ramachandraguha

நவீன இந்தியாவின் சிற்பிகள் – ராமச்சந்திர குஹா

நவீன இந்தியாவை உருவாக்கிய சிற்பிகள் இவர்கள் என பத்தொன்பது பேரைக் குறிப்பிட்டு அதற்கான காரணங்களாக அவர்களுடைய செயல்பாடுகள் மற்றும் அவர்கள் பல்வேறு சமயங்களில் ஆற்றிய உரைகள், எழுதிய கடிதங்கள் போன்றவற்றை ஆதாரங்களினோடு தொகுத்துள்ளார் ராமச்சந்திர குஹா. அதுவே இப்புத்தகம்.

அந்த பத்தொன்பது பேர் இவர்களே

மகாத்மா காந்தி
ஜவகர்லால் நேரு
பி.ஆர்.அம்பேத்கர்
ராம்மோகன் ராய்
ரவீந்திரநாத் தாகூர்
பாலகங்காதர திலகர்
ஈ.வே.ராமசாமி
முகம்மது அலி ஜின்னா
சி.ராஜகோபாலச்சாரி
ஜெயப்பிரகாஷ் நாராயணன்
கோபால கிருஷ்ண கோகலே
சையது அகமது கான்
ஜோதிராவ் ஃபுலே
தாராபாய் ஷிண்டே
கமலாதேவி சட்டோபாத்யாய்
எம்.எஸ்.கோல்வல்கர்
ராம் மனோகர் லோகியா
வெரியர் எல்வின்
ஹமீத் தல்வாய்

இப்புத்தகத்தின் ஆரம்பத்திலேயே குஹா “இப்புத்தகம் ஓர் அரசாங்கத்தின் இட ஒதுக்கீடு முறைபோல அனைத்து மாநிலங்களுக்கும் சீரான முக்கியத்துவம் அளிக்கும் நோக்கில் தொகுக்கப்படவில்லை. மாறாக கடந்த கால நிகழ்வுகளின் அடிப்படையிலும், வரலாற்று விளைவுகளின் அடிப்படையிலுமே சிற்பிகள் பத்தொன்பது பேரும் தொகுக்கப்பட்டிருக்கிறார்கள்” எனக் கூறிவிடுகிறார். புத்தகத்தின் ஆரம்ப நிலையில் இந்தப் புரிதல் அவசியமானது.

மற்றோர் சிறப்பம்சம், ஒவ்வொரு நபரைப் பற்றிய அத்தியாயங்களிலும் அவர்களுடைய உரைகளை சுருக்கி அல்லது அப்படியே தந்துள்ளார் குஹா. இதற்காக அவர் இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளிலுருமிருந்து தகவல்களையும், அவர்களுடைய‌ உரைகளையும், கடிதங்களையும் சேகரித்து ஒற்றை ஆவணமாக இப்புத்தகத்தினை தொகுத்துள்ளார். அத்தகைய முயற்சி அளப்பரிய போற்றுதலுக்குரியது.

அவ்வாறு தொகுத்ததன் பயன்கள் இரண்டு.
ஒன்று, ஒருவருடைய‌ காலத்திற்குப்பிறகு அவருடைய அனைத்து தகவல்களையும் ஒன்றாகத் திரட்டுவதால் அவருடைய ஒட்டுமொத்த தோற்றத்தை ஒருவாராக நாம் புரிந்து கொள்ளலாம்.

இரண்டாவது அவருடைய செயல்பாடுகள், உரைகள் போன்றவற்றை பிற்காலத்திய விளைவுகளோடு ஒப்பிட்டு அவருடைய‌ தொலைநோக்குப் பார்வை எத்தகையது, அவ்விளைவில் அவரின் பங்கு என்ன, அவரின் செயல்பாடுகள் எதிர்காலத்தினை நிர்ணயிக்கும் ஓர் காரணியாக இருந்ததா? இல்லையா? போன்றவற்றை அறியலாம். அதனை மிகச் சிறப்பாகச் செய்துள்ளார் குஹா. அதன் அடிப்படையிலேயே இந்த பத்தொன்பது பேரை அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.

பாகிஸ்தான்
1937 ல் அப்படி ஒன்றே பேச்சில் கூட‌ கிடையாது அல்லது முற்றிலும் புறந்தள்ளக்கூடியது என்று இருந்த ஒன்று பாகிஸ்தான் என்ற தனித்தேசம். 1941 லேயே முகமது அலி ஜின்னா பாகிஸ்தான் தனி நாடு கோரிக்கையை முன் மொழிகிறார். 1947 ல் பாகிஸ்தான் பிறந்துவிடுகிறது. வெறும் பத்தே ஆண்டுகளில் பாகிஸ்தான் என்ற வார்த்தையே இல்லாமலிருந்த ஓர் நிலை தனி நாடு என்ற நிலையை அடைந்துவிட்டது. அதுவே வரலாற்றின் பாடம், மிகப்பெரிய‌ விளைவுகள் மிகச்சாதரணமான ஓர் நிகழ்வினில் தொடங்கிவிடுகின்றன‌.

இதனைப் போன்ற ஏகப்பட்ட நிகழ்வுகள், விளைவுகள் என புத்தகம் முழுமையும் அடர்த்தியான தகவல்களால் நிரம்பியுள்ளது. இப்புத்தகத்திலிருந்து ஓர் வரலாற்று உண்மையை ஒருவர் எளிதில் உணர முடியும், இப்பத்தொன்பது பேரும் தனி நபர்களே, அவர்கள் மற்றவர்கள் போல மிகச்சாதாரணமான‌ வாழ்க்கை வாழவில்லை. ஒருவேளை அப்படி வாழ்ந்திருந்தால் இயல்பாக வரலாற்றில் இருந்து மறைந்திருப்பார்கள். ஆனால் அவர்களின் கொள்கை மற்றும் அவர்கள் எடுத்த நிலை, பின்னாளில் மக்களின் வாழ்க்கையினை நிர்ணயிக்கும் ஒன்றாக‌ மாறியிருக்கின்றது, அது தனி தேசமாக இருக்கலாம், அல்லது அரசியலமைப்பு சட்டமாக இருக்கலாம் அல்லது வேறொன்றாகவோ இருக்கலாம்.

க‌ண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம். இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு புத்தகத்தினோடு சேர்ந்து படித்தால் பல வரலாற்றுத் தகவல்களோடு பொருத்திப்பார்த்து எளிதாக உள்வாங்கிக் கொள்ளலாம்.

இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு பாகம் 2

India After Gandhi புத்தகத்தின் தமிழ்ப்பதிப்பின் இரண்டாம் பாகம். இப்புத்தகம் 1960 களிலிருந்து தொடங்குகிறது. 1964 ல் பிரதமர் நேருவின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், லால் பகதூர் சாஸ்திரி பிரதமரானது, அதனைத் தொடர்ந்து இந்திரா காந்தி பிரதமரானது, நேருவுக்கும் இந்திரா காந்திக்குமான முரண்பாடுகள், அதன் விளைவாக ஏற்பட்ட அவசரநிலைப் பிரகடனம், நிலையில்லாத ஆட்சிகள், மீண்டும் இந்திரா காந்தி, அவரது இளைய மகன் சஞ்சயின் அரசியல் பிரவேசம், அவருடைய சறுக்கல்கள் மற்றும் மரணம், பின்னர் ஏற்பட்ட கலவரங்கள், இந்திரா காந்தியின் தோல்விகள், அதனால் இந்திரா காந்தி படுகொலை, அரசியலையே விரும்பாத ராஜீவ் காந்தி அரசியலுக்கு வந்தது, அவருடைய பொருளாதாரத்திட்டங்கள், விடுதலைப்புலிகள் மீதான செயல்பாடுகள், ராஜீவ் காந்தியின் மரணம் என சுதந்திர இந்தியாவின் பெரும்பாலான அனைத்து நிகழ்வுகளையும் முழுக்க முழுக்க ஆதாரங்களோடு மிக விரிவாக எழுதியுள்ளார் குஹா.

