இன்றைய காந்தி ‍- ஜெயமோகன்

இன்றைய காந்தி – ஜெயமோகன்

மகாத்மா காந்தி அவர்களைப் பற்றி உண்மையாக அறியத் தொடங்க விரும்புபவர்களுக்கான சிறந்த தொடக்க நூல். ஜெயமோகன் அவர்களால் அவரது இணைய தளத்தில் தொடர்ச்சியாக வெளிவந்த கேள்வி பதில் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.

அஹிம்சைப் போராட்டம் எவ்வளவு தூரம் சாத்தியமானது? இந்திய நிலப்பகுதி அல்லாமல் பிற தேசங்களுக்கு இது சாத்தியமா? காந்தியை ஏன் மகாத்மா என அழைக்க வேண்டும்? காந்தி இந்திய சுதந்திரத்தினை தனது அஹிம்சைப்போராட்டத்தினால் மேலும் தாமதிப்படுத்தினார். இல்லையேல் இன்னும் முன்னதாகவே நம‌க்கு சுதந்திரம் கிடைத்திருக்கும் என்ற கூற்றுக்கள் எந்த அளவுக்கு உண்மையானவை? காந்திக்கும் அம்பேத்கருக்குமான உறவு எப்படி இருந்தது? காந்தி உயர்சாதி மக்கள் ஆதரவு நிலையில் இருந்து கொண்டு, தலித் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை என்பது உண்மையா? அவருடைய ஒழுக்கம், உடல்நலன் சார்ந்த கோணங்கள் எத்தகையவை போன்ற ஆரம்ப நிலைக் கேள்விகளுக்கு இந்நூலில் விடை கிடைக்கும்.

பெரும்பாலும், இந்த நூல் ஜெயமோகனின் பார்வையிலேயே உள்ளதென்பதனால் ஆதார அல்லது மூலக்கட்டுரைகள் இந்நூலில் இணைக்கப்படவில்லை. இதனை ஒரு தொடக்க நிலை வாசிப்பாகக் கொண்டு ஒரு வாசகன் மேலும் முன்னகர்ந்து செல்லலாம். ஏனெனில் இதிலுள்ள ஒவ்வொரு விவாதத் தலைப்புக்காக மட்டும் நீண்ட வாசிப்பு தேவைப்படும். ஆனால் ஒட்டுமொத்தமாக இந்நூலை வாசிக்கும்பொழுது ஒரு வடிவம் கிடைக்கும். அதனைக்கொண்டு மேலும் முன்னகரலாம்.

காந்திக்கு ஏன் மகாத்மா ஆனார்? காந்தி தன்னுடைய சொல்லும் செயலும் ஒன்றாக அமைந்தவர். எதை தான் மற்றவர்களுக்கும் கூறினாரோ அதனை தன் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தவர். இன்றுவரை காந்தியின் அளவிற்கு இந்தியாவின் கடைக்கோடிவரை பயணம் செய்த தலைவர்கள் இல்லை, இத்தனை வசதிகள் இருந்தும். ஆனால் காந்தி இந்தியாவின் மேற்கிற்கும்,கிழக்கிற்கும்,வடக்கிற்கும்,தெற்கிற்குமாக ஆயிரக்கணக்கான பயணங்களை மேற்கொண்டிருக்கிறார். அதனால் அவருக்கு அன்றிருந்த எவரை விடவும் இந்தியர்களைப் பற்றியும் அவர்களின் வாழ்க்கையினைப் பற்றியும் அதிகம் தெரிந்திருந்தது. அவர் தன்னுடைய ஒவ்வொரு போராட்ட வழிமுறைகளையும் அப்பயணங்களின் வழியாகவே கண்டடைந்தார். அதனை ஒரு சிறு அளவில் செயல்படுத்தி அதன் விளைவுகளைப் பரிசீலனை செய்து அதனை இன்னும் பெரிய அளவில் விரிவுபடுத்தியிருக்கிறார்.

எப்பொழுதும் அவர் வன்முறைக்கு எதிரானவரே. விவாதிப்பதற்கான வாய்ப்புகளை எப்பொழுதும் திறந்து வைத்திருந்தார். எப்பொழுதெல்லாம் அவருடைய போராட்டங்கள் வன்முறையை நோக்கி நகருகிறதோ அப்பொழுதெல்லாம் அப்போராட்டங்களை நிறுத்திக்கொண்டார். இது போராடுபவர்களுக்கு தெளிவான அதே சமயம் உறுதியான ஒன்றைச் சொல்லியது. இங்கே வன்முறைக்கு இடமில்லை என்பதே அது. காந்தியின் காங்கிரஸைப்போல வெகுஜன மக்களை அரசியல்படுத்திய ஒரு இயக்கம் இன்றுவரை இல்லை. அத்தோடு ஒரு போராட்டத்திலேயே த‌ன்னுடைய உரிமைகள் முற்றாக அடையப்பெற்றாக வேண்டும் என அவர் முயன்றதே இல்லை. ஏனெனில் அதன் நடைமுறைச் சிக்கல்களை அவர் நன்றாகவே அறிவார். ஒவ்வொரு போராட்டத்திலும் மாற்றுத்தரப்பினரோடு விவாதித்து குறிப்பிடத்தக்க உரிமைகளைப் பெற வேண்டியது, பின்னர் அப்போராட்டத்தைக் கைவிடுவது, கிடைத்த உரிமைகளை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்ப்பது, அவர்களுக்கான விழிப்புணர்வை உருவாக்குவது. மீண்டும் அடுத்த போராட்டத்தை துவங்குவது. இதுவே காந்திய வழி.

