| |

The Boss Baby – குழந்தை முதலாளி

2017 ஆம் ஆண்டு வெளிவந்த அனிமேஷன் திரைப்படம். 2010 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளிவந்த The Boss Baby என்ற புத்தகத்தினை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

கதைச்சுருக்கம் இதுதான்.

கதை எதிர்காலத்தில் நடைபெறுகிறது. டிம் தன்னுடைய குழந்தைக்கு தன்னுடைய சிறு வயதுக்கதையைக் கூறுவதாகப் படம் தொடங்குகிறது. டிம் தன்னுடைய பெற்றோருக்கு ஒரே பையன். செல்லமாகவும் புத்திசாலித்தனமாகவும் வளர்ந்து வருகிறான். டிம்மின் பெற்றோர் பப்பிஸ் கார்ப் என்ற‌ நாய்க்குட்டிகளை விற்பனை செய்யும் கம்பெனியில் பணியாற்றுகின்றனர். பரபரப்பான வேலைக்கு மத்தியிலும் டிம்மிற்கான நேரத்தை அவனுடன் செலவிடுகின்றனர். இதற்கிடையில் தன் வீட்டிற்கு பிஸினஸ் சூட் உடையணிந்து வரும் ஒரு குழந்தையை மாடியிலிந்து பார்க்கிறான் டிம். அக்குழந்தை விசித்திரமாக இருப்பதைக்கண்டு விரைவாக தன்னுடைய அறையில் இருந்து கீழே வருகிறான். அதற்குள்ளாக அக்குழந்தையை அவன் பெற்றோர் அவனை டிம்மின் தம்பி என அறிமுகம் செய்கின்றனர்.

மறுபுறம், பேபி கார்ப் என்ற கம்பெனி மக்களுக்கு குழந்தைகளை டெலிவரி செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறது. குழந்தை வேண்டுபவர்களுக்கு குழந்தை அனுப்பி வைக்கப்படும். அப்படி அனுப்பப்பட்ட ஒரு குழந்தைதான் டிம் வீட்டிற்கு வந்த குழந்தை. வந்த வெகு சில நாட்களில், டிம்மின் பெற்றோர் அக்குழந்தையோடே அதிக நேரம் செலவிடுவதாக டிம் என்னுகிறான். தன்னுடைய தூக்க‌ நேரத்துக் கதைகளையும், பாடலையும் கூட பெற்றோர் தனக்காக தற்போது செய்வதில்லை என எண்ணுகிறான் டிம்.

அதனால் அக்குழந்தையை அதிகம் கவனிக்கும் டிம் வெகு விரைவிலேயே அக்குழந்தை சராசரிக்குழந்தை அல்ல அன்றும் அக்குழந்தையால் பெரியவர்களைப்போல் பேசவும் சிந்திக்கவும் முடியும் என்பதை அறிந்து கொள்கிறான். அக்குழந்தையிடமும் அதனைக்கூறி, அது யாரெனக் கேட்கின்றான். அக்குழந்தை தன்னை பாஸ் எனக் கூறிவிட்டு தன்னுடைய பணியில் எந்த தொந்தரவும் செய்யாமல் இருக்குமாறு டிம்மிடம் கூறுகிறது. அது மட்டுமல்லாமல் அக்குழந்தையோடு அக்கம் பக்கத்திலிருக்கும் வீடுகளிலிருக்கும் குழந்தைகள் ஒன்று சேர்ந்துகொண்டு அவ்வப்போது திட்டங்கள் தீட்டுவதையும், பெரிய‌வர்கள் இருக்கும்பொழுது குழந்தைகளைப்போல நடிப்பதையும் டிம் காண்கிறான். அவைகளும் சராசரிக் குழந்தைகள் அல்ல என்பதையும் அறிந்து கொள்கிறான்.

