நம்பிக்கையற்ற இருண்ட உத்தரப்பிரதேசம்

சமீபத்தில் பைனான்ஸ் டைம்ஸ் இதழில் வந்த ஓர் கட்டுரை என் கண்ணில் பட்டது. அதன் தலைப்பு இதுதான். ‘இந்தியா டீ கொடுக்கும் வேலைக்காகவும், காவலாளி வேலைக்காகவும் விளம்பரம் செய்தது. 23 லட்சம் விண்ணப்பங்கள் குவிந்தன’. அந்தக் கட்டுரை இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தின் நம்பிக்கையிழந்த இளைஞர்களின் அரசுப் பணி மீதான ஆர்வத்தைக் காட்டியது.

இந்த வருடத்தொடக்கத்தில் உத்தரப்பிரதேச அரசு 368 நான்காம் நிலை பியூன் வேலைக்கான அறிவிப்பினை வெளியிட்டது. மலைக்க வைக்கும் அளவுக்கு 23 லட்சத்து 20 ஆயிரம் விண்ணப்பங்கள் குவிந்தன‌. அவர்களுள் 255 பேர் முனைவர் பட்டம் பெற்றவர்கள் குறிப்பாக பொறியியல் துறைகளில். 25000 க்கும் மேற்பட்டவர்கள் பட்ட மேற்படிப்பு படித்தவர்கள்.

ஏன் நன்கு படித்த இளைஞர்கள் அரசாங்க அலுவலர்களுக்கு டீ வாங்கிக்கொடுப்பதற்கும் அவர்கள் அறைக்கு வெளியே காத்துக்கிடப்பதற்குமான ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கிறார்கள்? அதற்கான காரணம் பைனான்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது போல உபியில் வேலை வாய்ப்பு இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட மிகவும் குறைவு. அது மட்டுமல்லாமல் மேலும் இரண்டு காரணங்களும் இருக்கின்றன. ஒன்று அரசாங்க வேலை என்பது தனியார் வேலையை விட பாதுகாப்பானது, ஏனெனில் வேலைக்குறைவைக் காரணம் காட்டி ஒருவரை வேலையிலிருந்து நீக்கிவிட முடியாது. மற்றொன்று பணி ஓய்வு பெற்றபின் ஓய்வூதியம், இது கூடுதல் ஆதாயம். அத்தோடு தலைமுறைகள் பழமையான பாடத்திட்டத்தைக்கொண்டு, பொறுப்பற்ற ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப்பட்ட‌ மாணவர்கள் பெற்ற பட்டமேற்படிப்பு பட்டமானது அது பிரிண்ட் செய்யப்பட்டிருக்கும் தாள் அளவிற்குக் கூட‌ மதிப்பில்லாமல் இருப்பது.

மற்ற மாநிலங்களிலும் கூட அரசாங்க வேலைக்கான மதிப்பு உண்டெனினும் இந்த அளவிற்கு இல்லை. இந்தியாவின் தெற்கு மற்றும் மேற்கில் தனியார் நிறுவனங்கள் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளன. அங்கெல்லாம் உலகத்தரத்திற்கு கல்வி நிறுவனங்கள் இல்லையென்றாலும் கூட மோசமான நம்பிக்கையற்ற நிலையில் உபியில் இருப்பதுபோல் இல்லை. மஹாராஷ்டிராவிலோ தமிழ்நாட்டிலோ ஒரு பொறியியல் பட்டமேற்படிப்பு படித்த இளைஞன் தன்னை ஒரு பியூனாக நினைப்பதே கடினம். அதற்குப் பதிலாக ஒரு மென்பொருள் நிறுவனத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி விடுவர்.

