Month: October 2015

செங்கிஸ்கான் – முகில்

ஆங்காங்கே சிதறிக்கிடந்த மங்கோலிய இனக்குழுக்களை ஒன்றினைத்த மாவீரன் செங்கிஸ்கான். அலெக்ஸாண்டரின் பேரரசைவிட நான்கு மடங்கு பெரிய மங்கோலியப் பேரரசை நிறுவியவர். அவரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது முகிலின் செங்கிஸ்கான்.

இப்புத்தகம் செங்கிஸ்கானுடைய தாயார் மற்றோர் இனக்குழுவால் கவரப்படுவதிலிருந்து துவங்கி செங்கிஸ்கானுடைய வாரிசுகளால் எவ்வாறு மங்கோலிய பேரரசு பிரிக்கப்பட்டு, வலுவிழக்கத் தொடங்கியது என்பது வரை விவரிக்கப்பட்டுள்ளது. டெஜிமுன் என்னும் இயற்பெயர் கொண்ட செங்கிஸ்கான் அனைத்து மங்கோலிய இனங்களையும் வென்று, சீனாவையும் வென்ற பின்னரே செங்கிஸ்கான் என பட்டம் ஏற்றிருக்கிறார். செங்கிஸ்கானைப் பற்றியும், மங்கோலிய இனக்குழுக்களைப் பற்றியும் ஒரு தொடக்க நிலைப் புரிதலைக் கொள்ள இப்புத்தகம் ஓர் சிறந்த துவக்கம்.

சிம்ம சொப்பனம் – மருதன்

மருதன் அவர்களால் எழுதப்பெற்ற புத்தகம். கியூபாவினுடைய‌ பிதாமகரான பிடல் காஸ்ட்ரோவினுடய வாழ்க்கை வரலாறு. கியூபா எதற்காக அமெரிக்காவிற்கு முக்கியமான ஒரு நாடு. இன்றுவரை அமெரிக்காவினால் கபளீகரம் செய்யப்படாமல் இந்த தேசம் இருப்பதற்கான காரணங்கள் என்னென்ன‌ என பலவற்றை இப்புத்தகம் விவரிக்கிறது.

புத்தகம் பிடல் காஸ்ட்ரோவினுடைய தந்தையின் காலத்தில் இருந்து தொடங்கி இன்றைய பிடல் காஸ்ட்ரோ வரை வருகிறது. ஸ்பெயினினுடைய ஆதிக்கம், பின்னர் ஸ்பெயினின் ஆதிக்கம் தளர்ந்து அமெரிக்காவின் கை ஓங்குதல் என பல்வேறு காலகட்டங்களையும், அதனுள் எவ்வாறு பிடல் காஸ்ட்ரோ இழுக்கப்பட்டார், எதற்காக ஒரு மிகப்பெரும் நிலச்சுவான் தாரருடைய மகன் தன் வசதிகளை ஒதுக்கி விட்டு மக்களுடைய சுதந்திரத்திற்காக போராடினார் எனப் பலவற்றை விவரிக்கிறது இப்புத்தகம் . கியூபாவைப்பற்றியும், பிடல் காஸ்ட்ரோவைப் பற்றியும் ஒர் ஆரம்ப நிலைப் புரிதல் கொள்ள இந்த புத்தகத்தினை வாசிக்கலாம்.

கடலுக்கு அப்பால் – ப.சிங்காரம்

1950 களில் ப.சிங்காரம் அவர்களால் எழுதப்பெற்ற நாவல். இந்தோனேசியாவில் வாழும் தமிழ் மக்களுடைய வாழ்வியலே கதையின் கரு. இந்த நாவலே முதன்முதலாக ப.சிங்காரத்தால் எழுதப்பெற்ற நாவல். இந்நாவலின் தொடர்ச்சியாகவே புயலிலே ஒரு தோணியை எழுதினார். ஆதலால் இந்த நாவலுக்கும் புயலிலே ஒரு தோணிக்கும் ஓர் இணைப்பை உணரலாம்.

