FACTFULNESS – Hans Rosling

ஸ்வீடன் நாட்டினைச் சேர்ந்த மருத்துவர் Hans Rosling ஆல் எழுதப்பெற்ற புத்தகம். அவருடைய பணி பல்வேறு நாடுகளில் ஏற்படக்கூடிய நோய்த்தொற்றுக்களை ஆராய்ந்து அதனை ஆரம்பத்திலேயே தடுப்பது மற்றும் மருத்துவ, சுகாதார படிநிலைகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் நாடுகளில் உலக சுகாதார நிறுவனம் போன்ற நிறுவனங்களின் சார்பாக பணியாற்றுவது. அத்தகைய பணிகளின் போதும் தன்னுடைய மற்ற அனுபவங்களின் வாயிலாகவும் கற்ற, அறிந்த தகவல்களை பல்வேறு அறிஞர்கள் கூடும் நிகழ்வுகளில் எடுத்துரைப்பதினையும் தன்னுடைய பணியாக செய்து வந்தார்.

பெரும்பாலும் நாம் ந‌ம்முடைய மனதின் முன்முடிவின் காரணமாக பல்வேறு விஷயங்களில் இவ்வுலகின் நிலை பற்றி ஒரு எதிர்மறைப்பண்பைக் கொண்டிருப்பதை பல்வேறு ஆய்வுகளின் மூலமும் தான் மேற்கொள்ளும் கருத்துக்களின் மூலமும் தெரிந்து கொள்ளும் ஹான்ஸ் இவ்வுலகம் அவ்வாறு இல்லை, இவ்வுலகம் அனைத்து விஷயங்களிலும் அல்லது பெரும்பாலான விஷயங்களில் நாம் மேம்பட்டுக்கொண்டே வருகிறது என்பதனை தரவுகளின் அடிப்படையில் தன்னுடைய மேடைப்பேச்சுக்களில் தரவுகளுடன் விவரிக்கிறார். தன்னுடைய வாழ்வின் பெரும்பகுதியை அத்தகைய மேடைகளில் செலவழித்த ஹான்ஸ் அதனை நூலாக வெளியட எண்ணம் கொண்டு வெளியிட்டதே இந்நூல். அதற்கு அவருடைய மகன் Ola Rosling – ம், மருமகள் Anna Rosling Ronnlund ம் உதவியிருக்கிறார்கள்.

இந்நூலின் தொடக்கத்தில் இவ்வுலகம் பற்றிய நம்முடைய புரிதலுக்காக 13 கேள்விகளைக் கேட்கிறார். மூன்று விடைகளையும் தருகிறார். நாம் நம்முடைய அறிதலைக்கொண்டு அவற்றில் சரியான ஒன்றைத் தேர்வு செய்ய‌ வேண்டும்.

உதாரணமாக இன்றைய நிலையில் குறைந்த வருமானமுள்ள உலக நாடுகளில் எத்தனை விழுக்காடு பெண்கள் ஆரம்பக்கல்வியை பூர்த்தி செய்கின்றனர்?

அ. 20 விழுக்காடு
ஆ. 40 விழுக்காடு
இ. 60 விழுக்காடு

நீங்கள் ஒருவேளை 20 அல்லது 40 என்று நினைத்தால் அது தவறு. 60 விழுக்காடு என்பதுதான் சரி. அதனால் நாம் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த‌ பொருளாதார வல்லுனர்கள் கூடியிருக்கும் சபைகளிலேயே மிக மிகக் சொற்பமான நபர்களே இதற்கான சரியான பதிலை சொல்லியிருக்கிறார்கள். இத்தனைக்கும் அவர்கள் ஒவ்வொரு நாடுகளிலும் உயர் பதவிகளில் இருக்கக்கூடியவர்கள். அவர்களுக்கு இத்தகைய தகவல்கள் கைக்கெட்டும் தூரத்தில் உண்டு. இருப்பினும் அவர்களுடைய பதில் பல் பத்தாண்டுகளுக்கு முந்தைய தகவல்களைக் கொண்டே இருந்திருக்கிறது. அத்தோடு இதே கேள்வி ஒவ்வொரு நாடுகளைச் சேர்ந்தவர்களிடமும் கேட்கப்பட்டிருக்கிறது. நார்வே, சுவீடன் இரு நாட்டில் மட்டும் 25% பேர் சரியான பதிலைக் கூறியிருக்கிறார்கள். அமெரிக்காவில் சரியான பதிலைக் கூறியவர்கள் 5%. பிரான்ஸில் 4%, ஹங்கேரியில் 2%.

இதுபோல அனைத்துக்கேள்விகளுக்கும் கிடைத்த பதில் அவரை வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது. காரணம் அவையெல்லாம் தவறாக இருப்பதோடல்லாமல் அவையெல்லாம் எதிர்மறையின் பக்கமாக இருந்திருக்கின்றன. நாம் நமக்கு வந்தடையும் எதிர்மறை செய்திகளாலும், நம்முடைய தொன்றுதொட்டு வரும் உள்ளுணர்வுகளினாலும் எதிர்மறையாகவே காணும் கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கின்றோம். இன்றைய தகவல் உலகில் அனைத்து தகவல்களும் முழுமையாகக் கிடைக்கின்றன. ஆகவே நமக்கு வரும் செய்திகளையும், எண்களையும் மட்டும் வைத்துக்கொண்டு நம் உள்ளுணர்வினை செயல்படவிடாமல் ஒட்டுமொத்த தகவல்களையும் பார்த்து அதன் பின்னர் நம் தர்க்க புத்தியை செயல்பட வைப்பதே நலம் பயக்கக்கூடியது நமக்கும் இவ்வுலகிற்கும் என்கிறார் ஹான்ஸ்.

மேலே கூறியது போன்ற பல்வேறு தகவல்களை நம்முடைய முன்முடிவு புத்தியினால் எவ்வாறு அறியாமல் விட்டுவிடுகிறோம், ஒரு அரசின் கொள்கை முடிவு எடுக்கும் நிலையில் இருக்கும் ஒருவர் இது போன்ற நிலையில் இருப்பின் அது அந்நாட்டின் வளர்ச்சியினை எப்படியெல்லாம் பாதிக்கும்? அரசின் திட்ட நிதி தேவையானவற்றிற்குச் செல்லாமல் முக்கியத்துவம் இல்லாத ஒன்றிற்கு செல்லும் வாய்ப்புகள் எப்படியெல்லாம் உருவாகும் போன்றவற்றை இந்நூலில் எடுத்துரைக்கிறார்.

பத்திரிக்கையாளர்கள் வாசிக்க வேண்டும். பத்திரிக்கையாளர் அல்லாதவர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.