விஷ்ணுபுரம் அமைப்பு- ஒரு விவாதம்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு நான் எழுதியிருந்த கடிதத்திற்கான பதிலை அவருடைய தளத்தில் வெளியிட்டிருந்தார். அதன் பிரதி இங்கே.

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு

இந்த ஆண்டே நான் முதன் முதலாக விஷ்ணுபுரம் விழாவில் கலந்து கொண்டேன். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தங்களை வாசித்து வருபவன். சிங்கப்பூரில் பணிபுரிவதால் இந்த வருடம் என்னுடைய பயணத்தை விஷ்ணுபுரம் நிகழ்வினை ஒட்டி அமைத்து கலந்து கொண்டேன்.   மிகச்சிறப்பான நிகழ்வு. நிகழ்வின் நிரல்களுக்கு வெளியே நடைபெற்றவற்றைப் பற்றி மட்டுமே மிக நீண்ட கட்டுரைகளை எழுதலாம். அந்த அளவிற்கு சிறப்பானதொரு நிகழ்வு. அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள் பல. குடி,சிகரெட் இல்லாமல் நடந்த ஓர் நிகழ்வு. தங்குமிடம், உணவு சிறப்பு. நண்பர்கள் அனைவரும் தெரிந்தவர், தெரியாதவர் என்ற பேதமின்றி பழகினார்கள். இது எனக்கு மிகப்பெரிய புத்துணர்வு முகாமாக அமைந்தது.  இனி ஆண்டுதோறும் கலந்து கொள்ளவேண்டும் என தீர்க்கமான முடிவெடுத்திருக்கிறேன். உங்களுடைய எழுத்து என்னைப் போன்ற பலர் வாழ்வில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிகப்பெரியது. நீங்கள் ஏற்படுத்தியிருக்கக் கூடிய இந்த அலை நீண்ட கால அளவில் தமிழ்ச்சமூகத்தினை முன்னெடுப்பதற்கான‌ ஒரு அளவுகோலாக மாறப்போகிறது என்பதில் எனக்கு ஐயமில்லை. நன்றிகள் பல‌.

ஒரு கேள்வி, விஷ்ணுபுரம் நிகழ்வில் அரசியல் மற்றும் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதற்காக ஒருங்கிணைப்பாளர்கள் அவ்வப்பொழுது கேள்வி கேட்போரை மட்டுறுத்தி விவாதத்தினை முன்னகர்த்தினர். அதனை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. அவற்றை அனுமதிப்பது பெரிய ஏரியில் ஒரு துளையிடுவது போல, ஒட்டு மொத்த ஏரியின் நீரும் அதில் வெளியேறி வீணாய்ப்போகும். என்னுடைய வினா என்னவென்றால் இப்பொழுதே விஷ்ணுபுர நிகழ்வென்பது ஒரு நிறுவனமாக கிட்டத்தட்ட ஆகிவிட்டது. அதில் ஒரு படைப்பாளியின் படைப்பு பேசப்படுவது அல்லது விவாதிக்க எடுத்துக்கொள்ளப்படுவது என்பதே ஒரு அங்கீகாரமாக ஆகிவிட்டது. விஷ்ணுபுர‌ நிகழ்ச்சி நிரல்கள் முன்னரே ஒரு ஒழுங்குடன் திட்டமிடப்பட்டு அதன்படி நிகழ்கிறது. அது படிப்படியாக விஷ்ணுபுரத்தின் தனித்தன்மையையும், புதுமைகளை உள்ளிடுப்பதையும் நாளடைவில் இல்லாமல் செய்துவிடுமோ? யாரையும் பாதிக்காத, தாக்காத நிகழ்வுகள், படைப்புகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வழக்கமான ஒரு பெரு நிகழ்வாக இது மாறிவிடுமோ என ஐயப்படுகிறேன். பொதுவாக கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆரம்பத்தில் ஸ்டார்ட் அப்பாக இருக்கும்போது மிகப்பெரிய அளவில் புதுமைகளை அனுமதிப்பார்கள், அதுவே அதன் வளர்ச்சிக்கு முக்கியமாக இருந்திருக்கும். ஒரு காலகட்டத்தில் அது வளர்ந்தவுடன் மெதுமெதுவாக அது பொதுவான வழக்கத்திற்குள் சென்று மற்ற எல்லா நிறுவனங்களையும் போல் ஆகிவிடும். பிரச்சினைகளை உருவாக்கும் எல்லாவற்றையும் தவிர்த்து விடுவார்கள். அதற்கான காரணங்களை என்னால் புரிந்து கொள்ள முடியும் என்றாலும், விஷ்ணுபுரம் அமைப்பினைப் பொறுத்த அளவில் இப்பொழுதே அதன் எல்லைகளை மட்டுமல்லாமல், புதியனவற்றை தொடர்ந்து அனுமதிப்பதற்கான வரையறைகளையும் உருவாக்கி அதன்பொருட்டு ஒவ்வொரு வருடமும் ஒருங்கிணைப்பாளர்கள் திட்டமிட செய்யலாமா?

