விமர்சனம்

வெள்ளை யானை

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களால் எழுதப்பெற்று 2014 ல் வெளிவந்த நாவல். 1800 களின் பிற்பாதியில் நடந்த ஐஸ் ஹவுஸ் போராட்டத்தை மையமாக வைத்து எழுதப்பட்டது. ஏய்டன் என்னும் அயர்லாந்து நாட்டு பிரஜை இங்கிலாந்து அரசிற்காக சென்னையில் ராணுவ அதிகாரியாகப் பணி புரிகிறான்.

அக்காலகட்டத்தில் பிரிட்டீஷ் அரசின் பிற தேசத்துப் போர்களுக்காக இங்கிருந்து தானியங்கள் மிகப்பெரிய அளவில் ஏற்றுமதி செய்யப்படுவதால் மிகப்பெரிய அளவில் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் ஒருவேளை உணவுக்கே அல்லாடும் நிலையில் இருக்கிறார்கள். அப்பஞ்சத்தை தங்களுக்கு சாதகமாக உபயோகப் படுத்திக்கொள்ளும் பிரிட்டீஷ் அரசாங்கமும், தோட்ட முதலாளிகளும் மிகக்குறைந்த ஊதியத்திற்கு வேலையாட்களை வேலைக்கு அமர்த்துகின்றனர். அதாவது அரையணா ஒரு நாளைக்கு கூலி. அதற்கே மக்கள் வரிசையில் காத்துக்கிடக்கிறார்கள்.

vellaiyanai2

இந்த வாய்ப்பினால் பஞ்சத்தை அவர்கள் விரும்புகின்றனர். அத்தோடு அதனைப் போக்க முயற்சிக்கும் ஒரு சிலரது முயற்சிகளுக்கும் தடை போடுகின்றனர். இச்சூல்நிலையில் இயல்பாகவே அய்ர்லாந்து இங்கிலாந்து பேதமுள்ள சூழ்நிலையில் வளர்ந்தவனாகையால் ஏய்டனுக்கு இங்கு நடைபெறும் சுரண்டல்களும், அடிமைத்தனமும் மிகப்பெரும் வெறுப்பை உண்டாக்குகின்றன.

அப்போது சென்னையின் ஐஸ் ஹவுஸில் வேலையாட்களை அடித்து துன்புறுத்துவதைக் காணும் ஓர் சூழ்நிலை அவனுக்கு உருவாகிறது. அது அவனுடைய மனசாட்சியை உலுக்குகிறது. அதனால் அவர்கள் (ஐஸ் ஹவுஸ்) மீது நடவடிக்கை எடுக்கிறான். இந்த ஐஸ் ஹவுஸ் அமெரிக்க நிறுவனத்தால் நடத்தப்படுவதால் அவனுடைய அதிகார எல்லைக்குட்பட்டே நடவடிக்கைகளை எடுக்க முடிகிறது. அதனால் அவன் தனது மேலதிகாரிகளிடம் இப்பிரச்சினையை எடுத்துச் செல்ல நினைக்கிறான்.
vellaiyanai3

அவ்வாறு எடுத்துச் செல்வதற்கு இன்னும் பல தகவல்கள் தேவைப்படுவதால் மக்களின் பஞ்சத்தினையும் சுரண்டல்களையும் மேலும் அறிவதற்காக சென்னையிலிருந்து செங்கல்பட்டு வரை பயணம் செய்கிறான். அதில் அவன் அடையும் மனப்பிறழ்வுகளும் அவன காணும் காட்சிகளும் அவனை உலுக்குகின்றன. இறுதியாக ஏய்டன் தன்னுடைய அறிக்கையை சமர்ப்பிக்கிறான்.

இதற்கிடையில் ஆரம்பத்தில் அடிவாங்கிய வேலையாட்கள் கொல்லப்படுகிறார்கள். இதனால் ஐஸ் ஹவுஸ் வேலையாட்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இறுதியாக அப்போராட்டம் முற்றிலும் ஒடுக்கப்படுகிறது. மேலதிகாரிகளால் தென்காசிக்கு மாற்றப்படுகிறான் ஏய்டன். அத்தோடு நாவல் நிறைவு பெறுகிறது.

