அழகானவர்கள்

சிவப்பாய் இருப்பவர்களே அழகானவர்கள், கருப்பு நிறத்தவர்கள் சற்று கீழே என கடந்த 30 ஆண்டுகளாகவே ஒருவகை மனநிலை நமக்குள் திணிக்கப்படுகிறது. இருபத்தைந்து விழுக்காடு சிவப்பு நிறத்தவர்கள்  இருந்தால் சற்றே ஆச்சரியம் அளிக்கக்கூடிய இந்த தமிழகத்தில் இந்த மனநிலை எப்படி நம‌க்குள் வந்திருக்கலாம்? ஒரு சில நண்பர்கள் இல்லை என மறுத்துப் பேசினாலும் உள்ளுக்குள் அவர்களுக்கும் அந்த எண்ணம் இருப்பதை பலமுறை அவர்களுடைய பேச்சுக்களில் உணர்ந்திருக்கிறேன். கிட்டத்தட்ட கருப்பென்றாலே அழகு குறைவு என்ற மனநிலை நம் அனைவருக்குமே. ‘கருப்பா இருந்தா என்ன?’ என்னும்பொழுதே கருப்பு கீழே சென்று விடுகிறது.

அதிலும் ப‌ல்வேறு குறுங்குழுக்கள் கொண்ட தேசம் இது. தமிழகமும் விதி விலக்கு கிடையாது. பல்வேறு பட்ட நிலப்பரப்பினைக்கொண்ட இந்த தேசத்தில் எல்லோரும் ஒரே வண்ணமாக இருக்க வாய்ப்பேயில்லை. அரசாங்கம், மற்றும் நிர்வாக ரீதியிலான காரணங்களுக்காக‌ இந்த தேசம் ஒன்றாக வடிவமைக்கப்பட்ட்ருந்தாலும் கலாச்சாரம், பழக்கவழக்கத்தில் இது ஒற்றை சமூகமாக‌ இருந்ததே கிடையாது. ஒரு இனத்தின் பழக்க வழக்கம், கலாச்சாரம் 50 கி.மீ தொலைவில் உள்ள மற்றொன்றிலிருந்து முற்றிலும் வேறாக இருந்த சமூகம் இது. அத்தோடு இங்குள்ள தட்ப வெட்பநிலையும் முற்றிலும் வேறு வேறானவை. ஆகவே ஒற்றை வண்ணம் என்பதே சாத்தியமில்லாத அமைப்பு இது. அடர் கருப்பு, வெளிர் கருப்பு, செவ்வண்ணம் என பல வண்ணமாக நீளும் மேனி உடையவர்கள் நாம்.  இப்படியிருக்க எல்லோரும் எப்படி ஒரே வண்ணத்தை நோக்கியே ஒடுகிறோம்? அதுதான் அழகு என எப்படி நம்ப வைக்கப்பட்டோம்?

இதன் அடிப்படை காரணங்கள் இரண்டு. ஒன்று நம்மை ஆண்ட வர்க்கம் சிவப்பு நிறத்தினர். கிட்டத்தட்ட இரு நூற்றாண்டுகள். இரண்டு மூன்று தலைமுறை. அவர்கள் கருப்பினத்தவர் கீழானவர்கள் என்ற எண்ணத்தை நமக்குள் விதைத்துச் சென்றனர். அதன் தொடர்ச்சியாக ந‌ம்முள் பலரே அந்த மனநிலையை எடுத்துக்கொண்டு செயல்பட, அதன் விளைவே கடந்த இரு தலைமுறைகளில் இந்த தலைகீழ் மாற்றம். இதில் உள்ள அடிப்படை என்னவெனில் ஆதிக்கம் உள்ளவர்கள் செய்வதே சரி, சொல்வதே வாக்கு என்னும் மனநிலை. அந்த ஆதிக்கம் அதிகாரத்தால் வந்ததால் இருக்கலாம், அல்லது ஆயுத பலத்தால் வந்ததால் இருக்கலாம். எதனால் அதிகாரம் ஒரு குழுவுக்கோ தனி நபருக்கோ சென்று சேருகிறது என்ற விஷயத்தில் மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கிறதே ஒழிய அதிகாரம் உள்ளவர்கள் வகுப்பதே நியதி என்பதனில் எந்த மாற்றமும் வரவில்லை. (உதாரணமாக வலிமையாக இருப்பவர்களிடம் ஆரம்பகாலங்களில் இருந்த அதிகாரம் பின்னர் அறிவை உபயோகித்து காவல்துறையை உருவாக்கிய பின்னர் அதிமேதாவிகள் எனப்படும் மக்கள் குழுவிடம் சென்று சேர்ந்தது. இப்படிப்  பல)

