பாஜக‌

புதிய இந்தியா

16வது மக்களவைத்தேர்தல் சிறப்பாக முடிவடைந்திருக்கிறது. இந்த தேர்தலைப் பொறுத்தமட்டில் நாம் மிகப்பெரும் பெருமை கொள்ளத்தக்க செய்தி உலகின் எந்த ஒரு தேசமும் இத்தனை பெரிய ஜனநாயக வலிமை கொண்டிருக்கவில்லை என்பதுதான். என்னதான் ஜனநாயகம் என்று வெளிக்காட்டிக்கொண்டாலும் தன்னளவில் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ சர்வாதிகாரப்போக்குடையதாகவே இருந்திருக்கிறது, இருக்கிறது. நம்மில் பத்தில் ஒரு பங்கிற்கும் குறைவான நிலப்பரப்புள்ள தேசங்களிலும் சரி நம்மை சுற்றியுள்ள தேசங்களிலும் சரி ஜனநாயகம் சரிவர செயல்படுவதில்லை. உதாரணம் சிங்கப்பூர், உக்ரைன், பாகிஸ்தான், இலங்கை. உக்ரைனில் புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் முந்தைய அதிபர் யானுகோவிச் ரஷ்யாவில் அடைக்கலமாக இருந்துகொண்டு அவர்களின் ஆதரவோடு உக்ரைனைப் பிரித்து ரஷ்யாவோடு இணைக்கும் செயல்களைச் செய்கிறார். இதற்கு மக்கள் விருப்பம், அந்தப் பகுதி மக்களின் முடிவு என்று ஜனநாயகக்காரணங்களை உலகுக்கு கூறிவருகின்றனர்.

இந்நிலையில் நம் நாட்டின் தேர்தலைப் பொறுத்தமட்டில் தோற்ற அனைத்து வேட்பாளர்களுமே, அனைத்துக் கட்சிகளுமே தோல்வியை ஏற்றுக்கொண்டிருக்கின்றன. இதுவே ஜனநாயகம். இதற்காகவே நாம் ஆயிரம் முறை பெருமைப்படலாம்.

ஆனால் நம் மனப்பாங்கு என்பது எப்பொழுதுமே ஒன்றைப் பற்றி அதீத ஆர்வத்தோடும் எதிர்பார்ப்போடும் இருந்து விட்டு அது கிடைத்ததும் அதனை எதிர்பார்த்த அளவிற்கு விரும்பாமல் அடுத்த ஒன்றைப் பற்றிய அதீத ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் கொண்டிருப்பதே. ஒருவேளை நாம் அதற்கே பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம்.

சரி, இப்போது மோடி தலைமையிலான அரசு தனிப்பெரும்பான்மையோடு வெற்றி பெற்றிருக்கிறது. இதற்கு வழக்கம் போல நமது பத்திரிக்கைகளும், விமர்சகர்களும் முடிவு தெரிந்ததனால் ஆயிரம் விளக்கம் அளிப்பார்கள். எது எப்படியோ பாஜக வெற்றி பெற்றுவிட்டது. இதுதான் சாராம்சம்.

நாமோ வழக்கம் போல மோடி வெற்றி பெறுவார் என்று அதீதமாக விவாதித்து விட்டு வெற்றி பெற்றதும் அடுத்து அவருடைய செயல்பாடுகளினை பற்றி விவாதிக்கத் தொடங்கியிருக்கிறோம். வழக்கம் போலவே மிகப்பெரிய மாற்றத்திற்கான எந்த செயலையும் நம்மளவில் செய்யாமல் மிகப்பெரிய மாற்றத்தை மட்டுமே எதிர்பார்க்கும் மனநிலை இருக்கும் வரை ஆயிரம் மோடி வந்தாலும் நாம் எதிபார்க்கின்ற அந்த மாற்றம் வரப்போவதில்லை.

