அரசியல்

குடி அரசு

தமிழகத்தில் மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டு விட்டது. அரசாங்கம் தன்னுடைய பொருளாதார நிலைக்கு இது மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்று நினைத்து பல வருடங்களாகி விட்டது. அதனால் மதுக்கடைகள் அரசு மூடிவிடும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. ஒருவேளை சமூக ஊடகங்களிலும், செய்தித் தொலைக்காட்சிகளிலும் இதனை ஒரு கருப்பொருளாகக் கொண்டு விவாதம் நடத்தலாம். சில கிண்டல் செய்திகளை பரப்பி மகிழலாம். அவ்வளவே.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு கள்,சாராயம் போன்றவை தமிழகத்தில் ஆங்காங்கே விற்பனை செய்யப்பட்டுக்கொண்டிருந்த போது, 1886 ஆம் ஆண்டில் அப்போதைய‌ ஆங்கிலேய அரசு மெட்ராஸ் அக்ரேரி ஆக்ட் என்ற சட்டத்தை இயற்றியது. அதன்படி யாரும் கள், சாராயம் உற்பத்தி செய்யக்கூடாது. ஆனால் அரசு கொள்முதல் செய்து விற்பனை செய்யும். அதனை வாங்கி அருந்தலாம். வெளிநாட்டு மதுபானங்களின் விற்பனையை அதிகரிப்பதற்காகவே இந்த சட்டம் போடப்பட்டது. அவர்களுக்கு வியாபரமே நோக்கம், அது நமக்கான அரசு அல்ல. அவர்களுக்கான மக்களே நாம். அதனால் அந்த சட்டத்தினைக் கொண்டு வந்தார்கள். வியப்பதற்கு ஒன்றுமில்லை. முரண்பாடு என்னவென்றால் நம் அரசு, நமக்கான அரசும் அதையே இன்றும் செய்வதுதான்.

சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தில், குடிப்பது என்பது ஒரு தேச விரோத செயலாகப் பார்க்கப்பட்டது. இந்திய சுதந்திரத்தினை முன்னெடுத்த இந்திய தேசிய காங்கிரஸ் அதில் முக்கியப் பங்காற்றியது. அதற்கு எதிராக தீவிர பிரச்சாரமும் செய்யப்பட்டது. அதனால் குடிப்பது என்பது அறுவறுக்கத்தக்க, மற்றவர்களுக்குத் தெரிந்தால் தன்னுடைய மதிப்பைக் குறைத்துவிடும் ஒரு செயலாகவே கருதப்பட்டது. இன்று பள்ளி, கல்லூரி இளைஞர்கள் கூட குடிப்பதை வெளிப்படையாக கூறிக்கொள்ள என்ற அளவிற்கு நாம் மாறிப்போனதில் முக்கிய‌ பங்கு அரசுக்கு உண்டு.

மெட்ராஸ் பிரசிடென்சியின் ராஜாஜி தலைமையிலான‌ அரசாங்கம் 1937 ஆம் ஆண்டில் மதுவிலக்கை தமிழகம் முழுவதும் கொண்டு வந்தது. 1971 ஆம் ஆண்டு வரை அத்தடை நீடித்தது. 1971 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கருணாநிதி தலைமையிலான திமுக அரசு அத்தடையை நீக்கி கள் விற்பனையை அனுமதித்தது. அதன் பின்னர் 1974 ல் மீண்டும் அதே அரசு தடை விதித்தது. பின்னர் 1981 ல் ஆட்சிக்கு வந்த எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அரசு மீண்டும் அத்தடையை நீக்கியது. அதே அதிமுக அரசு 1987 ல் மீண்டும் தடை விதித்தது. 1990 ல் ஆட்சியில் இருந்த திமுக தடையை நீக்கியது. பின்னர் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு மீண்டும் தடையைக் கொண்டு வந்தது. அதன் பின்னர் அதே அதிமுக அரசு 2001 ஆம் ஆண்டில் தடையை நீக்கி ஒட்டுமொத்த கொள்முதல் மதுபான விற்பனையை தமிழக வாணிபக் கழகத்தின் கீழ் கொண்டு வந்தது. 2002 ஆம் ஆண்டு முதல் அனைத்து மதுபானக் கடைகளையும் அரசே ஏற்று நடத்தும் என அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இதுவே தமிழக மதுவிலக்கின் சுருக்கமான‌ வரலாறு.

2001 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை மதுபானக் கடைகள் நடத்துவடற்கு ஏலம் மூலம் அனுமதி அளிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. அதில் பெரும்பாலும் திமுகவினரின் ஆதிக்கம் ஓங்கியிருப்பதால் ஏலம் விடாமல் அரசே ஏற்று நடத்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்ததாக ஒரு தகவலும், அப்பொழுது ஆட்சி அதிகாரத்தினை விட்டுச் சென்றிருந்த திமுக அரசு கரூவூலத்தினை காலி செய்து விட்டு சென்றிருந்ததாகவும் அதனால் ஏற்பட்ட வருவாய் பற்றாக்குறையை சரிசெய்யும் மாற்று ஏற்பாடுகளில் ஒன்றாக அரசு இந்நடவடிக்கையை எடுத்ததாக ஒரு தகவலும் உண்டு.

இரு கட்சிகளும் தாங்கள் தடை விதித்த வருடங்களையும் மற்றவர் தடையை ரத்து செய்த வருடங்களையும் பட்டியலிட்டு மற்றவர் மீது குற்றம் சாட்டுகின்றனர்.எதுவாயிருந்தாலும், இரு அரசுகளுக்கும் இதில் பொறுப்பு உண்டு.

ஏன் அரசு மது விற்பனையை ஆதரித்தது? அதற்கு அப்போதைய அரசுகள் கூறிய காரணங்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.

ஒவ்வொரு அரசும் மது விற்பனை தடையை அமல்படுத்த‌ முடியாததற்கு கூறிய/கூறும் முக்கியக் காரணங்கள்.

  1. மதுபானத்திற்கான தடை என்பது கள்ளச்சாரயத்திற்கு வழிவகுத்து பல்வேறு உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது. அதனால் அரசே ஏற்று நடத்துவதன் மூலம் அதனை ஒழுங்குபடுத்தவும், சாவுகள் இல்லாமல் ஆக்கவும் முடியும். ஒவ்வோர் அரசும் தன் கூற்றுக்கு வலு சேர்க்கும் விதமாக‌ அப்போதைய ஆண்டுகளில் நடைபெற்ற கள்ளச்சாராய சாவுகளை மேற்கோள் காட்டுகின்றது.
  2. தமிழகத்தினைச் சுற்றியுள்ள மற்ற மாநிலங்களில் மதுவுக்கு தடை இல்லாமல் இருப்பதால் சட்ட விரோத மதுக் கடத்தல் நடைபெறும்.
  3. மேற்கூரிய இரண்டு காரணங்களால் அரசுக்கும், காவல்துறைக்கும் நடைமுறை நிர்வாகச் சிக்கல்கள் உருவாகும். அதீத பணிச்சிரமம் ஏற்படும்.

இதில் முதலாவது, மற்றும் இரண்டாவது காரணங்களின் உண்மைத்தன்மையைப் பார்ப்போம். இப்பொழுது கள்ளச்சாராயம் இல்லாமல் இருப்பதற்கு இவர்கள் மதுக்கடையைத் தொடங்கியதா காரணம்? இன்றைய நிலையில் யாரேனும் கள்ளச்சாராயம் அல்லது கள் விற்றால் அதன் விலை அரசு மதுபானத்தின் விலையைவிட குறைவாக இருக்குமா அல்லது அதிகமாக இருக்குமா? கண்டிப்பாக குறைவாகத்தானே இருக்கும். அப்படியென்றால் ஏழையாக இருக்கும் குடிப்பவர்கள் எங்கே செல்வார்கள்?

ஆனால் இன்றைய நிலையில் கள்ளச்சாராயம் விற்பது என்பது இயலாத காரியம். காரணம் அரசின் உறுதியான நடவடிக்கை. அரசு காவல்துறையைக் கொண்டு இரும்புக்கரத்தினால் அடக்கி விடும், அப்படித்தான் வைத்திருக்கிறது. இன்று தமிழகத்தில் கள்ளச்சாராயமே இல்லை என்று சொல்லி விடலாம். ஒரு சில விதிவிலக்குகள் தவிர. ஏன் அரசாங்கம் கள்ளச்சாராயத்தை கள் விற்பனையினையும் இத்தனை கண்டிப்புடன் தடை செய்துவைக்கிறது? ஒருவேளை சற்றேனும் கண்டுகொள்ளாமல் விடப்பட்டால் பல இடங்களில் கள்ளச்சாரயம் பெருகும். அது அரசின் வருமானத்தினை பெரும் அளவில் பாதித்துவிடும் என்பதுதான் முக்கியக் காரணம். இதர காரணங்களும் இருக்கலாம்.

