|

தரம் தாழும் செய்திகள்

 

செய்திகளை செய்தி சானல்களின் வழியாக அறிந்து கொள்ள முயலக்கூடாது என்பது நான் 24 மணி நேர செய்தி சானல்கள் வந்த சில காலங்களிலேயே எடுத்த முடிவு. இருப்பினும் கலைஞர் மரணித்த நாளின் நேரலை நிகழ்வுகளைப் காண்பதற்காக‌ செய்தி சானல்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

காலை சில மணி நேரங்களுக்கு வெறும் பின்னணி இசையுடன் மட்டும் ராஜாஜி ஹாலில் நடைபெற்ற நிகழ்வுகள் ஒளிபரப்பப்பட்டன. சில மணி நேரங்களிலேயே அனைத்து செய்திச்சேனல்களிலும் நெறியாளரும், பத்திரிக்கையாள‌ர், அரசியல் செயல்பாட்டாளர், சமூக ஆர்வலர் என்ற பெயரில் உள்ளவர்களும் விவாதிக்கத்தொடங்கி விட்டார்கள். நானும் எந்தச்சேனலில் விவாதமில்லாமல் ஒளிபரப்பு செய்கிறார்களோ அந்த சேனலுக்கு மாற, அவர்களும் மேற்சொன்ன‌ நபர்களோடு விவாதிக்கத் தொடங்க‌, நானும் நபர்கள் விவாதிக்காத சேனலுக்கு மாறி கடைசியில் எல்லா சேனல்களுமே இன்ன பிற நபர்களாகிவிட எந்த சேனலில் அதிகபட்ச திரையளவில் நிகழ்வுகளை ஒளிபரப்புகிறார்களோ அங்கே நிலைகொண்டேன். தொலைக்காட்சியின் ஒலியளவை பூஜ்யமாக்கிக் கொண்டேன்.

அந்த இன்ன பிற நபர்கள் பேசிய விவரங்கள், மற்றும் அவர்கள் பேச்சின் தரம் அவர்களைப் பொறுத்து இருந்தது, அல்லது அவர்களின் பேச்சின் தரத்திற்கே அவர்கள் இருந்தார்கள். அவர்கள் பேசிய விவாதங்களை சில மணித்துளிகள் கவனித்தேன். அதன் உள்ளடக்கத்தினை விவாதிக்க அல்லது ஆராய தனிக்கட்டுரை எழுதவேண்டும். அதனால் அது இப்போதைக்கு வேண்டாம்.

ஆனால் என்னுடைய ஆதங்கம் எல்லாம் இந்த அளவிற்கு தரம் குறைவானவ‌ர்களை, அல்லது தரம் இல்லாதவர்களை ஏன் தொலைக்காட்சிகள் விவாததிற்கு தேர்வு செய்கிறார்கள் அல்லது அழைக்கிறார்கள் என்பதாகவே இருந்த‌து. ஆனால் அப்படி எந்த அளவுகோலும் இல்லை என்ப‌துதான் உண்மை. சரி விவாதம் அல்லாத மற்ற நிகழ்ச்சிகளின் குறிப்பாக செய்திகளின் தரம் எவ்வாறு இருக்கிறது என்று பார்த்தேன். அவையும் அப்படியே. ஏன் இந்த அளவிற்கு தரம் தாழ்ந்து போய்விட்டன நம் செய்திகள் அல்லது நம் செய்தி சேனல்கள்?

இவற்றிற்கான காரணங்கள் மற்றும் இவற்றை நாம் எவ்வாறு எதிர்கொள்ளலாம் அல்லது கையாளலாம் என‌ நான் இவற்றைத் தொகுத்துக்கொள்கிறேன்.

  1. வியாபார போட்டி
  2. 24 மணி நேர செய்திகளுக்கான தேவை
  3. திறனற்ற பணியாளர்கள் மற்றும் திறனை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கப்படாத பணியாளர்கள்

