புகழுக்கு இருபடி முன்னால்

தான் வாழும் காலத்தில் புகழ் பெற்ற அறிஞர்கள், சிந்தனையாளர்கள் இவ்வுலகில் எத்தனை பேர்? வெகு சொற்பம். ஆனால் பிற்காலத்தில் அவர்கள் மறைந்த பின்னர் பல காலம் கழித்து அவர்களை இந்த சமூகம் புகழின் உச்சியில் கொண்டு சென்று வைத்துவிடுகிறது. இது ஏன் நிகழ்கிறது?
முதல் காரணம் அறிவியளாளர்கள் அல்ல‌து சிந்தனையாளர்கள் அவர்கள் வாழும் காலங்களில் மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றனர். ஏனெனில் அவர்கள் நிகழ்கால மக்களின் அறிவிற்கு புரியவேண்டும் என்ற எண்ணத்தில் எதனையும் விளக்குவதோ எழுதுவதோ இல்லை. தான் நினைக்கும் அல்லது அடைய விரும்பும் இலட்சியத்தை தன்னுடைய அறிவாலும், ஞானத்தாலும் எழுதுகிறார்கள்,விளக்குகிறார்கள். அதனைப் புரிந்து கொள்ள விரும்பும் ஒருவன் கண்டிப்பாக சற்றேனும் முயற்சி எடுத்துதான் அதனைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் இந்த மனிதன் என்னும் விலங்கிற்கு புதிதாக ஒன்றைக்க கற்பிக்க வேண்டுமென்றாலோ அல்லது தெரிவிக்க வேண்டுமென்றாலோ அதன் அறிவு நிலையிலிருந்து ஒரு படி அல்லது இரண்டு படிக்கு முன்னால் உள்ள ஒரு விஷயத்தை சொன்னால் மட்டுமே ஏற்றுக்கொள்ளும். வெகு தூரத்திலுள்ள ஒன்றைப் பற்றிக்கூறினால் அதனை ஏற்றுக் கொள்ளாது.

இந்த அறிவியளாளர்கள் அல்ல‌து சிந்தனையாளர்கள் மிகவும் முற்போக்கான‌ கண்டுபிடிப்புகளையும், சிந்தனைகளயும் இக்காலத்தில் அறிவிக்கும் பொழுது நிகழ்கால மக்களுக்குப் புரிவதில்லை. அதனைப் புரிந்து கொள்ள அவர்கள் இன்னும் சில காலம் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. அவர்கள் அந்த காலத்தை அடைந்த பின்னரே அதனை உணர்ந்து கொள்கின்றனர். அப்போது அந்த சிந்தனையாளன் இருப்பதில்லை. எந்த ஒரு ஆய்வாளனும் அல்லது சமூகத்தில் முன்னகர்பவனும் இந்த புகழை உண்மையில் விரும்புவதில்லை. சரி ஏன் ஒரு சிலருக்குப் புரியும் ஒரு தகவல் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் புரியாமல் போகிறது. இதற்கான காரணம் எளிது. இந்த மானுட உயிரினம் தான் அறிபவற்றின் வழியாகவே தன்னுடைய அறிவைப் பெருக்கிக் கொள்கிறது. அந்த அறிவியலாளர்களும் சிந்தனையாளர்களும் தொடர்ந்த வாசிப்பின் வழியாகவும், அனுபவத்தின் வழியாகவும் தன்னுடைய முன்னகர்வை விரைவு படுத்துகிறார்கள். மீண்டும் மீண்டும் புதிய வாசிப்புகளையும் அறிவுகளையும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றனர்.

ஒரு கட்டத்தில் அவர்கள் வாழும் உலகு என்பது ஒரு சராசரி மனிதனின் உலகிலிருந்து மிகவும் முன்னே இருக்கின்றது. ஏனையவர்கள் அத்தகைய முயற்சி ஏதும் இல்லாததால் தங்களுடைய இடத்திலேயே இருக்கிறார்கள். ஆனாலும் கூட ஒரு கட்டத்தில் கட்டாயத்தின் காரணமாக தங்களை சற்றே முன்னோக்கிக் கொண்டு செல்கிறார்கள். சிலர் தங்களால் தங்களுடைய சோம்பேறித்தனத்தை விட முடிந்த அள‌விற்கு முன்னேறி ஓர் இடத்தை அடைகிறார்கள். இதில் இடை நிலையை அடைபவர்கள் புதிய சிந்தனைகளையும் கண்டுபிடிப்புகளையும் மீதமுள்ளவர்களுக்கு எடுத்துச் செல்லும் பாலமாக இருக்கிறார்கள். இவர்கள், தான் வாழும் காலத்தில் பெரும் புகழ் அடைகிறார்க‌ள். உதாரணமாக முதன் முதலாக சாட்டிலைட் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்த ஒரு அறிவியலாளரை விட அதனை ஒரு தொலைக்காட்சிக்கான ஊடகமாக உபயோகிக்கும் ஒருவன் பெறும் புகழ் அதிகம்.

இந்த ஒட்டுமொத்த மனித சமூகத்தில் 2 விழுக்காடு மக்களே முற்றிலும் புதிய கண்டுபிடிப்புகளை எல்லாத் துறையிலும் நிகழ்த்துகிறார்கள் என்பதே வரலாற்று உண்மை. ஏனைய பிறர் அவற்றை பின் தொடர்வதை மட்டுமே செய்கிறார்கள். ஆனால் அந்த 2 விழுக்காடு மக்கள் மீதமுள்ள 98 விழுக்காட்டிலிருந்தே மேலே வருகிறார்கள். நாம் அந்த 98 ல் இருக்கலாம், அல்லது அதிலிருந்து படிப்படியாக முன்னேறி அந்த இரண்டு விழுக்காட்டை அடையலாம். அது எது என்பதனை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.