மொழிபெயர்ப்பு

புத்தகம் 3 : உமார் கயாம் பாடல்கள்

பாரசீகக் கவிஞர் உமார் கய்யாமின் பாடல்களை கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள் தமிழில் மொழிபெயர்த்திருந்தார். அந்தப் பாடல்களையும் அதற்கான பொருள்களையும் கமலா முருகன் என்பவர் தொகுத்திருக்கும் நூல் இது.

நேரடியான மொழிபெயர்ப்பு கிடையாது. அதாவது தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள் அந்தக் கருவை நம் மொழியில் வடித்துள்ளார். ஒரு கவிதையில் கம்பராமயணம் பற்றிக் கூட உண்டு.
பொதுவாக இந்த நூலில் உள்ள பாடல்கள் மூன்று வகையாக இருக்கின்றன. ஒன்று வாழிவின் நிலையாமை பற்றிய பாடல்கள்.

உதாரணமாக,

புலர்ந்து விடியும் பொழுதினிலே
பொய்கைக் கரையஞ் சோலையிலே
மலர்ந்து நல்ல மணம் வீசி
மகிழும் மலர்கள் ஆயிரமாம்;
உலர்ந்து வாடிச் சேற்றினிலே
உதிரு மவையும் ஆயிரமாம்;
கலந்த‌ உலக வாழ்வை இதில்
கண்ணாற் கண்டு தெளிவாயே!

மலர்ந்த மலர்களைக் காணும் நாம் உதிர்ந்து விழும் மலர்களை நோக்குவதில்லை, அது போலவே இவ்வுலக வாழ்வு என்ற பொருளில்.

இரண்டாவதாக இறைவன் என்பவன் எல்லோரிடத்திலும் ஒரே மாதிரியாக இருப்பவன். அவனிடத்தில் தன்னை வணங்குபவர், வணங்காதவர், நன்மை செய்தவர், தீமை செய்தவர் போன்ற வேறுபாடுகள் கிடையாது போன்ற பாடல்கள்.

மூன்றாவது வாழ்வினை அனுபவிப்பது. உதாரணமாக மது போன்றவை. நம்மைப் படைத்த இறைவனே அதனையும் படைத்ததனால் அவை தவறாகாது. தவறு சரியெல்லாம் நமக்கு நாமே கற்பித்துக் கொண்ட கற்பிதங்கள் போன்ற பாடலகள்.

நம்முடைய முந்தைய வாசிப்புக்கு ஏற்ப இப்பாடல்களின் பொருள்கள் நமக்கு ஆழமாகத் தோன்றும். வாசிக்க வேண்டிய நூல்.

புத்தகம் 1 : சூதாடி

ரஷ்ய மொழியில் தஸ்தோயேவ்ஸ்கியால் எழுதப்பெற்று 1867 ல் வெளிவந்த‌ The Gambler நாவலின் தமிழாக்கம். தமிழாக்கம் ரா.கிருஷ்ணையா.

இந்நாவலின் மையக் கதாபாத்திரம் Alexei Ivanovich, தன்னுடைய அனுபவங்களை கூறுவது போன்ற நாவல். ரஷ்ய ஜெனரலின் குழந்தைகளுக்கு பாடம் கற்றுத் தரும் ஆசிரியராக வேலை செய்கிறான் Alexei Ivanovich. அவன் ஒருதலையாக‌ ஜெனரலின் சகோதரர் மகள் Polina மீது காதல் கொள்கிறான். அவளுக்கு அவனுடைய காதல் தெரிந்தாலும் அதனை ஏற்காமலும் மறுக்காமலும் அவனுடன் பழகி வருகிறாள். அவளுடைய சிற்றப்பாவாகிய ஜெனரலின் மனைவி இறந்துவிட்டமையால் அவரது இரண்டு குழந்தைகளைப் பராமரித்து வருகிறாள் Polina. ஜெனரல் தான் பெற்ற கடனுக்காக தன்னுடைய சொத்துக்களை de Criet யிடம் அடமானம் வைக்கிறார். அவர் ரஷ்யாவில் நோயுற்றிருக்கும் தனது பாட்டி இறப்பதன் மூலம் கிடைக்கும் பணத்தில் கடனை அடைத்து விடலாம் என நம்புகிறார்.

