நிகழ்வுகள்

தண்ணீர்

சமீபத்தில் என்னை மிகவும் பாதித்த புகைப்படம் இது. நெல் வயலுக்கு டிராக்டரில் கொண்டுவந்து நீர் பாய்ச்சுகிறார்கள் இல்லை ஊட்டுகிறார்கள். தமிழகத்தின் தேனி மாவட்டத்தில்தான் இந்த நிலை. கேரள எல்லையை ஒட்டி மேற்கு மலைத்தொடருக்கு அருகே இருக்கும் மாவட்டத்திலேயே இந்நிலையென்றால் மற்ற மாவட்டங்களின் நிலைகளை சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கிக்குடிப்பதையே மிகப்பெரிய ஆச்சரியமாகப் பார்த்தவன் நான். நெல்வயலுக்கு நீர் ஊட்டுவதைப் பார்க்கும்பொழுது இனம்புரியாத வலி இந்த நெஞ்சுக்குள்.

எப்பொழுதாவது எங்கள் கிராமத்தில் இருந்து சென்னைக்கோ அல்லது பிற ஊர்களுக்கோ செல்லும் பொழுது வழியில் பேருந்து எங்காவது நிற்கும்பொழுது அண்டாவில் குடிநீர் வைத்திருப்பார்கள், ஒரு சங்கிலி டம்ளரோடு. அதைத்தான் பெரும்பாலும் எல்லோரும் குடிப்பார்கள். யாராவது ஒரு சிலர் குடிநீர் பாட்டிலை வாங்குவார்கள். அவர்களை ஆச்சரியமாகப் பார்ப்பேன். அவர்கள் தங்களை மேன்மை பொருந்திய மக்களாக நினைத்திருப்பார்களோ என்னவோ? குடிக்கும் நீரை காசு குடுத்து வாங்குவார்களா என்ன என்று எனக்குத் தோன்றும்.

ஆனால் இன்று நிலைமை அப்படியா என்ன? எந்த இடத்திலும் அண்டாவும் இல்லை, தண்ணீரும் இல்லை. ஆனால் குடிநீர் பாட்டில்கள் இருக்கின்றன. யாரைக் குற்றம் கூற முடியும்? எல்லோர் பக்கமும் அவரவர் நியாயங்கள், காரணங்கள். வாழ்க குடிநீர் பாட்டில் கம்பெனிகள்.

ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் வெளியிட்டுள்ள குடிநீர் பற்றாக்குறை தொடர்பான அறிக்கையின்படி உலகின் பதினோரு நகரங்கள் விரைவில் நீரற்ற நிலைக்கு செல்லப் போகிறதாம். அதில் ஒன்று பெங்களூர் நகரமாம். இதனை ஐக்கிய நாடுகள் ஏன் சொல்ல வேண்டும்? நானே சொல்கிறேன், இதை வாசிக்கும் நீங்களும் நானும் மரணிப்பதற்குள் நீர் இல்லா நிலையைப் பார்த்துவிட்டுதான் சாகப்போகிறோம். பெங்களூருதானே நம்ம ஊருக்கென்ன என்று நினைக்காதீர்கள். பெங்களூரு திங்கட்கிழமை என்றால் சென்னை வெள்ளிக்கிழமை, உங்கள் ஊரும் என் ஊரும் அடுத்த வெள்ளிக்கிழமை, அவ்வளவுதான்.

நாளுக்கு நாள் நம்முடைய ஏரிகளும் சுருங்கிக்கொண்டே வருகின்றன. குடியிருப்புகளை ஆக்கிரமித்திருந்த ஏரிகளை மக்கள் மீட்டுக்கொண்டு வருகிறார்கள் போலும்.

வருடா வருடம் அரசு ஏரிகளின் தூர்வார்லுக்கென ஒதுக்கும் தொகையை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆனால் ஏரிகளின் கொள்ளளவும், பரப்பளவும் மட்டும் குறைந்து கொண்டே போகின்றது. இந்த கணக்கு மட்டும் எனக்குப் புரிபடுவதே இல்லை.

யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்?

சுதந்திர தின‌ வாழ்த்துக்கள்

www.hdnicewallpapers.com

70 ஆவது சுதந்திரதினத்தைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின‌ வாழ்த்துக்கள்.

முதலில் நம் அனைவரிடமும் ஓர் கேள்வி. நாம் உண்மையாகவே சுதந்திரதினத்தைக் கொண்டாடுகிறோமா, இல்லை அதனை ஓர் விடுமுறை நாளாக மட்டும் எடுத்துக்கொள்கிறோமா? உண்மையான பதில் நம்மில் பெரும்பாலானோர்க்கு உண்மையில் அது விடுமுறை தினம் மட்டுமே. நாம் மற்ற பண்டிகைகளான தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போலவா சுதந்திர தினத்தினைக் கொண்டாடுகிறோம்? இல்லவே இல்லை.

நண்பர்களே! நாம் பெற்ற அந்த சுதந்திரத்தால்தான் இன்று நாம் நாம் விரும்பும் பண்டிகைகளைக் கொண்டாடமுடிகிறது. நண்பர்களே உங்களுக்கு ஒன்று தெரியுமா? வட கொரியாவில் நீங்கள் பைபிளை வைத்திருந்தால் உங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். ஆப்ரிக்க நாடான அங்கோலாவில் நாம் இஸ்லாம் மதத்தை தழுவமுடியாது. அங்கே இஸ்லாம் தடை செய்யப்பட்ட ஓர் மதம். சிங்கப்பூரில் அதன் பிரதமரை நம்மால் கேளிச்சித்திரமாக வரைய முடியாது. அங்கே அது சட்டப்படி தடைசெய்யப்பட்ட‌ செயல். ஆனால் நம் இந்தியாவில் நம் ஒவ்வொருவருக்கும் இந்தியாவின் முதல் குடிமகன் முதல் கடைசிநபர் வரையிலும் விமர்சிப்பதற்கான உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. இது நாம் பெற்ற சுதந்திரத்தாலேயே சாத்தியமான ஒன்று.

நண்பர்களே நாம் சுதந்திரதினத்தைக் கொண்டாடாமல் இருப்பதே அந்த சுதந்திரம் நமக்களித்துள்ள சுதந்திரத்தால் தான் இல்லையா? இத்தேசத்தின் ஒவ்வோர் நபருக்கும் சுதந்திரதினமே தலையாய கொண்டாட்டமாக‌ இருக்கவேண்டும் என்பதே என் எண்ணம். என் எண்ணம் கண்டிப்பாக சாத்தியமான ஒன்றே என நான் எண்ணுகிறேன், நாம் அனைவரும் மனது வைத்தால்.

