வண்ணமாக இருக்க வாய்ப்பேயில்லை. அரசாங்கம், மற்றும் நிர்வாக ரீதியிலான காரணங்களுக்காக‌ இந்த தேசம் ஒன்றாக வடிவமைக்கப்பட்ட்ருந்தாலும் கலாச்சாரம், பழக்கவழக்கத்தில் இது ஒற்றை சமூகமாக‌ இருந்ததே கிடையாது. ஒரு இனத்தின் பழக்க வழக்கம், கலாச்சாரம் 50 கி.மீ தொலைவில் உள்ள மற்றொன்றிலிருந்து முற்றிலும் வேறாக இருந்த சமூகம் இது. அத்தோடு இங்குள்ள தட்ப வெட்பநிலையும் முற்றிலும் வேறு வேறானவை. ஆகவே ஒற்றை வண்ணம் என்பதே சாத்தியமில்லாத அமைப்பு இது. அடர் கருப்பு, வெளிர் கருப்பு, செவ்வண்ணம் என பல வண்ணமாக நீளும் மேனி உடையவர்கள் நாம்.  இப்படியிருக்க எல்லோரும் எப்படி ஒரே வண்ணத்தை நோக்கியே ஒடுகிறோம்? அதுதான் அழகு என எப்படி நம்ப வைக்கப்பட்டோம்?

இதன் அடிப்படை காரணங்கள் இரண்டு. ஒன்று நம்மை ஆண்ட வர்க்கம் சிவப்பு நிறத்தினர். கிட்டத்தட்ட இரு நூற்றாண்டுகள். இரண்டு மூன்று தலைமுறை. அவர்கள் கருப்பினத்தவர் கீழானவர்கள் என்ற எண்ணத்தை நமக்குள் விதைத்துச் சென்றனர். அதன் தொடர்ச்சியாக ந‌ம்முள் பலரே அந்த மனநிலையை எடுத்துக்கொண்டு செயல்பட, அதன் விளைவே கடந்த இரு தலைமுறைகளில் இந்த தலைகீழ் மாற்றம். இதில் உள்ள அடிப்படை என்னவெனில் ஆதிக்கம் உள்ளவர்கள் செய்வதே சரி, சொல்வதே வாக்கு என்னும் மனநிலை. அந்த ஆதிக்கம் அதிகாரத்தால் வந்ததால் இருக்கலாம், அல்லது ஆயுத பலத்தால் வந்ததால் இருக்கலாம். எதனால் அதிகாரம் ஒரு குழுவுக்கோ தனி நபருக்கோ சென்று சேருகிறது என்ற விஷயத்தில் மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கிறதே ஒழிய அதிகாரம் உள்ளவர்கள் வகுப்பதே நியதி என்பதனில் எந்த மாற்றமும் வரவில்லை. (உதாரணமாக வலிமையாக இருப்பவர்களிடம் ஆரம்பகாலங்களில் இருந்த அதிகாரம் பின்னர் அறிவை உபயோகித்து காவல்துறையை உருவாக்கிய பின்னர் அதிமேதாவிகள் எனப்படும் மக்கள் குழுவிடம் சென்று சேர்ந்தது. இப்படிப்  பல)

இந்தக் கண்ணோட்டத்தில் நமது நிறப்பிரச்சினையை அணுகினால், பிரிட்டீசாரரிடமே அதிகாரமிருந்ததால் அவர்கள் சொல்வதெல்லாம், செய்வதெல்லாம் சரி. ஆக அவர்களின் வண்ணமும் சரியானது, உயர்வானது. இந்தக் கருத்து யாரும் விவாதித்தோ நிருபித்தோ வந்த கருத்து அல்ல, இயல்பாக மனநிலையில் வேறூன்றிய கருத்து. இதில் விந்தையென்னவென்றால் ஒருவேளை அவர்களெல்லாம் கருப்பாயிருந்து நாமெல்லாம் வெள்ளையாயிருந்தால் இந்நேரம் நாம் கருப்பை உயர்த்திப்பிடித்து கொண்டிருப்போம். நமது தொலைக்காட்சிகளும் பளிச்சிடும் கருப்பிற்கான கிரீம்களை விற்றுக்கொண்டிருந்திருப்பார்கள்.