இப்படி கள்ளச்சாராயத்தினை முற்றிலுமாக கட்டுப்படுத்த‌ முடியுமென்றால், மதுக்கடைகளை திறக்காமலேயே ஏன் இதனை செய்ய முடியாது? ஒரு சில இடங்களில் விதிமீறல்களும், அத்து மீறல்களும் நடைபெறலாம். அதனையும் நாளடைவிலோ அல்லது ஒரு சில வருடங்களுக்குள்ளாகவோ முற்றிலுமாக அரசால் கட்டுப்படுத்தி விட முடியும் தானே? ஆனால் அரசாங்கம் அதற்குத் தயாராக இல்லை. ஏன்?

முதலாவது மற்றும் முக்கியமான காரணம். மாநில அரசாங்க நேரடி வருமானத்தின் பெரும்பகுதியின் மூலம் மதுவாக இருக்கிறது. கடந்த வருடங்களின் அரசின் மது வருமானத்தைப் பாருங்கள்.

வருடத்திற்கு பத்து விழுக்காடு முதல் 30 விழுக்காடு வரை வருமான உயர்வு. கடந்த வருடத்திய வருமானம் 30,000 கோடி. ஒருவேளை மதுவைத் தடை செய்யும் பட்சத்தில் அதனை ஈடுகட்டுவது என்பது மிகவும் சவாலான விஷயம். அரசின் பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஆதாரமாக இருப்பது மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமானமே. அத்தோடு ஏற்கனவே ஜி.எஸ்.டி நடைமுறைப்படுத்தப்பட்டதால் பெரும்பாலான வரி விகிதங்கள் இந்திய அளவில் சீராக்கப்பட்டு விட்டது அத்தோடு அது இந்திய மைய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால் வரி வருவாய்களைப் பெறுக்கும் நேரடி வாய்ப்புகள் மாநில அரசாங்கங்களுக்கு மிகவும் குறைவு.

உடனடித் திட்டங்கள் எதுவும் சாத்தியமில்லை என்பதனையும் அரசு நன்றாக அறியும். அதனாலேயே ஒவ்வொரு முறை மது விலக்கு தொடர்பாக தமிழகம் கொந்தளிக்கும் பொழுதெல்லாம் ஏதெனும் உடனடி தற்காலிக நடவடிக்கைகள் மூலம் அதனை சரி செய்கிறார்கள். ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு 500 கடைகளையும், 2017 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 500 கடைகளயும் மூடினார்கள். இவையெல்லாம் அப்போதைய கொந்தளிப்புகளை அடக்குவதற்கான தற்காலிக நடவடிக்கைகள் தான். நிரந்தரத் தீர்வுகளும் அல்ல, நிரந்தரத்தீர்வை நோக்கியவையும் அல்ல. இந்த 500 கடைகளை மூடிய பின்னர் ஆண்டு வருமான குறைந்திருக்கிறதா? இல்லை. ஏனென்றால் சிறு ஊர்களில் கூட அரசு இன்று இரண்டு மூன்று கடைகளைத் திறந்து வைத்திருக்கிறது. ஒன்றை மூடினால் அடுத்த கடைக்குப் போய் மது வாங்கப்போகிறார்கள். அவ்வளவே!

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு.

ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல் அறமல்லாதவற்றை நீக்கி வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் என்கிறது வள்ளுவம்.
‘அறத்தில் தவறாமல், அறமல்லாதவற்றை நீக்கியா’ நம் அரசு நடந்துகொள்கிறது?
இந்த வருமானம் அறத்தின் வழி ஈட்டப்பட்ட வருமானம் தானா?
தினம் நூறுகளில் சம்பாதிக்கும் ஒருவனிடத்தில் இருப்பதைப் பிடுங்கிக்கொள்வதையல்லவா செய்கிறோம்.

நன்றாக சிந்தித்துப்பாருங்கள், தன் குழந்தையின் படிப்பிற்காக செய்ய வேண்டிய சில நூறுகளைத் தானே நீங்கள் பறிக்கிறீர்கள். அக்குழந்தைதானே இந்த தேசத்தின் நாளைய எதிர்காலம், நாளைய சமூகம் என்பதை எளிதில் மறந்து விடுகிறீர்கள். இன்றைய தேவைக்காக நீங்கள் நாளைய தினத்தைக் கொளுத்துகிறீர்கள். எங்கே போனது நம் அறம்? சுதந்திரம் அடைந்த முதல் பத்தாண்டுகளில் இருந்த அறம் பின்னர் குறைந்து குறைந்து இன்று அறத்தை விற்பனை செய்து விட்டோமே. இது சரிதானா? நம் பொறுப்புகளைத் தட்டிக்கழித்து ஏன் மீண்டும் மீண்டும் முந்தையவர்களை குறை சொல்கிறோம் நாம்?

இந்த வருமானத்தில் எத்தனைக் குழந்தைகளின் கல்வி வீணாய்ப்போயிருக்கும்? எத்தனை உயிர்கள் போயிருக்கும்? எத்தனை குடும்பங்கள் எதிர்காலம் பாழாயிருக்கும்? சரியாக செய்யப்படும் ஒரு நூறு ரூபாய் செலவு ஒரு குழந்தையின் கல்வியில், அக்குடும்பத்தில் எத்தனை மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா நாம்?

சரி நாம் குற்றங்களை மட்டுமே பட்டியலிடவேண்டாம். அதற்கான மாற்று வழிகளை இனியாவது செய்வோமா? என்ன செய்யலாம்?

  1. முதலில் நம் அரசு மதுவிலக்கை கொண்டுவர வேண்டும் என்று உண்மையாகவே நினைக்க வேண்டும். ஏனென்றால் வெறும் கண்துடைப்புகளாக நாம் மேற்கொண்ட நடவடிக்கைகளால் தான் இன்றுவரை மதுவிலக்கை விலக்கியே வைத்திருக்கிறோம். ஒருவேளை நாம் முன்னரே இந்த எண்ணத்தினைக் கொண்டிருந்தோமேயானால் இந்நேரம் மதுவே இல்லாத நிலையில் இருந்திருப்போம். வேண்டாம் வெற்று நடவடிக்கைகள்.
  2. நம் அரசுக்கு நன்கு தெரியும், இதற்கு உடனடி நிவாரணம் இல்லையென்று. ஆனால் நீண்டகாலத் திட்டத்தினை உருவாக்க முடியும். உதாரணமாக் 2025 ல் மதுவில்லா தமிழகம் என்றொரு திட்டத்தினை உருவாக்கலாம். தேவைப்படின் அதற்கு ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பை உருவாக்கி, அரசியல் தலையீடுகள் இல்லாவண்ணம் ஆகச்சிறந்த அதிகாரிகளையும் வல்லுநர்களையும் அக்குழுவில் உறுப்பினர் ஆக்கலாம். அவ்வமைப்பின் நோக்கம் இவையாகவும் இருக்கட்டும்.

அ. ஐந்து வருடத்தில் முற்றிலும் ஒழிக்க வேண்டுமென்றால் வருடத்திற்கு 20 விழுக்காடு கடைகளை மூட வேண்டும். அதற்கான மாற்று வருவாயைப் பெருக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அரசுக்கு தெரிவிக்கட்டும். அரசு நடவடிக்கையை எடுக்கட்டும்.
ஆ. அரசின் தேவையில்லா செலவினங்களை குறைப்பதனைப் பற்றியும் அக்குழு ஆராய்ந்து அரசுக்குத் தெரிவிக்கட்டும். அதன் மீதும் கட்சி நலனையும் விளம்பர நோக்கங்களையும் தவிர்த்து அரசு நடவடிக்கை எடுக்கட்டும்.
இ. அக்குழுவின் நடவடிக்கை தொடர்ந்து ஆய்வு செய்யப்படட்டும். தேவைப்படின் அணுகுமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் செயல் பாட்டினை வேகப்படுத்தலாம்.

அடுத்த கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டால் அவர்கள் இதன் பலனை அடைவார்கள் என்பதற்காக உடனடி விளம்பரங்களில் இரங்காமல் நிரந்தரத் தீர்விற்கான செயல்பாடுகளை செய்ய வேண்டும். வரலாறு நம்மை நினைவு கூறப்போவது நம் செயல்கள் வழியாகத்தான், நம்முடைய‌ பொருளாதார நிலைகளினால் அல்ல என்பதை உரக்கச் சொல்ல வேண்டிய நேரமிது.

நன்றி.

சட்டத்தை நிறைவேற்றுபவர்களின் ஆட்சி

தமிழக,இந்திய‌ அரசியல் தொடர்பான எந்த ஒரு நிகழ்வையும் வரலாற்றுத்தகவல்களோடு அணுகவேண்டும், அன்றாட‌ வெற்று அரசியல் கூப்பாடுகளுக்கு செவி மடுக்கக்கூடாது என்ற நினைப்பு எனக்கு எப்பொழுதும் உண்டு. அதனால் பெரும்பாலான‌ நிகழ்கால அரசியல் விவாதங்களில் என்னுடைய கவனத்தை முற்றிலுமாக நான் தவிர்த்து விடுவதுண்டு. கடந்த ஒரு மாதங்களில் ஏதேனும் ஓர் ஊடகத்தில் வெளிவந்த விவாதங்களை ஒட்டுமொத்தமாக தொகுத்துப் பாருங்கள். அவையெல்லாம் வெற்றுக் குப்பைகள், அன்றன்றைய சொறிதலுக்கு மட்டுமேயானவை என்பது தெரியும். அதன் காரணமாகவே இந்த வெற்று நுரை கொப்புளிக்கும் சமயத்தில் நான் அவற்றில் கவனம் செலுத்துவதில்லை.