இந்தக் கண்ணோட்டத்தில் நமது நிறப்பிரச்சினையை அணுகினால், பிரிட்டீசாரரிடமே அதிகாரமிருந்ததால் அவர்கள் சொல்வதெல்லாம், செய்வதெல்லாம் சரி. ஆக அவர்களின் வண்ணமும் சரியானது, உயர்வானது. இந்தக் கருத்து யாரும் விவாதித்தோ நிருபித்தோ வந்த கருத்து அல்ல, இயல்பாக மனநிலையில் வேறூன்றிய கருத்து. இதில் விந்தையென்னவென்றால் ஒருவேளை அவர்களெல்லாம் கருப்பாயிருந்து நாமெல்லாம் வெள்ளையாயிருந்தால் இந்நேரம் நாம் கருப்பை உயர்த்திப்பிடித்து கொண்டிருப்போம். நமது தொலைக்காட்சிகளும் பளிச்சிடும் கருப்பிற்கான கிரீம்களை விற்றுக்கொண்டிருந்திருப்பார்கள்.

இரண்டாவது வணிகம். கடந்த முப்பதாண்டுகளில் இந்திய வணிகம் பல்வேறு மாற்ற‌ங்களை சந்தித்துவிட்டது. பெரு முதலாளிகளும் நிறுவனங்களும் ஒட்டுமொத்த இந்திய‌சந்தையை ஆக்கிரமித்து விட்டனர். அது நன்மையையும் தீமையையும் ஒரு சேரக் கொண்டிருப்பது அதன் அடிப்படை. உதாரணமாக பெரிய நகரங்களை மட்டுமே இலக்காகக் கொண்டிருந்த நிறுவனங்கள் சமீபத்திய 10 20 ஆண்டுகளின் தகவல் தொடர்பு பெரு மாற்றங்களின் விளைவாக சிறு நகரங்கள், கிராமங்கள் என எதையும் விட்டு வைக்கவில்லை. ஒரு ரூபாய்க்கு விற்கும் கிளீனிக் ப்ளஸ் ஷாம்பை இன்று இந்தியாவின் எந்த ஒரு பெட்டிக்கடையிலும் வாங்க முடியும். ஆனால் அதுவே ஒரு மான் மார்க் சீயக்காய் பொட்டலம் அது கிடைக்கும் மாவட்டத்தைத் தாண்டி வெளியில் கிடைப்பது அபூர்வம். அப்படிக் கிடைக்கவேண்டுமென்றால் அதனை இந்த பெரு நிறுவனங்களோடு போட்டி போட வைப்பதென்பது ஒரு சீயக்காய் வியாபாரிக்கு இயலாத காரியம்.

அத்தகைய பெரு நிறுவனங்கள் அதற்கான ஒட்டு மொத்த கட்டமைப்பை கடந்த 10,20 ஆண்டுகளூக்கு முன்னரே வடிவமைத்து விட்டார்கள். எனவே கொண்டு சேர்ப்பது என்பது அவர்களுக்கு மிக எளிதான செயல். அவர்களின் நோக்கமெல்லாம் மக்களின் மனநிலையில் மாற்றத்தைக் கொண்டுவந்து தங்களுடைய பொருட்களை வாங்க வேண்டும் என எண்ண வைப்பதே.