இரண்டாவது வணிகம். கடந்த முப்பதாண்டுகளில் இந்திய வணிகம் பல்வேறு மாற்ற‌ங்களை சந்தித்துவிட்டது. பெரு முதலாளிகளும் நிறுவனங்களும் ஒட்டுமொத்த இந்திய‌சந்தையை ஆக்கிரமித்து விட்டனர். அது நன்மையையும் தீமையையும் ஒரு சேரக் கொண்டிருப்பது அதன் அடிப்படை. உதாரணமாக பெரிய நகரங்களை மட்டுமே இலக்காகக் கொண்டிருந்த நிறுவனங்கள் சமீபத்திய 10 20 ஆண்டுகளின் தகவல் தொடர்பு பெரு மாற்றங்களின் விளைவாக சிறு நகரங்கள், கிராமங்கள் என எதையும் விட்டு வைக்கவில்லை. ஒரு ரூபாய்க்கு விற்கும் கிளீனிக் ப்ளஸ் ஷாம்பை இன்று இந்தியாவின் எந்த ஒரு பெட்டிக்கடையிலும் வாங்க முடியும். ஆனால் அதுவே ஒரு மான் மார்க் சீயக்காய் பொட்டலம் அது கிடைக்கும் மாவட்டத்தைத் தாண்டி வெளியில் கிடைப்பது அபூர்வம். அப்படிக் கிடைக்கவேண்டுமென்றால் அதனை இந்த பெரு நிறுவனங்களோடு போட்டி போட வைப்பதென்பது ஒரு சீயக்காய் வியாபாரிக்கு இயலாத காரியம்.

அத்தகைய பெரு நிறுவனங்கள் அதற்கான ஒட்டு மொத்த கட்டமைப்பை கடந்த 10,20 ஆண்டுகளூக்கு முன்னரே வடிவமைத்து விட்டார்கள். எனவே கொண்டு சேர்ப்பது என்பது அவர்களுக்கு மிக எளிதான செயல். அவர்களின் நோக்கமெல்லாம் மக்களின் மனநிலையில் மாற்றத்தைக் கொண்டுவந்து தங்களுடைய பொருட்களை வாங்க வேண்டும் என எண்ண வைப்பதே.

இதற்காக பல்வேறு உத்திகளைக் கையாள்கிறார்கள். நிறம் தொடர்பான விஷயத்தைப் பொறுத்தமட்டில் 80 விழுக்காடு கருப்பாய் இருப்பவர்கள். அவர்களே இவர்கள் இலக்கு. பல்வேறு விளம்பரங்கள் மூலமாக கருப்பு என்பதனை அழகற்றதாகக் காட்டி தங்களுடைய கிரீமை பூசும்பொழுது சிவப்பாகிவிடுவீர்கள் என்ற மாயையை தொடர்ந்து கூறி அக்கருத்தை நிலை நிறுத்தியிருக்கிறார்கள். அதற்காக இந்தியாவின் வடக்கு எல்லையில் இருக்கும் ஒரு பெண்ணைக் கொண்டு வந்து தென் கோடியில் இருக்கும் மீனவப்பெண்ணிற்கு முன்மாதிரியாகக் காட்டி அவள் தான் அழகு என்கிறார்கள். அந்த மீனவப்பெண்ணும் அதனைத் திரும்பத் திரும்பக் கேட்கும் பொழுது தான் அழகற்றவள் என்ற எண்ணத்தை அடையாமல் இருக்க முடிவதில்லை. ஏன் இவர்கள் ஒரு தமிழ் முகத்தை இவர்கள் அழகாகக் காட்டுவதில்லை? ஏனென்றால் அம்முகம் இங்கே இருக்கிறது. இல்லாத ஒன்றைக் காட்டி அவர்களை இழுக்க வேண்டும் என்பதே இவர்களின் அடிப்படை யுக்தி. அக்கருத்தை தொடர்ந்து பல்வேறு விளம்பர உத்திகளைக் கொண்டு நிறுவி ஆண்கள் மத்தியில் கூட‌ சிவப்பான பெண்ணே அழகானவள் என்று பாலியல் தொடர்பான அடிப்படை எண்ணத்தையே மாற்றி விடுகின்றனர். செவ்வண்ணம் கொண்ட பெண்களையும் அவர்கள் அழகியெனக் கூறுவதில்லை. மாசற்ற பொன்னிற சருமம் வேண்டுமா எனக் கேட்டு அவர்களையும் கிரீம்களை உபயோகப் படுத்த வைக்கின்றனர்.

சரி ஒட்டு மொத்த தமிழகத்தையுமே இவர்கள் கருப்பிலிருந்து வெள்ளையாக மாற்றிவிட்டால் ஃபேர் அண்ட் லவ்லி உட்பட அனைத்து சிவப்பு கிரீம்களையும் நிறுத்திவிடுவார்களா என்ன? இல்லவே இல்லை, அடுத்த அஸ்திரம் ஒன்றை எடுத்து அதற்கும் ஒரு கிரீம் தயார் செய்து விடுவார்கள். சரி இவர்கள் கூறும் அந்த கிரீம்கள் கருப்பிலிருந்து வெள்ளையாக மாற்றுமென்றால் இந்நேரத்திற்கு தமிழகத்தில் அனைத்து மங்கைகளுமே சிவப்பாக ஆகி இருக்க வேண்டுமே? ஏனெனில் இன்றைய நிலையில் கிரீம்கள் பூசாத இளம்பெண்கள் ஒட்டு மொத்த இந்தியாவிலும் ஆயிரம் பேர் இருந்தால் அதிசயம்.

இந்நிலை 200 ஆண்டுகால வரலாற்று நிகழ்வுகளின் விளைவு. அதனை அத்தனை விரைவாக மாற்றி விட கண்டிப்பாக முடியாதுதான். ஆனால் கருத்துப் பரிமாற்றங்கள் மூலமாகவும், விவாதங்கள் மூலமாகவும் இந்த எண்ணத்தை நாம் முன்னெடுக்கலாம். மிகச்சிறிய திருப்பமாகத் தெரிந்தாலும் கூட சில காலம் கழித்து அது இத்திருப்பம் இல்லாதிருக்கும் போது சென்றிருக்கக்கூடிய இடத்தையும் அதன் அப்போதைய‌ இடத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது அதன் மாற்றத்தை உணரலாம். நன்றி.

தேவாரம் – திருநாவுக்கரசர்

நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்;
நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;
ஏமாப்போம்; பிணி அறியோம், பணிவோம் அல்லோம்;
இன்பமே எந்நாளும், துன்பமில்லை.

 

பொருள்:

எம்பெருமான், பெம்மான், பொன்னர் மேனியன் இருக்கும் போது நாம் யாருக்கும் குடி அல்ல; அதாவது யாரும் எம்மைக் கட்டுப்படுத்தவோ, அத்து இடவோ முடியாது. நமனுக்கு அஞ்சமாட்டோம். அதாவது நமன்(யமதருமன்) எம்மிடத்து வரவே மாட்டார் என்பது இல்லை. எமன் வருவார். ஆயினும் யாம் அஞ்சமாட்டோம். எமக்கு மரணத்தைக் கண்டு அச்சமில்லை. சாகத் தயார். ஏனென்றால் எம்பெருமான், பெம்மான், பொன்னர் மேனியன் இருகின்றார்.
நரகத்தில் இடர்ப்படோம். அதாவது நரகத்திற்கு போக மாட்டோம் என்றில்லை. ஒருவேளை நரகத்திற்கே சென்றாலும் யாம் அங்கே இடர் பட மாட்டோம். ஏனெனில் சென்றவிடத்தைச் சொர்க்கமாய்ப் பாவிக்க எம் மனதிற்குத் தெரியும். ஏமாற மாட்டோம். பிணி அறியோம்.அதாவது, பிணியுற மாட்டோம் என்றில்லை, பிணியுற்றாலும், அதனால் துவண்டிட மாட்டோம். அடிபணிய மாட்டோம். எமக்கு என்றும், எப்போதும் துன்பம் என்பது கிடையாது.என்றும், எப்போதும், எந்நாளும் இன்பமே. ஏனென்றால் எம்பெருமான், பெம்மான், பொன்னர் மேனியன் இருகின்றார்.

ஆசானிடமிருந்து

இது ஏன் நிகழ்கிறது? இச்செயலை இச்சமூகம் sanction செய்கிறது. இல்லை என்றால் இவர்கள் பதறுவார்கள் இல்லையா? ஊழலை ஒழுங்கின்மையை ஒவ்வொரு கணுவிலும் அங்கீகரிக்கும் மக்களாக நாம் ஆகிவிட்டோம். அந்த மனநிலையைத்தானே அத்தனை அமைப்புகளும் செய்கின்றன

அன்ணா ஹசாரே ஊழலுக்கு எதிராகக் கிளர்ந்தபோது இங்கே கிண்டல் செய்தவர்கள் தானே அதிகம்? அவர்கள் உருவாக்கி நிலைநிறுத்தும் மனநிலை அல்லவா ஜெயலலிதாவும் கருணாநிதியும் உருவாகி நீடிக்கக் காரணம்

அந்த மனநிலைக்கு எதிரான நம்பிக்கை தளரான கருத்துப்போர்தான் ஒரெ வழி

ஜெ

ஆசானுக்கு

தனி மனித வாழ்வில் ஒழுக்கமாய் வாழும், வாழ நினைக்கும் நாமெல்லாம் வெறுமனே பார்த்துக்கொண்டே செல்லவேண்டியதுதானா? இல்லை அவர்கள் நம் பிரதிபலிப்புகளே (நீங்கள் சொன்னது) என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதானா?