இதனிடையில் ஜெனரலுக்கு Blanche மீது காதல். ஆனால் அவளும் அவள் தாயும் பணமிருப்பவர்களை மட்டும் அடைய விரும்புபவர்களாக இருக்கிறார்கள். ஒருநாள் Alexei யும்  Polina வும் பூங்காவில் உலாவிக்கொண்டிருக்கையில் வம்புக்கிழுப்பதற்காக அங்கு வரும் ஒரு கோமான் தம்பதியினரை Alexei சீண்டச் செய்கிறாள். அதன் விளைவாக தன்னுடைய வேலையை இழக்கிறான் Alexei . வேலையை இழக்கக் காரணமான கோமானிடம் விவாதிக்க செல்லும் அவன் Polina  வேண்டுகோளால் அதனை செய்யாமல் விடுகிறான்.

இந்நிலையில் ரஷ்யாவிலிருந்து பாட்டி ஆரோக்கியமாக வந்து விடுகிறாள். அதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இந்நிலையில் அங்கிருக்கும் சூதாட்ட விடுதியினை பார்க்க செல்லும் பாட்டி அங்கிருக்கும் பரிசுகளைப் பார்த்ததும் தானும் சூதாட்டத்தில் விளையாடுகிறார். முதல் நாளில் 8000 ரூபிள்களை வெல்லும் பாட்டி ஆர்வ மிகுதியால் அடுத்தடுத்த‌ நாட்களில் தன்னுடைய ஒரு லட்சம் ரூபிள்களை இழந்து விடுகிறார். அதனால் விரக்தி அடையும் அவர் தான் வந்த சிகிச்சையைக் கூட எடுக்காமல் ரஷ்யா திரும்புகிறார்.

அதனால் ஜெனரலுக்கு பணம் ஏதும் கிடைக்காது என்று தெரிய வருகிறது. அதனால் Blanche  அவரை விட்டு பிரிந்து செல்கிறாள். அத்தோடு de Criet உம் தன்னுடைய கடன் திரும்ப வராது என ஜெனரலுடைய சொத்துக்களை ஏலம் விட முடிவு செய்கிறார். அவருக்கும் Polina மீது ஒரு வித ஈர்ப்பு. அது Polina வுக்கும் தெரியும். ஆனால் அவள் தன்னுடைய சித்தப்பாவின்  கடனுக்காக அதனைப் பொறுத்துக் கொள்கிறாள். ஆனால் கடன் திரும்ப வராததால் de Criet  அவளையும் வேண்டாமென நீங்கி செல்கிறார். அவளுக்காக அவருடைய கடன்களில் ஐம்பதாயிரத்திற்கான பத்திரங்களை ஜெனரலிடமே  விட்டுவிட்டு செல்லும் de Criet, அதனை பெற்றுக்கொள்ளும்படியும் Polina விற்கு கடிதம் எழுதிவிட்டு செல்கிறார்.

அதனால் கோபமடையும் Polina  அவருடைய ஐம்பதாயிரத்தை அவர் முகத்தில் விட்டெறிய நினைத்து Alexei யிடம் கூறுகிறாள். அதனால் வேகம் கொண்டு சூதாட்ட விடுதிக்கு செல்லும் Alexei,  இரண்டு லட்சம் ரூபிள்களை வென்று வந்து அவளிடம் ஐம்பதாயிரத்தைத் தருகிறான். திடீரென்று அவனுடைய முகத்திலேயே அதனை விட்டெறிந்து விட்டு ஓடி விடுகிறாள் Polina. இதனால் விரக்தியடைகிறான் Alexei. பின்னாளில் அவள் நோய்வாய்ப்பட்டதை அறிகிறான்.

இந்நிலையில் இவனிடம் 2 லட்சம் ரூபிள்கள் இருப்பதை அறியும் Blanche, Alexei யை மயக்கி தன்னுடன் பாரீஸ் அழைத்துச் செல்கிறாள். அங்கே ஒரு மாத காலம் அவனுடன் இருந்து அவனுடைய‌ பணம் முழுவதையும் செலவழித்து விடுகிறாள். பின்னர் அங்கு அவளைத் தேடி வரும் ஜெனரலையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு விடுகிறாள்.

