இசையும் பாடலும்

நம் மனநிலையை மாற்றும் சக்தி இசைக்கும் பாடலுக்கும் எப்போதுமே உண்டு. இசையும் பாடலும் ஆரம்ப காலம் தொட்டே நம்மோடு இணைந்து வருகிறது. முற்றிலும் படிப்பறிவில்லாத காலகட்டத்திலும் கூட நாட்டுப்புற பாடல்களை பாடியபடியே கிராம மக்கள் வேலை செய்ததை இலக்கியங்களில் காணலாம். இன்றும் சில கிராமங்களில் வேலை நேரங்களின் போது வேலையாட்கள் பாடுவதைக் கேட்கலாம். நன்கு உற்று கவனித்தால் அவர்கள் முதியவர்களாக இருப்பார்கள். ஆனால் இசை என்பது உயர்குடி மக்களுக்கு மட்டுமே என்ற நிலையை பிற்கால உயர்குடி மக்கள் தோற்றுவித்தனர். 

 ஆனால் இன்றைய நிலையில் இசை, பாடல் என்பதெல்லாம் சினிமா இசையையும் பாடலையுமே குறிக்கும் சொற்களாய் மாறிப்போய் விட்டன. இருந்தாலும் இன்றைய இசை கூட ஏதோ ஒரு வகையில் நம்மை அறியாமல் நம்மோடு கலந்து விட்டிருக்கிறது. நாம் கேட்கும் ஒவ்வொரு பாடலும் ஏதோ ஒன்றை நமக்கு நினைவு படுத்துகிறது. 

நம் பள்ளிக் காலத்தில் ஏற்பட்ட முதல் காதலின் போது கேட்ட பாடல்களை மீண்டுக் கேட்கும் பொழுது நமது பள்ளி பருவத்து காதல் நினைவுக்கு வருகிறது. இதே போல் சில பாடல்கள் கல்லூரி நாட்களையும், சில பாடல்கள் சில ஊர்களையும், சில பாடல்கள் திருவிழாக்களையும் நினைவு படுத்துகின்றன. இப்படிப் பல. ஆக நாம் விரும்பிக் கேட்கும் ஒவ்வொரு பாடலும் அந்த காலகட்ட நிகழ்வுகளை தன்னுள்ளே புதைத்துக்கொள்கிறது. அது நாம் அறியாமலேயே நிகழ்கிறது. 

பின்னாளில் எந்த பாடலில் என் பள்ளி நினைவு ஒழிந்திருக்கிறது என்று தேடினால் நம்மால் கண்டுபிடிக்கவே முடிவதில்லை. இயல்பாய் மீண்டும் ஒரு நாள் ஏதோ ஒரு பாடலைக் கேட்கும்பொழுது பழைய நினைவுகள் வெளிவருகின்றன. ஆனால் அதிலும் ஒரு முரண்பாடு உண்டு. பள்ளி நாட்களையோ, காதல் நாட்களையோ மீண்டும் நினைக்க அந்த பாடல்களை நாம் மீண்டும் மீண்டும் கேட்கும்பொழுது அந்த பாடல் தன் பழைய நிகழ்வுகளின் மீது தற்போதைய நிகழ்வுகளை பதிவு செய்து விடுகிறது. பின்னொரு நாள் கேட்கும் பொழுது இந்த நினைவே வருகிறது, பள்ளித் தருணங்கள் நினைவுக்கே வருவதில்லை. அதனால் நாம் மிகவும் விரும்பிய தருணங்களை நினைவூட்டும் பாடல்களை குறைவான முறையே கேட்பதே உத்தமம் என்பதே என் எண்ணம்.

Similar Posts

  • முதல்வருக்கு ஒரு கடிதம்

    மதிப்பிற்குறிய தமிழக முதல்வர் அவர்களுக்கு இவன் புதிய தொழில்நுட்பங்களையும், மென்பொருட்களையும் கற்றுக்கொள்ள விழையும் தமிழன். தமிழின்பால் கொண்ட அன்பால் தன்னால் முடிந்தவரை தொழில்நுட்ப நூல்களையும், மென்பொருள்களையும் தமிழில் மொழி மாற்றம் செய்ய விழைபவன். சிங்கப்பூரிலும் சரி, உலகின் மற்ற நாடுகளிலும் சரி மிகப்பெரிய நிறுவனங்கள் அனைத்திலும் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பது தாங்கள் அறிந்ததே. அதோடு உலகம் சுருங்கி வருவதன் விளைவாக இன்று அனைத்து தொழில்நுட்பங்களும், மென்பொருள்களும் அனைத்து மொழிகளையும் தாங்கி வருகின்றன. உதாரணமாக IBM போன்ற பெரிய…

