வைகறை மேகங்கள் ‍- வைரமுத்து

வைரமுத்து அவர்களால் எழுதப்பெற்று, அவருடைய 17 ஆம் வயதில் வெளிவந்த கவிதைத் தொகுப்பு. வெளிவந்த ஆண்டு 1972. பல்வேறு பதிப்புகள் கண்டு தற்போது முப்பதாம் பதிப்பாக வெளிவந்துள்ளது 2011 ஆம் ஆண்டில். அதற்குப் பின்னர் எத்தனை பதிப்புகள் வந்துள்ளன எனத் தெரியவில்லை. வைரமுத்துவை சிறந்த பாடலாசிரியர் எனவும் அவர் கவிஞர் அல்ல எனவும் ஒரு பார்வை நீண்டகாலமாக முன்வைக்கப்படுகிறது. கவிதையை வாசிப்பவன் என்ற அளவில் எனக்கும் அப்படித்தான் தோன்றியிருக்கிறது. நமக்குத் தெரிந்த ஏதோ ஒன்றின், தெரியாத அல்லது நாம் காணமல் விட்ட ஒன்றை ஒரு புள்ளியில் தட்டும் கலை கவிதையின் மிக அடிப்படைக் கூறுகளில் ஒன்று. ஆனால் வைரமுத்துவின் பாடல்கள் அத்தகைய சவாலை அளிக்காதவை. ஒரு நல்ல மேடை உரைநடையை எதுகை மோனையோடு, சிலப்பல வார்த்தைகளை மாற்றிப்போடுவதே அவருடைய கவிதைகளின் பாங்காக இருக்கிறது. இக்கவிதைகள் அத்தகையவை. வாசிக்கலாம்.

ரஷ்யப் புரட்சி – மருதன்

1917 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் ஜார் மன்னரின் ஆட்சி போராட்டத்தின் மூலம் கவிழ்க்கப்பட்டு, லெனின் தலைமையில் கம்யூனிச அரசு அமைந்ததை விவரிக்கும் சிறு புத்தகம். மருதன் அவர்களால் எழுதப்பெற்றது. ஜார் மன்னராட்சியில் தொழிலாளர்களின் வாழ்வு பேணப்படாமால் கீழ் நிலைக்கு சென்று கொண்டிருந்ததே போராட்டத்தின் ஆரம்பகாலக் காரணம். சரியான ஊதியமின்மை, முறைப்படுத்தப்படாத வேலை நேரங்கள் எனப் பல துன்புறல்களுக்கு ஆளான மக்கள் போராட்டத்தில் ஈடுபட அதன் ஒருபகுதியாக லெனினின் சகோதரனும் அரசாங்கத்தால் கொல்லப்படுகிறார். அதன் பின்னர் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் லெனின், கார்ல் மார்க்ஸின் மூலதனம் நூலையே ரஷ்ய மக்களுக்கான சாசனமாகக் கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறார். அப்புத்தகத்தினை நன்கு கற்று ரஷ்ய மக்களுக்கான எளிய மொழியில் கட்டுரைகளாக வெளியிடுகிறார். இதுபோன்ற பல்வேறு நிகழ்வுகள் வழியாக ரஷ்யத் தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த தொழிலாளர் அமைப்பு உருவாகிறது. பின்னர் பல்வேறு கட்ட அடக்குமுறைகள் மற்றும் முதல் உலகப்போரின் ர‌ஷ்யாவின் தலையீடு போன்றவற்றால் தொழிலாளர்களும் ரஷ்ய மக்களும் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதனைத் தொடர்ந்து பெரும் அளவிலான புரட்சி 1917 ஆம் ஆண்டில் வெடிக்கிறது.அப்புரட்சியின் மூலமாக‌ ஜார் மன்னரான இரண்டாம் நிக்கோலஸ் தூக்கியடிக்கப்பட்டு மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு லெனின் தலைமயில் கம்யூனிச அரசு மலர்கிறது. ரஷ்யப்புரட்சி பற்றி அறிந்து கொள்ள ஓர் தொடக்கமாக இந்நூலை வாசிக்கலாம்.

குடி அரசு

தமிழகத்தில் மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டு விட்டது. அரசாங்கம் தன்னுடைய பொருளாதார நிலைக்கு இது மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்று நினைத்து பல வருடங்களாகி விட்டது. அதனால் மதுக்கடைகள் அரசு மூடிவிடும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. ஒருவேளை சமூக ஊடகங்களிலும், செய்தித் தொலைக்காட்சிகளிலும் இதனை ஒரு கருப்பொருளாகக் கொண்டு விவாதம் நடத்தலாம். சில கிண்டல் செய்திகளை பரப்பி மகிழலாம். அவ்வளவே.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு கள்,சாராயம் போன்றவை தமிழகத்தில் ஆங்காங்கே விற்பனை செய்யப்பட்டுக்கொண்டிருந்த போது, 1886 ஆம் ஆண்டில் அப்போதைய‌ ஆங்கிலேய அரசு மெட்ராஸ் அக்ரேரி ஆக்ட் என்ற சட்டத்தை இயற்றியது. அதன்படி யாரும் கள், சாராயம் உற்பத்தி செய்யக்கூடாது. ஆனால் அரசு கொள்முதல் செய்து விற்பனை செய்யும். அதனை வாங்கி அருந்தலாம். வெளிநாட்டு மதுபானங்களின் விற்பனையை அதிகரிப்பதற்காகவே இந்த சட்டம் போடப்பட்டது. அவர்களுக்கு வியாபரமே நோக்கம், அது நமக்கான அரசு அல்ல. அவர்களுக்கான மக்களே நாம். அதனால் அந்த சட்டத்தினைக் கொண்டு வந்தார்கள். வியப்பதற்கு ஒன்றுமில்லை. முரண்பாடு என்னவென்றால் நம் அரசு, நமக்கான அரசும் அதையே இன்றும் செய்வதுதான்.

சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தில், குடிப்பது என்பது ஒரு தேச விரோத செயலாகப் பார்க்கப்பட்டது. இந்திய சுதந்திரத்தினை முன்னெடுத்த இந்திய தேசிய காங்கிரஸ் அதில் முக்கியப் பங்காற்றியது. அதற்கு எதிராக தீவிர பிரச்சாரமும் செய்யப்பட்டது. அதனால் குடிப்பது என்பது அறுவறுக்கத்தக்க, மற்றவர்களுக்குத் தெரிந்தால் தன்னுடைய மதிப்பைக் குறைத்துவிடும் ஒரு செயலாகவே கருதப்பட்டது. இன்று பள்ளி, கல்லூரி இளைஞர்கள் கூட குடிப்பதை வெளிப்படையாக கூறிக்கொள்ள என்ற அளவிற்கு நாம் மாறிப்போனதில் முக்கிய‌ பங்கு அரசுக்கு உண்டு.

மெட்ராஸ் பிரசிடென்சியின் ராஜாஜி தலைமையிலான‌ அரசாங்கம் 1937 ஆம் ஆண்டில் மதுவிலக்கை தமிழகம் முழுவதும் கொண்டு வந்தது. 1971 ஆம் ஆண்டு வரை அத்தடை நீடித்தது. 1971 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கருணாநிதி தலைமையிலான திமுக அரசு அத்தடையை நீக்கி கள் விற்பனையை அனுமதித்தது. அதன் பின்னர் 1974 ல் மீண்டும் அதே அரசு தடை விதித்தது. பின்னர் 1981 ல் ஆட்சிக்கு வந்த எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அரசு மீண்டும் அத்தடையை நீக்கியது. அதே அதிமுக அரசு 1987 ல் மீண்டும் தடை விதித்தது. 1990 ல் ஆட்சியில் இருந்த திமுக தடையை நீக்கியது. பின்னர் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு மீண்டும் தடையைக் கொண்டு வந்தது. அதன் பின்னர் அதே அதிமுக அரசு 2001 ஆம் ஆண்டில் தடையை நீக்கி ஒட்டுமொத்த கொள்முதல் மதுபான விற்பனையை தமிழக வாணிபக் கழகத்தின் கீழ் கொண்டு வந்தது. 2002 ஆம் ஆண்டு முதல் அனைத்து மதுபானக் கடைகளையும் அரசே ஏற்று நடத்தும் என அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இதுவே தமிழக மதுவிலக்கின் சுருக்கமான‌ வரலாறு.

2001 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை மதுபானக் கடைகள் நடத்துவடற்கு ஏலம் மூலம் அனுமதி அளிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. அதில் பெரும்பாலும் திமுகவினரின் ஆதிக்கம் ஓங்கியிருப்பதால் ஏலம் விடாமல் அரசே ஏற்று நடத்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்ததாக ஒரு தகவலும், அப்பொழுது ஆட்சி அதிகாரத்தினை விட்டுச் சென்றிருந்த திமுக அரசு கரூவூலத்தினை காலி செய்து விட்டு சென்றிருந்ததாகவும் அதனால் ஏற்பட்ட வருவாய் பற்றாக்குறையை சரிசெய்யும் மாற்று ஏற்பாடுகளில் ஒன்றாக அரசு இந்நடவடிக்கையை எடுத்ததாக ஒரு தகவலும் உண்டு.

இரு கட்சிகளும் தாங்கள் தடை விதித்த வருடங்களையும் மற்றவர் தடையை ரத்து செய்த வருடங்களையும் பட்டியலிட்டு மற்றவர் மீது குற்றம் சாட்டுகின்றனர்.எதுவாயிருந்தாலும், இரு அரசுகளுக்கும் இதில் பொறுப்பு உண்டு.

ஏன் அரசு மது விற்பனையை ஆதரித்தது? அதற்கு அப்போதைய அரசுகள் கூறிய காரணங்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.

ஒவ்வொரு அரசும் மது விற்பனை தடையை அமல்படுத்த‌ முடியாததற்கு கூறிய/கூறும் முக்கியக் காரணங்கள்.

 1. மதுபானத்திற்கான தடை என்பது கள்ளச்சாரயத்திற்கு வழிவகுத்து பல்வேறு உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது. அதனால் அரசே ஏற்று நடத்துவதன் மூலம் அதனை ஒழுங்குபடுத்தவும், சாவுகள் இல்லாமல் ஆக்கவும் முடியும். ஒவ்வோர் அரசும் தன் கூற்றுக்கு வலு சேர்க்கும் விதமாக‌ அப்போதைய ஆண்டுகளில் நடைபெற்ற கள்ளச்சாராய சாவுகளை மேற்கோள் காட்டுகின்றது.
 2. தமிழகத்தினைச் சுற்றியுள்ள மற்ற மாநிலங்களில் மதுவுக்கு தடை இல்லாமல் இருப்பதால் சட்ட விரோத மதுக் கடத்தல் நடைபெறும்.
 3. மேற்கூரிய இரண்டு காரணங்களால் அரசுக்கும், காவல்துறைக்கும் நடைமுறை நிர்வாகச் சிக்கல்கள் உருவாகும். அதீத பணிச்சிரமம் ஏற்படும்.

இதில் முதலாவது, மற்றும் இரண்டாவது காரணங்களின் உண்மைத்தன்மையைப் பார்ப்போம். இப்பொழுது கள்ளச்சாராயம் இல்லாமல் இருப்பதற்கு இவர்கள் மதுக்கடையைத் தொடங்கியதா காரணம்? இன்றைய நிலையில் யாரேனும் கள்ளச்சாராயம் அல்லது கள் விற்றால் அதன் விலை அரசு மதுபானத்தின் விலையைவிட குறைவாக இருக்குமா அல்லது அதிகமாக இருக்குமா? கண்டிப்பாக குறைவாகத்தானே இருக்கும். அப்படியென்றால் ஏழையாக இருக்கும் குடிப்பவர்கள் எங்கே செல்வார்கள்?

ஆனால் இன்றைய நிலையில் கள்ளச்சாராயம் விற்பது என்பது இயலாத காரியம். காரணம் அரசின் உறுதியான நடவடிக்கை. அரசு காவல்துறையைக் கொண்டு இரும்புக்கரத்தினால் அடக்கி விடும், அப்படித்தான் வைத்திருக்கிறது. இன்று தமிழகத்தில் கள்ளச்சாராயமே இல்லை என்று சொல்லி விடலாம். ஒரு சில விதிவிலக்குகள் தவிர. ஏன் அரசாங்கம் கள்ளச்சாராயத்தை கள் விற்பனையினையும் இத்தனை கண்டிப்புடன் தடை செய்துவைக்கிறது? ஒருவேளை சற்றேனும் கண்டுகொள்ளாமல் விடப்பட்டால் பல இடங்களில் கள்ளச்சாரயம் பெருகும். அது அரசின் வருமானத்தினை பெரும் அளவில் பாதித்துவிடும் என்பதுதான் முக்கியக் காரணம். இதர காரணங்களும் இருக்கலாம்.

இப்படி கள்ளச்சாராயத்தினை முற்றிலுமாக கட்டுப்படுத்த‌ முடியுமென்றால், மதுக்கடைகளை திறக்காமலேயே ஏன் இதனை செய்ய முடியாது? ஒரு சில இடங்களில் விதிமீறல்களும், அத்து மீறல்களும் நடைபெறலாம். அதனையும் நாளடைவிலோ அல்லது ஒரு சில வருடங்களுக்குள்ளாகவோ முற்றிலுமாக அரசால் கட்டுப்படுத்தி விட முடியும் தானே? ஆனால் அரசாங்கம் அதற்குத் தயாராக இல்லை. ஏன்?

முதலாவது மற்றும் முக்கியமான காரணம். மாநில அரசாங்க நேரடி வருமானத்தின் பெரும்பகுதியின் மூலம் மதுவாக இருக்கிறது. கடந்த வருடங்களின் அரசின் மது வருமானத்தைப் பாருங்கள்.

வருடத்திற்கு பத்து விழுக்காடு முதல் 30 விழுக்காடு வரை வருமான உயர்வு. கடந்த வருடத்திய வருமானம் 30,000 கோடி. ஒருவேளை மதுவைத் தடை செய்யும் பட்சத்தில் அதனை ஈடுகட்டுவது என்பது மிகவும் சவாலான விஷயம். அரசின் பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஆதாரமாக இருப்பது மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமானமே. அத்தோடு ஏற்கனவே ஜி.எஸ்.டி நடைமுறைப்படுத்தப்பட்டதால் பெரும்பாலான வரி விகிதங்கள் இந்திய அளவில் சீராக்கப்பட்டு விட்டது அத்தோடு அது இந்திய மைய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால் வரி வருவாய்களைப் பெறுக்கும் நேரடி வாய்ப்புகள் மாநில அரசாங்கங்களுக்கு மிகவும் குறைவு.