இந்நாவலின் சிறப்பென்பது பஞ்சம் பற்றிய வர்ணனைகள் மற்றும் அதற்கான காரணங்களை நாவலின் கதாபாத்திர‌ங்களே விளக்குவது. 1800 காலகட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளதால் அக்கால பஞ்சத்தைப் பற்றியும், பிரிட்டீஷ் அரசாங்கத்தின் சுரண்டல் பற்றியும் அறிந்து கொள்ளலாம். கண்டிப்பாக ஜெயமோகன் அல்லாமல் வேறு யாராவது எழுதியிருந்தால் சிறுகதையாக முடிந்திருக்க வேண்டிய நாவல். அவராலே இதனை நாவலாக்க முடிந்திருக்கிறது. வாசிக்க வேண்டிய நாவல்.

சொர்க்கத்தின் குழந்தைகள்

சொர்க்கத்தின் குழந்தைகள் (Children of Heaven). ஈரானியத்திரைப்படம். 1997 ல் வெளிவந்தது. மஜித் மஜித் இயக்கம். அலி, சாரா இருவரும் அண்ணன் தங்கை. மிக ஏழ்மையான குடும்பம். தந்தை வேலைக்கு செல்ல, தாய் உடல் நலமின்றி இருக்கிறார். ஒருநாள் தங்கையின் கிழிந்த ஷூவை தைத்துக்கொண்டு வரும் வழியில் அலி அதனை தவற விட்டு விடுகிறான். தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. தங்கையிடம் அதனை அம்மாவிடமும், அப்பாவிடமும் கூற வேண்டாம் எனக் கேட்கிறான்.

இரவு படிக்கும் பொழுது ரகசியமாக இருவரும் காகிதத்தில் எழுதி பேசிக்கொள்கிறார்கள். மறுநாள் எப்படி பள்ளிக்கு செல்வது என சாரா கேட்கிறாள். அவளுக்கு காலையில் பள்ளி என்பதால் தன் ஷூவை அணிந்துகொண்டு செல்லும்படியும் அவள் திரும்பி வந்தபின்னர் தான் ஷூவை அணிந்துகொண்டு செல்வதாகவும் கூறுகிறான். அது தனக்கு மிகவும் பெரியதாக இருக்கும் எனவும் அதனைப் போட்டுக்கொண்டு தன்னால் விரைவாக நடக்க முடியாது எனவும் கூறுகிறாள். அலி கெஞ்சிக் கேட்கவே சம்மதிக்கிறாள்.

அதன்படி சாரா தினமும் பள்ளி முடிந்ததும் விரைந்து ஓடி வருகிறாள். அலி வழியில் அவளுக்காக காத்து நிற்கிறான். ஷூவை மாற்றிக்கொள்கிறார்கள். இப்படியே சில நாட்கள் கடக்கிறது. அலி தினமும் பள்ளிக்கு ஓடுகிறான். என்னதான் அலி விரைவாக ஓடினாலும் பள்ளிக்கு தாமதமாகச் செல்கிறான். முதலிரு நாட்கள் மன்னிக்கும் தலைமையாசிரியர் மூன்றாவது நாள் அவனை பெற்றோரை அழைத்து வரும்படி சொல்கிறார். தன் தந்தைக்கு தெரிந்துவிடும் எனப் பயப்பட்டு அழுகிறான். அங்கு வரும் அவனது வகுப்பு ஆசிரியர் அவன் வகுப்பில் ந‌ன்றாக படிக்கும் மாணவன் எனவும் தனக்காக அவனை மன்னிக்கும்படியும் கூறுகிறார். அலி யாரிடமும் உண்மையை கூறாமல் மறைக்கிறான். அலிக்கும் சாராவுக்கும் ஒற்றை ஷூ என்பது மிகப்பெரிய பிரச்சினையாக மாறுகிறது.

பின்னர் ஒருநாள் தன்னுடைய ஷூவை பள்ளியில் வேறோர் மாணவி அணிந்திருப்பதை சாரா பர்க்கிறாள். அண்ணனிடம் சொல்லி இருவரும் அவளைப் பின் தொடர்ந்து சொல்கிறார்கள். அங்கே அவர்கள் அம்மாணவியின் தந்தை கண் தெரியாதவராக இருப்பதைப் பார்த்துவிட்டு ஷூவைக் கேட்காமல் வந்துவிடுகிறார்கள்.