தேர்தல்

நான் இந்த தேர்தலில் வாக்களிக்கும்பொழுது இவற்றை நினைவில் கொள்வேன்.

1. பெரிய கட்சிகள் என்ற காரணத்திற்காக மட்டும் ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்க மாட்டேன். ஏனெனில் அவர் தொகுதியின் பிரதிநிதியாக சட்டமன்றத்தில் செயல்படாமல் கட்சியின் பிரதிநிதியாக தொகுதியில் செயல்படும் வாய்ப்புகளே அதிகம்.

2. யார் வரவேண்டும் என நான் நினைக்கும் வேட்பாளருக்கு வாக்களிப்பேனேயன்றி யார் வரக்கூடாது என நினைக்கும் வேட்பாளரை வெல்லும் வாய்ப்புள்ளவருக்கு எக்காரணம் கொண்டு வாக்களிக்கமாட்டேன். ஏனெனில் நான் எந்த காரணத்திற்காக ஒரு வேட்பாளார் வரக்கூடாது என நினைக்கிறேனோ அதே காரணத்தினை அவரை வெல்லும் வாய்ப்பு உள்ளவர் அடுத்த தேர்தலில் அடையலாம். அதிமுக வேட்பாளரைத் தோற்கடிக்க நான் திமுக வேட்பாளருக்கு வாக்களித்தால் அடுத்த தேர்தலில் திமுக வேட்பாளரைத் தோற்கடிக்க அதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டியிருக்கும். ஆக ஒரு நாளும் நான் விரும்பும் ஓர் வேட்பாளர் வெற்றி பெற‌மாட்டார். அதற்குப் பதில் நான் வெற்றி பெற விரும்பும் வேட்பாளருக்கு வாக்களித்தால் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை நான் ஒரு ஓட்டு அதிகப்படுத்துகிறேன். மாற்றத்தை நானே தொடங்குவேன்.

3. தொகுதிக்கு நன்கு பரிச்சயமான அல்ல‌து தொகுதி மக்களின் பிரச்சினைகளுக்காக தேர்தல் காலம் அல்லாமல் மற்ற காலங்களிலும் போராடும் ஒருவர் தேர்தலில் நிற்கும் பொழுது அவருக்கு கண்டிப்பாக முன்னுரிமை அளிப்பேன்.

4. இன்றைய நிலையில் எந்த பத்திரிக்கையின் கருத்துக்கணிப்பையும் நம்பி அவர்கள் கூறும் வெற்றி வாய்ப்புள்ளவருக்கு வாக்களிக்க முடிவு செய்யமாட்டேன். அவர்களது கணிப்பினை ஒரு தரப்பாக மட்டுமே எடுத்துக்கொள்வேன். கட்சி சார்ந்த பத்திரிக்கை செய்திகளின் கணிப்புகளை முற்றிலுமாக புறந்தள்ளுவேன்.

5. நான் வாக்களிக்கும் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்பதனால் அவருக்கு வாக்களிக்காமல் இருக்க மாட்டேன். நான், நான் வெற்றி பெற விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிப்பேனேயன்றி வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் வேட்பாளருக்கு வாக்களிக்க மாட்டேன். நான் வெற்றி பெற விரும்பும் வேட்பாளருக்கு நானே வாக்களிக்கவில்லையென்றால் வேறு யார் வாக்களிப்பார்?

6. என் தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் பற்றி அறிந்து கொள்ள முயல்வேன். நான் விரும்பும் ஒரு நல்ல வேட்பாளர் பொருளாதார காரணங்களால் பிரதான கட்சிகள் அளவிற்கு விளம்பரம் செய்ய முடியாதவராக இருக்கலாம். ஆனால் அதனையே நான் தகுதிக்குறைவாக எடுத்துக் கொள்ளமாட்டேன். மற்றவர்கள் 10 முறை பிரச்சாரத்திற்கு வந்தால் அந்த சுயமான வேட்பாளர் ஒருமுறை மட்டும் வரக்கூடியவராக இருப்பார். நான் அவரையும் அவரது திட்டங்களையும் முக்கியமாகக் கவனிப்பேன்.

7. நான் ஏற்றுக்கொள்ளக் கூடிய வேட்பாளர் இல்லாத பட்சத்தில் நான் NOTA விற்கே வாக்களிப்பேன். எக்காரணம் கொண்டும் வேறு ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்க மாட்டேன்.

ரஷ்யப் புரட்சி மருதன்

ரஷ்யப்புரட்சி முதல் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் நடைபெற்றது. ஜார் மன்னரின் தவறான அணுகுமுறைகளால் ரஷ்யாவின் மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி லெனின் அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. லெனின் ஆதரவாளர்கள் போல்ஷ்விக்குகள் எனப்பட்டனர். அவர்களின் எதிர்த்தரப்பிலிருந்த மற்றோர் புரட்சியாளர்கள் மென்ஷ்விக்குகள் எனப்பட்டனர். ஏற்கனவே ரஷ்யா போரில் பெருமளவு சேதமடைந்திருந்த சமயத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தால் அரசால் முழு வீச்சோடு புரட்சியினை அடக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் மென்ஷ்விக்குகள் ஆட்சியை ஜார் மன்னரிடமிருந்து பெற்றுக்கொண்டனர். பின்னர் அவர்களிடமிருந்து லெனின் புரட்சி மூலம் ஆட்சியினைக் கைப்பற்றினார். ரஷ்யப்புரட்சியினைப் பற்றி சுருக்கமாக தெரிந்து கொள்ள உதவும் புத்தகம்.

முதல் உலகப்போர் மருதன்

முதல் உலக‌ப்போர் (1914‍-1918). 1 கோடியே 70 லட்சம் பேர் மரணம்.2 கோடி பேர் காயம். இந்த உலகையே முதல் உலகப்போருக்கு முன் பின் என பிரிக்கும் அளவுக்கு உலக நாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்திய ஓர் போர். பீரங்கி, நச்சு வாயுக்கள் போன்ற உத்திகளைப் பயன்படுத்தி கொத்துக் கொத்தாக மனித உயிர்கள் பறிக்கப்பட்ட முதல் பெரும் போர்.