உடனடித் திட்டங்கள் எதுவும் சாத்தியமில்லை என்பதனையும் அரசு நன்றாக அறியும். அதனாலேயே ஒவ்வொரு முறை மது விலக்கு தொடர்பாக தமிழகம் கொந்தளிக்கும் பொழுதெல்லாம் ஏதெனும் உடனடி தற்காலிக நடவடிக்கைகள் மூலம் அதனை சரி செய்கிறார்கள். ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு 500 கடைகளையும், 2017 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 500 கடைகளயும் மூடினார்கள். இவையெல்லாம் அப்போதைய கொந்தளிப்புகளை அடக்குவதற்கான தற்காலிக நடவடிக்கைகள் தான். நிரந்தரத் தீர்வுகளும் அல்ல, நிரந்தரத்தீர்வை நோக்கியவையும் அல்ல. இந்த 500 கடைகளை மூடிய பின்னர் ஆண்டு வருமான குறைந்திருக்கிறதா? இல்லை. ஏனென்றால் சிறு ஊர்களில் கூட அரசு இன்று இரண்டு மூன்று கடைகளைத் திறந்து வைத்திருக்கிறது. ஒன்றை மூடினால் அடுத்த கடைக்குப் போய் மது வாங்கப்போகிறார்கள். அவ்வளவே!

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு.

ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல் அறமல்லாதவற்றை நீக்கி வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் என்கிறது வள்ளுவம்.
‘அறத்தில் தவறாமல், அறமல்லாதவற்றை நீக்கியா’ நம் அரசு நடந்துகொள்கிறது?
இந்த வருமானம் அறத்தின் வழி ஈட்டப்பட்ட வருமானம் தானா?
தினம் நூறுகளில் சம்பாதிக்கும் ஒருவனிடத்தில் இருப்பதைப் பிடுங்கிக்கொள்வதையல்லவா செய்கிறோம்.

நன்றாக சிந்தித்துப்பாருங்கள், தன் குழந்தையின் படிப்பிற்காக செய்ய வேண்டிய சில நூறுகளைத் தானே நீங்கள் பறிக்கிறீர்கள். அக்குழந்தைதானே இந்த தேசத்தின் நாளைய எதிர்காலம், நாளைய சமூகம் என்பதை எளிதில் மறந்து விடுகிறீர்கள். இன்றைய தேவைக்காக நீங்கள் நாளைய தினத்தைக் கொளுத்துகிறீர்கள். எங்கே போனது நம் அறம்? சுதந்திரம் அடைந்த முதல் பத்தாண்டுகளில் இருந்த அறம் பின்னர் குறைந்து குறைந்து இன்று அறத்தை விற்பனை செய்து விட்டோமே. இது சரிதானா? நம் பொறுப்புகளைத் தட்டிக்கழித்து ஏன் மீண்டும் மீண்டும் முந்தையவர்களை குறை சொல்கிறோம் நாம்?

இந்த வருமானத்தில் எத்தனைக் குழந்தைகளின் கல்வி வீணாய்ப்போயிருக்கும்? எத்தனை உயிர்கள் போயிருக்கும்? எத்தனை குடும்பங்கள் எதிர்காலம் பாழாயிருக்கும்? சரியாக செய்யப்படும் ஒரு நூறு ரூபாய் செலவு ஒரு குழந்தையின் கல்வியில், அக்குடும்பத்தில் எத்தனை மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா நாம்?

சரி நாம் குற்றங்களை மட்டுமே பட்டியலிடவேண்டாம். அதற்கான மாற்று வழிகளை இனியாவது செய்வோமா? என்ன செய்யலாம்?

 1. முதலில் நம் அரசு மதுவிலக்கை கொண்டுவர வேண்டும் என்று உண்மையாகவே நினைக்க வேண்டும். ஏனென்றால் வெறும் கண்துடைப்புகளாக நாம் மேற்கொண்ட நடவடிக்கைகளால் தான் இன்றுவரை மதுவிலக்கை விலக்கியே வைத்திருக்கிறோம். ஒருவேளை நாம் முன்னரே இந்த எண்ணத்தினைக் கொண்டிருந்தோமேயானால் இந்நேரம் மதுவே இல்லாத நிலையில் இருந்திருப்போம். வேண்டாம் வெற்று நடவடிக்கைகள்.
 2. நம் அரசுக்கு நன்கு தெரியும், இதற்கு உடனடி நிவாரணம் இல்லையென்று. ஆனால் நீண்டகாலத் திட்டத்தினை உருவாக்க முடியும். உதாரணமாக் 2025 ல் மதுவில்லா தமிழகம் என்றொரு திட்டத்தினை உருவாக்கலாம். தேவைப்படின் அதற்கு ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பை உருவாக்கி, அரசியல் தலையீடுகள் இல்லாவண்ணம் ஆகச்சிறந்த அதிகாரிகளையும் வல்லுநர்களையும் அக்குழுவில் உறுப்பினர் ஆக்கலாம். அவ்வமைப்பின் நோக்கம் இவையாகவும் இருக்கட்டும்.

