ஜெயமோகன்

வெள்ளை யானை

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களால் எழுதப்பெற்று 2014 ல் வெளிவந்த நாவல். 1800 களின் பிற்பாதியில் நடந்த ஐஸ் ஹவுஸ் போராட்டத்தை மையமாக வைத்து எழுதப்பட்டது. ஏய்டன் என்னும் அயர்லாந்து நாட்டு பிரஜை இங்கிலாந்து அரசிற்காக சென்னையில் ராணுவ அதிகாரியாகப் பணி புரிகிறான்.

அக்காலகட்டத்தில் பிரிட்டீஷ் அரசின் பிற தேசத்துப் போர்களுக்காக இங்கிருந்து தானியங்கள் மிகப்பெரிய அளவில் ஏற்றுமதி செய்யப்படுவதால் மிகப்பெரிய அளவில் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் ஒருவேளை உணவுக்கே அல்லாடும் நிலையில் இருக்கிறார்கள். அப்பஞ்சத்தை தங்களுக்கு சாதகமாக உபயோகப் படுத்திக்கொள்ளும் பிரிட்டீஷ் அரசாங்கமும், தோட்ட முதலாளிகளும் மிகக்குறைந்த ஊதியத்திற்கு வேலையாட்களை வேலைக்கு அமர்த்துகின்றனர். அதாவது அரையணா ஒரு நாளைக்கு கூலி. அதற்கே மக்கள் வரிசையில் காத்துக்கிடக்கிறார்கள்.

vellaiyanai2

இந்த வாய்ப்பினால் பஞ்சத்தை அவர்கள் விரும்புகின்றனர். அத்தோடு அதனைப் போக்க முயற்சிக்கும் ஒரு சிலரது முயற்சிகளுக்கும் தடை போடுகின்றனர். இச்சூல்நிலையில் இயல்பாகவே அய்ர்லாந்து இங்கிலாந்து பேதமுள்ள சூழ்நிலையில் வளர்ந்தவனாகையால் ஏய்டனுக்கு இங்கு நடைபெறும் சுரண்டல்களும், அடிமைத்தனமும் மிகப்பெரும் வெறுப்பை உண்டாக்குகின்றன.

அப்போது சென்னையின் ஐஸ் ஹவுஸில் வேலையாட்களை அடித்து துன்புறுத்துவதைக் காணும் ஓர் சூழ்நிலை அவனுக்கு உருவாகிறது. அது அவனுடைய மனசாட்சியை உலுக்குகிறது. அதனால் அவர்கள் (ஐஸ் ஹவுஸ்) மீது நடவடிக்கை எடுக்கிறான். இந்த ஐஸ் ஹவுஸ் அமெரிக்க நிறுவனத்தால் நடத்தப்படுவதால் அவனுடைய அதிகார எல்லைக்குட்பட்டே நடவடிக்கைகளை எடுக்க முடிகிறது. அதனால் அவன் தனது மேலதிகாரிகளிடம் இப்பிரச்சினையை எடுத்துச் செல்ல நினைக்கிறான்.
vellaiyanai3

அவ்வாறு எடுத்துச் செல்வதற்கு இன்னும் பல தகவல்கள் தேவைப்படுவதால் மக்களின் பஞ்சத்தினையும் சுரண்டல்களையும் மேலும் அறிவதற்காக சென்னையிலிருந்து செங்கல்பட்டு வரை பயணம் செய்கிறான். அதில் அவன் அடையும் மனப்பிறழ்வுகளும் அவன காணும் காட்சிகளும் அவனை உலுக்குகின்றன. இறுதியாக ஏய்டன் தன்னுடைய அறிக்கையை சமர்ப்பிக்கிறான்.

இதற்கிடையில் ஆரம்பத்தில் அடிவாங்கிய வேலையாட்கள் கொல்லப்படுகிறார்கள். இதனால் ஐஸ் ஹவுஸ் வேலையாட்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இறுதியாக அப்போராட்டம் முற்றிலும் ஒடுக்கப்படுகிறது. மேலதிகாரிகளால் தென்காசிக்கு மாற்றப்படுகிறான் ஏய்டன். அத்தோடு நாவல் நிறைவு பெறுகிறது.