நான் ஏற்கனவே கூறியதுபோல ராமச்சந்திர குஹாவின் எண்ணங்களும் கருத்துக்களும் அல்ல இப்புத்தகம், கடைசி சில அத்தியாயங்கள் தவிர‌. அக்காலகட்ட விமர்சகர்களாலும், இந்திய வெளிநாட்டு பத்திரிக்கையாளர்களாலும், எதிர்க்கட்சியினராலும் எழுதப்பெற்ற கட்டுரைகள்,கடிதங்கள், அரசு உத்தரவுகள் போன்றவற்றின் அடிப்படையிலேயே இப்புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. அவற்றையெல்லாம் இக்காலத்திலிருந்து நோக்குவதால் அவற்றின் விளைவுகளையும் அறிய முடியுமென்பதால் அவற்றை ஒழுங்குபடுத்தி விளைவுகளோடு பொறுத்தி தந்திருக்கிறார் குஹா.

இறுதி சில அத்தியாயங்களில் இந்தியா இன்னும் ஒற்றை தேசமாக நீடித்திருப்பதற்கான காரணங்கள், அதன் பொருளாதார முன்னேற்றத்தின் காரணம், நடைபெற்ற ஏதோ செயல்களால் மறுபக்கம் ஏற்பட்ட பலன்கள், இந்திய சினிமாவின் வளர்ச்சி, தேச ஒற்றுமையில் அவற்றின் பங்கு என சிலவற்றில் தன் கருத்தினைப் பட்டியலிட்டுள்ளார். சுதந்திர இந்திய வரலாற்றினை அறிந்து கொள்ள விரும்பும் ஒருவர் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்.

இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு பாகம் 1

ராமச்சந்திர குஹாவால் எழுதப்பட்டது. ஆங்கிலத்தில் எழுதப்பெற்ற நூல் ஆர்.பி.சாரதியால் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிறந்த மொழியாக்கம். புத்தகம் இரு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது.

சரி, ஏற்கனவே இந்திய வரலாற்றினைப்பற்றி ஏராளமான புத்தகங்கள் வெளிவந்துள்ளனவே, அவற்றில் இல்லாத அப்படி என்ன சிறப்பு இந்தப்புத்தகத்திற்கு?

இரண்டு முக்கியமான காரணங்கள்.

முதலாவது, இதுவரையான இந்திய வரலாற்று நூல்கள் இந்தியப் போராட்ட நிகழ்வுகளை அதிகமாக விவரித்து சுதந்திரத்தோடு நின்று விடும், அல்ல‌து இந்திய மன்னர்களது காலங்களில் அதீத கவனம் செலுத்துவதாய் இருக்கும். இந்த நூல் தொடங்கக் கூடிய காலமே 1940களின் பிற்பாதி. ஏறக்குறைய இந்திய சுதந்திரம் உறுதி செய்யப்பட்ட காலம். சுதந்திர இந்தியாவின் உள்நாட்டு கலவரங்கள், இந்து முஸ்லீம் போராட்டங்கள், பஞ்சகாலங்கள், சீன பாகிஸ்தான் போர்கள், எல்லையோர மக்களின் தனி நாடு கோரிக்கை, அதனை இந்திய தலைவர்கள் கையாண்ட விதம், அவர்களின் தோல்விகள், சறுக்கல்கள் என விரைகிறது இப்புத்தகம். நான் இவற்றை இங்கே ஒற்றை வரியில் கூறியிருந்தாலும் புத்தகத்தில் இவை கிட்டத்தட்ட 500 பக்கங்களில் விவரிக்கப்பட்டிருக்கிறது. அத்த‌னை அடர்த்தியான தகவல்கள்.