ராஜேஷ்குமார் முத்தையா

அன்புள்ள ராஜேஷ்குமார்,

நீங்கள் கேட்ட கேள்விக்கான பதிலை பொதுவாக அமைப்பு- நிர்வாகம் சார்ந்த ஒன்றாக மாற்றிக்கொள்கிறேன். மற்றபடி அது ஓர் ஊகக்கேள்வி. அதற்குரிய சுருக்கமான நேரடிப் பதில் இதுதான். ‘அதெல்லாம் உங்கள் கற்பனை மட்டுமே. இந்தவகையான கற்பனைகள் நேரடியாக ஒரு செயலைச் செய்யாதவர்கள் உருவாக்கிக்கொள்வது. இந்தவகையான ஊகக்கற்பனைகள் பெரும்பாலும் செயலுக்கு எதிரானவை’

*

இன்றைய சூழல் இது. தொழில், வணிகம் மற்றும் அமைப்புச் செயல்பாடுகளில் நேரடியாக ஈடுபடுபவர்கள் ஒரு வகையினர். வெறுமே அவற்றை பார்த்தும் படித்தும் கற்பனை செய்தும் அறிபவர்கள் இன்னொரு வகை. இரண்டாம் வகையினருக்கும் நடைமுறை உண்மை தெரியாது. அதிலுள்ள நுணுக்கமான பல விஷயங்கள் பிடிகிடைக்காது. ஆனால் கற்பனையால் கருத்துச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அரிதாக அவர்களே நம்பி முதலீடு செய்து அடிவாங்குவதும் உண்டு. மற்றபடி அறிவுரைகள்தான் சொல்கிறார்கள்.

இன்று முகநூல் வந்தபின் இந்த இரண்டாம் தரப்பினரே எல்லாவற்றைப் பற்றியும் கருத்து சொல்கிறார்கள். சினிமா எப்படி எடுக்கவேண்டும், அரசியலை எப்படிக் கையாளவேண்டும், அரசுத்திட்டங்கள் எப்படி நடைமுறைப்படுத்தவேண்டும் என்றெல்லாம் எழுதிக்குவிக்கிறார்கள். இவர்களில் இதழாளர்கள் முதல் சாமானியர்கள் வரை பல தரப்பினர் உண்டு. அந்தந்தத் துறைகளில் செயல்படுபவர்கள் அந்த ஆலோசனைகளை ஒருவகை வேடிக்கையாகவே எடுத்துக்கொள்வார்கள்.

இந்த மனநிலையை விரிவாக நாம் இன்றைய சமூக ஊடகச் சூழலில் பேசியாகவேண்டும். அரிதாக மெய்யாகவே செயலில் ஈடுபடுபவர்களும் இந்த ‘செயலற்ற அன்னியர்’களின் கருத்துக்களால் கவரப்பட்டு எதையாவது செய்து சிக்கல்களில் மாட்டிக்கொள்கிறார்கள். பலர் புதியதாகச் செயல்களில் ஈடுபடும்போது இந்த செயலற்ற அன்னியர்களின் கருத்துக்களை நம்பி இழப்புகளை அடைகிறார்கள்.

