Month: January 2015

சொர்க்கத்தின் குழந்தைகள்

சொர்க்கத்தின் குழந்தைகள் (Children of Heaven). ஈரானியத்திரைப்படம். 1997 ல் வெளிவந்தது. மஜித் மஜித் இயக்கம். அலி, சாரா இருவரும் அண்ணன் தங்கை. மிக ஏழ்மையான குடும்பம். தந்தை வேலைக்கு செல்ல, தாய் உடல் நலமின்றி இருக்கிறார். ஒருநாள் தங்கையின் கிழிந்த ஷூவை தைத்துக்கொண்டு வரும் வழியில் அலி அதனை தவற விட்டு விடுகிறான். தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. தங்கையிடம் அதனை அம்மாவிடமும், அப்பாவிடமும் கூற வேண்டாம் எனக் கேட்கிறான்.

இரவு படிக்கும் பொழுது ரகசியமாக இருவரும் காகிதத்தில் எழுதி பேசிக்கொள்கிறார்கள். மறுநாள் எப்படி பள்ளிக்கு செல்வது என சாரா கேட்கிறாள். அவளுக்கு காலையில் பள்ளி என்பதால் தன் ஷூவை அணிந்துகொண்டு செல்லும்படியும் அவள் திரும்பி வந்தபின்னர் தான் ஷூவை அணிந்துகொண்டு செல்வதாகவும் கூறுகிறான். அது தனக்கு மிகவும் பெரியதாக இருக்கும் எனவும் அதனைப் போட்டுக்கொண்டு தன்னால் விரைவாக நடக்க முடியாது எனவும் கூறுகிறாள். அலி கெஞ்சிக் கேட்கவே சம்மதிக்கிறாள்.

அதன்படி சாரா தினமும் பள்ளி முடிந்ததும் விரைந்து ஓடி வருகிறாள். அலி வழியில் அவளுக்காக காத்து நிற்கிறான். ஷூவை மாற்றிக்கொள்கிறார்கள். இப்படியே சில நாட்கள் கடக்கிறது. அலி தினமும் பள்ளிக்கு ஓடுகிறான். என்னதான் அலி விரைவாக ஓடினாலும் பள்ளிக்கு தாமதமாகச் செல்கிறான். முதலிரு நாட்கள் மன்னிக்கும் தலைமையாசிரியர் மூன்றாவது நாள் அவனை பெற்றோரை அழைத்து வரும்படி சொல்கிறார். தன் தந்தைக்கு தெரிந்துவிடும் எனப் பயப்பட்டு அழுகிறான். அங்கு வரும் அவனது வகுப்பு ஆசிரியர் அவன் வகுப்பில் ந‌ன்றாக படிக்கும் மாணவன் எனவும் தனக்காக அவனை மன்னிக்கும்படியும் கூறுகிறார். அலி யாரிடமும் உண்மையை கூறாமல் மறைக்கிறான். அலிக்கும் சாராவுக்கும் ஒற்றை ஷூ என்பது மிகப்பெரிய பிரச்சினையாக மாறுகிறது.

பின்னர் ஒருநாள் தன்னுடைய ஷூவை பள்ளியில் வேறோர் மாணவி அணிந்திருப்பதை சாரா பர்க்கிறாள். அண்ணனிடம் சொல்லி இருவரும் அவளைப் பின் தொடர்ந்து சொல்கிறார்கள். அங்கே அவர்கள் அம்மாணவியின் தந்தை கண் தெரியாதவராக இருப்பதைப் பார்த்துவிட்டு ஷூவைக் கேட்காமல் வந்துவிடுகிறார்கள்.

இச்சமயத்தில் அலியின் அப்பாவுக்கு அவருடைய முதலாளி ஒரு புல் வெட்டும் கருவியைத் தருகிறார். அதனைக் கொண்டு நகரத்தின் உயர்குடியினர் வாழும் பகுதிக்கு வேலை தேடி தந்தையோடு விடுமுறை நாளில் செல்கிறான் அலி. அங்கே தோட்ட வேலை செய்வதால் அவனுடைய அப்பாவுக்கு பணம் கிடைக்கிறது. அது அவர் ஒரு வாரம் செய்யும் வேலைக்கான கூலி எனவும், ஒரே நாளில் கிடைத்து விட்டதாகவும் கூறுகிறார். திரும்ப வரும்பொழுது அலியிடம் என்ன வேண்டுமெனக் கேட்கிறார். அலி தங்கைக்கு ஒரு புது ஷூ வாங்கலாம் என்று கூறுகிறான். ஆனால் திடீரென்று அவர்கள் சைக்கிள் ப்ரேக் பிடிக்காமல் அவர்கள் விழுந்து விடுகிறார்கள். மருத்துவமனையில் அனைத்து பணமும் செலவாகி விடுகிறது.

