அரசியல் கட்சியை நடத்துவது எப்படி?

நீண்ட நாட்களாக அனைத்து அரசியல் கட்சி நண்பர்களும் கேட்டுக்கொண்டதால் தமிழகத்தில் அரசியல் கட்சி எப்படி நடத்துவது என்ற செய்முறையை இன்று வெளியிடுகிறோம். இந்த வழிமுறைகள் புதியதாக கட்சி தொடங்கியிருப்பவர்களும், ஏற்கனவே கட்சி தொடங்கியிருப்பவர்களும், ஆட்சிக்கு வந்தவர்களுக்கும், ஆட்சிக்கு வரவிருப்பவர்களுக்கும், ஆட்சிக்கு வராதவர்களுக்கும், ஆட்சிக்கு வரவிருப்பவர்களுக்கு துணை நிற்பதற்காக கட்சி நடத்துபவர்களுக்கும் என அனைவருக்கும் ஏற்றது. இதனை பின்பற்றுவதால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு இந்த கட்டுரை எந்த விதத்திலும் பொறுப்பேற்காது என்பதை ஆழ்மன பயத்தோடு முன்னரே கூறிக்கொள்கிறோம்.

ஒவ்வொரு வழிமுறைக்கும் சில முன் தேவைகள் மற்றும் நியதிகள் உள்ளன. அந்த நியதிகள் உங்களுக்குப் பொருந்தும் பட்சத்தில் நீங்கள் அதனை பின்பற்றலாம். முன் தேவைகள் இல்லாமலும் முயலலாம். சற்று கடினம், அவ்வளவுதான். ஒவ்வொரு வழிமுறையைப் பின்பற்றும் பொழுது அதற்கான‌ பக்க விளைவுகளும் உண்டு. அந்த பக்க விளைவுகளுக்கான கை மருந்துகளும் இங்கேயே தரப்பட்டுள்ளன.

