ஒநாய்குலச்சின்னம் – சி.மோகன் (ஜியாங் ரோங்க்)

சமீபத்திய ஆண்டுகளில் நான் படித்த, கேட்ட‌ பெரும்பாலான இடங்களில் ஓநாய் குலச்சின்னம் என்ற நாவலின் பெயர் அடிபட்டுக்கொண்டே இருந்தது. இது தொடர்பாக விவாதங்கள்,பாராட்டுக்கள் என ஏதாவது ஒன்று. அதனால் அந்த புத்தகத்தை வாசிக்கவேண்டும் என்ற வலுவான எண்ணத்தால் உந்தப்பட்டு அந்த புத்தகத்தை வாசித்தேன்.

[callout title=”ஓநாய் குலச்சின்னம் என்ன நாவல்?”]1965 களில் மங்கோலிய மேய்ச்சல் நிலமும், அம்மக்களின் குலச்சின்னமான ஓநாய்களும் ஹேன் சீனர்களால் விவசாயத்திற்காகவும், வளர்ப்பு மிருகங்களுக்காகவும் எவ்வாறு அழித்தொழிக்கப்பட்டது என்பதை ஒரு சீனனின் பார்வையில் விவரிக்கும் நாவல்.
[/callout]

ஜென் சென் என்னும் சீன மாணவன் மற்ற மாணவர்களோடு மங்கோலிய ஓலொன்புலாக் மேய்ச்சல் நிலத்தில் மக்களின் வாழ்க்கையை அறிந்து கொள்ளவும், மேய்ச்சலுக்காகவும் அனுப்பப்படுகின்றான். ஆனால் அவன் அம்மங்கோலிய மக்களின் நடவடிக்கைகளாலும் ஓநாய்களாலும் பெரிதும் கவரப்பட்டு ஒநாய்களை நேசிக்கத் தொடங்குகிறான்.

அங்கு மங்கோலியக் குடிகளின் மூத்தவராக இருக்கும் பில்ஜி ஜென்னுக்கு ஒநாய்களால் அந்நிலத்திற்கு ஏற்படும் நன்மைகளை ஒவ்வொரு சமயத்திலும் ஜென்னுக்கு எடுத்துரைக்கிறார். அதனால் ஒநாய் மீதான ஆர்வத்தின் பொருட்டு ஒரு குட்டி ஒநாயை எடுத்து வந்து வளர்த்து அதைப்பற்றி அறிந்து கொள்ள ஜென் விழைகிறான்.

மங்கோலிய மக்கள் இறந்தபின்னர் உடல்களைப் புதைக்காமல் ஓநாய்களிடம் விட்டுவிட்டு, ஓநாய்கள் சாப்பிட்டதன் வழியாக தங்கள் கடவுளான டெஞ்ஞரை அடைய முடியும் என நம்புகிறார்கள். அதனால் அச்செயல் அங்குள்ள தொன்மையான மங்கோலிய மக்களுக்கு கோபத்தை விளைவிக்கின்றது. அதை அவர்கள் தங்கள் கடவுளான டெஞ்ஞரைப் பழிக்கும் செயல் என்கின்றனர்.இவ்வாறு பல்வேறு இடர்ப்பாடுகளுக்கு இடையில் ஒநாயை தன்னுடைய மந்தைகளோடும், நாய்களோடும் வளர்த்து வருகிறான்.

இந்நிலையில் ராணுவ மேலிடத்தில் இருந்து அனைவருக்கும் மந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற உத்தரவு தொடர்ச்சியாக வருகிறது. ஆனால் மூத்தவரான‌ பில்ஜி அதனை எதிர்க்கிறார். சரியான எண்ணிக்கையின் மூலமாகவே ஓலான்புலாக்கின் சமநிலை காக்கப்படுவதாகவும், அங்குள்ள புல்வெளிப் பிரதேசத்தில் மான், மர்மோட்டுகள், அணில், காட்டு எலி, முயல் போன்றவற்றின் எண்ணிக்கை மிகுந்து விடாமல் புல்வெளியைக் காக்கும் பணியை ஓநாய்கள் மேற்கொள்கின்றன. நாம் அவ்வப்பொழுது ஓநாய்களை வேட்டையாடி அவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துகிறோம்.

இந்நிலையில் நாம் மந்தைகளின் எண்ணிக்கையை அதிகரித்தோமேயானால் அது முற்றிலுமாக புல்வெளிப் பிரதேசத்தை மற்ற உயிரினங்களுக்கு இல்லாமல் அழித்து விடும். மற்ற உயிரினங்கள் இல்லாது போனால் மேய்ச்சல் பொய்க்கும் காலங்களில் நம்மால் மற்றவற்றை வேட்டையாடி வாழ ஒன்றும் இருக்காது. அத்தோடு சில காலங்களில் ஓநாய்கள் உணவுக்கு வேறு வழியில்லாத்தால் நம் மந்தைகளை அடிக்கடி தாக்கத்தொடங்கிவிடும் என விளக்குகிறார். ஆனால் அதனைப் பொருட்படுத்தாமல் அவர்கள் மந்தை எண்ணிக்கையை அதிகரிக்கின்றனர். அதனல் பலமுறை ஒநாய்க்கூட்டத்தால் ஆடுகளும், குதிரைகளும் தாக்கப்படுகின்றன. பேரிழப்பு ஏற்படுகிறது. ராணுவத்தலைமை அனைத்து ஓநாய்களையும் கொல்ல‌ உத்தரவிடுகிறது.