அதே கதை மாந்தர்கள், அதே காலகட்டம். ஆனால் சற்றே வேறான கதைக்களம். வேலைக்காக இந்தோனேசியாவிலுள்ள ஒரு செட்டியாரிடம் அடுத்தாள் வேலைக்கு செல்கிறான் செல்லையா. அவனுடைய செட்டியார் முதலாளியும் அவனுடைய கிராமம் என்பதானல் தன்னுடைய மகளை அவனுக்கு மண்முடித்து வைக்க எண்ணுகிறார். ஆனால் சூழ்நிலையால் இந்திய தேசிய ராணுவத்தில் இணைகிறான் செல்லையா. இந்திய தேசிய ராணுவம் நிலை குலைந்தவுடன் மீண்டும் தன்னுடைய முதலாளியிடம் வருகிறான். போர்க்காலங்களில் அனைத்து வட்டிக்கடைகளும் மூடப்பட்டதால், அவர்களுடைய வட்டிக்கடையும் மூடப்பட்டது. போர் ஓரளவிற்கு கட்டிற்குள் வந்ததும் மீண்டும் திறக்க ஆயத்தமாகிறார் செட்டியார். தன்னுடைய படைப்பிரிவிலிருந்து வெளியாகும் காலத்தில் சில மற்ற ராணுவ வீரர்களைக் கொன்றுவிட்டு செல்லையாவும், மற்ற வீரர்களும் வந்திருப்பது செட்டியாருக்கு தெரிய வருகிறது. அவன் தன்னுடைய தொழிலுக்கு சரிப்பட்டு வரமாட்டான் என நினைத்து தன் மகளை தன்னிடம் வேலை பார்க்கும் மற்றொருவனுக்கு மணம் முடிக்கிறார்.

அக்கால கட்டத்தின் காதலையும், அதிலுள்ள எல்லைகளையும் மிக அழகாகக் காட்டியுள்ளார் சிங்காரம் அவர்கள். என்னதான் ராணுவத்திலே இருந்திருந்தாலும் அவனால் அவன் முதலாளியை எதிர்த்து ஒரு வார்த்தை பேச முடியாது. செல்லையாவைக் காதலித்தாலும் அப்பாவின் பேச்சைத்தான் கேட்க வேண்டும். செல்லையாவுக்க் தன் மகளைத் தரவில்லையென்றாலும் அவனுக்கான எதிர்காலத்திற்கானவற்றை செட்டியார் செய்வது என நாவல் உண்மைக்கு அருகில். மற்றோர் சிறந்த நாவல்.

புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்

1960 களில் ப.சிங்காரம் அவர்களால் எழுதப்பெற்ற நாவல். இந்தோனேசியாவில் வாழும் தமிழ் மக்களுடைய வாழ்வியலே கதையின் கரு. அத்தோடு கதை மாந்தர்களின் நினைவின் வழியாக இந்திய கிராமங்களினுடைய வாழ்வியலும் விவரிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் சிவகங்கை மற்றும் அதன் சுற்று வட்டாரக் கிரானங்கள். நாவல் பாண்டியன் என்னும் இளைஞனைச் சுற்றியே நகருகின்றது. பாண்டியன் பிழைப்பிற்காக இந்தோனேசியா சென்று, பின்னர் இந்தோனேசியாவிலிருந்து மலேயாவிற்கு செல்வது, அங்கே நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்வது என கதை நீள்கிறது.

நாவல் நடைபெறும் காலம் இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலகட்டம். அப்போதைய வாழ்க்கை முறைகள், ஜப்பான் ராணுவத்தின் நெருக்கடிகள் என அக்கால நிகழ்வுகள் சிறப்பாகப் பதிவாகியுள்ளது. அத்தோடு அக்கால கட்ட கிராமத்து மக்களுடைய வாழ்க்கை முறையும். உதாரணமாக வட்டித்தொழிலில் ஈடுபட்டிருந்த செட்டியார்களைப் பற்றிய விளக்கங்களும், அவர்களுடைய தொழில் முறைகளும்.

என்னைப் பொறுத்த வரையில் கதைக்களம் நான் வாழும் பகுதியைச் சேர்ந்தது என்பதனால் என்னால் நாவலில் உள்ள சில வார்த்தைகளையும், சொலவடைகளையும் மிக நெருக்கமாக உள்வாங்கிக்கொள்ள முடிந்தது. சிவகங்கை வட்டாரப் பகுதிகளில் மட்டுமே நான் கேட்ட சில சொலவடைக‌ள் இந்நாவலில் பல‌ இடங்களில் உண்டு. அடுத்த முறை இந்த வார்த்தைகளை யாரேனும் உச்சரிக்கும் போது எனக்கு அதன் பின்னுள்ள வரலாறே நினைவுக்கு வரும் என நினைக்கிறேன். சிறந்த நாவல்.