காரல் மார்க்ஸ் – பட்டத்தி மைந்தன்

2008 ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகம். கார்ல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாக விவரித்துள்ளார்கள். ராமையா பதிப்பகம் வெளியீடு.

1818 ஆம் ஆண்டில் ஜெர்மனியிலுள்ள ட்ரியர் என்னுமிடத்தில் பிறந்தார் மார்க்ஸ். யூத இனத்தைச் சேர்ந்தவர். மார்க்ஸின் தந்தை ஒரு வக்கீல். யூதர்கள் ஜெர்மனியில் அடக்குமுறைகளுக்கு ஆளாகி வந்ததால் யூத மதத்திலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறிக்கொண்டார். அவர் மார்க்ஸ் படிக்கும் காலத்தில் தொடர்ச்சியாக கடிதம் எழுதும் வழக்கம் வைத்திருந்தார். மார்க்ஸ் தன் குடும்ப நண்பரின் மகளாக ஜென்னியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜென்னி மார்க்ஸைவிட 4 வயது மூத்தவர்.

படிக்கும் காலத்தில் தீவிர இடதுசாரி சிந்தனைகளில் ஈடுபட்டார் மார்க்ஸ். மூட நம்பிக்கைகளையும், மத சடங்குகளையும் நிராகரித்து விவாதிப்பது போன்றவற்றில் ஆர்வம் கொண்டிருந்தார். தன்னுடைய 23 ஆம் வயதில் டாக்டர் பட்டம் பெற்ற மார்க்ஸ் கல்லூரியில் பேராசியர் பணிக்கு விண்ணப்பிந்த்திருந்தார். அரசாங்க ஆதரவு கொண்டவர்களுக்கே அப்பதவிகள் கிடைக்கும் என்பதால், அவருக்கு அவ்வேலை கிடைக்கவில்லை. அதனால் ‘ரைன்லாந்து கெஜட்’ என்ற பத்திரிக்கையில் வேலைக்கு சேர்ந்தார். அரசாங்க கட்டுப்பாடுகளினால் அப்பத்திரிக்கையில் இருந்து வெளிவந்தார். பின்னர் நண்பர்களோடு இணைந்து பாரிஸிலிருந்து ‘ஜெர்மன் பிரெஞ்சு மலர்’ என்ற பத்திரிக்கையை நடத்தினார். அதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவே அங்கிருந்து பிரஸ்ஸல்ஸ் சென்றார். எங்கல்ஸ் பிரெடரிக்கின் நட்பு பிரஸ்ஸில்ஸிலேயே அதிகமானது. அதிலிருந்து மார்க்ஸின் கடைசிக்காலம் வரை அவருக்கும் எங்கெல்ஸுக்குமான நட்பு தொடர்ந்தது.

குறிப்பாக மார்க்ஸ் வாழ்வின் பொருளாதார சிக்கல்களைச் சந்தித்தபோதெல்லாம் உதவியவர் எங்கெல்ஸ். மார்க்ஸே தான் இருப்பதற்கும் தன்னுடைய மூலதனம் நூல் வெளிவந்ததற்கும் முற்றாக எங்கல்ஸே காரணம் என்று கூறுகிறார். மார்க்ஸின் மூலதனம் இரண்டாம் மூன்றாம் பதிப்புகளை வெளிக்கொண்டு வந்தவர் எங்கல்ஸே. தன்னுடைய மூலதனம் புத்தகத்தினை எழுதுவதற்காக மட்டும் 1500க்கும் மேற்பட்ட புத்தகங்களை வாசித்து தெளிவு பெற்றிருக்கிறார் மார்க்ஸ்.

1847 ல் லண்டன் மாநாட்டிற்குப்பிறகு அவரும் எங்கல்ஸும் எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கையே இன்றும் உலகமெங்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் மையமாக இருக்கிறது. தன் வாழ்வில் மிகவும் ஏழ்மை நிலைக்குச் சென்றிருக்கிறார் மார்க்ஸ். ஆனால் அனைத்து சூழ்நிலைகளிலும் அவர் மனைவி அவருடன் துணையாக இருந்திருக்கிறார். அவர்களின் குழந்தைகளுக்கு பால் பவுடர் வாங்கக்கூட இயலாத நிலையிலெல்லாம் வாழ்ந்து வந்திருக்கிறார் மார்க்ஸ். தன்னுடைய மூன்று குழந்தைகளை நோய்களுக்கு பலிகொடுத்தவர், ஏழ்மையின் பொருட்டு. 1881 ஆம் ஆண்டு ஜென்னி இறந்து போனார். அவர் இறந்த 18 மாதங்களுக்குள்ளாகவே மார்க்ஸும் 1883 ஜனவரி 14 அன்று இறந்து போனார். அவருக்குப் பின் 12 ஆண்டுகள் வாழ்ந்த எங்கல்ஸ் மார்க்ஸ் கைப்பிரதியாக விட்டுச் சென்றிருந்த மூலதனம் இரண்டாம் மூன்றாம் பாகங்களை வெளியிட்டார்.

மார்க்ஸ் பற்றிய வாசிப்பின் தொடக்கமாக இப்புத்தகத்தை வாசிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.