ஓரிரு நாட்களில் அல்ல‌து மாதங்களில் முடிந்துவிடும் என்ற எண்ணத்தில்தான் உலக‌ப்போர் தொடங்கியது. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. 4 ஆண்டுகள் நீடித்தது. உலகப்போர் 1914 ல் தொடங்கினாலும் அதற்கு முந்தைய 50 ஆண்டுகளாகவே போருக்கான காரணங்கள் உருவாகி வந்து கொண்டிருந்தன‌. உதாரணமாக 1700 களில் இங்கிலாந்து முதலாளித்துவ பொருளாதாரத்தை பின்பற்றத் தொடங்கி அதில் கணிசமான வெற்றியையும் பெற்றிருந்தது. அதன் தொடர்ச்சியாக மற்ற ஐரோப்பிய நாடுகளும் 1800 களில் அதனைப் பின்பற்றத் தொடங்கின. ஜெர்மனி இயந்திரமயமாதலை இங்கிலாந்துக்கு பின்னர் பல காலங்கள் கழித்துதான் தொடங்கியது. இருந்தாலும் அது மிக விரைவாக முன்னேறியது. அதனை மற்ற நாடுகள் விரும்பவில்லை. குறிப்பாக இங்கிலாந்து. ஒவ்வொரு நாடும் மற்றோர் நாட்டின் வளர்ச்சியில் பீதியடைந்தது.மற்றோர் நாடு தங்களைவிட வள‌ரும் பொழுது தங்களுடைய நாட்டை அவர்கள் கட்டுப்படுத்தலாம் என்ற எண்ணம் அருகிலுள்ள நாடுகளுக்கு உருவானது. குறிப்பாக இங்கிலாந்திற்கு. அதுவரை உலகின் ஆதிக்க சக்தியாக இருந்த இங்கிலாந்து அதனை விரும்பவில்லை.

இதனால் பதற்றம் அதிகமாகி அதிகமாகி ஒவ்வோர் நாடும் தன்னை மற்றோர் நாடு தாக்குமோ என்ற எண்ணத்திலேயே போருக்கு தயார் செய்து கொண்டிருந்தன. இதற்கிடையில் ஒவ்வோர் நாடும் வேறு சில நாடுகளோடு சில ராணுவ ஒப்பந்தங்கள் செய்து கொண்டது நிலைமையை மேலும் சிக்கலாக்கியது. ஜெர்மனி ஆஸ்திரியா‍-ஹங்கேரியோடு சில ஒப்பந்தங்களை மேற்கொண்டது. அப்போது ஆஸ்திரியா-ஹங்கேரி ஒரே தேசம். பிரிந்திருக்கவில்லை. மறுபக்கம் இங்கிலாந்து,பிரான்ஸ்,ரஷ்யா ஒப்பந்தம் செய்து கொண்டன. 1914 ல் ஆஸ்திரிய இளவரசர் செர்பிய இளைஞன் ஒருவனால் கொல்லப்பட்டார். அந்தக் கொலை நடந்தது செர்பியாவின் சுயாட்சிக்காக. ஏனெனில் செர்பியாவை அப்போது ஆஸ்திரியா ஆண்டுவந்தது. இக்கொலைக்குப்பின்னர் ஆஸ்திரியா‍‍-ஹங்கேரி செர்பியா மீது போர் தொடுத்தது. செர்பியா ரஷ்யா உதவியை நாட, ஜெர்மனி ஆஸ்திரியாவுக்காக வந்தது. போர் தொடங்கி விட்டது.

முதல் உலகப் போரில் இங்கிலாந்து, பிரான்ஸ்,ரஷ்யா போன்ற நேச நாடுகள் வெற்றி பெற்றதாகக் கூறினாலும் அப்போர் பங்கேற்ற அனைத்து நாடுகளுக்கும் பயங்கரமான‌ இழப்பையே கொடுத்தது. அதற்குப் பிந்தைய 10,20 ஆண்டுகளுக்கான நாட்டின் வளம் அந்த போரிலேயே செலவழிக்கப்பட்டு விட்டது. 150 ஆண்டுகால இங்கிலாந்தின் வல்லமை முடிவுக்கு வந்தது. பொருளாதார இழப்புகள் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளை நிலை குலைய வைத்தது. உணவுப்பற்றாக்குறை பெருமளவில் ஏற்பட்டது.

முதல் உலக‌ப்போரில் ஆதாயம் அடைந்த ஒரே நாடு அமெரிக்கா. இருபக்க நாடுகளுக்குமே அமெரிக்கா ஆயுத வியாபாரம் செய்தது. போரின் ஆரம்ப காலத்தில் எந்த அணியிலும் சேராமல் இருந்தது அமெரிக்கா. அதனால் இருபக்க நாடுகளின் வணிகத்திலும் மிகப்பெரிய இலாபம் அடைந்தது. போரின் கடைசிக் கட்டத்திலேயே கலந்து கொண்டது. சேதமும் பெரிய அளவில் இல்லை. அதனால் போருக்குப் பிந்தைய 10,20 ஆண்டுகளின் ஐரோப்பா முழுவதும் சுணக்கம் கண்டபோது அமெரிக்கா நான்கு கால் பாய்ச்சலில் முன்னேறியது. உலக வல்லரசாக மாறியது.

முதல் உலகப்போரின் ஆரம்பம் முதல் இறுதி வரை நடைபெற்ற நிகழ்வுகளின் மேலோட்டமான தொகுப்பு. மருதனால் எழுதப்பெற்றது. உலகப்போரைப் பற்றி ஏராளமான அடர்த்தியான புத்தகங்கள் ஒவ்வொரு நாட்டின் பார்வையிலும் விரிவாக எழுதப்பட்டிருக்கின்றன. இருப்பினும் ஓர் ஆரம்ப நிலைப் புரிதல் மற்றும் ஒட்டுமொத்த உலகப்போரின் வடிவத்தைக் கண்டுகொள்ள தொடக்கமாக இந்நூலை வாசிக்கலாம்.

மஞ்சு விரட்டு

நான் சென்ற வருடம் (2015) பொங்கல் முடிந்ததும் எழுதிய ஓர் கட்டுரை. இன்றும் அதே நிலைதான்.

மஞ்சு விரட்டு இப்போதைக்கு இல்லை. முடிவாகிவிட்டது. பொங்கல் சமயத்தில் வழக்கம் போல அனைத்துக் கட்சிகளும், சில சாதி அமைப்புகளும் குரலெழுப்பிவிட்டு தங்களின் அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட்டார்கள்.ஒருவேளை இவ்வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வரும்பொழுதோ அல்லது வேறு ஏதும் அறிக்கை விடுவதற்கு இல்லையெனும்போதோ களத்தில் இவர்களின் குரலைக் கேட்கலாம். பொங்கல் சமயத்திலேயே இப்பதிவை எழுதியிருந்தால் வழக்கம் போல வெற்றுக்கூச்சலாகவே போயிருக்கும் என்பதால் இப்பொழுது இடுகிறேன்.