அ. ஐந்து வருடத்தில் முற்றிலும் ஒழிக்க வேண்டுமென்றால் வருடத்திற்கு 20 விழுக்காடு கடைகளை மூட வேண்டும். அதற்கான மாற்று வருவாயைப் பெருக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அரசுக்கு தெரிவிக்கட்டும். அரசு நடவடிக்கையை எடுக்கட்டும்.
ஆ. அரசின் தேவையில்லா செலவினங்களை குறைப்பதனைப் பற்றியும் அக்குழு ஆராய்ந்து அரசுக்குத் தெரிவிக்கட்டும். அதன் மீதும் கட்சி நலனையும் விளம்பர நோக்கங்களையும் தவிர்த்து அரசு நடவடிக்கை எடுக்கட்டும்.
இ. அக்குழுவின் நடவடிக்கை தொடர்ந்து ஆய்வு செய்யப்படட்டும். தேவைப்படின் அணுகுமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் செயல் பாட்டினை வேகப்படுத்தலாம்.

அடுத்த கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டால் அவர்கள் இதன் பலனை அடைவார்கள் என்பதற்காக உடனடி விளம்பரங்களில் இரங்காமல் நிரந்தரத் தீர்விற்கான செயல்பாடுகளை செய்ய வேண்டும். வரலாறு நம்மை நினைவு கூறப்போவது நம் செயல்கள் வழியாகத்தான், நம்முடைய‌ பொருளாதார நிலைகளினால் அல்ல என்பதை உரக்கச் சொல்ல வேண்டிய நேரமிது.

நன்றி.

ஆயிரம் ஜன்னல் ‍‍- ஜக்கி வாசுதேவ்

ஆனந்த விகடனில் தொடர்ச்சியாக வெளிவந்த ஜக்கி வாசுதேவ் அவர்கள் எழுதிய‌ கட்டுரைகளின் தொகுப்பு. எழுத்தாக்கம் சுபா. வாராந்திரக் கட்டுரை வடிவில் வெளிவந்ததனால் ஒட்டு மொத்த தொடர்ச்சி கிடையாது. ஒரு எளிய கட்டுரை அதனுள் ஒரு சிறு அறம். இப்படித்தான் பெரும்பாலானவை. இத்தொடர் வெளிவந்த காலகட்டத்திலேயே ஜக்கி வாசுதேவ் ஒரு புகழ்பெற்ற நபராக இருந்தமையால் அவர் சாதாரணமாகச் சொல்வதைக்கூட பிரமாண்டமாகவே எடுத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு வாசிப்பவர்கள் சென்றே ஆக வேண்டும். அப்படிப்பட்டவையே இக்கட்டுரைகள். வாராந்திர சஞ்சரிகைகளையும், தினசரி செய்திகளையும் மட்டுமே பார்க்கும் ஒருவர் இக்கட்டுரைகளையும், அவருக்கு இருக்கும் பிறவி ஞானத்தையும் விதந்தோதலாம். உலக, இந்திய, தமிழ் எழுத்தாளர்களை குறைந்த அளவிலேனும் வாசித்தவர்களுக்குத் தெரியும் இவையெல்லாம் வியாபாரக் குப்பைகள் என்று. இந்தக் கட்டுரைகளின் மற்றோர் பொதுத்தன்மை பெரும்பாலான கட்டுரைகளில் அவர் தன்னைத்தானே உயர்த்திக்கொள்கிறார். தனக்கு சிறு வயதிலேயே எல்லா விதமான ஞானம் ஏற்பட்டதாகவும், எல்லாவற்றையும் ஆராய்ந்து பகுத்து மூலத்தினைக் கண்டுபிடிக்கும் வல்லமை இருந்ததாகவும், இன்னும் பிற. இவர் இக்காலப் பொருளியல் வெற்றியடையலாம், ஆனால் எதிர்காலம் இவரை உதரித்தள்ளும். மிகச் சாதாரணமான புத்தகம். வாசிக்கலாம்.

என்றென்றும் வாழும் படைப்புகளும் படைப்பாளர்களும் – எம்.ஏ.அப்பாஸ்

எம்.ஏ.அப்பாஸ் அவர்களால் எழுதப்பெற்றது. வெளிவந்த ஆண்டு 1960 களின் தொடக்கம். 2006 ஆல் மீண்டும் புதிய பதிப்பாக அம்ருதா பதிப்பகத்தினர் கொண்டு வந்திருக்கின்றனர்.
சிறந்த பத்து எழுத்தாளர்களைப் பற்றிய சிறிய வாழ்க்கைக் குறிப்பும், அவர்களின் படைப்புகள் பற்றிய ஒரு எளிய அறிமுகத்தினையும் செய்யும் புத்தகம். அந்த பத்துப் படைப்பாளிகள் இவர்களே.

 1. தஸ்தயேவ்ஸ்கி – ரஷ்யா
 2. கார்க்கி – ரஷ்யா
 3. T.H. லாரன்ஸ் – இங்கிலாந்து
 4. ஹெமிங்வே – அமெரிக்கா
 5. ஜேம்ஸ் ஜாய்ஸ் – அயர்லாந்து
 6. அல்பட்டோ மொறாவியா – இத்தாலி
 7. சரத் சந்திர சாட்டர்ஜி – இந்தியா
 8. தாமஸ் ஹார்டி – இங்கிலாந்து
 9. எமிலி சோலா – பிரான்ஸ்
 10. ரவீந்திரநாத் தாகூர் – இந்தியா

இதிலுள்ள ஒவ்வொரு படைப்பாளியைப் பற்றியுமே தனி நூல் அளவில் வாசிக்கவேண்டியவை உண்டு. இருப்பினும் ஒரு எளிய முதற்கட்ட வாசிப்பாக இப்புத்தகத்தினைக் கொள்ளலாம். 1960 களிலேயே உலகின் பல்வேறு பட்ட படைப்பாளிகளையும் வாசித்து அவர்களைப் பற்றி புத்தகமாக தமிழில் எழுதியிருப்பதில் நமக்கு பெரியதொரு மகிழ்ச்சி. வாசிக்கலாம்.

உதிரிப்பூக்கள் – மகேந்திரன்

இயக்குநர் மகேந்திரன் அவர்களின் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த உதிரிப்பூக்கள் திரைப்படத்தின் ஒட்டுமொத்த திரைக்கதை வடிவம். 2004 ஆம் ஆண்டு மகேந்திரன் அவர்களாலேயே எழுதப்பெற்றது. அவரே நூலின் தொடக்கத்தில் கூறியது போல இந்தப்புத்தகத்தினை அத்திரைப்படத்தைப் பார்த்துப் பார்த்து எழுதியிருக்கிறார். அதனால் படத்தின் ஒவ்வொரு காட்சியும் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த புத்தகமும் உரையாடல் வடிவிலேயே உள்ளது. இடையிடையில் கதைசொல்லியாக வெளியில் வந்து காட்சியினை விளக்குகிறார் மகேந்திரன்.

இத்திரைப்படம், புதுமைப்பித்தனின் சிற்றன்னை குறுநாவலினைத் தழுவி எடுக்கப்பட்டது. இத்திரைப்படம் அது வெளிவந்த காலத்தில் மிகப்பெரிய பாராட்டுதல்களைப் பெற்றதாக இருந்திருக்கிறது. அப்பொழுது வெளிவந்த பாராட்டுச் செய்திகளை புத்தகத்தின் இறுதிப்பகுதியில் தொகுத்திருக்கிறார்கள். இயக்குநரே இப்புத்தகத்தினை எழுதியிருப்பதால், நாம் கவனிக்காமல் விட்ட காட்சிகளையும், அதன் உள்ளர்த்தங்களையும் இப்புத்தகத்தினை வாசிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

வாசிக்கலாம்.

காரல் மார்க்ஸ் – பட்டத்தி மைந்தன்

2008 ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகம். கார்ல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாக விவரித்துள்ளார்கள். ராமையா பதிப்பகம் வெளியீடு.

1818 ஆம் ஆண்டில் ஜெர்மனியிலுள்ள ட்ரியர் என்னுமிடத்தில் பிறந்தார் மார்க்ஸ். யூத இனத்தைச் சேர்ந்தவர். மார்க்ஸின் தந்தை ஒரு வக்கீல். யூதர்கள் ஜெர்மனியில் அடக்குமுறைகளுக்கு ஆளாகி வந்ததால் யூத மதத்திலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறிக்கொண்டார். அவர் மார்க்ஸ் படிக்கும் காலத்தில் தொடர்ச்சியாக கடிதம் எழுதும் வழக்கம் வைத்திருந்தார். மார்க்ஸ் தன் குடும்ப நண்பரின் மகளாக ஜென்னியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜென்னி மார்க்ஸைவிட 4 வயது மூத்தவர்.

படிக்கும் காலத்தில் தீவிர இடதுசாரி சிந்தனைகளில் ஈடுபட்டார் மார்க்ஸ். மூட நம்பிக்கைகளையும், மத சடங்குகளையும் நிராகரித்து விவாதிப்பது போன்றவற்றில் ஆர்வம் கொண்டிருந்தார். தன்னுடைய 23 ஆம் வயதில் டாக்டர் பட்டம் பெற்ற மார்க்ஸ் கல்லூரியில் பேராசியர் பணிக்கு விண்ணப்பிந்த்திருந்தார். அரசாங்க ஆதரவு கொண்டவர்களுக்கே அப்பதவிகள் கிடைக்கும் என்பதால், அவருக்கு அவ்வேலை கிடைக்கவில்லை. அதனால் ‘ரைன்லாந்து கெஜட்’ என்ற பத்திரிக்கையில் வேலைக்கு சேர்ந்தார். அரசாங்க கட்டுப்பாடுகளினால் அப்பத்திரிக்கையில் இருந்து வெளிவந்தார். பின்னர் நண்பர்களோடு இணைந்து பாரிஸிலிருந்து ‘ஜெர்மன் பிரெஞ்சு மலர்’ என்ற பத்திரிக்கையை நடத்தினார். அதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவே அங்கிருந்து பிரஸ்ஸல்ஸ் சென்றார். எங்கல்ஸ் பிரெடரிக்கின் நட்பு பிரஸ்ஸில்ஸிலேயே அதிகமானது. அதிலிருந்து மார்க்ஸின் கடைசிக்காலம் வரை அவருக்கும் எங்கெல்ஸுக்குமான நட்பு தொடர்ந்தது.