அதனால் அங்கிருந்து செல்லும் Alexei பிழைப்புக்காக ஒவ்வொரு சூதாட்ட விடுதியாக அழைகிறான். இருந்த ஒட்டு மொத்த பணத்தையும் அழிக்கும் அவன் பின்னொரு நாளில் Polina தன்னை உண்மையாக காதலித்ததை அறிகிறான். அப்பொழுது மீண்டும் திருந்தி வாழ்க்கையை தொடங்க வேண்டும் என எண்ணுகிறான். இருக்கும் பணத்தை வைத்து மீண்டும் சூதாடி பணத்தை வென்று வாழ்க்கையை தொடங்கவேண்டுமென எண்ணி சூதாடுகிறான். மீண்டும் இருக்கும் அனைத்தையும் இழக்கிறான்.

இந்நாவல் தஸ்தோயேவ்ஸ்கி தன்னுடைய சொந்த அனுபவங்களினைக் கொண்டு எழுதப்பட்டதாக கூறப்படுவதுண்டு. ஏனெனில் தஸ்தோயேவ்ஸ்கி ரூலெட் ஆட்டத்தில் அடிமையாகிக் கிடந்தவர். இந்நாவல் சூதால் அழியும் மூவரில் மையம் கொள்கிறது. ஒன்று பாட்டி, அடுத்தது ஜெனரல், அப்புறம் Alexei. மூவருமே சூதால் ஆரம்பத்தில் கவரப்பட்டு, பின்னர் தங்களுடைய மொத்த‌ சொத்துக்களை இழந்தவர்கள். அக்காலகட்டத்திய ரஷ்ய, பிரெஞ்சு, ஜெர்மானிய, ஆங்கிலேய‌ மக்களிடத்திலிருந்த மற்ற இன மக்கள் மீதான எண்ணங்களை சிறப்பாக வடித்திருப்பது நாவலின் சிறப்பு. 1867 ஆம் ஆண்டில் வெளிவந்த நாவல் இன்றுக்குமான நாவலாகத் திகழ்வதே அதன் உச்சம். கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நாவல்.

நம்பிக்கையற்ற இருண்ட உத்தரப்பிரதேசம்

சமீபத்தில் பைனான்ஸ் டைம்ஸ் இதழில் வந்த ஓர் கட்டுரை என் கண்ணில் பட்டது. அதன் தலைப்பு இதுதான். ‘இந்தியா டீ கொடுக்கும் வேலைக்காகவும், காவலாளி வேலைக்காகவும் விளம்பரம் செய்தது. 23 லட்சம் விண்ணப்பங்கள் குவிந்தன’. அந்தக் கட்டுரை இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தின் நம்பிக்கையிழந்த இளைஞர்களின் அரசுப் பணி மீதான ஆர்வத்தைக் காட்டியது.

இந்த வருடத்தொடக்கத்தில் உத்தரப்பிரதேச அரசு 368 நான்காம் நிலை பியூன் வேலைக்கான அறிவிப்பினை வெளியிட்டது. மலைக்க வைக்கும் அளவுக்கு 23 லட்சத்து 20 ஆயிரம் விண்ணப்பங்கள் குவிந்தன‌. அவர்களுள் 255 பேர் முனைவர் பட்டம் பெற்றவர்கள் குறிப்பாக பொறியியல் துறைகளில். 25000 க்கும் மேற்பட்டவர்கள் பட்ட மேற்படிப்பு படித்தவர்கள்.

ஏன் நன்கு படித்த இளைஞர்கள் அரசாங்க அலுவலர்களுக்கு டீ வாங்கிக்கொடுப்பதற்கும் அவர்கள் அறைக்கு வெளியே காத்துக்கிடப்பதற்குமான ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கிறார்கள்? அதற்கான காரணம் பைனான்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது போல உபியில் வேலை வாய்ப்பு இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட மிகவும் குறைவு. அது மட்டுமல்லாமல் மேலும் இரண்டு காரணங்களும் இருக்கின்றன. ஒன்று அரசாங்க வேலை என்பது தனியார் வேலையை விட பாதுகாப்பானது, ஏனெனில் வேலைக்குறைவைக் காரணம் காட்டி ஒருவரை வேலையிலிருந்து நீக்கிவிட முடியாது. மற்றொன்று பணி ஓய்வு பெற்றபின் ஓய்வூதியம், இது கூடுதல் ஆதாயம். அத்தோடு தலைமுறைகள் பழமையான பாடத்திட்டத்தைக்கொண்டு, பொறுப்பற்ற ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப்பட்ட‌ மாணவர்கள் பெற்ற பட்டமேற்படிப்பு பட்டமானது அது பிரிண்ட் செய்யப்பட்டிருக்கும் தாள் அளவிற்குக் கூட‌ மதிப்பில்லாமல் இருப்பது.