ஒன்று தமிழக அரசியல் கட்சிகள் இந்த விஷயத்தில் ஒன்றும் செய்ய மாட்டார்கள். அதீத மக்கள் வெறுப்பு ஏற்படும் பொழுதுமட்டும் தீவிரமாக இருப்பது போலக் காட்டிக்கொள்வார்கள். திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமக, விடுதலை சிறுத்தைகள், தேமுதிக, கம்யூனிஸ்ட் என யாரும் விதிவிலக்கல்ல. பிரச்சினை பெரிதாகும்போது மட்டும் உள்நுழைந்து முடிந்தவரை அரசியல் மட்டும் செய்துவிட்டுப் போவார்கள். இவர்களின் அரசியல் காரணங்களுக்காக ஏதாவது நல்லது நடந்தால் உண்டு. இல்லையேல் மற்றவர்களைக் குறை கூறிவிட்டு அடுத்த விஷயத்துக்கு போய்விடுவார்கள். அதனால் அரசியல் சாராத ஏதாவது ஒரு பொதுநல அமைப்போ, தன்னார்வ இயக்கமோ,இதில் தீவிரமாக ஈடுபட்டு பொதுமக்களிடம் எடுத்துச் சென்றால் மட்டுமே அரசும், அரசியல் கட்சிகளும் இதில் ஆர்வம் காட்டும். இதுவே இப்போதைக்கு சாத்தியமெனத்தோன்றுகிறது.

அதிலும் உள்ள சிக்கல் என்னவென்றால் அப்படிப்பட்ட ஏதோ ஒர் அமைப்பின் முயற்சியாலேயே இந்த மஞ்சுவிரட்டு இன்று நிறுத்தப்படும் நிலைக்கு வந்துள்ளது. அவர்கள் மீதும் முற்றிலுமாக குற்றம் சொல்ல முடியாது. அவர்கள் அவ்வாறு கற்பிக்கப்பட்டிருக்கிறார்கள், அல்லது புரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்களில் 10 விழுக்காடு நபர்கள் கிராமங்களில் இருந்து வந்தவர்களாக இருந்தால் அதிசயம். அவர்களுக்கு தெரிந்த தகவல்களின் அடிப்படையிலேயே இந்நிகழ்வைப் புரிந்து கொண்டுள்ளார்கள். மஞ்சு விரட்டை நேரலையில் பார்த்து கண்ணீர் வடிப்பவர்கள். அந்த நேரலை பணத்திற்காக தொலைக்காட்சிகள் ஒளிபரப்பக்கூடியவை. அவர்களைப் பொறுத்த வரையில் காளை துன்புறுத்தப்படுகிறது. அதனைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்பதே. வழக்கு தொடுக்கிறார்கள். தடை வாங்குகிறார்கள். ஒளிபரப்பிய தொலைக்காட்சியோ அடுத்த ஒளிபரப்புக்கு சென்று விடுகிறது. விவசாயிக்கே அடி.

தனக்கு சாப்பிட எதுவும் இல்லையென்றாலும் கூட மாட்டுக்காக புண்ணாக்கும் பருத்திக்கொட்டையும் வாங்கிவரும் பலரை கண்கூடாகக் கண்டிருக்கிறேன். தான் வளர்க்கும் மாட்டிற்கு பெயர் வைத்திருப்பார்கள், வீட்டில் ஒருவ‌னைப் போலவே பாவிப்பார்கள். ‘செவலையனக் கொண்டுபோய் தண்ணிகாட்டிகிட்டு வாடா’ என்பது போன்றவற்றை தினம் நூறு தடவைக் கேட்டிருக்கிறேன். அவர்களுக்கு மாடும், மனிதனும் வேறல்ல. மாடு போல் வேலை செய்வார்கள், மாட்டை பிள்ளையாகக் கருதுவார்கள்.

மாட்டை குளிப்பாட்டி சந்தனம், குங்குமம் இட்டு மாலை அணிவித்து பொங்கல் கொடுத்து கோவிலின் மஞ்சுவிரட்டு திடலுக்கு அழைத்துவருவார்கள். அவர்களுக்கு அதுதான் வாழ்க்கை.அவர்களா மாட்டினை துன்புறுத்துவார்கள்?

மஞ்சு விரட்டு என்றதும் அலங்காநல்லூர், பாலமேடு என்று பிரமாண்டமாகவே நினைக்கிறார்கள் ஆர்வலர்கள். வேண்டியதில்லை. மிகச் சிறிய அளவில் அந்தந்த கிராமத்து மாடுகளைக் கொண்டு நடத்தப்படும் மஞ்சு விரட்டுகளே அதிகம். அவர்களால் தான் மஞ்சு விரட்டு உயிர்ப்போடு இருந்தது. அவர்களுக்கு தங்கள் தரப்பினை விவாதிக்க தெரியாது. அரசு என்ன சொன்னாலும் தன்னளவிலோ, வீட்டளவிலோ புலம்பிவிட்டு ஏற்றுக்கொள்வார்கள். இதுவே ஒரு நகர வாழ் மக்களின் பழக்கவழக்கத்தில் இவர்கள் குற்றம் சொல்லட்டும். ஆயிரம் பேர் வழக்கு தொடர்வார்கள், கட்டுரை எழுதுவார்கள். அதனால் அங்கெல்லாம் விட்டுவிட்டு விவசாயியின் வயிற்றில் அடிப்பார்கள், கிராமத்தில் தாங்கள் தலைமுறை தலைமுறையாகக் கொண்டாடி வந்ததை தலைநகரிலிருந்து நிறுத்தி விடுவார்கள்.

என்ன செய்வான் அவன்? வாதாட மாட்டான், கட்டுரை எழுத மாட்டான். ‘அரசாங்கம் தடை விதிச்சிடுச்சு’ என்ற எளிமையாகக் கடந்து செல்வான். இருக்கும் மாடுகளை விற்பான். யாராவது கேரளாவிலிருந்தோ, ஆந்திராவிலிருந்தோ வந்து காளையை அடிமாட்டிற்காக‌ வாங்கி செல்வார்கள். ஆர்வலர்கள் அங்கேயெல்லாம் செல்ல மாட்டார்கள். ஏனென்றால் மாட்டுக்கறி சாப்பிடுபர்கள் உலகெல்லாம் உண்டு. சண்டைக்கு வந்து விடுவார்கள். இவர்கள் கிராமத்தில் காளையை தன் பிள்ளையெனக் கருதும் விவசாயியிடம் தன் கருத்துப்புலமையெல்லாம் காட்டுவார்கள். அவன்தானே திருப்பி சண்டைக்கு வரமாட்டான்? விடுங்கள் இன்னும் கொஞ்சபேர்தான் இருக்கிறார்கள். அவர்களையும் கொன்று விடுவோம்.