  1. அரசின் ஏதாவது ஒரு திட்டத்திற்கோ, அல்லது அறிவிப்பிற்கோ மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பின் உடனடியாக ஒரு அறிக்கை விட்டுவிட வேண்டும். அந்த அறிக்கையில் தீர்க்கமாக எதுவும் சொல்ல வேண்டியதில்லை. பொதுவாக சொன்னால் போதும். உதாரணமாக பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக மக்கள் போராடினால் கட்சியின் அறிக்கையில் “நாங்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல, வளர்ச்சி என்பது மக்களைப் பாதிக்காமல் இருக்க வேண்டும்.” போன்ற சொற்றொடர்களைப் பயன்படுத்தலாம். எங்கு எவரை சந்திக்கிறோமோ அல்லது எவருடன் கூட்டணி வைக்கிறோமோ அதற்கேற்றார் போல் முன்பாதியையோ பின் பாதியையோ உபயோகப்படுத்திக்கொள்ளலாம். மீண்டும் கூட்டணி மாறும்போது மீண்டும் மறுபாதியை உபயோகிப்படுத்திக்கொள்ளலாம்.
  2. அரசு மக்கள் எதிர்ப்பின் காரணமாக ஒரு அறிவிப்பையோ அல்லது திட்டத்தையோ கைவிடும்பொழுது கட்சிக்கு முக்கியமான ஒரு பணி உண்டு. அரசு கைவிடப்படப் போவதை சற்றே முன்னர் அறிந்து கொண்டிருந்தால மிக உசிதம். உடனடியாக மிகத்தீவிரமாக சில கூட்டங்களை நடத்த வேண்டும். அதில் அத்திட்டத்தை தான் உயிருள்ளவரை நடத்த விட மாட்டேன், தமிழ் மண்ணுக்குள் அனுமதிக்க மாட்டேன் போன்ற கவரக்கூடிய வாசகங்களை உணர்ச்சிப் பூர்வமாக பேசவேண்டும். எல்லாவற்றையும் ஒளிப்பதிவு செய்வது மிக அவசியம். அரசு அத்திட்டத்தை கைவிட்டவுடன் சில நபர்களை ஏற்பாடு செய்து ஒரு நன்றி விழா ஏற்பாடு செய்து கொள்ளவேண்டும். ஒரே மக்கள் எல்லாக் கட்சித் தலைவரின் நன்றி தெரிவிப்பிற்கு வருவது இயல்பானதே. தலைவரைப்போல அவருக்கும் இது தொழில்தான். முன்னர் எடுக்கப்பட்ட ஒளிப்பதிவுகளை ஷார்ட்ஸ் ஆக மாற்றி சமூக வலைத்தளங்களில் பரவச்செய்வது மிகவும் அவசியம்.
  3. ஒருவேளை உங்களுடைய கட்சி, ஆட்சியில் இருக்கும் கட்சியோடு இணக்கமாக இருக்கிறதென்றால் அவர்கள் அறிவிக்கும் எந்த அறிவிப்பினையும் முன்னரே நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும். அப்பொழுதுதான் அதற்கேற்றார் போல் நீங்கள் சென்று அந்தப் பனம்பழத்தில் உட்கார முடியும். அரசும் ஒரு கட்சியினாலே ஆளப்படுவதால் அக்கட்சி ஐந்து ஆண்டுகளில் மாட்டிக்கொள்ளாமல் சம்பாதிப்பது எப்படி, அடுத்த முறை ஆட்சிக்கு வருவதெப்படி என்ற இரண்டிற்குமே ஒட்டு மொத்த அரசு இயந்திரத்தையும் பயன்படுத்துவதால் இந்தத் தகவல்கள் எல்லாம் கண்டிப்பாகத் தரப்படும். மக்கள் நலனெல்லாம் மக்கள் தொடர்பு,செய்தி ஒளிபரப்புத்துறையால் பார்த்துக்கொள்ளப்படும்.
  4. தற்போதைய நிலையில் எது நன்று விற்பனையாகிறதோ அதனை உபயோகிப்படுத்திக் கொள்ளவேண்டும். உதாரணமாக தமிழ்த் தேசியம் இப்பொழுது நன்றாக விற்பனையாகும் பொருள். எங்கு எதைப் பேசினாலும் அதில் அதனை இணைத்துவிடுவது அவசியம். எப்பொழுது பத்திரிக்கையாளர்களை சந்தித்தாலும் எந்தக் கேள்வியென்றாலும் பதிலில் அனைத்து சாதியத் தலைவர்களின் பெயரையும் கூறிவிடுவது அனைத்து சாதியினரையும் சற்றே மகிழ வைக்கும். அயோத்திதாச பண்டிதர், வ.உ.சிதம்பரனார், காமராசர், பூலித்தேவன், முத்துராமலிங்கத்தேவர், ரெட்டைமலை சீனிவாசர் என எவரையும் விட்டுவிடக்கூடாது. நாளைக்கு தமிழ்த்தேசியம் போய் வேறு ஏதாவது வந்தாலும் அதனைப் பிடித்துக்கொள்ள வேண்டும்.
  5. பொதுவாகவே தமிழக மக்கள் வாசிப்பதில்லை மற்றும் வரலாற்றை நினைவில் வைத்துக்கொள்வதில்லை. அதனை சரியாக உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும். உதாரணமாக நாம் கொண்டு வந்த திட்டத்தை நாமே ரத்து செய்து நமக்கு நாமே பாராட்டுவிழா எடுத்துக்கொள்ள வேண்டும். மற்ற எல்லா கட்சிகளும் இதையே செய்துகொண்டிருக்குமாதலால் யாரும் “ஏன் இந்தத்திட்டத்தை முதலில் கொண்டு வராமலேயெ இருந்திருக்கலாமே?” எனக் கேட்க மாட்டார்கள்.
  6. உங்கள் கட்சியில் பொருளாதாரம் இருந்தால் கண்டிப்பாக ஒரு செய்தி சேனலை தொடங்க வேண்டியது அவசியம். அதில் செய்தியாளர், நெறியாளர் என எவரையும் கடினப்பட்டு தேர்வு செய்ய வேண்டியதில்லை. தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும். ஒரு டிகிரி இருந்தால் மகா உத்தமம். ஏனென்றால் அவர்களைப் பத்திரிக்கையாளர், ஊடகவியலாளர் என நம்பவைப்பது எளிது. ஒரு முக்கியமான தகுதி அவர் தேர்வுக்கு அல்லாமல் வேறு எதனையும் படித்திருக்கக்கூடாது.
  7. உங்களிடம் இருக்கும் செய்திசேனலில் எப்படிப்பட்ட செய்திகளை வெளியிட வேண்டும் என்பதற்கான வரையறை இது. முதலாவதாக உங்களுடைய கட்சிதான் ஆட்சியில் இருக்கிறதென்றால், தமிழ்நாட்டில் தேனாறும் பாலாறு காலை ஆறு மணி முதல் இரவு பன்னிரெண்டு மணி வரை ஓடிக்கொண்டிருக்க வேண்டும். மீதமுள்ள ஆறு மணி நேரம் மறு ஒளிபரப்பு செய்யலாம்.
  8. எல்லாச் செய்தியின் இறுதியிலும், முதல்வரின் ஆட்சியில் எந்தக் குறையும் இல்லை, அதிகாரிகள் உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதாக நாலு பேரை சொல்ல வைக்க வேண்டும். வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள், விளையாட செல்பவர்கள் என எவரை வேண்டுமானாலும் பயன்ப‌டுத்திக் கொள்ளலாம். பிரபலங்கள் கிடைக்கவில்லையென்றால் யாராவது நாலு பேரை பேச வைக்கலாம். ஒருவரையே திரும்பத்திரும்ப பேச வைப்பது கூடாது. ஒரு வாரத்திற்கு பின்னர் உபயோகப்படுத்திக்கொள்ளலாம். தமிழக மக்கள் அதனையும் எந்த ஐயமும் இன்றிப் பார்ப்பார்கள். 8 கோடி தமிழக மக்களில் எல்லாவற்றிற்கும் ஆள் கிடைக்கும் என்பதனை உணர்வது நல்லது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.