தமிழ்நாடு

ஜெயலலிதா கைதும், மக்களின் மனநிலையும்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் ஜாமின் பெற்று வெளியே வந்துவிட்டார். அதனைப் பற்றிய பேச்சு முற்றிலுமாக அடங்கிவிட்டது. அது தொடர்பான நிகழ்வுகளின் போதே இப்பதிவை இட வேண்டுமெனத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் அப்போது ஏற்பட்ட இரைச்சலுக்கு மத்தியில் இதற்கு இடமில்லாது போகுமென்பதால் அவ்விவாதங்கள் முற்றிலுமாக அடங்கும் வரைக் காத்திருந்து இப்பதிவை இடுகின்றேன்.

ஜெயலலிதா கைது ஆன பின்னர் அதனைப் பற்றி அளவுக்கு அதிகமாக விவாதித்து கட்டுரைகளை எழுதியவர்களோ, அதனைப்பற்றி செய்திகளைப் படித்துவிட்டு அப்போதைய நாட்களில் மட்டும் நண்பர்கள் மத்தியில் தனக்கு மாபெரும் அரசியல் அறிவு உள்ளதாகக் காட்டிக்கொண்டவர்களோ இப்போது அடுத்த செய்தியை நோக்கிப் போய்விட்டார்கள். அந்தச் செய்தியும் தொய்வடைந்தவுடன் அடுத்த செய்திக்கு போய்விடுவார்கள்.அவர்களெல்லாம் அறிவுஜீவிகள் அல்ல. வீண் மனிதர்கள். அதாவது படிக்காதவர்கள் அதிகமிருந்த காலத்தில் இருந்த வீண் மனிதர்களை விட படித்த மக்கள் அதிகம் வாழும் இக்காலத்தில் இருக்கும் வீண் மனிதர்கள் அதிகம்.

அவர்கள் செய்வதெல்லாம் ஏதாவது செய்தியை வைத்துக்கொண்டு அதில் தான் முழு அளவிலான ஆராய்ச்சியை செய்தது போலப் பேசுவார்கள். சற்று பின்னோக்கிப் பார்த்தால் ஏதாவது ஒரு நாளிதழில் அது அன்றைய செய்தியாய் இருந்திருக்கும். தினம் நாம் அப்படிப் பல நபர்களை சந்திக்கலாம். மிகப்பெரிய விஷயத்தை தானே ஆய்வு செய்தது போல பேசுவார்கள். பார்த்தால் அது தினமலரிலோ, ஃபேஸ்புக்கிலோ வந்திருக்கும்.

தகவல் தொடர்பு அதிகமாக அதிகமாக அறிவு பெற்ற மக்களின் எண்ணிக்கை உயரும் என்ற கருத்து வலுவிழந்து கொண்டே வருகின்றது. தானாகத் தேடிப் படித்த காலத்தில் இருந்த புத்தி ஜீவிகள் மட்டுமே இன்றும் புத்திஜீவிகளாக இருக்கின்றனர், அதே விகிதத்தில். அக்காலத்தில் அறிதலின்றி இருந்த மக்கள் இன்றும் அதே அறிதலின்றியே இருக்கின்றனர். வித்தியாசம் ஒன்றுமே இல்லை. எல்லாம் தன்னை நோக்கி வர வேண்டும், தன்னை மகிழ்விக்க வேண்டும் என்ற அன்றை அதே மனநிலை கொண்ட மக்களே இன்றும் இணையத்தில் எந்த புது முயற்சியையும் செய்யாமல் தன்னிடத்தே வரும் தகவல்களை வைத்தே தான் அறிவுஜீவி என்ற எண்ணத்தை அடைகின்றனர். இது அக்காலத்தைக் காட்டிலும் மிக மோசமானது. அன்றைய மக்களுக்கு குறைந்த பட்சம் தான் அறிதலின்றி இருக்கிறோம் என்ற எண்ணமிருந்தது. அதனால் அவர்களால் சமூகத்திற்கு பெரிய பாதிப்பேதும் இல்லை. ஆனால் இன்று உள்ள ஒருவனுக்கு தான் உண்மையான அறிதலின்றி இருக்கிறோம் என்ற எண்ணமே கிடையாது. எல்லாவற்றிலும் தன்னிடத்தில் அறிவு உண்டு என்ற எண்ணம் கொண்டே சமூகத்தை சீரழிக்கின்றனர்.