புதிய தலைமுறை வார இதழில்

நான் எழுதிய இந்திய உளவுத்துறை எவ்வாறு செயல்படுகிறது புத்தக விமர்சனம் புதிய தலைமுறை 31 டிசம்பர் தேதியிட்ட வார இதழில் வெளிவந்துள்ளது. அக்கட்டுரை.

Raa book review

ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்

என்பது வள்ளுவர் வாக்கு. அதாவது நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்திலேயே ஓர் அரசு சிறப்பாகச் செயல்பட முடியும். ஆம் இன்றும் அதுதான் நிலை. கடந்த 50 ஆண்டுகால வரலாற்றை சற்றேனும் நோக்கும் எவர் ஒருவரும் ஒரு நாட்டிற்கு ராணுவ பாதுகாப்பு எத்தனை முக்கியமானதோ அந்த அளவிற்கு உளவு நிறுவனமும் முக்கியமானது என்பதை எளிதில் அறியலாம். உளவு நிறுவனங்களின் தேவை முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களுக்குப் பின்னர் அதீத முக்கியத்துவம் பெற்றது. அத்தகைய பணியை செய்யும் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ ஓர் அமைப்பே ரா. அவ்வமைப்பினுடைய கடந்த கால அரசியல் நடவடிக்கைகள், வெளிநாட்டு உறவு, வெளிநாட்டு கொள்கைகள், எல்லைப் பாதுகாப்பு, பொருளாதாரம் போன்றவற்றில் ராவின் பங்களிப்புகளை விளக்கும் புத்தகம் ‘இந்திய உளவுத்துறை RAW எவ்வாறு இயங்குகிறது?’. குகன் அவர்களால் எழுதப்பெற்றது.1920 களில் ஆங்கில அரசுக்கு எதிரான சுதந்திரப் போராட்டங்கள் வலுப்பெற்றிருந்தமையால் இந்தியத் தலைவர்கள் மற்றும் போராட்டக்காரர்களின் செயல்பாடுகளை முன் கூட்டியே அறிந்துகொள்ளவும் அதனை முறியடிக்கவும் 1921 ல் பிரிட்டீஷ் அரசு இந்திய புலனாய்வு அமைப்பு (Indian Political Intelligence) என்ற அமைப்பை உருவாக்கியது. இந்த அமைப்பு ஆங்கிலேய அரசுக்கு மிகவும் தேவையானதாக இருந்தது. அவ்வமைப்பு அரசுக்கு எதிராக செயல்படக்கூடியவர்களின் உளவுத்தகவல்களை திரட்டி அரசுக்கு அளித்து வந்தது.

பின்னர் 1947 ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் இந்த அமைப்பு மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இன்டெலிஜன்ஸ் பீரோ (Intelligence Bureau) என்ற பெயரில் இணைக்கப்பட்டது. அதன் முதல் தலைவராக சஞ்சீவி பிள்ளை பொறுப்பேற்றார். மகாத்மா காந்தியின் படுகொலைக்குப்பிறகு அதன் தலைவராக பி.என்.முல்லிக் பொறுப்பேற்றார். அதுவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உளவுப் பணிகளை மேற்கொண்டு வந்தது. ஐபி அதிகாரிகள் இந்தியாவைச் சுற்றியுள்ள சீனா, பர்மா,இலங்கை போன்ற எல்லை நாடுகளிலும், ஐரோப்பாவிலும் ரகசியமாக உளவுத்தகவல்களைத் திரட்டி வந்தனர்.

சுதந்திரம் அடைந்த முதல் இருபதாண்டுகளில் இந்தியா உள்கட்டமைப்பு, நீர்ப்பாசனம், மின் உற்பத்தி, விவசாயம் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருந்தது. அதிக கவனம் என்பதனை விட முழுக்கவனம் என்பதே பொருத்தமானதாக இருக்கும். ஏனெனில் அக்காலகட்டத்திலேயே இந்தியாவின் அடிப்படைகள் கட்டமைக்கப்பட்டன. பிரதமர் நேருவும் வளர்ச்சியிலேயே அதிக கவனம் செலுத்தினார். சீனா மற்றும் பாகிஸ்தானோடு எல்லைகளில் பிரச்சினை இருந்தாலும் அது போர் வரை செல்லாது என நேரு உறுதியாக நம்பினார். அதனை அவர் பல உரைகளில் வெளிப்படுத்தவும் செய்தார். அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று சீனாவின் போர் திட்டமிடல் தொடர்பான எந்த வித தகவல்களும் ஐபியிடமிருந்து அரசுக்கு வரவில்லை. ஆனால் அதற்கான விலையை இந்தியா கொடுக்க வேண்டியிருந்தது. 1962 ல் சீனா இந்தியா மீது படையெடுத்தது. ஒருவேளை இந்தியாவுக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்திருந்தால் தயாராக இருந்திருக்கலாம், அல்லது மேற்குலக நாடுகளிலிருந்து ஆயுத உதவி பெற்றிருக்கலாம்.  ஆனால் முடியாமல் போய்விட்டது.அதனைத் தொடர்ந்து 1965 ல் பாகிஸ்தான் படையெடுப்பு. இந்த இரு போர்களின் போதும் சரியான உளவுத்தகவல்களை ஐபியால் திரட்ட முடியாததால் அப்போர்களில் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டது.

அதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உளவு செயல்பாடுகளை பிரித்து தனி அமைப்பினை உருவாக்குவது என்று 1968 ஆம் ஆண்டு அன்றைய பிரதமரான இந்திரா காந்தி தலைமையிலான அரசால் முடிவு செய்யப்பட்டு ரா உதயமானது. அதன்படி உள்நாட்டு உளவினை ஐபியும் வெளிநாட்டு உளவினை ராவும் செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.