இச்சமயத்தில் அலியின் அப்பாவுக்கு அவருடைய முதலாளி ஒரு புல் வெட்டும் கருவியைத் தருகிறார். அதனைக் கொண்டு நகரத்தின் உயர்குடியினர் வாழும் பகுதிக்கு வேலை தேடி தந்தையோடு விடுமுறை நாளில் செல்கிறான் அலி. அங்கே தோட்ட வேலை செய்வதால் அவனுடைய அப்பாவுக்கு பணம் கிடைக்கிறது. அது அவர் ஒரு வாரம் செய்யும் வேலைக்கான கூலி எனவும், ஒரே நாளில் கிடைத்து விட்டதாகவும் கூறுகிறார். திரும்ப வரும்பொழுது அலியிடம் என்ன வேண்டுமெனக் கேட்கிறார். அலி தங்கைக்கு ஒரு புது ஷூ வாங்கலாம் என்று கூறுகிறான். ஆனால் திடீரென்று அவர்கள் சைக்கிள் ப்ரேக் பிடிக்காமல் அவர்கள் விழுந்து விடுகிறார்கள். மருத்துவமனையில் அனைத்து பணமும் செலவாகி விடுகிறது.

மற்றோர் நாள் பள்ளியில் மாரத்தான் ஓட்டப்பந்தயம் ஒன்றிற்கான அறிவிப்பு வெளியாகிறது. தன்னிடம் நல்ல ஷூ இல்லாததால் அதில் கல‌ந்து கொள்ளாமல் போகும் அலி, பின்னர் அதில் இரண்டாம் இடம் பெற்றால் பரிசு ஷூ எனத் தெரிந்ததும் கலந்து கொள்கிறான். தன் தங்கையிடம் தான் அதில் வெற்றி பெற்று விடுவேன் என்றும் அதனைக் கடையில் கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக சாராவுக்கு ஒரு ஷூ வாங்கித் தருவதாகவும் சொல்கிறான். ஆனால் அவன் முதலாவதாக வந்து விடுகிறான். தனக்கு இரண்டாம் இடம் கிடைக்கவில்லை என்றதும் அழுகிறான் அலி.

வீட்டிற்கு வரும் அலி தன் தங்கையிடம் தன்னால் இரண்டாம் இடத்திற்கு வர முடியவில்லை எனக் கூறுகிறான். சாரா என்ன சொல்வதென்று புரியாமல் விழிக்கிறாள். அதற்குள் அம்மா அழைக்கவே ஓடிப்போகிறாள். வருத்தத்தோடு அலி அமர்கிறான். அதே சமயத்தில் அலியின் அப்பா அலி கூறியதை நினைவில் வைத்திருந்து இருவருக்காகவும் புது ஷூக்களை வாங்குகிறார். அத்தோடு படம் நிறைவைடைகிறது.

மீண்டும் உண்மைக்கு அருகில் ஒரு திரைப்படம். இந்த திரைப்படம் இயல்பாக இருக்கவேண்டும் என்பதற்காக மக்களுக்குத் தெரியாமல் படம் பிடிக்கப்பட்டது. ஒண்ணரை மணி நேரம் திரைப்படம். முதல் காட்சி முதல் கடைசி காட்சி வரை அத்துனை இயல்பு. அலியாக நடித்திருக்கும் ஆமீர் ஃபரூக் ஹாசிமியனும், சாராவாக நடித்திருக்கும் ஃபகாரே சித்திகிவும் ஆகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். சாரா தன்னுடைய ஷூவை இன்னொரு மாணவி அணிந்திருப்பதைப் பார்த்ததும் அடுத்த இடைவேளைகளில் அனைவருடைய கால்களையும் பார்த்துக் கொண்டே செல்லும் காட்சி, சாரா தாமதமாக வந்த பின்னர் அலி திட்டும் பொழுது உன்னால் தான் இதெல்லாம் நான் அம்மாவிடம் சொல்லப் போகிறேன் என்று சொல்லும் சாராவிடம் “போய் சொல்லு அவங்களாலே வாங்கித்தர முடியாது பாவம்!” என அப்பா அம்மாவுக்காக அலி பேசும் காட்சி என் பெரும்பாலும் மனதை நெருட வைக்கும் காட்சிகள். அருமையான ஒரு பதிவு.

