ஒப்பந்தம்

இங்கிலாந்து ஸ்காட்லாந்து இணைப்பு

இங்கிலாந்தும் ஸ்காட்லாந்தும் 1707 வரை தனித்தனி நாடுகளாகவே இருந்தன. 1707 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட இணைப்பு ஒப்பந்தத்தின் (Treaty of Union) வழியாக இரு நாடுகளும் (United Kingdom) ஐக்கிய இராஜ்ஜியம் என்ற ஒன்றாக இணைந்தன. இது நடைமுறைக்கு வந்த தினம் மே 1, 1707.

1603 ஆம் ஆண்டில் இரு நாடுகளும் ஒரே ராணியின் கீழ் (Union of Crowns) இணைக்கப்பட்டதிலிருந்தே அரசியல் ரீதியாக இரு நாடுகளையும் இணைப்பதற்கான முயற்சிகள் 1606,1667 மற்றும் 1689 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் எதிர்ப்பு மற்றும் பல்வேறு காரணங்களால் தடைப்பட்டுக்கொண்டே சென்றது.

1690 களில் ஸ்காட்லாந்து தன்னை தலைசிறந்த வணிக நாடாக்கும் பொருட்டு பனாமா காலனியாக்கம் (டேரியன் திட்டம், Darien Scheme) என்ற திட்டத்தினை செயல்படுத்தியது. ஆனால் ஸ்பெயின் நாட்டின் எதிர்ப்பு, சிறப்பான நிர்வாகமின்மை போன்றவற்றால் அத்திட்டம் தோல்வியடைந்தது. அத்னைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அதுவரை இரு நாடுகளின் இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் தங்களது எதிர்ப்பைத் கைவிட்டனர். எதிப்பைக் கைவிட்டால் இங்கிலாந்தின் பொருளாதார உதவி கிடைக்கும் என்பதே காரணம்.

ஸ்காட்லாந்துடனான இணைப்பிற்கு இங்கிலாந்து முயன்றதற்கு முக்கிய‌ காரணம் ஸ்காட்லாந்தும் பிரான்சும் இணைந்துவிடும் அல்லது ஸ்காட்லாந்தை பிரான்சு கைப்பற்றிவிடும் என்பதே. அவ்வாறு ஆகும்பட்சத்தில் அது இங்கிலாந்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும் என இங்கிலாந்து எண்ணியது.

அதனால் ஸ்காட்லாந்திற்கு பொருளாதார உதவி செய்ய மறுத்து இணைப்பிற்கு மறைமுக அழுத்தம் அளித்தது. அதனைத் தொடர்ந்து 1705 ஆம் ஆண்டில் இரு நாடுகள் சார்பிலும் நிர்வாகக்குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில் இருநாடுகளிலும் இருந்து தலா 31 உறுப்பினர்கள் இருந்தனர். பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 1706 ஜுலை 22 ல் ஒரு முடிவு எட்டப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தின் நாடளுமன்றங்களில் சட்டம் இயற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து 1707 மே 1 முதல் ஐக்கிய ராஜ்ஜியம் என அறிவிக்கப்பட்டது.

இவ்வொப்பந்தத்தின்படி இரு நாட்டு நாடாளுமன்றங்களும் ஒன்றாக வெஸ்ட்மினிஸ்டரில் ஒரே நாடாளுமன்றமாக இணைக்கப்பட்டது. அதில் 45 ம‌க்களவை உறுப்பினர்களும், 16 பேராயர் அவை உறுப்பினர்களும் ஸ்காட்லாந்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டனர்.