india

சட்டத்தை நிறைவேற்றுபவர்களின் ஆட்சி

தமிழக,இந்திய‌ அரசியல் தொடர்பான எந்த ஒரு நிகழ்வையும் வரலாற்றுத்தகவல்களோடு அணுகவேண்டும், அன்றாட‌ வெற்று அரசியல் கூப்பாடுகளுக்கு செவி மடுக்கக்கூடாது என்ற நினைப்பு எனக்கு எப்பொழுதும் உண்டு. அதனால் பெரும்பாலான‌ நிகழ்கால அரசியல் விவாதங்களில் என்னுடைய கவனத்தை முற்றிலுமாக நான் தவிர்த்து விடுவதுண்டு. கடந்த ஒரு மாதங்களில் ஏதேனும் ஓர் ஊடகத்தில் வெளிவந்த விவாதங்களை ஒட்டுமொத்தமாக தொகுத்துப் பாருங்கள். அவையெல்லாம் வெற்றுக் குப்பைகள், அன்றன்றைய சொறிதலுக்கு மட்டுமேயானவை என்பது தெரியும். அதன் காரணமாகவே இந்த வெற்று நுரை கொப்புளிக்கும் சமயத்தில் நான் அவற்றில் கவனம் செலுத்துவதில்லை.

உண்மையிலேயே அவை முக்கியமானவையா இருக்கும்பட்சத்தில் அவை கண்டிப்பாக நீடிக்கும். நுரையொழிந்த பின்னர் ஆழப்புரிந்து கொள்ளலாம். கடந்த சில ஆண்டுகளாக நான் பின்பற்றும் முறை இதுவே.

அந்த விதத்தில், சமீபத்திய சசிகலா மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீதான‌ வருமான வரித்துறையின் திடீர் சோதனை தொடர்பாக தோன்றிய‌ எண்ணங்கள் இவை. இந்த ரெய்டு நடந்தது க‌டந்த 2017 நவம்பர் மாதம். இதனை எழுதும் இப்போது வரை பத்து மாதங்கள் முடிந்து விட்டது. இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று யோசித்திருக்கிறோமா? யோசிக்க வேண்டியதில்லை. உருப்படியாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 187 இடங்களில் நடத்தப்பட்ட சோதனை இந்திய வரலாற்றின் மிகப்பெரும் சோதனைகளில் ஒன்று எனக் கூறப்படுகிறது.

இதில் மிகவும் அப்பட்டமாக தெரியும் ஒரு விஷயம் என்பது இது முற்றிலும் அதிகார துஷ்பிரயோகம் என்பதுதான். சசிகலா குடும்பத்தினரை அல்லது அதிமுக அதிகார வர்க்கத்தின் முக்கிய நபர்களை சிக்க வைத்து அதன் மூலமாக தமது அதிகாரங்களை அல்லது விருப்புகளை மறைமுகமாக செயல்படுத்த‌ மத்திய அரசு செய்யும் முயற்சிதானே இது.

இதில் நான் மிகவும் வருத்தமடையக் காரணம், நாம் அரசியலமைப்புச்சட்டத்தின் மீது கொண்டுள்ள அடிப்படையை நம்பிக்கையை இது போன்ற செயல்பாடுகள் நிலைகுலையச் செய்கிறது. பாரதிய ஜனதா கட்சியோ, இல்லை காங்கிரஸ் கட்சியோ இதுபோன்ற ஒரு செயலினை செய்திருந்தால், எனக்குக் கவலையில்லை. செய்தது இந்திய‌ அரசு.

ஒருவேளை உண்மையிலேயே வருமான வரித்துறையின் சோதனையின் நோக்கம், வரி ஏய்ப்பு செய்வதைக் கண்டுபிடிப்பதாக இருந்தால் அது தொடர்பான நடவடிக்கைகளை, சோதனை செய்த வேகத்தில் பத்தில் ஒரு பங்காவது செய்ய வேண்டும்தானே! ஏன் செய்யவில்லை?

தன்னாட்சி பெற்ற அனைத்து அதிகார அமைப்புகளையும் தனது ஆதரவாளர்களால் நிரப்பு தன் விருப்பப்படி செயல்பட வைக்கிறது மத்திய அரசு. நண்பர்களே இது எத்தனை மோசமான ஒரு செயல்பாடு? இந்திய அரசியல் சட்டம் தன்னாட்சி பெற்ற அமைப்புகளை உருவாக்கியதன் நோக்கம் அரசியல் காரணங்களுக்காக அவை எக்காரணத்தாலும் பயன்படுத்தப்படக் கூடாது என்பதனால்தானே? தேர்தல் ஆணையம்,ரிசர்வ் வங்கி, நீதிமன்றம் போன்றவை அவ்வாறுதானே உருவாக்கப்பட்டன.

