ஆரோக்ய நிகேதனம் – தாராசங்கர் பந்த்யோபாத்யாய

1951 ஆம் ஆண்டில் தாராசங்கர் பந்த்யோபாத்யாய அவர்களால் வங்க மொழியில் எழுதப்பெற்ற நாவல். பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலை தமிழில் த.நா.குமாரசாமி அவர்கள் 1972 ல் மொழிபெயர்த்துள்ளார். இந்திய அரசின் சாகித்திய அகாதெமி மற்றும் மேற்கு வங்க அரசின் ரபீந்திர புரஷ்கார் விருதுகளை வென்ற நாவல்.

இந்நாவல் ஜீவன் மாஷாய் என்னும் வைத்தியரின் நினைவோட்டத்தின் வாயிலாக சொல்லப்படுகிறது. மூன்று தலைமுறைகளாக ஆயுர்வேத சிகிச்சை செய்துவரும் ஜீவன் மாஷாயின் வாழ்வு மற்றும் ஆயுர்வேத மருத்துவம் ஆங்கில மருத்துவ‌த்தின் வருகையினால் எப்படி உருமாறுகிறது என்பதனை இயல்பாக விவரிக்கும் நாவல். ஜீவன் மாஷாய் 80 வயதையொட்டிய வயோதிகர். தன் தன் தந்தையிடம் தான் கற்ற வைத்தியத்தினையும் அறத்தையும் கொண்டு வைத்தியம் பார்க்கிறார். அவர் ஒரு நாடி வைத்திய நிபுணர். ஒருவருடைய நாடித்துடிப்பை வைத்து அவருக்கு வந்திருக்கக்கூடிய வியாதியின் தீவிரத்தை அறியக்கூடியவர். அந்நாடியின் வழியாகவே மரணம் நோய்வாய்ப்பட்ட ஒருவர் மரணத்தை அடைவாரா என்பதனை துல்லியமாக அறிவிக்கும் ஞானம் கொண்டவர். அதனால் அவ்வூரிலும் சுற்று வட்டாரத்திலும் உள்ள பலர் தங்களுடைய நோய்வாய்ப்பட்ட காலத்தில் ஜீவன் மாஷாய் தங்களுடைய நாடியினைப் பார்த்து தங்கள் மரணத்தை அறிவிக்க வேண்டும் எனப் பழக்கம் கொண்டுள்ளனர். ஜீவன் மாஷாய் வைத்தியத்திற்காக எவரிடம் கறாராக பணம் வாங்குவதில்லை. அவர்கள் தருவதை வாங்கிக்கொள்கிறார். இல்லை பிறகு தருகிறேன் என்றாலும் சரியென்கிறார். அவர் வசூலிக்க வேண்டிய கணக்குகளே பல நோட்டுகளில் இருக்கிறது. அவையெல்லாம் செல்லரிக்கும் அளவிற்கு பழையதாகிவிட்டன. அவர் அதையெல்லாம் பொருட்படுத்துவதே இல்லை. எவர் எப்பொழுது வந்து அழைத்தாலும் உடனே செல்கிறார், அது எந்நேரமாக இருப்பினும்.

அவ்வூருக்கு பிரத்யோத் என்னும் டாக்டர் வருகிறார். அவருக்கு மாஷாய் இப்படி நாடி பார்த்து மரணத்தை சொல்லி விடுவதில் உடன்பாடில்லை. அதனால் மாஷாய் மரணிப்பார் எனச் சொன்ன மதியின் தாயாரை தான் குணப்படுத்த சபதமேற்கிறார். பிரத்யோத்தும் நல்ல டாக்டரே. இதெல்லாம் மாஷாய்க்கு பொருட்டல்ல. அவ்வாறு மதியின் தாய் காப்பாற்றப்பட்டால் தான் உண்மையிலேயே மகிழ்வேன் என்கிறார் மாஷாய். தன் கணிப்பு பொய்யாகும் நாளையே உள்ளூர எதிர்பார்க்கிறார். ஒவ்வொரு முறை யாரையேனும் பார்க்க செல்லும் வழியிலோ அல்லது சென்று விட்டு திரும்பி வரும் வழியிலோ பலர் அழைத்து வைத்தியம் பார்க்கச் சொல்கின்றனர். கேட்பவர்க்கெல்லாம் வைத்தியம் பார்க்கிறார். தன்னிடத்தில் பணிபுரியும் சசி அவன் தனியாக சிலருக்கு ஆங்கில மருந்துகளைக் கொண்டு வைத்தியம் பார்க்கிறான். அதில் ஏதெனும் பிழை ஏற்படின் மாஷாயிடமே வந்து நிற்கிறான். அதற்கும் மாஷாய் மறுப்பேதும் சொல்லாமல் உடன் சென்று நோயாளிகளைப் பார்க்கிறார். சில சமயங்களில் சசி நன்றாகக் குடித்துவிட்டு தானே பெரிய வைத்தியனென்றும், மாஷாய்க்கு ஒன்றும் தெரியாது என்றெல்லாம் சொல்லித்திரிகிறான். மீண்டும் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் மாஷாயிடமே வருகிறான். மாஷாய் உதவுகிறார்.

