Month: September 2013

The Naked Ape – Desmond Morris

1969 ஆம் ஆண்டு Desmond Morris என்ற ஆங்கில ஆய்வாளரால் எழுதப்பெற்ற புத்தகம்.Nakedape

மனிதனை ஒரு மிருகமாக மட்டுமே பாவித்து அதன் செயல்பாடுகள், அதனை ஒத்த மற்ற மிருகங்களிடமிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதனை விளக்கும் நூல். அதனை ஒத்த மற்ற மிருகங்களிலிருந்து மயிர் இல்லாமல் இருப்பதே முதலில் புலப்படுவதால் இதற்கு “The Naked Ape” எனப் பெயரிட்டிருக்கிறார்.

உதாரணமாக இந்த மிருகம் வலிமையான கரங்களை உடையதாக இல்லாமல் இருந்தாலும் வலிமையான ஆயுதத்தை தன் கரங்களில் ஏந்தி எதிர்க்கும் புத்திகூர்மை கொண்டது. மற்ற மிருகங்களைப் போலின்றி தான் அறிந்தவற்றை தன் இனத்திற்கு சொல்லி தகவல்களைக் கடத்தும். மிகவும் சுவாரசியமான புத்தகம். ஆரம்பகாலம் முதல் எவ்வாறு ஒரு மிருகம் மற்ற மிருகங்களிலிருந்து விடுபட்டு தனியொரு இனமாய் ஆனதென்பதை அறிகையில் வியப்பு மேலிடுகிறது. சிறந்த நூல்.

 

உபபாண்டவம் – எஸ்.ராமகிருஷ்ணன்

மகாபாரதக் கதாபாத்திரங்களை அக்காலக் கட்டத்தில் அவர்களின் ஊடே பயணிக்கும் ஒருவன் விளக்குவதைப் போல விவரிக்கும் நூல். மகாபாரதத்தின் மீதான ஆர்வம் தணியாததால் இந்த நூலை வாசித்தேன். மகாபாரதக் கதை நிகழ்ந்த இடங்களுக்கு பயணம் செய்து அதன் விளைவாக தான் உணர்ந்தவற்றை கதாபாத்திரங்களின் ஊடே பயணம் செல்வது போல் விளக்கியிருக்கின்றார் ராமகிருஷ்ணன்.ubapandavam

படித்து முடிக்கும் பொழுது மகாபாரதத்தினை நம் கண்முன்னே கண்டதுபோல, அந்தக் காலக் கட்டத்திலே வாழ்ந்தது போல ஒரு உணர்வை ஏற்படுத்துவதே இந்நூலின் வெற்றி. இப்படியெல்லாம் மகாபாரதத்தினை உள்வாங்கிக்கொள்ளலாமோ என்ற எண்ணத்தை வாசிக்கும் ஒவ்வொரு பக்கமும் ஏற்படுத்துகிறது. இத்துணை சிறப்பாக இந்த நுலை எழுத வேண்டுமானால் மகாபாரத‌த்தினை எவ்வளவு நுட்பமாகப் படித்திருக்க வேண்டும் என‌ எண்ணும்பொழுது ஆசிரியர் மீதான மதிப்பு உய‌ர்கிறது. 

இந்தப் புத்தகத்தை வாசித்து முடிக்கும் பொழுதும் மகாபாரதப்பயணத்தின் தொடக்கத்திலேயே நிற்கிறேன். மகாபாரதம் முடிவற்றது என்ற எண்ணமே மீண்டும் தழைத்தோங்குகிறது.

நன்றி.

 

மகாபாரதம்:அறத்தின் குரல் – நா.பார்த்தசாரதி

நா.பார்த்தசாரதி அவர்களால் 1964 ஆம் ஆண்டு தமிழில் எழுதப்பெற்ற காவியம். அரைகுறையாகத் தெரிந்த மகாபாரதத்தினை முழுமையாகத் தெரிந்து கொள்ள விரும்பி வாசித்த நூல். வாசிப்பின் முடிவில் புலப்படுவதென்னவோ முழு மகாபாரதத்தையும் புரிந்து கொள்வதென்பது இயலாத ஒன்று என்பதையே. mahabaratham

எந்த ஒரு மகாபாரதப் பதிப்பினையும் எழுதப்பெற்ற ஆசிரியரின் பார்வையில் மகாபாரதம் எனப் பொருள் கொள்வதே சரி எனலாம். அத்துணை பெரிய காவியம். எண்ணிலடங்கா கதாபாத்திரங்கள். படிக்க படிக்க திகட்டாத, தீராத காவியம். இந்து மரபின் உயரிய கருத்தான அறத்தை விளக்கும் காவியம். எவ்வளவு பருகினாலும் தாகத்தை தணிக்காத‌ காவியம். 

வடமொழியில் எழுதப்பெற்ற மகாபாரதத்தின் முழு தமிழ் மொழிபெயர்ப்பான கும்பகோணப் பதிப்பின் பக்கங்கள் 12000 க்கும் மேல். நாம் படிப்பதெல்லாம் கதைச் சுருக்கங்களே என்றாலும் நா.பார்த்தசாரதி அவர்கள் 600 பக்கத்திலேயே வெகு அழகாகவும், தொன்மையாகவும் மகாபாரதக் கதையினை விளக்கியிருக்கின்றார்.  முதன் முதலாக மகாபாரதத்தினை படிக்க விரும்புபவருக்கு ஏற்ற பதிப்பாக இதைக் கொள்ளலாம். 

வாசிப்பின் முடிவில் நம் அற உணர்வு தூண்டப்படுவதை படிக்கும் முன்னரும் பின்பும் இருக்கும் மனநிலை மாறுபாட்டிலேயே உணரலாம். ஒட்டுமொத்த மகாபாரதமுமே பெண்களாலேயே இயக்கப்படுகிறது என்பதை உணரும்போது ஒரு வித ஆர்வமும் சிலிர்ப்பும் நம்முள்ளே தொற்றிக்கொள்கிறது. ஆம் திருதராட்டிரனும், பாண்டுவும் சத்யவதியாலும், கௌரவர்கள் காந்தாரியாலும், பாண்டவர்கள் குந்தியாலும் பின்னாளில் த்ரௌபதியாலுமே இயக்கப்படுகிறார்கள். 

வடமொழிக்கலப்பில்லாத சிறந்த மொழியாக்கம். மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் நூல்.

 

நீங்கள் படிக்க விரும்பினால் இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

 அறத்தின் குறல்‍ – மகாபாரதம் நா.பார்த்தசாரதி

  

பார்த்திபன் கனவு ‍- அம‌ரர் கல்கி

அமரர் கல்கி அவர்களால் 1941 ஆம் ஆண்டு எழுதப்பெற்ற நூல், காவியம். சோழ நாடும், பல்லவ நாடுமே கதைக்களங்கள். பார்த்திப மன்னனின் கனவான சுத‌ந்திர தேசத்தை அவரது மகனான விக்கிரமன் நனவாக்குவதே கதை. இது காதல் காவியமோ என்ற எண்ணம் அடிக்கடி எழுந்துகொண்டே இருக்கிறது.Parthiban kanavu

எளிய கதை.மிகச் சிறந்த வர்ணனை. அந்த வர்ணனைகளுக்காகவே மறுபடியும் படிக்கலாம்.

பல்லவ மன்னன் நரசிம்ம பல்லவனின் மகளாகிய குந்தவி தேவியின் அழகை விவரிக்கும் அழகே அழகு. அவ்வளவு வசீகரமானவள்,அழகானவள். அந்த குந்தவி தேவியின் அழகு வர்ணனைகளையும், அவளுக்கும் விக்கிரமனுக்கும் இடையிலான காதலுக்காகவும் மட்டுமே எத்தனை முறை படித்தாலும் திகட்டாது. இந்தக் காதல் காட்சி இன்னும் கொஞ்சம் நேரம் நீளாதா என்ற எண்ணம் அவர்கள் சந்திக்கும், நினைக்கும் ஒவ்வொரு சமயத்திலும் என் நினைவில் மேலோங்குகிறது. அதுவும் சரிதான். குறைவானதுதானே அதை நீளமாக்கும்.

 

நீங்கள் படிக்க விரும்பினால் இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

 

பார்த்திபன் கனவு பாகம் ஒன்று & இரண்டு

பார்த்திபன் கனவு பாகம் மூன்று

The Black Hole – Short Film

ஒரு குறும்படம் என்பதற்கு கால அளவு கிடையாது, இரண்டு நிமிடங்களில் கூட ஒரு மிகச்சிறந்த குறும்படத்தை உருவாக்க முடியும் என்பதற்கு மீண்டும் ஒரு சான்று.காணொளி இங்கே.

ஞானகுரு – எஸ்.கே.முருகன்

தனியனாய், பரதேசியாய் சுற்றித்திரியும் ஞானகுரு எனக்கூறப்படுபவரின் பதில்களின் தொகுப்பு. பெயரை வைத்து அவரை ஏதோ புனிதர், மானுட அவதாரம் தரித்த மகான் என்றெல்லாம் எண்ண வேண்டியதில்லை. நம் ஊரிலே தெருவிலே இதைவிட அருமையாகத் தத்துவங்கள் கூறும் பல சாமியார்கள் உண்டு. குடித்துவிட்டு, கஞ்சா அடித்துவிட்டு உளரும் ஒருவருடைய சொற்கள் புத்தகமாயிருக்கின்றன. வேறு ஒன்றும் இல்லை. தன்னுடைய செயல்பாடுகளை யே(கஞ்சா, குடி, மாமிசம், சுருட்டு) அறமாய்க் கொண்டு அதையே நியாயப்படுத்தும் தகவல்களை அறிவுரைகளாக ஒட்டுமொத்த நூலும் விளம்புகிறது. இந்த அறிய தகவல்களை கூற ஞானகுரு வேண்டாம், நம் தெருவில் குடித்துவிட்டு இரவில் அலையும் ஒருவனே போதும் என நினைக்கிறேன்.njanaguru