உதாரணமாக ஜெயலலிதா வழக்கின் போது ஜெயலலிதா ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பதிவுகள் இட, அதனை ஷேர் செய்த பலர் உண்டு. அவர்கள் ஜெயலலிதா பற்றிய முன்முடிவுகளுக்கு எப்பொழுதோ வந்திருப்பார்கள். அவர்களுடைய முடிவுகளுக்கு வலு சேர்க்கும் விஷயங்களைப் பார்க்கும்போது அதனை உபயோகப்படுத்திக்கொள்வார்கள். மறு தரப்பைப் பற்றிய எண்ணமே இருக்காது, இருந்தாலும் அதனை எப்படி பொய்யென்று நிருபிப்பதென்பதிலேயே எண்ணம் இருக்கும். அதனால் அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை கவிழ்கும் எண்ணத்திலேயே கவனிப்பார்கள்,வாசிப்பார்கள் அறிந்துகொள்வதற்காக அல்ல.

மற்றொன்று ஜெயலலிதாவுக்கு ஆதரவாக போராட்டம் செய்தவர்களோ, அல்லது கட்சி நபர்களோ முன்முடிவுகளோடு வாதிட்டவர்கள் மட்டுமே. (உண்மையான பொதுமக்கள் இதில் பங்கேற்றார்களா என்பதே கேள்வி?) அவர்கள் முடிவு செய்துவிட்டார்கள். ஒருவேளை ஜெயலலிதா நிரபராதி என விடுவிக்கப்பட்டிருந்தால் நீதி வென்று விட்டது என்று நீதிபதியைக் கொண்டாடி இருப்பார்கள். தண்டனை பெற்றதால் அரசியல் சூழ்ச்சி என்கிறார்கள். மோடி வெளிநாடு போய்விட்டார் என்கிறார்கள், குன்ஹா கன்னட வெறியர் என்கிறார்கள். அவர்கள் தரப்பு என்பது ஜெயலலிதா செய்வது சரியே. அது எதுவென அவர்களுக்கு கவலை இல்லை.

இன்றை இந்திய அரசிலமைப்புச் சட்டத்தின்படி 100 க்கு 99 விழுக்காடு தவறு இருந்து 1 விழுக்காடு தப்ப்பிப்பதற்கான வாய்ப்பு இருந்தாலே அரசியல்வாதிகள் தப்பித்து விடுவார்கள். இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இன்றுவரை அரசியல் தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள், அதில் தண்டனை பெற்றவர்கள், விடுதலையானவர்கள் என்ற கணக்கைப் பார்த்தால் புரியும். 0.1 விழுக்காடு அரசியல்வாதிகள் கூட தண்டிக்கப்பட்டதில்லை. அதுதான் உண்மை. ஆனால் வழக்கு தொடங்கும் காலத்திலும், அதனைப் பற்றிய தீவிர நிகழ்வுகளின் போதும் மட்டும் ஊடகங்களில் பெரியதாக பேசுவதோடு சரி. மக்களும் அப்படியே. ஆனால் ஜெயலலிதாவின் வழக்கில் அப்பட்டமாக மாட்டிக்கொண்டார். வேறு வழியே இல்லை. அதனால் அவர் ஊழல் செய்யவில்லை என்ற வாதமே வீண். எவ்வளவு தண்டனை, எவ்வளவு அபராதம் என்பது மட்டுமே நாம் அறிய வேண்டியது. ஆனால் ஜெயலலிதா ஆதரவாளர்கள் என்ன செய்தார்கள். திரும்பத்திரும்ப ஜெயலலிதாவின் தரப்பை நியாயப்படுத்த ஆட்களைத் திரட்டியோ மிரட்டியோ போராட வைத்தனர்.