இந்நாவலின் சிறப்பென்பது பஞ்சம் பற்றிய வர்ணனைகள் மற்றும் அதற்கான காரணங்களை நாவலின் கதாபாத்திர‌ங்களே விளக்குவது. 1800 காலகட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளதால் அக்கால பஞ்சத்தைப் பற்றியும், பிரிட்டீஷ் அரசாங்கத்தின் சுரண்டல் பற்றியும் அறிந்து கொள்ளலாம். கண்டிப்பாக ஜெயமோகன் அல்லாமல் வேறு யாராவது எழுதியிருந்தால் சிறுகதையாக முடிந்திருக்க வேண்டிய நாவல். அவராலே இதனை நாவலாக்க முடிந்திருக்கிறது. வாசிக்க வேண்டிய நாவல்.

ஆசானிடமிருந்து

அன்புள்ள ராஜேஷ்,

ஒட்டுமொத்தமாக வாசிப்பது முக்கியமானது. அது நமக்கு ஒரு மூழ்கியிருக்கும் அனுபவத்தை, வாழ்ந்து மீண்ட அனுபவத்தை அளிக்கிறது.ஆனால் ஒவ்வொருநாளும் வாசிக்கையில்தான் நாம் தனிவரிகளை அதிகமாகக் கவனிக்கிறோம். நம் மனமொழி அதற்கேற்ப மாறுகிறது.

ஜெ

மீண்டும் ஆசானுக்கு

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம். மீண்டும் வெண்முகில் நகருக்கு வந்து விட்டேன். ஆம் சில மாதங்களுக்கு முன்னர் வண்ணக்கடல் படிக்கும்போது தினமும் வாசிப்பதனைவிட ஒரே மூச்சாக ஒவ்வொரு புத்தகமாக வெளிவரும்பொழுது வாசிக்கலாம் என்ற எண்ணத்தை அடைந்தேன். அதன் காரணமாக தினசரி வாசிப்பை வெண்முரசில் இருந்து வேறு சில புத்தகங்களுக்கு மாற்றினேன். அதே சமயம் வெண்முரசு அல்லாத தங்களின் பதிவுகளையும், மற்ற புத்தகங்களையும் தொடர்ந்து வாசித்துக்கொண்டே இருந்தேன். மாதங்கள் கடந்தன‌.

முதற்கனல், மழைப்பாடலின் வாசிப்பின் விளைவாக மென்பொருள் துறையில் மிக ஆழமான இடத்தில் வேலை செய்யக்கூடிய இடத்தில் இந்த வாசிப்பனுவத்தின் விளைவாக மிகச் சரியான அல்லது முந்திய எனது சொற்களுக்கு மேலான சொற்களை சமைத்து பேசுவதை இயல்பாக்கிக் கொண்டேன் என்னை அறியாமலே. தினசரி வெண்முரசு வாசிப்பை நிறுத்திய இந்த சில மாதங்களில் அது போல சரியான வார்த்தைகளைக் கொண்டு சரியான தொடர்களை அமைக்கும் வ‌ல்லமை குறைந்தது போல உணரத்தொடங்கினேன். காரணத்தை திரும்பத்திரும்ப சிந்திக்க அது வெண்முரசு எனத் தெரிந்தது.

முன்பொருமுறை நீங்கள் வெண்முரசுவின் தினசரி வாசிப்பும் முக்கியமானது, புத்தக வாசிப்பும் முக்கியமானது எனக் கூறியிருந்தீர்கள். அப்பொழுது அதன் மீது எனக்கு உடன்பாடு எட்டவில்லை. ஆனால் இப்போது உண்மையாகவே கூறுகிறேன். வெண்முரசு நிகழ்காலத்தின் குரல், எனக்கான செய்தி, அற‌ம். வரும் ஒவ்வொரு பாத்திரமும் ஏதோ எனக்கான ஒரு செய்தியை உரைக்கிறது, இன்றைய விறலி உட்பட. என்னுடைய தினசரி வாழ்வினை மகிழ்ச்சியானதாக்க, மிகச்சிறந்த வார்த்தைகளை அமைக்க அது எனக்கு தினமும் உதவுகிறது. மீண்டும் என்னுடைய தினசரித் திட்டத்தில் வெண்முரசை இணைத்து விட்டேன். இம்முறை நான் இருவனாக‌, ஒருவன் வண்ணக்கடலில் விடுபட்ட அத்தியாயத்திலிருந்து, மற்றொருவன் இங்கே வெண்முகில் நகரிலிருந்து. ஒருநாள் இருவரையும் ஒன்றாக்கி விடுவேன். நான் சோம்பேறித்தனத்தால் தினசரி வாசிப்பை நிறுத்தவில்லை. திட்டமிட்டே நிறுத்தினேன். அதனால் என்னால் கண்டிப்பாக மீண்டும் விடுபட்ட அனைத்தையும் வாசிக்க முடியும் என்றே எண்ணுகிறேன்.