இரண்டாவது, புத்தகத்தில் ஒற்றை வரி கூட ஆசிரியரின் கருத்தோ, எண்ணமோ கிடையாது. உதாரணமாக பல நூல்களில் நேரு நினைத்தார், காந்தி நினைத்தார் என நூலாசிரியர்கள் குறிப்பிடுவதை நாம் காணலாம். அந்த வரலாற்று நபரின் ஏதோ ஒரு செயல்பாட்டின் அடிப்படையில், ஒரு நூலாசிரியர் அந்த முடிவுக்கு வந்து அதனை எழுதுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த நூலில் அதனைப் போல ஒற்றை வரி கூட கிடையாது. நேரு எண்ணினார் என்றால் அது ஒரு ஆதாரத்தின் அடிப்படையிலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது நேரு தான் எண்ணியதாக யாருக்காவது எழுதிய கடிதம் இருக்கும். எல்லாவற்றிற்கும் அந்தந்த வரிகளிலேயே ஆதாரம் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த நூலின் ஒட்டு மொத்த 500 பக்கங்களும் விவரிக்கும் காலகட்டம் என்பது 1945 முதல் 1964 வரை மட்டுமே. இந்திய வரலாற்றினை சுதந்திர காலத்திலிருந்து அறிந்து கொள்ள விரும்பும் ஒருவர் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்.

நம்பிக்கையற்ற இருண்ட உத்தரப்பிரதேசம்

சமீபத்தில் பைனான்ஸ் டைம்ஸ் இதழில் வந்த ஓர் கட்டுரை என் கண்ணில் பட்டது. அதன் தலைப்பு இதுதான். ‘இந்தியா டீ கொடுக்கும் வேலைக்காகவும், காவலாளி வேலைக்காகவும் விளம்பரம் செய்தது. 23 லட்சம் விண்ணப்பங்கள் குவிந்தன’. அந்தக் கட்டுரை இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தின் நம்பிக்கையிழந்த இளைஞர்களின் அரசுப் பணி மீதான ஆர்வத்தைக் காட்டியது.

இந்த வருடத்தொடக்கத்தில் உத்தரப்பிரதேச அரசு 368 நான்காம் நிலை பியூன் வேலைக்கான அறிவிப்பினை வெளியிட்டது. மலைக்க வைக்கும் அளவுக்கு 23 லட்சத்து 20 ஆயிரம் விண்ணப்பங்கள் குவிந்தன‌. அவர்களுள் 255 பேர் முனைவர் பட்டம் பெற்றவர்கள் குறிப்பாக பொறியியல் துறைகளில். 25000 க்கும் மேற்பட்டவர்கள் பட்ட மேற்படிப்பு படித்தவர்கள்.

ஏன் நன்கு படித்த இளைஞர்கள் அரசாங்க அலுவலர்களுக்கு டீ வாங்கிக்கொடுப்பதற்கும் அவர்கள் அறைக்கு வெளியே காத்துக்கிடப்பதற்குமான ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கிறார்கள்? அதற்கான காரணம் பைனான்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது போல உபியில் வேலை வாய்ப்பு இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட மிகவும் குறைவு. அது மட்டுமல்லாமல் மேலும் இரண்டு காரணங்களும் இருக்கின்றன. ஒன்று அரசாங்க வேலை என்பது தனியார் வேலையை விட பாதுகாப்பானது, ஏனெனில் வேலைக்குறைவைக் காரணம் காட்டி ஒருவரை வேலையிலிருந்து நீக்கிவிட முடியாது. மற்றொன்று பணி ஓய்வு பெற்றபின் ஓய்வூதியம், இது கூடுதல் ஆதாயம். அத்தோடு தலைமுறைகள் பழமையான பாடத்திட்டத்தைக்கொண்டு, பொறுப்பற்ற ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப்பட்ட‌ மாணவர்கள் பெற்ற பட்டமேற்படிப்பு பட்டமானது அது பிரிண்ட் செய்யப்பட்டிருக்கும் தாள் அளவிற்குக் கூட‌ மதிப்பில்லாமல் இருப்பது.

மற்ற மாநிலங்களிலும் கூட அரசாங்க வேலைக்கான மதிப்பு உண்டெனினும் இந்த அளவிற்கு இல்லை. இந்தியாவின் தெற்கு மற்றும் மேற்கில் தனியார் நிறுவனங்கள் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளன. அங்கெல்லாம் உலகத்தரத்திற்கு கல்வி நிறுவனங்கள் இல்லையென்றாலும் கூட மோசமான நம்பிக்கையற்ற நிலையில் உபியில் இருப்பதுபோல் இல்லை. மஹாராஷ்டிராவிலோ தமிழ்நாட்டிலோ ஒரு பொறியியல் பட்டமேற்படிப்பு படித்த இளைஞன் தன்னை ஒரு பியூனாக நினைப்பதே கடினம். அதற்குப் பதிலாக ஒரு மென்பொருள் நிறுவனத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி விடுவர்.