ஆசானிடமிருந்து

அன்புள்ள ராஜேஷ்

இப்போது உணர்ச்சிவசப்பட்டு நீதி எங்கே என்பவர்கள் தினகரன் வழக்கோ, தா கிருஷ்ணன் கொலை வழக்கோ என்னாயிற்று என்று கேட்கமாட்டார்கள். சன் டிவி மீது வழக்குப்பதியவே ஏன் இத்தனை நாட்களாயிற்று என்று கேட்கமாட்டார்கள். இப்போது நீதி வென்றது என்பவர்கள் நாளை திமுக காரர்கள் விடுதலைசெய்யப்படும்போது நீதி தேவதை அருள்புரிந்தாள் என்பார்கள். கட்சிசார்பான உணர்ச்சிக்கொந்தளிப்புகளுக்கு உண்மையில் ஒரு பொருளும் இல்லை. அதற்கு அப்பால் சென்று யோசிப்பதே ஒரு சமநிலையை அளிக்கும் .ஆகவேதான் நான் குன்ஹா தீர்ப்பிலும் ஒன்றும் சொல்லவில்லை

இந்தியாவில் மக்கள் கவனிக்கும் எந்த ஒரு வழக்கிலும் கீழ்நீதிமன்றம் வழக்கத்தை மீறியே கடும் தண்டனை அளிக்கும். உயர்நீதிமன்றம் விடுதலைசெய்யும். எல்லா வழக்கிலும். ஒரு வழக்குகூட விதிவிலக்கு இல்லை. இந்திராகாந்தி முதல் ஜெயலலிதா வரை

ஜெ

ஆசானுக்கு

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு

இந்த‌க்கடிதத்தினை தங்களுக்கு இன்னும் சில நாட்கள் கழித்தே எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். இருப்பினும் முன்னரே எழுதினால் தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பதில் எழுதுவீர்கள் என்று நம்பியே இப்பொழுதே எழுதுகிறேன். முதலில் சந்திரசேகர் அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த வருத்தங்கள். எனக்கு அவரைப்பற்றி தெரியாது. தங்களின் மூலமே தெரியும். இருந்தாலும் சரியான தூக்கம் மிக அவசியம் என்ற ஒற்றை சொல் எனக்கு மிக முக்கியமானதாகப் பட்டது. சரியான அளவில் திட்டமிட்டு நாட்களை கடத்தும் எனக்கு கடந்த சில வாரங்களாக நான் திட்டமிட்டபடி தூக்கம் அமையவில்லை. அதனையே வழக்கமாக்கிக் கொள்ளலாம் என்ற நிலை வந்த தருணத்தில், அந்த வார்த்தை எனக்கு மிக முக்கியமான ஒன்று. ஒரு சிறிய திருப்பம். அது சிறியதே என்றாலும் சற்றே காலம் கடந்த பின்னர் இந்த விலக்கம் எத்துனை பெரிய மாற்றமாக இருக்குமென என்னால் உணரமுடிகிறது. அதற்கு நன்றி.

மற்றொன்று, நேற்று வெளியான தீர்ப்பு. நேற்று முழுவதும் சமூக வலைத்தளங்களில் இதனைப் பற்றியே பொங்கினார்கள். இருந்தாலும் இன்றைய அதிகார அடுக்கு நன்கு அறியும் இந்த ஃபேஸ்புக், ட்விட்டர் கும்பல் கடல் நுரை போல, பயங்கரமாக பொங்கும், ஆனால் ஒன்றும் இராது என. அவர்களும் இன்றும் நாளையும் இதனை வைத்து சில‌ ஒற்றை வரி கருத்துக்களை தெரிவித்து விட்டு அடுத்த செய்திக்கு போய்விடுவார்கள்.