ஒரு தொழில்நுட்பத்தின் சரியான பயன் அதனைப் பற்றி முற்றிலும் அறிதலில்லாத ஒருவருக்கும் உபயோகப்படவேண்டும் என்பதே என்று எங்கோ படித்த நியாபகம். ஆனால் எனக்கு வெண்முரசு மேனேஜ்மென்ட் மீட்டிங்கில் என்னை சிறப்பாக வழி நடத்துகிறது. தங்களுக்கு உளமாற நன்றி.

ஆசானிடமிருந்து

நான் எழுதிய மடலுக்கு ஆசானின் பதில்.

அன்புள்ள ராஜேஷ்

புனைவை வாசிப்பதற்கான திறன் அனைவருக்கும் இயல்பிலேயே அமைவதில்லை. மிக‌ச்சிலருக்கே மொழியை உடனடியாக சித்திரங்களாக மாற்றிக்கொள்ள முடிகிறது என்பதைக் கண்டிருக்கிறேன். அது ஒரு பெரிய வரம். அந்த வரத்தை நாம் நம் நிறைவுக்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அது நம் கடமை என்றே சொல்லலாம்

வாழ்த்துக்களுடன்
ஜெ

ஆசானுக்கு மீண்டும் ஒரு கடித‌ம்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு

சமீபத்திய ஆண்டுகளில் அதிகம் வாசிக்கத் தொடங்கிய பின்னர் என் வாழ்க்கை முறை இத்தனை மாற்றங்களை சந்தித்துள்ளதை எண்ணி வியக்காமல் இருக்க முடிவதில்லை. ஏதோ ஒரு கணத்தில் வாசிப்பால் கவரப்பட்டு தீவிர வாசிப்புக்கு ஆளான நாள் முதல் என்னுள் நிகழும் இந்த மாற்றங்களை உள்ளும் புறமும் வேறோருவனாக இருந்துகொண்டு கவனித்துக் கொண்டே இருக்கிறேன்.

என்னால் தினமும் காலை ஐந்து மணிக்கு எழ முடிகிறது. தினமும் என் சொந்த திட்டங்களுக்காக 5 மணி நேரங்களை ஒதுக்க முடிகிறது. அலுவலகத்தில் இட்ட பணியைவிட மும்மடங்கு பணி செய்ய முடிகிறது. எப்பொழுது நண்பர்கள் அழைத்தாலும் இல்லை என்று சொல்லாமல் அவர்களோடு விளையாடவோ வெளியில் செல்லவோ முடிகிறது.

மகிழ்ச்சியான தருணத்திலோ, அமைதியான தருணங்களிலோ எடுக்கும் முடிவுகளை அதற்குரிய‌ சூழ்நிலைகளில் நான் நினைத்தவாறே கையாளுகிறேனா என்று இக்கட்டான தருணங்களில் கூட வேறொருவனாக உள்ளிருந்து அகம் சிந்தித்துக்கொண்டே இருக்கிறது. இல்லையெனின் மனம் அதனை மாற்றியமைத்து மற்றோர் தருணத்தில் கண்காணிக்கிறது. இதெல்லாம் எப்படி சாத்தியப்பட்டதென தொடர்ந்து பல நாட்களாக, சிந்தித்துக்கொண்டே இருக்கிறேன். என்னால் உறுதியாக இதுதான் எனக்கூற முடியாது என்றாலும் தங்களின் எழுத்திற்கு அதில் ஒரு சீரிய பங்கு இருப்பதை மறுக்க முடியாது.