தன் தரப்பினைச் சார்ந்தவர்கள் செய்யும் தவறுகள் எல்லாம் சரியாகவே பார்க்கப்படும் மனநிலை உள்ளவரை ஆயிரம் அரசு அமைந்தாலும் இந்தியாவில் மாற்றம் வராது. நம் மக்கள் ஊழல்வாதிகள். அரசும் அதிகாரிகளும் அடுத்ததுதான். தனக்கு லாபமென்றால் சரி எனும் மக்களின் மனப்பாங்கு, சம்பந்தமே இல்லாமல் எங்காவது ஊழல் நடக்கும் போது பொங்கி எழும். ஒன்றைத் தெரிந்து கொள்வோம், நமது அரசியல்வாதிகள் நம்  பிரதிபலிப்புகளே.

எல்லாவற்றிற்கும் அதிகாரிகள் சரியில்லை, அரசு சரியில்லை, நிர்வாகம் சரியில்லை என்று சொல்லும் ஒருவனே முதல் ஊழல்வாதி. ஒரு நபரின் செயல்பாடுகளுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தால் அவனை மாற்று சார்பு கொண்டவனாகவே அடையாளப்படுத்துவது நம் சமுதாயத்தின் இழிநிலை.  உதாரணத்திற்கு ஜெயலலிதா வழக்கைப் பற்றி பேசினால் உடனே ஒருவன் அப்போ 2G என்று ஆரம்பிப்பான். அதற்காகவே ஒவ்வொரு முறை எழுதும்போதும் யாரைப்பற்றி எழுதுகிறோமோ அவர்களின் எதிர்த்தரப்பின் குறைகளை சுட்டிக்காட்டி அதுவும் தவறு இதுவும் தவறு தன் நடுநிலைமையை நிருபிக்க வேண்டியிருப்பதே ஒரு விமர்சகனின் சாபம்.

தேர்வு முடிவுகள்

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் வெளிவந்திருக்கின்றன. இந்த வருடம் வழக்கத்தைவிட அதிகமாக தேர்ச்சி விகிதம், மதிப்பெண்கள் பெற்றுள்ளதை தேர்வு முடிவுகள் காட்டுகின்றன. அனைவரையும் வாழ்த்தும் அதே வேளையில் இந்த தேர்வு முடிவுகளின் உண்மை நிலையை நாம் விவாதிக்க வேண்டியுள்ளது.

முதலாவது தமிழகத்தைப் பொறுத்த வரையில் தேர்ச்சி விழுக்காடு என்பதனை பெரும்பாலும் கடந்த ஆண்டின் தேர்ச்சி விழுக்காட்டிலிருந்து அதிகபட்சம் ஐந்து விழுக்காட்டிற்குள் அதிகமாகவோ குறைவாகவோ இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள். கடந்த ஆண்டுகளின் தேர்ச்சி விகிதத்தை ஒப்பிட்டுப் பார்த்தோமேயானால் இந்த‌ உண்மை நமக்குத் தெரியும்.

தேர்வு விழுக்காட்டினைக் குறைத்தால் அது அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதனால் தேர்வுத்தாள்கள் திருத்தப்பட்டபின்னர் தேர்ச்சி விகிதம் மதிப்பிடப்படும். கடந்த ஆண்டை விட அதிகமாகக் குறையும் பட்சத்தில் எந்த பாடத்தில் அதிகம் பேர் தோல்வி அடைந்திருக்கிறார்களோ அதில் 5 மதிப்பெண் வழங்கினால் தேர்வு விழுக்காடு எவ்வளவு அதிகரிக்குமென கணக்கிடப்படும். இல்லையென்றால் 10 மதிப்பெண்கள் வழங்கி விழுக்காடு கணக்கிடப்படும். எதிர்பார்க்கும் விழுக்காட்டிற்கு அருகில் எத்தனை மதிப்பெண்கள் வழங்கினால் தேர்ச்சி விகிதம் வருகிறதோ அத்தனை மதிப்பெண்ணை வழங்கிவிடுவார்கள். ஆக‌ என்ன செய்கிறோம்? மாணவர்களின் திறனை மதிப்பிடுவதற்குப் பதில் தேர்ச்சி விழுக்காட்டிற்காக மதிப்பிடுகிறோம்.