மற்றோர் நாள் பள்ளியில் மாரத்தான் ஓட்டப்பந்தயம் ஒன்றிற்கான அறிவிப்பு வெளியாகிறது. தன்னிடம் நல்ல ஷூ இல்லாததால் அதில் கல‌ந்து கொள்ளாமல் போகும் அலி, பின்னர் அதில் இரண்டாம் இடம் பெற்றால் பரிசு ஷூ எனத் தெரிந்ததும் கலந்து கொள்கிறான். தன் தங்கையிடம் தான் அதில் வெற்றி பெற்று விடுவேன் என்றும் அதனைக் கடையில் கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக சாராவுக்கு ஒரு ஷூ வாங்கித் தருவதாகவும் சொல்கிறான். ஆனால் அவன் முதலாவதாக வந்து விடுகிறான். தனக்கு இரண்டாம் இடம் கிடைக்கவில்லை என்றதும் அழுகிறான் அலி.

வீட்டிற்கு வரும் அலி தன் தங்கையிடம் தன்னால் இரண்டாம் இடத்திற்கு வர முடியவில்லை எனக் கூறுகிறான். சாரா என்ன சொல்வதென்று புரியாமல் விழிக்கிறாள். அதற்குள் அம்மா அழைக்கவே ஓடிப்போகிறாள். வருத்தத்தோடு அலி அமர்கிறான். அதே சமயத்தில் அலியின் அப்பா அலி கூறியதை நினைவில் வைத்திருந்து இருவருக்காகவும் புது ஷூக்களை வாங்குகிறார். அத்தோடு படம் நிறைவைடைகிறது.

மீண்டும் உண்மைக்கு அருகில் ஒரு திரைப்படம். இந்த திரைப்படம் இயல்பாக இருக்கவேண்டும் என்பதற்காக மக்களுக்குத் தெரியாமல் படம் பிடிக்கப்பட்டது. ஒண்ணரை மணி நேரம் திரைப்படம். முதல் காட்சி முதல் கடைசி காட்சி வரை அத்துனை இயல்பு. அலியாக நடித்திருக்கும் ஆமீர் ஃபரூக் ஹாசிமியனும், சாராவாக நடித்திருக்கும் ஃபகாரே சித்திகிவும் ஆகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். சாரா தன்னுடைய ஷூவை இன்னொரு மாணவி அணிந்திருப்பதைப் பார்த்ததும் அடுத்த இடைவேளைகளில் அனைவருடைய கால்களையும் பார்த்துக் கொண்டே செல்லும் காட்சி, சாரா தாமதமாக வந்த பின்னர் அலி திட்டும் பொழுது உன்னால் தான் இதெல்லாம் நான் அம்மாவிடம் சொல்லப் போகிறேன் என்று சொல்லும் சாராவிடம் “போய் சொல்லு அவங்களாலே வாங்கித்தர முடியாது பாவம்!” என அப்பா அம்மாவுக்காக அலி பேசும் காட்சி என் பெரும்பாலும் மனதை நெருட வைக்கும் காட்சிகள். அருமையான ஒரு பதிவு.

ஆசானிடமிருந்து

நான் எழுதிய மடலுக்கு ஆசானின் பதில்.

அன்புள்ள ராஜேஷ்

புனைவை வாசிப்பதற்கான திறன் அனைவருக்கும் இயல்பிலேயே அமைவதில்லை. மிக‌ச்சிலருக்கே மொழியை உடனடியாக சித்திரங்களாக மாற்றிக்கொள்ள முடிகிறது என்பதைக் கண்டிருக்கிறேன். அது ஒரு பெரிய வரம். அந்த வரத்தை நாம் நம் நிறைவுக்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அது நம் கடமை என்றே சொல்லலாம்

வாழ்த்துக்களுடன்
ஜெ

மாதொருபாகன்

மாதொருபாகன் நாவலை முன்வைத்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று அதன் விளைவாக எழுத்தாளர் பெருமாள் முருகன் தன் எழுத்துக்களை திரும்பப் பெற்று விட்டார். இனிமேல் தான் எழுத‌ப்போவதில்லை எனவும் தான் எழுதிய அனைத்து நாவல்களையும் திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும் அறிவித்து விட்டார். எதிர்ப்பாளர்கள் மறுப்பை வெளிப்படுத்திய விதம் முற்றிலும் தவறு. இதில் மாற்றுக்கருத்து கிடையாது.