1. வியாபார போட்டி

ஒரு தொலைக்காட்சி சேனலுக்கான உரிமையை பெறுவதில் தொடங்கி, அதனை நடத்துவது வரை எத்துனை செலவு பிடிக்கக் கூடிய காரியம் என்பது அத்துறையில் சற்றேனும் அறிதல் உள்ளவர்களுக்குப் புரிந்த ஒன்று. இத்தனை கோடிகளை செலவு செய்துவிட்டு, நீண்டகால சமூக‌ பயன‌ளிக்கக் கூடிய‌ சேவைகளை மட்டும் செய்கிறோம் என்று நடத்துவார்களேயானால் அது பொதிகைத் தொலைக்காட்சியைப் போல ஆகிவிடும். சில காலத்தில் அதனையும் மூட வேண்டியிருக்கும். எதார்த்தம் இதுவே. அதனால் செய்தி சேனல்கள் சமூகத்திற்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய பங்களிக்கிறார்கள் என்ற எண்ணத்தை முதலில் நாம் விட்டுவிட வேண்டும்.அவர்கள் நடத்துவது செய்தி நிறுவனங்கள். நிறுவனங்களை அடிக்கோடிடுக. அவ்வளவுதான்.

செய்தியே இல்லாத பொழுது மூத்திர சந்தின் அவலநிலையை சிறப்புச் செய்தியாக வெளியிடுவார்கள். வெறொரு செய்தி கிடைத்துவிட்டால், மூத்திர சந்தினை அப்படியே விட்டுப் போய்விடுவார்கள். அவர்கள் மூத்திர சந்தினை சுத்தப்படுத்த வேண்டுமென நாம் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் சொல்வதுப‌டி அவர்கள் சமூக மாற்றத்திற்கான ஒரு நிகழ்ச்சியை படைக்கிறார்களென்றால், அந்நிகழ்ச்சிக்கு அடுத்த ஒருமுறையாவது அந்த மூத்திர சந்தின் நிலையினை விவாதிக்க அல்லது செய்தியாக்க வேண்டும் தானே? அப்பொழுதுதானே அவர்கள் காட்டும் சமூக அக்கறை உண்மையானது. இல்லையென்றால் அந்த மூத்திர சந்தில் மூத்திர சந்தில் மூத்திரம் இருக்க வருபவன் போலத்தானே அவர்களும். இருவருமே தேவை வந்த‌ பொழுது மூத்திர சந்துக்கு வந்துவிட்டு போய்விடுகிறார்கள். அதற்குப் பின்னர் மூத்திர சந்தினை எண்ணுவதேயில்லை. அவன் பரவாயில்லை. தான் சமூக நீதியைக் காக்கும் பணியை செய்கிறேன் என்றோ, சமூகத்தினை மேம்படுத்துகிறேன் என்றோ கூறிக்கொள்வதில்லை.

சரி, தகவலுக்கு வருவோம். எந்தவொரு எதிர்கால விளைவுக்கும் அதற்கு முந்தைய காலத்தின் சில அல்லது பல‌ நிகழ்வுகள் காரணமாய் இருக்கும். ஆனால் அந்த கடந்தகால செயலின் காரணி, இந்த எதிர்கால செயலுக்காகத் திட்டமிட்டு அந்த செயலை செய்வதில்லை. நாமும் இன்று செய்யும் ஒரு செயல் நாளைய சமூகத்தின் மாற்றத்திற்கு ஏதோவொரு விதத்தில் காரணியாக இருக்கும். தனி நபர் மட்டுமல்லாமல், ஒவ்வொரு துறையும் செய்யும் செயல்களும் அவ்வாறே.

உதாரணமாக அதிகமான கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தால், அதன் மூலம் அதிக இடங்கள் உருவாகி அது சமூகத்தின் கீழ் நிலையிலுள்ள மாணவர்கள் கல்லூரி வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும் என்ற நோக்கில் பலநூறு கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. சமூகத்தின் கீழ்நிலையிலுள்ள பல‌ மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்தார்கள். ஆனால் கல்லூரிகளின் தரமும், கல்லூரி ஆசிரியர்களின் தர‌மும் கீழே போனது. ஒரு செயலின் விளைவு, நாம் விரும்பியபடி நடைபெறலாம், அல்லது நடைபெற்றதாக நாம் எண்ணிக்கொள்ளலாம். அத்தோடு புதியதாக ஒன்றும் நடக்கலாம், அதற்கு இந்த செயல் காரணமாக இருக்கலாம். இந்த அளவில்தான் இன்றைய செய்தி தொலைக்காட்சிகளினைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் நிறுவனத்தினை நடத்துகிறார்கள். எதிர்கால சமூக மாற்றத்தில் இவர்களுடைய செயல்களும் ஒரு காரணியாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். அத‌னால் இவர்கள் அந்த சமூக மாற்றத்திற்காகவே அவர்களுடைய பணியினை செய்வதாக நாம் நினைக்க வேண்டியதில்லை.