உண்மையிலேயே அவை முக்கியமானவையா இருக்கும்பட்சத்தில் அவை கண்டிப்பாக நீடிக்கும். நுரையொழிந்த பின்னர் ஆழப்புரிந்து கொள்ளலாம். கடந்த சில ஆண்டுகளாக நான் பின்பற்றும் முறை இதுவே.

அந்த விதத்தில், சமீபத்திய சசிகலா மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீதான‌ வருமான வரித்துறையின் திடீர் சோதனை தொடர்பாக தோன்றிய‌ எண்ணங்கள் இவை. இந்த ரெய்டு நடந்தது க‌டந்த 2017 நவம்பர் மாதம். இதனை எழுதும் இப்போது வரை பத்து மாதங்கள் முடிந்து விட்டது. இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று யோசித்திருக்கிறோமா? யோசிக்க வேண்டியதில்லை. உருப்படியாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 187 இடங்களில் நடத்தப்பட்ட சோதனை இந்திய வரலாற்றின் மிகப்பெரும் சோதனைகளில் ஒன்று எனக் கூறப்படுகிறது.

இதில் மிகவும் அப்பட்டமாக தெரியும் ஒரு விஷயம் என்பது இது முற்றிலும் அதிகார துஷ்பிரயோகம் என்பதுதான். சசிகலா குடும்பத்தினரை அல்லது அதிமுக அதிகார வர்க்கத்தின் முக்கிய நபர்களை சிக்க வைத்து அதன் மூலமாக தமது அதிகாரங்களை அல்லது விருப்புகளை மறைமுகமாக செயல்படுத்த‌ மத்திய அரசு செய்யும் முயற்சிதானே இது.

இதில் நான் மிகவும் வருத்தமடையக் காரணம், நாம் அரசியலமைப்புச்சட்டத்தின் மீது கொண்டுள்ள அடிப்படையை நம்பிக்கையை இது போன்ற செயல்பாடுகள் நிலைகுலையச் செய்கிறது. பாரதிய ஜனதா கட்சியோ, இல்லை காங்கிரஸ் கட்சியோ இதுபோன்ற ஒரு செயலினை செய்திருந்தால், எனக்குக் கவலையில்லை. செய்தது இந்திய‌ அரசு.

ஒருவேளை உண்மையிலேயே வருமான வரித்துறையின் சோதனையின் நோக்கம், வரி ஏய்ப்பு செய்வதைக் கண்டுபிடிப்பதாக இருந்தால் அது தொடர்பான நடவடிக்கைகளை, சோதனை செய்த வேகத்தில் பத்தில் ஒரு பங்காவது செய்ய வேண்டும்தானே! ஏன் செய்யவில்லை?

தன்னாட்சி பெற்ற அனைத்து அதிகார அமைப்புகளையும் தனது ஆதரவாளர்களால் நிரப்பு தன் விருப்பப்படி செயல்பட வைக்கிறது மத்திய அரசு. நண்பர்களே இது எத்தனை மோசமான ஒரு செயல்பாடு? இந்திய அரசியல் சட்டம் தன்னாட்சி பெற்ற அமைப்புகளை உருவாக்கியதன் நோக்கம் அரசியல் காரணங்களுக்காக அவை எக்காரணத்தாலும் பயன்படுத்தப்படக் கூடாது என்பதனால்தானே? தேர்தல் ஆணையம்,ரிசர்வ் வங்கி, நீதிமன்றம் போன்றவை அவ்வாறுதானே உருவாக்கப்பட்டன.

நன்றாக சிந்தித்துப்பாருங்கள். பாரதிய ஜனதா ஆட்சி நடைபெறும் போது ஏதாவது பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களின் இல்லங்களிலோ, நிறுவனங்களிலோ வரிச்சோதனை நடத்தப்படுகிறதா? இல்லை. சரி காங்கிரஸ் ஆட்சிக்காலத்தின் போது யாராவது காங்கிரஸ் தலைவர்கள் வீடு அல்லது நிறுவனங்களில் வரிச்சோதனை நடத்தப்படுகிறதா? இல்லை. ஒருவர் மற்றவர் மீது சோதனை நடத்திக்கொள்கிறார்கள். ஏதோ ஒரு விதத்தில் சமரசம் செய்து கொள்கிறார்கள். அரசியல்வாதிகள் தொடர்பாக‌ நடைபெற்ற சோதனைகளின் எண்ணிக்கையையும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் எண்ணிக்கையும் ஒப்பிட்டுப்பார்த்தால் இவர்கள் எவ்வளவு கீழ்த்தரமாக செயல்படுகிறார்கள் என்பது தெரியும். இவர்கள் யாரை ஏமாற்றுகிறார்கள்? உங்களையும் என்னையும்தானே? ஒரு கட்சியின் ஆட்சியில், எதிர்க்கட்சி மீது நடத்தப்படும் சோதனை என்பது இயல்பானதுதான் என நம்மையும் இவர்கள் இவர்களின் தொடர் செய‌ல்பாடுகள் மூலம் ஏதோ ஒருவிதத்தில் நம்ப வைக்கிறார்கள் தானே?

யாராவது ஏதாவது ஒரு அரசியல்வாதி மீது நடத்தப்பட்ட வரிச்சோதனையின் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று கேட்டுப்பாருங்கள். பதில் கூற மாட்டார்கள் அல்லது ஏதாவது ஒரு வெற்றுப் பதிலைக் கூறுவார்கள். ஆட்சியாளர்களிடம் கேளுங்கள், அது அவ்வமைப்பின் தன்னாட்சி செயல்பாடு. அதில் அரசு தலையிட முடியாது என்று விளக்கம் கூறுவார்கள். சரி இவர்கள் தானே ஆட்சியாளர்கள்? அந்த தன்னாட்சி அமைப்புகள் குறிப்பிட்ட கால அளவிற்குள் நடவடிக்கை எடுக்கும் வண்ணம் அவ்வமைப்புகளில் மாற்றத்தை கொண்டு வருவார்களா? மாட்டார்கள். ஏனெனில் அதை இயக்குவதே இவர்கள்தான். அதில் மாற்றம் என்பது இவர்களை இவர்களே மாட்டி விடுவது. எப்படி செய்வார்கள்? காங்கிரஸ், பாஜக என யாரும் இதற்கு விதிவிலக்கல்ல.

நண்பர்களே, இங்கே நடைபெறுவது சட்டத்தின் ஆட்சி அல்ல. சட்டத்தை நிறைவேற்றுபவர்களின் ஆட்சி.

தேர்தல்

நான் இந்த தேர்தலில் வாக்களிக்கும்பொழுது இவற்றை நினைவில் கொள்வேன்.

1. பெரிய கட்சிகள் என்ற காரணத்திற்காக மட்டும் ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்க மாட்டேன். ஏனெனில் அவர் தொகுதியின் பிரதிநிதியாக சட்டமன்றத்தில் செயல்படாமல் கட்சியின் பிரதிநிதியாக தொகுதியில் செயல்படும் வாய்ப்புகளே அதிகம்.

2. யார் வரவேண்டும் என நான் நினைக்கும் வேட்பாளருக்கு வாக்களிப்பேனேயன்றி யார் வரக்கூடாது என நினைக்கும் வேட்பாளரை வெல்லும் வாய்ப்புள்ளவருக்கு எக்காரணம் கொண்டு வாக்களிக்கமாட்டேன். ஏனெனில் நான் எந்த காரணத்திற்காக ஒரு வேட்பாளார் வரக்கூடாது என நினைக்கிறேனோ அதே காரணத்தினை அவரை வெல்லும் வாய்ப்பு உள்ளவர் அடுத்த தேர்தலில் அடையலாம். அதிமுக வேட்பாளரைத் தோற்கடிக்க நான் திமுக வேட்பாளருக்கு வாக்களித்தால் அடுத்த தேர்தலில் திமுக வேட்பாளரைத் தோற்கடிக்க அதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டியிருக்கும். ஆக ஒரு நாளும் நான் விரும்பும் ஓர் வேட்பாளர் வெற்றி பெற‌மாட்டார். அதற்குப் பதில் நான் வெற்றி பெற விரும்பும் வேட்பாளருக்கு வாக்களித்தால் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை நான் ஒரு ஓட்டு அதிகப்படுத்துகிறேன். மாற்றத்தை நானே தொடங்குவேன்.

3. தொகுதிக்கு நன்கு பரிச்சயமான அல்ல‌து தொகுதி மக்களின் பிரச்சினைகளுக்காக தேர்தல் காலம் அல்லாமல் மற்ற காலங்களிலும் போராடும் ஒருவர் தேர்தலில் நிற்கும் பொழுது அவருக்கு கண்டிப்பாக முன்னுரிமை அளிப்பேன்.

