மருந்து உலகம் – மாய உலகம்

ayurvedaஇன்றைய இந்தியக்குடும்பங்களில் எத்தனை குடும்பங்கள் மருந்துப்பொருட்கள் வாங்காத குடும்பங்கள்? 5 விழுக்காட்டிற்கும் குறைவு.

குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் அதிக அளவிலான‌ மருந்து மாத்திரைகள் வாங்கப்படுகின்றன. இந்தியர்களின் சராசரி ஆயுள் உயர்ந்திருந்தாலும், பெரும்பாலானோர் தன் வாழ்நாளை ஏதாவது ஒரு நோயுடன் கழிக்கின்றனர். வயது குறைந்தோறும் பல நோய்களுக்கு ஆளாகின்றனர்.40 வயது உடையவர்களுக்கு சர்க்கரை நோய் வருவது இயல்பாகி விட்டிருக்கிறது. மருந்து மாத்திரைகள் இல்லாத வாழ்வென்ப‌து இல்லாது போனது. 

இவையெல்லாம்தான் நவீன இந்தியா.

இப்போதைய பிரச்சினை ஒவ்வொரு குடும்பத்திற்குமான மருத்துவச்செலவு. மாதந்தோறும் ஆயிரக்கணக்கில். ஏன்?

மருந்துப் பொருட்கள் என்ற நிலையில் பேரம் என்ற ஒன்றே கிடையாது. என்ன விலை சொன்னாலும் வாங்கும் நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அது மட்டுமின்றி வாங்கும் பொருளின் நிறுவனமும், அதே பொருள் வேறு நிறுவனத்தால் விற்கப்படுகிறதா என்ற தகவலும் அத்துறையில் உள்ளோரைத்தவிர ஏனைய மக்களுக்குத் தெரியாது. ஒரு மாத்திரை அட்டையின் விலை 200 ரூபாய் என்பது மிகச் சாதரணமாக ஆக்கப்பட்டிருக்கிறது. ஆரோக்கியம் என்ற காரணத்தால் மருத்துவர் கூறும் மருந்துகள் அமிழ்தமாகக் கொள்ளப்படுகின்றன.

என்ன காரணம்? பின்புலத்தை விவாதிப்போம்.

உலக மருந்து நிறுவனங்களின் தலையாய விற்பனைக் களம் இந்தியா. காரணம் இங்கே 120 கோடி நுகர்வோர் இருக்கிறார்கள். மேலும் இந்தியர்களின் மனப்பாங்கு உடனடித்தீர்வு என்பதாய் இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால் தான் உடனடி நிவாரணத்துக்கான வீரியமிக்க பல மருந்துகளை சந்தையில் அதிக விலையில் விற்கிறார்கள். வாங்குகிறோம் பின்விளைவுகளை அறியாமலே.

அதோடு இந்த மருந்துகளின் உற்பத்திச்செலவுக்கும், விற்பனை செய்கின்ற விலைக்குமான வித்தியாசம் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம். இதற்கு மருந்து நிறுவனங்கள் கூறும் காரணம் மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வுகளுக்கான செலவு அதிகம் என்பது. சரிதான், ஆனால் 10 கோடி நுகர்வோர் இருக்கும் நாட்டில் விற்கும் விலையிலா 120 கோடி நுகர்வோர் இருக்கும் நாட்டிலும் விற்பது? ஏமாறுகிறோம்.

அதோடு மருந்து தாயாரிப்புகளுக்கு காப்புரிமை வேறு உண்டு. அதாவது முதல் 20 ஆண்டுகளுக்கு வேறு எந்த நிறுவனமும் அந்த‌ நிறுவனம் கண்டறிந்த மருந்தை உற்பத்தி செய்து விற்கக்கூடாது. காப்புரிமை முடிந்த பின்னரே அந்த மருந்தை மற்ற நிறுவனங்கள் உற்பத்தி செய்து விற்கமுடியும். மற்ற நிறுவனங்களுக்கு சில ஆண்டுகளுக்கு பிறகு அனுமதி அளிப்பதன் நோக்கம் அதற்குள் மருந்து கண்டறிந்த நிறுவனம் தன் ஆராய்ச்சி செலவுகள் மற்றும் இலாபத்தை சம்பாதித்துக்கொள்ள முடியும் என்பதுதான். காப்பிட்டுக்காலம் முடிந்த பின் அனைத்து நிறுவனங்களயும் தயாரிக்க அனுமதிப்ப‌து மக்களுக்கு மருந்துகள் குறைந்த விலையிலும் கிடைக்கும் என்பதற்காக‌.

இதுதான் விதிமுறை. ஆனால் இன்றோ மருந்து நிறுவனங்கள் காப்புரிமை காலாவதியாகக்கூடிய காலங்களில் ஏதாவது மாற்றத்தை செய்து மேம்படுத்தப்பட்ட மருந்தாக‌ மீண்டும் சந்தையை மருத்துவர்கள் துணையோடு ஆக்கிரமிக்கின்றனர்.இதனாலேயே இந்திய சந்தயை உற்று நோக்குகின்றன பன்னாட்டு நிறுவனங்கள். அதற்காக சட்டத்தை வளைக்கவும் தயாராக இருக்கின்றன. 

அரசு என்ன செய்கிறது?

காலம் கடந்த பின் கட்டுப்படுத்த‌ விழைகிறது. 2010 ஆண்டு முதல் இந்தியாவில் 26 மருந்துகள் சோதனை செய்யப்படாமல் சந்தையில் விற்கப்படுகின்றன. இது நமது மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்த தகவல். கண்டுபிடிக்காத மருந்துகள் எத்தனையோ?