ஆனால் என்னால் சற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதெப்படி இத்துனை விவரமாக நிருபிக்கப்பட்டும், அடுத்த தீர்ப்பில் முற்றிலுமாக இல்லையென்றாகி விட்டது? 100 லிருந்து 0. நம் தேசம் அத்தனை கீழ்த்தரமாக ஆகிவிட்டதா? அதிகாரமும் பணமும் உள்ளவர்களுக்கு சட்ட‌மென்பதே இல்லையா? அவர்கள் அதிலிருந்து விலக்கு பெற்றவர்களா? கண்டிப்பாக இந்த தீர்ப்புக்கு முன்னதாக நடைபெற்ற உள் வேலைகள் நமக்குத் தெரியாதுதான். இருந்தாலும் ஐந்து வருடத்தில் இரண்டு கோடியில் இருந்து 66 கோடியான சொத்து, எப்படி சேர்க்கப்பட்டிருக்கலாம் என்பதை சிறு குழந்தை கூட அறியுமே. என்னுடைய கேள்வியெல்லாம் நாங்கள் அப்படித்தான் தீர்ப்பு வழங்குவோம்? என்ன செய்ய முடியும் உங்களால் என்று இத்துனை வெளிப்படையாக நம் முகத்தில் காறி உமிழ்கிறார்களே? நம்மால் ஒன்றுமே செய்ய முடியாதா? என்ன செய்வது நாம்? எல்லாவற்றையும் மறந்துவிட்டு மீண்டும் ஊழல்வாதிகளுக்கே வாக்களீக்க வேண்டுமா? இது தொடர்பாக என்னால் யாரிடமும் விவாதிக்க முடியவில்லை. எல்லோரும் நேற்றைய இன்றைய செய்தித்தாள், சமூக ஊடக செய்திகளை மட்டுமே பேசுகிறார்கள். அதற்கு மேல் எதுவும் அவர்களால் பேச முடிவதில்லை. என் தேசத்தினைப் பற்றிய பெருமையே கொண்டிருந்த என் முகத்தில் இந்த தீர்ப்பு காறி உமிழ்கிறது. தங்கள் கருத்தினை அறியும் ஆர்வத்தில் இதை எழுதியிருக்கிறேன். நன்றி.

உலகத்தொழிலாளர்களே! (ஆசானிடமிருந்து)

உலகத்தொழிலாளர்களே என்ற தலைப்பில் மே தினத்தினையொட்டி ஆசான் 2011 ல் எழுதிய கட்டுரை. எத்துனை அடர்த்தியான கட்டுரை. அவர் ஆசானாக இருப்பதில் வியப்பேதுமில்லை.

நன்றி: ஜெயமோகன்
http://www.jeyamohan.in/16732#.VUbd7_mqqko

மே மாதம் ஒன்றாம் தேதி, ஒலிபரப்புவதற்காக ஒரு பண்பலை வானொலியில் இருந்து தொலைபேசிப் பேட்டி எடுத்தார்கள். ஓரிரு சொற்கள், அதில் பாட்டுகளில் ஊடாக ஒலிக்கும் என நினைக்கிறேன்! அப்போது மனதில் பட்டதைச் சொன்னாலும் அதன்பின் அச்சிந்தனைகளை தொகுத்துக் கொள்ளலாம் என்று தோன்றியது.

இன்று உழைப்பாளிகளின் நிலைமை எப்படி இருக்கிறது, மேம்பட்டிருக்கிறதா என்பதுதான் கேள்வி. எனக்கு இதற்கு ஒற்றை வரிப் பதிலாகச் சொல்லமுடியவில்லை. உழைப்பாளிகளின் இடம் என்பது சமூக அமைப்பு சார்ந்து மாறுபடக் கூடியது.

நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் உழைப்பாளி என்பவன் நிலத்தின் ஒரு பகுதி போல! நிலத்தை உரிமையாக்கி வைத்திருப்பவர், உழைப்பாளிகளையும் உரிமை கொண்டிருக்கிறார். அந்த உழைப்பாளிகள் வாழ வேண்டியது அவருக்கு தேவை என்பதனால் அவர்கள் வாழத் தேவையான உணவு, உறைவிடத்தை அளிக்கிறார். சமூகப் பாதுகாப்பையும், சமூகக் கொண்டாட்டங்களையும் கொடுக்கிறார். அவனுடைய உழைப்பை முடிந்தவரை கறந்து கொள்கிறார். அந்த உழைப்பு அவரது சொத்து.

இந்த மனநிலை நில உடைமையாளரால் மட்டும் அல்ல, உழைப்பாளிகளாலும் பகிர்ந்து கொள்ளப் பட்டது. இது விசுவாசம் என்று அவர்களால் சொல்லப் பட்டது. அவர்களுக்கு அந்த நில உடைமையாளருடன் உள்ள உறவு ரத்தஉறவு அளவுக்கே நிரந்தரமானது, உணர்ச்சிகரமானது. பல் வேறு தொன்மங்களாலும், நம்பிக்கைகளாலும் புனிதப் பட்டது அது. அதை விசுவாசம் என்ற சொல்லால் நாம் குறிப்பிடுகிறோம். வாழ்வோ, சாவோ என தன் உடைமையாளருடன் இருக்கும் மனநிலை அது. Continue reading