4. இன்றைய நிலையில் எந்த பத்திரிக்கையின் கருத்துக்கணிப்பையும் நம்பி அவர்கள் கூறும் வெற்றி வாய்ப்புள்ளவருக்கு வாக்களிக்க முடிவு செய்யமாட்டேன். அவர்களது கணிப்பினை ஒரு தரப்பாக மட்டுமே எடுத்துக்கொள்வேன். கட்சி சார்ந்த பத்திரிக்கை செய்திகளின் கணிப்புகளை முற்றிலுமாக புறந்தள்ளுவேன்.

5. நான் வாக்களிக்கும் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்பதனால் அவருக்கு வாக்களிக்காமல் இருக்க மாட்டேன். நான், நான் வெற்றி பெற விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிப்பேனேயன்றி வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் வேட்பாளருக்கு வாக்களிக்க மாட்டேன். நான் வெற்றி பெற விரும்பும் வேட்பாளருக்கு நானே வாக்களிக்கவில்லையென்றால் வேறு யார் வாக்களிப்பார்?

6. என் தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் பற்றி அறிந்து கொள்ள முயல்வேன். நான் விரும்பும் ஒரு நல்ல வேட்பாளர் பொருளாதார காரணங்களால் பிரதான கட்சிகள் அளவிற்கு விளம்பரம் செய்ய முடியாதவராக இருக்கலாம். ஆனால் அதனையே நான் தகுதிக்குறைவாக எடுத்துக் கொள்ளமாட்டேன். மற்றவர்கள் 10 முறை பிரச்சாரத்திற்கு வந்தால் அந்த சுயமான வேட்பாளர் ஒருமுறை மட்டும் வரக்கூடியவராக இருப்பார். நான் அவரையும் அவரது திட்டங்களையும் முக்கியமாகக் கவனிப்பேன்.

7. நான் ஏற்றுக்கொள்ளக் கூடிய வேட்பாளர் இல்லாத பட்சத்தில் நான் NOTA விற்கே வாக்களிப்பேன். எக்காரணம் கொண்டும் வேறு ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்க மாட்டேன்.

நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கலாமா?

சமீபத்திய நாட்களில் சீமான் மீதான ஆர்வத்தையும் ஆதரவையும் சில இடங்களில் காண முடிகிறது. சீமானின் நாம் தமிழர் கட்சி இன்றைய நிலையில் தமிழகத்திற்கு ஓர் மாற்றாக அமையுமா? சீமானுக்கு வாக்களிக்கலாமா? அவரின் இன்றைய இடம் எது?

சீமான் நாம் தமிழர் கட்சியை 2010 ல் தொடங்கினார். சென்ற நாடாளுமன்றத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். தற்போது தனியாக நிற்பதாக அறிவித்து திராவிடக்கட்சிகள், மக்கள் நலக் கூட்டணி, காங்கிரஸ், பாஜக என அனைத்து கட்சிகளையும் விமர்சனம் செய்து வருகிறார்.

முதலாவதாக ஓர் அடிப்படை உண்மை, தமிழக மக்களுக்கு எந்த ஒரு கட்சியின் மீதும் அதீத அன்பெல்லாம் கிடையாது. வேண்டுமென்றால் திமுக தலைவர் தன்னை உலகத்தமிழர்களின் தலைவர் எனவும், ஜெயலலிதா தன்னை மக்களின் முதல்வர் எனவும் அழைத்துக்கொள்ளலாம். இதெல்லாம் மக்களுக்கு ஒரு பொருட்டே அல்ல, அவர்கள் நிகழ்கால அல்லது சற்று முந்தைய காலகட்ட நிகழ்வுகளின் அடிப்படையிலேயே வாக்களித்து வருகின்றனர். மற்றபடி, தலைவருக்காக கூச்சலிடுபவர்கள் ஒன்று, அதனால் பலனை எதிர்பார்ப்பவராக் இருக்க வேண்டும், அல்லது ஏற்கனவே பலனடைந்தவராக இருக்கவேண்டும் ( குறைந்த பட்சம் ஒரு வேளை உணவு மற்றும் பணம்). கட்சியினுடைய கொள்கைகள், அவர்களுடைய நீண்ட கால செயல்பாடுகள் என்பதன் அடிப்படையில் வாக்களிக்கும் மக்கள் ஒட்டு மொத்த தமிழகத்தில் 5 விழுக்காடு இருந்தால் ஆச்சரியம். ஏனெனில் அப்படி இருந்திருந்தால் இன்று வரை திமுகவும் அதிமுகவும் ஆட்சியில் தொடர்ந்திருக்க முடியாது.

தமிழகத்தின் தனிப்பெரும் இரு கட்சிகளும் ஊழல் கட்சிகள்தான். இந்த‌ அப்பட்டமான உண்மை 98 விழுக்காடு தமிழர்களுக்கு தெரியும். ஏனைய 2 விழுக்காட்டு மக்களுக்கும் கூட தெரியும்தான்.ஆனால் அவர்களுடைய சூழ்நிலையின் காரணமாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இந்நிலையில் இந்த வெற்றிடத்தை யார் நிரப்புவது? திமுக அதிமுக அல்லாத ஓர் கட்சியைத் தேர்வு செய்யலாமென்றால் அப்படி எவருமே இல்லை. ஏனெனில் மற்ற எல்லா கட்சிகளும் ஏதேனும் ஒரு கால கட்டத்தில் ஏதேனும் ஒரு கட்சியோடு இணைந்து செயல்பட்டிருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் திமுகவும் அதிமுகவும்தான் சேரவில்லையே தவிர மற்ற எல்லா கட்சிகளும் எல்லா கட்சிகளோடும் கூட்டணி அமைத்திருக்கின்றன. அதனால் தங்களை ஓர் மாற்றாக முன்வைக்க கூடிய ஓர் தார்மீக உரிமையை அவையனைத்துமே இழந்துவிட்டன. குறிப்பாக தமிழகத்தில் இரண்டாம் நிலைக் கட்சிகளாக அறியப்படும் பாமக, மதிமுக, பாஜக, காங்கிரஸ் போன்றவை. கடந்த காலத் தேர்தல் கூட்டணிகளைப் பார்த்தால் பாமக,மதிமுக தேர்தலுக்கு தேர்தல் இங்கும் அங்குமாக தாவியிருந்திருப்பதைக் காணலாம்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருவர் புதிதாகத் தொடங்கக்கூடிய ஓர் கட்சிக்கு அந்த தார்மீக உரிமை கிடைக்கிறது. ஏனெனில் அப்புதிய கட்சி மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் இருக்காது. அதன்படியே தேமுதிகவின் வருகை. திமுக அதிமுகவுக்கான சரியான மாற்றாக தன்னை முன்னிறுத்தியே தேமுதிக தொடங்கப்பட்டது. தன்னுடைய முதல் தேர்தலிலேயே ஏறத்தாழ 8 விழுக்காடு ஓட்டுக்களை அக்கட்சி பெற்றது. ஆனால் அவ்வாய்ப்பினைப் பெற்ற‌ தேமுதிக, அதன் தலைவர் விஜயகாந்தின் தனிப்பட்ட செயல்களினாலும், கட‌ந்த முறை அதிமுகவுடன் இணைந்ததாலும் அதனுடைய தார்மீக உரிமையை இழந்துவிட்டது.

இந்தக் கட்சிகள் எல்லாம் தேர்தலில் போட்டியிட்டால் வாக்குகளைப் பெற மாட்டார்கள் என்பதல்ல பொருள். அவர்களும் போட்டியிடுவார்கள், மேலே கூறியது போல நிகழ்கால அல்லது சற்று முந்தைய காலகட்ட நிகழ்வுகளின் அடிப்படையில் அவர்களுக்கான வாக்குகள் கிடைக்கும். இதுவே மதிமுக, பாமக, கம்யூனிஸ்டுகளின் நிலை. விரைவில் தேமுதிகவையும் இந்த வரிசையில் எதிர்பார்க்கலாம்.

இவற்றைத்தவிர தமிழகத்தின் ஒவ்வோர் பகுதிக்குமான கட்சிகளும் உண்டு. அவைகள் அந்தந்த பகுதிகளின் சாதி சங்கங்களிலிருந்து உருவாகியவையாக இருக்கும். வன்னியர் சங்கத்திலிருந்து பாமக‌. கொங்கு கவுண்டர்களின் நீட்சியாக கொங்கு இளைஞர் பேரவை முதலான‌ பல கட்சிகள், தேவர்களின் பிரதிநிதியாக சில‌ முன்னேற்றக் கழகங்கள். இந்த அனைத்து உதிரிக்கட்சிகளுடைய நோக்கமெல்லாம் ஒன்றுதான், முடிந்தவரை பெரிய கட்சிகளோடு பேரம் பேசி பணம் அல்லது பதவிகளைப் பெறுவது. இதற்காக இவர்கள் தங்களுடைய சாதிக்கு தான்தான் பிரதிநிதி எனக்காட்டிக் கொள்வார்கள். (இப்பொழுது அதற்கும் போட்டி, ஒரு சாதிக்குள் பல சங்கங்கள், கட்சிகள்). இது போன்ற அனைத்து உதிரிக்கட்சிகளையும் சற்று உற்று நோக்கி பார்த்தால் ஒன்று புரியும் அவர்கள் அவர்களுடைய சாதி மக்களை நோக்கி இப்படிக் கூறுவார்கள், எப்படி இருந்த இனம் இன்று இப்படியாகிவிட்டது, அதிகாரத்தைப் பெறுவதன் மூலமாகவே நம் இன (இங்கே சாதி எனக்கூறமாட்டார்கள்) மக்களின் வாழ்க்கைத் தரத்தை மற்றும் இன்ன பிறவற்றையெல்லாம் உயர்த்த முடியும் என்பார்கள். எந்தக்கட்சியும் இதற்கு விதி விலக்கல்ல.