தன்னுடைய பெற்றோருக்கு இதனைத் தெரிவிக்க பல்வேறு வழிகளில் முயற்சிக்கிறான் டிம். ஆனால் அக்குழந்தைகளெல்லாம் ஒன்று சேர்ந்து டிம்மின் முயற்சியை முறியடித்துவிடுகின்றன. இதனை நம்ப மறுக்கும் டிம்மின் பெற்றோர், டிம்மின் குழந்தைக்கு எதிரான‌ செயல்பாடுகளால் அவனை தனியறையில் அடைத்துவிடுகின்றனர். அப்போது டிம்மிடம் பேசும் அக்குழந்தை தன்னைப்பற்றிய அனைத்து உண்மைகளையும் டிம்மிடம் கூறுகிறது. பெரியவர்களிடத்தில் குழந்தைகள் மீதான அன்பு குறைந்து நாய்கள் மீதான‌ பிரியம் அதிகரித்து விட்டதாகவும், இந்நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் அனைவரும் குழந்தைகளை விரும்பாமல் நாய்களையே விரும்ப நேரிடும் என்றும் கூறுகிறது. இந்நிலையில் நாய்களை விற்பனை செய்யும் பப்பீஸ் கார்ப் நிறுவனம் புதியதாக ஒரு நாய்க்குட்டியை அறிமுகம் செய்யவிருப்பதாகவும் அதனைப் பற்றிய தகவல்களை அறிந்து செல்வதற்காகவே தான் வந்திருப்பதாகவும் கூறுகிறது.

எப்பொழுதுமே குழந்தையாக இருப்பதற்கு ஒரு விஷேச‌ பானத்தினை அருந்திக்கொண்டிருப்பதாகக் கூறும் அக்குழந்தை, தான் பிறக்கும் பொழுதே பெரியவர்களுக்கான குணாதிசயங்களோடு பிறப்பதாகவும் கூறுகிறது. மேலும் அந்த பானத்தினை அருந்தாமல் விட்டுவிட்டால் தான் சாதாரணக் குழந்தையாகிவிடுவேனென்றும் கூறுகிறது. டிம்மின் பெற்றோர் பப்பீஸ் கார்ப்பில் வேலை செய்வதால் தனக்கு உதவும்படி டிம்மிட‌ம் கேட்கிறது. தன்னுடைய வேலையை முடித்துவிட்டால், தான் பேபி கார்ப் கம்பெனியில் பாஸ் ஆகிவிடுவேன் என்றும், மேலும் டிம் வீட்டிலுரிந்து சென்று விடுவதாகவும் கூறுகிறது. டிம் அதற்கு ஒப்புக்கொண்டு அப்புதிய‌ நாய்க்குட்டி பற்றிய தகவல்களைப் பெறுவதற்கு உதவுகிறான். இக்காலகட்டத்தில் இயல்பாகவே இருவரிடத்திலும் பாசம் ஏற்பட்டுவிடுகிறது. தான் வந்த வேலை முடிந்த பின்னர் பாஸ் குழந்தை திரும்பிச் சென்று விடுகிறது. ஆனால் இருவரும் மற்ற‌வரை நினைத்துக்கொண்டிருக்கின்றனர். இறுதியில் பாஸ் குழந்தைக்கு டிம் தன்னோடு வந்து இருக்கும்படி கடிதம் எழுதுகிறான். மீண்டும் குழந்தையாகி டிம்மிடம் வந்து சேருகிறது பாஸ் குழந்தை.

இப்படத்தினைப் பற்றிய என்னுடைய பார்வை அடுத்த பதிவில்.

Similar Posts

  • |

    புதிய இந்தியா

    16வது மக்களவைத்தேர்தல் சிறப்பாக முடிவடைந்திருக்கிறது. இந்த தேர்தலைப் பொறுத்தமட்டில் நாம் மிகப்பெரும் பெருமை கொள்ளத்தக்க செய்தி உலகின் எந்த ஒரு தேசமும் இத்தனை பெரிய ஜனநாயக வலிமை கொண்டிருக்கவில்லை என்பதுதான். என்னதான் ஜனநாயகம் என்று வெளிக்காட்டிக்கொண்டாலும் தன்னளவில் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ சர்வாதிகாரப்போக்குடையதாகவே இருந்திருக்கிறது, இருக்கிறது. நம்மில் பத்தில் ஒரு பங்கிற்கும் குறைவான நிலப்பரப்புள்ள தேசங்களிலும் சரி நம்மை சுற்றியுள்ள தேசங்களிலும் சரி ஜனநாயகம் சரிவர செயல்படுவதில்லை. உதாரணம் சிங்கப்பூர், உக்ரைன், பாகிஸ்தான், இலங்கை. உக்ரைனில் புதிய அரசு…

  • |

    The Core

    2003 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இயக்கம் Jon Amiel. நடிப்பு Aaron Eckhart, Hilary Swank மற்றும் பலர். சில நகரங்களில் நடைபெறும் சில‌ விசித்திர நிகழ்வுகளால் ஆச்சரியமடையும் Dr.Josh Keyes மற்றும் Dr.Serge Leveque இருவரும் பூமியின் காந்தப்புலத்தில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றமே இதற்கான காரணம் என அறிகிறார்கள். காந்தப்புல மாற்றத்திற்கான‌ காரணம் பூமியின் ஆழ் மையத்தில் உள்ள உலோக குழம்பு சுழல்வதை நிறுத்தியதே எனவும், அது பூமியின் நிலைத்தன்மையில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும்,…

  • அதென்ன நடப்பு கணக்கு பற்றாக்குறை?

    சமீபத்திய நாட்களில் ஊடகத்தின் உச்சத்தை தொட்ட செய்தி இதுதான். “அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி” இதற்கு நமது அரசு கூறும் காரணம்,நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும், அளவுக்கதிகமான தங்க இறக்குமதியும் என்று.அதென்ன நடப்பு கணக்கு பற்றாக்குறை(Current Account Deficit)? அது எப்படி இந்திய ரூபாயின் மதிப்பை நிர்ணயம் செய்கிறது? கீழே படியுங்கள், விளங்கும்.

  • |

    இந்திய வரலாறு ‍ – ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்

    ஆரியர்கள் வருகை முதலாக இந்தியாவின் முதல் காங்கிரஸ் அல்லாத அரசு கேரளத்தில் அமைந்தது வரையிலான இந்திய வரலாற்றை மார்க்சிய நோக்கில் விவரிக்கும் நூல். கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் முதலமைச்சரான ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் அவர்களால் எழுதப்பெற்றது. எழுதப்பெற்ற ஆண்டு 1977. கிட்டத்தட்ட 3500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் நுழையும் ஆரியர்கள் இங்கு வாழ்ந்து வரும் சிந்து சமவெளி மக்களை வென்று தங்கள் ஆட்சியைத் தொடங்குகிறார்கள். அக்காலக் கட்டத்திலேயே ரிக் வேதம் இயற்றப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. அதனைத்தொடர்ந்து மெளரியர்கள்,குப்தர்கள்,…

  • பண‌ம் அச்சடிப்பதை நிறுத்தினால் என்ன?

    இந்த பதிவைப் படிப்பதற்கு முன் இந்த பதிவைப் படித்திருத்தல் சிறந்தது. அதிக பணம் அச்சடித்தால் என்ன? அதிக பணம் அச்சடித்தால் பணத்தின் மதிப்பு சரியுமென்றால் பணம் அச்சடிப்பதை நிறுத்தினால் பண மதிப்பு உயரத்தானே வேண்டும்? கேள்வி சரிதான். என்ன நடக்கும்? பணத்தின் புழக்கம் குறைவதால் மக்களிடம் அதிக பணம் புழங்காது. ஆனால் பொருள்களின் உற்பத்தி, மனித வளம் போன்றவை அதிகரித்துக்கொண்டே வரும். இதனால் குறைவான பணம். அதிக பொருள் சந்தையில் நிலவும். பொருள்களின் விலை குறையும். அதோடு குறைவான…

  • | |

    தற்கொலைக் குறுங்கதைகள் – அராத்து

    அராத்து அவ்வப்போது ஃபேஸ்புக்கில் எழுதிய குறுங்கதைகளை உயிர்மை பதிப்பகம் நூலாக வெளியிட்டிருக்கிறார்கள். எதேச்சையாக கண்ணில் பட்ட நூல், இந்நூலின் வெளியீட்டு விழாவில் சாருவும், ஜெயமோகனும் கலந்துகொண்ட நினைவு. அதனால் இப்புத்தகத்தை வாசிக்கலாம் என நினைத்து எடுத்து வந்தேன். ஒட்டுமொத்த நாவலின் பெரும்பான்மை பேசுபொருள் உடலுறவு. காமம் அல்ல. இதற்கு பாலுறவுக் கதைகளாகவே வெளியிடப்படும் கதைகள் எவ்வளவோ பரவாயில்லை. அவர்கள் அவர்களுடைய கதைகளை உலகத்தர நாவல் என்றோ அல்லது தமிழின் முதல் ஃபோர்னோ நாவல் என்றோ இன்ன பிற…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.