வெறும் 400 க்கும் குறைவான, அதுவும் அரசு வேலைகளில் கடைநிலை வேலைக்கான பியுன் வேலைக்கு விண்ணப்பிக்கப்ப்ட்ட‌ அந்த 23 லட்சம் விண்ணப்பங்கள் மற்ற‌ எந்த மாநிலத்தையும் விட உபியில் அவ்வேலைக்கான மதிப்பைக் காட்டுகிறது. இந்திய அரசாங்க அளவுகோல்களின்படி கூட உபி படுபாதாள நிலையில் இருக்கிறது. கல்வியும் சுகாதாரமும் குப்பையாக இருக்கிறது. குற்றங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

இன்றைய நிலையில் உபி மிகவும் பரிதாபத்துக்குரிய நிலையிலேயே இருக்கிறது. கான்பூரைப் பூர்வீகமாகக் கொண்ட, கான்பூரோடு நெருங்கிய தொடர்பில் இருக்கும், பெங்களூரில் இருக்கக்கூடிய என் நண்பர் தொழில் நிறுவனங்களும், நிறுவனர்களும் பெரிய அளவில் கான்பூரில் வளர்வதில்லை. அவர்கள் வளர்வதுண்டு. ஆனால் அது நிறுவனர்கள், நிறுவனங்கள் என்பவற்றிற்கு தென் இந்தியா அளிக்கும் விளக்கத்திலிருந்து மாறுபட்ட ஒர் வளர்ச்சி என்கிறார். கான்பூரின் மிகப்பெரிய நிறுவனங்களாக அடையாளம் காணப்படும் மூன்று நிறுவனங்களின் தொழில் பாட்டில் குடிநீர் உற்பத்தி, பாதுகாப்பு காவலர்களை வேலைக்கு எடுத்தல் மற்றும் அளித்தல், மின் ஆக்கிகளை நிறுவுதல் போன்றவையே.

உபியின் தொழிலதிபர்களில் ஒரு சாரர் அரசாங்கத்தின் நிர்வாகச் சீர்கேடுகளை தங்களுக்கான வாய்ப்புகளாப் பார்க்கின்றனர். மற்றொன்று தேவையற்ற மற்றும் முரண்பட்ட நிதி ஒதுக்கீடுகள். பெங்களூருவில் ஒரு மென்பொருள் நிறுவனத்தை தொடங்கக்கூடிய ஒருவன் பூஜிக்கக் கூடிய நபர்கள் நாரயணமூர்த்தியும், நந்தன் நீல்கேனியும் என்றால், அதுவே உபியில் ஒருவனுக்கு பாண்டி சத்தாவும், சுபத்ரா ராயுமாக இருப்பதில் ஆச்சரியமில்லை. அவர்களைப்போலவே அரசியல்வாதிகளோடு தொடர்பு வைத்துக்கொண்டு அரசாங்க நிதியை தனியார் வளர்ச்சிக்காக திருப்புவதே தொழிலதிபர்களின் பணியாக‌ எண்ணுகின்றனர். அதில் கிடைக்கக்கூடிய கொள்ளைப்பணம் தொழிலதிபர்களாக இருக்கும் அரசியல்வாதிகளாலும், அரசியல்வாதிகளாக இருக்கும் தொழிலதிபர்களாலும் பங்கிட்டுக் கொள்ளப்படுகிறது.

முப்பதாண்டுகளுக்கு முன்னால் ஆஷிஷ் போஷ் என்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்பாளர் பிமாரு என்ற ஓர் சொற்றொடரை உருவாக்கினார். அதாவது பீகார்,மத்தியப்பிரதேசம்,ராஜஸ்தான்,உத்தரப்பிரதேசம் என்பதன் சுருக்கமே அது. அவற்றை அவர் இந்தியாவின் மிகவும் பிந்தங்கிய நோய்வாப்பட்ட மாநிலங்கள் என அவர் கூறினார். இந்த முப்பதாண்டுகளில் பீகார், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் முன்னேற்றத்தில் ஓரளவிற்காவது சாதித்துக் காட்டியுள்ளன. ஆனால் உபியோ இன்னும் மோசமான நிலைக்குச் சென்றிருக்கிறது. சமூகம்,பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், அமைதி என எந்த துறையில் எடுத்தாலும் இந்தியாவில் மிக மோசமாக நிர்வகிக்கப்படும் மாநிலம் உபியே.