மற்றொன்று பாடத்திட்டம். இந்த முறை மாணவர்கள் சமச்சீர் கல்வித்திட்டத்தின் கீழ் தேர்வெழுதியதால் அதிக மதிப்பெண் பெற்றதாக ஒரு சாரர் விளக்கமளிக்கின்றனர். அது முழவதும் சரியல்ல என்பதே உண்மை. அனைவருக்கும் பொதுவான ஒரு கல்வித்திட்டமென்பதில் பெரும்பாலானவர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்காது. ஆனால் அது தரமானதா என்பதுதான் கேள்வி.

சம‌ச்சீர் கல்வி முந்தைய பாடத்திட்டத்தை விட சிறப்பானதுதான். ஆனால் அந்த சமச்சீர் கல்வியும் இன்றைய குழந்தைகளுக்கு ஏற்ப இல்லை. எப்படி சொல்வதென்றால் 100க்கு 5 மதிப்பெண்கள் எடுத்து கொண்டிருந்த‌ நாம் இப்போது 10 மதிப்பெண்கள் எடுத்துக்கொண்டிருக்கிறோம். இரண்டுமே தோல்விதான்.

நாம்தான் தேர்ச்சி விழுக்காடு 90, 80 என வைத்துள்ளோமே எனக்கூறுபவர்கள் 450 க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களிடம் இந்த தேர்வுக்கு வந்த அனைத்து அறிவியல் கேள்விகளுக்குமான நடைமுறை உபயோகங்களைக் கேட்டுப்பார்த்தால் தெரியும். ஐந்து விழுக்காடு மாணவர்கள் சரியான பதில் கூறினால் ஆச்சரியம். இந்நிலையில் 70000 பத்தாம் வகுப்பு மாணவர்கள் 100க்கு 100.  இதுதான் நம் நிலை.

அதோடு இன்றைய பாடத்திட்டத்தில் புத்தகத்திற்கு வெளியே பாடம் தொடர்பான‌ கேள்வியே கேட்கப்படுவதில்லை. வார்த்தை மாறாமல் புத்தகத்திலிருந்து கேட்கிறார்கள். அத்தோடு இன்றைய ஆசிரியர்கள் மற்றும் நிறுவனங்க‌ள் புத்தகத்தைப் போதுமான அளவிற்கு பகுத்து 100க்கு 100 பெறுவதற்கான சூத்திரத்தை உருவாக்கி விட்டார்கள். உதாரணமாக முதல் இரண்டு பாடத்திலிருந்து 30 மதிப்பெண்கள் வருமென்றால் அதற்கு தகுந்தாற்போல பயிற்சியைக் கொடுத்துவிடுகிறார்கள. முழுவதுமாக புரிந்து எல்லா பாடத்தையும் படிக்க வேண்டிய அவசியமில்லை.

அதன் பொருள் மாணவர்கள் புத்திசாலிகள் அல்ல என்பதல்ல. பாடத்திட்டம் புத்திசாலித்தனமாக இல்லை என்பதுதான். கூரான கத்தியை சொற சொறப்பான தரையில் கூர் தீட்டுகிறோம். நமக்குள் பாராட்டியும் கொள்கிறோம். இன்றைய சமச்சீர் கல்வி மிகச் சிறப்பாக உள்ளதாகக் கூறுவோரும் உண்டு. அவர்களுடைய அறிவைக்கொண்டு மாணவர்களின் அறிவை மதிப்பிட்டு அதற்கு ஏற்ப சமச்சீர் கல்வி தரமானது என்கிறார்கள். அது தவறுதானே?