வெறும் 400 க்கும் குறைவான, அதுவும் அரசு வேலைகளில் கடைநிலை வேலைக்கான பியுன் வேலைக்கு விண்ணப்பிக்கப்ப்ட்ட‌ அந்த 23 லட்சம் விண்ணப்பங்கள் மற்ற‌ எந்த மாநிலத்தையும் விட உபியில் அவ்வேலைக்கான மதிப்பைக் காட்டுகிறது. இந்திய அரசாங்க அளவுகோல்களின்படி கூட உபி படுபாதாள நிலையில் இருக்கிறது. கல்வியும் சுகாதாரமும் குப்பையாக இருக்கிறது. குற்றங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

இன்றைய நிலையில் உபி மிகவும் பரிதாபத்துக்குரிய நிலையிலேயே இருக்கிறது. கான்பூரைப் பூர்வீகமாகக் கொண்ட, கான்பூரோடு நெருங்கிய தொடர்பில் இருக்கும், பெங்களூரில் இருக்கக்கூடிய என் நண்பர் தொழில் நிறுவனங்களும், நிறுவனர்களும் பெரிய அளவில் கான்பூரில் வளர்வதில்லை. அவர்கள் வளர்வதுண்டு. ஆனால் அது நிறுவனர்கள், நிறுவனங்கள் என்பவற்றிற்கு தென் இந்தியா அளிக்கும் விளக்கத்திலிருந்து மாறுபட்ட ஒர் வளர்ச்சி என்கிறார். கான்பூரின் மிகப்பெரிய நிறுவனங்களாக அடையாளம் காணப்படும் மூன்று நிறுவனங்களின் தொழில் பாட்டில் குடிநீர் உற்பத்தி, பாதுகாப்பு காவலர்களை வேலைக்கு எடுத்தல் மற்றும் அளித்தல், மின் ஆக்கிகளை நிறுவுதல் போன்றவையே.

உபியின் தொழிலதிபர்களில் ஒரு சாரர் அரசாங்கத்தின் நிர்வாகச் சீர்கேடுகளை தங்களுக்கான வாய்ப்புகளாப் பார்க்கின்றனர். மற்றொன்று தேவையற்ற மற்றும் முரண்பட்ட நிதி ஒதுக்கீடுகள். பெங்களூருவில் ஒரு மென்பொருள் நிறுவனத்தை தொடங்கக்கூடிய ஒருவன் பூஜிக்கக் கூடிய நபர்கள் நாரயணமூர்த்தியும், நந்தன் நீல்கேனியும் என்றால், அதுவே உபியில் ஒருவனுக்கு பாண்டி சத்தாவும், சுபத்ரா ராயுமாக இருப்பதில் ஆச்சரியமில்லை. அவர்களைப்போலவே அரசியல்வாதிகளோடு தொடர்பு வைத்துக்கொண்டு அரசாங்க நிதியை தனியார் வளர்ச்சிக்காக திருப்புவதே தொழிலதிபர்களின் பணியாக‌ எண்ணுகின்றனர். அதில் கிடைக்கக்கூடிய கொள்ளைப்பணம் தொழிலதிபர்களாக இருக்கும் அரசியல்வாதிகளாலும், அரசியல்வாதிகளாக இருக்கும் தொழிலதிபர்களாலும் பங்கிட்டுக் கொள்ளப்படுகிறது.