எந்தச் செயலையும் சிறிய அளவில் செய்து, அதன் விளைவுகளை அவதானித்து, சிறிது சிறிதாக விரிவாக்கம் செய்வதே முறை. அச்செயலில் செய்யக்கூடுவதும் கூடாததும் செயல்வழியாக நாமே நேரடியாகக் கற்றுக்கொள்வதாக மட்டுமே இருக்கவேண்டும்.

மாறாக அச்செயலுக்கு வெளியே இருப்பவர்கள் எத்தனை தர்க்கபூர்வமாக எதைச் சொன்னாலும் அதற்கு எந்த மதிப்பும் இல்லை. ஏனென்றால் அவர்களுடைய கருத்துக்கள் அவர்களின் கற்பனைகளில் இருந்து பிறப்பவை. பெரும்பாலும் எதையுமே செய்ய ஆற்றல் அற்றவர்கள் நிகழ்த்திக்கொள்ளும் வீண் பகற்கனவுகள் அவை. அந்தப் பகற்கனவுகள் வழியாக அவர்கள் தங்கள் செயலின்மையை தங்களுக்கே நியாயப்படுத்திக்கொள்கிறார்கள், அவ்வளவுதான்.

முதல் தரப்பினர் நடைமுறையுண்மை என்பது செய்துபார்ப்பதனால் மட்டுமே கைவரும் என அறிந்தவர்கள். பெரிய தொழிலதிபர்கள்கூட தங்கள் பிள்ளைகள் தொழிலின் அடித்தளத்தில் இருந்தே பணியாற்றிக் கற்றுக்கொண்டு மேலே வரவேண்டும் என எண்ணுவது இதனால்தான்.

எந்தத் தரப்பானாலும் கருத்து அல்லது ஆலோசனை சொல்பவரிடம் நான் கேட்பது ஒரே கேள்விதான், நீங்கள் எதைச் செய்து வென்றீர்கள்? உங்கள் கருத்துக்களை எந்தச் செயற்களத்தில் இருந்து கற்றுக்கொண்டீர்கள்? செயற்களத்தில் வெற்றி அடையவர் இல்லையேல் இந்த பிரச்சினை எதுவுமே உங்களுடையது அல்ல. உங்கள் சொற்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. வெற்றுக்கற்பனைகளில் திளைக்காமல் எதையேனும் செய்து பாருங்கள்.

விஷ்ணுபுரம் அமைப்பு பற்றிய ஆதங்கமே உங்கள் கேள்வி என்று கொண்டு உங்களிடம் மேலும் சில சொற்கள் சொல்ல விரும்புகிறேன்.

உங்களுக்கான பதில்கள்

அ. விஷ்ணுபுரம் அமைப்பின் செயல்பாடுகளில் இதுவரை எந்தத் தேக்கத்தையும், சலிப்பையும் எவரும் உணர்ந்ததில்லை. ஒவ்வொரு ஆண்டும் மேலும் படைப்பூக்கத்துடனும் மேலும் கூர்மையுடனுமே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. புதிய புதிய களங்கள் நோக்கி ஒவ்வொரு ஆண்டும் முன்செல்கிறது. புதியவர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் அமைப்பு  இரண்டு மடங்கு வளர்கிறது. தேக்கம் வந்துவிடுமோ என்ற ஐயம் உங்களுடைய தனிப்பட்ட பதற்றம் மட்டுமே. நடைமுறை சார்ந்தது அல்ல.