இந்த சூழ்நிலையில்தான் சீமானின் பிரவேசம். புதிய கட்சி என்பதனால் அதற்கான சில சலுகைகள் உண்டு. உதாரணமாக அனைத்து கட்சிகளையும் பாரபட்சமின்றி விமர்சிக்கலாம். நாங்கள் வந்தால் ஊழலை முற்றிலுமாக ஒழித்துவிடுவோம் என்று கூறலாம். அதெப்படி மற்ற கட்சிகளால் முடியவில்லை தங்களால் மட்டும் முடியும் எனக்கேட்டால் அவ‌ர்களால் எளிதில் நாங்கள் வந்த‌தும் பாருங்கள் எனக் கூறிவிட முடியும். ஆளும் கட்சிக்கும், அல்லது ஆள்வதற்கான வாய்ப்பு உள்ள கட்சிக்கும் இந்த சலுகை கிடையாது. ஏனெனில் அக்கட்சிகள் தாங்கள் கூறுபவற்றை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகளை கருத்தில் கொண்டே உத்தரவாதம் அளிக்க முடியும். முழுவதுமாக இல்லாவிட்டாலும் கூட ஓரளவிற்கு சாத்தியமான ஒன்று என்ற நிலையிலேயே ஒரு சலுகையை அறிவிப்பார்கள். உதாரணமாக தமிழக மீனவர்கள் பிரச்சினையில் நிரந்தரத் தீர்விற்கான வழிமுறைகள் ஆராயப்படும், மத்திய அரசாங்கத்தினை வலியுறுத்துவோம் எனக்கூறுவார்கள். அது பாதுகாப்பான உத்திரவாதம். எதிர்காலத்தில் என்ன நடந்தாலும் அதனை இதனோடு சேர்த்து ஒப்பிட்டு விடலாம். ஆனால் நான் முதலமைச்சர் ஆனால், தமிழக மீனவனைத் தொட்டு பாக்க சொல்லுங்க? (சீமான் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியது) என்பதெல்லாம் சினிமாவில் கதாநாயகன் பேசலாம். நடைமுறைக்கு ஒவ்வாதது. அது அயல்நாட்டு உறவு, அதில் மாநில அரசிற்கு எந்த அதிகாரமும் கிடையாது என்பது குறைந்தபட்ச புரிதல் கொண்ட எவருக்கும் தெரியும்.

மற்றொன்று சீமானுடைய தமிழ்த்தேசியவாதம். அவர் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவானவர் என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே. இலங்கைத் தமிழர்களுக்கு தான் ஆதரவளிக்கவில்லை இன்று யாராவது கூறுகிறார்களா என்ன? அனைவருமே ஆதரவாளர்கள் தான், அவரவர் நிலைக்கு ஏற்ப. மற்றொன்று அது மிகவும் கவர்ச்சிகரமான பொருள், அதனை வைத்து நன்றாக வியாபாரம் செய்யலாம். அதை சீமான் செய்கிறார். தமிழர்கள் ஏமாற்றப்பட்டுவிட்டார்கள், அடிமையாகப் போய்விட்டார்கள், மற்றவர்கள் தமிழர்கள் தலையில் ஏறி மிதிக்கிறார்கள் என்பதெல்லாம் உணர்ச்சிவயப்படுத்துவற்கான பேச்சுகள். மற்றபடி அவை வெற்றுப் பேச்சுக்கள். இந்திய அளவில் உயர்ந்து நிற்கும் இனங்களில் தமிழினமும் ஒன்று என்பது குறைந்தபட்சம் இந்தியாவினுள் பயணிக்கும் ஒருவருக்கு தெரியும். இவர் கூறும் குறைபாடுகளும் உள்ளனதான். ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் முற்றிலுமாக தமிழினம் அழிக்கப்பட்டு விட்டது, தான் மட்டுமே தமிழினத்தின் மீட்சிக்கான வழி என்பதெல்லாம் அவருடைய அதிகாரத்திற்கான ஓர் வழி மட்டுமே. உலகின் பல்வேறு உயர் நிறுவனங்களில் இந்தியாவின் மற்ற எந்த இனத்திற்கும் குறைவில்லாமல் தமிழர்கள் இருக்கிறார்கள். ஒருமுறை அமெரிக்க அதிபர் ஒபாமாவே தான் ஒருவரை சந்தித்தபோது ‘ஓ தமிழியன்’ எனக்கூறுவதாக ஒரு கட்டுரையை நானே படித்திருக்கிறேன். சுதந்திர இந்தியாவின் 70 ஆண்டுகளில் அதிக மதக் கலவரங்கள் இல்லாத, சராசரியாக தொடர்ந்து வளர்ச்சியை அடையக்கூடிய மாநிலங்களில் தமிழகம் ஒன்று. இவ்வளர்ச்சி திமுக, அதிமுகவின் ஊழல்களுக்கு அப்பாற்பட்ட ஓர் வளர்ச்சி. அந்த வளர்ச்சிக்கு தமிழகத்திலுள்ள ஒவ்வொருவரும் பொறுப்பானவர்கள். சீமான் அவர்கள் இல்லாவிட்டால் தமிழினம் அழிந்து போகும் என்பதெல்லாம் ஓர் மாயை. சீமான் அதனைத் திரும்பத்திரும்ப உணர்ச்சி பூர்வமாக சொல்கிறார். ஒரே நோக்கம் அதுதான் மக்களை வெகு விரைவாகத் திரும்பிப் பார்க்க வைக்கும் என்பதுதான்.

அத்தோடு அவர் முன்வைக்கும் பொருளாதார முன்னெடுப்புகள். அவையெல்லாம் இன்றைய நிலையில் முற்றிலும் சாத்தியமில்லாதவை. அரசால் ஆயிரம் ஏக்கரில் தக்காளி விளைவிக்கப்படும், பக்கத்திலேயே ஓர் தக்காளி தொழிற்சாலை அமைக்கப்படும், அரசாங்கமே ஆட்டுப்பண்ணை அமைக்கும், ஆடு மேய்த்தல் அரசாங்கத்தொழிலாக அறிவிக்க‌ப்படும், பன்னாட்டு நிறுவனங்கள் திருப்பி அனுப்பபடும் என்பது போன்றவை. இவையெல்லாம் தற்போதைய நிலையில் முற்றிலும் சாத்தியமில்லாதவை. இது போன்ற ஆலோசனைகளை சீமானுக்கு யார் வழங்கினார்கள் என்பது தெரியவில்லை. ஏனெனில் இவையெல்லாம் டீக்கடைப் பேச்சுக்கள், ஒன்றுக்கும் உதவாதவை, உணர்ச்சிப்பூர்வமாக மேடடைகளிலும், பேட்டிகளிலும் பேசுவதற்கு உதவுவதைத் தவிர.

ஏனெனில் இன்றைய அரசின் நிர்வாகக் கட்டமைப்பு என்பது 200 ஆண்டுகால கட்டமைப்பு. ஏன் 200 ஆண்டுகள்? சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் தானே ஆகின்றது? நாம் 1947 லேயே சுதந்திரம் அடைந்திருந்தாலும், அனைத்து நிர்வாக முறைகளையும் நாம் முற்றிலும் புதிதாகத் தொடங்கவில்லை. அவையெல்லாம் அதற்கு முன்னர் பிரிட்டீஷாரின் காலத்திய நிர்வாக முறைகளின் நீட்சியே. அப்படியே, இந்த நிர்வாக முறை 1800 களிலிருந்து தொடங்கி இன்றைய நிலையை வந்தடைந்திருக்கிறது. ஒட்டுமொத்த இந்தியாவின் அதிக அதிகாரம் படைத்திருக்கும் இந்தியப் பிரதமர் அவர்களாலேயே கூட இந்த இரண்டாண்டுகளில் நிர்வாகத்தில் மாற்றத்தை பெரிய அளவில் கொண்டுவர முடியவில்லை. ஏனெனில் அத்தகையதோர் கட்டமைப்பு இது. அதில் ஊழல் இருக்கிறது என்பது உண்மைதான். அதனால் இந்த நிர்வாக முறையே தவறெனக் கூறி அதனை முற்றிலும் ஒதுக்கிவிட்டு, அத‌னை வேறொன்றால் நிரப்புவது அதனைவிட அபத்தமானது, அபாயகரமானது.

இந்நிர்வாக முறை முற்றிலுமாகத் தவறானது அல்ல. பெரும்பாலும் நல்ல நோக்கத்திற்காகவே அமைக்கப்பட்டது. கடந்த நூறாண்டுகளில் அதனுள் இருந்த பல்வேறு குறைபாடுகள், குளறுபடிகள் சரிசெய்யப்பட்டிருக்கின்றன. இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. அதனையே நாம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் கண்டிப்பாக இந்நிர்வாக முறை தற்போது அளிப்பதைவிட அதிக‌ பலனை அளிக்கும். ஆனால் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கும் வந்ததும் நிர்வாகம் சீரமைக்கப்படும் என்று கூறுவது ஓர் மேடைப் பேச்சில் மக்களுக்கு உணர்ச்சியூட்டாது. அதுவே அரசாங்கம் ஆயிரம் ஏக்கரில் மாடு வளர்க்கும், மாடு மேய்த்தல் அரசாங்கத்தொழிலாக்கப்படும், பக்கத்திலேயே ஓர் இறைச்சித் தொழிற்சாலை அமைக்கப்படும் என்பதெல்லாம் மக்களுக்கு நல்ல கனவையும் உணர்ச்சியையும் அளிக்கும். அதுதான் சீமானின் தேவை.

கண்டிப்பாக சீமான் மற்ற அரசியல் கட்சிகளைப்போல ஒருநாள் சமரசம் செய்து கொள்வார். ஆனால் எவ்வளவு காலம் கழித்து என்பதுதான் கேள்வி. எவ்வளவு காலம் கழிகிறதோ அவ‌ர்களுக்கு அவ்வளவு ஆதாயம், அவ்வளவுதான்.

சரி இப்படியெல்லாம் இருக்கும் நிலையில் சீமானுக்கு வாக்களிக்கலாமா? கூடாதா? என்றால் வாக்களிக்க வேண்டும் என்றுதான் கூறுவேன். அதற்கான காரணம் அவர் கூறும் அந்த சினிமா பொருளாதாரத் திட்டங்களோ அல்லது அவர் ஆட்சிக்கு வந்து தமிழகத்தில் பொற்கால ஆட்சியை வழங்குவார் என்பதோ அல்ல‌. வேறு வகையான காரணங்கள்.

1. திமுக, அதிமுகவிற்கு நான் வாக்களிப்பதென்பது நான் ஊழலை ஏற்றுக்கொள்வதற்கு சமமானது. எனவே நான் அவர்கள் அல்லாத மற்ற ஒருவருக்கு வாக்களிக்க வேண்டும். அந்த வாய்ப்பை திமுக அதிமுகவோடு இணைந்து சம‌ரசம் செய்து கொண்ட கட்சிகளுக்கும் அளிக்கக் கூடாது. எனவே நாம் தமிழருக்கு வாக்களிக்கலாம்.

2. நான் என் தொகுதியில் போட்டியிடக்கூடிய ஓர் சுயேட்சை வேட்பாளருக்கு வாக்களிக்கலாம் தான். ஆனால் அது பெரிய கட்சிகளிடத்தில் அந்த சுயேட்சை வேட்பாளர் மீதான ஆதரவாகத்தான் பார்க்கப்படுமே தவிர அவர்கள் மீதான வெறுப்பாகப் பார்க்கப்படாது. எனவே ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் தெரிந்த ஓர் மாற்று வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். எனவே நாம் தமிழருக்கு வாக்களிக்கலாம்.

3. நாம் தமிழருக்கு வாக்களிப்பதன் முக்கிய நோக்கம் அதனை ஆட்சியில் அமர்த்துவதென்பது அல்ல. மற்ற கட்சிகளை குறிப்பாக திமுக அதிமுகவை தம்மை மறுபரிசீலனை செய்து கொள்ளவைப்பதற்காக. நாம் தமிழர் கட்சி குறைந்த பட்சம் 5 விழுக்காடு வாக்குகளைப் பெற்றாலே அனைத்துக் கட்சிகளும் தன்னுடைய நிலையைக் கண்டிப்பாக தங்களளவிலாவது விவாதிப்பார்கள். இது ஆரோக்கிய அரசியலுக்கு வழிவகுக்கும். (உதாரணம்: திமுகவில் ஸ்டாலினுடைய சமீபத்திய கால நடவடிக்கைகள்)

4. நாம் தமிழருக்கு இந்த தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் நம்முடைய ஊழலின் வெறுப்பை வெளிப்படுத்தலாம். திமுக அதிமுக அல்லாத மற்ற கட்சிகளுக்கு வாக்களிக்காமல் நாம் தமிழருக்கு ஏன் வாக்களித்திருக்கிறார்கள் என்ற கேள்வி எழும்பொழுது அனைத்து கட்சிகளுக்குமான பொதுவான குற்றம் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப அணிசேர்ந்து கொண்டு, தங்களுடைய கொள்கைகளை பின்பற்றாதது மற்றும் ஊழல். இது அவர்களுடைய கொள்கைகள் மற்றும் எதிர்கால செயல்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

ஒருவேளை மேற்கூறியது போல நாம் தமிழர் கட்சி ஒரு குறிப்பிட்ட வாக்கு வங்கியை அடைந்து விட்டு அடுத்த தேர்தலில் ஏதெனும் ஓர் கட்சியோடு சம‌ரசம் செய்யும் பட்சத்தில் என்ன செய்வது?

நாம் வேறேனும் ஓர் புதுக் கட்சிக்கோ அல்லது தங்களது தவறுகளை சீரமைத்துக்கொண்ட ஓர் கட்சிக்கோ வாக்களிக்க வேண்டியதுதான். அப்போது நாம் தமிழர் பாமக, மதிமுக, தேமுதிக கட்சிகளின் வரிசையில் உட்கார்ந்திருக்கும்.

ரஷ்யப் புரட்சி மருதன்

ரஷ்யப்புரட்சி முதல் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் நடைபெற்றது. ஜார் மன்னரின் தவறான அணுகுமுறைகளால் ரஷ்யாவின் மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி லெனின் அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. லெனின் ஆதரவாளர்கள் போல்ஷ்விக்குகள் எனப்பட்டனர். அவர்களின் எதிர்த்தரப்பிலிருந்த மற்றோர் புரட்சியாளர்கள் மென்ஷ்விக்குகள் எனப்பட்டனர். ஏற்கனவே ரஷ்யா போரில் பெருமளவு சேதமடைந்திருந்த சமயத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தால் அரசால் முழு வீச்சோடு புரட்சியினை அடக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் மென்ஷ்விக்குகள் ஆட்சியை ஜார் மன்னரிடமிருந்து பெற்றுக்கொண்டனர். பின்னர் அவர்களிடமிருந்து லெனின் புரட்சி மூலம் ஆட்சியினைக் கைப்பற்றினார். ரஷ்யப்புரட்சியினைப் பற்றி சுருக்கமாக தெரிந்து கொள்ள உதவும் புத்தகம்.

முதல் உலகப்போர் மருதன்

முதல் உலக‌ப்போர் (1914‍-1918). 1 கோடியே 70 லட்சம் பேர் மரணம்.2 கோடி பேர் காயம். இந்த உலகையே முதல் உலகப்போருக்கு முன் பின் என பிரிக்கும் அளவுக்கு உலக நாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்திய ஓர் போர். பீரங்கி, நச்சு வாயுக்கள் போன்ற உத்திகளைப் பயன்படுத்தி கொத்துக் கொத்தாக மனித உயிர்கள் பறிக்கப்பட்ட முதல் பெரும் போர்.

ஓரிரு நாட்களில் அல்ல‌து மாதங்களில் முடிந்துவிடும் என்ற எண்ணத்தில்தான் உலக‌ப்போர் தொடங்கியது. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. 4 ஆண்டுகள் நீடித்தது. உலகப்போர் 1914 ல் தொடங்கினாலும் அதற்கு முந்தைய 50 ஆண்டுகளாகவே போருக்கான காரணங்கள் உருவாகி வந்து கொண்டிருந்தன‌. உதாரணமாக 1700 களில் இங்கிலாந்து முதலாளித்துவ பொருளாதாரத்தை பின்பற்றத் தொடங்கி அதில் கணிசமான வெற்றியையும் பெற்றிருந்தது. அதன் தொடர்ச்சியாக மற்ற ஐரோப்பிய நாடுகளும் 1800 களில் அதனைப் பின்பற்றத் தொடங்கின. ஜெர்மனி இயந்திரமயமாதலை இங்கிலாந்துக்கு பின்னர் பல காலங்கள் கழித்துதான் தொடங்கியது. இருந்தாலும் அது மிக விரைவாக முன்னேறியது. அதனை மற்ற நாடுகள் விரும்பவில்லை. குறிப்பாக இங்கிலாந்து. ஒவ்வொரு நாடும் மற்றோர் நாட்டின் வளர்ச்சியில் பீதியடைந்தது.மற்றோர் நாடு தங்களைவிட வள‌ரும் பொழுது தங்களுடைய நாட்டை அவர்கள் கட்டுப்படுத்தலாம் என்ற எண்ணம் அருகிலுள்ள நாடுகளுக்கு உருவானது. குறிப்பாக இங்கிலாந்திற்கு. அதுவரை உலகின் ஆதிக்க சக்தியாக இருந்த இங்கிலாந்து அதனை விரும்பவில்லை.