இந்திய ராவின் முக்கியமான வேலைகள், அண்டை நாடுகளில் நடைபெறும் அரசியல் ராணுவ மாற்றங்களைக் கண்காணிப்பது, கம்யூனிஸ்ட் நாடுகளின் வளர்ச்சியைக் கண்காணிப்பது, சீன,பாகிஸ்தான் ராணுவத்தினுடைய நவீன ஆயுதங்களைக் கண்காணிப்பது, சர்வதேச நாடுகளில் வாழக்கூடிய இந்திய சமூகத்தினைப் பயன்படுத்தி அந்தந்த நாடுகளில் இந்தியாவுக்கு சாதகமான அரசியல் அழுத்தங்களை உருவாக்குவது, மற்ற நாடுகளின் உளவு நிறுவன‌ங்களில் ஊடுருவி அவற்றின் செயல்பாடுகளைக் கண்டறிவது போன்றவை. ராவின் தகவல்களுக்காக அவசியம் ஏற்பட்டால் முறைகேடான வழிகளிலும் தகவல் திரப்படும். பொதுவாக உளவு அமைப்புகளிலுள்ள முரண்பாடு என்பது எந்த உளவு அமைப்பும் மற்ற எந்த உளவு அமைப்பையும் முழுமையாக நம்பி விடாது. ஒரு உளவாளி மற்றொரு உளவாளியை கூட முழுமையாக நம்பிவிடக்கூடாது. இதுவே அவர்களுக்கான ஆரம்பப் பாடம். உதாரணமாக ராவுக்கு ஆரம்ப காலங்களில் அமேரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ பயிற்சி அளித்தது. அதே சி.ஐ.ஏ பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐக்கும் பயிற்சி அளித்தது.

தனக்குத் தேவையான தகவல்களை ரா பல்வேறு வழிகளில் திரட்டுகிறது. Human Intelligence, Signal Intelligence, Financial Intelligence, Open Source Intelligence, Cyber Intelligence, Geo-spatial Intelligence என பல்வேறு தகவல்களுக்கு தனிப்பட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டு தகவல்கள் திரட்டப்பட்டு அதன் அடிப்படையில் ராவின் அடுத்த செயல்பாடு நிர்ணயம் செய்யப்படுகிறது. ரா நேரடியாக பிரதமருக்குக் கட்டுப்பட்டது. ராவிற்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் அதன் செயல்பாடுகளைத் தனி நபர் கேள்வி கேட்க முடியாது.

ராவின் முக்கிய சாதனைகள்:

இந்தியாவுக்கு இருபுறமும் பாகிஸ்தான் இருந்தது. கிழக்கு மற்றும் மேற்கு பாகிஸ்தான்கள். அதனால் இந்தியா தன் இருபுறமும் ஓர் எதிரியை சந்திப்பது இந்தியாவுக்கு பாதுகாப்பானதாக இருக்காது என ரா எச்சரித்திருந்தது. அதனால் கிழக்கு பாகிஸ்தானிலிருந்து பங்களாதேசத்திற்கு சுதந்திரம் வாங்கித் தருவதற்காக உதவி செய்ய இந்தியா நினைத்தது. அதனால் பங்களாதேஷில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்திற்கு இந்தியா மறைமுகமாக ஆதரவளித்தது. அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தான் விமானங்கள் இந்தியா மீது தடை விதிக்க திட்டமிடப்பட்டது. அதன் மூலம் மேற்கு பாகிஸ்தானிலிருந்து கிழக்கு பாகிஸ்தானுக்கு ராணுவ உதவிகள் உடனடியாகக் கிடைப்பதைத் தடுத்துவிட‌ முடியும். அப்படி செய்துவிட்டால் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான்,சீனா அல்லது இலங்கை வழியாகவே கிழக்கு பாகிஸ்தானுக்கு செல்ல முடியும். ஆனால் என்ன காரணத்தை சொல்லி தடைவிதிப்பது? இந்த பணி ராவிடம் ஒப்ப‌டைக்கப்பட்டது.

1971 ல் கங்கா என்னும் பெயர் கொண்ட இந்திய விமானம் ஹசிம் குரேஷி மற்றும் அஷ்ரஃப் என்பவர்களால் கடத்தப்பட்டது. டெல்லி பதறியது. கடத்தியவர்கள் பாகிஸ்தானிடம் தங்கள் விமானத்தை இறக்க அனுமதிக்க வேண்டும் என்று வேண்டினர். இந்தியாவுக்கு எதிரானவர்களுக்கு அடைக்கலம் தருவது பாகிஸ்தானுக்கு இனிப்பான விஷயம். அனுமதியளித்தார்கள். பாகிஸ்தானின் லாகூரில் விமானம் இறக்கப்பட்டது. இப்போது இந்தியா பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ யே இதற்து காரணம் என்றது. சில நாட்களில் பயணிகள் விடுவிக்கப்பட்டு அந்த விமானம் தீக்கிரையாக்கப்பட்டது. இந்தியா இதனை உலகுக்கு எடுத்துக்காட்டியது. ஓர் இந்திய விமானம் எரிக்கப்பட்டுள்ளது, அதுவும் பாகிஸ்தானில். இந்தியா மீது பாகிஸ்தான் விமானங்கள் பறக்க இந்திரா காந்தி தடை விதித்தார். ஐ.எஸ்.ஐக்கு ஒன்றும் புரியவில்லை. ஐ.எஸ்.ஐயும் உலக அளவில் மிகச்சிறந்த உளவு நிறுவனமே. பின்னர் அது கடத்தியவர்களை விசாரித்ததில் தெரிந்தது கடத்தியவர்கள் இந்திய ரா உளவாளிகள் என்று. விளைவு பங்களாதேஷ் சுதந்திரம்.

இதனைப்போலவே சிக்கிமை இந்தியாவோடு இணைத்தது, 1974 பொக்ரான் இந்திய அணு ஆயுத சோதனையை ரகசியமாக அமெரிக்காவுக்குக் கூட தெரியாமல் நடத்திக்காட்டியது, 1988 ல் பாகிஸ்தானின் ராணுவ சேமிப்பு கிடங்கில் வெடிவிபத்து ஏற்படுத்தியது, 1998 ல் மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்தியது, இலங்கை, மாலத்தீவுகளிலும் இந்தியாவுக்கு ஏற்ற அரசியல்  மாற்றங்களை நிகழ்த்துவது, இந்தியப்பொருளாதாரத்தை சீர்குழைக்க நினைக்கும் கள்ள நோட்டுப் புழக்கத்தின் வேரினைக் கண்டறிந்து ஒழிப்பது என ராவின் பங்கு சுதந்திர இந்தியாவில் முக்கியமானது.

பின்னடைவுகள்:

1970 களின் பிற்பாதியில் இந்திரா காந்தியின் வெற்றி செல்லாது என நீதிமன்றம் அறிவித்ததைத் தொடர்ந்து அவசர நிலைப் பிரகடனம் செய்தார். அதனைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் தோல்வியடைந்தார். அதன் பின்னர் வந்த மொரார்ஜி தேசாய், நெருக்கடி காலகட்டத்தில் இந்திராகாந்தி தன் அரசியல் எதிரிகளைப் பழிவாங்க உளவு அமைப்புகளை  பயன்படுத்தினார் எனக் கூறி உளவு அமைப்புகளின் தலைவர்களை மாற்றினார். ராவுக்கான நிதியைக் குறைத்தார். ராவுக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டது. இக்காலகட்டம் ராவுக்கான சோதனைக்காலமாக இருந்தது. பின்னர் இரண்டு ஆண்டுகளில் மொரார்ஜி தேஜாய் அரசு கவிழ்ந்தது, அதன் பின்னர் ஆட்சியமைத்த சரண்சிங் அரசும் நீடிக்கவில்லை. பின்னர் 1980 தேர்தலில் மீண்டும் பெரும்பான்மை பெற்று இந்திரா காந்தி பிரதமரானார். ரா மீண்டும் புத்துயிர் பெற்றது.

