பயணம்

கோடா டிங்கீ – தேசாரு கடற்கரை

கோடா டிங்கீ

Kota Tingii

Kota Tingii

மலேசியாவின் ஜோகோர் மாகாணாத்திலுள்ள ஓர் சுற்றுலாத் தளம். முக்கியமான இடம் அங்குள்ள அருவி. சமீபத்தில் அங்கு சென்றிருந்தேன். இயற்கை எழில் மிகுந்த ஓர் இடம். சிறப்பான முறையில் பராமரித்து வருகிறார்கள். இந்த கோடையிலும் அங்கு தண்ணீர் நன்றாக வருகிறது. மிகவும் சுவையான அருவி நீர். இனிப்பானதாக இருக்கிறது. அருவி வழிந்தோடும் வழியெங்கும் மக்கள் ஆங்காங்கே அமர்ந்து நீரில் விளையாடுகிறார்கள். ஏனென்றால் சில முக்கியமான இடங்களுக்கு மட்டுமே நுழைவுக்கட்டணம். மற்ற இடங்களில் இல்லை. பெரும்பாலும் அங்கு சுற்றுலாவுக்காக மக்கள் வருவதில்லை போலும், அல்லது நான் சென்ற சம‌யத்தில் வரவில்லை. பெரும்பாலும் உள்ளூர் மக்கள். ஆனால் அனைவரிடமும் இது நம்முடைய அருவி, இதனை அசுத்தப்படுத்தக்கூடாது என்ற ஓர் அடிப்படை உணர்வு இருக்கிறது.நுழைவாயிலில் மட்டுமே காவலர்கள் இருக்கிறார்கள். உள்ளே எங்கும் கிடையாது. ஆனாலும் கூட மக்கள் எந்த குப்பையையும் தண்ணீரில் எரிவதில்லை. இதுவே நம் ஊராக இருக்கும் பட்சத்தில் அருவியின் ஓர் ஓரத்தில் ஒர் குப்பைக்குவியலே சேர்ந்திருக்கும். குறிப்பாக ஷாம்பூ பாக்கெட்டுகள். ஜோகோர் மலேசியாவின் வசதியான மாகாணங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஜோகோரிலிருந்து செல்லும் வழியெங்கும் பாமாலின் மரங்களும், ரப்பர் மரங்களும் ஆக்கிரமித்திருக்கின்றன. பாமாலின் எண்ணெய் மிக முக்கியமான உற்பத்திப்பொருள். இந்தோனேசியாவிற்கு அடுத்து உலகில் அதிகம் பாமாலின் உற்பத்தி செய்யப்படுவது மலேசியாவில்தான். நல்ல சுற்றுலாத் தளம்.

தேசாரு கடற்கரை

Desaru Beach

Desaru Beach

கோடா டிங்கியிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஓர் கடற்கரை. மிகவும் சுத்தமான கடற்கரை. கண்ணாடி போன்ற நீர். வெள்ளை வெளேர் மணல். அங்கும் பெரும்பாலும் உள்ளூர் மக்களே. கடற்கரையில் குடும்பத்துடன் பொழுதைக் கழித்துக்கொண்டிருக்கிறார்கள். கடல் நீரில் ஓட்டுவதற்கான பைக் வைத்திருக்கிறார்கள். சாகசம் மற்றும் புதுமையில் நன்கு ஆர்வமிருப்பின் முயற்சிக்கலாம். முயற்சித்தேன்.

Water Bike

Water Bike

இக்கடற்கரை மலேசியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. முற்றிலும் இயற்கையாக அமைந்துள்ள ஓர் இடம். அமைதியாக ஆனந்தமாக பொழுதைக் கழிக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற கடற்கரை.