நன்றாக சிந்தித்துப்பாருங்கள். பாரதிய ஜனதா ஆட்சி நடைபெறும் போது ஏதாவது பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களின் இல்லங்களிலோ, நிறுவனங்களிலோ வரிச்சோதனை நடத்தப்படுகிறதா? இல்லை. சரி காங்கிரஸ் ஆட்சிக்காலத்தின் போது யாராவது காங்கிரஸ் தலைவர்கள் வீடு அல்லது நிறுவனங்களில் வரிச்சோதனை நடத்தப்படுகிறதா? இல்லை. ஒருவர் மற்றவர் மீது சோதனை நடத்திக்கொள்கிறார்கள். ஏதோ ஒரு விதத்தில் சமரசம் செய்து கொள்கிறார்கள். அரசியல்வாதிகள் தொடர்பாக‌ நடைபெற்ற சோதனைகளின் எண்ணிக்கையையும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் எண்ணிக்கையும் ஒப்பிட்டுப்பார்த்தால் இவர்கள் எவ்வளவு கீழ்த்தரமாக செயல்படுகிறார்கள் என்பது தெரியும். இவர்கள் யாரை ஏமாற்றுகிறார்கள்? உங்களையும் என்னையும்தானே? ஒரு கட்சியின் ஆட்சியில், எதிர்க்கட்சி மீது நடத்தப்படும் சோதனை என்பது இயல்பானதுதான் என நம்மையும் இவர்கள் இவர்களின் தொடர் செய‌ல்பாடுகள் மூலம் ஏதோ ஒருவிதத்தில் நம்ப வைக்கிறார்கள் தானே?

யாராவது ஏதாவது ஒரு அரசியல்வாதி மீது நடத்தப்பட்ட வரிச்சோதனையின் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று கேட்டுப்பாருங்கள். பதில் கூற மாட்டார்கள் அல்லது ஏதாவது ஒரு வெற்றுப் பதிலைக் கூறுவார்கள். ஆட்சியாளர்களிடம் கேளுங்கள், அது அவ்வமைப்பின் தன்னாட்சி செயல்பாடு. அதில் அரசு தலையிட முடியாது என்று விளக்கம் கூறுவார்கள். சரி இவர்கள் தானே ஆட்சியாளர்கள்? அந்த தன்னாட்சி அமைப்புகள் குறிப்பிட்ட கால அளவிற்குள் நடவடிக்கை எடுக்கும் வண்ணம் அவ்வமைப்புகளில் மாற்றத்தை கொண்டு வருவார்களா? மாட்டார்கள். ஏனெனில் அதை இயக்குவதே இவர்கள்தான். அதில் மாற்றம் என்பது இவர்களை இவர்களே மாட்டி விடுவது. எப்படி செய்வார்கள்? காங்கிரஸ், பாஜக என யாரும் இதற்கு விதிவிலக்கல்ல.

நண்பர்களே, இங்கே நடைபெறுவது சட்டத்தின் ஆட்சி அல்ல. சட்டத்தை நிறைவேற்றுபவர்களின் ஆட்சி.

இந்திய அரசியலமைப்பு – லக்ஷ்மிகாந்த்

இந்திய அரசியலமைப்பு எவ்வாறு உருவாக்கப்பட்டது? அதிலுள்ள ஒவ்வோர் அம்சமும் என்ன? அவை தரும் உரிமைகள் எவை? அவை தரும் கட்டுப்பாடுகள் எவை? எந்தெந்த நாடுகளின் அரசியலமைப்பு சட்டங்களில் இருந்து அவை தருவிக்கப்பட்டன? இந்த நிலத்தை ஆளும் முறையை எவ்வாறு தீர்மானிப்பது? எதிர்காலாத்தில் ஏதேனும் ஓர் மாநிலம் தனி நாடு கோரினால் என்ன செய்வது? போன்ற அனைத்தையும் விளக்கும் அரசியலமைப்பு சட்டத்தினைப் பற்றி தெளிவாக விளக்கக் கூடிய ஓர் புத்தகம். நம் மனநிலையில் இந்தப் புத்தகம் ஓர் போட்டித்தேர்வுக்கான புத்தகம் என்ற நிலை உருவாக்கப்பட்டுவிட்டதால் இதனை பொதுவாக நாம் வாசிப்பதில்லை. ஆனால் ஒவ்வொரு இந்திய பிரஜையும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகங்களில் ஒன்றாகக் கொள்ளவேண்டும் என்பதே என் எண்ணம்.

உதாரணமாக தனி மனிதனுக்கான உரிமைகள் எவையெவை? அவை மீறப்படும்பொழுது தனிமனிதன் நேரடியாக இந்தியாவின் உச்சநீதிமன்றத்தை அணுகலாமா? அல்லது இடை நிலை நீதிமன்றங்களில் முறையிட்டுவிட்டு இறுதியாக மட்டுமே உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டுமா போன்ற விளக்கங்கள் கண்டிப்பாக ஒவ்வொரு இந்தியனும் தெரிந்து கொள்ளவேண்டியவையே. அத்தோடு ஒவ்வொருவரும் தன் மதம்,கலாச்சாரத்தைப் பேணுவதற்கு என்னென்ன உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன போன்றவை. தனக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை அறிந்துகொள்ளும்போதே அதனை பெற முடியும், அல்லது அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள முடியும். அப்படித்தானே?

இந்திய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கு அதற்கான குழுவில் இருந்தவர்கள் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்த பல்வேறு அம்சங்களை எடுத்து அதனை இந்தியாவிற்கு ஏற்றார்போல மாற்றி அரசியலமைப்பை உருவாக்கும் ஓர் கடினமான பணியிணை மிகக் குறைந்த காலகட்டத்தில் அதாவது இரண்டு ஆண்டுக்கும் குறைவில் உருவாக்கிய விதம், அரசாங்கங்கள் கட்டற்று செயல்பட்டுவிடக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட நீதிமன்றங்கள், அந்நீதிமன்றங்களின் பாதுகாப்பிற்கான விதிமுறைகள் போன்ற பல்வேறு தகவல்கள் இதில் உண்டு. சில முக்கிய காலகட்டங்களில் அரசிலமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகளும், கோட்பாபாடுகளும் மீறப்படும்பொழுது உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகள் பலவற்றையும் மிகத்தெளிவாக விளக்கக்கூடிய புத்தகம்.

இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு பாகம் 2

India After Gandhi புத்தகத்தின் தமிழ்ப்பதிப்பின் இரண்டாம் பாகம். இப்புத்தகம் 1960 களிலிருந்து தொடங்குகிறது. 1964 ல் பிரதமர் நேருவின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், லால் பகதூர் சாஸ்திரி பிரதமரானது, அதனைத் தொடர்ந்து இந்திரா காந்தி பிரதமரானது, நேருவுக்கும் இந்திரா காந்திக்குமான முரண்பாடுகள், அதன் விளைவாக ஏற்பட்ட அவசரநிலைப் பிரகடனம், நிலையில்லாத ஆட்சிகள், மீண்டும் இந்திரா காந்தி, அவரது இளைய மகன் சஞ்சயின் அரசியல் பிரவேசம், அவருடைய சறுக்கல்கள் மற்றும் மரணம், பின்னர் ஏற்பட்ட கலவரங்கள், இந்திரா காந்தியின் தோல்விகள், அதனால் இந்திரா காந்தி படுகொலை, அரசியலையே விரும்பாத ராஜீவ் காந்தி அரசியலுக்கு வந்தது, அவருடைய பொருளாதாரத்திட்டங்கள், விடுதலைப்புலிகள் மீதான செயல்பாடுகள், ராஜீவ் காந்தியின் மரணம் என சுதந்திர இந்தியாவின் பெரும்பாலான அனைத்து நிகழ்வுகளையும் முழுக்க முழுக்க ஆதாரங்களோடு மிக விரிவாக எழுதியுள்ளார் குஹா.

நான் ஏற்கனவே கூறியதுபோல ராமச்சந்திர குஹாவின் எண்ணங்களும் கருத்துக்களும் அல்ல இப்புத்தகம், கடைசி சில அத்தியாயங்கள் தவிர‌. அக்காலகட்ட விமர்சகர்களாலும், இந்திய வெளிநாட்டு பத்திரிக்கையாளர்களாலும், எதிர்க்கட்சியினராலும் எழுதப்பெற்ற கட்டுரைகள்,கடிதங்கள், அரசு உத்தரவுகள் போன்றவற்றின் அடிப்படையிலேயே இப்புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. அவற்றையெல்லாம் இக்காலத்திலிருந்து நோக்குவதால் அவற்றின் விளைவுகளையும் அறிய முடியுமென்பதால் அவற்றை ஒழுங்குபடுத்தி விளைவுகளோடு பொறுத்தி தந்திருக்கிறார் குஹா.

இறுதி சில அத்தியாயங்களில் இந்தியா இன்னும் ஒற்றை தேசமாக நீடித்திருப்பதற்கான காரணங்கள், அதன் பொருளாதார முன்னேற்றத்தின் காரணம், நடைபெற்ற ஏதோ செயல்களால் மறுபக்கம் ஏற்பட்ட பலன்கள், இந்திய சினிமாவின் வளர்ச்சி, தேச ஒற்றுமையில் அவற்றின் பங்கு என சிலவற்றில் தன் கருத்தினைப் பட்டியலிட்டுள்ளார். சுதந்திர இந்திய வரலாற்றினை அறிந்து கொள்ள விரும்பும் ஒருவர் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்.

இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு பாகம் 1

ராமச்சந்திர குஹாவால் எழுதப்பட்டது. ஆங்கிலத்தில் எழுதப்பெற்ற நூல் ஆர்.பி.சாரதியால் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிறந்த மொழியாக்கம். புத்தகம் இரு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது.