ஆ. இந்த அரங்குகள் ‘ஆசிரியர் சந்திப்புகள்’ எனப்படுபவை. இந்தவகையான அரங்குகள் உலகமெங்கும் நிகழ்கின்றன. இவற்றின் அமைப்பு ஆசிரியரை கேள்விகள் வழியாகப் புரிந்துகொள்ள முற்படுவது மட்டுமே. ஆசிரியருடன் விவாதிப்பது அல்ல. எப்படி விவாதிக்க முடியும்? முன்னால் அமர்ந்திருப்பது ஐநூறுபேர் கொண்ட அவை. அதிலுள்ள ஒவ்வொருவரிடமும் ஓர் ஆசிரியர் விவாதிக்கமுடியுமா? அது ஒரு பொது அவை. எவர் வேண்டுமென்றாலும் அங்கே வந்து அமர அனுமதி உண்டு. எதையுமே படிக்காதவர் வரலாம். அரசியல் உள்நோக்கம், சாதிமதக் காழ்ப்புகள் கொண்டவர்கூட வரலாம். ஓர் இலக்கிய ஆசிரியர் எவரிடமும் எதையும் விவாதிக்கலாம் என ஓர் அமர்வு நிகழமுடியுமா?  ஆகவே அமர்வுகள் கட்டுப்படுத்தப்பட்டு மட்டுமே நிகழமுடியும். கூர்மையாக அவை நிகழவேண்டும் என்றால் வேறு வழியே இல்லை. இது உலகமெங்கும் உள்ள முறைமை.

இ. கூர்மையாகவும் பயனுள்ள முறையிலும் அந்த அரங்கு நிகழ்ந்தால் மட்டுமே அடுத்த ஆண்டு மேலும் பங்கேற்பாளர்கள் வருவார்கள். எங்கள் அரங்குகள் தமிழகத்தின் மிகப்பெரிய இலக்கிய அரங்காக நிகழ்வதே அதற்கான சாட்சி. விவாதம் என்ற பேரில் சம்பந்தமற்ற பேச்சுக்கள் வழியாக வெற்றுப்பூசலாக நிகழ்ந்த அரங்குகள் அப்படியே மறைந்துவிட்டதை திரும்பத் திரும்ப தமிழகத்தில் காணலாம்.

ஈ. நாங்களே விவாதநிகழ்வுகளை ஒருங்கிணைக்கிறோம். ஆண்டுக்கு இருபதுக்கும் மேல். அவற்றின் வழிமுறை வேறு. ஒன்று, குறைந்த எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களே அனுமதிக்கப்படுகிறார்கள். அனைவருமே இலக்கிய வாசிப்பும் அக்கறையும் உடையவர்கள். இரண்டு, நேரம் சார்ந்த கட்டுப்பாடு இல்லை. மூன்று, அந்த ஆசிரியர் அந்த வகை விவாதத்திற்கு ஒப்புக்கொள்ளவேண்டும். அவ்வாறு அண்மையில் கூட நாஞ்சில்நாடனுடனான விவாதம் நிகழ்ந்தது. அங்கே தீவிரமான விவாதங்கள் நிகழும். மறுப்புகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்படும்.

உ. ஆசிரியர் சந்திப்பு, விவாதச் சந்திப்பு ஆகியவற்றுக்கு அப்பால் ஆசிரியர் பற்றிய கருத்தரங்குகள் நடத்துகிறோம். அதில் ஏற்றும் மறுத்தும் பேசப்படுகின்றன. ஆசிரியர் பதில்சொல்கிறார். அந்த நிகழ்வுகளின் செயல்முறை வேறு.

ஆசிரியர் சந்திப்பு, கருத்தரங்கு, விவாத அமர்வு ஆகியவை மூன்றும் வேறுவேறு வகையானவை. அவற்றின் இயல்புகளை அறியாமல், இலக்கியச்செயல்பாடுகளுக்கே தொடர்பில்லாமல் நின்றிருப்பவர்களே நீங்கள் சொல்லும் கருத்துக்களைச் சொல்கிறார்கள்.

விவாத அரங்குகளை பெரும்பாலும் பரவலான வாசிப்பை அடைந்துவிட்ட படைப்பாளிகளுக்கே நிகழ்த்துகிறோம். நிராகரிப்பும் விமர்சனமும் அவர்களை அவ்வளவு சோர்வுறச் செய்யாது. ஆசிரியர் சந்திப்புகளில் இன்னமும் வாசிப்பைப் பெறாத படைப்பாளிகளை பரவலான வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதே எங்கள் நோக்கம். ஆகவேதான் ஒருமாதகாலம் தொடர்ச்சியாக அவர்களை முன்வைக்கிறோம். இது இலக்கியமென்னும் இயக்கம் தொடர்ச்சியாக நிகழவேண்டும் என்னும் திட்டம் கொண்டது.