2. 24 மணி நேர செய்திகளுக்கான தேவை

ஒரு நாளைய செய்திகளை அரை மணி நேரத்திற்காக சுருக்கியவர்கள், இப்பொழுது அரை மணி செய்தியினை நாள் முழுவதும் சொல்ல வேண்டிய சூழலில் இருக்கிறார்கள். இது செய்திகளின் தரம் குறைந்ததற்கான முக்கியமான‌ காரணம். அதனால் ஏதாவது சொல்லியாக வேண்டிய கட்டாயத்தில் கள்ளத் தொடர்புகளையெல்லாம் சிறப்புச் செய்தியாக போட்டு அதற்கும் நான்கு பேர்களை கூட்டிக்கொண்டு வந்து உட்கார்ந்து விடுகிறார்கள். ஒரு தெருவோர டீக்கடையில் பேசுவதற்கு கூட தகுதியில்லாத நபர்களையும், செய்தியையும் எடுத்துக்கொண்டு விவாதிக்கத் தொடங்கி விடுகிறார்கள். அந்த விவாதத்தின் தரமும் டீக்கடைப் பேச்சுக்களின் தரத்தினை விட குறைவாகவே இருக்கிறது. இதற்கு எந்த தொலைக்காட்சியும் தமிழில் விதிவிலக்கல்ல. எப்போதாவது வரக்கூடிய நல்ல விவாதங்களையும், நல்ல நபர்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் 98 விழுக்காடு குப்பைதான். அதனால்தான் ஒரே செய்தியை செய்தி வாசிப்பாளர் ஒறுமுறையும், களத்திலிருக்கும் செய்தியாளர் மறுமுறையும் சொல்கிறார்கள். அதிலும் களத்திலிருக்கும் செய்தியாளர்கள் பேசுவதன் தெளிவு ஆகச்சிறப்பு.

3. திறனற்ற பணியாளர்கள் மற்றும் திறனை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கப்படாத பணியாளர்கள்

ஒருவர் தான் செய்தித் தொலைக்காட்சி சேனலிலோ பணிபுரிவதாகச் சொன்ன மாத்திரத்தில் அவரை அறிவுஜீவி என்று நம்புவது இன்றைய நிலையில் மிகவும் அபத்தமானது. சமூகத்தில் இருக்கும் வெகுஜன குடிமக்களுக்கு இருக்கும் புரிதலும், தெளிவும், அறிவும் பல தொலைக்காட்சி பணியாளர்களிடம் இல்லை. இது நான் என்னளவில் அறிந்த அல்லது உணர்ந்த ஒன்று. ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே ஆழ்ந்த அறிவுக்கூர்மையும் அறிந்து கொள்ளும் ஆர்வமும் உள்ள பணியாளர்கள் இருப்பார்கள். மற்றவர்களெல்லாம் சில டெம்ப்ளேட் கேள்வி பதில்களோடே பணி செய்து கொண்டிருப்பார்கள். அதுவே அத்தகைய நிகழ்ச்சிகளுக்கு போதுமான ஒன்று. ஒரு முப்பது நாள் இந்த விவாத நிகழ்ச்சிகளை காண்போமேயானால், நீங்களும் நானும் கூட‌ ஒரு விவாதத்தினை தொகுத்து வழங்கி விடலாம். சில டெம்ப்ளேட் கேள்விகளும் பதில்களும் போதும்.