சரி, ஏற்கனவே இந்திய வரலாற்றினைப்பற்றி ஏராளமான புத்தகங்கள் வெளிவந்துள்ளனவே, அவற்றில் இல்லாத அப்படி என்ன சிறப்பு இந்தப்புத்தகத்திற்கு?

இரண்டு முக்கியமான காரணங்கள்.

முதலாவது, இதுவரையான இந்திய வரலாற்று நூல்கள் இந்தியப் போராட்ட நிகழ்வுகளை அதிகமாக விவரித்து சுதந்திரத்தோடு நின்று விடும், அல்ல‌து இந்திய மன்னர்களது காலங்களில் அதீத கவனம் செலுத்துவதாய் இருக்கும். இந்த நூல் தொடங்கக் கூடிய காலமே 1940களின் பிற்பாதி. ஏறக்குறைய இந்திய சுதந்திரம் உறுதி செய்யப்பட்ட காலம். சுதந்திர இந்தியாவின் உள்நாட்டு கலவரங்கள், இந்து முஸ்லீம் போராட்டங்கள், பஞ்சகாலங்கள், சீன பாகிஸ்தான் போர்கள், எல்லையோர மக்களின் தனி நாடு கோரிக்கை, அதனை இந்திய தலைவர்கள் கையாண்ட விதம், அவர்களின் தோல்விகள், சறுக்கல்கள் என விரைகிறது இப்புத்தகம். நான் இவற்றை இங்கே ஒற்றை வரியில் கூறியிருந்தாலும் புத்தகத்தில் இவை கிட்டத்தட்ட 500 பக்கங்களில் விவரிக்கப்பட்டிருக்கிறது. அத்த‌னை அடர்த்தியான தகவல்கள்.

இரண்டாவது, புத்தகத்தில் ஒற்றை வரி கூட ஆசிரியரின் கருத்தோ, எண்ணமோ கிடையாது. உதாரணமாக பல நூல்களில் நேரு நினைத்தார், காந்தி நினைத்தார் என நூலாசிரியர்கள் குறிப்பிடுவதை நாம் காணலாம். அந்த வரலாற்று நபரின் ஏதோ ஒரு செயல்பாட்டின் அடிப்படையில், ஒரு நூலாசிரியர் அந்த முடிவுக்கு வந்து அதனை எழுதுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த நூலில் அதனைப் போல ஒற்றை வரி கூட கிடையாது. நேரு எண்ணினார் என்றால் அது ஒரு ஆதாரத்தின் அடிப்படையிலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது நேரு தான் எண்ணியதாக யாருக்காவது எழுதிய கடிதம் இருக்கும். எல்லாவற்றிற்கும் அந்தந்த வரிகளிலேயே ஆதாரம் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த நூலின் ஒட்டு மொத்த 500 பக்கங்களும் விவரிக்கும் காலகட்டம் என்பது 1945 முதல் 1964 வரை மட்டுமே. இந்திய வரலாற்றினை சுதந்திர காலத்திலிருந்து அறிந்து கொள்ள விரும்பும் ஒருவர் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்.

இந்தியக் கண்டுபிடிப்புகள்

கடந்த நூறாண்டுகளில் உலகில் கண்டுபிடிக்கப்பட்ட எத்தனை தொழில்நுட்பங்கள் இந்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது? இந்தக் கேள்விக்கான விடை பெரும்பாலும் பூஜ்யமே. ஒரு சில விதி விலக்குகள் இருக்கலாம். ஆனால் அதன் விகிதாச்சாரம் ஒட்டுமொத்தமாக பார்க்கையில் புறந்தள்ளக்கூடியதே. சரி 700 கோடி மக்கள் தொகை கொண்ட உலகில் நாம் மட்டுமே 120 கோடி. சராசரியாக 6 விழுக்காடு உலக மக்கள் இந்தியர்கள். ஆனால் கண்டுபிடிப்புகள்? ஏன் இந்த நிலை?

உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்தியர்கள் இருக்கிறார்கள். ஆனால் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியர்களிடம் இல்லை. அப்படியென்றால் நம்மிடம் திறமையானவர்கள் இருக்கிறார்கள். ஆனால் கண்டுபிடிப்புகள் இல்லை என்றுதானே பொருள். ஒட்டுமொத்த ஐரோப்பாவின் (கிட்டத்தட்ட 50 நாடுகள்) மக்கள் தொகை (ஏறத்தாழ 75 கோடி) நம்மைவிடக் குறைவு. ஆனால் அவர்களின் கண்டுபிடிப்புகளில் நூறில் ஒரு பங்கு கூட நம்மால் கண்டறியப்படவில்லை. ஏன்? எங்கே பிந்துகிறோம் நாம்?