மற்ற மாநிலங்களிலும் கூட அரசாங்க வேலைக்கான மதிப்பு உண்டெனினும் இந்த அளவிற்கு இல்லை. இந்தியாவின் தெற்கு மற்றும் மேற்கில் தனியார் நிறுவனங்கள் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளன. அங்கெல்லாம் உலகத்தரத்திற்கு கல்வி நிறுவனங்கள் இல்லையென்றாலும் கூட மோசமான நம்பிக்கையற்ற நிலையில் உபியில் இருப்பதுபோல் இல்லை. மஹாராஷ்டிராவிலோ தமிழ்நாட்டிலோ ஒரு பொறியியல் பட்டமேற்படிப்பு படித்த இளைஞன் தன்னை ஒரு பியூனாக நினைப்பதே கடினம். அதற்குப் பதிலாக ஒரு மென்பொருள் நிறுவனத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி விடுவர்.

வெறும் 400 க்கும் குறைவான, அதுவும் அரசு வேலைகளில் கடைநிலை வேலைக்கான பியுன் வேலைக்கு விண்ணப்பிக்கப்ப்ட்ட‌ அந்த 23 லட்சம் விண்ணப்பங்கள் மற்ற‌ எந்த மாநிலத்தையும் விட உபியில் அவ்வேலைக்கான மதிப்பைக் காட்டுகிறது. இந்திய அரசாங்க அளவுகோல்களின்படி கூட உபி படுபாதாள நிலையில் இருக்கிறது. கல்வியும் சுகாதாரமும் குப்பையாக இருக்கிறது. குற்றங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

இன்றைய நிலையில் உபி மிகவும் பரிதாபத்துக்குரிய நிலையிலேயே இருக்கிறது. கான்பூரைப் பூர்வீகமாகக் கொண்ட, கான்பூரோடு நெருங்கிய தொடர்பில் இருக்கும், பெங்களூரில் இருக்கக்கூடிய என் நண்பர் தொழில் நிறுவனங்களும், நிறுவனர்களும் பெரிய அளவில் கான்பூரில் வளர்வதில்லை. அவர்கள் வளர்வதுண்டு. ஆனால் அது நிறுவனர்கள், நிறுவனங்கள் என்பவற்றிற்கு தென் இந்தியா அளிக்கும் விளக்கத்திலிருந்து மாறுபட்ட ஒர் வளர்ச்சி என்கிறார். கான்பூரின் மிகப்பெரிய நிறுவனங்களாக அடையாளம் காணப்படும் மூன்று நிறுவனங்களின் தொழில் பாட்டில் குடிநீர் உற்பத்தி, பாதுகாப்பு காவலர்களை வேலைக்கு எடுத்தல் மற்றும் அளித்தல், மின் ஆக்கிகளை நிறுவுதல் போன்றவையே.

உபியின் தொழிலதிபர்களில் ஒரு சாரர் அரசாங்கத்தின் நிர்வாகச் சீர்கேடுகளை தங்களுக்கான வாய்ப்புகளாப் பார்க்கின்றனர். மற்றொன்று தேவையற்ற மற்றும் முரண்பட்ட நிதி ஒதுக்கீடுகள். பெங்களூருவில் ஒரு மென்பொருள் நிறுவனத்தை தொடங்கக்கூடிய ஒருவன் பூஜிக்கக் கூடிய நபர்கள் நாரயணமூர்த்தியும், நந்தன் நீல்கேனியும் என்றால், அதுவே உபியில் ஒருவனுக்கு பாண்டி சத்தாவும், சுபத்ரா ராயுமாக இருப்பதில் ஆச்சரியமில்லை. அவர்களைப்போலவே அரசியல்வாதிகளோடு தொடர்பு வைத்துக்கொண்டு அரசாங்க நிதியை தனியார் வளர்ச்சிக்காக திருப்புவதே தொழிலதிபர்களின் பணியாக‌ எண்ணுகின்றனர். அதில் கிடைக்கக்கூடிய கொள்ளைப்பணம் தொழிலதிபர்களாக இருக்கும் அரசியல்வாதிகளாலும், அரசியல்வாதிகளாக இருக்கும் தொழிலதிபர்களாலும் பங்கிட்டுக் கொள்ளப்படுகிறது.