A Separation – Movie

A Separation என்ற ஈரானிய திரைப்படத்தை சமீபத்தில் பார்த்தேன். 2011 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். ஆஸ்கர் ஃபர்காதி இயக்கம். முக்கிய கதாபாத்திரங்கள் பேய்மன் மோடி,லைலா ஹடாமி,ஷாகப் ஹூசைனி.

நாதெர், சிமென் இருவரும் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் விசாரிக்கப்படுவதிலிருந்து கதை தொடங்குகிறது. சிமென் தான் தன் மகளின் எதிர்காலத்துக்காக ஈரானை விட்டு வெளிநாடு செல்ல வேண்டுமெனவும், ஆனால் நாதெர் தன்னுடன் வர மறுப்பதால் தனக்கு விவாகரத்து வேண்டுமெனக் கேட்கிறாள். இல்லையெனில் தன் மகளைத் தன்னுடன் அனுப்பும்படி கேட்கிறாள். நாதெர் தன்னுடைய தந்தையை விட்டு தன்னால் வர முடியாது என்கிறான். நீதிபதி இது ஒரு பெரிய பிரச்சினை அல்ல எனக்கூறி வழக்கைத் தள்ளுபடி செய்கிறார்.

அதன் பின்னர் சிமென் கோபித்துக்கொண்டு இனி தான் திரும்பி வரப்போவதில்லை எனக்கூறி விட்டு சென்றுவிடுகிறார். அவர்களின் மகள் டெர்மி தந்தையோடு தங்கி விடுகிறாள். டெர்மி பள்ளி மாணவி. நாதெரின் அப்பா அல்சமீர் என்னும் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர். எந்த ஒரு விஷயமும் நினைவில் தங்காதவர். அதனால் தானும் தன் மகளும் சென்றபின்னர் அவரைப் பார்த்துக்கொள்வதற்காக ஒரு பணிப்பெண்ணை வேளைக்கு அமர்த்துகிறார் நாதெர். அப்பணிப்பெண் ஓர் கர்ப்பிணி. அவளுக்கு ஒரு 4 வயது பெண் குழந்தை இருக்கிறது.  அவள் தன் கண‌வ‌னுக்குத் தெரியாமல் தன் குழந்தையோடு இங்கு வந்து வேலை செய்து கொண்டிருக்கிறாள். தன் கணவன் ஒரு நோய்வாய்ப்பட்ட முதியவருக்கு பணிவிடை செய்வதை அனுமதிக்கமாட்டான் என்பதால் அவள் இப்படி செய்கிறாள்.
a_separation

இந்நிலையில் ஒருநாள் அப்பணிப்பெண் வீட்டில் முதியவரை வைத்துவிட்டு வெளியில் சென்று விடுகிறாள். அவள் திரும்பி வருவதற்குள் நாதெர் வந்துவிடுகிறான். அவனுடைய அப்பா கட்டிலிலிருந்து கீழே விழுந்து கிடக்கிறார். கோபமடையும் நாதெர் வேலைக்காரியைத் தேடுகிறான். அவள் இல்லை, அத்தோடு நாதெருடைய‌ பணமும் காணாமல் போயிருக்கிறது. இவை எல்லாவற்றாலும் விரக்தியடைகிறான் நாதெர். சிறிது நேரத்தில் பணிப்பெண் வருகிறாள். கோபமடையும் நாதெர் அவளை வேலையை விட்டு போகச் சொல்கிறான். அத்தோடு அவள் திருடிவிட்டதாகவும் சொல்கிறான். அதனால் கோபமடையும் அப்பணிப்பென் தன்னை திருடி இல்லை எனக்கூறினால்தான் செல்வேன் என விவாதம் செய்ய அவளை வெளியே தள்ளுகிறான் நாதெர். மாடிப்படிக்கட்டுகலில் தடுமாறி கீழே விழும் அவள் தன் மகளோடு வெளியேறுகிறாள். பின்னர் நாதெரின் மனைவியிடம் போய் தான் திருடியில்லை எனக்கூறுகிறாள். தான் நாதெரிடம் பேசுவதாகக் கூறுகிறாள் சிமென்.