சற்றே கூர்ந்து நோக்கினால் இதன் பின்னுள்ள வரலாற்று மனநிலையை நாம் புரிந்துகொள்ளலாம். சமீபத்திய 20 ஆண்டுகளைத் தவிர்த்துப் பார்த்தால், தினசரி உணவுக்காகவே கடினமாக உழைக்கவேண்டியிருந்த பெரும்பான்மை மக்களைக் கொண்ட சமூகம் நம்முடையது. குடும்பத்தின் அத்தியாவசியத் தேவைகளுக்காகவே ஒட்டுமொத்த குடும்பமும் உழைத்த தலைமுறை நம்முடையது. அப்போதைய சூழ்நிலையில் கல்வி என்பது தங்களுடைய வயிற்றுப்பசியை நிரந்தரமாக போக்க உதவும் ஒரு கருவியே. அது அன்றைய மனநிலையில் இருந்து பார்த்தால் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. வீட்டில் உள்ள ஒருவரின் படிப்புக்காக ஒட்டுமொத்த குடும்பமும் உழைத்த தலைமுறை நம் அப்பாக்களுடையது. இன்றும் கூட அரசாங்க உத்தியோகத்தில் இருக்கக் கூடிய 50 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் கேட்போமேயானால் அவர் ஒருவருடைய படிப்புக்கு பின் இருந்த ஒர் குடும்ப உழைப்பை அறியலாம்.

அந்த தலைமுறையின் தொடர்ச்சியே நாம். கல்வியின் உச்சம் என்பதனை நல்ல சம்பளத்தில் வேலைக்கு சேர்வது, நமது குழந்தைகளை பற்றாக்குறையில்லாத பொருளாதார நிலைக்கு இட்டுச் செல்வது என்றே கொண்டிருக்கிறோம். அதனால் தான் `நல்லா படிச்சா நல்ல வேலைக்கு போகலாம், நல்லா சம்பாதிக்கலாம்` என்ற சொல‌வடையை எங்கும் எவரும் கேட்டிருப்போம்.

ஆம் நாம் கடந்த நூறாண்டுகளின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிக்கவில்லை. இதனை முற்றிலும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். ஆனால் இதற்காக பெரிய அள‌வில் வருந்தி, நம்மிடம் திறமையில்லை என்றோ, நம்மால் நிர்வகிக்க முடியாது என்றோ எண்ண வேண்டியதில்லை. ஏனெனில் நாம் திறமையானவர்களாக இருப்பதைவிட பாதுகாப்பானவர்களாக இருக்கவே விரும்புபவர்கள். எழுத்தாளர் ஜெயமோகனுடைய‌ வணங்கான் சிறுகதையில் இப்படி ஒரு வசனம் வரும், ‘இந்தப்பிடி எனக்க பிடியில்லவே, எனக்கும் எனக்கு பின்னால வாற ஏழு தலைமுறைகளுக்கும் சேத்து உண்டான பிடியாக்கும். இப்பம் நான் இத விட்டா எட்டு தலைமுறைகளாக்கும் கீழ விழுகது, கேட்டேரா?’ ஆம் அதுதான் நம் அப்பாக்களின் மனநிலை. அவர்கள் தங்களுடைய பிள்ளைகளைப் பரிதாப நிலையில் விட்டுச்செல்லத் தயாரில்லை. தான் எந்த கடினத்தையும் அனுபவிக்கத் தயார், ஆனால் தன்னுடைய குழந்தைகள் நலமாக இருக்க வேண்டும் என எண்ணிய தலைமுறை அது.
அதற்காக நாம் வருத்தப்படத் தேவையில்லை. ஏனெனில் அடுத்த தலைமுறையில் உலகில் கண்டுபிடிக்கப்படும் புதிய கண்டுபிடிப்புகளில் 50 விழுக்காடு நம்முடையதாகவே இருக்கும். இந்த முடிவிற்கு நாம் வருவதற்கான அடிப்படைக்காரணங்கள் இவைதான்,