இதற்காக பல்வேறு உத்திகளைக் கையாள்கிறார்கள். நிறம் தொடர்பான விஷயத்தைப் பொறுத்தமட்டில் 80 விழுக்காடு கருப்பாய் இருப்பவர்கள். அவர்களே இவர்கள் இலக்கு. பல்வேறு விளம்பரங்கள் மூலமாக கருப்பு என்பதனை அழகற்றதாகக் காட்டி தங்களுடைய கிரீமை பூசும்பொழுது சிவப்பாகிவிடுவீர்கள் என்ற மாயையை தொடர்ந்து கூறி அக்கருத்தை நிலை நிறுத்தியிருக்கிறார்கள். அதற்காக இந்தியாவின் வடக்கு எல்லையில் இருக்கும் ஒரு பெண்ணைக் கொண்டு வந்து தென் கோடியில் இருக்கும் மீனவப்பெண்ணிற்கு முன்மாதிரியாகக் காட்டி அவள் தான் அழகு என்கிறார்கள். அந்த மீனவப்பெண்ணும் அதனைத் திரும்பத் திரும்பக் கேட்கும் பொழுது தான் அழகற்றவள் என்ற எண்ணத்தை அடையாமல் இருக்க முடிவதில்லை. ஏன் இவர்கள் ஒரு தமிழ் முகத்தை இவர்கள் அழகாகக் காட்டுவதில்லை? ஏனென்றால் அம்முகம் இங்கே இருக்கிறது. இல்லாத ஒன்றைக் காட்டி அவர்களை இழுக்க வேண்டும் என்பதே இவர்களின் அடிப்படை யுக்தி. அக்கருத்தை தொடர்ந்து பல்வேறு விளம்பர உத்திகளைக் கொண்டு நிறுவி ஆண்கள் மத்தியில் கூட‌ சிவப்பான பெண்ணே அழகானவள் என்று பாலியல் தொடர்பான அடிப்படை எண்ணத்தையே மாற்றி விடுகின்றனர். செவ்வண்ணம் கொண்ட பெண்களையும் அவர்கள் அழகியெனக் கூறுவதில்லை. மாசற்ற பொன்னிற சருமம் வேண்டுமா எனக் கேட்டு அவர்களையும் கிரீம்களை உபயோகப் படுத்த வைக்கின்றனர்.

சரி ஒட்டு மொத்த தமிழகத்தையுமே இவர்கள் கருப்பிலிருந்து வெள்ளையாக மாற்றிவிட்டால் ஃபேர் அண்ட் லவ்லி உட்பட அனைத்து சிவப்பு கிரீம்களையும் நிறுத்திவிடுவார்களா என்ன? இல்லவே இல்லை, அடுத்த அஸ்திரம் ஒன்றை எடுத்து அதற்கும் ஒரு கிரீம் தயார் செய்து விடுவார்கள். சரி இவர்கள் கூறும் அந்த கிரீம்கள் கருப்பிலிருந்து வெள்ளையாக மாற்றுமென்றால் இந்நேரத்திற்கு தமிழகத்தில் அனைத்து மங்கைகளுமே சிவப்பாக ஆகி இருக்க வேண்டுமே? ஏனெனில் இன்றைய நிலையில் கிரீம்கள் பூசாத இளம்பெண்கள் ஒட்டு மொத்த இந்தியாவிலும் ஆயிரம் பேர் இருந்தால் அதிசயம்.

இந்நிலை 200 ஆண்டுகால வரலாற்று நிகழ்வுகளின் விளைவு. அதனை அத்தனை விரைவாக மாற்றி விட கண்டிப்பாக முடியாதுதான். ஆனால் கருத்துப் பரிமாற்றங்கள் மூலமாகவும், விவாதங்கள் மூலமாகவும் இந்த எண்ணத்தை நாம் முன்னெடுக்கலாம். மிகச்சிறிய திருப்பமாகத் தெரிந்தாலும் கூட சில காலம் கழித்து அது இத்திருப்பம் இல்லாதிருக்கும் போது சென்றிருக்கக்கூடிய இடத்தையும் அதன் அப்போதைய‌ இடத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது அதன் மாற்றத்தை உணரலாம். நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.