கடந்த ஜூன் மாதம் இந்திய அரசு முக்கியமான மருந்துகளுக்கான விலைக்கட்டுப்பாட்டை அரசிதழில் வெளியிட்டு 45 நாட்கள் அவகாசம் அளித்தது. அந்த 45 நாட்களுக்குள் மருந்து நிறுவனங்கள் அரசு குறிப்பிட்ட மருந்துகளின் விலையை மாற்றி புதிய விலையில் விற்க வேண்டும். ஏற்கனவே கடைகளுக்கு அனுப்பிய பொருள்களையும் திரும்பப் பெற்று புதிய விலையுள்ள விலைச்சீட்டுக்களை ஒட்டி மீண்டும் விற்க‌ வேண்டும். அந்த 45 நாள் கெடு ஜூலை 29ந்தேதியுடன் முடிந்து விட்டது. ஆனால் 25 விழுக்காடு மருந்துகள் மட்டுமே புதிய விலையுடன் சந்தையில் விற்கப்படுகின்றன. 

அதோடு மட்டுமின்றி சிப்லா மருந்து நிறுவனம் அரசு உத்தரவிற்கு நீதிமன்றத்தில் தடையாணையையும் பெற்று விட்டது. மற்ற நிறுவனங்களும் இனி இதனைப் பின்பற்றும் என்பதில் ஐயமில்லை.

மேலும் கடந்த ஜூன் மாதம் அரசு பயோகிளைடசோன் என்ற மருந்தின் உற்பத்தி விற்பனை இரண்டையுமே தடை செய்தது. பின்னர் ஜூலை மாதம் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. காரணம் மருத்துவக்குழுவின் ஆலோசனைப் படி எச்சரிக்கை வாசகத்தோடு விற்பனை செய்யலாம் என்று (புகையிலை, மது போன்று). என்ன நடந்தது இடையில்? தெரியாது.

ஆனால் ஒன்று மட்டும் உறுதி. இந்தியர்கள் உலக மருந்துகளின் சோதனை எலிகளாக மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் அது. வித்தியாசம் என்னவென்றால் நாமே பணத்தைக் கொடுத்து வாங்கிக் கொள்கிறோம்.

என்ன செய்வது?

உடனடியாக ஒன்றும் செய்துவிட முடியாது. ஆனால் மாற்றத்திற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். பொதுவாக நமது மனநிலை நிரந்தரத்தீர்வு என்பதை விட உடனடித்தீர்வு என்பதாய் இருக்கிறது. இந்த மனநிலை கூட சில நூற்றாண்டுகளில் ஏற்பட்டதுதான். 16 ம் நூற்றாண்டு வரை ஆங்கில மருத்துவம் என்பதே இங்கு இல்லை. அதன்பின்னர் தான் அது தொடங்கியது. அதுவரையில் ஆயுர்வேதம் சிறப்புற்று விளங்கியிருக்கிறது. 

ஆங்கில மருத்துவத்தில் நிவாரணம் உடனடியாக இருந்ததால் மக்கள் படிப்படியாக ஆங்கில மருத்துவத்தை நாடினர். ஆனால் அப்போதைய பல கொடிய நோய்களுக்கு, ஆங்கில மருத்துவம் 90 விழுக்காடு கட்டுப்படுத்தும் பணியையே செய்தது. வேறெந்த விளைவுகள் இல்லாமல் நோயைக் குணப்படுத்தக்கூடிய ஆங்கில மருந்துகள் வெகு சிலவே இருந்தன‌…... ஆனால் ஆயுர்வேதத்தில் 90 விழுக்காடு நோயை பக்கவிளைவுகளில்லாமல் குணப்படுத்தக்கூடியது. ஆனால் ஆங்கில மருத்துவத்தினைப்போல் இல்லாமல் சில காலம் பிடிக்கும். இதுவே மக்களை மாறச் செய்தது.

பெரும்பாலான மக்களின் கேள்வி இன்றைய காலத்தின் பெரும்பாலான நோய்களுக்கு ஆயுர்வேதத்தில் மருந்துகளோ, சிகிச்சை முறைகளோ இல்லை என்பதுதான். உண்மைதான். கடந்த 150 ஆண்டுகளில் ஆயுர்வேதத்தில் எந்த பெரிய ஆராய்ச்சிகளும் நடைபெறவில்லை. நடந்த ஒரு சில ஆய்வுகள் கூட பெயரளவிலே தான் நடந்திருக்கின்றன. அதனால்தான் இந்தக் கால நோய்களுக்கான மருந்துகள் ஆயுர்வேதத்தில் குறைவு. சென்ற தலைமுறைகளோடு மருத்துவ முறைகளும், மருத்துவர்களும் அழிந்து போயினர். மேலும் நிவாரணத்திற்கான காலம் சிறிது ஆகுமென்பதால் பெரும்பாலானோர் ஆங்கில ம‌ருத்துவத்திற்கு மாறி, இருந்த ஆயுர்வேதமும் அழிந்தது.

 இப்போது இருக்கும் இரு சில ஆயுர்வேத மருத்துவர்களும், மருத்துவ முறைகளும் பெரும்பாலும் வணிக யுத்திகளோடு இயங்கும் வண்ணம் மாறிவிட்டிருக்கின்றன.

சரி இனிமேலாவது, வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறும் கைவைத்திய முறைகளினைக் குறித்து வைத்துக்கொள்வோம். “எங்க வீட்டுப் பிள்ளைகளுக்கு தமிழ் மருந்து கேட்காது” என்று சொல்வதை விடுத்து நம் தமிழ் மருத்துவத்தைக் காப்போம்.

நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.