அதனைத் தொடர்ந்து நாதெருக்கு அப்பணிப்பெண்ணுக்கு கரு கலைந்து விட்டதாகவும், மருத்துவமனையில் இருப்பதாகவும் தகவல் வருகிறது. அங்கே செல்கிறான்.  சிமென்னும் அவனோடு அங்கு வருகிறாள். அங்கே அப்பணிப்பெண்ணின் கணவன் நாதெரை அடிக்கிறான். வழக்கு பதிவு செய்யப்படுகிறது. அப்பணிப்பெண்ணின் கணவன் டெர்மியின் பள்ளிக்கு வந்து அனைவரிடமும் அவளின் தந்தை தன் குழந்தையை கொன்று விட்டதாக சொல்கிறான். வழக்கு நீண்டு கொண்டே செல்கிறது. கடைசியில் தங்களுடைய மகளுக்காக ரத்தப் பணம் கொடுத்து அவர்களை வழக்கைத்திரும்பப் பெற வைக்கலாம், இல்லையெனில் அப்பணிப்பெண்ணின் தந்தை தன் மகளை ஏதாவது செய்து விடுவான் என சீமென் கெஞ்சுகிறாள். ஆரம்பத்தில் முடியாது, தான் அக்கொலையை செய்யவில்லை என வாதாடும் நாதெர் கடைசியில் டெர்மிக்காக சம்மதிக்கிறான். பணிப்பெண்ணின் கணவனும் தன் ஏழ்மையினை நினைத்து பணத்திற்காக சரி என்கிறான். ஆனால் அப்பணிப்பெண்ணொ கடைசியில் தன் கரு கலைந்ததற்கு நாதெர் தள்ளி விட்டது காரணமாக இருக்கமுடியாது, அதற்கு முந்தைய நாள் தான் ஒரு விபத்தில் சிக்கியதால் தான் இருக்கும் என‌வும், அதனால் தனக்கு அந்தப் பணம் வேண்டாம் எனவும் கூவிடுகிறாள். அதனால் கடைசில் விரக்தியடைந்து அப்பணிபெண்ணின் கணவன் வீட்டைவிட்டு வெளியேறுகிறான். சில மாதங்கள் கழித்து நாதெரும் சீமென்னும் விவாகரத்து கேட்டு மீண்டும் கோர்ட்டுக்கு வருகின்றனர். அத்தோடு படம் நிறைவடைகிறது.

மிக எளிய கதை. ஆனால் திரைக்கதை மிக மிக சிறப்பு. ஒரு நிகழ்வு இயல்பாக நடப்பதற்கு துளியும் மாறுவாடில்லாத காட்சிகள். முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை அப்படியே. எந்த ஒரு இடத்திலும் சினிமாத்தனம் இல்லாததே இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். மற்றொன்று நடிப்பு, நாதெராகட்டும் இல்லை அப்பணிப்பெண்ணாகட்டும் ஆகச்சிறந்த நடிப்பு. அத்தோடு ஒளிப்பதிவும் சிறந்த ஒன்று, அது சினிமா என்பதனை உணர்த்தாத ஒளிப்பதிவு. எந்த ஒரு கோணமும் ஒரு கதாபாத்திரத்தின் பார்வையிலேயே செல்லுமே ஒழிய, வீட்டின் கூரையிலிருந்து கேமரா வீட்டிற்குள் நுழையாது. மீண்டும் மீண்டும் உரக்க கத்துவதையும் இருபது பேரை ஒருவர் அடிப்பதையுமே மிகச்சிறந்த நடிப்பு என நம்மை நாமே ஏமாற்றி பார்க்கும் படங்களுக்கு மத்தியில் இப்படியொரு படம்.  இது போன்ற படங்களைப் பார்த்த பிறகும் கூட இன்னும் ஒயின் ஷாப்புகளையே வைத்து எத்தனை படம் எடுக்கப்போகிறார்களோ நம்மவர்கள்?

தொடர்பெனும் சிக்கல்

மனித குலத்தின் கடந்த கால வரலாற்றினை ஓரளவிற்கு வாசித்தால் நாம் ஒரு மிகப்பெரிய‌ மாற்றத்தினை உணரலாம். முன் காலங்களில் மிகப்பெரும் விஷயமாக இருந்த ஒன்று இன்று முற்றிலும் மாறிவிட்டிருக்கிறது. அது தொடர்பு.

பழைய காலங்களில் ஒரு நாட்டிலிருந்து புதியதோர் நாட்டிற்குச் செல்வதென்பது மிகப்பெரிய‌ செயல்பாடாக இருந்திருக்கிறது, ஆறு மாத காலப்பயணம், 1 வருடப்பயணம் ஏன் திரும்பி வருவதென்பதே சாத்தியமில்லாத பயணம் என . ஆனால் இன்று ஒட்டுமொத்த உலகத்தினையும் சில மணி நேரங்களில் கடந்துவிட முடியும். காரணம் தொடர்பு.

பூமி தன்னை ஒரு முறை சுற்றிக்கொள்ளும் காலத்தில் பூமியை பல முறை சுற்றக் கூடிய செயற்கைக்கோள்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன.அதோடு இணையம் வழியாக உலகின் அனைத்து மூலைகளில் நடப்பவற்றையும் அதே கணத்தில் அல்லது அடுத்த கணத்தில் அறியும் வாய்ப்பு சாத்தியமாகியிருக்கிறது. காரணம் தொடர்பு.

முன்ன‌ர் ஒரு நாட்டிலோ ஒரு பகுதியிலோ வறட்சி ஏற்படும் பொழுது மற்றோர் பகுதியில் இருந்து உற்பத்திப் பொருட்களும், உணவுப்பொருட்களும் கொண்டுவரப்பட்டதில்லை. காரணம் தொடர்பின்மை அல்லது எங்கு அதிகம் விளைந்திருக்கிறது என்பதைக் அறிய முடியாத நிலைமை. ஆகவே பல்லாயிரம் மக்கள் பஞ்சத்தால் இறந்தனர். ஒரு பக்கம் தேவையைவிட அதிகமான விளைச்சல், மற்றோர் பக்கம் உணவுக்கே வழியில்லை. ஆனால் இன்று அதீத தொடர்பின் விளைவாக பற்றாக்குறை, வறட்சி போன்றவை மிகப்பெரிய அளவில் ஒழிக்கப்பட்டிருக்கிறது. நம் நாட்டில் வெங்காயம் விளையாமல் போனால் எங்கு வெங்காயம் விலை குறைவாக இருக்கிறதோ அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்துகொள்கிறோம். காரணம் தொடர்பு.
Continue reading

Words at Work

இந்த புத்தகத்தினை தலைப்பினைக்கொண்டு வேலை செய்யும் இடத்தில் சொற்களைக் கையாள்வது எப்படி என்ற எண்ணத்தில் வாசிக்கத்தொடங்கினேன். ஆனால் இந்த புத்தகம் அதைப்பற்றி அல்லாமல் ஒவ்வொரு துறை சார்ந்த இடத்திலும் பயன்பாட்டில் உள்ள வார்த்தைகள், அதற்கு அவர்கள் மொழியிலான பொருள் ஆகியவற்றைப் பற்றி விவரிக்கிறது. மிக எளிய நூலாக இருப்பினும் மிகுந்த சிரத்தையின் ப‌லனாகவே இந்த எளிமை சாத்தியமாயிருக்கிறது.

எந்த ஒரு புத்தகத்திலும் கற்றுக்கொள்வதற்கு தக‌வல்கள் உண்டு என்ற என் எண்ணம் மீண்டும் இந்த புத்தகத்தை வாசிக்கும் பொழுது ஏற்பட்டது. உதாரணமாக Cereal Box என்ற வார்த்தை நறுமணத்திரவியங்கள் தொடர்பாக பயன்படுத்தப்படுகிறது. அதன் பொருள் நறுமணத்திரவியத்தைப் போலவே ஒரு அட்டைப் பெட்டியில் பெரியதாக செய்து கடைகளில் காட்சிக்கு வைப்பது. இதனை நாம் பல முறை கண்டிருந்தாலும், அதற்குப் பின்னாலும் ஒரு திட்டமிடல் இருக்கிறது எனும்போது புதிய அனுபவமாய் அது அமைகிற‌து. இனி அதனைப் பார்க்கும் பொழுது நம் பார்வை மாறுபடலாம்.

இதனைப் போலவே வாசனைத்திரவியத்தின் மேல் மூடியில் இருக்கும் அழுத்து விசையை Actuator என்று குறிப்பிடுகின்றனர். இதனைப் போலவே Tulip Mania, Hockey Stick எனப் பல வார்த்தைகள் உண்டு. அது தொடர்பான விளக்கங்களும் உண்டு. புதிய வார்த்தைகளையும் பொருள்களையும் விரும்புபவர்களும், ஆர்வமுடையவர்களும் வாசிக்கலாம்.

நன்றி.