இன்றைய குழந்தைகளின் அறிவுத்திறன் மிக மிக அதிகம். உதாரணமாக நாம் 20 வயதில் எந்த அறிவைப்பெற்றிருக்கிறோமோ அதனை இன்றைய குழந்தை 10 வயதிலேயே பெற்று விடுகிறது. நாம் அந்த குழந்தைக்கான பாடத்தை வடிவமைக்கவேண்டுமே தவிர நாம் குழந்தையாக இருந்தால் எது பாடமாக இருக்கவேண்டுமோ அதை வைக்கக் கூடாது. இல்லை, நாம் வழக்கம்போல பழைய மாவையே அரைத்துக்கொண்டிருந்தோமேயானல் நமக்குள் நாமே பாராட்டிக்கொள்வதோடு நம் கல்வியும் அறிவும் முடிந்து விடும். இந்திய அளவிலான தேர்வுகளிலோ, உலக அரங்கிலோ நாம் மிகவும் பின் தங்கி விடுவோம். இன்று அதுதான் நடைபெறுகிறது.

இல்லை, நமது பாடத்திட்டமும் சரி, மதிப்பெண்களும் சரி என்று வாதிடுவோர்களிடமெல்லாம் நாம் இப்படிக் கேட்போம். நீங்கள் கூறுவது போல் மிகச்சிறந்த மாணவர்களெல்லாம் இங்குதான் உருவாகிறார்களென்றால் கடந்த பத்தாண்டுகளின் ஒரு பெரிய கண்டுபிடிப்பு கூட இந்தியாவில் இல்லாததன் காரணம் என்ன? அவர்களிடம் பதில் இருக்காது.

அதற்கான பதிலையும் நாமே கூறிவிடுவோம். உலகம் மிக நெருக்கமாக சுருங்கி வரும் இன்றைய காலக்கட்டத்தில் ஒரு துறையில் புதியதாக ஒன்றை நாம் கண்டுபிடிக்க வேண்டுமாயின் முதலில் இன்றைய நிலையில் அத்துறையில் இருப்பவை எவை, புதிதாக கண்டுபிடிக்கப்பட்டவை எவை என்பதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு மிகச்சிறந்த காரை வடிவமைக்கும் முன்னர் தற்போதிருக்கும் சிறந்த காரைப்பற்றிய முழு அறிவும் பெற்றிருந்தால் தானே நாம் அதைவிட சிறப்பாக உருவாக்க முடியும்? நாமோ இன்னும் சைக்கிளிலேயே காலத்தைத் தள்ளிக்கொண்டிருக்கிறோம். அப்புறம் எங்கே மிகச்சிறந்த காரை வடிவமைப்பது?

மாணவர்கள் கல்வியைக்காட்டிலும் மிக அதிகமாக வெளியில் கற்றுக்கொள்கிறார்கள். நாம் பாடத்திட்டத்தை பல ஆண்டுகளுக்கு ஒரு முறை பெயரளவிற்கு மாற்றுகிறோம். ஆனால் இன்றைய நவீன உலகம் வாழக்கூடிய‌ சூழல் மிக மிக விரைவாக தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. அதிலிருந்தே இன்றைய குழந்தைகள் அதிகமாகக் கற்றுக்கொள்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளில் மொபைல் தொழில் நுட்பம் என்பது மிகப்பெரும் அளப்பறிய மாற்றங்களை கண்டுள்ளது. இரண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் Wi-Fi வழியாக ஒரு போனிலிருந்து மற்றொன்றிற்கு வேண்டியவற்றை Copy செய்கிறான். ஆனால் 12ஆம் வகுப்பு வரை Wi-Fi பற்றிய ஒன்றே பாடத்தில் இல்லை.  இது உதாரணம்தான்.

அத்தனை விரைவாக பாடத்திட்டத்தை மாற்ற வேண்டியதில்லை என்றாலும் ஆண்டு தோறும் மதிப்பீட்டுகளின் அடிப்படையில் ஒரு மிகச்சிறந்த நிபுணர் குழுவை அமைத்து பாடத்திட்டங்களை தொடர்ச்சியாக மேம்படுத்துவதே சரியாக இருக்கும். ஏனெனில் உலகம் வல்லமையால் ஆளப்பட்ட காலம் கடந்து விட்டது. இன்று உலகை ஆள்வதும் இனி உலகை ஆளப்போவதும் அறிவு மட்டுமே. அதுவே நமக்கும் தேவை.

நன்றி.