பிழைகள்:

ராவின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பினும் சில சம்பவங்களில் அவர்களும் கோட்டை விட்டார்கள். உதாரணமாக சீக்கியர்களின் பொற்கோவிலுக்குள் ராணுவம் நுழைந்து தாக்கியது போன்ற நடவடிக்கைகள் இந்தியப் பிரதமரின் உயிரையே குடிக்கும் அளவிற்கு சென்றன. கனீஷா குண்டுவெடிப்பு சம்பவமும் அதன் தொடர்ச்சியே. மும்பைக் குண்டுவெடிப்பு மற்றுமோர் கருப்புப்பக்கம்.

அவர்களின் வெற்றியில் பெருமைப்பட்டுக்கொள்ளும் நாம் அவர்களின் தோல்விகளையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில் என்னதான உலகின் வல்லமை படைத்த சி.ஐ.ஏ வாகவே இருந்தாலும் அவர்களாலேயே 09/11 தாக்குதலைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. இப்போது எதிரி அணியில் இருப்பவர்களும் உளவாளிகளுக்கு சற்றும் சளைத்தவர்களாக இல்லை என்பதே உண்மை.

ராவின் செயல்பாடுகள் முற்றிலும் ரகசியமானவை. தன்னுடைய தோல்வியை ஏற்றுக்கொள்ளவும் கூடாது, வெற்றியையும் கொண்டாடவும் கூடாது. ஒரு மிகப்பெரும் ஆபத்தை வெற்றிகரமாக முறியடித்துவிட்டிருந்தாலும் அதனைப்பற்றி எதுவும் பேசாமல் அடுத்த வேலைக்கு சென்று விட வேண்டும். சில சமயங்களில் தங்களுடைய உளவு அதிகாரி மாட்டிக்கொண்டு விட்டால் அவர் யாரென்றே எங்களுக்குத் தெரியாது என்று கூற வேண்டியிருக்கும். உதாரணம் ரவீந்தர் கௌசிக்.

கடந்த 47 ஆண்டுகால செய்திகளின் அடிப்படையிலேயே ராவின் செயல்பாடுகளை நாம் ஒரளவிற்கு அறிந்துகொள்ள முடியும். மற்ற நாடுகளின் உளவு நிறுவன‌ங்கள் ராவின் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள், நீண்ட காலம் கடந்த பின்னர் வெளிவரும் தகவல்கள் போன்றவற்றின் அடிப்படையில் குகன் ராவைப்பற்றி இப்புத்தகத்தில் விளக்கியுள்ளார். இந்திய உளவு அமைப்பு மற்ற நாடுகளின் எந்தெந்த நடவடிக்கைகளைக் கவனிக்கிறது, அதற்கான உளவு ஆட்களை எவ்வாறு தேர்வு செய்கிறது, மற்ற நாடுகளின் உளவு நிறுவனங்களோடு எப்படிப்பட்ட உறவைப் பேணுகிறது எனப் பல விவரங்கள் இப்புத்தகத்தில் உள்ளன. உதாரணமாக இந்திய ரா அமைப்பிற்கு ஆட்கள் நேரடியாகத் தேர்வு செய்யப்படுவது கிடையாது. மற்ற பிரிவுகளில் சிறப்பாகப் பணியாற்றும் நபர்கள் கருத்தில் கொள்ளப்பட்டு அவர்கள் ரகசியமாக வேலைக்கு அமர்த்தப்படுவார்கள். பெரும்பாலும் ஐபி, ராணுவத்திலிருந்தே ஆட்களை முக்கியமான பணிகளுக்குத் தேர்வி செய்வார்கள். அதன் முக்கியமான காரணம் ஒருவேளை எதிரியிடம் அகப்பட்டுக்கொண்டால் எந்தத் தகவலையும் அளிக்கமுடியாமல் இருக்கக் கூடிய பயிற்சி அவர்களுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டிருக்கும் என்பதுதான். அத்தோடு பல்வேறு சோதனைகளுக்குப் பிறகே ஒரு ரா அதிகாரியைத் தேர்வு செய்வார்கள் என்பது போன்றவை.

ரா அமைப்பைப் பற்றியோ இல்லை உலக உளவு அமைப்புகளைப் பற்றியோ தெரிந்து கொள்ள விரும்புவோர் வாசிக்க வேண்டிய ஆரம்பமாக இப்புத்தகத்தினைக் கொள்ளலாம்.

நன்றி.

இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு பாகம் 2

India After Gandhi புத்தகத்தின் தமிழ்ப்பதிப்பின் இரண்டாம் பாகம். இப்புத்தகம் 1960 களிலிருந்து தொடங்குகிறது. 1964 ல் பிரதமர் நேருவின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், லால் பகதூர் சாஸ்திரி பிரதமரானது, அதனைத் தொடர்ந்து இந்திரா காந்தி பிரதமரானது, நேருவுக்கும் இந்திரா காந்திக்குமான முரண்பாடுகள், அதன் விளைவாக ஏற்பட்ட அவசரநிலைப் பிரகடனம், நிலையில்லாத ஆட்சிகள், மீண்டும் இந்திரா காந்தி, அவரது இளைய மகன் சஞ்சயின் அரசியல் பிரவேசம், அவருடைய சறுக்கல்கள் மற்றும் மரணம், பின்னர் ஏற்பட்ட கலவரங்கள், இந்திரா காந்தியின் தோல்விகள், அதனால் இந்திரா காந்தி படுகொலை, அரசியலையே விரும்பாத ராஜீவ் காந்தி அரசியலுக்கு வந்தது, அவருடைய பொருளாதாரத்திட்டங்கள், விடுதலைப்புலிகள் மீதான செயல்பாடுகள், ராஜீவ் காந்தியின் மரணம் என சுதந்திர இந்தியாவின் பெரும்பாலான அனைத்து நிகழ்வுகளையும் முழுக்க முழுக்க ஆதாரங்களோடு மிக விரிவாக எழுதியுள்ளார் குஹா.