இதனால் பதற்றம் அதிகமாகி அதிகமாகி ஒவ்வோர் நாடும் தன்னை மற்றோர் நாடு தாக்குமோ என்ற எண்ணத்திலேயே போருக்கு தயார் செய்து கொண்டிருந்தன. இதற்கிடையில் ஒவ்வோர் நாடும் வேறு சில நாடுகளோடு சில ராணுவ ஒப்பந்தங்கள் செய்து கொண்டது நிலைமையை மேலும் சிக்கலாக்கியது. ஜெர்மனி ஆஸ்திரியா‍-ஹங்கேரியோடு சில ஒப்பந்தங்களை மேற்கொண்டது. அப்போது ஆஸ்திரியா-ஹங்கேரி ஒரே தேசம். பிரிந்திருக்கவில்லை. மறுபக்கம் இங்கிலாந்து,பிரான்ஸ்,ரஷ்யா ஒப்பந்தம் செய்து கொண்டன. 1914 ல் ஆஸ்திரிய இளவரசர் செர்பிய இளைஞன் ஒருவனால் கொல்லப்பட்டார். அந்தக் கொலை நடந்தது செர்பியாவின் சுயாட்சிக்காக. ஏனெனில் செர்பியாவை அப்போது ஆஸ்திரியா ஆண்டுவந்தது. இக்கொலைக்குப்பின்னர் ஆஸ்திரியா‍‍-ஹங்கேரி செர்பியா மீது போர் தொடுத்தது. செர்பியா ரஷ்யா உதவியை நாட, ஜெர்மனி ஆஸ்திரியாவுக்காக வந்தது. போர் தொடங்கி விட்டது.

முதல் உலகப் போரில் இங்கிலாந்து, பிரான்ஸ்,ரஷ்யா போன்ற நேச நாடுகள் வெற்றி பெற்றதாகக் கூறினாலும் அப்போர் பங்கேற்ற அனைத்து நாடுகளுக்கும் பயங்கரமான‌ இழப்பையே கொடுத்தது. அதற்குப் பிந்தைய 10,20 ஆண்டுகளுக்கான நாட்டின் வளம் அந்த போரிலேயே செலவழிக்கப்பட்டு விட்டது. 150 ஆண்டுகால இங்கிலாந்தின் வல்லமை முடிவுக்கு வந்தது. பொருளாதார இழப்புகள் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளை நிலை குலைய வைத்தது. உணவுப்பற்றாக்குறை பெருமளவில் ஏற்பட்டது.

முதல் உலக‌ப்போரில் ஆதாயம் அடைந்த ஒரே நாடு அமெரிக்கா. இருபக்க நாடுகளுக்குமே அமெரிக்கா ஆயுத வியாபாரம் செய்தது. போரின் ஆரம்ப காலத்தில் எந்த அணியிலும் சேராமல் இருந்தது அமெரிக்கா. அதனால் இருபக்க நாடுகளின் வணிகத்திலும் மிகப்பெரிய இலாபம் அடைந்தது. போரின் கடைசிக் கட்டத்திலேயே கலந்து கொண்டது. சேதமும் பெரிய அளவில் இல்லை. அதனால் போருக்குப் பிந்தைய 10,20 ஆண்டுகளின் ஐரோப்பா முழுவதும் சுணக்கம் கண்டபோது அமெரிக்கா நான்கு கால் பாய்ச்சலில் முன்னேறியது. உலக வல்லரசாக மாறியது.

முதல் உலகப்போரின் ஆரம்பம் முதல் இறுதி வரை நடைபெற்ற நிகழ்வுகளின் மேலோட்டமான தொகுப்பு. மருதனால் எழுதப்பெற்றது. உலகப்போரைப் பற்றி ஏராளமான அடர்த்தியான புத்தகங்கள் ஒவ்வொரு நாட்டின் பார்வையிலும் விரிவாக எழுதப்பட்டிருக்கின்றன. இருப்பினும் ஓர் ஆரம்ப நிலைப் புரிதல் மற்றும் ஒட்டுமொத்த உலகப்போரின் வடிவத்தைக் கண்டுகொள்ள தொடக்கமாக இந்நூலை வாசிக்கலாம்.

மஞ்சு விரட்டு

நான் சென்ற வருடம் (2015) பொங்கல் முடிந்ததும் எழுதிய ஓர் கட்டுரை. இன்றும் அதே நிலைதான்.

மஞ்சு விரட்டு இப்போதைக்கு இல்லை. முடிவாகிவிட்டது. பொங்கல் சமயத்தில் வழக்கம் போல அனைத்துக் கட்சிகளும், சில சாதி அமைப்புகளும் குரலெழுப்பிவிட்டு தங்களின் அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட்டார்கள்.ஒருவேளை இவ்வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வரும்பொழுதோ அல்லது வேறு ஏதும் அறிக்கை விடுவதற்கு இல்லையெனும்போதோ களத்தில் இவர்களின் குரலைக் கேட்கலாம். பொங்கல் சமயத்திலேயே இப்பதிவை எழுதியிருந்தால் வழக்கம் போல வெற்றுக்கூச்சலாகவே போயிருக்கும் என்பதால் இப்பொழுது இடுகிறேன்.

ஒன்று தமிழக அரசியல் கட்சிகள் இந்த விஷயத்தில் ஒன்றும் செய்ய மாட்டார்கள். அதீத மக்கள் வெறுப்பு ஏற்படும் பொழுதுமட்டும் தீவிரமாக இருப்பது போலக் காட்டிக்கொள்வார்கள். திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமக, விடுதலை சிறுத்தைகள், தேமுதிக, கம்யூனிஸ்ட் என யாரும் விதிவிலக்கல்ல. பிரச்சினை பெரிதாகும்போது மட்டும் உள்நுழைந்து முடிந்தவரை அரசியல் மட்டும் செய்துவிட்டுப் போவார்கள். இவர்களின் அரசியல் காரணங்களுக்காக ஏதாவது நல்லது நடந்தால் உண்டு. இல்லையேல் மற்றவர்களைக் குறை கூறிவிட்டு அடுத்த விஷயத்துக்கு போய்விடுவார்கள். அதனால் அரசியல் சாராத ஏதாவது ஒரு பொதுநல அமைப்போ, தன்னார்வ இயக்கமோ,இதில் தீவிரமாக ஈடுபட்டு பொதுமக்களிடம் எடுத்துச் சென்றால் மட்டுமே அரசும், அரசியல் கட்சிகளும் இதில் ஆர்வம் காட்டும். இதுவே இப்போதைக்கு சாத்தியமெனத்தோன்றுகிறது.

அதிலும் உள்ள சிக்கல் என்னவென்றால் அப்படிப்பட்ட ஏதோ ஒர் அமைப்பின் முயற்சியாலேயே இந்த மஞ்சுவிரட்டு இன்று நிறுத்தப்படும் நிலைக்கு வந்துள்ளது. அவர்கள் மீதும் முற்றிலுமாக குற்றம் சொல்ல முடியாது. அவர்கள் அவ்வாறு கற்பிக்கப்பட்டிருக்கிறார்கள், அல்லது புரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்களில் 10 விழுக்காடு நபர்கள் கிராமங்களில் இருந்து வந்தவர்களாக இருந்தால் அதிசயம். அவர்களுக்கு தெரிந்த தகவல்களின் அடிப்படையிலேயே இந்நிகழ்வைப் புரிந்து கொண்டுள்ளார்கள். மஞ்சு விரட்டை நேரலையில் பார்த்து கண்ணீர் வடிப்பவர்கள். அந்த நேரலை பணத்திற்காக தொலைக்காட்சிகள் ஒளிபரப்பக்கூடியவை. அவர்களைப் பொறுத்த வரையில் காளை துன்புறுத்தப்படுகிறது. அதனைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்பதே. வழக்கு தொடுக்கிறார்கள். தடை வாங்குகிறார்கள். ஒளிபரப்பிய தொலைக்காட்சியோ அடுத்த ஒளிபரப்புக்கு சென்று விடுகிறது. விவசாயிக்கே அடி.

தனக்கு சாப்பிட எதுவும் இல்லையென்றாலும் கூட மாட்டுக்காக புண்ணாக்கும் பருத்திக்கொட்டையும் வாங்கிவரும் பலரை கண்கூடாகக் கண்டிருக்கிறேன். தான் வளர்க்கும் மாட்டிற்கு பெயர் வைத்திருப்பார்கள், வீட்டில் ஒருவ‌னைப் போலவே பாவிப்பார்கள். ‘செவலையனக் கொண்டுபோய் தண்ணிகாட்டிகிட்டு வாடா’ என்பது போன்றவற்றை தினம் நூறு தடவைக் கேட்டிருக்கிறேன். அவர்களுக்கு மாடும், மனிதனும் வேறல்ல. மாடு போல் வேலை செய்வார்கள், மாட்டை பிள்ளையாகக் கருதுவார்கள்.