முப்பதாண்டுகளுக்கு முன்னால் ஆஷிஷ் போஷ் என்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்பாளர் பிமாரு என்ற ஓர் சொற்றொடரை உருவாக்கினார். அதாவது பீகார்,மத்தியப்பிரதேசம்,ராஜஸ்தான்,உத்தரப்பிரதேசம் என்பதன் சுருக்கமே அது. அவற்றை அவர் இந்தியாவின் மிகவும் பிந்தங்கிய நோய்வாப்பட்ட மாநிலங்கள் என அவர் கூறினார். இந்த முப்பதாண்டுகளில் பீகார், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் முன்னேற்றத்தில் ஓரளவிற்காவது சாதித்துக் காட்டியுள்ளன. ஆனால் உபியோ இன்னும் மோசமான நிலைக்குச் சென்றிருக்கிறது. சமூகம்,பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், அமைதி என எந்த துறையில் எடுத்தாலும் இந்தியாவில் மிக மோசமாக நிர்வகிக்கப்படும் மாநிலம் உபியே.

உபியின் இத்தனை மோசமான நிலைக்கு என்ன காரணம்? ஒன்று இந்தியாவின் தெற்கு மற்றும் மேற்கைப் போல பாலின பாகுபாடு, சாதி வேறுபாடு போன்றவற்றைக் களைய சமூக இயக்கங்கள் தோன்றவில்லை.

இரண்டாவது பாரம்பரிய நிலப்பிரபுத்துவம். கடைசிமட்ட விவசாயிகள் அவர்களுக்கு மேலுள்ள சாதியினருக்கும் பணிய வேண்டியவர்களாக இருந்தனர். மேல்சாதியினர் என்பவர்கள் ஒரு காலத்தில் பிராமணர்கள், ராஜ்புத் சமூகத்தினைச் சேர்ந்தவர்கள். இன்று பெரும்பாலும் யாதவ் மற்றும் ஜாட் இனத்தவர்.

மூன்றாவதாக அரசியல் நேர்மையின்மை. இந்திய அளவுகோல்களின்படிகூட உபியே ஊழலில், குடும்ப, சமூக வன்முறையில் மோசமான மாநிலம்.

அதி முக்கியமான மற்றோர் காரணம் உபி மாநிலத்தினுடைய பரப்ப‌ளவு. இத்தனை காலம் உபி சந்தித்து வரும் பிரச்சினைகளைத் தீர்ப்பது என்பது அது ஒற்றை மாநிலமாக இருக்கும் வரை சாத்தியமில்லாத ஒன்றே. நான் முன்னரே எழுதியது போல ` உபி இரண்டாகப் பிரிக்கப்பட வேண்டுமா? இல்லை மூன்று நான்காக பிரிக்கப்பட வேண்டுமா என்பது விவாதத்திற்குரிய கேள்வி. ஆனால் பிரிக்கப் பட வேண்டும். பிரிக்கப்படாத உபி அதன் குடிமகனை வருத்துகிறது. அது இந்தியாவை வருத்துகிறது.’

எப்பொழுதும் ஓர் உண்மை இருந்து கொண்டே இருக்கிறது. ஓர் அதீத நல்லெண்ணம் கொண்ட சுகாதார செயலாளரால் கூட எப்படி 85 பெரிய மாவட்டங்களின் சுகாதார திறனை ஆய்வு செய்ய முடியும்? அல்லது நேர்மையான, பயமற்ற ஓர் காவல் துறை தலைவரால் எப்படி 20 கோடி மக்களிடையே சமூக அமைதியை நிலைநாட்ட முடியும்?

ஒற்றை பெரும் மாநிலம் என்பதற்குப் பதிலாக நான்கு சிறிய மாநிலங்கள் என ஆகும்பட்சத்தில் சீரான‌, வெளிப்படையான நிர்வாகம், மேம்படுத்தப்பட்ட கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், குடிமக்கள் பாதுகாப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தலாம். அது மேலும் பல தொழில் நிறுவனங்களையும், தொழிலதிபர்களையும் உருவாக்க வழிவகுக்கும், அந்த மாநிலத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் அதிகாரிகளுக்கு டீ வாங்கித்தருவதை விட நல்லதொரு வேலையை அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கலாம்.

ராமச்சந்திர குஹாவால் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளேட்டில் எழுதப்பெற்ற கட்டுரையின் தமிழ் மொழியாக்கம்.

THE DARK AND DESPERATE STATE OF UTTAR PRADESH
By Ramachandra Guha
(published in the Hindustan Times, 11th October, 2015)