சூல் ‍- சோ.தர்மன்

Sool – So.Darman

2019 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல். சுதந்திரத்துக்கு முந்தைய காலத்தில் தொடங்கி சுதந்திரத்திற்குப் பிந்தைய ஜனநாயக அரசுகள் வரையிலான காலகட்டத்தினை ஒட்டிய ஒரு சுற்று வட்டார கிராமங்களின் கதை.

ஒட்டுமொத்த கதையும் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தினை ஒட்டி அமையும் கதை அல்ல இது. கிராமங்களில் ஆங்காங்கே நடைபெறும் சம்பவங்களும் அதற்கு முந்தைய பிந்தைய மனிதர்களின் வாழ்க்கை நிகழ்வுகளுமாக அமைந்த நாவல். ஒரு நீர்ப்பாய்ச்சியும், ஒரு கண்மாயுமே கதையின் மையம். கண்மாயின் நீரை அக்கண்மாய்க்குப் பாத்தியப்பட்ட வயல்களுக்கு பகிர்ந்தளிக்கும் பணியைச் செய்பவனே நீர்ப்பாய்ச்சி.

ஒரு கண்மாய் எப்படி ஒரு மிகப்பெரிய சூழியல் உருவாக்கத்தில் பங்காற்றுகிறது, அதனை சுதந்திர இந்தியா எப்படி ஒற்றைப்படையாக மாற்றி அழித்தது என்பதனை இந்நாவலை வாசிக்கும் பொழுது ஒருவர் உணரக்கூடும். கிராமத்தினையும் அதனைச் சுற்றிய பகுதிகளையும் மையமாகக் கொண்டதால் சில நபர்கள் பல இடங்களில் வருவதும் போவதும் உண்டு. இயல்பாக மக்களிடம் இருந்த அறவுணர்வு எப்படி இல்லாமலாகியது என்பதை ஒரு சரடாக நாவல் முன்வைத்துக்கொண்டே செல்கிறது. இந்திய சுதந்திரத்துக்கு முந்தைய கிராமங்களில் மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்த நேர்மை, எத்தகைய வறுமையிலும் அறம் தவறாமை பின்னர் வந்த காலங்களில் எப்படி இல்லாமலாகியது? எப்படி எல்லாவற்றையும் பணம் ஈடு செய்கிறது? போன்ற பல கேள்விகளை நம்மை நோக்கி வைக்கிறது இந்நாவல்.

இந்நாவலில் நான் மிக விரும்பிய இரண்டு விஷ‌யங்கள். ஒன்று கிராமத்து பேச்சு வழக்கு. கிராமத்து வாழ்வினை முற்றிலும் வாழ்ந்து அதனை உன்னிப்பாக நோக்கிய ஒருவராலேயே இத்தனை நுட்பமாக எழுத முடியும். அது இந்நாவலின் பலம். மற்றொன்று கிராமத்து எளிய மக்கள் பேசிக்கொள்ளும் இரட்டை அர்த்த வசனங்கள். வேலையின் அலுப்பு தெரியாமல் இருக்க, மகிழ்ச்சியாக இருக்க, மற்றொருவரோடு இன்னும் நெருக்கமாக எனப் பல காரணங்கள் உண்டென்றாலும் இந்நாவலில் உள்ள அவ்வரிகள் கிராமத்துப் பேச்சுக்கு மிக அருகிலேயே இருக்கிறது.

ஜனநாயக நாட்டில் ஊழல் பெருத்து, நேர்மை அற்றுப் போவதை மிக ஆழமாகப் படம்பிடிக்கும் நாவல், அதற்கு முந்தைய வெள்ளையர்களின் ஆட்சி பற்றியும் அவர்கள் செய்த கொள்ளைகளைப் பற்றியும் பேசாமலேயே கடந்து சென்று விடுகிறது. எழுத்தாளரின் தனிப்பட்ட விருப்பம் என்றாலும், எனக்குத்தோன்றும் ஐயப்பாடு என்பது பெரும்பாலும் நாவல் முழுவதும் வெள்ளையர்கள் வந்து போகிறார்கள். அவர்கள் வரும்பொழுதெல்லாம் அவர்களைப் பற்றிய மற்ற விசயங்கள்தான் பேசப்படுகின்றன. அவர்களின் ஊழல்களும், அவர்களின் கொள்ளைகளும், அடக்குமுறைகளும் முற்றிலுமாகப் பேசப்படாமலேயே கடந்துசெல்லப்படுகிறது. அதுவே இந்திய ஜனநாயக அமைப்பில் உள்ள ஏதேனும் ஒரு நபர் கதையில் வரும்பொழுது அவரின் அக்கிரமங்களும், அநியாயங்களும் அதிகமாகப் பேசப்படுகின்றன. இது எனக்கு முரண்பாடாகத் தெரிந்த ஒன்று.

சூல் என்பதற்கு கரு என்னும் பொருள். இநாவலின் நிறை கண்மாயே சூல். எல்லாவற்றையும் உருவாக்கி வளர்த்தெடுக்கும் சூல். நாவலின் பல்வேறு தருணங்களில் நம்மை மயிர் கூசச்செய்யும், கண்ணிர்த் துளியை வரவழைக்கும் ப‌ல‌ சம்பவங்கள் உண்டு. கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நாவல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.