நான் ஏற்கனவே கூறியதுபோல ராமச்சந்திர குஹாவின் எண்ணங்களும் கருத்துக்களும் அல்ல இப்புத்தகம், கடைசி சில அத்தியாயங்கள் தவிர‌. அக்காலகட்ட விமர்சகர்களாலும், இந்திய வெளிநாட்டு பத்திரிக்கையாளர்களாலும், எதிர்க்கட்சியினராலும் எழுதப்பெற்ற கட்டுரைகள்,கடிதங்கள், அரசு உத்தரவுகள் போன்றவற்றின் அடிப்படையிலேயே இப்புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. அவற்றையெல்லாம் இக்காலத்திலிருந்து நோக்குவதால் அவற்றின் விளைவுகளையும் அறிய முடியுமென்பதால் அவற்றை ஒழுங்குபடுத்தி விளைவுகளோடு பொறுத்தி தந்திருக்கிறார் குஹா.

இறுதி சில அத்தியாயங்களில் இந்தியா இன்னும் ஒற்றை தேசமாக நீடித்திருப்பதற்கான காரணங்கள், அதன் பொருளாதார முன்னேற்றத்தின் காரணம், நடைபெற்ற ஏதோ செயல்களால் மறுபக்கம் ஏற்பட்ட பலன்கள், இந்திய சினிமாவின் வளர்ச்சி, தேச ஒற்றுமையில் அவற்றின் பங்கு என சிலவற்றில் தன் கருத்தினைப் பட்டியலிட்டுள்ளார். சுதந்திர இந்திய வரலாற்றினை அறிந்து கொள்ள விரும்பும் ஒருவர் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்.

சமையல்கட்டும் கிச்சனும்

கிச்சன் என்ற சொல் சமைய‌ல்கட்டு என்ற சொல்லிருந்து எவ்வளவு தூரம் வேறுபடுகிறது? என்னால் என்றுமே கிச்சனை அத்தனை அந்நியோன்யமாக உணர முடிந்ததே இல்லை. அது முற்றிலும் நிற்பதற்கான இடம் மட்டுமே. சமைப்பதற்கான இடம் மட்டுமே. அங்கு வேறு எதுவும் செய்ய முடியாது. அங்கே தரையில் உட்கார்வதற்கு வழியே இல்லை. மிகக்குறுகலான இட வசதி கொண்டதாக இருக்கும். நகரங்களின் இடவசதிப்பற்றாக்குறையில் அதற்கு ஆகக்குறைந்த அள‌விற்கே இடம் ஒதுக்கும் இன்றைய சூழ்நிலையில் வேறு வழியும் இல்லை.

ஆனால் நான் உணர்ந்த சமைய‌ல்கட்டு என்பது மிகவும் அந்நியோன்யமானது. என் அம்மாவோடும், அக்காக்களோடும் அமர்ந்து சமையல்கட்டில் பேசும் போது ஏற்படும் மகிழ்ச்சி என்பது வீட்டின் ஹாலில் அமர்ந்து பேசுவதைவிட மிக பல நூறு மடங்கு நெருக்கமானது. அம்மா சமைத்துக்கொண்டே பேசிக்கொண்டிருப்பார்கள், அக்காவும் சமையலறையிலேயே உட்கார்ந்து இருப்பார்கள். முற்றிலும் வெட்டிப்பேச்சே அங்கு மையம். அங்கு பேசப்படும் விஷயம் பலநூறு முறை முன்னர் பேசப்பட்டதாகவே இருக்கும். இருந்தாலும் ஒவ்வொரு முறையும் அது புதியதாக இருக்கும். எங்களுடைய புதிய வீட்டில் சமையல்கட்டு அமைக்கும் பொழுது அத்தனை திட்டமிட்டெல்லாம் சமையல்கட்டு அமைக்கவில்லை. ஆனாலும் இயல்பிலேயே நான் என் ஆழ்மனதில் விரும்பிய ஒரு சமையல்கட்டாகவே அது அமைந்து விட்டது. நல்ல இடவசதி. சமையல்கட்டில் இருந்து பின்புறம் செல்ல‌ கொல்லைப்புறமாக ஒரு வழி, உள்ளே டைனிங்க் ஹால் செல்ல ஒரு வழி. ஆக எப்பொழுதும் நல்ல வெளிச்சமாகவே இருக்கும்.

அத்தோடு வெளியே செல்லும் ப‌டிக்கட்டில் அமர்ந்துகொண்டு பேசுவது என்பது அத்தனை மகிழ்ச்சியானது. ஒவ்வொரு முறையும் அம்மா வெளியே செல்லும்போதும் ஏண்டா படிக்கட்டுல உட்கார்ர‌? அங்கிட்டு உட்கார்ந்தா என்ன என்று சொல்லிக்கொண்டே செல்வதும் வருவதுமாக இருப்பார்கள். பாட்டி வெளியே உள்ள திண்ணையில் அமர்ந்துகொண்டு ஏதாவது அரைத்துக் கொண்டோ, பாத்திரம் கழுவிக்கொண்டோ இருப்பார்கள். அதனால் உள்ளிருந்து வெளியிலேயும், வெளியிலிருந்து உள்ளேயும் ஏதாவது போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருக்கும். இதற்கிடையில் அம்மா சமைக்க எடுக்கும் ஒவ்வொரு பொருளிலும் ஏதாவது தின்னும் பொருளிருந்தால் எடுத்து நீட்டுவார்கள். அதனையும் தின்று கொண்டே பேச்சைத் தொடர்வோம். விரும்பிய சமையலறை அமைவதென்பதே ஒரு வரம்தான் என்ன!

ஆசானிடமிருந்து

இது ஏன் நிகழ்கிறது? இச்செயலை இச்சமூகம் sanction செய்கிறது. இல்லை என்றால் இவர்கள் பதறுவார்கள் இல்லையா? ஊழலை ஒழுங்கின்மையை ஒவ்வொரு கணுவிலும் அங்கீகரிக்கும் மக்களாக நாம் ஆகிவிட்டோம். அந்த மனநிலையைத்தானே அத்தனை அமைப்புகளும் செய்கின்றன

அன்ணா ஹசாரே ஊழலுக்கு எதிராகக் கிளர்ந்தபோது இங்கே கிண்டல் செய்தவர்கள் தானே அதிகம்? அவர்கள் உருவாக்கி நிலைநிறுத்தும் மனநிலை அல்லவா ஜெயலலிதாவும் கருணாநிதியும் உருவாகி நீடிக்கக் காரணம்

அந்த மனநிலைக்கு எதிரான நம்பிக்கை தளரான கருத்துப்போர்தான் ஒரெ வழி

ஜெ