இதனால்தான் இவர்கள் வெளியிடும் செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகளின் தரம் இத்தனை தரக்குறைவாக‌ இருக்கிறது. இந்த தரக்குறைவான பணியாளர்கள் இத்தனை தரக்குறைவான நிகழ்ச்சிகளை உருவாக்குகிறார்கள், அல்லது இந்த‌ தரக்குறைவான நிகழ்ச்சிகள் இத்தனை தரக்குறைவான பணியாளர்களை உருவாக்குகிறது. இரண்டில் ஒன்று அல்லது இரண்டும் உண்மை. செய்தியாளர் ஒரு செய்தியை வாசித்து விட்டு, களத்திலிருக்கும் செய்தியாளரிடம் விரிவான தகவல்களைக் கேட்கலாம் என்று அவரோடு தொடர்பை இணைப்பார். அந்த இணைப்பு தேவையே இல்லாத ஒன்றாக இருக்கும். இருந்தாலும் அந்த வசதி இருப்பதனாலேயே, அவரை நேரடியாக தொடர்பில் இணைப்பார். களத்தில் இருக்கும் செய்தியாளர் ஏதோ புதிய தகவல் ஒன்றை சொல்லப்போகிறார் என்று நாம் நினைப்போமேயானால் அங்கேதான் ட்விஸ்ட். செய்தியாளர் சொன்ன அதே செய்தியை களப்பணியாளர் மீண்டும் சொல்வார். ஒரு வித்தியாசம், செய்தி வாசிப்பாளர் தன் முன்னே எழுதியிருக்கும் செய்தியை வாசிப்பதால், வரியில் சற்று இலக்கணம் சரியாக இருக்கும். களப்பணியாளர் தானாகப் பேசுவார், அதனால் இலக்கணம் மற்றும் எந்த ஒரு விதியையும் நாம் எதிர்பார்க்கக் கூடாது. அவர் இடைவெளியில்லாமல் க‌டகடவென்று பேசினால் மட்டும் போதும். ஒரு தடவை அவர்கள் பேசும் மொழியினையும், அச்செய்தி சார்ந்து ஏதெனும் புதிய அல்லது ஆழமான தகவல் எதையாவது சொல்கிறார்களா என்று கவனித்துப்பாருங்கள். எத்தனை அபத்தமாகப் பேசுகிறார்கள் என்பது புரியும். பெரும்பாலும் இப்படி சில வரிகள் இருக்கும், ‘இங்கே நம்மால் காணமுடிகிறது’,’காலையிலிருந்தே மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்’,’பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது’

அப்படியானால் செய்தி சேனல்களையே பார்க்கக்கூடாதா? வெறென்ன வழி? பார்க்கலாம், கீழ்க்கண்ட சுய கட்டுப்பாடுகளோடு.

செய்தித் தொலைக்காட்சிகள் அளிக்கும் சில காணொளிகள் முக்கியமானது. நம்மால் அவ்வளவு செய்திகளின் காணொளிகளையும் பயணித்து பார்க்க முடியாது. அவர்களின் தொடர்பு எல்லை பெரியது. அந்த அளவில் அது முக்கியமானது. அதனால் காணொளி மற்றும் நிகழ்கால நிகழ்வுகளின் சாரத்தை அதிலிருந்து எடுத்துக்கொள்ளலாம். அச்செய்தி தொடர்பாக மேற்கொண்டு அறிய வேண்டுமெனில் அது நம்முடைய பொறுப்பு. உதாரண‌த்திற்கு தமிழகத்தில் நிகழ்ந்த ஒரு கலவரத்தைப் பற்றிய செய்தியின் சாரத்தை அவர்களிடமிருந்து எடுத்துக் கொண்டு, அது தொடர்பான ஆழமான தகவல்களைத் தேடுவது நாமாக இருக்க வேண்டும். அதனை விட்டுவிட்டு அத்தொலைக்காட்சிக்குள்ளேயே அச்செய்தியினை புரிந்து கொள்ளத் தொடங்கினால், அவர்களுடைய களத்திலிருக்கும் செய்தியாளரையே நாம் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான். சில காலம் கழித்து நாம் அதற்கு பழகி விடுவோம் அல்லது பழக்கி விடுவார்கள்.

சரி, இப்படித்தான் செய்திகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமா என்றால், உண்மையாக ஆழமாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென விரும்பினால் இதுதான் வழி. அதன் மற்றொரு பக்கமும் உண்டு. இன்றைய இணைய உலகில் ஒரு நிகழ்கால செய்தி தொடர்பாக உடனடியாகத் தேடுவோமேயானால் அது நம்மை வெற்று விவாத வலைத்தளங்களுக்குத்தான் கொண்டு செல்லும். ஆக விவாதிக்க/அறிந்துகொள்ள விரும்பும் நிகழ்கால நிகழ்வுகளை சற்று காலம் கழித்து தேடுவோமேயானால் இந்த வெற்றுக்கூச்சல் நுரைகளெல்லாம் பெரும்பாலும் அடங்கியிருக்கும், அதன் அடி ஆழத்தை தெளிவாக நன்றாகவே நோக்க முடியும். அது மட்டுமின்றி அந்நிகழ்வு அக்கால இடைவெளியில் ஒரு தெளிவை அடைந்திருக்கும். அதன் மூலம் அச்செய்தியின்னை நன்றாக புரிந்து கொள்ள முடியும். இது நிகழ்கால செய்திகளுக்கு மட்டும்தான், வரலாற்று நிகழ்வுகளுக்கு போதுமான புத்தகங்கள் போதுமான அளவில் உள்ளன. அவற்றை எடுத்து வாசிக்கலாம். ஏனென்றால் புத்தகங்கள் எந்த தொலைக்காட்சி சேனலையும் விட ஆயிரம் மடங்கு மேலானவை. அவை கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் ஒரு சேர‌ வாழ்பவை. நம் செய்தி சேனல்களின் இன்றைய செய்தியை நாளைக்கு கூட கேட்க முடியாது!