இந்தத் தலைமுறையில் அதீத தொடர்பின் காரணமாக உலகின் ஒரு மூலையில் கண்டறியப்படும் ஒரு கண்டுபிடிப்பு உலகின் மறுமுனையை வெகு விரைவில் அடைந்து விடுகிறது. போன தலைமுறைகளில் ஒரு கண்டுபிடிப்பு உலகம் முழுவதும் சென்றடைவதற்கு நூறாண்டுகளைக் கூட எடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இன்று அப்படியில்லை. இன்றைய உல‌கம் ஒட்டுமொத்தமாக இணைக்கப்பட்டு விட்டது. அதனால் கண்டுபிடிக்கப்படும் ஒவ்வொன்றையும் அரசாங்கமும், பெரு நிறுவனங்களும் வணிக நோக்கத்திற்க்காகவும், இன்னும் பல காரணங்களுக்காகவும் உலகம் முழுவதும் கொண்டு சேர்த்து விடுகின்றனர். இதன் மறைமுகத் தாக்கங்களை ஒட்டுமொத்தமாக எவரும் கணித்துவிட இயலாது. ஆனால் அதிலுள்ள ஓர் சாதகமான‌ அம்சம் என்னவென்றால் அந்தத் கண்டுபிடிப்பையே அறியாத ஒரு சமூகம் அதனை அறிந்து கொள்கிறது. உதாரணமாக நாம் ஒரு துறையில் புதிய கண்டிபிடிப்பை நிகழ்த்த வேண்டுமெனில் அத்துறையில் இன்றைய நிலையின் ஆகச்சிறந்த படைப்பை நாம் அறிந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் நாம் அதனின் மேலான ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்த முடியும். உதாரண‌மாக இன்றைய ஆன்ட்ராய்டு இயங்குதளத்தை அறிந்தால் மட்டுமே நாம் அதனை விட மேலான இயங்குதளத்தை கண்டுபிடிக்க முடியும். இன்னும் நாம் சிம்பியான் இயங்குதளத்தையே அறிந்திருந்தோமேயானால் நாம் ஆன்ட்ராய்டை விட உயர்வான ஒன்றை எவ்வாறு கண்டுபிடிக்க இயலும்? இந்த சாத்தியத்தையே இன்றைய இணைக்கப்பட்ட உலகம் நமக்கு வழங்கியிருக்கிறது. அதனால் நாம் இன்றைய கண்டுபிடிப்புகளை அறிந்து அதிலிருந்து மேலான ஒன்றைக் கண்டறிவதற்கான வாய்ப்புகள் மிக அதிக‌ம்.

நாம் ஒட்டுமொத்தமாகப் பட்டினி தேசம் அல்ல. முற்றிலுமாக பட்டினியை ஒழிக்காவிடினும் உணவுக்காகவே ஒட்டு மொத்த குடும்பமும் வாழ்நாள் முழுவதும் உழைக்க வேண்டிய நிலையிலிருந்து மீண்டு விட்டோம். அதனால் தான் நாம் இன்று நம்மால் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற விவாதத்திற்கு வந்திருக்கிறோம். நம்முடைய அடுத்த தலைமுறை இதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். ஒரு கண்டுபிடிப்பு எத்தனை காலம் தாழ்த்தி வருகிறதோ அத்தனை வீரியம் கொண்டிருக்கும் என்பது அறிவியல் விதி. அதனால் நாம் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு பெரும்பாலும் வந்து விட்டோம்.
நாம் உலகில் ஒரே இடத்தில் மட்டும் கூட்டமாக வாழ்பவர்கள் அல்ல. உலகம் முழுவதும் பொருள்தேடிப் பறந்த சமூகம்.இந்தியர்களை எந்த நிலையில் எவராலும் ஒதுக்கிவிட இயலாது என்பதனை உலக நாடுகளுக்கு பயணிக்கும் ஒருவர் மிகச்சாதரணமாக உணரலாம். இந்திய விதை உலகம் முழுவதும் விதைக்கப்பட்டு விட்டது. அந்தந்த இடத்தின் அறிவுகளையும், வாய்ப்புகளையும் பெற்று அந்த விதைகள் அங்கங்கே முளைத்துக்கொண்டிருக்கின்றன. சரியாக இன்னும் சில காலத்தில் அச்செடிகள் பூத்துக் காய்க்கத் தொடங்கும். அந்நாளின் உலகை மாற்றும் கண்டுபிடிப்புகள் நம்மிடமிருந்தே வரும்.

இந்திய சினிமா 100

இந்திய சினிமா தனது நூறாவது ஆண்டைக் கொண்டாடிவிட்டது. விழாவும் எடுத்தாயிற்று. இந்த நூறாண்டுகளில் இந்திய சினிமா இந்திய சமூகத்திற்காக செய்தவை என்று எண்ணினால் ஏமாற்றமே. சினிமா தொடர்பான துறையில் இருப்பவர்கள் வேண்டுமானால் சினிமாவைப் பற்றிப் புள்ளிவிபரங்களை அடுக்கி அதனை நியாயப்படுத்த முயன்றாலும் அவர்களுக்கே தெரியும் உண்மை எதுவென்று. அவர்களுக்கு வேறு வழியில்லை. சினிமாவில் உள்ளவர்கள் தங்களைத் தாங்களே உயரத்தூக்கிக் கொள்வார்கள். அதற்கென்றே உள்ளது இன்றைய ஊடகத்துறை.

இயல் இசை நாடகத்தின் பரிணாம வளர்ச்சியாக வந்த சினிமா ஆரம்பகாலங்களில் நாடகத்தினைப் போலவே செயல்பட்டு, ஒரு சராசரிக் குடிமகனை உன்னத நிலை நோக்கி நகர்த்தும் பணியை செய்தது. ஒரு நிலையில் கேளிக்கைக்காக சேர்க்கப்பட்ட ஒரு துணுக்கு மிகப்பெரிய வணிக வெற்றியடைய அன்று முதல் இன்று வரை அந்த துணுக்குகளாலேயே படம் நிறைக்கப்படுகிறது. விதி விலக்குகள் உண்டு என்றாலும் சினிமா சீரழித்த அளவுடன் ஒப்பிடும் பொழுது அதனை புறக்கணித்துவிடலாம்.