  • | |

    கொரோனா தோல்வி

    கொரோனாவைக் கையாள்வதில் இந்திய அரசு முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது. இத்தோல்விக்கான முழுப்பொறுப்பும் பாரதிய ஜனதா அரசினையே சாரும். தேர்தல் ஆணையத்திற்கும், இந்தியக் கட்சிகளுக்கும் கணிசமான பங்கும் உண்டு. முதலில் உலக நாடுகளில் முதலாம் கட்ட அலை ஏற்பட்ட போது வெறும் 34 வெளிநாட்டு விமான நிலையங்களைக் கட்டுப்படுத்த முடியாத நாம் 32 லட்சம் சதுர கிலோமீட்டர் கொண்ட நிலப்பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும் என நினைத்தது மகா முட்டாள்தனம். நம் அதிகாரிகள் அப்படித்தான் நினைத்தார்கள். அதுவும் மிகப்பிந்தியே…

  • குப்பை தேசம்

    இந்தியாவேதான். 1990 வரை கிராம நகர வாழ்க்கை முறைகளுக்கான இடைவெளி மிக அதிகம். அதனால் நகர மக்களை அடையக்கூடிய ஒரு வசதியோ, தொழில்நுட்பமோ கிராம மக்களை அடைய ஆண்டுகள் பிடிக்கும். ஆனால் பின் வந்த ஆண்டுகளில் நிலைமை அவ்வாறாக இல்லை. ஒரு வசதி, ஒரு தொழில்நுட்பம் நகர மக்களை வந்தடையும் அதே வேகத்தில் கிராம மக்களையும் வந்தடைகின்றது.

  • நிறமும் மொழியும்

    நம்மில் பலருக்கும் இந்த எண்ணம் உண்டு. சிவப்பாய் இருப்பவர்கள் அழகானவர்கள், ஆங்கிலம் தெரிந்தவர்கள் அறிவானவர்கள். அது தவறான எண்ணம் என்பதே திண்ணம். நம்மிடத்து உள்ள இந்த எண்ணம் நமக்கு முந்தைய தலைமுறையிடமிருந்து நம்மிடத்தே வந்து விட்டது. நமக்கு முந்தைய தலைமுறையிடம் இருந்த அளவிற்கு இப்போது இல்லையென்றாலும், அற‌வே இல்லையெனக் கூறிவிடலாகாது. உண்மை இதுதான். சிவப்பு அழகல்ல, நிறம். ஆங்கிலம் அறிவல்ல, மொழி.  கடந்த காலப் பெரும்பான்மையான புத்தகங்கள், தொழில்நுட்பம் சார்ந்த நூல்கள் ஆங்கிலத்தில் வெளியானமையால் ஆங்கிலம் அறிவாளிகளின்…

  • உலகின் நிலைப்புள்ளி

    பெரும்பாலும் அதீத கேளிக்கைகள் நடைபெறும் நிகழ்வுகளுக்கு செல்லும் வழக்கம் இல்லாத நான் சமீபத்திய‌ காலங்களில் அத்தகைய‌ நிகழ்வுகளுக்குச் செல்கிறேன். அங்கே நான் கண்ட சில கேளிக்கை நிகழ்வுகள் சென்று வந்த சில நாட்களுக்குப் பின்னரும் என் மனதில் நீடித்துக்கொண்டே இருந்தது, முற்றிலும் கேளிக்கைக்காகவே இத்தனை வளம் வீணடிக்கப்படுகிறதே என. உதாரணமாக ஓர் மிகப்பிரமாண்டமான செயற்கை நீரூற்று. அங்கே அது கண்டிப்பாக தேவையில்லைதான். அதனைக் காண்பதனைத்தவிர வேறொன்றும் எவரும் எதுவும் செய்யவில்லை.மிக மோசமான நிலையில் வாழும் மக்களின் வாழ்க்கையினை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.