அப்படியென்றால் இளம்படைப்பாளிகள் எப்படி எதிர்மறை விமர்சனங்களை சந்திக்கமுடியும்? அதற்கு ஒரே வழிதான். peer review. அவர்களே தங்களைப்போன்ற, தங்கள் தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்கள் மற்றும் நம்பிக்கையான வாசகர்களுடன் தனிப்பட்ட விவாத அரங்குகளை கூட்டி பேசிக்கொள்ளலாம். நல்லெண்ணத்துடன், நட்புடன் நடைபெறுமென்றால் அவை மிகுந்த  பயனுள்ளவை. எண்பது தொண்ணூறுகளில் அவ்வாறுதான் நாங்கள் செயல்பட்டோம். விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்ந்து அவ்வாறு சில நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.மேலும் முன்னெடுக்கலாம்.

தமிழகத்தில் எழுதிவரும் ஓர் எழுத்தாளர் தன் எழுத்துக்கள் படிக்கப்படுகின்றனவா என்னும் ஐயத்தால் அலைக்கழிக்கப் படுகிறார். எழுதுவதனால் ஏதேனும் பயன் உண்டா என்னும் சோர்வால் தளர்கிறார். இங்கே ஒருவர்கூட நூல்களைப் பற்றி எழுதுவதில்லை. பலசமயம் நூல்களைப் பற்றிய குறிப்புகள் என் இணையப்பக்கத்தில் மட்டுமே வருகின்றன. ஆகவேதான் எங்கள் அரங்குகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இங்கே  ஆசிரியர் கண்ணெதிரே தனக்கான வாசகர்களைக் காண்கிறார். தான் வாசிக்கப்படுகிறோம் என உணர்கிறார். அது அளிக்கும் நம்பிக்கையையே அவருக்கு வழங்க விரும்புகிறோம்.

தமிழகத்தில் இலக்கியம் முழுமையாகவே புறக்கணிக்கப்பட்ட ஓர் இயக்கம். இங்கே எந்த எழுத்தாளருக்கும் வாசகர்கள் என பெரிதாக எவருமில்லை. இந்தச் சிறிய இடத்திற்குள் அரசியலும் மதமும் புகுந்து காழ்ப்புகளையும் கசப்புகளையும் நிறைத்துள்ளன. சமூகவலைச்சூழல் மேலும் காழ்ப்புகளை வளர்க்கிறது. எழுதவருபவன் இந்த எதிர்மறை உலகம் அளிக்கும் உளச்சோர்வுடன் தொடர்ச்சியாக போராடிக்கொண்டேதான் எழுதவேண்டியுள்ளது.

அந்த உளச்சோர்வுக்கு எதிராக நம்பிக்கையை, ஊக்கத்தை அளிக்கும் ஒரு நிகழ்வாகவே எங்கள் விழாக்களை உருவகித்துள்ளோம். அவ்வாறே அது நிகழவேண்டும் என உறுதிகொண்டுள்ளோம். இங்கு வரும் ஓர் எழுத்தாளரும் வாசகரும் மனநிறைவான நிலையில், இலக்கியம் மீதான நம்பிக்கை நிறைந்த நிலையில் திரும்பிச் செல்லவேண்டும் என்பதே எங்கள் எண்ணம்.  ஓர் இளம் வாசகன் எழுத்தை, எழுத்தாளர்களை அறிமுகம் செய்துகொண்டு ஊக்கத்துடன் இலக்கியத்துள் நுழையவேண்டும்.

நட்புதான் இலக்கியத்தின் அடிப்படைவிசை என நான் நம்புகிறேன். எண்பதுகளின் தொடக்கத்தில் நான் நட்புகொண்டிருந்த இலக்கியத் தோழர்கள் அனைவருமே இன்றும் நட்புடன் இருக்கிறார்கள். விஷ்ணுபுரம் விழாவில் தழுவிக்கொள்கையில் ஆம் வாழ்ந்திருக்கிறோம் என்னும் நிறைவை அடைகிறேன். அது பிறருக்கும் அமையவேண்டும், தமிழில் நீடிக்கவேண்டும் என விரும்புகிறேன்.