இன்றைய சினிமாவிற்கு லட்சியமெல்லாம் எதுவும் கிடையாது. அதிகம் பேருக்கு ஒரு நடிகையின் தொடையைப் பார்க்க பிடிக்கிறதென்றால் எந்த இயக்குநர் முதலில் அந்த நடிகையின் தொடையைக் காட்டுகின்ற காட்சியை வைக்கிறானோ அவனுக்கு வசூல். அவ்வளவுதான். இங்கே எந்த தர்மமும் தேவையில்லை.

சாதனையாளர்களைக் காட்டிய சினிமா பின்னர் சாமானியனைக் காட்டுகின்றேன் என்ற பெயரில் ஒரு சாமானியன் செய்யும் அனைத்து செயல்களுக்கும் நியாயம் கற்பிக்கத் தொடங்கியது. அதன் விளைவாக அனைவரும் தன் செயல்களுக்கு நியாயம் கற்பிக்கத் தொடங்கினர். சினிமா மோகம் உண்டாயிற்று. கதாநாயகர்களைக் கொண்டாடத் தொடங்கினார்கள். ஆரம்பகாலத்தில் வில்லனின் கெட்டெண்ணத்தை காட்டுவதற்காக வைக்கப்பட்ட குத்துப்பாடல்கள், கவர்ச்சி காட்சிகள் நாளடைவில் கட்டாயமாக்கப்பட்டது. படத்தின் மையக் கதாபாத்திரமே குத்துபாடல்களிலும், நீச்சல் காட்சிகளும் கதாநாயகியோடு கட்டிப் புரண்டார்கள்.

அப்பா அன்று சிலுக்கைப் பார்த்தார். பையன் இன்று மும்தாஜைப் பார்க்கிறான். அவ்வளவுதான் வித்தியாசம்.

அது மட்டுமில்லாமல் நடிகைகளை வட இந்தியா, மற்ற நாடுகள் எனக்  கொண்டுவந்து தமிழ் நாட்டில் இருக்கும் கருப்பான பெண்கள் எல்லோரும் அழகற்றவர்கள் என்ற எண்ணத்தினை இயல்பாகவே அனைவர் மனதிலும் பதியவைத்து விட்டார்கள். 75 விழுக்காட்டிற்குமேல் கருப்பு நிறம் உள்ளவர்கள் வாழுமிடத்தில் அனைத்து இளைஞர்களும் சிவப்பு நிற பெண்ணை விரும்புகின்ற அவலம் இங்கு மட்டுமே.

சினிமா கலை என்கிற‌ காலம் மலையேறிவிட்டது. இன்றைய சினிமா என்பது முற்றிலும் வணிகம் மட்டுமே. இதில் பணம் வருமென்றால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். எவருக்கும் எந்த அக்கறையும் கிடையாது. வேண்டுமானால் இன்றே சென்சார் போர்டை நீக்கிவிட்டு அனைவரும் தத்தம் மனசாட்சிப்படி திரைப்படம் எடுத்து வெளியிடலாம் என்று அறிவிக்கட்டும் பாருங்கள். பத்தே வருடங்களில் அனைத்து தமிழ் சினிமாவுமே பார்ன் சினிமாவாய் மாறியிருக்கும்.

தூய்மை இந்தியா

சமீபத்தில் நமது பிரதமர் அவர்களால் தூய்மை இந்தியா துவங்கப்பட்டதை விமர்சனம் செய்து பல்வேறு விதமான கட்டுரைகளும் பேச்சுக்களும் இணையத்தில் உலாவுகின்றன. ஒரு எளிய இணைய வாசகன் வாசிக்கும்பொழுது அவன் நம்பக்கூடிய வண்ணமே அப்பதிவுகள் இடப்படுகின்றன. எதற்காக அவர்கள் அதனை செய்கிறார்கள்?

ஒன்று அவர்கள் மோடியை வெறுப்பவராகவோ, அல்லது எதிர்க் கட்சியை சேர்ந்தவராகவோ இருப்பார். ஆனால் அவர்களின் எண்ணங்களை இணையத்தில் முடிந்த அளவிற்கு பரப்பி அதனைப் பெருக்குகிறார்கள். உதாரணமாக ஒரு அமைச்சர் குப்பையை ஓரிடத்தில் பரப்பி வைத்துவிட்டு பின்னர் அதனை சுத்தம் செய்வது போன்ற ஒரு காணொளி. கண்டிப்பாக இதனைப் பார்த்திராத ஒரு இணைய வாசகன் இருக்க முடியாது. அந்த அளவிற்கு இந்த காணொளி பரப்பப்பட்டு விட்டது. இதில் பிற மதங்களைச் சேர்ந்த சிலர் தங்கள் சுய லாபத்திற்காக இதனை மீண்டும் மீணிடும் பல்வேறு வழிகளில் விளம்பரப்படுத்துகிறார்கள்.