மற்றொரு முக்கியமான ஒன்று நம்முடைய‌ சட்டென்று மாறக்கூடிய‌ மனநிலை. மக்களும் சரி, பத்திரிக்கையாளர்களும் சரி இதற்கு விதி விலக்கல்ல. இது இன்றைய நிலையில் நமக்கு மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துக் கொண்டு வருகிறது. உதாரணமாக ஆம் ஆத்மி கட்சிக்கு இந்திய அளவில் மிகப்பெரிய அளவில் ஆதரவு இருப்பது போலக் காட்டினர். சட்டென்று அவர்களின் செயல்பாடு சரியில்லை என மதிப்பீட்டை 100 லிருந்து 0 ஆக்கிவிட்டனர். இதில் பத்திரிக்கைகளுக்கும் முக்கிய பங்கு உண்டு. ஆம் ஆத்மியின் சரியில்லாத செயல்பாடுகள் என்னென்ன என்று அறியாமலேயே அவர்களின் மீதான மதிப்பை உயர்த்தியும் தாழ்த்தியும் மிகச் சொற்ப கால இடைவெளியில் மாற்றிக்கொண்ட பலருண்டு.

ஆம் ஆத்மி டெல்லி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அதற்கு அடுத்த நாட்களில் வெளிவந்த பத்திரிக்கை செய்திகளையும், தற்போது அதே டெல்லியில் ஒரு இடம் கூட வெற்றி பெற முடியாமல் உள்ள போது வந்திருக்கக் கூடிய‌ செய்திகளையும் நாம் ஒப்பிட்டுப் பார்த்தால் பத்திரிக்கைகளுடைய தலைகீழ் நிலைப்பாடு புரியும். மக்களும் அப்படியே, என்ன? மக்களின் அன்றைய மனநிலையை ஆவணப்படுத்தவில்லை. அதனால் நிருபிக்க வழி இல்லை.

அதற்கு அவர்களின் செயல்பாட்டினைக் காரணம் கூறினாலும் ஆம் ஆத்மியைத் தவிர்த்து வேறெந்த செய்தியை வேண்டுமானாலும் எடுத்து ஒரு பத்திரிக்கையின் முந்தைய பிந்தைய செய்திகளை ஒப்பிட்டுப் பாருங்கள், புரியும்.

சரி இதனை நாம் மோடி வெற்றியோடு எப்படி ஒப்பிடலாம்? பாஜக இந்திய அளவில் பெரும்பாலும் அனைத்து மாநிலங்களில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதே சமயம் பல கட்சிகள் மிகப்பெரிய தோல்விகளைச் சந்தித்திருக்கின்றனர். இனி இந்தியாவின் அனைத்து எதிர்க்கட்சிகளுடைய ஒரே பணி மோடி அரசை விமர்சனம் செய்வதே. மோடி அர‌சு செய்யும் சிறு பிழை கூட இந்திய அரசியல் கட்சிகளின் கழுகுப்பார்வையாலும், பத்திரிக்கைகளாலும் பெரிது படுத்தப்படும்.

மற்றொன்று இதுவரை எதிர்க்கட்சியாக இருந்ததால் மிகப்பெரிய அளவில் விளம்பரத்தை திட்டமிட்டு செய்து காங்கிரஸுக்கு எதிரான மனநிலையை சாதகமாக உபயோகப்படுத்திக் கொண்டனர் பாஜகவினர். இனி அப்படியில்லை. அவர்கள்தான் செயல்படப்போகிறார்கள். இனியும் வெறுமனே விளம்பரத்தால் காலம் தள்ளமுடியாது.

மோடிக்கு மிகப்பெரிய அளவில் தனிப்பெரும்பான்மை வழங்கப்பட்டிருக்கிறது. அத‌னால் கூட்டணிக் கட்சிகளின் வற்புறுத்தல் இல்லாமல் தேசத்தின் நீண்டகால நலன் தொடர்பான செயல்பாடுகளை விமர்சனத்துகளுக்கு அப்பாற்பட்டு ராஜ்ய சபாவில் போதிய பெரும்பான்மை இல்லாததால் மற்ற கட்சிகளின் ஆதரவோடு செய்ய வேண்டியதே அவர்களின் தலையாய பணி.

நாம் நம் வாழ்கைத்தரம் மிகப்பெரிய மாற்றத்தை சந்திப்பதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை நம் மீது வைத்து அதனை நோக்கி உழைப்பதை விடுத்து மோடி என் வாழ்க்கையை தலைகீழாக மாற்றவேண்டும் என்ற எண்ணத்தை விடுவோம். இதுவே நம்முடைய‌ தலையாய பணி.

நன்றி.