வெள்ளை யானை

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களால் எழுதப்பெற்று 2014 ல் வெளிவந்த நாவல். 1800 களின் பிற்பாதியில் நடந்த ஐஸ் ஹவுஸ் போராட்டத்தை மையமாக வைத்து எழுதப்பட்டது. ஏய்டன் என்னும் அயர்லாந்து நாட்டு பிரஜை இங்கிலாந்து அரசிற்காக சென்னையில் ராணுவ அதிகாரியாகப் பணி புரிகிறான்.

அக்காலகட்டத்தில் பிரிட்டீஷ் அரசின் பிற தேசத்துப் போர்களுக்காக இங்கிருந்து தானியங்கள் மிகப்பெரிய அளவில் ஏற்றுமதி செய்யப்படுவதால் மிகப்பெரிய அளவில் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் ஒருவேளை உணவுக்கே அல்லாடும் நிலையில் இருக்கிறார்கள். அப்பஞ்சத்தை தங்களுக்கு சாதகமாக உபயோகப் படுத்திக்கொள்ளும் பிரிட்டீஷ் அரசாங்கமும், தோட்ட முதலாளிகளும் மிகக்குறைந்த ஊதியத்திற்கு வேலையாட்களை வேலைக்கு அமர்த்துகின்றனர். அதாவது அரையணா ஒரு நாளைக்கு கூலி. அதற்கே மக்கள் வரிசையில் காத்துக்கிடக்கிறார்கள்.

vellaiyanai2

இந்த வாய்ப்பினால் பஞ்சத்தை அவர்கள் விரும்புகின்றனர். அத்தோடு அதனைப் போக்க முயற்சிக்கும் ஒரு சிலரது முயற்சிகளுக்கும் தடை போடுகின்றனர். இச்சூல்நிலையில் இயல்பாகவே அய்ர்லாந்து இங்கிலாந்து பேதமுள்ள சூழ்நிலையில் வளர்ந்தவனாகையால் ஏய்டனுக்கு இங்கு நடைபெறும் சுரண்டல்களும், அடிமைத்தனமும் மிகப்பெரும் வெறுப்பை உண்டாக்குகின்றன.

அப்போது சென்னையின் ஐஸ் ஹவுஸில் வேலையாட்களை அடித்து துன்புறுத்துவதைக் காணும் ஓர் சூழ்நிலை அவனுக்கு உருவாகிறது. அது அவனுடைய மனசாட்சியை உலுக்குகிறது. அதனால் அவர்கள் (ஐஸ் ஹவுஸ்) மீது நடவடிக்கை எடுக்கிறான். இந்த ஐஸ் ஹவுஸ் அமெரிக்க நிறுவனத்தால் நடத்தப்படுவதால் அவனுடைய அதிகார எல்லைக்குட்பட்டே நடவடிக்கைகளை எடுக்க முடிகிறது. அதனால் அவன் தனது மேலதிகாரிகளிடம் இப்பிரச்சினையை எடுத்துச் செல்ல நினைக்கிறான்.
vellaiyanai3

அவ்வாறு எடுத்துச் செல்வதற்கு இன்னும் பல தகவல்கள் தேவைப்படுவதால் மக்களின் பஞ்சத்தினையும் சுரண்டல்களையும் மேலும் அறிவதற்காக சென்னையிலிருந்து செங்கல்பட்டு வரை பயணம் செய்கிறான். அதில் அவன் அடையும் மனப்பிறழ்வுகளும் அவன காணும் காட்சிகளும் அவனை உலுக்குகின்றன. இறுதியாக ஏய்டன் தன்னுடைய அறிக்கையை சமர்ப்பிக்கிறான்.

இதற்கிடையில் ஆரம்பத்தில் அடிவாங்கிய வேலையாட்கள் கொல்லப்படுகிறார்கள். இதனால் ஐஸ் ஹவுஸ் வேலையாட்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இறுதியாக அப்போராட்டம் முற்றிலும் ஒடுக்கப்படுகிறது. மேலதிகாரிகளால் தென்காசிக்கு மாற்றப்படுகிறான் ஏய்டன். அத்தோடு நாவல் நிறைவு பெறுகிறது.

இந்நாவலின் சிறப்பென்பது பஞ்சம் பற்றிய வர்ணனைகள் மற்றும் அதற்கான காரணங்களை நாவலின் கதாபாத்திர‌ங்களே விளக்குவது. 1800 காலகட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளதால் அக்கால பஞ்சத்தைப் பற்றியும், பிரிட்டீஷ் அரசாங்கத்தின் சுரண்டல் பற்றியும் அறிந்து கொள்ளலாம். கண்டிப்பாக ஜெயமோகன் அல்லாமல் வேறு யாராவது எழுதியிருந்தால் சிறுகதையாக முடிந்திருக்க வேண்டிய நாவல். அவராலே இதனை நாவலாக்க முடிந்திருக்கிறது. வாசிக்க வேண்டிய நாவல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.