ஏற்கனவே ஒரு 10 புத்தகங்களாவது ஒருவ‌ர் வாசித்திருப்பாரானால் அவருக்கு இப்புத்தகம் மீது ஒரு மிகப்பெரிய வருத்தம் கண்டிப்பாக ஏற்படும். நானும் அந்நிலையிலேயே நிற்கிறேன். இந்தப் புத்தகம் ஒரு கடைநிலைக் கட்சிப் பிரமுகரின் மேடைப் பேச்சு என்ற அளவில்தான் இருக்கிறது. ஏனென்றால் அவர்களுக்குத்தான் அந்த வசதி உண்டு. அதிகம் ஆய்வு செய்ய வேண்டியதில்லை. ஏதாவது சற்றே உணர்ச்சிப்பூர்வமாக, அறைகுறைத்தகவல்களை வைத்துக் கொண்டு பேசி விட்டுப் போய் விடலாம். ஏனென்றால் அது ஆவணப்படுத்தப்பட மாட்டாது. 

ஆனால் புத்தகங்கள் அப்படியில்லை. ஒரு புத்தகம் என்பது பலமுறை திருத்தப்பட்டு, தகவல்கள் சரி பார்க்கப்பட்டு வெளிவரக்கூடிய ஒன்று. எழுதப்பட்ட காலத்தை தன்னுள்ளே தாங்கி நிற்கும் பெட்டகம். அதானேலேயே புத்தகங்கள் படிப்பதற்கு தலையாய முன்னுரிமை கொடுக்கும் ஒருவன் நான். புத்தகங்கள் எல்லாமே உயர்வானவையாய் ஏதோ ஒரு விதத்திலாவது இருக்குமென எண்ணி வாசிக்கும் எனக்கு இது ஒரு சம்மட்டி அடி, இங்கும் விதி விலக்குகள் உண்டு என. ஒரு நூல் என்பதற்கான குறைந்த பட்ச வரையறை கூட இல்லாத நூல். சிறப்பாய் இருப்பது அட்டைப்படமும் தலைப்பும் மட்டுமே. நான் வேண்டுவதெல்லாம் தயவு செய்து இது போன்றவற்றையெல்லாம் ஆவணப்படுத்தாதீர்கள்.

தாயம் – ரங்கராஜன்

thayamசுயமுன்னேற்ற நூல் என இந்நூலை வகைப்படுத்தினால் மற்ற சுய முன்னேற்ற நூல்களுக்கான இடமே மனதில் இதற்கும் கிடைக்குமென்றால் இது சுய முன்னேற்ற‌ நூலன்று. எப்பொழுதெல்லாம் தன்னம்பிக்கை, ஒழுக்கத்தில் பிழை ஏற்படுவதாக எண்ணினாலும் உடனே வாசிக்க வேண்டிய‌ நூல் இது.  எத்தனை முறை வாசித்தாலும் ஒவ்வொரு முறையும் புதியதொரு புத்துணர்ச்சியைத் தரும் நூல். எப்பொழுது வேண்டுமானலும் எந்த அதிகாரத்தை வேண்டுமானாலும் படிக்கக்கூடிய வடிவமைப்பு. மிக எளிய மொழிநடை. எக்காலத்திற்கும் மனதில் நிற்கும் சிறந்த நூல்களில் ஒன்று.

நன்றி.

மூன்றாம் உலகப்போர் – வைரமுத்து

vairamuthuகவிஞர் வைரமுத்துவினால் வரையப்பெற்ற நூல். எளிய கதைக்களத்தின் வழியே இன்றைய சூழ்நிலை அழிவுகளை எடுத்தியம்பும் நூல். எமிலி, சின்னப்பாண்டி எனக் கடல் கடந்த காதலும் உண்டு. கருத்தமாயி என நாம் அறிந்த நம்மோடு வாழும் ஒரு பாமர விவசாயியும் உண்டு. பாத்திரங்களின் ஊடே பாத்திரமாக வைரமுத்துவும் உண்டு. சூழ்நிலை தொடர்பான பொது அறிவுத் தகவல்களும் உண்டு. சூழல் தொடர்பான நம் மனப்பாங்கில் சம்மட்டியாய் அடிக்கும் எளிய காவியம் இந்த மூன்றாம் உலகப்போர்.

நன்றி.