ஏனெனில் மற்ற எழுத்தாளர்கள் எழுத்தின் வழி அறியப்படுபவரும், இயல்பாக அறியப்படுபவரும் வேறாக இருப்பார்கள். அவர்களை நான் தவறென்று சொல்லவில்லை. படைப்பாளி என்பவன் தனி மனிதனிலிருந்து வேறுபட்டவன், படைப்பாளியை படைப்பைக்கொண்டே அணுக வேண்டும் அவன் தனிப்பட்ட வாழ்க்கையைக் கொண்டல்ல எனப் பொதுவாகக் கூறினாலும், ஒரு உன்னத படைப்பைப் படைத்த படைப்பாளியும் உன்னதமான ஒருவராக இருக்கும் பொழுது இயல்பாகவே அப்படைப்பின் மீதும், படைப்பாளியின் மீதும் மரியாதை வந்து விடுகிறது. அப்படித்தான்  எனக்கும் தங்களுடைய‌ எழுத்தை வாசித்த பொழுது ஏற்பட்ட உத்வேகம் நான் இருந்த நிலையில் இருந்து வேறோர் இடத்திற்கு தள்ளிவிட்டது. அங்கிருந்து வேறோர் இடம், பின்னர் வேறோர் இடம், இன்று இந்த நிலையில். நாளை இதைவிட உன்னத நிலையில் உறுதியாக (வாசித்துக்கொண்டே இருந்தால்).

என்வாழ்வின் பொற்காலம் கடந்த காலம் அல்ல, நிகழ்காலம், இன்று இக்கணம்.  இதை நீடிக்கச் செய்ய ஒரே வழி, வாசித்துக்கொண்டே இருப்பது என்றே நினைக்கிறேன். வாசிக்கும் ஒரு புத்தகம், வாசிக்க வேண்டிய பத்து புத்தகங்களுக்கு வழியைத் திறக்கிறது. இன்று நான் வாசிப்பையே முழு நேர வேலையாக செய்து, உலகில் உள்ள அனைத்து எழுத்தாளர்களும் இன்றோடு எழுதுவதை நிறுத்தினாலும் கூட என் இறப்பிற்கு முன் இவ்வாசிப்புக்கடலில் ஒரு கைப்பிடி அள‌வு மட்டுமே அள்ள முடியும் என்றே நினைக்கிறேன். தங்களுக்கு என் உளமாற நன்றி.

உலகின் நிலைப்புள்ளி

பெரும்பாலும் அதீத கேளிக்கைகள் நடைபெறும் நிகழ்வுகளுக்கு செல்லும் வழக்கம் இல்லாத நான் சமீபத்திய‌ காலங்களில் அத்தகைய‌ நிகழ்வுகளுக்குச் செல்கிறேன். அங்கே நான் கண்ட சில கேளிக்கை நிகழ்வுகள் சென்று வந்த சில நாட்களுக்குப் பின்னரும் என் மனதில் நீடித்துக்கொண்டே இருந்தது, முற்றிலும் கேளிக்கைக்காகவே இத்தனை வளம் வீணடிக்கப்படுகிறதே என.

உதாரணமாக ஓர் மிகப்பிரமாண்டமான செயற்கை நீரூற்று. அங்கே அது கண்டிப்பாக தேவையில்லைதான். அதனைக் காண்பதனைத்தவிர வேறொன்றும் எவரும் எதுவும் செய்யவில்லை.மிக மோசமான நிலையில் வாழும் மக்களின் வாழ்க்கையினை மிக நெருக்கமாக கண்டிருக்கிறேன். அங்கே நீர் என்பது மிக மிக அத்தியாவசியமான ஒன்று. அதனை மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதுவதைக் கண்டிருக்கிறேன். அங்கே நீரைப் பணமாகக் கருதவில்லையெனினும் வீட்டில் நீரை யாராவது வீணடிக்கும் போது வசவு கிடைக்கும். இங்கே நீரை ஓர் உதாரணத்திற்காக மட்டுமே கூறுகிறேன். பொதுவாக கண்டிப்பாக இந்த வளம் இங்கே உபயோகப்படுத்தப்படவேண்டியதில்லை என்னும் நிலையில் அதீத வளம் வீணடிக்கப்படுவதையும், கண்டிப்பாகத்தேவை என்னும் இடத்தில் வளம் பற்றாக்குறையாக இருப்பதையும் மிக அருகில் பார்த்துக்கொண்டே இருக்கிறேன்.

இதன் காரணம் என்னவாக இருக்கும்?