மாட்டை குளிப்பாட்டி சந்தனம், குங்குமம் இட்டு மாலை அணிவித்து பொங்கல் கொடுத்து கோவிலின் மஞ்சுவிரட்டு திடலுக்கு அழைத்துவருவார்கள். அவர்களுக்கு அதுதான் வாழ்க்கை.அவர்களா மாட்டினை துன்புறுத்துவார்கள்?

மஞ்சு விரட்டு என்றதும் அலங்காநல்லூர், பாலமேடு என்று பிரமாண்டமாகவே நினைக்கிறார்கள் ஆர்வலர்கள். வேண்டியதில்லை. மிகச் சிறிய அளவில் அந்தந்த கிராமத்து மாடுகளைக் கொண்டு நடத்தப்படும் மஞ்சு விரட்டுகளே அதிகம். அவர்களால் தான் மஞ்சு விரட்டு உயிர்ப்போடு இருந்தது. அவர்களுக்கு தங்கள் தரப்பினை விவாதிக்க தெரியாது. அரசு என்ன சொன்னாலும் தன்னளவிலோ, வீட்டளவிலோ புலம்பிவிட்டு ஏற்றுக்கொள்வார்கள். இதுவே ஒரு நகர வாழ் மக்களின் பழக்கவழக்கத்தில் இவர்கள் குற்றம் சொல்லட்டும். ஆயிரம் பேர் வழக்கு தொடர்வார்கள், கட்டுரை எழுதுவார்கள். அதனால் அங்கெல்லாம் விட்டுவிட்டு விவசாயியின் வயிற்றில் அடிப்பார்கள், கிராமத்தில் தாங்கள் தலைமுறை தலைமுறையாகக் கொண்டாடி வந்ததை தலைநகரிலிருந்து நிறுத்தி விடுவார்கள்.

என்ன செய்வான் அவன்? வாதாட மாட்டான், கட்டுரை எழுத மாட்டான். ‘அரசாங்கம் தடை விதிச்சிடுச்சு’ என்ற எளிமையாகக் கடந்து செல்வான். இருக்கும் மாடுகளை விற்பான். யாராவது கேரளாவிலிருந்தோ, ஆந்திராவிலிருந்தோ வந்து காளையை அடிமாட்டிற்காக‌ வாங்கி செல்வார்கள். ஆர்வலர்கள் அங்கேயெல்லாம் செல்ல மாட்டார்கள். ஏனென்றால் மாட்டுக்கறி சாப்பிடுபர்கள் உலகெல்லாம் உண்டு. சண்டைக்கு வந்து விடுவார்கள். இவர்கள் கிராமத்தில் காளையை தன் பிள்ளையெனக் கருதும் விவசாயியிடம் தன் கருத்துப்புலமையெல்லாம் காட்டுவார்கள். அவன்தானே திருப்பி சண்டைக்கு வரமாட்டான்? விடுங்கள் இன்னும் கொஞ்சபேர்தான் இருக்கிறார்கள். அவர்களையும் கொன்று விடுவோம்.

இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு பாகம் 2

India After Gandhi புத்தகத்தின் தமிழ்ப்பதிப்பின் இரண்டாம் பாகம். இப்புத்தகம் 1960 களிலிருந்து தொடங்குகிறது. 1964 ல் பிரதமர் நேருவின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், லால் பகதூர் சாஸ்திரி பிரதமரானது, அதனைத் தொடர்ந்து இந்திரா காந்தி பிரதமரானது, நேருவுக்கும் இந்திரா காந்திக்குமான முரண்பாடுகள், அதன் விளைவாக ஏற்பட்ட அவசரநிலைப் பிரகடனம், நிலையில்லாத ஆட்சிகள், மீண்டும் இந்திரா காந்தி, அவரது இளைய மகன் சஞ்சயின் அரசியல் பிரவேசம், அவருடைய சறுக்கல்கள் மற்றும் மரணம், பின்னர் ஏற்பட்ட கலவரங்கள், இந்திரா காந்தியின் தோல்விகள், அதனால் இந்திரா காந்தி படுகொலை, அரசியலையே விரும்பாத ராஜீவ் காந்தி அரசியலுக்கு வந்தது, அவருடைய பொருளாதாரத்திட்டங்கள், விடுதலைப்புலிகள் மீதான செயல்பாடுகள், ராஜீவ் காந்தியின் மரணம் என சுதந்திர இந்தியாவின் பெரும்பாலான அனைத்து நிகழ்வுகளையும் முழுக்க முழுக்க ஆதாரங்களோடு மிக விரிவாக எழுதியுள்ளார் குஹா.

நான் ஏற்கனவே கூறியதுபோல ராமச்சந்திர குஹாவின் எண்ணங்களும் கருத்துக்களும் அல்ல இப்புத்தகம், கடைசி சில அத்தியாயங்கள் தவிர‌. அக்காலகட்ட விமர்சகர்களாலும், இந்திய வெளிநாட்டு பத்திரிக்கையாளர்களாலும், எதிர்க்கட்சியினராலும் எழுதப்பெற்ற கட்டுரைகள்,கடிதங்கள், அரசு உத்தரவுகள் போன்றவற்றின் அடிப்படையிலேயே இப்புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. அவற்றையெல்லாம் இக்காலத்திலிருந்து நோக்குவதால் அவற்றின் விளைவுகளையும் அறிய முடியுமென்பதால் அவற்றை ஒழுங்குபடுத்தி விளைவுகளோடு பொறுத்தி தந்திருக்கிறார் குஹா.

இறுதி சில அத்தியாயங்களில் இந்தியா இன்னும் ஒற்றை தேசமாக நீடித்திருப்பதற்கான காரணங்கள், அதன் பொருளாதார முன்னேற்றத்தின் காரணம், நடைபெற்ற ஏதோ செயல்களால் மறுபக்கம் ஏற்பட்ட பலன்கள், இந்திய சினிமாவின் வளர்ச்சி, தேச ஒற்றுமையில் அவற்றின் பங்கு என சிலவற்றில் தன் கருத்தினைப் பட்டியலிட்டுள்ளார். சுதந்திர இந்திய வரலாற்றினை அறிந்து கொள்ள விரும்பும் ஒருவர் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்.

இந்திய உளவுத்துறை RAW எவ்வாறு இயங்குகிறது – குகன்

ஒவ்வொரு நாட்டிற்கும் ராணுவ பாதுகாப்பு எத்தனை முக்கியமானதோ அந்த அளவிற்கு உளவு நிறுவனமும் முக்கியமானது. உளவு நிறுவனங்களின் தேவை முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களுக்குப் பின்னர் அதீத முக்கியத்துவம் பெற்றதனை குறைந்தபட்ச வரலாற்று அறிதல் கொண்ட எவரும் உணர முடியும். அத்தகைய பணியை செய்யும் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ ஓர் அமைப்பே ரா.

ஐபி எனப்படும் உளவு அமைப்பு ஆங்கிலேயர் காலம் முதல் இந்தியாவில் இருந்து வந்தது. சுதந்திர இந்தியாவிலும் அதுவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உளவுப் பணிகளை மேற்கொண்டு வந்தது. 1962 ல் சீனா மற்றும் 1965 ல் பாகிஸ்தானுடனாக போர்களின் போது சரியான உளவுத்தகவல்களை ஐபியால் திரட்ட முடியாததால் அப்போர்களில் சில பின்னடைவுகள் ஏற்பட்டது.

அதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உளவு செயல்பாடுகளை பிரித்து தனி அமைப்பினை உருவாக்குவது என்று 1968 ஆம் ஆண்டு அன்றைய பிரதமரான இந்திரா காந்தி தலைமையிலான அரசால் முடிவு செய்யப்பட்டு ரா உதயமானது. அந்த ராவின் செயல்பாடுகள் முற்றிலும் ரகசியமானவை என்றாலும், அவற்றைப் பற்றிய கடந்த 47 ஆண்டுகால செய்திகளின் அடிப்படையில் ராவின் செயல்பாடுகள் மற்றும் முக்கியத்துவம் போன்றவற்றை இப்புத்தகத்தில் விளக்கியுள்ளார் குகன். இந்திய உளவு அமைப்பு மற்ற நாடுகளின் எந்தெந்த நடவடிக்கைகளைக் கவனிக்கிறது, அதற்கான உளவு ஆட்களை எவ்வாறு தேர்வு செய்கிறது, மற்ற நாடுகளின் உளவு நிறுவனங்களோடு எப்படிப்பட்ட உறவைப் பேணுகிறது எனப் பல விவரங்கள் இப்புத்தகத்தில் உள்ளன.

ஆழமான தகவல்கள் இல்லையென்றாலும் கடந்த கால அரசியல் நடவடிக்கைகள், வெளிநாட்டு உறவு, வெளிநாட்டு கொள்கைகள், எல்லைப் பாதுகாப்பு, பொருளாதாரம் போன்றவற்றில் ராவின் முக்கியத்துவத்தினை அறிந்து கொள்ள ஓர் ஆரம்பப்புள்ளியாக இப்புத்தகத்தை வாசிக்கலாம்.