முப்பதாண்டுகளுக்கு முன்னால் ஆஷிஷ் போஷ் என்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்பாளர் பிமாரு என்ற ஓர் சொற்றொடரை உருவாக்கினார். அதாவது பீகார்,மத்தியப்பிரதேசம்,ராஜஸ்தான்,உத்தரப்பிரதேசம் என்பதன் சுருக்கமே அது. அவற்றை அவர் இந்தியாவின் மிகவும் பிந்தங்கிய நோய்வாப்பட்ட மாநிலங்கள் என அவர் கூறினார். இந்த முப்பதாண்டுகளில் பீகார், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் முன்னேற்றத்தில் ஓரளவிற்காவது சாதித்துக் காட்டியுள்ளன. ஆனால் உபியோ இன்னும் மோசமான நிலைக்குச் சென்றிருக்கிறது. சமூகம்,பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், அமைதி என எந்த துறையில் எடுத்தாலும் இந்தியாவில் மிக மோசமாக நிர்வகிக்கப்படும் மாநிலம் உபியே.

உபியின் இத்தனை மோசமான நிலைக்கு என்ன காரணம்? ஒன்று இந்தியாவின் தெற்கு மற்றும் மேற்கைப் போல பாலின பாகுபாடு, சாதி வேறுபாடு போன்றவற்றைக் களைய சமூக இயக்கங்கள் தோன்றவில்லை.

இரண்டாவது பாரம்பரிய நிலப்பிரபுத்துவம். கடைசிமட்ட விவசாயிகள் அவர்களுக்கு மேலுள்ள சாதியினருக்கும் பணிய வேண்டியவர்களாக இருந்தனர். மேல்சாதியினர் என்பவர்கள் ஒரு காலத்தில் பிராமணர்கள், ராஜ்புத் சமூகத்தினைச் சேர்ந்தவர்கள். இன்று பெரும்பாலும் யாதவ் மற்றும் ஜாட் இனத்தவர்.

மூன்றாவதாக அரசியல் நேர்மையின்மை. இந்திய அளவுகோல்களின்படிகூட உபியே ஊழலில், குடும்ப, சமூக வன்முறையில் மோசமான மாநிலம்.

அதி முக்கியமான மற்றோர் காரணம் உபி மாநிலத்தினுடைய பரப்ப‌ளவு. இத்தனை காலம் உபி சந்தித்து வரும் பிரச்சினைகளைத் தீர்ப்பது என்பது அது ஒற்றை மாநிலமாக இருக்கும் வரை சாத்தியமில்லாத ஒன்றே. நான் முன்னரே எழுதியது போல ` உபி இரண்டாகப் பிரிக்கப்பட வேண்டுமா? இல்லை மூன்று நான்காக பிரிக்கப்பட வேண்டுமா என்பது விவாதத்திற்குரிய கேள்வி. ஆனால் பிரிக்கப் பட வேண்டும். பிரிக்கப்படாத உபி அதன் குடிமகனை வருத்துகிறது. அது இந்தியாவை வருத்துகிறது.’

எப்பொழுதும் ஓர் உண்மை இருந்து கொண்டே இருக்கிறது. ஓர் அதீத நல்லெண்ணம் கொண்ட சுகாதார செயலாளரால் கூட எப்படி 85 பெரிய மாவட்டங்களின் சுகாதார திறனை ஆய்வு செய்ய முடியும்? அல்லது நேர்மையான, பயமற்ற ஓர் காவல் துறை தலைவரால் எப்படி 20 கோடி மக்களிடையே சமூக அமைதியை நிலைநாட்ட முடியும்?

ஒற்றை பெரும் மாநிலம் என்பதற்குப் பதிலாக நான்கு சிறிய மாநிலங்கள் என ஆகும்பட்சத்தில் சீரான‌, வெளிப்படையான நிர்வாகம், மேம்படுத்தப்பட்ட கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், குடிமக்கள் பாதுகாப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தலாம். அது மேலும் பல தொழில் நிறுவனங்களையும், தொழிலதிபர்களையும் உருவாக்க வழிவகுக்கும், அந்த மாநிலத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் அதிகாரிகளுக்கு டீ வாங்கித்தருவதை விட நல்லதொரு வேலையை அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கலாம்.

ராமச்சந்திர குஹாவால் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளேட்டில் எழுதப்பெற்ற கட்டுரையின் தமிழ் மொழியாக்கம்.

THE DARK AND DESPERATE STATE OF UTTAR PRADESH
By Ramachandra Guha
(published in the Hindustan Times, 11th October, 2015)