உணவுத்திருவிழா என்ற ஒன்று தாய்லாந்தில் நடைபெறுகிறது தினமும். உலகின் அனைத்து உணவுகளும் அங்கே கிடைக்கும். முன்பதிவு செய்தால் போதும். ஒரே கட்டணம். ஒரு மிகப்பெரிய‌ அரங்கில் உலகின் அனைத்து வகை உணவுகளையும் வைத்துவிடுகிறார்கள். வேண்டும் உணவை எடுத்து உண்ணலாம். அமர்வதற்கு மேசைகளும் உண்டு. உணவு குறைந்தவுடன் அங்குள்ள பணியாளர்கள் அதனை மீண்டும் நிரப்பி விடுவார்கள். சீன உணவு, மேற்கத்திய உணவு, இந்திய உணவு, ஜப்பானிய உணவு, தாய்லாந்து உணவு என ஏராளம். நான் கண்டவர்களில் ஏராளம்பேர் அனைத்து உணவுகளையும் உண்டு மகிழ முயன்றார்கள். ஆனால் தான் பழக்கப்பட்ட உணவைத்தவிர புதிய உணவினை அவர்களால் அதிக அளவில் உண்ண இயலவில்லை. அது உண்மைதான். மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் சொன்னது போல சுவை என்ப‌து மனப்பழக்கம் தானே. ஒரே கட்டணம் என்பதால் ஒரு உணவு பிடிக்காது போனவுடன் அதனை கொட்டிவிட்டு அடுத்த உணவுக்கு சென்று விடுகின்றனர். ஜப்பானியன் ஒருவன் இந்திய உணவினை வீணடிக்கிறான். இந்தியன் சீன உணவை வீணடிக்கிறான். என்னால் உறுதியாகக் கூற முடியும் குறைந்த பட்சம் 30 விழுக்காடு உணவு குப்பைக்கு சென்றது. அதுதான் தினமும் நிகழும். இது தவிர மீதமாகும் உணவு வேறு. ஏனென்றால் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு தயாரிக்கும் இடத்தில் கண்டிப்பாக மீதமாகும்.மூன்று வேளை உணவிற்காக கஷ்டப்படும் பலரையும் நான் அறிவேன்.

இவையெல்லாம் உதாரணங்களே. ஓர் முனையில் வளம் அதீத அளவிற்கு முற்றிலும் கேளிக்கைக்காகவும் மகிழ்விற்காகவும் செலவிடப்படுகிறது. மற்றோர் முனையில் அடிப்படைத் தேவைக்கான வளத்திற்கே பற்றாக்குறை.

ஆம் அதுவே இந்த உலகின் நியதி. உச்சம் ஒருபுறமும் இல்லாமை ஒரு புறமும் இருப்பதன் வழியாகவே உலகம் தன் சமநிலையை மீட்டுக்கொள்கிறது. புதிய இடத்திற்கு தன்னை இட்டுச்செல்கிறது. அதீத உற்சாகத்தில் இருப்பவனே ஒரு புதிய கண்டுபிடிப்புக்கான விதையை விதைக்கிறான். அப்படிப்பட்ட ஒருவனே செல்போனைக் கண்டுபிடித்தான். இன்று அது அனைவருக்கும் அவசியமானதாகப்படுகிறது. அது கண்டறியப்பட்ட ஆரம்ப காலத்தில் மிகவும் ஆடம்பரமான பொருளாகக் கருதப்பட்டது. இல்லாதவனின் அடிப்படை உரிமையில் அதற்கு இடம் இல்லை. அதற்காக அதனைக் கண்டறியாமல் இருந்திருந்தால் இன்று அப்படி ஒன்றே இருந்திருக்காது.

அதீத எளிமையாய் வாழ்பவர்கள் உலகை தங்கள் பக்கம் நோக்கி இழுக்கிறார்கள். அதீத கேளிக்கை கொண்டாடுபவர்கள் உலகை தங்களை நோக்கி இழுக்கிறார்கள். அதன் வழி உலகம் தனக்கான இடத்தை கண்டு நிலை கொள்கிறது. எவர் ஒருவர் தான் கண்டடைந்ததை நிருபணம் செய்கிறாரோ அப்புள்ளிக்கு உலகம் தன்னை நகர்த்திக்கொள்கிறது. நீங்களும் நானும் ஒன்று இந்த இரு முனைகளில் ஒன்றில் இருக்கலாம். அல்லது உலகின் சம‌நிலைப்புள்ளியில் உலகோடு சேர்ந்து இயங்கலாம். அதாவது புது செல்போன் வாங்குவது, திரைப்படம் பார்ப்பது, அரசியல் கருத்து தெரிவிப்பது, ஃபேஸ்புக்கில் சாட் செய்வது, முதியோர் இல்லத்துக்கு செல்வது என.நன்றி.