உபியின் இத்தனை மோசமான நிலைக்கு என்ன காரணம்? ஒன்று இந்தியாவின் தெற்கு மற்றும் மேற்கைப் போல பாலின பாகுபாடு, சாதி வேறுபாடு போன்றவற்றைக் களைய சமூக இயக்கங்கள் தோன்றவில்லை.

இரண்டாவது பாரம்பரிய நிலப்பிரபுத்துவம். கடைசிமட்ட விவசாயிகள் அவர்களுக்கு மேலுள்ள சாதியினருக்கும் பணிய வேண்டியவர்களாக இருந்தனர். மேல்சாதியினர் என்பவர்கள் ஒரு காலத்தில் பிராமணர்கள், ராஜ்புத் சமூகத்தினைச் சேர்ந்தவர்கள். இன்று பெரும்பாலும் யாதவ் மற்றும் ஜாட் இனத்தவர்.

மூன்றாவதாக அரசியல் நேர்மையின்மை. இந்திய அளவுகோல்களின்படிகூட உபியே ஊழலில், குடும்ப, சமூக வன்முறையில் மோசமான மாநிலம்.

அதி முக்கியமான மற்றோர் காரணம் உபி மாநிலத்தினுடைய பரப்ப‌ளவு. இத்தனை காலம் உபி சந்தித்து வரும் பிரச்சினைகளைத் தீர்ப்பது என்பது அது ஒற்றை மாநிலமாக இருக்கும் வரை சாத்தியமில்லாத ஒன்றே. நான் முன்னரே எழுதியது போல ` உபி இரண்டாகப் பிரிக்கப்பட வேண்டுமா? இல்லை மூன்று நான்காக பிரிக்கப்பட வேண்டுமா என்பது விவாதத்திற்குரிய கேள்வி. ஆனால் பிரிக்கப் பட வேண்டும். பிரிக்கப்படாத உபி அதன் குடிமகனை வருத்துகிறது. அது இந்தியாவை வருத்துகிறது.’

எப்பொழுதும் ஓர் உண்மை இருந்து கொண்டே இருக்கிறது. ஓர் அதீத நல்லெண்ணம் கொண்ட சுகாதார செயலாளரால் கூட எப்படி 85 பெரிய மாவட்டங்களின் சுகாதார திறனை ஆய்வு செய்ய முடியும்? அல்லது நேர்மையான, பயமற்ற ஓர் காவல் துறை தலைவரால் எப்படி 20 கோடி மக்களிடையே சமூக அமைதியை நிலைநாட்ட முடியும்?

ஒற்றை பெரும் மாநிலம் என்பதற்குப் பதிலாக நான்கு சிறிய மாநிலங்கள் என ஆகும்பட்சத்தில் சீரான‌, வெளிப்படையான நிர்வாகம், மேம்படுத்தப்பட்ட கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், குடிமக்கள் பாதுகாப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தலாம். அது மேலும் பல தொழில் நிறுவனங்களையும், தொழிலதிபர்களையும் உருவாக்க வழிவகுக்கும், அந்த மாநிலத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் அதிகாரிகளுக்கு டீ வாங்கித்தருவதை விட நல்லதொரு வேலையை அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கலாம்.

ராமச்சந்திர குஹாவால் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளேட்டில் எழுதப்பெற்ற கட்டுரையின் தமிழ் மொழியாக்கம்.

THE DARK AND DESPERATE STATE OF UTTAR PRADESH
By Ramachandra Guha
(published in the Hindustan Times, 11th October, 2015)

2 thoughts on “நம்பிக்கையற்ற இருண்ட உத்தரப்பிரதேசம்

  1. ​மொழி​பெயர்ப்பு சிறப்பாக வந்துள்ளது. வாழ்த்துக்கள்! ஆனால்நிலத்​தைத்துண்டிட்டால்வளர்ச்சி​பெருகும்என்றவாதம் சரியானது என்று ​தோன்றவில்​லை. இந்த அளவு​கோலில் ​சென்றால் எனது ​மே​ஜைதான் மிக சிறந்தநிலம் என குறுக்கப்பட்டுவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *