challenge2019

2019 – ஓர் மீள்பார்வை

2019 ஆண்டில் மூன்று செயல்பாடுகளை திட்டமிட்டிருந்தேன். அதனை என்னுடைய தளத்திலும் பதிவிட்டும் இருந்தேன் (http://www.mahiznan.com/2019/01/06/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e2%80%8d-2019/) . வெளிப்படையாக பதிவிட்ட‌தற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று, வருட இறுதியில் அவ்வாண்டில் திட்டமிட்டவற்றில் எவ்வளவை முடிக்க முடிந்திருக்கிறது, திட்டமிடுதலுக்கும் அடைவதற்குமான இடைவெளி எவ்வளவு இருக்கிறது என்பதனை துல்லியமாக அறிந்துகொள்ள வேண்டும் என்பதுதான்.

2019 ல் திட்டமிடப்பட்ட மூன்று செயல்பாடுகள்.

 1. 50 புத்தகங்களினை வாசித்தல்
 2. 50 கட்டுரைகளைப் பதிவிடுதல்
 3. தெலுங்கு மொழியினை பேசவும் எழுதவும் வாசிக்கவும் செய்வது

திட்டமிட்ட 50 புத்தகங்களில் 7 புத்தகங்களை சென்ற ஆண்டில் வாசித்திருக்கிறேன். அவை.

 1. ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது – ஜெயகாந்தன்
 2. நெல்சன் மண்டேலா – தா.பாண்டியன்
 3. கன்னி நிலம் – ஜெயமோகன்
 4. Rich Dad Poor Dad – Robert Kiyosaki
 5. உன்னோடு ஒரு நிமிஷம் – வெ.இறையன்பு
 6. ஊர்களில் அரவாணி – ம.தவசி
 7. Homo Deus – Yuval Noah Harari

இன்னும் சில புத்தகங்கள் துவங்கி முடிக்காமலேயே இருக்கின்றன. அவற்றையெல்லாம் நான் சேர்க்கவில்லை. முழுமையாக வாசித்தவற்றை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டிருக்கேன். திட்டமிட்டதற்கும் அடைந்ததற்கும் வேறுபாடு மிக அதிகம். 14 விழுக்காடு மட்டுமே அடைந்திருக்கிறேன். இந்த ஆண்டில் 100 விழுக்காடு அடையவேண்டும் என சபதமேற்கிறேன்.

இரண்டாவதாக புத்தகம் பற்றிய கட்டுரைகள் அல்லாமல், 50 கட்டுரைகளை பதிவிட திட்டமிட்டிருந்தேன். அதனை முற்றிலுமாக செய்யவில்லை. ஒரேயொரு கட்டுரையினை மட்டுமே பதிவிட்டிருந்தேன். இதுவும் 99 விழுக்காடு அடையவில்லை.

மூன்றாவதாக தெலுங்கு மொழியினை பேச, எழுத, வாசிக்க தெரிந்து கொள்வது. இதில் ஒரு குறிப்பிடத்தக்க அளவில் திட்டமிட்டதை அடைந்திருக்கிறேன். தற்போது என்னால் ஒரளவிற்கு தெலுங்கில் உரையாட முடியும். தெலுங்கு மொழித் திரைப்படங்களின் வசனங்களில் 50 விழுக்காட்டினை என்னால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிகிறது. முக்கியமாக நான் கவனம் செலுத்தாமல் விட்டது வாசிப்பது மற்றும் எழுதுவது. அந்த இரண்டிலும் மீண்டும் இவ்வாண்டு முழுக்கவனம் செலுத்த வேண்டும் என்பது திட்டம்.

சென்ற ஆண்டில் கற்ற பாடங்களைக் கொண்டு இந்த ஆண்டிற்கான செயல்பாடுகளைத் திட்டமிட்டுள்ளேன் (அது தனி பதிவாக). பார்க்கலாம்.

Home Deus – Yuval Noah Harari

This books follows the popular book ‘The Sapiens’ from the same author Yuval Noah Harari. If you have not read the book ‘The Sapiens’ it should be read first. So that it will give better picture on understanding this book.
The Sapiens talks on how the homo sapiens evolved as human being in detail. This book ‘Homo Deus’ talks about how the Sapiens conquered the entire world and how it made humanism as the new religion. Also the book discuss in detail on what are all the possible futures for the sapiens and what are all the challenges sapiens may face. The book also raise a question on ‘Sapiens conquered the world from other species, then who will take over from Sapiens in the future?’ and discuss the possibilities in detail.

One of the must read books of lifetime. This book will change the way how we look creed,humans,industrialism.

ஊர்களில் அரவாணி – ம‌.தவசி

ம. தவசி அவர்களால் எழுதப்பெற்ற சிறுகதைத் தொகுப்பு. காவ்யா பதிப்பகம் வெளியீடு. மிகவும் வித்தியாசமான சிறுகதைகள். சராசரியான‌ வார இதழ் சிறுகதைகளை வாசிக்கும் ஒருவர் இக்கதைகளைக் கண்டிப்பாக வாசிக்க வேண்டும். சராசரி சிறுகதைகளில் காட்சிகளின் சித்தரிப்பு, உறவுகளின் சித்தரிப்பு இறுதியில் ஒரு திருப்பம் இப்படியாகத்தான் அமைப்பு இருக்கும். ஆனால் இதிலுள்ள ஒவ்வோர் கதையும் அத்தகைய எந்த வடிவத்திற்குள்ளும் அடங்காதவை. காட்சிகளின் சித்தரிப்புகள் மிக இயல்பானவையாக இருந்தாலும், ஒவ்வோர் கதையிலும் நாம் அந்நிலத்திற்குள் சென்று மீள்வோம் . குறிப்பாக புத்தகத்தின் தலைப்புக்கதையான ஊர்களில் அரவாணி மிகவும் சிறப்பான ஒன்று. கண்டிப்பாக வாசிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு.

உன்னோடு ஒரு நிமிஷம் ‍ – வெ.இறையன்பு

Unnodu Oru Nimisham

வெ. இறையன்பு அவர்களால் சுட்டி விகடனில் எழுதப்பெற்று தொடராக வெளிவந்த சுயமுன்னேற்றத் தொடர். சுட்டி விகடனில் வெளிவந்த‌தால் முற்றிலும் குழந்தைகளை நோக்கி எழுதப்பட்ட கட்டுரைகள். பெரும்பாலும் நீதி போதனைக் கட்டுரைகள். அத்தோடு அந்தந்த காலகட்டத்தின் நிகழ்வுகளை ஒட்டி எழுதப்பட்டவை. உதாரணமாக தேர்வு சமயத்தில் வெளிவந்த இதழில் தேர்வு தொடர்பான சில அறிவுரைகள், விடுமுறைக்கால இதழில் விடுமுறை தொடர்பான சில ஆலோசனைகள். அதனால் இக்கட்டுரைகளை ஒட்டுமொத்தமாகத் தொகுக்கும்போது ஒரு புத்தகத்திற்கான‌ ஒட்டுமொத்த வடிவம் இல்லை.

ஆனால் இது போன்ற நூல்களை சிறுவர்களுக்கு வாசிக்க கண்டிப்பாகத் தரவேண்டும் என்பதே என் எண்ணம். ஏனெனில் இந்நூல்கள் மிக எளிதாக வாசிப்பதற்கு ஏற்றவை. எத்தகைய கூடுதல் வாசிப்பும் கோராதவை. இவற்றை வாசிப்பதற்குத் தேவையான தகவல்கள் இந்த புத்தகத்திலேயே இருக்கும். மேலும் நிகழ்காலத் தகவலகளோடு நீதி போதனைகளைக் கூறும் நூல்கள் குழந்தைகளின் எண்ணங்களில் ஒரு நல்ல மாற்றத்தினை நீண்ட கால அளவில் ஏற்படுத்தும். அவர்களின் வாசிப்புத் திறன் மேம்படும்.

வாசிக்க வேண்டிய நூல். பெரிய‌வர்களுக்கும்.

Rich Dad Poor Dad – Robert Kiyosaki

Rich Dad Poor Dad

Robert Kiyosaki ஆல் எழுதப்பெற்று 1997 ஆம் ஆண்டில் வெளிவந்தது. வாழ்வில் பொருளாதார தன்னிறைவு அடைவதற்கு தனி மனித நுண்ணறிவு எத்தகைய முக்கியமான ஒன்று என்பதனை விவரிக்கும் நூல். 50 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகம் முழுவதும் 30 மில்லியனுக்கும் அதிகமாக விற்பனையான நூல்.

இந்நூல் வாசிப்பவர்கள் பொருளாதார தன்னிறைவினை அடைந்தார்கள் என்பதனை விட‌ Robert Kiyosaki கண்டிப்பாக இப்புத்தகத்தினால் பொருளாதார நிறைவினை அடைந்திருப்பார் என்பது நிதர்சனம். இப்புத்தகத்தினை பத்து தனி அத்தியாயங்களாக‌ Robert Kiyosaki பிரித்து விளக்கியுள்ளார். தான் தன்னுடைய தந்தை மற்றும் தன்னுடய நண்பனின் தந்தை இருவரிடம் கற்றுக்கொண்ட விஷயங்கள் எவ்வாறு தன்னுடைய வாழ்வில் உதவியது என்பதனை இந்த பத்து அத்தியாயங்களில் விளக்கியுள்ளார். அந்தப் பத்து விஷயங்கள் இவையே.

 1. The Rich Don’t Work for Money
 2. Why Teach Financial Literacy?
 3. Mind Your Own Business
 4. The History of Taxes and the Power of Corporations
 5. The Rich Invent Money
 6. Work to Learn – Don’t work for Money
 7. Overcoming Obstacles
 8. Getting Started
 9. Still Want More? Here Are some To Do’s
 10. Final Thoughts

ஒட்டுமொத்தமாக படிக்கும் பொழுது இந்த புத்தகத்தில் திரும்பத்திரும்ப சில விஷயங்கள் சொல்லப்படுகிறது. நீங்கள் பணத்திற்காக வேலை செய்யக்கூடாது. பணம் உங்களுக்காக வேலை செய்ய வேண்டும். அதற்கு ஏற்ற முதலீடுகளை ரியல் எஸ்டேட், பங்குகள் போன்றவற்றில் செய்யுங்கள். இழப்பு என்பது இல்லாமல் எந்த லாபத்தினையும் அடைய முடியாது. இழப்பிலிருந்து எப்படிக் கற்றுக்கொண்டு மேலே செல்வது என தெரிந்து கொள்ளுங்கள். இவைதான் திரும்பத்திரும்ப வருகிறது பெரும்பாலான அத்தியாயங்களில்.

அத்தோடு ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் அவ்வத்தியாயம் மீண்டும் சுருக்கமாக சொல்லப்படுகிறது. உண்மையாகவே திரும்ப சொல்லப்படுகிறது. அத்தியாயம் 30 பக்கமெனில், இது 5 முதல் 10 பக்கம் வரை இருக்கும். இது படிப்பதனில் ஒரு சோர்வை உண்டாக்குகிறது. தனிப்பட்ட முறையில் இந்த புத்தகம் என்னளவில் பெரிய ஆச்சரியத்தை உண்டு பண்ணவில்லை எனினும் எந்த வாசிப்பும் நல்ல வாசிப்பே என்பதனால் இப்புத்தகத்தினை வாசிக்கலாம்.

கன்னி நிலம் – ஜெயமோகன்

ஜெயமோகன் அவர்களால் எழுதப்பட்டது. மணிப்பூர் மாநில எல்லைப்பகுதியில் பணியாற்றும் ராணுவ அதிகாரி நெல்லையப்பனின் கதை, ஜெயமோகனுக்கே உரிய சொல்லாடல்களுடன்.

நெல்லையப்பன் மணிப்பூர் எல்லையில் பணியாற்றும் ராணுவத் தலைமை அதிகாரி. அவர்கள் ஒருநாள் தங்களுடைய வழக்கமான பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது காட்டுப்பகுதியில் ஒரு போராளிப்பெண்ணை கைது செய்கிறார்கள். அப்பெண்ணை கைது செய்து ராணுவ முகாமுக்கு கொண்டு வரும் வழியில் போராளிக்குழுக்களின் தாக்குதலுக்கு ஆளாகி, அவர்களில் சிலர் இறந்து விடுகின்றனர். இன்னும் சிலர் அவர்களிடம் கைதியாக மாட்டிக்கொள்கின்றனர். மீதமுள்ளவர்கள் ராணுவ முகாமுக்கு திரும்புகின்றனர். அதனைத் தொடர்ந்து ராணுவத்திற்கும், அப்போராட்டக்குழுவிற்கும் சமரசப் பேச்சுவார்த்தை நடக்கிறது. ராணுவ வீரர்களை விடுவிக்கக் கோருகிறது ராணுவம். ஜ்வாலாமுகியை விடுவிக்க போராளிகள் கோருகிறார்கள்.

இதற்கிடையில் அப்பெண்ணை விசாரிக்கும் நெல்லையப்பன் அவள் ஏதோ ஒரு விதத்தில் அக்குழுவிற்கு முக்கியமானவள் என்றும் அதனால் தான் இத்தனை தூரம் அவர்கள் அவளை மீட்க முயலுகிறார்கள் எனவும் நினைக்கிறான். அதனால் அவள் பற்றிய தகவல்களை ராணுவத் தலைமையகத்திற்கு அனுப்ப உத்தரவிடுகிறான். அவள் பெயர் ஜ்வாலாமுகி என்றும், அவள் அப்போராளிக்குழுத் தலைவரின் மகள் என்பதும் தெரிய வருகிறது. அத்தோடு அவளை உயிருடன் ராணுவத்தலைமையகம் கொண்டுவருமாறும் உத்தரவிடப்படுகிறது.

இந்நிலையில் போராளிக்குழுவால் கைது செய்யப்பட்ட‌ ராணுவ வீரர்கள் ஏற்கனவே கொல்லப்பட்டு விட்டது தெரிகிறது. அதனைத் தொடர்ந்து போராளிக்குழு ராணுவ முகாமைத் தாக்க திட்டமிடுகிறது. அதனை அறியும் நெல்லையப்பன் ராணுவத்தலைமையகத்துக்கு உடனடியாக‌ தகவல் தெரிவிக்க உத்தரவிடுகிறான். அச்சமயத்தின் புயல் காரணமாக உடனடியாக அதனை செய்ய முடியவில்லை.

அவர்கள் ராணுவ முகாமைத் தாக்குகிறார்கள். அவர்கள் எண்ணிக்கை பல்ம‌டங்கு இருப்பதை அறியும் நெல்லையப்பன் இருக்கும் ராணுவத்தையும் ஆயுதங்களையும் கொண்டு முடிந்தவரை போரிடுகிறான். போராளிக்குழுவின் கை ஓங்குகிறது. ஒருகட்டத்தில் இதற்கு மேலும் போரிட முடியாது என உணரும் நெல்லையப்பன் ஜ்வாலாமுகியோடு தப்பியோடுகிறான். அவளை எப்படியாவது ராணுவத்தலைமையிடம் கொண்டு சேர்த்துவிட நினைக்கிறான்.

காட்டுக்குள் தப்பியோடும் நெல் ஒரு கட்டத்தில் ஜ்வாலாமுகியோடு நெருக்கமாகிறான். அதனைத் தொடர்ந்து காதலிக்கும் இருவரும் இருபக்கமும் சேராமல் இந்தியாவிற்கும் மியான்மருக்கும் நடுவில் இருக்கும் நோ மென்ஸ் லேண்டில் வாழ விரைகிறார்கள். இப்படிப்பட்ட ஓர் நிலையில் ராணுவத்திற்கு துரோகம் செய்து காட்டிக்கொடுத்துவிட்டதாக எண்ணும் ராணுவம் இருவரையும் கைது செய்கிறது. நெல் துன்புறுத்தப்படுகிறான். நெல்லையப்பனின் விளக்கங்கள் ஏற்கப்படவில்லை. இதற்கிடையில் ஜ்வாலாமுகி ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுவிக்கப்படுகிறாள்.

பின்னர் ஒரு கட்டத்தில் ராணுவத்தில் இருந்து தப்பிக்கும் நெல் ஜ்வாலாமுகியோடு போய் சேர்கிறான். இருவரும் மீண்டும் நோ மென்ஸ் லேண்டுக்கு செல்கிறார்கள். வாழ்க்கை தொடங்குகிறது.

ஜெயமோகன் அவர்கள் தனக்கே உரிய வகையில் காட்சிகளை கண்முன்னே வடித்திருக்கிறார். அவருடைய வெண்முரசு நாவலினை வாசித்த பொழுது நான் நினைப்பதுண்டு எப்படி இத்தனை நுணுக்கமாக விவரிக்க முடியும் என்று. ஆனால் இந்நாவலை வாசித்த பின்னர் தோன்றுகிறது இவ்விவரிப்பு அவரிடம் என்றுமே உள்ள ஒன்று என. அத்தோடு இந்த விவரிப்பு எப்படி உருமாறி உருமாறி தற்போதைய அதி நுட்பமான‌ நிலையை அடைந்திருக்கிறது என்னால் அழகாக பொருத்திப்பார்க்க முடிகிறது.

வாசிக்க வேண்டிய நாவல்.

நெல்சன் மண்டேலா – தா.பாண்டியன்

Mandela

தா பாண்டியன் அவர்களால் எழுதப்பட்டது. நெல்சன் மண்டேலா அவர்களின் சிறுவயது முதல் தென்னாப்ரிக்காவில் ஜனநாயகம் மலர்ந்தது வரையிலான காலகட்ட நிகழ்வுகளின் தொகுப்பு. 1918 ஆம் ஆண்டு ஜூலை 18ல் பிறந்த நெல்சன் மண்டேலாவிற்கு அவரது தந்தை இட்ட பெயர் ரோலிலாலா. அவரது பள்ளி ஆசிரியர் இட்டபெயரே நெல்சன்.

சோசோ இனக்குழுவில் பிறந்த மண்டேலாவின் தந்தை காட்லா ஹென்றி அவ்வினக்குழுவின் தலைவர். அதனால் ஓரளவுக்கு வசதியாகவும், பெயருடனும் வாழ்ந்து வந்தனர். அப்பதவிக்கு அங்கு ஆண்டுவந்த வெள்ளையர்களின் அங்கீகாரம் முக்கியமானது. ஒருமுறை மாஜிஸ்ட்ரேட் அழைத்தபொழுது பின்னர் வருவதாகக் கூறிய காரணத்தால் அவருடைய அதிகாரம் ரத்து செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வேறு ஊருக்கு குடிபெயர்ந்தனர். பின்னர் தந்தையும் இறந்து விட தாயோடு மற்றோர் ஊருக்குப் பயணம். அங்கே ஜோங்கிடபாபா என்பவரின் உதவியால் பள்ளி, கல்லூரிப்படிப்பினைப் படித்தார். கல்லூரிப்படிப்பை முடிப்பதற்குள்ளாக விடுதி தேர்தல் தொடர்பான சர்ச்சைகளால் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் ஜோங்கிடபாபாவின் திருமண ஏற்பாடுகளில் விருப்பம் இல்லாமல் அவருக்குத் தெரியாமல் மண்டேலாவும், ஜோங்கிடபாபாவின் மகன் ஜஸ்டிஸும் ஜோகன்னஸ்பெர்க்கிற்கு வந்து விட்டனர்.

ஜோகன்னஸ்பெர்க்கில் பல்வேறு வேலைகள் பார்த்து பின்னர் ஒரு வழக்கறிஞரிடம் எழுத்தர் பதவி உதவியாளராக சேர்ந்தார் மண்டேலா. அதன் மூலமாக சில கட்சி நிகழ்வுகளுக்கு சென்று வந்தார். அதன் தொடர்ச்சியாக ஆப்ரிக்க தேசிய காங்கிரஸில் சேர்ந்தார்.

அக்கால கட்டத்தில் ஆப்ரிக்காவினை ஆண்ட வெள்ளையர்களால் பல்வேறு சட்டங்களும் கட்டுப்பாடுகளும் அந்நாட்டின் மக்கள் மீது விதிக்கப்பட்டிருந்தன. உதாரணமாக ஒரு மாவட்டத்திலிருந்து மற்றோர் மாவட்டத்திற்கு செல்ல அனுமதிசீட்டு வைத்திருக்கவேண்டும். வெள்ளையர்கள் வசிக்கும் இடங்களில் இடம் வாங்கக்கூடாது, நடந்து செல்லக் கூடாது, ஆப்ரிக்கர்களுக்கு தனிப் பேருந்து, தனி ரயில் பெட்டிகள், வெள்ளையருக்கு மட்டும் வாக்குரிமை எனப்பல.

காலப்போக்கில் சுதந்திர,ஜனநாயக ஆப்பிரிக்காவினை லட்சியமாக ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் முன்னெடுத்தது. பல்வேறு ஜனநாயகப் போராட்டங்கள் வழியாக, பல சமயங்களில் ஆப்ரிக்க‌ கம்யூனிஸ்டுகளுடன் இணைந்தும் போராட்டம், கூட்டங்களை நடத்தி வந்தனர். இதனால் மண்டேலா மற்றும் பலர் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டன. ஒன்றிலிருந்து விடுதலை அடைந்தவுடன், அடுத்த வழக்கு எனத் தொடக்கப்பட்டது. இதனால் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தார் மண்டேலா. ஒரு கட்டத்தில் ஜனநாயக‌ப்போராட்டத்தோடு ஆயுதப் போராட்டமும் செய்யப்பட்டாக வேண்டும் என்ற நிலைக்கு வந்த ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் அதற்காக ராணுவ, பொருள் உதவிகளுக்காக மற்ற நாடுகளை எதிர்பார்த்து அதன் பொருட்டு மண்டேலாவை ரகசியமாக‌ பல நாடுகளுக்கு அனுப்பி வைத்தது. அதன் தொடர்ச்சியாக பல்வேறு நாடுகளுக்கு சென்ற மண்டேலா பல்வேறு நாட்டுத்தலைவர்களை சந்தித்து பொருளுதவியும், சில ராணுவ பயிற்சி உதவிகளையும் பெற்றார்.

அதன் பின்னர் ரகசியமாக‌ நாடு திரும்பிய மண்டேலா, சில நாட்களில் அரசால் கைது செய்யப்பட்டார். அரசினைக் கவிழ்க்க முயன்ற குற்றம் உள்பட பல்வேறு குற்றங்கள் சாட்டப்பட்டார். வழக்கு நடைபெற்றது. இந்நிலையில் இவ்வழக்கு உலக நாடுகளின் கவனம் பெற்றது. உலக நாடுகள் பல் மண்டேலா விடுவிக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தன. அதன் தொடர்ச்சியாக மண்டேலாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

பின்னர் சிறையில் தன் வாழ்நாளைக் கழித்த மண்டேலாவிற்கு உலக அளவில் ஆதரவு பெருகத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக ஆப்ரிக்க தேசிய காங்கிரஸோடு பேச்சு வார்த்தை நடத்த அரசு சம்மதம் தெரிவித்தது. ஒட்டுமொத்தமாக 27 ஆண்டுகளை சிறையில் கழித்த மண்டேலா விடுதலை செய்யப்பட்டார். பின்னர் அரசில் சீர்திருத்தம் தொடங்கப்பட்டது. பல்வேறு நிறவெறி தொடர்பான சரத்துகள் நீக்கப்பட்டன. அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது. மண்டேலா மற்றும் அப்போதைய பிரதமரான டி‍‍‍‍கிளார்க் இருவருக்கும் அதற்காக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இப்புத்தகம் மண்டேலாவைப் பற்றிய ஒரு தொடக்க வாசிப்பிற்கான ஒரு புத்தகம். மண்டேலாவைனையும் ஆப்ரிக்க காங்கிரஸ் மற்றும் பிற விவரங்களையும் தெரிந்து கொள்ள இதற்கு மேலான வாசிப்பு அவசியம். இப்புத்தகத்தின் எழுத்து நடை மிகவும் சோர்வளிக்கக் கூடிய தட்டையான எழுத்து. பள்ளி நூல்களின் துணைப்பாட அளவினையும் விட குறைந்த எழுத்து நடை. அத்தோடு தா.பாண்டியன் ஒரு கம்யூனிஸ்ட் என்பதனால், அது தொடர்பான சில‌ புகழுரைகளும் ஆங்காங்கே.

The Core

2003 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இயக்கம் Jon Amiel. நடிப்பு Aaron Eckhart, Hilary Swank மற்றும் பலர்.

சில நகரங்களில் நடைபெறும் சில‌ விசித்திர நிகழ்வுகளால் ஆச்சரியமடையும் Dr.Josh Keyes மற்றும் Dr.Serge Leveque இருவரும் பூமியின் காந்தப்புலத்தில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றமே இதற்கான காரணம் என அறிகிறார்கள். காந்தப்புல மாற்றத்திற்கான‌ காரணம் பூமியின் ஆழ் மையத்தில் உள்ள உலோக குழம்பு சுழல்வதை நிறுத்தியதே எனவும், அது பூமியின் நிலைத்தன்மையில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும், தொடரும் பட்சத்தில் பூமி விண்வெளியின் கதிரியக்கத்தாக்குதலுக்கு நேரடியாக உள்ளாகி, விண்வெளிக் கதிரியக்கத்தினால் பூமியில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் அழிந்துவிடும் எனவும் அறிகிறார்கள். அதனை மற்றோர் அறிவியலாளரும் பிரபலமானவருமான Dr.Conrad Zimsky இடம் தெரிவிக்கிறார்கள்.

இது அமெரிக்க ராணுவத்திற்கு தெரிவிக்கப்படுகிறது. இதனை சரிசெய்ய பூமியின் ஆழத்தில் உள்ள உலோகக்குழம்பு மீண்டும் சுழலவைக்கப்பட வேண்டும், ஆனால் அது மிக மிக சவாலானது எனத் தெரிவிக்கிறார்கள். ஆனால் அவர்களே வியக்கும் வண்ணம் பூமியின் ஆழத்திற்கு பயணிப்பதற்கான ஓர் ஓடம் Dr.Brazzelton என்பவரால் தயாரிக்க‌ப்பட்டுக்கொண்டிருப்பதை அறிகிறார்கள். அவ்வோடம் எத்தகைய வெப்பத்தினையும் தாங்க வல்ல ஆற்றல் கொண்டதாகவும், பூமியினைக் கதிரியக்கத்தினால் விரைவாகத் துளையிடும் ஆற்றல் கொண்டதாகவும் இருக்கிறது.

இதனால் பூமியின் ஆழ் மையக் குழம்பை சுழல வைக்க அமெரிக்க ராணுவத்தின் மேற்பார்வையில் அக்குழு தயாராகிறது. அக்குழுவில் Dr.Josh Keyes,Dr.Serge Leveque,Dr.Conrad Zimsky,ராணுவ விண்வெளி ஓடத்தின் விமானிகள் Robert Iverson,Rebecca,ஓடத்தின் வடிவமைத்த Dr.Brazzelton இருக்கிறார்கள். அத்தோடு இது தொடர்பான தகவல்கள் உலகில் கசியாமல் இருக்கவும், மக்கள் பீதியடையாமல் இருக்கவும் Finch என்ற ஓர் ஹேக்கிங் இளைஞனை பணியில் அமர்த்துகின்றனர். இத்திட்டம் தொடர்பான தகவல்களை இணையத்தில் பரவாமல் தடுப்பதே அவனுடைய வேலை.

இந்த திட்டத்தின் ஒட்டுமொத்த செயல்பாடும் அமெரிக்க ராணுவம் பூமியின் மேற்பரப்பிலிரிந்து கண்காணிக்கும் வண்ணம் வடிவமைக்க‌ப்படுகிறது.

பசிபிக் கடலின் ஓர் ஆழமான இடத்தில் குழு தன்னுடைய பூமியின் ஆழ் மையத்திற்கான‌ பயணத்தினை தொடங்குகிறது. பூமியின் ஆழத்திற்குச் சென்று அங்கு கதிரியக்கக் குண்டுகளை வெடிக்கவைப்பதன் மூலம் அதனை மீண்டும் சுழல வைப்பதே அவர்களின் திட்டம். ஆனால் செல்லும் வழியில் ஏற்படும் சில எதிர்பாராத தடைகளால் அவர்களது ஓடம் பாதிக்கப்படுகிறது. அதனை சரி செய்யும் முயற்சியில் விமானி Robert Iverson இறந்து விடுகிறார். தொடர்ந்து புறப்படும் அவர்கள் பயணத்தில் மற்றொரு அறிவியலாளரும் (Dr.Serge Leveque) இறந்து விடுகிறார்.

இதற்கிடையில் பூமியில் ஆங்காங்கு ஏற்படும் கதிரியக்க நிகழ்வுகளால் மக்கள் மத்தியில் இது தொடர்பான பீதி அதிகம் பரவத்தொடங்குகிறது. அதனைக் கட்டுப்படுத்த முயலும் Finch DESTINY என்னும் திட்டத்தினைப் பற்றி அறிந்து ஆச்சரியம் அடைகிறான். அதாவது பூமியின் மையத்திலுள்ள உலோகக் குழம்பு சுழலாமல் இருப்பதற்கு காரணம் அமெரிக்க ராணுவம்தான் எனவும், பூமியின் மையத்திலிரிந்து நிலநடுக்கத்தினை உருவாக்கும் கருவியினை சோதனை செய்யும் பொழுதே பூமிக்குழம்பின் சுழற்சி நின்றதையும் அறிந்து கொள்கிறான். அத்திட்டத்தினை ராணுவத்திற்காக செயல்படுத்தியவர் Dr.Conrad Zimsky தான் என்பதையும் அறிந்து கொள்ளும் பின்ச் அதனை Dr.Josh Keyes இடம் தெரிவிக்கிறான்.

இதற்கிடையில் பூமியின் மையத்தினை நெருங்கும் குழு, மையத்திலுள்ள உலோககுழம்பின் தடிமன் அவர்கள் கணித்ததனை விட மாறாக இருப்பதை அறிகிறார்கள். அதனால் தங்களிடம் உள்ள கதிரியக்கக் குண்டுகள் போதுமானவையாக இருக்காது என Dr.Conrad Zimsky கூறுகிறார். மேலும் தங்களுடைய திட்டத்தினை விட்டு விட்டு பூமியின் மேல்பரப்பிற்கு செல்வோம் எனவும் கூறுகிறார். ராணுவத்தலைமையும் அவர்களை திட்டத்தினைக் கைவிட்டு விட்டு பூமியின் மேல்பரப்பிற்கு வருமாறு உத்தரவிடுகிறது. அதனை மறுக்கும் மற்றவர்கள் தங்களுடைய மாற்றுத்திட்டத்தின் படி இதனை முயற்சிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் அதற்காக கூடுதல் நேரத்தினையும் கோருகிறது. அக்கோரிக்கையை ராணுவம் நிராகரிக்கிறது. தங்கள் திட்டப்படியே தொடர விரும்பும் குழுவினர் அதற்கு Dr.Josh Keyes ஐ ஒத்துக்கொள்ள வைக்கின்றனர்.

இந்நிலையில் ராணுவம் இத்திட்டத்தின் மாற்றுத்திட்டமான‌ DESTINY திட்டத்தினை செயல்படுத்த தொடங்குகிறது. அதாவது சென்ற முறை செய்த முயற்சியினைப்போல (கதிரியக்கக் குண்டை பூமியின் ஆழத்தில் வெடிக்கச் செய்வது) மீண்டும் ஒருமுறை செய்து பூமியின் ஆழத்திலுள்ள உலோகக்குழம்பை சுழல வைக்க முயல்கிறது். அதன் பின்விளைவுகளை எச்சரிக்கும் Dr.Josh Keyes ஐ அவர்கள் புறந்தள்ளுகின்றனர். அதனால் Finch இடம் DESTINY திட்டத்டினை தாமதப்படுத்துமாறு Dr.Josh Keyes ரகசியாமய்க் கேட்கிறார். Finch DESTINY திட்டத்தின் கணினிகளை ஹேக் செய்து அதனைத் தாமதிக்கிறான்.

தங்களுடைய மாற்றுத்திட்டத்தின் முயற்சியில் Dr.Brazzelton மற்றும் Dr.Conrad Zimsky இறந்துவிடுகின்றனர். விடாமல் முயற்சிக்கும் Keyes,Rebecca பூமிக் குழம்பை சுழல வைத்துவிடுகின்றனர். பின்னர் சில முயற்சிகள் மூலம் பூமியின் மேற்பரப்பிற்கு வரும் அவர்கள் திமிங்கிலங்கள் எழுப்பும் அதிர்வலைகளின் உதவியால் ராணுவத்தால் மீட்கப்படுகின்றனர். சில நாட்களுக்குப்பிறகு Finch DESTINY திட்டத்தினைப் பற்றிய ராணுவத்தின் ரகசியங்களையும் அதற்காக இறந்தவர்களைப் பற்றியும் இணையத்தில் வெளியிடுகிறான்.

இத்திரைப்படத்தில் அறிவியல் புனைக்கதைகளுக்கான அனைத்து அபத்தங்களும் உண்டென்றாலும் இப்படத்தின் சில பாராட்டப்பட வேண்டிய விஷயங்கள்.

 1. புனைவு என்பதற்காக எல்லாவற்றையும், இது சாத்தியமான ஒன்று. இதற்கு இந்த கருவி என வெறுமனே கூறாமல் அது தொடர்பாக சற்றேனும் தகவல்களை அறிந்து அதனை ஒட்டி காட்சிகளைப் படமாக்கியிருப்பது. நம் தமிழ் சினிமாவில் இதுவரை நாம் இதனை செய்தது இல்லை. இதுவரை வெளிவந்த ஒரு சில அறிவியல் புனைவுத் திரைப்படங்களும் மிதமிஞ்சிய கற்பனாவாதத்தினைக் கொண்டிருப்பவை. அதாவது ‘எல்லாமே சாத்தியம் ஒரு கருவியால்’ என்னும் ஒற்றைப்படையான கனவில் இருந்து வருபவை.
 2. வழக்கமாக கதாநாயகன் துதிபாடல்கள் இல்லாமை. இந்திய சினிமாவினைப் பின்னிழுக்கும் முக்கிய காரணிகளுள் ஒன்றாக நான் கருதுவது. கதையின் நாயகனாக இல்லாமல் நாயகனின் கதையாக மாறிப்போய்விட்ட நம் சூழலில் கதையின் ஓட்டத்தில் அனைவரையும் அறிமுகம் செய்வது என்பது ஆங்கிலத்திரைப்படங்களின் இயல்பாகவே அமைகின்றன. இத்திரைப்படமும் அதற்கு விதிவிலக்கல்ல‌
 3. இது போன்ற திரைப்படங்களை சிறுவர்களுக்கு காண்பிக்க வேண்டும் என்பது என் எண்ணம். இத்தகைய திரைப்படங்கள் வாயிலாக அவர்களது ஆர்வம் தூண்டப்படும் அல்லது அவர்கள் சற்றே ஆழமாக சிந்திக் ஒர் புதிய வாசல் திறக்கலாம். உதாரணமாக இப்படத்தில் வரக்கூடிய ஓடம் unobtainium என்னும் உலோகத்தால் ஆனது, அது எத்தகைய வெப்பத்தினையும் தாங்கும் என்பது போன்றவை அவர்களுடைய அறிவியல் புரிதலில் ஓர் சிறிய மாற்றத்தினை ஏற்படுத்தக்கூடும். இதில் ஓர் சுவாரசியம் என்னவெனில் அப்படி ஒர் உலோகமே கிடையாது. unobtainable என்ற வார்த்தையில் -ium என்ற வார்த்தையைச் சேர்த்து உருவாகிய வார்த்தை அது.

ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது – ஜெயகாந்தன்

ஜெயகாந்தன் அவர்களால் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பெற்ற சிறுகதைகளின் தொகுப்பு. பின்வரும் கதைகள் நூலில் உள்ளன.

திரஸ்காரம்
சாளரம்
பிணக்கு
நந்தவனத்தில் ஓர் ஆண்டி
தேவன் வருவாரா?
சிலுவை
யுகசந்தி
இருளைத் தேடி
சுய தரிசனம்
புதிய வார்ப்புகள்
அக்கினிப்பிரவேசம்
லட்சாதிபதிகள்
ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது
அந்தரங்கம் புனிதமானது
குருபீடம்
புதுச் செருப்பு கடிக்கும்

ஒவ்வொரு கதையும் மனித வாழ்வின் இக்கட்டான அல்லது முக்கிய‌ தருணங்களை விவரிப்பவை. அக்கினிப்பிரவேசம் சிறுகதை பின்னாளில் சில நேரங்களில் சில மனிதர்களாக உருமாறிய கதை. வாசிக்க வேண்டிய சிறுகதைகள்.

புது வருடம் ‍ 2019

ஒவ்வொரு வருடத்தொடக்கத்தின் போதும் புதிதாக ஏதாவது கற்கத் தொடங்குவது வழக்கம். பொதுவாக அவை புத்தக வாசிப்பு தொடர்பானவைகளாகவே இருக்கும். இந்த வருடமும் அவ்வாறே. இந்த வருடத்தில் இவற்றையெல்லாம் செய்ய வேண்டுமென திட்டமிடுகிறேன்

 1. 50 புத்தகங்களினை வாசித்தல்
  இதற்காக எந்த விதிமுறைகளையும் வகுக்கவில்லை. அது 50 பக்க புத்தகமாக இருந்தாலும் சரி 500 பக்க புத்தகமாக இருந்தாலும் அது ஒரு புத்தகம் என்ற அளவுகோல் மட்டுமே. சென்ற வருடத்தில் நான் என்னுடைய தொழில் சார்ந்த தொழில் நுட்ப புத்தகங்களை இந்த‌ வரையறைக்குள் கொண்டுவரவில்லை. அதனால் அப்புத்தகங்களைப் படிக்கும் காலத்தில் திட்டப்படியான புத்தக வாசிப்பில் இடைவெளி விழுந்து, பின்னர் அந்த இடைவெளியே அதனை மேலும் மேலும் பெரிய இடைவெளியாக்கி மீண்டும் அந்த வாசிப்பினைத் தொடங்குவது ஒவ்வொரு புதிய தொடக்கம்போல‌ ஆகிவிட்டது. அதனால் இந்த முறை எல்லா புத்தகங்களையும் இந்தக் கணக்கில் சேர்த்துக் கொண்டாயிற்று. எப்பொழுதும் போலவே இந்த வருடமும் இந்த திட்டதின் செயல்பாடுகளை துல்லியமாக குறித்து வைத்துக்கொண்டு வருவதாகத் திட்டம். திட்டமிடப்பட்ட தேதி,தொடங்கிய தேதி, வாசித்து முடிப்பதற்கு திட்டமிட்ட தேதி,வாசித்து முடித்த தேதி என எல்லாம். அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் திட்டமிட்டதிற்கும் அடைந்ததிற்குமான தெளிவான வரைபடம் கிடைக்கும். இது மிகவும் முக்கியமானது என நான் எப்பொழுதும் கருதுகிறேன். நானே உணர்ந்த உண்மை. 50 புத்தகங்கள் என்பது கிட்டத்தட்ட வாரம் ஒரு புத்தகம். எத்தகைய பணியாயிருந்தாலும் வாசித்து விடவேண்டும் என்ற உறுதியோடு தொடங்குகிறேன். பார்க்கலாம்.
 2. 50 கட்டுரைகளைப் பதிவிடுதல்.
  அவ்வப்பொழுது கட்டுரைகளை என்னுடைய வலைத்தளத்தில் பதிவேற்றிக்கொண்டிருந்தாலும் இந்த வருடம் அதனை சற்றே முறைப்படுத்த வேண்டுமென விரும்புகிறேன். இரண்டு காரணங்கள், ஒன்று நான் சிந்திக்கும், முக்கியமானதாக கருதும் கருத்துக்களை ஒற்றைப் புள்ளியில் இணைப்பதற்காக. அது எனக்கு ஒரு தெளிவான புரிதலை அளிக்கும், அத்தோடு எதிர்காலத்தில் என்னுடைய இன்றைய மன ஓட்டத்தினைப் பற்றி அறிவதற்கு உதவும். இரண்டாவதாக ஒரு கருத்தினை கட்டுரையாக எழுதுவதால் அது தொடர்பாக விரிவான வாசிப்பினையும், வரலாற்றையும் அறிந்து விட்டு எழுதுவதற்கான காரணம் உண்டாகும். வெறும் ஒற்றைச் செய்தியினை வைத்துக்கொண்டு எழுதுவதோ, விவாதிப்பதோ கூடாதென்பது என்னுடைய அடிப்படைக் கோட்பாடு. அதனால் அவற்றைப் பற்றி ஆழமாக வாடசித்து எழுதத் திட்டம். இக்கட்டுரைகளுக்கு நான் கொள்ளும் விதிகள் இரண்டே. ஒன்று நிகழ்கால செய்திக் கூப்பாடுகளுக்கு மத்தியில் என் பங்கிற்கான‌ கூப்பாடாக அவற்றை எழுதக்கூடாது. அரசியல், சினிமா தொடர்பாக எந்தக் கட்டுரையும் எழுதக் கூடாது. அப்படி எழுதுவதாக இருந்தால் அதன் ஆழ் வரலாற்றோடு கூடியவற்றை மட்டும் அதீத தேவையிருப்பின் எழுத வேண்டும்.
 3. தெலுங்கு மொழியினை எழுதவும்,வாசிக்கவும்,பேசவும் செய்வது இது நான் நீண்ட நாட்களாக விரும்பும் ஒன்று. இருப்பினும் இன்னும் எழுத,வாசிக்க,பேசக் கற்கவில்லை. இந்த வருடம் அதற்கான கால வரையறையை நிர்ணயிக்கிறேன். ஒருவேளை என்னால கற்றுக்கொள்ள முடியாமல் போனாலும், என்னால் திட்டமிட்ட காலத்தில் கற்றுக்கொள்ள முடியவில்லை என்ற உண்மையை வெளிப்படையாக நான் உணர்ந்துகொள்ள இது உதவும்.