மாஷாய் தன் வாழ்வில் சந்தித்த, சிகிச்சையளித்த பலரைப் பற்றியும் நினைத்துக் கொண்டே இருக்கிறார். தன்னிடம் மதிப்பு கொண்ட சில டாக்டர்கள், தான் மருத்துவம் பயில கல்லூரியில் சேர்ந்தது, அங்கு மஞ்சரிக்காக பூபி போஸுடன் போட்டியிட்டது, அதனாலேயே கல்லூரிப்படிப்பினை பாதியில் விட நேர்ந்தது என‌, தந்தையிடம் குலத்தொழில் கற்றது, ரங்க்லால் டாக்டரிடம் அலோபதியைக் கற்பத்ய் எனப் பலவற்றையும் நினைத்துக்கொண்டே இருக்கிறார்.

இதற்கிடையில் அவருடைய மனைவி ஆத்தர் பௌ அவரை எப்பொழுதும் திட்டிக்கொண்டே இருக்கிறாள். அவளுக்கு செல்வம் கொழித்த இந்த ஆரோக்கிய நிகேதனம் இன்று இப்படி ஆகிவிட்டதில் நீண்ட வருத்தம். தன்னால் மஞ்சரியினைக் கல்யாணம் செய்ய முடியாத நிலையில், அதனி நிரப்பவே தன்னைத் திருமணம் செய்ததை அறிகிறாள். அதனால் தன்னுடைய ஆற்றாமையப் புலம்பிக்கொண்டே இருக்கிறாள். மாஷாயின் மகனும் நோய்வாய்ப்பட்டு இறந்துவிடுகின்றான். அதனையுமே அவனின் நாடியைப்பார்த்தே அவன் இறந்துவிடுவான் எனறு மாஷாய் கூறுகிறார். அதுவும் மாஷாயை அவள் திட்டிக்கொண்டே இருப்பதற்கு ஓர் காரணம். ஆனால் இவையெல்லாம் வெளி ஆட்கள் வராத வரை மட்டுமே. வெளியாட்கள் வந்தால் அவள் நடந்துகொள்வதே வேறு. கண்ணியமாக.

சில நோயாளிகளை இருவரும் பார்க்கும் நாட்களின், பல்வேறுபட்ட நிகழ்வுகள் வழியாக பிரத்யோத் டாக்டருக்கு மாஷாய் மீது மதிப்பு உண்டாகிறது. நாவலின் இறுதியில் தன்னுடைய நாடியினைத் தானே பார்த்து மரணிக்கிறார் மாஷாய்.

இதனை வாசிக்கும் இந்த 2020 வருடத்தில் இந்த நாவலுக்கான வயது 68 வருடங்கள். 68 வருடங்களுக்கு முந்தைய காலகட்டத்தின் குரல் இந்நாவல். ஜீவன் மாஷாய் இறக்கவில்லை, ஆரோக்ய நிகேதன் இறக்கிறது. ஆயுர்வேதம் இறக்கிறது. அந்த இடத்தை அலோபதி எடுத்துக்கொள்கிறது. அவருடைய மகனும் இறந்துவிட்டான். அவரிடத்தில் வேலைபார்ப்பவர் எவரும் அத்தகைய ஞானத்தைப் பெறவில்லை. அந்தப் பரிமாற்றாம் ஒட்டு மொத்த நாவலிலும் ஆரம்பம் முதல் இறுதிவரை மிக அழகாக விவர்க்கப்பட்டுள்ளது. வெளிப்படையாக எங்கும் கூறப்படவேயில்லை. ஆனால் வாசிக்கும் பொழுது நம்மால் அந்த மாற்றத்தை துல்லியமாக உணரமுடியும். ஜீவன் மாஷாய் விவரிக்கும் ஒவ்வொரு நபர்களும் மிக விரிவாகவே விவரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு நாவலில் முக்கியக் கதாபாத்திரங்களே அதிகம் விவரிக்கப்பட்டிருக்கும், ஏனைய கதாபாத்திரங்கள் செல்லும் வழியில் சொல்லப்பட்டிருக்கும். அப்படித்தான் பெரும்பாலான நாவல்களில் நாம் வாசித்திருப்போம். ஆனால் இந்நாவலில் ஒவ்வொரு கதாபாத்திரமும் அக்கதாபாத்திரத்தின் பின்னனியும் இயல்பாக ஆழமாக விவரிக்கப்பட்டிருக்கும். இவையெல்லாம் இந்நாவலுக்கான எடையை கூட்டுகின்றன‌.

மிகச்சிறந்த நாவல். கண்டிப்பாக வாசிக்க வேண்டிய ஒன்று.

தமிழ்ப்பதிப்பில் உள்ள எழுத்துப்பிழைகளை அடுத்த பதிப்பில் சரிசெய்தால் இன்னும் சிறப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.