குறிப்பாக மார்க்ஸ் வாழ்வின் பொருளாதார சிக்கல்களைச் சந்தித்தபோதெல்லாம் உதவியவர் எங்கெல்ஸ். மார்க்ஸே தான் இருப்பதற்கும் தன்னுடைய மூலதனம் நூல் வெளிவந்ததற்கும் முற்றாக எங்கல்ஸே காரணம் என்று கூறுகிறார். மார்க்ஸின் மூலதனம் இரண்டாம் மூன்றாம் பதிப்புகளை வெளிக்கொண்டு வந்தவர் எங்கல்ஸே. தன்னுடைய மூலதனம் புத்தகத்தினை எழுதுவதற்காக மட்டும் 1500க்கும் மேற்பட்ட புத்தகங்களை வாசித்து தெளிவு பெற்றிருக்கிறார் மார்க்ஸ்.

1847 ல் லண்டன் மாநாட்டிற்குப்பிறகு அவரும் எங்கல்ஸும் எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கையே இன்றும் உலகமெங்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் மையமாக இருக்கிறது. தன் வாழ்வில் மிகவும் ஏழ்மை நிலைக்குச் சென்றிருக்கிறார் மார்க்ஸ். ஆனால் அனைத்து சூழ்நிலைகளிலும் அவர் மனைவி அவருடன் துணையாக இருந்திருக்கிறார். அவர்களின் குழந்தைகளுக்கு பால் பவுடர் வாங்கக்கூட இயலாத நிலையிலெல்லாம் வாழ்ந்து வந்திருக்கிறார் மார்க்ஸ். தன்னுடைய மூன்று குழந்தைகளை நோய்களுக்கு பலிகொடுத்தவர், ஏழ்மையின் பொருட்டு. 1881 ஆம் ஆண்டு ஜென்னி இறந்து போனார். அவர் இறந்த 18 மாதங்களுக்குள்ளாகவே மார்க்ஸும் 1883 ஜனவரி 14 அன்று இறந்து போனார். அவருக்குப் பின் 12 ஆண்டுகள் வாழ்ந்த எங்கல்ஸ் மார்க்ஸ் கைப்பிரதியாக விட்டுச் சென்றிருந்த மூலதனம் இரண்டாம் மூன்றாம் பாகங்களை வெளியிட்டார்.

மார்க்ஸ் பற்றிய வாசிப்பின் தொடக்கமாக இப்புத்தகத்தை வாசிக்கலாம்.

சுந்தரராமசாமியின் கவிதைக் கலை – ராஜமார்த்தாண்டன்

ராஜாமார்த்தாண்டன் அவர்களால் 2007 ஆம் ஆண்டில் எழுதப்பெற்றது. சுந்தரராமசாமி அவர்கள் எழுதிய கவிதைகள் மீதான விமர்சனமே இப்புத்தகம். பெரும்பாலும் கவிதைகள் பற்றிய விளக்கங்கள். ஏற்கனவே சுந்தரராமசாமியின் கவிதைகளை வாசித்தவர்கள் இப்புத்தகத்தினை வாசிக்கும்பொழுது அவர்கள் தொடாத சில பார்வைகைளை அறிந்து கொள்ள உதவும். வாசிக்கலாம்.

Design of Web APIs – Arnaud Lauret

Written by Arnaud Lauret. This book is for API designers, who involves in designing the API as well for those who develop APIs. It mostly talks about the best practices of designing APIs including best naming practices, documentation practices, security approaches. As I have already involved in few API developments already after reading this book I hope, I can write/develop even better APIs.

Here are the few points this books is covering.

 • API should be designed in the consumers view
 • Below questions should be answered before designing every end point
  1. Who are the users?
  2. What they need to do?
  3. How they will do?
  4. What are all the inputs? How the user will get the inputs?
  5. What are all the outputs? How the user will use the outputs?
 • Avoid code influence, architecture influence & organization influences on API designs
 • Implement caching if possible
 • To document follow standard approaches like OpenAPI
 • Do not use short names
 • Do not make the input or output more than 20 fields and 3 levels
 • If possible give aggregated results instead of expecting user to call the API again
 • For names maintain the consistency not like createdDate, dateOpened etc.,
 • For paths maintain the consistency not like /requests,/assets etc.,
 • For response maintain same consistency in the structure. For list response if array of objects is replied then maintain that everywhere do not change to object of arrays.
 • For actions maintain the consistency not like get, read
 • In the response put most important on top and least on the bottom. Same goes for error response.
 • Do not expose unnecessary data. If needed encrypt the data.
 • To avoid URL logging switch to POST instead of GET if needed.
 • Do not make breaking changes. Adding is better than removing and replacing input/output properties. Same goes for error response.
 • Do versioning in case of changes.
 • Follow either one of the six approaches.
  1. Domain
  2. Path
  3. Query
  4. Header
  5. Content Negotiation
  6. User configuration
 • Design with extensibility, (i.e) instead of boolean it is better to have String as status. It can be easily extended. Same List of errors is better than few errors.
 • Design in such a way to make less calls
 • Provide all necessary info in single call. After transfer request give back the balance.
 • Compress the data
 • Make connection persistent.
 • Make use of ETTag and Cache Control headers
 • Make HEAD calls to avoid latency wherever possible
 • Think and implement in the context of the business.
 • Documentation is crucial.
 • Make use of OpenAPI specification for documentation. So many tools are there to generate document from OpenAPI file.
 • Guidelines and documentation is important for consistent API
 • Make sure the guideline rules are followed and remove that rule.
 • Review and rewrite.