இன்றைய ஆப்கானிஸ்தான், சிரியா போன்ற நாடுகளின் அரசியல் நிகழ்வுகளை ஒப்பிடும்பொழுது காந்தி எத்தனை பெரிய தீர்க்கதரிசியாக‌ இருந்திருக்கிறார் என்பது புரியும். ஆங்கிலேயர்களை விரட்டியடிப்பது மட்டுமேயல்ல நமது நோக்கம், வெகுஜன மக்களினை அரசியல்படுத்துவது, அவர்களை அரசில் பங்குகொள்ளச் செய்வது, ஜனநாயகத்தினை எல்லாத் தளத்திலும் உருவாக்குவது போன்றவைகளையே காந்தி செயல்படுத்தினார். சுதந்திர இந்தியாவின் முதல் தலைமுறை அரசியலார்கள் வெவ்வேறு கருத்துக்கள் கொண்டவர்களாக இருந்தாலும், அவர்கள் அனைவரும் நேர்மையானவர்கள் என்பதில் மாற்றுக்கருத்து எவருக்கும் இல்லை. அவர்களின் மீது காந்தியின் தாக்கம் அபரிதமானது.
காந்தியினை எதிர்க்கும் கருத்து கொண்டவர்கள் காந்தி அளவிற்கு தங்களை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்ற
அதனைப்போலவே மாற்றுக்கருத்து கொண்டவர்களாக இருப்பினும், அவர்களின் தாக்கம் காந்தியிலும் உண்டு. உதாரணமாக சாதி பற்றிய காந்தியின் கண்ணோட்டத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியவர் என அம்பேத்கரைக் குறிப்பிடலாம்.

வன்முறையின் மூலம் அதிகாரத்தினைக் கைப்பற்றும் ஒரு இயக்கம் வெகுவிரைவிலேயே தான் எதை வீழ்த்தினோமோ அதைப்போலவே ஆகிவிடுகிறார்கள். தாம் அடைந்ததைபோலவே இன்னொரு இயக்கம் வன்முறை மூலம் தன்னை வீழ்த்தக்கூடும் என அஞ்சி தாங்கள் எதை எதிர்த்து வந்தோமோ அதைவிட மோசமாக ஆகிறார்கள். இது பல்லாண்டுகளுக்கு தொடரும் பட்சத்தில் அத்தேசத்தின் சாமானியனுக்கான உரிமைகளுக்காகவும், அடிப்படை வசதிகளுக்குமான ஆக்கபூர்வமான‌ செயல்பாடுகள் பெரும்பாலும் இல்லாமலாகிறது. வன்முறை நிகழும் பல்வேறு உலக தேசங்களின் நிலை இதுவே.

இத்தகைய நிலையில், இந்தியாவினை எண்ணிப்பாருங்கள். சுதந்திர இந்தியாவில் அதுபோன்ற உள்நாட்டுப்போர்களே இல்லை. அந்த அடிப்படை அறம், ஜனநாயகப் பண்பே இந்த தேசத்திற்கு காந்தி அளித்த கொடை . அதற்காக காந்தி தன் கட்சிக்குள்ளாக சந்தித்த எதிர்ப்புகள் எத்தகையவை என்பதனை காந்தி எழுதிய கடிதங்களை வாசிக்கும் பொழுது அறிய முடிகிறது.

காந்தியினை இந்துக்கள் மதச்சார்பற்ற தேசமாக ஆக்கி இந்துக்களுக்கு அநீதி இழைத்துவிட்டார் எனப்பழிக்கிறார்கள். முஸ்லிம்கள் காந்தி இந்துக்கள் சார்பாகவே செயல்பட்டார் எனப் பழிக்கிறார்கள். தலித்துகள், தங்களுக்கு கிடைக்க வேண்டியிருந்த இரட்டை வாக்குரிமை போன்றவற்றை தடுத்தது போன்றவற்றின் மூலம் உயர்சாதியினருக்கு ஆதரவாளராக செயல்பட்டார் எனப் பழிக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் அவர்களுக்கு எதிராக மக்களை போராட்டத்துக்கு இட்டுச்சென்றார் எனப் பழிக்கிறார்கள். அப்படியென்றால் காந்தி யாருக்காகத்தான் போராடினார்? மிக எளிமையான பதில் ஒவ்வொருவரும் தங்களுடைய தவறுகளுக்காகவும், அறமற்ற செயல்களுக்காக‌வும் மற்றவரைக் கைகாட்டுவதற்கே முயன்றனர். அதன் எளிய இலக்கு காந்தி.

நாம் முன்னேற மேம்பட இன்னும் ஆயிரம் வழிகள் உள்ளன என்பதனை மறுப்பதற்கில்லை. ஆனால்
நாம் இந்த 75 ஆண்டுகளில் நாம் அடைந்த வளர்ச்சி அளப்பரியது. நம் தேசத்தின் எவரையும் நம்மால் விமர்சிக்க முடியும், கேள்வி கேட்க முடியும். அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பினை வழங்கிய தேசத்தின் மீதே நின்று கொண்டு அதன் மீது எந்தவிதக் கூச்சமுமில்லாமல் காறி உமிழ்கிறோம். ஒரு தனிநபரை அல்லது இயக்கத்தை விமர்சிக்க தேசத்தை இழிவு செய்கிறோம். நமக்காக போராடிய‌வர்களை இழிவு செய்கிறோம். அதுவே வருத்தமடைய வைக்கிறது. ஆனால் அதுவும் காந்தி பெற்றுத்தந்த சுதந்திரத்தாலே என அவர்கள் அறிவார்களா என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.