கேள்வி பதில்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

மிகப்பெரிய திட்டமிடலுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள். அதனால் தங்களை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யாமல் தூரத்து நிலவாகவே வைத்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். இருந்தாலும் இந்த கேள்வி சமீபத்திய நாட்களில் மிக அதிகமான முறை நினைவில் எழும்புவதால் இக்கடிதம்.

என்னுடைய வேலையும் என்னுடைய புத்தக வாசிப்பும் வேறு வேறு வழிகள். ஆனால் நான் வாசிக்கத் தொடங்கிய பின்னர் என் வேலையினை மிக எளிதாகமாற்றிக்கொண்டேன். வேலையின் அளவு ஐந்து மடங்கிற்கும் அதிகமாகி இருக்கிறது. மிக முக்கியமாக மகிழ்ச்சியாக இருக்கிறேன். எளிமையாக இருக்கிறேன். மகிழ்சியை அருகில் சென்று பார்த்து பெரிதுபடுத்தி மகிழ்கிறேன். துன்பங்களை தூரமாய்ப் பார்த்து சிறியதாய் ஆக்கிக்கொள்கிறேன். நீங்கள் கூறுவது போல சின்னச் சின்ன வாசகங்களை மனதில் அசைபோட்டு அசைபோட்டு ஒரு மிகப்பெரிய மன உலகை சமைத்து வைத்து வாழ்கிறேன். வாசிப்பைத் நாள்தோறும் தீவிரப்படுத்திக் கொண்டே இருக்கிறேன். எனக்கான வேலையையே தள்ளிப்போடும் நான் இன்று எந்நிலையிலும் தினமும் என்னால் சில மணி நேரங்களை ஒதுக்க முடியும் என்ற நிலைக்கு மாறியிருக்கிறேன். இதெல்லாம் என்னால் உறுதியாகக் கூற முடியும் வாசிப்பால் தான் என்று. ஆனால் எப்படி என் வேலையை மாற்றியது எனக்கேட்டால் கண்டிப்பாக என்னால் சொல்லத் தெரியாது.

என்னுடைய தற்போதைய நிலையை விளக்கவே மேற்கூறிய வரிகள் எல்லாம். என்னுடைய கேள்வியெதுவென்றால் தீவிர வாசகர்கள், எழுத்தாளர்கள் தமது படைப்புகள் தாண்டிய உரையாடல்களின் போது மிகவும் அவமதிப்பையோ, அல்லது துன்பங்களை தங்கள் வாழ்வில் சந்தித்ததாக கூறுகின்றனர். அதிக பட்ச அவமதிப்பையோ, துன்பங்களையோ சந்தித்தால் மட்டுமே ஒரு தீவிர வாசகராகவோ, எழுத்தாளராகவோ ஆக முடியுமா? இல்லை, அதிகபட்ச வாசிப்பு துன்பங்களை மிகைப்படுத்தச் செய்யுமா? மகிழ்ச்சியாக எளிமையாக வாசித்துக்கொண்டே இருக்க முடியாதா? [ நான் முழுக்க முழுக்க மகிழ்ச்சியான புத்தகங்களையே வாசிக்கிறேன் என்று கூறவில்லை. எல்லாவற்றையும் வாசிக்கிறேன். ஆனாலும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்நிலை மாறிவிடுமோ என தோன்றுவதாலேயே இக்கேள்வி]

அன்புள்ள ராஜேஷ்

நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில் 3000 வருடம் முன்னரே அரிஸ்டாடிலால் சொல்லப்பட்டுவிட்டது. இப்படி யோசியுங்கள், உங்களுக்கு உண்மையிலேயே துயரம் தரும் ஒருவிஷயத்தை நீங்கள் நாடுவீர்களா? ஆனால் துயரம் நிறைந்த ஒரு நூலை, திரைப்படத்தை விரும்பி வாசிக்கிறீர்கள், பார்க்கிறீர்கள் அல்லவா? ஏனென்றால் அந்தத் துயரம் உண்மையானது அல்ல. அது மனதில் தலைகீழாகவே நிகழ்கிறது. துயரத்தை நடிப்பதன் மூலம் மனம் மகிழ்ச்சி அடைகிறது. சுந்தர ராமசாமியின் மொழியில் சொல்லப்போனால் திருப்பிப்போடப்பட்ட சட்டை, பை உள்ளே இருக்கும்.