Similar Posts

  • | | | | |

    புதிய தலைமுறை வார இதழில்

    நான் எழுதிய இந்திய உளவுத்துறை எவ்வாறு செயல்படுகிறது புத்தக விமர்சனம் புதிய தலைமுறை 31 டிசம்பர் தேதியிட்ட வார இதழில் வெளிவந்துள்ளது. அக்கட்டுரை. ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண் என்பது வள்ளுவர் வாக்கு. அதாவது நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்திலேயே ஓர் அரசு சிறப்பாகச் செயல்பட முடியும். ஆம் இன்றும் அதுதான் நிலை. கடந்த 50 ஆண்டுகால வரலாற்றை…

  • உலகின் நிலைப்புள்ளி

    பெரும்பாலும் அதீத கேளிக்கைகள் நடைபெறும் நிகழ்வுகளுக்கு செல்லும் வழக்கம் இல்லாத நான் சமீபத்திய‌ காலங்களில் அத்தகைய‌ நிகழ்வுகளுக்குச் செல்கிறேன். அங்கே நான் கண்ட சில கேளிக்கை நிகழ்வுகள் சென்று வந்த சில நாட்களுக்குப் பின்னரும் என் மனதில் நீடித்துக்கொண்டே இருந்தது, முற்றிலும் கேளிக்கைக்காகவே இத்தனை வளம் வீணடிக்கப்படுகிறதே என. உதாரணமாக ஓர் மிகப்பிரமாண்டமான செயற்கை நீரூற்று. அங்கே அது கண்டிப்பாக தேவையில்லைதான். அதனைக் காண்பதனைத்தவிர வேறொன்றும் எவரும் எதுவும் செய்யவில்லை.மிக மோசமான நிலையில் வாழும் மக்களின் வாழ்க்கையினை…

  • ஜெயமோகன் அவர்களிடமிருந்து

    மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நான் எழுதிய மடலுக்கான ஜெயமோகன் அவர்களுடைய‌ பதிலை இங்கே பதிவிடுகிறேன். நான் படித்த சில புத்தகங்கள் வாயிலாகவே என்னையறியாமல் வந்த தலைக்கனத்தின் மீது மீண்டும் ஒரு குட்டு. நான் செப்பனிடப்படுகிறேன். அன்புள்ள மகிழ்நன் உங்கள் முந்தைய கதைக்கான என் பதிவுக்கு நீங்கள் இப்படி எதிர்வினையாற்றியிருக்கிறீர்கள் என்றால் வருந்துகிறேன். நீங்கள் உங்கள் இடத்தை, நிலையை சற்றும் பரிசீலனைசெய்ய தயாராக இல்லை என்றுதான் அர்த்தம். எழுத்தாளர்களின் இயல்பு அது அல்ல. உங்கள் கடிதம் அதிலுள்ள கோபம்…

  • Ayurvedic Home Remedies: Medicinal Uses of ‘Touch Me Not’ Plant – Part 1

    The ‘Sensitive Plant’ (Touch-me-not) ‘thotta chinungi’ in Tamil and ‘thotta vaadi’ in Malayalam has been the subject of extensive studies over the recent years for its medicinal properties. This plant is effective in treating a wide range of disease conditions ranging from allergy, asthma, menstrual problems, hemorrhoids, premature ejaculation, to hypertension, cholesterol, snake bite and…

  • தினம் ஒரு வார்த்தை 10 – boodle

    boodle – (ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள்) 1. மொத்தமாக அல்லது அதிக அளவிலான 2. முறைகேடாக பணம் பெறுதல். உதாரணமாக‌ லஞ்சம் 3. பணம் என்பதன் பேச்சு வழக்கு Sample Sentence Get away with this whole boodle  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.