மற்றொரு சம்பவம் சீமான் போன்றவர்கள் மேடைப்பேச்சுகளில் இது ஒரு வெற்று விளம்பரம், முதலில் குப்பைகளைப் போடாமல் இருக்கக் கற்றுக்கொடுங்கள், கழிப்பறை கட்டிக்கொடுங்கள் பின்னர் சுத்தம் செய்யுங்கள் என்பது போன்ற ஆக்ரோஷமான மொழிகளில் பேசி இத்திட்டத்தின் நோக்கத்தினை முடிந்த அளவிற்கு சிதைத்து வருகின்றனர். அதிலும் அவர் ஏன் ரோட்டில் குப்பை பொறுக்குபவனையோ, இல்லை சாக்கடை அள்ளுபவனையோ அழைக்காமல் பிரபலங்களை மட்டும் அழைக்கிறார் மோடி என்றெல்லாம் ஆக்ரோஷமாகக் கதறுகிறார். இக்காட்சியெல்லாம் இன்று இணையத்தில் அதிகம் உலாவுபவை. எதற்காக பிரபலங்களை மோடி அழைத்தார் என்ற அடிப்படைப் புரிதல் கூட இல்லாதவரா இந்த‌ சீமான்?

நண்பர்களே பிரபலங்களை அழைப்பது என்பது அவர்களை தெருவில் இறங்கி சாக்கடையை அள்ளுவதற்காக‌ அல்ல. அவர்கள் ஒரு குறியீட்டுப் பொருள். அவர்களால் சமூகத்தில் ஏற்பட இருக்கும் விழிப்புணர்வுதான் நோக்கம். சீமான் கூறுவதுபோல யாரோ ஒரு தொழிலாளியை மோடி அறிவித்திருந்தால் இச்செய்தி ஒரு வழக்கமான அரசின் அறிவிப்பாகவே இருந்துவிட்டுப் போயிருக்கும் தானே? பிரபலங்களின் வழியாக இச்செயல்பாடு மீண்டும் மீண்டும் சமூகத்தின் சிந்தனையில்,செய்தியில் இருப்பதற்காக அவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இது போன்ற திட்டங்களை விமர்சனங்கள் செய்பவர்களைப் பார்த்தால் ஒன்று தெரியும். இவர்களால் எதுவும் செய்ய முடியாது. செய்யவும் மாட்டார்கள். ஆனால் வேறு யாராவது அதனை செய்தால் அதில் குறை சொல்வார்கள். சரி வாருங்கள் விவாதத்திற்கு என அழைத்தால் நாங்கள் இதனை செய்யக்கூடாது என்று சொல்லவில்லை, அப்படி செய்யலாம், இப்படி செய்யலாம் என்று ஏதாவது காரணத்தை அடுக்குவார்கள்.

நன்கு சிந்தியுங்கள் நண்பர்களே ஒரு குளிர்பானம் அருந்த வேண்டும் என்ற மனநிலை வந்த உடனேயே ஏதோ ஒரு பானத்தின் பெயர் நம் நினைவுக்கு வருகிறது. அது எப்படி சாத்தியமானது. அந்நிறுவனம் பல்வேறு வழிகளில் அதனை நம‌க்கு நினைவூட்டி நினைவூட்டி நம் மனதில் அதனை நிறுத்தியிருக்கிறது. இத்திட்டமும் அப்படியே. மீண்டும் மீண்டும் குப்பைகளைப் பற்றி விவாதிப்பதன் மூலம் நம் மனநிலையிலேயே இயல்பான குப்பை போடாத எண்ணத்தை கொண்டுவருவதே நோக்கம்.

இதிலும் குறைகள் இருக்கலாம். ஒரு சிலர் புகைப்படம் மட்டும் எடுத்து ஏமாற்றலாம். நாம் ஏற்றுக்கொள்வோம். ஆனால் அவையெல்லாம் கடந்தும் கூட இது நமக்கான திட்டமே. பிழையோடே இத்திட்டம் செல்லட்டுமே. பின்னாளில் அது அதற்கான சரியான வழியைக் கண்டுகொள்ளும் தானே. இந்திய சுதந்திர வரலாற்றில் இது போன்ற செயலை இதுவரை வந்த எந்த அரசும் செய்யவில்லை. இவர்கள் செய்கிறார்கள். நம்மால் பங்குகொள்ள முடியவில்லை என்றாலும், பழிக்காமல் இருப்போம். இந்தியக் குழ‌ந்தை முதலில் தவழட்டும், பின்னர் அது ஓடுவதைப் பற்றி யோசிப்போம். எடுத்த உடனேயே ஓடவேண்டும் என எதிர்பார்ப்பது முட்டாள் தனம் இல்லையா?