எதிர்ப்பாளர்கள், மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் சொன்னபடி பதிலுக்கு ஒரு மறு நாவலையோ அல்லது விளக்கவுரையோ எழுதி கடுமையாக எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கலாம். அதனைவிடுத்து மூன்றாம் தர எதிர்ப்பை காட்டத் தொடங்கியதால் இன்று இது மிகப்பெரும் பூதாகரமாகி உலகம் கவனிக்கும் செய்தியாகி விட்டது.

அரசு அவரது புத்தகங்களை தடை செய்யாமல் இருக்கிறது என்று எதிர்ப்பாளர்களும்,எதிர்ப்பாளர்களை அரசு முற்றிலுமாக‌ ஒடுக்காமல் விட்டு விட்டது என எழுத்தாளர்களும் அரசைக் குற்றஞ்சாட்டுகின்றனர். இதில் அரசின் தற்போதைய நிலையே சரியென எனக்குப்படுகிறது. ஏனெனில் எழுத்தாளர்கள் உலகை தங்களை நோக்கி, புது யுகத்தை நோக்கி விரைவாக இழுக்கிறார்கள். மற்றோர் புற மக்கள் தத்தம் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் காக்கப்படவேண்டுமென தங்கள் பக்கம் இழுக்கிறார்கள். ஆனால் அரசாங்கம் இவர்கள் இருவரையும் போன்று ஒற்றைத்தன்மையான‌ நிலையை எடுக்க இயலாது. குடிகளைப் பாதுகாப்பதுவே அரசின் முதல் கடமை. ஏனெனில் ஒரு அரசாங்கம் ஒரு எழுத்தாளனைப்போல் அதீத அளவில் புதிய முயற்சிகளை மேற்கொள்ள இயலாது. நல்ல நோக்கம் கருதியே கூட ஒரு புது முயற்சி செய்யினும் அது பிழையாகப் போகுமெனின் அவ்வரசின் கீழுள்ள அனைவரையும் பாதிக்கும்.  அதனால் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களும் தனியேதான் முயற்சி செய்தாக வேண்டும். இதுவே இன்றைய நிலை. அதனைப் போலவே மற்றவர்களும் அவர்கள் வழி நோக்கி உலகை இழுக்கட்டும். உலகம் தன‌க்கான இடத்தை கண்டுகொள்ளட்டும். அந்நிலைப்புள்ளியில் வாழ்வோரை அரசு பாதுகாக்கட்டும்.

இன்னும் மீதமிருக்கிறது

சிங்கப்பூரில் வாழும் சத்திக்கண்ணனால் எழுதப்பட்ட கவிதைப் புத்தகம். பெரும்பாலானவை வசனக்கவிதைகள். ஒரு சில முத்தாய்ப்பான கவிதைகளும் உண்டு. உதாரணமாக மனைவியைப்பற்றிய கவிடையொன்றில் எல்லாவற்றையும் தூரமாகத்தெரிந்தால் அழகென்றிருந்த எனக்கு அருகில் மலர் நீ இருக்கும் போது என்ன செய்ய?  என்னும் கவிதை அழகு. வானவில், கனவு போன்றவை நான் ரசித்த கவிதைகள். நான் ரசிக்காதது முன்னுரை எழுதியிருப்பவர் பாடியிருக்கும் துதி.