மங்கோலிய இளையஞர்களை ராணுவத்தலைமை இச்செயல்பாடுகள் எல்லாம் மேய்ச்சல் நிலத்தின் நன்மைக்காகவே என நம்ப வைக்கின்றனர். ஆனால் ராணுவத்தலைமையின் முடிவை மூத்த மக்கள் ஏற்க மறுத்து மிகவும் வருத்தத்திற்கு உள்ளாகிறார்கள். தங்களால் முடிந்தவரை ஒநாய்களைக் காக்கப் போராடுகிறார்கள். ஆனால் ராணுவத்தின் அசுர பலத்திற்கு முன்னால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாமல் போகிறது.மற்ற மங்கோலிய மக்களின் ஆதரவோடு ஓநாய்கள் அழித்தொழிக்கப்படுகின்றன.

இதற்கிடையில் தான் வளர்த்த ஒநாயிடமிருந்து அதன் பல்வேறு குணாதிசயங்களை ஜென் அறிந்துகொள்கிறான். பில்ஜி கூறிய ஒவ்வொன்றும் எத்தனை உண்மை என அவனுக்குப் புரிகிறது. அவனுக்கு ஓநாய்கள் மீதான ஆற்வமும், மதிப்பும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அவனிடமிருக்கும் ஓநாய் தன்னை எந்த ஒரு இடத்திலும் ஒநாயாகவே காட்டிக்கொள்கிறது. எவ்வித சமரசத்திற்கும் உட்படாமல் வளர்கிறது. கண்களைத் திறப்பதற்கு முன்னரே தூக்கிவரப்பட்ட குட்டி எவ்வாறு ஒரு காட்டு ஓநாயின் அனைத்து குணாதிசயங்களையும் கொண்டிருக்கிறது என ஜென் வியக்கிறான். இருந்தாலும் அது வளர்ந்த பின்னர் தன்னை அவன் கட்டிப்போட்டு வளர்ப்பதையும் அவர்கள் தங்கள் இடத்தை மாற்றும் பொழுதெல்லாம் இழுத்துக்கொண்டு செல்வதையும் மூர்க்கமாக எதிர்க்கிறது. அதனால் அது தன்னை அழித்துக்கொள்ளக் கூட தயாராகிறது. அதன் அந்த ஓநாய்க்குணமே மங்கோலியர்களின் வலிமைக்கான அடிப்படை என்பதனை ஜென் உணர்ந்துகொள்கிறான். ஒரு கட்டத்தில் தானே ஓநாயைக் கொல்லும் சூழ்நிலை ஏற்பட, அதனைக்கொல்கிறான் ஜென்.

பிற்காலத்தின் பில்ஜி உடபட அனைத்து பெரியவர்களும் இறந்து விடுகின்றனர். ஜென் சீனாவுக்கு திரும்பிவிடுகிறான். ஓலோன்புலாக் மேய்ச்சல் நிலம் பாலைவனமாக மாறிவிடுகிறது. பின்னர் தன் நினைவுகளை சுமந்துகொண்டு தான் குட்டியைத்திருக்கொண்டுவந்த குகைக்குச் சென்று பில்ஜிக்காகவும், ஒநாய்க்குட்டிக்காகவும் பிரார்த்தனை செய்கிறான் ஜென். இத்தோடு முடிகிறது நாவல்.

ஜியாங் ரோங் என்பவரால் சீன மொழியில் தன் அனுபவத்தால் எழுதப்பட்ட நாவல். தமிழில் சி.மோகன் மொழிபெயர்த்திருக்கிறார். மிகச் சிறந்த பொழிபெயர்ப்பு. இந்நாவலில் பில்ஜி ஒநாய்களின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் எவ்வாறு மேய்ச்சல் நிலத்தினைப் பாதுகாக்கின்றன என்பதனை விளக்கும் ஒவ்வொரு இடமும் மிகச் சிறப்பாக தத்ரூபமாக விளக்கப்பட்டிருக்கிறது.

மற்றொன்று ஜென்னுடன் வளரும் ஒநாயின் வளர்ச்சியை விவரிக்கும் இடங்கள்.நாமே ஒரு ஒநாயை வளர்த்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு எண்ணம். உதாரணமாக நாய்களுக்கு மத்தியில் வளர்வதால் நாய்களைப் போல குரைக்க முயன்று தோற்று, திடீரென ஊளை சத்தம் கேட்டதும் தன் உள்ளுணர்வால் ஊளையிடத் தொடங்கும் தருணம் நான் மிகவும் ரசித்த ஒரு இடம்.

மற்றொன்று ஒநாய்க்குட்டிக்கு தான் உணவு வைக்கும் போதெல்லாம் அது லபக்கென்று சாப்பிடுவதன் காரணம் புரியாமல், பின்னால் ஒரு ஒநாய் வேட்டையின் போது மேய்ச்சல் நிலத்தில் நேரம்தான் உணவு, வேட்டையின் போது எத்தனை வேகமாக சாப்பிடுகிறதோ அவ்வளவுதான் உணவு, இல்லையேல் மேய்ப்பர்களிடம் மாட்டிக்கொள்ளும் என்பதனை ஜென் உணர்வது எனப் பல இடங்கள் நான் மிகவும் ரசித்தவை.

மற்றொன்று ஒநாய்களை பொதுவாக தீய சக்திகளாகவே பாவிக்கும் சீன மக்களின் ஒருவனாக வரும் ஜென் ஓநாய்களின் செயல்பாடுகளால் பெரிதும் கவரப்படுவதற்கான காரணங்களை விளக்கும் இடங்கள் சிறப்பானவை.

ஒநாய்குலச்சின்னம் சமீபத்திய என்னுடைய சிறந்த வாசிப்பு என்றே எண்ணுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *