கன்னி நிலம் – ஜெயமோகன்

ஜெயமோகன் அவர்களால் எழுதப்பட்டது. மணிப்பூர் மாநில எல்லைப்பகுதியில் பணியாற்றும் ராணுவ அதிகாரி நெல்லையப்பனின் கதை, ஜெயமோகனுக்கே உரிய சொல்லாடல்களுடன்.

நெல்லையப்பன் மணிப்பூர் எல்லையில் பணியாற்றும் ராணுவத் தலைமை அதிகாரி. அவர்கள் ஒருநாள் தங்களுடைய வழக்கமான பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது காட்டுப்பகுதியில் ஒரு போராளிப்பெண்ணை கைது செய்கிறார்கள். அப்பெண்ணை கைது செய்து ராணுவ முகாமுக்கு கொண்டு வரும் வழியில் போராளிக்குழுக்களின் தாக்குதலுக்கு ஆளாகி, அவர்களில் சிலர் இறந்து விடுகின்றனர். இன்னும் சிலர் அவர்களிடம் கைதியாக மாட்டிக்கொள்கின்றனர். மீதமுள்ளவர்கள் ராணுவ முகாமுக்கு திரும்புகின்றனர். அதனைத் தொடர்ந்து ராணுவத்திற்கும், அப்போராட்டக்குழுவிற்கும் சமரசப் பேச்சுவார்த்தை நடக்கிறது. ராணுவ வீரர்களை விடுவிக்கக் கோருகிறது ராணுவம். ஜ்வாலாமுகியை விடுவிக்க போராளிகள் கோருகிறார்கள்.

இதற்கிடையில் அப்பெண்ணை விசாரிக்கும் நெல்லையப்பன் அவள் ஏதோ ஒரு விதத்தில் அக்குழுவிற்கு முக்கியமானவள் என்றும் அதனால் தான் இத்தனை தூரம் அவர்கள் அவளை மீட்க முயலுகிறார்கள் எனவும் நினைக்கிறான். அதனால் அவள் பற்றிய தகவல்களை ராணுவத் தலைமையகத்திற்கு அனுப்ப உத்தரவிடுகிறான். அவள் பெயர் ஜ்வாலாமுகி என்றும், அவள் அப்போராளிக்குழுத் தலைவரின் மகள் என்பதும் தெரிய வருகிறது. அத்தோடு அவளை உயிருடன் ராணுவத்தலைமையகம் கொண்டுவருமாறும் உத்தரவிடப்படுகிறது.

இந்நிலையில் போராளிக்குழுவால் கைது செய்யப்பட்ட‌ ராணுவ வீரர்கள் ஏற்கனவே கொல்லப்பட்டு விட்டது தெரிகிறது. அதனைத் தொடர்ந்து போராளிக்குழு ராணுவ முகாமைத் தாக்க திட்டமிடுகிறது. அதனை அறியும் நெல்லையப்பன் ராணுவத்தலைமையகத்துக்கு உடனடியாக‌ தகவல் தெரிவிக்க உத்தரவிடுகிறான். அச்சமயத்தின் புயல் காரணமாக உடனடியாக அதனை செய்ய முடியவில்லை.

அவர்கள் ராணுவ முகாமைத் தாக்குகிறார்கள். அவர்கள் எண்ணிக்கை பல்ம‌டங்கு இருப்பதை அறியும் நெல்லையப்பன் இருக்கும் ராணுவத்தையும் ஆயுதங்களையும் கொண்டு முடிந்தவரை போரிடுகிறான். போராளிக்குழுவின் கை ஓங்குகிறது. ஒருகட்டத்தில் இதற்கு மேலும் போரிட முடியாது என உணரும் நெல்லையப்பன் ஜ்வாலாமுகியோடு தப்பியோடுகிறான். அவளை எப்படியாவது ராணுவத்தலைமையிடம் கொண்டு சேர்த்துவிட நினைக்கிறான்.

காட்டுக்குள் தப்பியோடும் நெல் ஒரு கட்டத்தில் ஜ்வாலாமுகியோடு நெருக்கமாகிறான். அதனைத் தொடர்ந்து காதலிக்கும் இருவரும் இருபக்கமும் சேராமல் இந்தியாவிற்கும் மியான்மருக்கும் நடுவில் இருக்கும் நோ மென்ஸ் லேண்டில் வாழ விரைகிறார்கள். இப்படிப்பட்ட ஓர் நிலையில் ராணுவத்திற்கு துரோகம் செய்து காட்டிக்கொடுத்துவிட்டதாக எண்ணும் ராணுவம் இருவரையும் கைது செய்கிறது. நெல் துன்புறுத்தப்படுகிறான். நெல்லையப்பனின் விளக்கங்கள் ஏற்கப்படவில்லை. இதற்கிடையில் ஜ்வாலாமுகி ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுவிக்கப்படுகிறாள்.

பின்னர் ஒரு கட்டத்தில் ராணுவத்தில் இருந்து தப்பிக்கும் நெல் ஜ்வாலாமுகியோடு போய் சேர்கிறான். இருவரும் மீண்டும் நோ மென்ஸ் லேண்டுக்கு செல்கிறார்கள். வாழ்க்கை தொடங்குகிறது.

ஜெயமோகன் அவர்கள் தனக்கே உரிய வகையில் காட்சிகளை கண்முன்னே வடித்திருக்கிறார். அவருடைய வெண்முரசு நாவலினை வாசித்த பொழுது நான் நினைப்பதுண்டு எப்படி இத்தனை நுணுக்கமாக விவரிக்க முடியும் என்று. ஆனால் இந்நாவலை வாசித்த பின்னர் தோன்றுகிறது இவ்விவரிப்பு அவரிடம் என்றுமே உள்ள ஒன்று என. அத்தோடு இந்த விவரிப்பு எப்படி உருமாறி உருமாறி தற்போதைய அதி நுட்பமான‌ நிலையை அடைந்திருக்கிறது என்னால் அழகாக பொருத்திப்பார்க்க முடிகிறது.

வாசிக்க வேண்டிய நாவல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.