மனம் – திரைப்படம்

நாகேஸ்வரராவ்,நாகர்ஜுனா,நாக சைதன்யா நடிப்பில் விக்ரம் குமார் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம். நான் சமீபத்திய ஆண்டுகளில் ஒரு திரைப்படத்தை ஒரு தடவைக்கு மேல் பார்த்த‌தே இல்லை. எவ்வளவு நல்ல திரைப்படம் என்றாலும். ஆனால் இந்த திரைப்படத்தினை இன்று மீண்டும் ஒருமுறை பார்த்து விட்டேன். காரணம் மற்ற படங்கள் என் புத்தியை தொட்டிருக்கின்றன. இப்படம் என் மனதைத் தொட்டதே. முதல்முறை போலவே இம்முறையும் கண்களில் கண்ணீர் பல இடங்களில். வாழ்க்கைதான் எத்தனை அழகானது? நல்லதையே பார்த்து நல்லதையே செய்து நல்லவனாகவே வாழ்ந்துவிட்டுப்போவதுதான் எத்துனை சுகமானது? என்னை மீண்டும் மீண்டும் பரிசுத்தமானவனாக மாற்றும் இது போன்ற திரைப்படங்களுக்காகவே இதுவரை வந்த எல்லா தரக்குறைவான படங்களையும் மன்னித்துவிடலாம் என்று தோன்றுகின்றது. இதுவரைப் பார்க்கவில்லையென்றால் பாருங்கள், கண்டிப்பாகப் பாருங்கள்.

அர்த்தமுள்ள இந்து மதம் – கண்ணதாசன்

கண்ணதாசன் அவர்களால் எழுதப்பெற்ற பத்து தனித்தனி பாகங்களின் மொத்த தொகுப்பு. தன் அனுபவத்தினைக் கொண்டு அதன் மூலம் இந்து மதத்தினை மனித வாழ்வின் செயல்களுக்கும், விளைவுகளுக்கும் விளக்கம் தருகிறார். ஒருவேளை இப்புத்தகத்தினை ஆரம்ப கால வாசகர்களும், ஆன்மீக வாசகர்களும் பெரிதும் விரும்பலாம். ஆனால் தீவிர இலக்கிய வாசிப்புக் கொண்டவர்கள் சலிப்படையவைக்கும் தட்டையான எழுத்து. சாதரணமாக வயதில் மூத்தவர்கள் கூறும் அறிவுரைகளின் தொகுப்பு எனக்கூறலாம், மற்றபடி இது இந்து மதத்தினை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் என்றெல்லாம் கிடையாது. தொடராக வெளிவந்த காரணத்தாலோ என்னவோ பெரும்பாலான கட்டுரைகளில் ஒரே தகவல்கள் மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. மற்றொன்று சில தலைப்புகள் பத்திரிக்கைகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் கொடுக்க வேண்டிய கட்டாயத்தின் காரணமாக எழுதப்பட்டவை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. பக்திமான்களுக்கான நூலே இது. இந்து மதத்தை பரிபூரணமாக அறிய முயல்பவர்களுக்கான நூல் அல்ல.

யானை வேட்டை

ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு யானை தந்தத்திற்காக கொல்லப்படுவதை விவரிக்கும் இந்த ஆவணப்படம் இன்றைய நிலையில் மிக முக்கியமானது.

மேலதிக தகவல்களுக்கு,
http://www.lastdaysofivory.com/

டிசிஎஸ் ‍- ஊழியர் வெளியேற்றம்

எங்கு பார்த்தாலும் டிசிஎஸ் நிறுவனத்தின் வேலை நிறுத்தத்தினைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். என்னதான் அங்கே நடக்கிறது என்ற உண்மை நிலை தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். போதாதற்கு சமூக வலைத்தளம், வாட்ஸ் அப் போன்றவற்றில் அதனைப் பகிர்ந்து கொள்ளவும் செய்கின்றனர். இதனால் சமீபத்திய நாட்களில் தேசத்தில் பெரும்பாலானவர்களால் விவாதிக்கப்படும் செய்தியாயிருக்கிறது.

இச்சூழ்நிலையில் மென்பொருள் துறை மீது எப்பொழுதுமே வெறுப்போடு இருக்கும் ஒரு சாரர், இதனை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு தங்களின் ஆதங்கத்தையெல்லாம் கொட்டித் தீர்க்கின்றனர். அவர்களால் தான் விலைவாசி உயர்ந்தது, வாடகை உயர்ந்தது,அவர்களுக்கு எப்பவுமே பொறுப்பில்ல சார் என்னும் வெட்டிப்பேச்சுகளாக. இவற்றுள் உள்ள இரண்டாம் தர கருத்துக்களை நாம் ஒதுக்கிவிட்டால் மட்டுமே ந‌மக்கு ஒரு தெளிவு கிடைக்கும். ஏனெனில் இம்மாதிரியான நிகழ்கால நிகழ்வுகளை வெற்று கூச்சல்களாக மாற்றும் கூட்டம் மிக அதிகம். ஏதாவது செய்தியில் ஒன்றைப் பார்த்துவிட்டு வந்து அதனை தானே கள ஆய்வின் மூலம் கண்டதைப் போல விவரிப்பார்கள். ஒரு நல்ல வாசகனோ, இல்லை ஒரு நல்ல விமரிசகனோ அவர்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்வான். அத்தோடு அவர்களை கண்டுகொள்ளாமலும் செல்வான். அப்படி செல்வதே அவர்களுக்கான நமது பதிலாக இருக்கவேண்டும் என்பதே என் எண்ணம். அதன் வழியே அவர்களைக் கடந்து செல்வது. அவர்களும் சென்றுவிடுவார்கள், இந்த பரந்துபட்ட தேசத்தில் பேசுவதற்கான தகவல்களுக்கா பஞ்சம்?

சரி, டிசிஎஸ் விஷயத்திற்கு வருவோம். ந‌ம்மை வேலைக்கு எடுக்கும் பொழுதே இது போன்ற அனைத்து விஷயங்களையும் சொல்லித்தான் வேலைக்கு எடுத்தார்கள். எல்லாவற்றிற்கும் ஒப்புக்கொண்டே நாம் வேலையில் சேர்ந்தோம். கண்டிப்பாக வேலை இழப்பு வருந்தக் கூடிய ஒரு நிகழ்வுதான். ஆனால் அதற்கு நிறுவனத்தை மட்டும் எப்படி குறை சொல்ல முடியும்? இன்றும் வெட்டியாகவே வந்து செல்லும் பல ஊழியர்களை இரண்டு மூன்று மட்டங்களில் எனக்குத் தெரியும். ஆனால் அவர்களுடைய வருமானம் சீனியர் என்ற காரணத்தினால் பல மடங்கு அதிகமாக இருக்கும், ஆனால் வேலை அப்படி அல்ல. இதில் உள்ள வருந்த வேண்டிய ஒரு விஷயம், நன்றாக வேலை செய்யாதவர்களால் நிர்வாகத்தால் எடுக்கப்பட்ட முடிவில் நன்றாக வேலை செய்பவர்களும் மாட்டிக்கொண்டதுதான்.

சரி, நாம் வாங்குவதைவிட இரண்டு மடங்கு சம்பளத்தில் வேலை கிடைத்தால் இருக்கும் வேலையை விட்டு போவோமா? இல்லையா? அதனைப்போலத்தான் நிர்வாகமும். நம்மால் முடிந்த அளவிற்கு நாம் நமக்கு நல்லதை செய்து கொள்கிறோம். கம்பெனியும் அதனால் முடிந்த அளவிற்கு தேவையான நன்மைகளை செய்து கொள்கிறது. இதில் எப்படி குற்றம் காண முடியும்?

அதோடு கடந்த பதினைந்து ஆண்டுகளாக கோலோச்சிய மென்பொருள் துறை சற்றே சரிவடையத் தொடங்கி இருக்கிறது. இதற்கான‌ காரணங்களாக நாம் இவற்றைக் கூறலாம்.

முதலாவதாக ஐடி துறை என்பது மிக உயர்வாகப் பார்க்கப்பட்டதால் பெரும்பாலும் அனைவரும் பத்தாண்டுகளுக்கு முன்பு சாஃப்ட்வேர் இஞ்சினியர் என்று ஐடியை நோக்கமாகக் கொண்டு படித்தனர். அதனால் கடந்த பத்தாண்டுகளில் சராசரியாக எழுபது விழுக்காடு பட்டதாரிகள் ஐடியை நோக்கியே வந்தனர். அதனால் மென்பொருள் துறைக்கான மனித வளம் மிக அதிகமாகக் கிடைத்தது. 100 வேலைக்கு பத்து பட்டதாரிகள் என்ற நிலை மாறி பத்து வேலைக்கு 100 பட்டதாரிகள் என்று ஆனது. விளைவு ஊதியம் குறைக்கப்பட்டது.