திருப்பம் – கேசவதேவ்


மலையாளத்தில் வெளிவந்த கேசவதேவின் ஒரு குறுநாவலையும், மாதவிக்குட்டியின் ஒரு சிறுகதையையும் தமிழில் சுரா அவர்கள் மொழி பெயர்த்து வெளியிட்டிருக்கிறார். அவ்விரண்டுமே இப்புத்தகம்.

முதல் குறுநாவல் திருப்பம், அப்போதைய சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தினை ஒட்டிய நாவல். கேரள ஈழவ சாதிகளுக்குள் நிகழும் ஏற்றத்தாழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது. மாலேத்து சாணார் வீட்டில் வேலை செய்கிறார் கண்டப்பன். அவர்கள் இடத்தில்தான் இவன் வீடு கட்டிக்குடியிருந்தான். அவர்கள் தரும் கூலியோடு அவர்கள் தரும் எச்சில் சாப்பாடும் அவர்களுக்கு கிடைக்கும். அவரோடு அவர் மகன் கொச்சப்பனும் செல்வதுண்டு. மாலேத்து சாணார் வீட்டில் கொச்சப்பன் வயதையொத்த வேலாயுதனும் உண்டு. அவன் தன் எச்சில் சாப்பாட்டை கொச்சப்பனிடம் தருவது, கல்லெடுத்து அடிப்பது போன்றவற்றை செய்பவன். ஒருமுறை பெரிய குழவிக்கல்லை எடுத்து கொச்சப்பன் நெஞ்சில் போட்டுவிட்டான். கொச்சப்பன் பேச்சு மூச்சில்லாமல் கிடந்துவிட்டான். அதனைக் கண்ட கண்டப்பன் கதறுகிறார். அதற்கு வேலாயுதனின் தாய் செத்துப்போனா புதைச்சிட்டு வேலையப்பாரு கண்டப்பா, பொலம்பாம என்கிறாள். அத்தகைய ஏற்றத்தாழ்வு இருக்கும் காலம். தன் மகனைத் தூக்கிக்கொண்டு வந்து விடுகிறார் கண்டப்பன். அதன் பின்னர் தன் மகனை அங்கு கூட்டிச்செல்வதில்லை.

கொச்சப்பன் தன் தாய் செய்யும், கயிறு திரிக்கும் தொழிலில் ஈடுபடுகிறான். அதில் மேலும் மேலும் முன்னேறுகிறான். காலங்கள் உருள மாலேத்து குடும்பம், ஏழ்மையாகிறது. கொச்சப்பன் மிகவும் வசதியாக ஆகிவிடுகிறான். ஊரில் அவனுக்கென்று செல்வாக்கு கூடுகிறது. அவனுக்கு ரவீந்திரன் என்று ஒரு பையன். வேலாயுதனுக்கு ஒரு பையனும், இரு பெண்களும். வேலாயுதனின் வீட்டிற்கு அருகிலேயே பெரிய மாளிகை கட்டி குடியேறுகிறார்கள் கொச்சப்பன் குடும்பம். ரவீந்திரனுக்கு வேலாயுதனின் மகளைத் திருமணம் செய்துகொள்ள விருப்பம். தந்தையிடம் சொல்கிறான். தந்தைக்கும் அது தனக்கு கவுரவமாக இருக்கும் என நினைக்கிறார். தன் கணக்குப் பிள்ளை சங்கரன் பிள்ளை மூலமாக கேட்டுப்பார்க்கிறார். வேலாயுதன் சீ என உதறித்தள்ளுகிறார். அதன் பின்னர் வேலாயுதனின் தங்கை மகளையே ரவீந்திரனுக்கும் மணமுடிக்கிறார்கள். அத்திருமணத்திற்கு பின்னர் சில காலம் கழித்து எல்லா குடும்பமும் இணைந்து விடுகிறார்கள். எளிய கதை. வாசிக்கலாம்.

இரண்டாவது கதை, இறுதி விருந்தாளி. அனுசியா தேவி ஒரு எழுத்தாளர். ஒருநாள் தன்னுடைய வீட்டில் கொலை செய்யப்பட்டுக்கிடக்கிறார். அதனை விசாரிக்க வரும் போலீஸ் ராமச்சந்திரன் ஒவ்வொருவராக விசாரிக்கிறார். அவர்கள் ஒவ்வொருவர் மூலமாக அனுசியா தேவியின் வெவ்வேறு பக்கங்கள் வெளிவருகின்றன. அவளினை சிறு வயதில் கற்பழிக்கும் ஒருவன், அவளை திருமணம் செய்த மனைவியை இழந்த ஒருவர், அவரின் மகன் இன்னும் பலர். வாசிக்கலாம்.