இதை catharsis  என்கிறார் அரிஸ்டாடில். துயரத்தை புனைவுகளில் அனுபவிப்பது வழியாக மானுடமனம் தன்னை தூய்மைப்படுத்திக்கொள்கிறது. ஓர் உன்னதமாக்கல் நிகழ்கிறது. அது ஓர் இனிய அனுபவம். ஆகவேதான் உயர்ந்த படைப்புகள் பெரும்பாலும் துயரச்சுவை மிக்கவையாக இருக்கின்றன. அதுவும் இனிய அனுபவமே. மகிழ்ச்சியான மனநிலை என்பது நேர்நிலை. அதில் மனிதன் அதிகநேரம் நிற்க முடியாது. ஆகவேதன துயரம் கலந்த மகிழ்ச்சியை melancholy யை அடைகிறான். அந்த இனியதுயரமே இயற்கையை, இசையை, கலைகளை அழகாக ஆக்குகிறதுய். அது இல்லாவிட்டால் உலகில் இன்பமே இல்லை

ஜெ

பெண்கள்,படைப்பாளிகள்,நாஞ்சில் நாடன்,ஜெயமோகன்

சமீபத்தில் நடைபெற்று வரும் இளம் படைப்பாளிகள் தொடர்பான கருத்து மோதல்களை அறிந்திருப்பீர்கள். இருப்பினும் அது தொடர்பான முழு சித்திரத்தையும் அறிந்து கொள்ள தொகுத்துள்ளேன்.

ஆனந்த விகடன் வார இதழின்  விகடன் மேடை பகுதியில் ஒரு வாசகரின் கேள்வியும் அதற்கு நாஞ்சில் நாடன் அவர்களின் பதிலும் என இந்நிகழ்வு தொடங்கியது.

”இன்றைய எழுத்தாளர்களில் நம்பிக்கை தரக்கூடியவர்கள் யார் யார்?”
பார்வதி, திருநெல்வேலி

நாஞ்சில் நாடன்:
”இளையவர்களை மட்டுமே கருத்தில்கொண்டு என் கருத்தைச் சொல்கிறேன். ஈழத்து இளைஞர்களில் சயந்தன், தமிழ்நதி, இளங்கோ. தமிழகத்தில் குமாரசெல்வா, வா.மு.கோமு, மு.ஹரிகிருஷ்ணன், ஜே.பி.சாணக்யா, கே.என்.செந்தில், எஸ்.செந்தில்குமார், பா.திருச்செந்தாழை, என்.ஸ்ரீராம், தூரன் குணா, சந்திரா, இளஞ்சேரல், அ.வெண்ணிலா, லக்ஷ்மி சரவணக்குமார் ஆகியோர் சாதிக்கிறவர்களும் நம்பிக்கை தரக்கூடியவர்களும். மீனா, தி.பரமேசுவரி, ச.விசயலட்சுமி ஆகியோர் திறனுடன் கட்டுரைகள் எழுதுகிறார்கள். கவிஞர்களில் உமா மகேஸ்வரி, குட்டி ரேவதி, லீனா மணிமேகலை, சுகிர்தராணி, சக்தி ஜோதி, சாம்ராஜ், லிபி ஆரண்யா, இசை, இளங்கோ கிருஷ்ணன் என்போர் என்னைக் கவர்ந்தோரில் சிலர். வகை மாதிரிக்காக சில பெயர்களைச் சொன்னேன்!”
writes_new
அதற்கு ஜெயமோகன் அவர்கள் அந்தப் பட்டியல் மீதான தன்னுடைய நிலைப்பாட்டினை தன் வலைத்தளத்தில் இவ்வாறாக பதிவு செய்திருந்தார்.

ஆனந்த விகடனில் நாஞ்சில்நாடன் போட்ட இளம் படைப்பாளிகளின் பட்டியலைப் பார்த்தேன். இணையத்தில் தேடி அதை எடுத்துக் கொடுத்திருக்கிறேன். அதில் யாரைச் சேர்க்கலாம் சேர்க்கக் கூடாதென்றெல்லாம் வழக்கம்போல விவாதங்கள். நான் இப்படத்தை இங்கே அளிப்பது தமிழில் எழுதவந்துள்ள புதிய தலைமுறை படைப்பாளிகளை இவ்வகையில் அறிமுகம் செய்வது உற்சாகமளிக்கிறது என்பதனாலேயே. அதன்மூலம் அவர்கள் மேலும் பரவலாக வாசகர்களைச் சென்றடைய வாழ்த்துக்கள். Continue reading