மற்றொன்று பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புதான் அனைத்து பெரு நிறுவனங்களும் மென்பொருள் துறைக்கு தங்களை மாற்றிக்கொள்வதில் தீவிர ஆர்வம் காட்டினர். அதனால் அத்துறையில் வேலை வாய்ப்பு பெருகியது. இன்றும் கூட மென் துறையின் தேவை இருந்தாலும் இன்றைய மேம்பட்ட தொழில்நுட்பத்தின் காரணமாக மனித வள ஆற்றல் குறைவாகவே போதுமானது. இன்று நிலைமை மாறிவிட்டது. அனைவரும் பெரும்பாலும் கணினி, இணையம் போன்றவற்றில் அடிப்படை அறிவினை பெற்றுவிட்டார்கள். அதனால் மிகப்பெரிய விஷயமாக மென்பொருள் துறையைப் பார்த்து செலவு செய்ய தயாராக எந்த நிறுவனமும் இல்லை. ஆயிரம் பேருக்கு கூலி கொடுத்து மற்றோர் நிறுவனத்துக்கு கொடுப்பதை விட நூறு நபர்களை வேலைக்கு எடுத்து நேரடியாக மென்பொருட்களை வாங்கி நிர்வாகம் செய்து விடலாம்.

அதாவது மென்பொருள் துறையின் ஒருபுறம் மனித வளத்திற்கான தேவை குறைந்து வருகிறது, மற்றோர் புறம் மென்பொருள் பட்டப்படிப்பை முடித்தவர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். விளைவு வெளியேற்றம்.

இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படைப் புரிதல் என்னவென்றால் டிசிஎஸ் சிடிஎஸ் விப்ரோ போன்ற சேவை கம்பெனிகளில் மிகப்பெரிய அளவில் ஆட்குறைப்பினை இனி வரும் காலங்களில் தவிர்க்க முடியாது. காரணம் இப்போதைய காலத்தில் சேவைக் கம்பெனிகள் இரண்டாம் நிலை வேலை அதாவது ஒரு தொழில்நுட்பத்தை கம்பெனிகளுக்கு ஏற்றவாறு customize செய்து கொடுக்கும் வேலையை செய்து கொடுக்கின்றனர். அவற்றுக்கான தேவை இனி வரும் காலங்களில் மென்பொருள் துறையில் குறைவு. ஏனெனில் உற்பத்தி செய்பவர்களே அவர்களுடைய client ற்கு தேவையான அனைத்தையும் செய்து தருகின்றனர். இடையில் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான தேவை இப்போது உள்ள அளவு இருக்காது. அதனை உணர்ந்து நம் எதிர்காலத்திற்கு திட்டமிடுதலே இப்பிரச்சினைய தீர்ப்பதற்கான சரியான வழியாக இருக்கும் என்றே நான் கருதுகிறேன்.

The Power of Communication – Helio Fred Garcia

Helio Fred Garcia is the president of the Crisis Management Firm Logos Consulting Group. By accidentally I got the opportunity to read his book The Power of Communication. As per the title the book covers the importance of communication skills. But where it differ from other books of same type is Garcia not explaining the concepts or importance of communication directly. 80% of the books covers real world scenarios where communication played major role. Out of 10 chapters in almost 8 chapters he explains the pathetic and wonderful situations (in corporations, government sectors, not for profit organizations) which happened only because of Communication.

The book describes communication as a war. Wherever it is possible Garcia took the opportunity to explain this as much as close. The book begins with story of Steve Jobs, he used the frame “Ipod, 1000 songs in your packet” to introduce & promote the ipod in the launch event. Garcia explained that Jobs used the power of communication instead of the power of technology to explain. Even if he explained the technical specification we are not sure whether would reached as much as he achieved by this.

Also in the same way he explained the situations occurred in the hewlett packard management board because of Hurd termination. Also the Hurricane Katrina situation and how the government handled it. Even though they helped and rescued lot of people, because of early high expectation set up and improper communication the received bad impression on them.

In the last three chapters only he explained the ways how the communication needs to be done and several other factors over that. And also he explains the role of metaphor in communication and how to face the audience, how to respond, how to stand,etc., A nice book for people who wants to lead and makes their communication effective.

The last point I remember is even though I completed this book, the phrases used in this book are in my primary memory. I think that’s the success of this book. Below are few of those quotes.

Effective Communication is a force multiplier

Planning is not looking at Calender; Looking at Chessboard

Humans are not thinking machines; We are feeling machines who also think

In the illusion what we see overrides what we hear

Better Words, Stronger Words, Fewer Words

மனதை நெருடும் ஒரு காணொளி

எத்தனையோ குறைகளைக் கூறிக்கொண்டும், மற்றவர்கள் மீது வெறுப்பை உமிழ்ந்துகொண்டு வாழும் இவ்வுலகில் இத்துனை குறைகள் இருந்தாலும் மற்றவர்களுக்காக வாழும் உயர்ந்த உள்ளம் கொண்ட சகோதரிகள். மனதை நெருடும் ஒரு காணொளி.