உவப்பத் தலைக்கூடி உள்ளப்பிரிதல் அனைத்தே புலவர் தொழில்- எங்கள் முதன்மைவாசகம் அதுவே.

ஜெ

Similar Posts

  • | |

    இந்திய சினிமா 100

    இந்திய சினிமா தனது நூறாவது ஆண்டைக் கொண்டாடிவிட்டது. விழாவும் எடுத்தாயிற்று. இந்த நூறாண்டுகளில் இந்திய சினிமா இந்திய சமூகத்திற்காக செய்தவை என்று எண்ணினால் ஏமாற்றமே. சினிமா தொடர்பான துறையில் இருப்பவர்கள் வேண்டுமானால் சினிமாவைப் பற்றிப் புள்ளிவிபரங்களை அடுக்கி அதனை நியாயப்படுத்த முயன்றாலும் அவர்களுக்கே தெரியும் உண்மை எதுவென்று. அவர்களுக்கு வேறு வழியில்லை. சினிமாவில் உள்ளவர்கள் தங்களைத் தாங்களே உயரத்தூக்கிக் கொள்வார்கள். அதற்கென்றே உள்ளது இன்றைய ஊடகத்துறை. இயல் இசை நாடகத்தின் பரிணாம வளர்ச்சியாக வந்த சினிமா ஆரம்பகாலங்களில்…

  • Navigating the Evolution of Media and Information in the Digital Age

    Do our thoughts primarily stem from our personal expectations and ideas, or are they more influenced by external factors such as societal norms and the opinions of others? Have you ever thought about it? Am I influencing your though now? 🙂 Media, in its various forms, has been a cornerstone of how we consume information,…

  • 100 புத்தகங்கள்

    இந்த வருட இறுதிக்குள்ளாக 100 புத்தகங்களை படிப்பது என்ற மிக முக்கியமான முடிவு ஒன்றினை இன்றிலிருந்து துவங்குகிறேன். கடந்த ஆண்டே செயல்படுத்தியதுதான் என்றாலும் கடந்த ஆண்டில் நான் திட்டமிட்ட எண்ணிக்கையை அடைய முடியவில்லை. அதனால் மீண்டும் ஒரு சோதனை முயற்சி. நான் இன்னும் வாசிப்பில் கடக்க வேண்டிய தொலைவு மிக அதிகம். அதனால் இந்த முறை புத்தகங்களை பட்டியலிடாமல் என்னிடம் இருக்கும் புத்தகங்களிலிருந்தே வாசிக்கலாம் என நினைக்கிறேன். ஒருவேளை வரும் காலங்களில் பட்டியலிட்டு வாசிக்கலாம். ஒவ்வொரு புத்தக…

  • தினம் ஒரு வார்த்தை 50 – philanthropist

    philanthropist – மக்கள வாழ்வினை உயர்த்த விரும்பும் நன்கொடையாளர்களைக் குறிக்கும் வார்த்தை Sample Sentence the trust was founded by an American philanthropist

  • மீண்டும் ஆசானுக்கு

    மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம். மீண்டும் வெண்முகில் நகருக்கு வந்து விட்டேன். ஆம் சில மாதங்களுக்கு முன்னர் வண்ணக்கடல் படிக்கும்போது தினமும் வாசிப்பதனைவிட ஒரே மூச்சாக ஒவ்வொரு புத்தகமாக வெளிவரும்பொழுது வாசிக்கலாம் என்ற எண்ணத்தை அடைந்தேன். அதன் காரணமாக தினசரி வாசிப்பை வெண்முரசில் இருந்து வேறு சில புத்தகங்களுக்கு மாற்றினேன். அதே சமயம் வெண்முரசு அல்லாத தங்களின் பதிவுகளையும், மற்ற புத்தகங்களையும் தொடர்ந்து வாசித்துக்கொண்டே இருந்தேன். மாதங்கள் கடந்தன‌. முதற்கனல், மழைப்பாடலின் வாசிப்பின் விளைவாக மென்பொருள் துறையில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.